காலநிலை மாற்றம் என்பது சமகால மனித வரலாற்றில் முக்கியமான பிரச்னையாக உருவெடுத்திருக்கிறது. வெடிக்கக் காத்திருக்கும் டைம்பாம் ஒன்றின் ஒலி தங்களது காதுகளில் கேட்டுக்கொண்டிருப்பதாகவும், தொடர்ந்து வரும் ஆய்வு முடிவுகள் இதை உறுதிப்படுத்துவதாகவும் காலநிலை விஞ்ஞானிகள் எச்சரிக்கின்றனர்.
காலநிலை மாற்றம் என்பது மனிதர்கள் அனைவருக்குமான பொது பிரச்சனை எனும்போது, அதில் பெண்கள் எப்படிப் பாதிக்கப்படுகிறார்கள் என்பதை மட்டும் பேசுவது பாரபட்சம் இல்லையா என்ற கேள்வி எழலாம். இது பொதுப் பிரச்சனைதான் என்றாலும், இதனால் வரும் பாதிப்பு பொதுவானதாகவும் ஒரே மாதிரியாகவும் இருப்பதில்லை. சமூகத்தில் ஒருவர் எந்த அடுக்கில் இருக்கிறார் என்பதைப் பொறுத்து பாதிப்பு மாறுபடும். காலநிலை மாற்றத்தால் வரும் பாதிப்புகள், விளிம்புநிலையில் இருப்பவர்கள், வறியவர்கள், ஒடுக்கப்பட்ட சாதியைச் சேர்ந்தவர்கள், சிறுபான்மையினர், பெண்கள், குழந்தைகள் போன்றவர்களையே அதிகம் தாக்கும் என்பது நிரூபிக்கப்பட்டிருக்கிறது. ஆகவே, பெண்களுக்கு ஏற்படும் பாதிப்புகளைத் தனியாகப் பேசுவது முக்கியமானது.
புயல்கள், மழைவெள்ளம், கனமழை, அதீத வெப்பம், காட்டுத்தீ, மழையால் ஏற்படும் நிலச்சரிவு, கடல்மட்டம் உயர்வதால் ஏற்படும் பாதிப்பு, வறட்சி போன்ற எல்லாவற்றையும் உள்ளடக்கியதுதான் காலநிலை மாற்றம். இவற்றைத் தீவிர பருவகால நிகழ்வுகள் (Extreme Weather Events) என்று அழைக்கிறார்கள். இதுபோன்ற நிகழ்வுகளை சிறிய அல்லது பெரிய அளவிலான பேரிடர்கள் என்று நாம் வைத்துக்கொள்ளலாம். அது மட்டுமன்றி, காலநிலை மாற்றத்தால் ஏற்படும் தண்ணீர்த் தட்டுப்பாடு, காலநிலைத் தீர்வுகளால் சமூகத்தில் ஏற்படும் மாற்றங்கள், உணவு உற்பத்தி பாதிக்கப்படுவது, வளங்கள் குறைவது என்று எல்லாவற்றையும் கவனிக்கவேண்டும்.
ஓர் இடத்தின் காலநிலையில் தொடர் மாற்றங்கள் ஏற்படும்போது, அங்கு இருப்பவர்கள் பாதுகாப்புக்காகவோ பிழைப்பு தேடியோ வேறு இடத்துக்குச் செல்வார்கள். இது காலநிலை புலம்பெயர்வு (Climate Migration) என்று அழைக்கப்படுகிறது. இவ்வாறு இடம்பெயர்பவர்களில் 70% பெண்களே என்கிறது ஓர் ஆய்வு. இவ்வாறு இடம்பெயரும் பெண்கள் புதிய இடத்தில் தங்களை நிலைநிறுத்திக்கொள்வதில் பல சிக்கல்களை எதிர்கொள்கின்றனர். இன்னொருபுறம், விவசாயமோ இயற்கை சார்ந்த தொழிலோ காலநிலை மாற்றம் காரணமாகப் பொய்த்துப்போய்விட்டால், ஆண்கள் மட்டுமே பிழைப்புக்காக வேறு ஊர்களுக்குச் செல்வதும் நடக்கிறது. அந்தச் சூழலில், தனியாகக் குடும்பத்தை நிர்வகிக்கும் பொறுப்பு திடீரென்று பெண்கள்மீது விழுந்துவிடுகிறது. இதுமட்டுமின்றி, காலநிலையால் இவ்வாறு புலம்பெயர்பவர்களோ அல்லது காலநிலைப் பேரிடர்களால் உறைவிடங்களை இழந்தவர்களோ அகதிகளாக மாறும்போது, குழந்தைகளின் பள்ளிப் படிப்பு பாதிக்கப்படுகிறது. அந்தச் சூழலில், ஆண் குழந்தைகளைவிட இரண்டு மடங்கு அதிகமாகப் பெண் குழந்தைகளே பள்ளியை விட்டு நிறுத்தப்படுகிறார்கள் என்று சர்வதேச ஆய்வுகள் தெரிவிக்கின்றன.
காலநிலை மாற்றத்தால் ஓர் ஊரில் விவசாய உற்பத்தி பாதிக்கப்படலாம், ஆற்றல் தட்டுப்பாடும் தண்ணீர் தட்டுப்பாடும் ஏற்படலாம். இது பெண்களையே அதிகமாக பாதிக்கிறது. குறிப்பாக விவசாய உற்பத்தியில் பெண்கள் அதிக அளவில் ஈடுபட்டுவரும் இன்றைய காலகட்டத்தில் அவர்களுக்கான வருமானம் குறைகிறது. இந்தியாவையே எடுத்துக்கொள்வோம். இந்தியாவில் விவசாயக் கூலித்தொழிலாளிகளில் 33% பெண்கள்தாம், தனியாக விவசாயம் செய்பவர்களிலும் 43% பெண்களாகத்தான் இருக்கிறார்கள். இந்தச் சூழலில், உற்பத்தி குறைவது, மின் தட்டுப்பாடு, தண்ணீர் தட்டுப்பாடு ஆகியவை பெண்களையும் பாதிக்கும். பல குடும்பங்களில் தண்ணீர் எடுத்துவருவது பெண்களின் கடமை என்பதால், நீர்த்தட்டுப்பாடு ஏற்படும்போது, பெண்கள் கூடுதலான தொலைவு நடந்தால்தான் நீர் கிடைக்கும் என்ற சூழ்நிலை வரும்.
சில நேரத்தில் காலநிலைக்கான தீர்வுகள்கூடப் பெண்களை மனதில் கொண்டு வடிவமைக்கப்படுவதில்லை. அதிகார மையங்களில் பெண்களுக்கான பிரதிநிதித்துவம் குறைவாக இருப்பதால் வரும் அவலநிலை இது. உதாரணமாக, மெக்சிகோவில் இருக்கும் சொனோரா பகுதியை எடுத்துக்கொள்வோம். இங்கு உள்ள பெண்களில் பெரும்பாலானோருக்குக் காய்கறி, பழங்கள், பால் ஆகியவற்றை மதிப்பு கூட்டப்பட்ட பொருள்களாக மாற்றி விற்பனை செய்வதுதான் முக்கியமான வாழ்வாதாரம். அதிலும் குறிப்பாக பாலில் இருந்து பாலாடைக்கட்டி (Cheese) தயாரிப்பது இந்தப் பகுதியின் முக்கியமான குடிசைத்தொழில். காலநிலை மாற்றம் காரணமாகக் கால்நடைகளுக்கான தீவனம், தண்ணீர் ஆகியவற்றில் தட்டுப்பாடு ஏற்பட்டது, அதனால் பெண்களின் பாலாடைக்கட்டி தொழில் பாதிப்புக்கு உள்ளானது. ஆனாலும் அவர்கள் ஏதோ சமாளித்துக்கொண்டிருந்தனர்.
திடீரென்று பால்பண்ணை வைத்திருக்கும் முதலாளிகள், வழக்கமான ஹோல்ஸ்டீன் பசுக்களுக்குப் பதிலாக, வறட்சியைத் தாங்கக்கூடிய ப்ராங்கு என்ற ஒருவகைப் பசுக்களை அதிகமாக விலைக்கு வாங்கத் தொடங்கினர். இந்தப் பசுக்கள் அதிக வெப்பத்தைத் தாங்கக்கூடியவை என்றாலும் இவற்றின் பால் உற்பத்தி ஒப்பீட்டளவில் குறைவு. ஆகவே, நேரடி விற்பனை போக, பாலாடைக்கட்டி உற்பத்திக்காக வழங்கப்படும் பாலின் அளவு குறைந்தது. அதன் விலையும் கூடிப்போனது, ஆகவே பெண்களின் குடிசைத்தொழில் கடுமையாகப் பாதிக்கப்பட்டிருக்கிறது. “சீஸ் உற்பத்தி செய்வது ஒரு குடும்பத்தின் பெண்களுக்கு வழிவழியாகச் சொல்லித் தரப்படும் மரபு. ஊரில் எந்த வீட்டுக்கு உறவினர் வந்தாலும், அவர் திரும்பிப் போகும்போது நாங்களே உருவாக்கிய சீஸைப் பரிசாகத் தருவோம். ஆனால், இப்போது என்னுடைய மகளால் அந்த மரபைத் தொடர முடியாது” என்கிறார் சொனோராவைச் சேர்ந்த பாலாடைக்கட்டி உற்பத்தியாளர் க்வாடலோப். தொழில் பாதிக்கப்படுவது ஒருபுறம் என்றால், இதுபோன்ற மரபுகள் தொலைவதையும் கவனிக்க வேண்டும். இதுவும் காலநிலை மாற்றத்தின் பாதிப்புதான். பெண்களிடையே நிலவும் மரபுகள் ஆவணப்படுத்தப்படுவதே குறைவு எனும்போது இதை நிச்சயமாக ஒரு பேரிழப்பாகவே அணுக வேண்டும்.
வளங்கள் குறையும்போது, அந்த இடத்தில் ஒரு போட்டி ஏற்படும். அந்தச் சூழலில் பெண் உடல் ஒரு பண்டமாகிவிடுகிறது. இதை ஒரு விரிவான ஆய்வாக IUCN அமைப்பு 2021இல் வெளியிட்டது. வளங்களுக்கான போட்டி நிலவுகிறது அல்லது விலைவாசி அதிகரித்துவிட்டது எனும்போது, அங்கு வேறு வழியில்லாமலோ அல்லது பிறரின் வற்புறுத்தலாலோ பெண்கள் தங்களது உடலை ஒரு பண்டமாக முன்வைக்கிறார்கள். தெற்கு ஆப்பிரிக்கா, கிழக்கு ஆப்பிரிக்கா, ஜிம்பாப்வே, பபுவா நியூ கினி, இந்தோனேசியாவின் பண்டுரா பகுதி போன்ற பல இடங்களில் இது உறுதிப்படுத்தப்பட்டிருக்கிறது. தொடர்ந்து வெள்ளத்தால் பாதிக்கப்படும் வங்கதேச மாகாணங்களில் இது அதிகமாக நடக்கிறது. ஐலா புயலின் (2009) பாதிப்புக்குப் பிறகு, கொல்கத்தாவில் இருந்த பாலியல் தொழிலாளர்களின் எண்ணிக்கை 20 முதல் 25% அதிகரித்தது என்கிறார் மருத்துவர் ஸ்மரஜித் ஜனா. காலநிலை மாற்றம் தீவிரமாகும்போது, அதிக எண்ணிக்கையில் பெண்கள் பாலியல் தொழிலுக்குள் தள்ளப்படுவார்கள் என்று சர்வதேச அமைப்புகள் எச்சரிக்கின்றன.
இவை காலநிலை மாற்றத்தால் ஏற்படும் மெதுவான, அன்றாட மாற்றங்கள் என்றால், காலநிலைப் பேரிடர்களால் பெண்கள் மீது கட்டவிழ்த்துவிடப்படும் பால்சார் வன்முறை (Gendered Violence) பற்றிய புள்ளிவிவரங்கள் அதிரவைக்கின்றன. ஆப்பிரிக்காவின் மலாவியில் மட்டும், அடுத்த சில ஆண்டுகளில் காலநிலை மாற்றத்தின் பாதிப்பால் 15 லட்சம் பெண் குழந்தைகளுக்குக் கட்டாயத் திருமணம் நடக்கும் என்கிறது ஓர் ஆய்வு. உகாண்டாவில், 2014 முதல் 2018 வரையிலான வறட்சிக்காலத்தில், பெண்ணுறுப்பு சிதைவு (Female Genital Mutilation – FGM), வன்புணர்வு போன்றவை அதிகரித்திருக்கின்றன. 2008ஆம் ஆண்டு நர்கீஸ் புயலால் ஏற்பட்ட பாதிப்பின்போது, வருமானத்துக்காகப் பெண்கள் பாலியல் தொழிலில் ஈடுபடும் போக்கு அதிகரித்தது. ஆஸ்திரேலியாவில் புதர்த்தீ (Bushfire) ஏற்படும்போதெல்லாம் அங்கு உள்ள வீடுகளில் குடும்ப வன்முறை அதிகரிக்கும் என்றும், காலநிலை மாற்றத்தால் புதர்த்தீ நிகழ்வுகளின் எண்ணிக்கை கூடியிருப்பதால் குடும்ப வன்முறையும் அதிகரித்திருக்கிறது என்றும் ஓர் ஆய்வாளர் தெரிவிக்கிறார்.
காலநிலைப் பேரிடர்களின்போது வீடுகள், உடைமைகளை இழந்து மக்கள் தெருவுக்கு வரும்போதெல்லாம், அந்தக் கூட்டத்தில் உள்ள பெண்களும் குழந்தைகளும் அதிகமான பாலியல் சீண்டலுக்கு ஆளாவதை ஆய்வுகள் உறுதிப்படுத்தியிருக்கின்றன. பீகாரில் வெள்ளத்துக்குப் பின்னான காலகட்டங்களில் எல்லாம், திருமணம் என்ற பெயரில் பெண்களைப் பாலியல் தொழிலுக்காகக் கடத்துவது, குடும்ப வன்முறை, பெண்கள் மீதான பாலியல் தாக்குதல் ஆகிய அனைத்தும் அதிகரித்திருப்பதை ஓர் இந்திய ஆய்வுக்குழு நிரூபித்திருக்கிறது. காலநிலைப் பேரிடர்களின்போதெல்லாம் பெண்களுக்கெதிரான உடல்ரீதியான அல்லது பாலியல் வன்முறை 20 முதல் 30 சதவீதம் வரை அதிகரிக்கிறது என்கிறார் ஒரு விஞ்ஞானி.
இவை மட்டுமல்லாமல் காலநிலை மாற்றத்தால், தேவையான மருத்துவ சேவைகள் கிடைப்பதும் பாதிக்கப்படுகிறது. தாய்லாந்தில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பகுதிகளிலிருந்து வேறு இடங்களுக்குப் புலம்பெயர்ந்து போன கர்ப்பிணிப் பெண்கள் பலரும், எடை குறைவான குழந்தைகளையே பெற்றெடுத்திருக்கிறார்கள். 2017இல் மரியா புயலுக்குப் பிறகு போர்டோ ரிகோவில் பிரசவத்துக்கான அறுவை சிகிச்சை பொருட்களை, சுத்தரிக்கக்கூட நீர் இல்லை என்று மருத்துவர்கள் வேதனையுடன் பதிவு செய்திருக்கிறார்கள். தொடர் புயல்களால் நிகராகுவா பாதிக்கப்பட்ட பிறகு, “இப்போது குழந்தை பெற்றுக்கொண்டால் பொருளாதார ரீதியாகச் சமாளிக்க முடியாது” என்று பல தம்பதி குழந்தை பெற்றுக்கொள்வதைத் தள்ளிப் போட்டிருக்கிறார்கள். மாதவிடாய்ப் பொருட்கள், கருத்தடை சாதனங்கள், பேறுகாலத்தின்போது எடுத்துக்கொள்ள வேண்டிய மருந்துகள், பேறுகால மருத்துவ சேவைகள், பிரசவ சேவைகள் என்று எல்லாமே பேரிடர் காலங்களில் மாறுபடுகிறது. இதனால் பெண்கள் அதிகமாகப் பாதிக்கப்படுகிறார்கள். புயலால் வீடு இடிந்துவிழுந்துவிட்ட நிலையில், முழங்கால் வரை நீரில் நின்றுகொண்டிருக்கும் நிறைமாத கர்ப்பிணியின் நிலை என்னவாகும்?
காலநிலை மாற்றம் தொடர்பான எந்த ஒரு புள்ளிவிவரமும் நம்மைத் திகைக்க வைப்பதுதான். ஆனால், அதிகம் பாதிக்கப்படக்கூடியவர்கள் பற்றிய தரவுகள் கூடுதலான வலியைத் தரக்கூடியவை. இப்படிப்பட்ட காலநிலை அவசரநிலை இருக்கும் சூழலில், எதிர்காலமே கேள்விக்குறியாக இருக்கிறது எனும்போது எப்படிப் பிள்ளை பெற்றுக்கொள்வது என்று காலநிலை செயற்பாட்டாளர்கள் கேள்வி எழுப்புகின்றனர். இவ்வாறு கேட்பவர்களில் பெரும்பாலானோர் பெண்கள்தாம். 2019ஆம் ஆண்டில் ப்ளைத் பெபினோ என்ற காலநிலை செயற்பாட்டாளர், இந்த முடிவை எடுத்திருக்கும் ஆண்கள், பெண்களுக்காக Birth Strikers என்ற அமைப்பையே நிறுவியிருக்கிறார்! அமைப்பு உருவான இரண்டே வாரங்களில் பிரிட்டனில் மட்டும் 140 பேர் இந்த இயக்கத்தில் இணைந்துகொண்டனர் என்ற தகவல் முக்கியமானது. “யாரையும் குழந்தை பெற்றுக்கொள்ளாமல் தடுப்பது இந்த இயக்கத்தின் நோக்கமல்ல, எங்களுக்கு இருக்கும் பயத்தை வெளிப்படுத்துகிறோம், இந்தப் பிரச்னை எவ்வளவு பெரிதானது என்று தெரியப்படுத்துகிறோம்” என்கிறார் ப்ளைத். இது சரியா, தவறா என்று நாம் விவாதிக்க முடியாது, குழந்தை வேண்டுமா, வேண்டாமா என்பது ஒருவரின் தனிப்பட்ட முடிவு. ஆனால், காலநிலை மாற்றத்தால் ஏற்பட்டுக்கொண்டிருக்கும் மாற்றங்களை உற்றுக் கவனித்தால் அவர்களது முடிவில் நியாயம் இருப்பதாகவே தோன்றுகிறது. காலநிலை மாற்றத்தால் எதிர்காலம் குறித்த பெண்களின் கண்ணோட்டம் மாறியிருக்கிறது என்பதாகவே இதைப் பார்க்கிறேன். அவர்களைத் தேற்றி, “உங்களது குழந்தைகளின் எதிர்காலத்தைப் பாதுகாக்கிறோம்” என்று சொல்லவும் எந்த உலகத் தலைவரும் முன்வரவில்லை, வரப்போவதுமில்லை.
காலநிலை மாற்றத்தால் பெண்களின் வேலைப்பளு அதிகரிக்கிறது, பொறுப்புகள் கூடுகின்றன, பெண்களுக்கான மருத்துவ சேவைகள் தடைபடுகின்றன, அவர்கள் வறுமைக்குள் தள்ளப்படுகிறார்கள், தங்களது உடலைப் பண்டமாக முன்வைக்கும் நெருக்கடிக்கு ஆளாகிறார்கள், வன்முறைக்கு உள்ளாகிறார்கள், பாலியல் ரீதியாக சுரண்டப்படுகிறார்கள், வளங்கள் குறையும்போது அவர்களுக்குக் கிடைக்கும் உணவும் நீரும் குறைகிறது… இப்படி அடுக்கிக்கொண்டே போகலாம். இதன் உச்சகட்டமாக நேரடியான பாதிப்பைச் சந்தித்த சில மூன்றாம் உலக நாடுகளிலும் எதிர்காலத்தைப் பற்றிய பயம் கொண்ட சில மேலை நாடுகளிலும் குழந்தை பெறுவது பற்றிய முடிவுகளில் மாற்றம் ஏற்பட்டிருக்கிறது. இதைத் தவிர, சம்பந்தப்பட்ட பெண்களின் இனம், சாதி, மதம், வர்க்கம் ஆகியவையும் பாதிப்பின் தீவிரத்தை மாற்றியமைக்கின்றன.
சமீபக் காலத்தில் காலநிலை விவாதங்களில் பெண்களின் பிரச்னை விவாதிக்கப்படுகிறது. இது வரவேற்கத்தக்கது. ஆனால், தீர்வுகளில் பெண்கள் கண்டுகொள்ளப்படுவதில்லை. பிரதிநிதித்துவம், ஆண்மைய அதிகாரங்கள் ஆகிய வழக்கமான பிரச்னைகளே இதற்குக் காரணம். காலநிலைத் தீர்வுகளிலிருந்து பெண்களை விலக்குவது ஆபத்தானது. அது பாதிப்பை மேலும் அதிகப்படுத்தும். இது மாறவேண்டும்.
“பெண்கள் எப்போதுமே பாதிக்கப்படும் இடத்தில் மட்டும்தான் இருப்பார்களா, இதோ பாருங்கள். இந்தத் துறையில் பெண்களால் ஏற்பட்டுள்ள மாற்றங்கள் சுற்றுச்சூழலைத் தீவிரமாகப் பாதிக்கின்றன” என்று நெடுங்காலமாக ஒரு துறை சுட்டிக்காட்டப்படுகிறது. அது என்ன வரலாறு?
(தொடரும்)
படைப்பாளர்:
நாராயணி சுப்ரமணியன்
கடல் சார் ஆய்வாளர், சூழலியல் ஆர்வலர் மற்றும் எழுத்தாளர் என்ற பன்முக ஆளுமை இவர். தமிழ் இந்து உள்ளிட்ட முன்னணி இதழ்களில் சூழலியல், கடல் வாழ் உயிரினங்கள் குறித்து தொடர்ச்சியாக எழுதி வருபவர். ஹெர் ஸ்டோரிஸில் இவர் எழுதிய ‘விலங்குகளும் பாலினமும்’ தொடர் புத்தகமாக வெளிவந்து, சூழலியலில் மிக முக்கியமான புத்தகமாகக் கொண்டாடப்படுகிறது!