Site icon Her Stories

சிவாஜியின் உத்தம புத்திரன்

உத்தம புத்திரன் (1958)

மலர்புரியின் அரசிக்கு முதலில் ஓர் ஆண் குழந்தை பிறக்கிறது. அவரின் தம்பி நாகநாதன், அந்தக் குழந்தையை மாற்றிவிட்டு, ஓர் இறந்த குழந்தையைக் காட்டுகிறார். ஆனால், மீண்டும் ஒரு குழந்தை பிறக்கிறது.

நாகநாதன் முதல் குழந்தையைக் கொல்ல, சோமப்பா என்பவரிடம் கொடுக்கிறார். ஆனால், அவரும் அவரது மனைவியும் காட்டில் வைத்து குழந்தையை வளர்க்கிறார்கள்.

அரண்மனையில் இளவரசனாக இருப்பவர் விக்ரமன், காட்டில் இருப்பவர் பார்த்திபன். பின் 1940 கதை போலதான் இதுவும் போகிறது. சிறு மாற்றம், நாயகி சோழ நாட்டு இளவரசி அல்ல. மலர்புரி அமைச்சரின் மகள். தாய்மாமன் வீட்டில் வளர்ந்து வந்தவர் இப்போதுதான் நாட்டிற்கு வருகிறார். காதலிக்கும் போதே அவர் காட்டில் வாழும் பார்த்திபனைத்தான் காதலிக்கிறார். இப்படிச் சிற்சில மாற்றங்களுடன் கதை போகிறது.

இந்தத் திரைப்படத்திலும் எழுத்து நடையில் அரசு சார்ந்தவர்கள் பேசுகிறார்கள். பொது மக்கள் அவரவர் இயல்பு நடையில் பேசுகிறார்கள்.

சிவாஜி கணேசன் (இரு வேடங்களில்)

பத்மினி கண்ணாம்பா

தங்கவேலு – ராகினி

நம்பியார்- ஓ.ஏ.கே.தேவர்

Guest Artist M K ராதா

என நடிகர்கள் பெயர் போடுகிறார்கள்.

பார்த்திபன் அம்மா பொன்னியாக எம்.எஸ்.எஸ்.பாக்யம், மற்றும் செல்லம்மாவாக செல்லம் ஆகியோர் நடித்து உள்ளார்கள். ஸ்ரீதர் திரைக்கதை எழுதியிருக்கிறார்.

பத்திரிகைகளில் சிவாஜி இரு வேடங்களில் நடிக்கும் ‘உத்தமபுத்திரன்’ என்று விளம்பரம் வந்த அதே நாளில் இன்னொரு விளம்பரம். எம்.ஜி.ஆர் இரு வேடங்களில் நடிக்கும் ‘உத்தமபுத்திரன்’ என்று வந்திருக்கிறது. என்.எஸ். கிருஷ்ணன், எம்.ஜி.ஆரைச் சமாதானம் செய்து, தலைப்பை மாற்றிக்கொள்ளச் சொல்லியிருக்கிறார். அப்படி மாற்றிய தலைப்புடன் வந்த படம்தான் ‘நாடோடி மன்னன்.’ உண்மையில் அந்தத் திரைப்படத்திற்கு நாடோடி மன்னன் என்கிற பெயர்தான் பொருத்தமானது என்பது என் எண்ணம்.

வின்சென்ட் மாஸ்டர் என்று அழைக்கப்படும் ஒளிப்பதிவாளர் வின்சென்ட்தான் ஒளிப்பதிவு செய்திருக்கிறார். மைசூர் பிருந்தாவனில் படப்பிடிப்பு நடந்து கொண்டிருந்த போது, சுற்றுலாவுக்கு வந்திருந்த பிரெஞ்சுப் பயணி ஒருவரின் கேமரா லென்ஸைக் கடன் வாங்கி, பத்மினி முதல் மாடியிலும், சிவாஜி கணேசன் கீழே தோட்டத்தில் உள்ள அருவியிலும் நின்று கொண்டிருந்ததை ஜூம் ஷாட் எடுத்துள்ளார். இதனால், உத்தம புத்திரன்தான் ஜூம் நுட்பத்துடன் கூடிய காட்சிகளைக் கொண்ட முதல் இந்தியத் திரைப்படம் என்கிறது இணையம்.

ஊரில் இருக்கும் மனிதர்களைக் காட்டும் போது, சட்டை போட்ட ஆண்கள் சட்டை போடாத ஆண்கள் சமமாகவே இருக்கிறார்கள். பெண்களில் வழக்கமான சேலை அணிந்து வருகிறார்கள்.

அரச உடைகளில் ஆண்கள் லெக்கிங்ஸ் + டாப்ஸ் போன்று போடுவார்களே அந்த மாதிரி ஆடைகள் அணிகிறார்கள்.

எதிலுமே எந்தக் குறையும் சொல்ல முடியாத நேர்த்தியான படைப்பு எனச் சொல்லலாம். அதிலும் நடனங்கள் பிரமிப்பை ஊட்டுகின்றன.

நடனம் ஹெலன்

நடனப் பெண்கள்

ரீட்டா – சந்திரா

பாலா – லீலா எனப் போடுகிறார்கள். யாரடி நீ மோகினி பாடலுக்காக நடனம் ஆடியவர்கள் இவர்கள். இதன் நடன அமைப்பு ஹீரா லால். இதுதான் தமிழ் சினிமாவின் முதல் ராக் ‘அண்ட் ரோல்’ நடனம்.

அந்தப் பாடலைப் பார்ப்பதும் அழகு; கேட்பதும் இனிமை. ஒவ்வொரு சரணத்திலும் நடனம் மட்டுமல்ல, இசையும் வெவ்வேறாக இருப்பது சிறப்பு. ஹா என சிவாஜி ஆரம்பித்து விட்டு, கையைத்தட்டி அழைக்கும் போதே பாடல் சூடுபிடிக்கத் தொடங்குகிறது. மூன்று சரணங்கள் கொண்ட இப்பாடல், வழக்கமான பாடல்களைவிடச் சற்று நீளமானது.

ஒவ்வொரு சரணத்தையும் ஒவ்வொரு பாடகிகள் பாடுகிறார்கள். டி.எம்.சௌந்தரராஜனுடன், ஏ.பி.கோமளா, கே. ஜமுனா ராணி, ஜிக்கி என மூன்று பெண்கள் பாடுகிறார்கள். அதே போல மூன்று பெண்கள் முதன்மை ஆட்டக்காரர்களாக வருகிறார்கள். ஹெலன் அழகிய அசைவுகளுடன் வரும்போது நாமும் பாடலுடன் இணைந்து விடுகிறோம். இறுதியில் நம்பியாரும் இணைந்து கையைத் தட்டி முடிக்கும் வரை பாடல் நம்மை ஆட வைத்து விடுகிறது.

இந்தப் பாடலின் தாக்கத்தில் 2008 ஆம் ஆண்டு ‘யாரடி நீ மோகினி’ என்கிற பெயரில் திரைப்படம் வந்துள்ளது.

நாயகன் நாயகிக்கு ‘முல்லை மலர் மேலே’ மற்றும் அன்பே அமுதே என்கிற இருவரும் இணைந்து பாடுவதான காதல் பாடல்கள் உள்ளன.

தோழிகள் இருவர் பாடும் சோடிப் பாடலாகவும் பாடல்கள் வருகின்றன. பத்மினி, ராகினி அறிமுகப்படுத்தும், ‘மண்ணுலகெல்லாம் பொன்னுலகாக’ என்கிற ஜிக்கி, பி.சுசீலா இருவரும் இணைந்து பாடும் பாடல் கேட்க அவ்வளவு இனிமையானது. மிகச் சிறந்த பெண்குரல் சோடிப் பாடல்களில் இதுவும் ஒன்று. கேட்பதற்குத்தான் இனிமை என்றால், பார்ப்பதற்கு இனிமையோ இனிமை. ‘பெண்ணுக்குப் பெண்ணே பேராசை கொள்ளும் பேரழகெல்லாம் படைத்தவரோ’ என்கிற பாடலுக்குப் பொருத்தமான அழகு என்றால், இந்தப் பாடலைச் சொல்லலாம்.

‘காத்திருப்பான் கமலக்கண்ணன்’ பாடல், பத்மினி, ராகினி இருவரும் பரத நடனம் ஆடுகிறார்கள். இந்தப் பாடல், காத்திருக்கும் நாயகனைப் போய்ச் சந்திக்க முடியாத நாயகியின் பாடலாக வருகிறது. ராகினி கண்ணன் உருவத்தில் வந்து அழகாக ஆடுகிறார் இந்தப் பாடலுக்குத் தங்கராஜ் நடன அமைப்பாளராக இருந்திருக்கிறார்.

கொண்டாட்டம் கொண்டாட்டம் என்கிற பாடலுக்கு பிஎஸ் கோபால கிருஷ்ணன் நடன அமைப்பாளராக இருந்திருக்கிறார். இந்தப் பாடல், தோழிகள் இருவரும் பிறருக்குத் தெரியாமல், தகவல்களைப் பரிமாறும் பாடல். சொல்வதற்கான முகபாவனை, புரிந்து கொண்டதற்கான முகபாவம் எல்லாம் தோழியர் முகத்தில் மிக அழகாக தெரியும்.

மன்னரை மயக்கும் விதமாக உள்ள ‘உன்னழகைக் கன்னியர்கள் சொன்னதினாலே’ என்கிற பாடலில் இருவரில் யார் அழகு, யாரின் முகபாவனை சிறப்பு என நம்மால் தீர்மானிக்க முடியாத அளவிற்கு நடிகர் திலகமும் நாட்டியப் பேரொளியும் வருகிறார்கள்.

இவை போக ராகினியும் தங்கவேலுவும் சிறைக்காவலர்களுக்கு மயக்க மருந்து கொடுக்கும் பாடல் ஒன்றும் இருக்கிறது.

இவ்வாறு பத்மினி, ராகினி என்கிற சகோதரிகளின் நடனத்திறமையின் மீது கதை அழகிய விதமாக கட்டப்பட்டுள்ளது என இந்தப் பதிப்பை சொல்லலாம்.

(தொடரும்)

படைப்பாளர்:

பாரதி திலகர்

தீவிர வாசிப்பாளர், பயணக் காதலர்; தொன்மை மேல் பெரும் ஆர்வம் கொண்டவர். அயல்நாட்டில் வசித்து வந்தாலும் மண்ணின் வாசம் மறவாமல் கட்டுரைகள் எழுதிவருகிறார்.

Exit mobile version