Site icon Her Stories

திவான் பகதூர்

1943ஆம் ஆண்டு வெளிவந்த திரைப்படம் திவான் பகதூர். கோவை மாடர்ன் தியேட்டர் நிறுவனத்தின் டி.ஆர்.சுந்தரத்தின் இயக்கத்தில் வெளிவந்த இப்படத்திற்கு, கதை, திரைக்கதை, வசனம் எழுதியவர் எம்.ஹரிதாஸ். ஒளிப்பதிவு டபிள்யூ.ஆர்.சுப்பா ராவ்.Setting and design ஏ. ஜே. டொமினிக், பி. பி. கிருஷ்ணன் இணைந்து செய்துள்ளனர்.

டி.ஏ.கல்யாணம் இந்தப் படத்திற்கு இசையமைத்துள்ளார். திரையிசைத் திலகம் கே.வி.மகாதேவன் அவருக்கு உதவியாளராகப் பணியாற்றி உள்ளார் என்கிறது விக்கிபீடியா. ஆனால், இவர்களின் பெயர் திரைப்படத்தில் குறிப்பிடப்படவில்லை.

தொழில்நுட்பக் கலைஞர்களின் பெயரைப் போடுகிறார்கள். பின்தான் நடிகர்கள் பெயர் போடுகிறார்கள்.

நடிகர்கள்

டி. ஆர். ராமச்சந்திரன்

கே. கே. பெருமாள்

காளி என். ரத்தினம்

ஈ. ஆர். சகாதேவன்

எம். ஈ. மாதவன்

V N குமாரசாமி

நடிகைகள்

ஜே. சுசீலா

பி. எஸ். சிவபாக்கியம்

டி. என். ராஜலட்சுமி

சி. டி. ராஜகாந்தம்

பி. ஆர். மங்களம்

பி. எஸ். ஞானம்

பி. ஆர். மங்களம்

கதை என எடுத்துக் கொண்டால், கேசவன், கோபாலன் என இரு நண்பர்கள், வேலை தேடிச் சென்னை வந்துள்ளனர். சலூன் வைத்துப் பிழைப்பதாக இருந்தால்கூட எல்லாரும் தங்களுக்குத் தாங்களே சவரம் செய்து கொள்கின்றனர். “வெத்திலைப் பாக்கு கடை வைப்பதானாலும், ஒரு நாளுக்கு இரண்டு பாக்கெட் கோல்ட் ஃபில்டர் சிகரெட் பிடித்துவிட்டு நாமத்தைச் சாத்தி விடுகின்றனர்” எனக் கடற்கரையில் இருக்கும் ஒரு பெஞ்சில் அமர்ந்து பேசிக் கொள்வது என்பது அன்றைய வாழ்க்கை நிலையைச் சொல்கிறது.

உனக்குத்தான் பல மொழிகள் தெரியுமே! சினிமா கம்பெனி வேலைக்குப் போகலாமே எனக் கோபாலன் ஆலோசனை கூற, கேசவன், “அதெல்லாம் சரிப்பட்டு வராது. டைரக்டர், இசையமைப்பாளர், கேமரா மேன் எல்லாரும் ஆளுக்கொன்று சொல்வார்கள்” எனச் சொல்லி அதையும் நிராகரிக்கிறார்.

சர்க்கரையைத் தண்ணீரில் கலந்து புட்டிகளில் அடைத்து தாது புஷ்டி பானம் என மாறுவேடத்தில் வந்து விற்கலாம் எனக் கோபாலன் யோசனை சொல்ல, இருவரும் நடைமுறையில் இறங்குகிறார்கள். அதன்பொருட்டு சேலம் வருகிறார்கள்.

கேசவன், வேறு வேறு மொழிகளில் பேச கோபாலன் அதை மொழிபெயர்க்கிறார். நல்ல விற்பனை.

இந்தக் காலகட்டத்தில், கோபாலன் தனது அம்மாவிற்கு உடல்நலமில்லாததால், ஊருக்குச் செல்கிறார். ரயில் நிலையத்திற்கு வந்து, அவரை வழியனுப்பிவிட்டுத் திரும்பும்போது, கேசவன், திவான்பகதூர் ரங்கநாதரை, ஒரு விபத்தில் இருந்து காப்பாற்றுகிறார்.

திவான் ஏற்கெனவே, தனது கமலா என்கிற மகள் நாகரிகத்தைக் கற்றுக் கெட்டு விடக்கூடாது என நினைபவர். பவுடர் பூசுவதுகூடத் தேவையில்லாத நாகரிகம் என அவர் மனைவி நினைக்கிறார். அப்படி இருந்தாலும், தன் மகள் மீது அம்மாவிற்கு நம்பிக்கை இருக்கிறது. தன் மகள் கெட்டுப் போக மாட்டார் எனச் சொல்கிறார்.

ஆனாலும் நாகரிகத்தைக் கற்றுக் கெட்டுவிடாமல், நல்ல நடத்தையைக் கற்றுக் கொடுக்க ஆசிரியர் ஒருவரை நியமிக்க வேண்டும் என்கிற எண்ணம் திவானுக்குத் தொடர்ந்து இருந்துகொண்டேதான் இருக்கிறது. இந்த மாதிரியான காலகட்டத்தில்தான் கேசவனை அவர் சந்திக்க நேருகிறது. கேசவன் படித்தவர் என்பதால், திவான், தனது மகளுக்கு ஆசிரியராக அவரை நியமிக்கிறார்.

அப்போதும் அம்மா, இதெல்லாம் தேவையில்லாத வேலை தான் என்கிறார்கள். அப்பா உறுதியாக இருக்கிறார். பாடம் நடக்கிறது. கூடவே காதலும் வளர்கிறது.

கேசவன் ஏழை என்பதால் அப்பாவிற்கு, இவர்களின் திருமணத்தில் விருப்பம் இல்லை. அதனால், கமலாவை ஜமீன்தார் ஒருவருக்கு (காளி N ரத்தினம்) நிச்சயிக்கின்றனர்.

தற்கொலைக்கு முயற்சி செய்ததாக கமலா ஏமாற்ற, கமலா- கேசவன் திருமணம் நடக்கிறது. திருமண அழைப்பிதழில் அப்பா பெயருக்குப் பின்னால் MLA எனப் போடுகிறார்கள். அதாவது நாயகியின் அப்பா, திவானாக மட்டுமில்லாமல் MLA ஆகவும் இருக்கிறார்.

சரி. திருமணம் முடிந்துவிட்டது. இப்போதுதான் அடுத்த கதை தொடங்குகிறது. ஜெய வாணி என்கிற செய்தித்தாளில் சென்னை மாகாண அசெம்பிளி தேர்தல் எனத் தலைப்புச் செய்தியைக் காட்டுகிறார்கள்.

கேசவன் தேர்தலில் நிற்கும் தனது விருப்பத்தை மாமனாரிடம் சொல்கிறார். அவர் அவரது நண்பர்களிடம் சொல்ல, அவர்கள் இங்கிலிஷ் நன்கு பேசத் தெரியுமா எனக் கேட்க, கேசவனும் பொளந்து கட்டுகிறார். இவரது ஆங்கிலத்தைக் கேட்டு அசந்து போன அவர்களும் இவர் தேர்தலில் நிற்பதை ஒத்துக்கொள்கிறார்.

கேசவன் பணக்கார முதலாளிகளிடம் இருந்து ஏழைத் தொழிலாளிகளை விடுவிக்கவே தேர்தலில் நிற்பதாக ஏழைகளிடம் பேசுகிறார். பாமர மக்களை ஏமாற்றி ஓட்டைப் பறிக்கத்தான் அப்படிப் பேசினேன் எனப் பணக்காரர்களிடம் சொல்கிறார். மா என்றால் பெரிய மாமா என்றால் மகா பெரிய (இம்சை அரசன் புகழ் வசனம்) எனப் பெண்களை வைத்து தொழில் செய்பவரிடம் சொல்கிறார். குடியை ஒழிப்பேன் என ஓர் இடத்தில் பேசுகிறார். குடிகாரர்களிடம், “குடி இல்லாமல் முடியுமா? அதற்குத் தேவையான வசதிகளைச் செய்து கொடுப்பேன்” எனப் பேசுகிறார். இப்படி ஆளுக்குத் தகுந்தாற்போல பேசிப் பேசி வாக்குகளைச் சேகரிக்கிறார்.

கேசவன் தேர்தலில் வெற்றியும் பெற்றுவிடுகிறார். அதற்காக விழா நடக்கிறது. இப்போது, அம்மாவிற்கு உடல்நலமில்லாததால் ஊருக்குச் சென்றிருந்த அவரது நண்பர் கோபாலன் வருகிறார். கேசவன் ஆங்கிலத்தில் பேச, கோபாலன் அதைத் தமிழில் மொழி பெயர்க்கிறார். திரைப்படத்தின் தொடக்கத்தில், இருவரும் ஏமாற்றி சர்க்கரைத் தண்ணீரை விற்ற காட்சி நமக்கு நினைவிற்கு வருகிறது.

1938 ஆம் ஆண்டு வெளிவந்த நந்தகுமார், திரைப்படத்தில், டி.ஆர். ராமச்சந்திரன் அறிமுகமாகி இருந்தாலும் 1941ஆம் ஆண்டு வெளிவந்த சபாபதி அவரை ஒரு சிறந்த நடிகராக மக்களுக்கு அறிமுகப்படுத்தியது. திவான் பகதூர் திரைப்படத்திலும், அவரது உடல்மொழி, ஆங்கிலம் பேசும் பாங்கு போன்றவை அவருக்குக் கை கொடுத்துள்ளன என்றே சொல்லலாம். நாயகியின் அப்பாவின் நடிப்பு அபாரம். மற்றபடி எல்லாரும் அவரவர் பாத்திரத்தை உணர்ந்து நடித்து இருக்கிறார்கள்.

சென்னையில் இருந்து அரக்கோணம், காட்பாடி, ஜோலார்பேட்டை வழியாக சென்னை – சேலம் ரயில் போவதாக வரைபடம் காட்டுகிறார்கள். இதுதான் அன்றைய வழித்தடமாக இருந்திருக்க வேண்டும்.

தாய் நாடு, Free India எனத் திருமணத்திற்கு வரும் புகைப்படக் கலைஞர்களின் முதுகில் உள்ளது. இதெல்லாம் அந்தக் காலகட்டத்தின் குறியிடுகள் எனச் சொல்லலாம்.

சட்டசபைத் தேர்தல் தயவுசெய்து… எனச் சுவரொட்டி ஒட்டுகிறார்கள். மாட்டு வண்டியில் நோட்டீஸ் ஒட்டி ஊர் முழுவதும் செல்கிறார்கள். அரங்கக் கூட்டம் நடத்துகிறார்கள். பெண்கள் கொடி பிடித்துப் பேரணி நடத்துகிறார்கள். ஆண்கள் சைக்கிள் பேரணி நடத்துகிறார்கள். பெண்கள் சைக்கிள் பேரணி நடத்துகிறார்கள். கார் பேரணியும் நடக்கிறது. இப்படிப் பரப்புரை பலவிதமாக நடைபெறுகிறது. விடுதலைக்கு முன் (1943) வெளிவந்த திரைப்படம் என்னும் போது, அப்போதே நடைமுறை இதுவாகதான் இருக்கிறது எனத் தெரிந்துகொள்ள முடிகிறது.

மாமனார் திவான் பகதூர் ஏற்கெனவே அந்தக் காலகட்டத்தில் MLA. ஆக இருந்து கொண்டிருப்பவர்தான். இப்போது அவர், தன் மருமகனுக்காக வாக்கு கேட்டுச் செல்கிறார். ஒரு பெண், “ஏழு ரூபாய் வாடகை வரக்கூடிய வீட்டிற்குப் பதினாலு ரூபாய் வரி போட்டுவிட்டு, ஓட்டு கேட்கிறீர்களா?” எனச் சொல்ல, அவர் பதிலுக்கு, “நான் சிபாரிசு கடிதம் கொடுத்ததால்தானே உங்கள் மகனுக்கு வேலை கிடைத்தது” எனச் சொல்கிறார். “படிப்பும் அதிர்ஷ்டமும் இருந்ததால் வேலை கிடைத்தது” எனத் தெனாவெட்டாக அந்த அம்மா சொல்கிறார். இந்த நேரத்தில் கணவர் வந்து, அவர்களுக்கே ஓட்டுப் போடுவதாகச் சொல்ல, அந்த அம்மா, “நீ மட்டும் ஓட்டைக் கொடுத்து விட்டு வா; நான் உன் கையில் ஓட்ட (ஓடு) கொடுத்து தெருவிற்கு அனுப்பி விடுவேன்” என்கிறார்.

இவையெல்லாம் அந்தக் காலத் தேர்தல் நடைமுறைகளை நமக்குச் சொல்கின்றன. சுதந்திரம் வாங்கும் முன்பே இதே நிலைதான் இருந்திருக்கிறது.

திரைப்படம் அரங்கைவிட்டு வெளியே பல இடங்களில் எடுக்கப்பட்டிருப்பதால், அந்தக் காலகட்ட ஊரின், நகரின் அமைப்பை அறிந்து கொள்வதற்கு ஒரு வாய்ப்பாக திரைப்படம் அமைகிறது. அதே போல, அன்றைய மேல்தட்டு மக்களின், உடை, வாழ்க்கை முறை போன்றவற்றை நமக்குச் சொல்லும் திரைப்படமாகவும் இது விளங்குகிறது.


(தொடரும்)

படைப்பாளர்:

பாரதி திலகர்

தீவிர வாசிப்பாளர், பயணக் காதலர்; தொன்மை மேல் பெரும் ஆர்வம் கொண்டவர். அயல்நாட்டில் வசித்து வந்தாலும் மண்ணின் வாசம் மறவாமல் கட்டுரைகள் எழுதிவருகிறார்.

Exit mobile version