Site icon Her Stories

ஏழை படும் பாடு

ஏழை படும் பாடு 1950 ஆம் ஆண்டு கே. ராம்நாத்  இயக்கத்தில் வெளியான திரைப்படம். தெலுங்கில் பீடலா பட்லு என்கிற பெயரில் அதே நேரத்தில் படமாக்கப்பட்டது. இது விக்டர் ஹ்யூகோ (Victor Hugo) என்பவரின் 1862 பிரெஞ்சு மொழிப் புதினமான லெஸ் மிசரபிள்ஸின் (Les Misérables), தழுவலாகும். சுதானந்த பாரதி எழுதிய கதைக்கு, இளங்கோவன் உரையாடல் எழுதி இருக்கிறார். கலைஞர் மு கருணாநிதிக்கு அவர்களுக்கு முன் இளங்கோவன்தான் வசனம் எழுதுவதில் புகழ்பெற்று இருந்திருக்கிறார். கே. ராம்னாத். படத்தை இயக்க, பக்ஷிராஜா ஸ்டுடியோஸ் சார்பில் எஸ்.எம்.ஸ்ரீராமுலு படத்தைத் தயாரித்துள்ளார்.

திரைப்படத்தில் முதலில் தொழில்நுட்பக் கலைஞர்களின் பெயரைப் போடுகிறார்கள். பின் 

வி.நாகய்யா

லலிதா

பத்மினி

நடித்த 

’ஏழை படும் பாடு’ எனப் போடுகிறார்கள். 

பின் நடிகர்கள் / நடிகையர் பெயர் போடுகிறார்கள்.

V நாகையா -கந்தன், தயாளன் -அம்பலவாணன்

டி.எஸ்.பாலையா -ராம்கோபால் 

டி.எஸ்.துரைராஜ் -மாசிலாமணி 

சேருகுளத்தூர் சாமா- சாது உத்தமர் 

என்.சீதாராமன் -இன்ஸ்பெக்டர் ஜாவர் 

வி.கோபாலகிருஷ்ணன் -உமாகாந்தன்

காளி என்.ரத்தினம் -நாகம்

எம்.ஆர்.சுவாமிநாதன் -நாகனின் மைத்துனர் 

எஸ்.பீர் முகமது -வேதகிரி –

நீதிபதி நாட் -அன்னாஜி ராவ் 

டி.கே.கல்யாணம் -ரங்க தாஸ் 

கே.எஸ்.கன்னையா 

எஸ்.வி.சண்முகம் 

வி.எஸ்.ராவ், மாணிக்கம்.

நடிகையர் 

லலிதா; அஞ்சலா

பத்மினி; லட்சுமி

குமாரி ராஜம்; ராஜம்/ ராணி 

பி.எஸ்.ஞானம்; நாகி 

எஸ்.ஆர்.ஜானகி; கந்தனின் சகோதரி 

குழந்தை மீனாட்சி; குழந்தை லட்சுமி 

நாட்டியப் பெண்கள் ராகினி, தங்கம், கல்யாணி, ரீட்டா, ஜானகி, ராதாமணி 

எடுத்தவுடன், சிறையைத்தான் காட்டுகிறார்கள். அங்கு காவலதிகாரி ஜாவர் வரும்போது, ஒருவர் காரி உமிழ்கிறார். அந்த ஓசை கேட்டு, “யார் அதைச் செய்தது?” எனக் காவல்துறை அதிகாரி கேட்க, அதைச் செய்யாத நாயகன் கந்தன், தான் தான் செய்ததாக ஒப்புக்கொள்கிறார். அதற்காகக் கூடுதல் தண்டனையும் பெறுகிறார். அப்போதுதான், தனது கடந்தகால வாழ்க்கை குறித்துச் சொல்கிறார். 

அரசுக்குப் பணம் கட்டி, காட்டை ஒருவர் குத்தகைக்கு எடுக்கிறார். பணம் கட்டினால்தான் விறகு வெட்ட முடியும்; அவரிடம்தான் விறகையும் விற்க வேண்டும் என்கிற சூழ்நிலை உருவாகிறது. இதனால்,பணமில்லாமல், விறகு வெட்டியான கந்தன் வீடு திரும்புகிறார். 

வழியில், வடநாட்டவர் ஒருவர், கொடுத்த கடனைத் திருப்பிக்  கேட்கிறார். கந்தன் பணமில்லை எனச் சொன்னதும், பணயமாகக் கோடாரியைப் பிடுங்கிச் செல்கிறார். அப்போதே வடநாட்டவர் என்றால், தவறாகத் தமிழ் பேசுபவர் என்பதுதான் அடையாளம் என இருந்து இருக்கிறது. 

மளிகைக்கடையில் வந்து பொருட்கள் கடனாகக் கேட்டால், கடைக்காரர் கடன் கொடுக்கவில்லை. பசியினால், பலகாரக்கடையில் திருடி, பிடிபட்டுச் சிறை வந்தவர், சிறையில் இருந்து தப்பி வீடு செல்கிறார். அங்கே அக்கா இறந்து கிடக்க காவலர்கள் மீண்டும் வந்து கைது செய்கிறார்கள்.  

அடுத்த காட்சியில், ராஜம் (ராணி) சர்க்கஸில் வேலை செய்கிறார். அவர் பின்னால் சுற்றுகிறார், ராஜகோபால். ராஜம் தனது கதையைச் சொல்கிறார். 

இவர் கந்தனின் அக்கா மகள். கந்தன் சிறைக்குப் போன பின், அக்கா இறக்க, தான் மிகவும் சிரமப்பட்டதாகவும், இப்போதுதான் சர்க்கஸ் நிறுவனத்தில் வேலைக்குச் சேர்ந்த பின்தான் கொஞ்சம் சிரமமில்லாமல் இருப்பதாகச் சொல்கிறார். 

அடுத்த காட்சியாக கந்தனுக்கு விடுதலை கிடைக்கிறது. சிறையில் செய்த வேலைக்கான கூலியையும் மிகவும் குறைத்தே கொடுக்கிறார். ஜாவர். திடீரென சிறை இடிந்து விழ அதிலிருந்து ஜாவரை கந்தன்தான் காப்பாற்றுகிறார். ஆனாலும் ஜாவர் மனம் இளகவில்லை. நாள்தோறும் காவல்நிலையம் வந்து கையெழுத்துப்  போடவேண்டும் என்கிற நிபந்தனையுடன்தான் கந்தன் வெளியே வருகிறார். 

கந்தன், பசியால் வீடுவீடாகப் போய்ச் சாப்பாடு கேட்கிறார். யாரும் கொடுக்கவில்லை. ஆனால், ஒரு கிறிஸ்தவ சாமியாரின் இல்லத்திற்குச் சென்ற போது, அவர் தன்னருகிலேயே வைத்து உணவு கொடுக்கிறார். இரவில் தூங்குவதற்கு இடமும் கொடுக்கிறார். மறுநாள் கந்தன், தன் அக்கா குடும்பத்தைத் தேடி செல்கிறார். ஆனால், அவர்கள் இருந்த இடத்தில் இப்போது ஒரு மாளிகை இருக்கிறது. அவர்கள் அனைவரும் என்ன ஆனார்கள் எனத் தெரியவில்லை.

பணம் தேவை எனக் கருதிய கந்தன், கிறிஸ்தவ பாதிரியார் இல்லத்திற்கு மீண்டும் சென்றுத் திருடுகிறார். வழியில் காவல் அதிகாரியிடம் பிடிபடுகிறார். ஆனால், கிறிஸ்தவ பாதிரியாரோ, தான் தான் அவருக்கு அந்தப் பொருள்களைக் கொடுத்ததாகச் சொல்கிறார். மேலும், அவர், இரு விளக்குகளையும், கண்ணாடி அறுத்து பொருட்கள் செய்யும் செய்முறைக்கான புத்தகம் ஒன்றையும் கொடுக்கிறார். 

கந்தனும் அவற்றை வைத்துத் தொழில் தொடங்குகிறார். கையெழுத்துப் போடுவதற்கு, காவல்நிலையம் செல்லாமல், வேறு ஊருக்குச் சென்று விடுகிறார். அங்கு கந்தன், தொழிலில் பெரும் வெற்றி பெறுகிறார். நகர மேயராகிறார். இப்போது அவரின் பெயர் தயாளன். அங்கு வந்த இன்ஸ்பெக்டர் ஜாவர், அவரை அம்பலப்படுத்துவதாக அச்சுறுத்துகிறார். 

இந்தக் காலகட்டத்தில் ராணி (ராஜம்), ராம்கோபாலால் ஏமாற்றப்பட்டு, கையில் ஒரு பெண் குழந்தையுடன் ஆதரவற்று நிற்கிறார். குழந்தையை வைத்துக் கொண்டு வேலை செய்ய முடியாது என்பதால், ஒரு குடும்பத்திடம் கொடுத்து, வளர்க்கிறார். அந்தக் குடும்பத்தின் கணவன் மனைவி நாகம், நாகியாக காளி  என்.ரத்தினம்; பி.எஸ்.ஞானம் வருகிறார்கள். வழக்கமாக நகைச்சுவை நடிகராக வரும் காளி என்.ரத்தினம்; இதில் ராணியின் குழந்தையைக் கொடுமைப்படுத்துபவராக வருகிறார். அவர்களுக்கும் ஒரு மகள் இருக்கிறார்.

இப்படியே கதை போகிறது. ஒரு நாள், ராணி, ராம்கோபாலை சாலையில் சந்திக்கிறார். ராம்கோபால் கதையைத் திரித்துச் சொல்ல, ராணி கைது செய்யப்படுகிறார். நகரின் மேயர் என்கிற முறையில் தயாளன், ராணியைக் காப்பாற்றித் தன் வீட்டிற்கு அழைத்துச் செல்கிறார். ராணி, தனது கதையைச் சொல்கிறார். இருவரும் ஒருவர் மற்றவரை அறிந்துகொள்கிறார்கள்.

இந்த நேரத்தில், இன்ஸ்பெக்டர் ஜாவர், தயாளன் தான் கந்தன் என மேலதிகாரிகளிடம் தகுந்த ஆதாரத்துடன் நிரூபித்தும், அவரோ ‘நீ ஒரு முட்டாள்’, உண்மையான கந்தனைக் கைது செய்தாகிவிட்டது என்கிறார். அதாவது வேறு ஒரு அப்பாவி கைது செய்யப்பட்டிருக்கிறார். 

தன்னால் வேறு யாரும் சிரமப்படக் கூடாது என நினைக்கும், தயாளன், தான் தான் கந்தன் என நீதிமன்றத்திற்கு வந்து சொல்கிறார். ஆனால், யாரும் நம்பவில்லை. வீட்டிற்கு வந்து, தன்னை வந்து தன்னைக் கைது செய்யுமாறு இன்ஸ்பெக்டர் ஜாவருக்குக் கடிதம் எழுதுகிறார் தயாளன். ஆனால், ஜாவர் வரும்போது, இங்கே படுக்கையில் இருந்த ராணி இறந்துவிடுகிறார். இப்போது ராணியின் குழந்தையை வளர்க்கும் பொறுப்பு தயாளனுக்கு வந்துவிடுகிறது. இதனால், ஜாவரை அடித்துப் போட்டுவிட்டுத் தப்பிக்கிறார்.

ராணியின் குழந்தை லட்சுமியைப் போய் அழைத்து வந்து, பட்டணத்தில் அம்பலவாணன் என்னும் பெயருடன் செல்வாக்காக வாழுகிறார் தயாளன். லட்சுமி (பத்மினி), ஊரின் பெரிய மனிதரின் பேரன் உமாகாந்தனைக் காதலிக்கிறார். அந்தப் பெரிய மனிதருடன்தான் ராமகோபால் இருக்கிறார். உமாகாந்தன் சுதந்திரத்திற்காகப் போராடுபவர். இது தாத்தாவிற்குப் பிடிக்கவில்லை.

இந்த நிலையில், குழந்தை லட்சுமி ஒரு வீட்டில் வளர்ந்தாரே அந்தக் கணவன் நாகம் இறந்துவிட, நாகி, தனது மகள் அஞ்சலையுடன் (லலிதா) இதே ஊரில் வசிக்கிறார். அஞ்சலை, தெருவில் பாட்டுப்பாடி காசு வாங்கிப் பிழைப்பு நடத்துகிறார். அவருக்கு உதவும் பொருட்டு அம்பலவாணர், அவர் வீட்டிற்குச் செல்கிறார். நாகி அவரை அடையாளம் கண்டுகொள்கிறார். 

உமாகாந்தன், தாத்தாவுடன் சண்டை போட்டு, அஞ்சலை வீட்டின் ஒரு பகுதிக்கு வாடகைக்கு வருகிறார். அஞ்சலை அவரை ஒருதலையாகக் காதலிக்கிறார். 

அம்பலவாணனிடம் பணம் பறிக்கும் நோக்கில் நாகியின் தம்பியின் கூட்டம், அவரைக் கட்டி வைக்கிறது. அஞ்சலை, காவல் துறைக்குத் தகவல் கொடுக்க, வருபவர், நமது ஜாவர்தான். இப்போது அம்பலவாணன் யார் என்பது அவருக்குத் தெரிகிறது. இதை அறிந்த அம்பலவாணன், லட்சுமியுடன் ஊரைவிட்டுப் போக நினைக்கிறார். அப்போது, உமாகாந்தன், தான் போராட்டத்தில் கலந்துகொள்ளப் போவதாகவும், தனக்கு என்ன நேர்ந்தாலும் பின்வாங்கப் போவதில்லை என்றும் லட்சுமிக்கு எழுதி அனுப்பிய கடிதம், அம்பலவாணன் கையில் கிடைக்க, அவர் போராட்டக் களத்திற்குச் செல்கிறார். அங்கு, போராட்டக்காரர்களிடம், ஜாவர் சிக்கி இருப்பதைப் பார்க்கிறார். இன்ஸ்பெக்டர் ஜாவரை அவர்கள் கொலை செய்ய துப்பாக்கியை எடுக்கும் போது, அம்பலவாணர் சென்று காப்பாற்றிச் செல்கிறார்.

போராட்ட களத்தில்  உமாநாத்தைக் காப்பாற்றுவதற்காக அஞ்சலை உயிர் விடுகிறார். அடிபட்டு கிடைக்கும் உமாநாத்தை, அம்பலவாணர் தூக்கிக் கொண்டு தன் வீடு வருகிறார்.  

‘அரசாங்கச் சட்டத்தைவிட அதி உன்னதமானது அன்புதான்’ என லட்சுமிக்கும் உமாநாத்திற்கும் அறிவுரை சொல்கிறார். கிறிஸ்தவ சாமியார், கந்தனுக்குக் கொடுத்த இரு குத்துவிளக்குகளை அவர்களிடம் கொடுக்கிறார். 

அறிவுரை சொல்லிக் கொண்டிருந்த நேரத்தில் அங்கு ஜாவர் வருகிறார். கடமையில் இருந்து தவற மனமில்லாத , உங்களைக் கைது செய்ய விருப்பமும் இல்லாத நான் இறக்கிறேன் என கடிதம் எழுதி வைத்து விட்டு, சென்று தற்கொலை செய்து கொள்கிறார். 

உமாகாந்தின் தாத்தா, அம்பலவாணனை, சந்திக்க வருகிறார். அவருக்குத் தயாளனாக அவரை நன்கு தெரியும். கடுங்காவல் தண்டனை கைதியின் மகள் தன் பேரனுக்கு வேண்டாம் என்கிறார். அம்பலவாணர் உண்மையைச் சொல்கிறார். லட்சுமியின் அப்பாதான் தான் என நிரூபணம் ஆனதால் ராம்கோபால் வெளியேறி விடுகிறான். குற்றங்கள் பல ஏற்கெனவே செய்தவர் என்பதால், கைது செய்யப்படுகிறான்.

இறக்கும் தருவாயில் இருக்கும் கந்தன்/ தயாளன்/ அம்பலவாணன், கிறிஸ்தவ பெரியவர் என்னை அழைக்கிறார் என மகிழ்ச்சியுடன் இறக்கிறார்.

இசை: எஸ்.எம்.சுப்பையா. பாடல்கள் அவ்வளவு அறிமுகம் இல்லை என்றாலும், கேட்க நன்றாகவே இருக்கிறது. வி.ஏ.கோபாலகிருஷ்ணன் பாடல்களை எழுதியுள்ளார். கண்ணன் மனநிலையைத் தங்கமே தங்கம் கண்டுவர வேணுமடி தங்கமே தங்கம் 

ஒரே ஒரு பாடல் மட்டும் பாரதியார் எழுதியது. கதைக்களம் விடுதலைப்போராட்ட களம் என்பதால், அதற்குத் தகுந்த 

“சோரம் இழைத்து இடையர் பெண்களுடனே – அவன் சூழ்ச்சித் திறமை பல காட்டுவதெல்லாம்

வீர மறக் குலத்து மாதரிடத்தே

வேண்டிய தில்லையென்று சொல்லிவிடடீ!”

எனப் பாடல் வரிகளைக் களத்திற்குத் தகுந்தாற்போல் புகுத்தி இருப்பது சிறப்பு.

நாகையா தான் நாயகன் என்றாலும், அவருக்கு இணையாகவே ஜாவர் சீதா ராமன் வருகிறார். இருவருமே அவரவர் பாத்திரத்தை அறிந்து நடித்து சிறப்பித்து இருக்கிறார்கள். அவரின் கனிவான முகமும், இவரின் மிடுக்கான முக பாவனையும் நன்கு பொருந்தி வருகின்றன.

ஜாவர்ட் என்பது, இந்தத் திரைப்படத்தின் மூலக் கதையான லெஸ் மிசரபிள்ஸின் கதாபாத்திரத்தின் பெயர். அதே பெயரைத்தான் திரைப்படத்தில் ஜாவர் என வைத்து இருக்கிறார்கள். இந்தத் திரைப்படம் வந்தபின், அவரது பெயருடன் ஜாவர் என்கிற பெயர் ஒட்டிக் கொண்டது.

அவரது பெயரைப் பார்த்தவுடன் அவர்தான் இந்தத் திரைப்படத்தின் கதையை எழுதியிருப்பார் என நினைத்தேன். ஏனென்றால் அவரது புகழ்பெற்ற குமுதம் தொடர்களான, மின்னல் மழை மோகினி, பணம் பெண் பாசம், உடல் பொருள் ஆனந்தி போன்றவை இதே போல (ஏழை படும் பாடு) மூன்று சொல் தலைப்புகள். அதனால் அப்படி நினைத்திருந்தேன். ஆனால், எழுதியவர் அவர் அல்லர். ஜாவர் சீதா ராமன், AVM நிறுவனத்தின், பல திரைப்படங்களுக்குத் திரைக்கதை எழுதியவர். அந்நிறுவனத்தின் ஓர் அங்கமாகவே வாழ்ந்து மறைந்தவர். அந்த நாள், பட்டினத்தில் பூதம் போன்ற பல திரைப்படங்களில் நடித்தாலும், கதாசிரியராகவே பெரிதும் அறியப்பட்டவர்.

பெண் பாத்திரங்கள் எதுவுமே திரைப்படம் முழுவதும் வருவதாக இல்லை. ராணி என வரும் குமாரி ராஜம் திரைப்படத்தின் முற்பகுதி முழுவதும் வருகிறார் என்றால், பிற்பகுதி முழுவதும் லலிதாவும் பத்மினியும் வருகிறார்கள். இதுவரை நடனம் மட்டுமே ஆடிக்கொண்டிருந்த இந்தச் சகோதரிகள், இப்படத்தில்தான் முதன்முதலாக நடித்து உள்ளனர்.

“ஐயா வாங்க. அம்மா வாங்க.

கனிவுடனே திரும்பியே பாரும்

ஒரு காசுமே தாரும்

ஓட்டை செப்புக் காசு எடுத்து இப்படி வீசு

ஏழைப் பெண்ணை

கனிவுதான் திரும்பியே பாரும்”

என்ற பி.ஏ.பெரியநாயகி அவர்கள் பாடிய பாடலுடன் அறிமுகமாகிறார் லலிதா. ஒருதலையாக காதலிக்கும் நாயகியின் விதிப்படி இறந்து போகிறார். 

பத்மினி மிகவும் இளமையாக இருக்கிறார். எந்தவித ஒப்பனையும் இல்லாத அவரது முகம் அவ்வளவு பாந்தமாக இருக்கிறது. ‘என் மனமே இன்ப கீதம் பாடிடு மனமே’ என அவர் பியானோ வாசிப்பதாக வரும் பாடலில் அவர் அவ்வளவு அழகு. ஒரு பாடலில் ராகினியுடன் ஆண் வேடத்தில் வருகிறார். பொதுவாக அவரது நடனம் என்றாலே பரதநாட்டியம், அதற்கான ஆடை அணிகலன்கள் எனதான் இருக்கும். இதில் வரும் பரத நாட்டியத்தில்கூட எளிய உடையில்தான் ஆடுகிறார்.

(தொடரும்)

படைப்பாளர்:

பாரதி திலகர்

தீவிர வாசிப்பாளர், பயணக் காதலர்; தொன்மை மேல் பெரும் ஆர்வம் கொண்டவர். அயல்நாட்டில் வசித்து வந்தாலும் மண்ணின் வாசம் மறவாமல் கட்டுரைகள் எழுதிவருகிறார். ஹெர் ஸ்டோரிஸில் இவர் எழுதிய கட்டுரைகள், ‘பூப்பறிக்க வருகிறோம்’ என்கிற புத்தகமாக, ஹெர் ஸ்டோரிஸில் வெளிவந்திருக்கிறது.

Exit mobile version