Site icon Her Stories

சுற்றுச்சூழலைப் பாதுகாப்பது பெண்களின் வேலையா?

Old woman making and cooking / baking fresh food in a rural village in a vintage kitchen using firewood in earthen chulhas.

“நமது மரபு இரக்க உணர்வையும் புரிந்துணர்வையும் பெண்மைப்படுத்தி வைத்திருக்கிறது” என்கிறார் டயானா ஸ்பெக்லர். ஒட்டுமொத்த மனித மரபையும் அவர் குறிப்பிடுகிறார் என்றே புரிந்துகொள்கிறேன். பிறர்மீது அக்கறை காட்டுவது, புரிந்துணர்வோடு நடந்துகொள்வது ஆகியவை பெண்களுக்கே உரிய குணங்கள் என்பதே பொதுவான புரிதலாக இருக்கிறது. அதன் ஒரு நீட்சியாக, “வீட்டிலிருப்பவர்களையும் வீட்டையும் ஒரு பெண் அக்கறையாகக் கவனித்துக்கொள்வதைப் போலவே சுற்றுச்சூழலையும் அவள் கவனித்துக்கொள்வாள்” என்ற எதிர்பார்ப்பு கிளம்பியிருக்கிறது. இது மேலை நாடுகளில் மிகவும் பரவலாகக் காணப்படுகிறது.

இதைச் சூழல்சார் பாலின இடைவெளி (Eco Gender Gap) என்பார்கள். சூழலைப் பாதுகாக்கும் பொறுப்பில் உள்ள பாலின ஏற்றத்தாழ்வுதான் இதன் மையப்புள்ளி. இந்த ஏற்றத்தாழ்வை நியாயப்படுத்தவே குணநலன்கள் பற்றிய பொதுப் பார்வைகள் முன்வைக்கப்படுகின்றன. “பொதுவாகவே பெண்கள் இயற்கையுடன் அதிகமான தொடர்பு உடையவர்களாக இருக்கிறார்கள். ஆகவே அந்த இயற்கையைப் பாதுகாப்பதிலும் ஆண்களைவிட இவர்களுக்கே அக்கறை அதிகம்” என்றும் சிலர் இதை நியாயப்படுத்துகிறார்கள். பெண்களுக்கும் இயற்கைக்கும் ஒரு பூடகமான உறவு இருக்கிறது என்ற பொதுவான, தவறான நம்பிக்கை இங்கு உருவாகியிருக்கிறது.

கள நிலவரத்தைப் பொறுத்தவரை இந்த ஏற்றத்தாழ்வு எப்படி இயங்குகிறது என்று பார்க்கலாம். ஒரு வீட்டின் ஆண், “இன்று முதல் வீட்டில் எல்லாரும் இயற்கையோடு இயைந்த வாழ்வை வாழவேண்டும்” என்று வலியுறுத்துகிறார் என்று வைத்துக்கொள்வோம். அன்றாட செயல்பாடுகளில் செயற்கைப் பொருட்களைக் கூடியவரை குறைப்பது, பிளாஸ்டிக் பயன்பாட்டைத் தவிர்ப்பது, மறுசுழற்சி செயல்பாடுகள் எனப் பல்வேறு வேலைகளைச் செய்ய வேண்டியிருக்கும். இவை எல்லாமே அந்தக் குடும்பத்தை நிர்வகிக்கும் பெண்ணின் பொறுப்பாக மாறிவிடும். “இயற்கையான முறையில் சமைக்கப்பட்ட உணவு” என்று சொன்னால்கூட அங்கு பெண்ணுக்கே வேலைப்பளு அதிகரிக்கும். “வீட்டு வேலைகளில் ஏற்றத்தாழ்வு இருக்கும்வரை, வீட்டு அளவில் உள்ள சூழல் செயல்பாடுகள் எல்லாவற்றையும் பெண்ணேதான் செய்யவேண்டும். இது அவளின் வேலைப்பளுவையே அதிகரிக்கும்” என்கிறது 2009இல் வெளியான ஓர் ஆய்வுக்கட்டுரை.

இன்னொருபுறம், வீட்டுக்கு வெளியில் இருக்கும் சூழல் செயல்பாடுகளில் பெண்களின் பங்களிப்பு ஒப்பீட்டளவில் குறைவாகவே இருக்கிறது. போராட்டங்கள், களச் செயல்பாடுகளில் நேரடியாகப் பங்குபெறுவதற்குப் பெண்களுக்குப் பல தடைகள் இருக்கின்றன. சூழல் தொடர்பான முக்கிய முடிவுகள் எடுக்கும் குழுக்களிலும் அதிகார மையங்களிலும் பெண்களுக்குப் போதுமான பிரதிநிதித்துவம் இருப்பதில்லை. ஆக, வீட்டுக்கு வெளியிலான செயல்பாடுகளில் பங்கெடுத்து சூழலை மாற்ற முடியாத பெண்கள், வீட்டுக்குள் கூடுதல் வேலை பளுவோடு சூழலைப் பாதுகாக்கும் நிலைக்குத் தள்ளப்படுகிறார்கள். இதுவே சூழல்சார் பாலின இடைவெளியின் சாராம்சம். சில விதிவிலக்குகள் இருந்தாலும் பெரும்பாலும் இதுதான் நிதர்சனமாக இருக்கிறது.

இது ஏன் உருவானது என்பதற்கான காரணம் கொஞ்சம் அதிர்ச்சியானது. எதிலெல்லாம் பாலினத்தை ஏற்றி வைப்பது என்ற வரையறை இல்லாமல் போய்விட்டது. “சூழலைப் பாதுகாப்பது கொஞ்சம் பெண் தன்மை கொண்ட வேலை” என்று பல மேலை நாட்டு ஆண்கள் நம்புகிறார்களாம்! அமெரிக்காவில் நடத்தப்பட்ட ஓர் ஆய்வில், “பிளாஸ்டிக் பைக்குப் பதிலாக மீண்டும் பயன்படுத்தக்கூடிய ஏதாவது ஒரு பையை எடுத்துக்கொண்டு ஷாப்பிங் போனால் என்னைப் பெண் தன்மை கொண்டவன் என்று நினைத்துவிடுவார்கள்” என்று பல ஆண்கள் தெரிவித்திருக்கிறார்கள். “எங்களது பாலின அடையாளத்தைக் காப்பாற்றிக் கொள்ள வேண்டுமானால் சூழல் பாதுகாப்பு செயல்பாடுகளில் வெளிப்படையாக ஈடுபட முடியாது” என்றும் கூறியிருக்கிறார்கள்! இதே அடிப்படையில் இரண்டாயிரம் அமெரிக்க மற்றும் சீன ஆண்களிடம் ஒரு பிரம்மாண்டமான ஆய்வு நடத்தப்பட்டது. அதிலும் பெரும்பாலான ஆண்கள் சூழல் பாதுகாப்புக்கும் பெண் தன்மைக்கும் தொடர்பு இருப்பதாகத் தெரிவித்திருக்கின்றனர்! இப்படி ஆய்வுகளை அடுக்கிக் கொண்டே போகலாம்.

இவ்வளவு ஏன், சூழல் பாதுகாப்புக்கான சட்டங்களை முன்னாள் அமெரிக்க அதிபரான தியோடோர் ரூஸ்வெல்ட் கொண்டு வந்த போது, அவர் பெண் உடை அணிந்திருப்பதுபோல அமெரிக்கப் பத்திரிகைகள் கேலிச்சித்திரம் வரைந்தன!

இந்தியாவில் இந்த மனப்பான்மை இருக்கிறதா என்றால், அது மாநிலத்தைப் பொறுத்தும் வர்க்கத்தைப் பொறுத்தும் மாறுபடுகிறது என்கிறார்கள் ஆய்வாளர்கள். வீட்டுச் சூழலில் பங்களிப்பு மாறுபடுகிறது. ஆனால், பொது வெளியில் சுதந்திரமாக இயங்கி, கொள்கை முடிவுகளின்மூலம் சூழலைப் பாதுகாப்பதில் பெண்களின் பங்களிப்பு எல்லா இடங்களிலும் குறைவாகவே இருக்கிறது என்று அவர்கள் தெரிவிக்கிறார்கள். ஆண்களின் சூழல் சார்ந்த கொள்கை முடிவுகளும் பெரும்பாலும் தொழில்நுட்பம் சார்ந்தவையாக இருக்கின்றன என்றும் ஓர் ஆய்வுக்குழு கண்டுபிடித்திருக்கிறது.

‘Feminisation of care’ என்ற ஒரு பதத்தைப் பயன்படுத்துகிறார் எழுத்தாளர் சரண்யா பட்டாச்சார்யா. அதாவது, அக்கறைக்குப் பெண் தன்மையைக் கொடுப்பது. இதன்மூலம் பெண்கள் மீதான உணர்வு மற்றும் உழைப்புச் சுரண்டல் நியாயப்படுத்தப்படுவதாகவும் அவர் தெரிவிக்கிறார். “அக்கறை என்பது ஒரு சிக்கலான அரசியலுக்குள் மாட்டிக்கொண்டிருக்கும் செயல்பாடு” என்கிறார் ஆராய்ச்சியாளர் அரின் மார்டின். ஆகவே இந்த அரசியலைப் பேசுவது முக்கியம். பெண்களுக்குத் தேவையான பிரதிநிதித்துவத்தைக் கொடுக்காமலேயே தனிநபர் சூழல் செயல்பாடுகளில் மட்டும் அவர்கள் தொடர்ந்து ஈடுபடவேண்டும் என்று சமூகம் எதிர்பார்க்கிறது. அதை நடத்திக்கொள்ளவேண்டும் என்பதற்காக, “பெண்ணுக்கு இயற்கையிலேயே சூழல் மீது அக்கறை உண்டு” என்பது போன்ற சமாதானங்கள் சொல்லப்படுகின்றன. சூழல்சார்ந்த தனிநபர் செயல்பாடுகளில் ஆண்களின் பங்களிப்பையும் சூழல்சார்ந்த கொள்கை முடிவுகளில் பெண்களின் பங்களிப்பையும் இது பாதிக்கிறது. இந்த நிலை ஆபத்தானது.

இதுபோன்ற பாலின ஏற்றத்தாழ்வுகளை நிறுவனங்களும் பயன்படுத்திக்கொள்ள நினைக்கின்றன என்பது வேதனையானது. சூழலைப் பாதுகாக்கிற பொருட்களைப் பெரும்பாலும் பெண் வாடிக்கையாளர்களுக்கானதாகவே அவை வடிவமைக்கின்றன. இது ஏற்கெனவே இருக்கும் சூழல்சார் பாலின இடைவெளியை மேலும் அதிகப்படுத்துகிறது. இப்படிப்பட்ட எண்ணம் இல்லாத ஆண்களுக்கும் பெண்களுக்கும் இந்த மனநிலையை இந்தப் பொருட்களின் விளம்பரங்கள் உருவாக்குகின்றன.

இதில் இன்னோர் அம்சமும் இருக்கிறது. அது கொஞ்சம் நுணுக்கமானது. “இயற்கையை நோக்கித் திரும்புதல்” என்பன போன்ற அறைகூவல்கள், தொழில்சார்ந்த சமூக அமைப்பை உடைக்க நினைக்கின்றன என்றும் சொல்லப்படுகிறது. “இது ஆண்மைய தொழில்சார் சமூகத்துக்கு அச்சுறுத்தலாக இருக்கிறது என்று கூறும் சிலர், நேரடியாகவே காலநிலை செயல்பாடுகளை மறுக்கிறார்கள்” என்கிறார் காலநிலை மறுப்பாளர்கள் பற்றிய விரிவான ஆராய்ச்சியை மேற்கொண்ட மார்டின் ஹல்ட்மன். தொழில்சார்ந்த நவீன சமூகத்தில் ஆண்மையக் கூறுகள் எப்படி இயங்குகின்றன எனவும், இவற்றில் திளைப்பவர்களுக்கு சூழல் செயல்பாடுகள் எப்படி அச்சுறுத்தலாக இருக்கின்றன எனவும் அவர் எழுதியிருக்கும் கட்டுரை முக்கியமானது. காலநிலை மறுப்பாளர்களில் பெரும்பாலானோர் ஆண்கள்தாம் என்ற தரவை மனதில் கொண்டு இதை நாம் புரிந்துகொள்ளவேண்டும். பெண்கள் அதிகமாகக் களத்துக்கு வந்து குரல் கொடுப்பது காலநிலை விவகாரத்தில்தான் எனும்போது, அது ஒரு பிரச்னையே இல்லை என்ற அளவுக்கு அது நிராகரிக்கப்படுகிறது. கொள்கை முடிவுகள் எடுக்கவேண்டிய இடங்களில் போதுமான பெண் பிரதிநிதித்துவம் இல்லாததால் வந்த பின்விளைவு இது.

இந்தச் சூழல்சார் பாலின இடைவெளியைக் குறைக்க என்ன வழி? “சுலபமான ஒரு வழி இருக்கிறது” என்கிறார் ஆராய்ச்சியாளர் ரேச்சல் ஹொவெல். “யார் வீட்டு வேலைகளைச் செய்கிறார்கள் என்பதில் ஒரு இடைவெளி இருக்கிறதே, அதைக் குறைத்தால் போதும்” என்கிறார். “யார் பொது முடிவுகளை எடுக்கிறார்கள் என்பதில் பெண்களின் பிரதிநிதித்துவத்தை அதிகரிக்க வேண்டும்” என்பதையும் நாம் சேர்த்துக்கொள்ளலாம். தானாக ஒரு பெண் சூழலைப் பாதுகாக்க முன்வருவதற்கும், ஆணைவிட அவளுக்கே அக்கறை அதிகம் என்கிற சமாதானத்துடன் அவள் மீது வேலை சுமத்தப்படுவதற்கும் வேறுபாடு இருக்கிறது. இந்த வேலைத் திணிப்பையே சூழலியலாளர்கள் எதிர்க்கிறார்கள். சூழலைப் பாதுகாக்கவும் மீட்டெடுக்கவும் எல்லா விதமான செயல்பாடுகளும் முக்கியம், அதில் பாலின வேறுபாடு இருக்கக் கூடாது என்பதே சூழலியலாளர்களின் கருத்து.

சூழலோடு நேரடியாக இயங்க வேண்டிய சில துறைகளில் பெண்களின் பங்களிப்பு நிறையவே உண்டு. அவற்றில் ஒன்றைப் பற்றிப் பார்க்கலாம். மனிதனுக்கான அத்தியாவசியத் தேவை ஒன்றை உற்பத்தி செய்யும் துறை இது. இதில் பெண்களின் பங்களிப்பும் நிலையும் என்ன?

(தொடரும்)

படைப்பாளர்:

நாராயணி சுப்ரமணியன்

கடல் சார் ஆய்வாளர், சூழலியல் ஆர்வலர் மற்றும் எழுத்தாளர் என்ற பன்முக ஆளுமை இவர். தமிழ் இந்து உள்ளிட்ட முன்னணி இதழ்களில் சூழலியல், கடல் வாழ் உயிரினங்கள் குறித்து தொடர்ச்சியாக எழுதி வருபவர். ஹெர் ஸ்டோரிஸில் இவர் எழுதிய ‘விலங்குகளும் பாலினமும்’ தொடர் புத்தகமாக வெளிவந்து, சூழலியலில் மிக முக்கியமான புத்தகமாகக் கொண்டாடப்படுகிறது!

Exit mobile version