கன்னடத்தில் வெளிவந்த மிக முக்கியமான நாவல். ‘ஸ்நேகா’ பதிப்பகத்தின் அனுமதியோடு ஒவ்வொரு புதன் கிழமை அன்றும் வெளிவருகிறது.
தமிழில்: சி.சு. சதாசிவம்
8
இப்போதெல்லாம் மஹமத்கான் மகளை முன்பு போல் அதட்டி மிரட்டுவதில்லை. பீடி சுற்றியது சரியாக இல்லாமலிருந்தாலும் ஒன்றும் சொல்ல மாட்டார். தம் மனைவியிடம் அவ்வப்போது நாதிராவின் திருமணத்தைப் பற்றி பேசுவார். ”நான் சாகறதுக்குள்ள இவளுக்கொரு ஏற்பாடு பண்ணிடணும் ” என்று அவ்வப்போது சொல்வார்.
ஒருநாள் இரவு உணவு முடிந்த பின்னால் வெற்றிலைப் பாக்கு போட்டுக்கொண்டு திண்ணையில் நிலவொளியில் மூன்று பேரும் உட்கார்ந்திருக்கும்போது கான் தன் பேச்சுக்குப் பீடிகை போட்டார். ‘தலாக்’ வாங்கிவந்து மூன்று மாதங்களாகியிருந்தன. இன்றையிலிருந்து அவள் ரஷீத் கொடுத்த எந்தப் பொருளையும் பயன்படுத்தக் கூடாது. அவளைப் பொருத்த வரையில் அவன் அந்நிய ஆடவன்.
கான் மாலைத் தொழுகைக்கு முன்பே வீட்டுக்கு வந்து விட்டார். மலர்ந்த முகத்தோடு வந்த கணவனை பாத்திமா பார்த்தார்.
வாசலிலிருந்தே, ”கன்னுகுட்டிக்குக் கவுறு வாங்கியாந்தீங்களா?” என்று கேட்டாளர்.
கன்றுக்கான கயிறை வாங்கக் கான் மறந்தே போய் விட்டார். தோல்வியை ஒப்புக்கொள்ள மனமில்லாத அவர், ”உன் தலையில பசு, கன்னு, ஆடு, கோக்ஷியத் தவிர வேறென்ன இருக்கப் போவுது? நான் வேற வேலைங்களுக்கு மத்தியிலே அத மறந்தே போயிட்டேன்.”
” நம்ம வயித்துப்பாட்ட கழுவணும்னா அதுங்க பத்திரமா இருக்கணுமில்லியா?” என்று மெதுவாக முனகிக் கொண்டே, ”அது என்னா அப்பிடிப்பட்ட வேல?” என்று கேட்டார்.
”வேற ஒண்ணுமில்ல, ரஷீத் நாதிராவுக்குத் ‘தலாக்’ குடுத்துட்டான்” எந்தவொரு உணர்ச்சியையும் காட்டாமல் மெதுவாகச் சொன்னார் கான்.
இது முற்றிலும் எதிர்பாராததாக இல்லாவிட்டாலும் இது இவ்வளவு விரைவில் வரும் என்று அவள் எண்ணியிருக்கவில்லையாதலால் அவளுக்கு ஒருவிநாடி கண்கள் இருண்டு போனது போலானாலும் மறுவிநாடியே தன்னைச் சமாளித்துக் கொண்டார். நிதானமாக அடிவைத்து வீட்டுக்குள் போனார்.
நாதிரா அங்கேயே திண்ணை மீது பீடி சுற்றிக்கொண்டிருந்தாள். அவளுக்கும் கான் சொன்னது காதில் விழுந்தது. ஆனால், தனக்கு எதுவும் நடக்காதது போல் அவள் தன் வேலையைத் தொடர்ந்து செய்துகொண்டிருந்தாள். இதயத்தில் எரிமலை வெடித்துக் கொண்டிருந்தாலும் முகம் மட்டும் அமைதியாகவே இருந்தது. குழந்தையை எடுத்துக் கொண்டு போன நாளிலிருந்தே அவள் இதை எதிர்பார்த்துக்கொண்டேயிருந்தாள். இந்த நிலைமையைத் தாங்கிக்கொள்ளவும் சமாளிப்பதற்கும் தயாராகவே இருந்தாள். கணவனுக்காக ஆசைப்படுவதை அவள் என்றோ விட்டுவிட்டிருந்தாள்.
ஆனால், அவளால் நீண்ட நேரம் உட்கார்ந்திருக்க முடியவில்லை. ஆற்றங்கரைக்குச் சென்று அங்கு எப்போதும் உட்காரும் பாறையின் மீது உட்கார்ந்தாள். வெறிச் சோடிய பார்வையில் பாகோடு கிராமத்தையே இலக்கின்றிப் பார்த்துக்கொண்டிருந்தாள். சந்திரகிரியும் அவளது பாதங்களை வருடத் தொடங்கினாள். தன் மடியிலேயே வளர்ந்து பெரியவளான இந்த மகளின் வேதனையிலும் சோகத்திலும் சந்திரகிரி ஆறும் எப்போதும் பங்காளியாக இருந்தாள்.
”அடியே, நாதிராவுக்கு ஒரு நல்ல சம்பந்தம் வந்திருக்குது” என்று எந்த முன் யோசனையும் இல்லாமல் சொன்னார் கான். நாதிரா தனக்கு எதுவும் கேட்காததைப் போலவே உட்கார்ந்திருந்தாள், பாத்திமா மட்டும், ”யாரு? எந்த ஊர்க்காரங்க?” என்று கேட்டார். அவரது கேள்வியிலும் எந்தவிதமான உற்சாகமோ ஆவலோ இல்லை.
மஹமத்கான் அன்று ஜப்பாரைப் பார்த்துவிட்டு வந்திருந்தார். புதிய வீட்டு சலீம் அவசரப்படுத்துகிறார் என்று அவன் சொல்லியிருந்தான். ”நம்ம ஊர் ஆளுதான்” என்று சொல்லிக்கொண்டே கான் சலீமின் குணச் சிறப்புகளைப் பற்றிப் புகழ்பாடத் தொடங்கினார். அவரது செல்வச் சிறப்புகளை வாயில் நீருறும்படி வர்ணித்தார். அவரைத் திருமணம் செய்து கொண்டால் நாதிரா ராணியைப் போலிருக்கலாம்; தங்கள் எல்லோருக்கும் இத்திருமணத்தினால் எவ்வளவு பலனிருக்கின்றது என்பதையெல்லாம் அவர் அரைமணி நேரத்திற்கு விளக்கினார்.
எல்லாவற்றையும் கேட்டுக்கொண்டிருந்த நாதிரா எழுந்து நின்றாள். நிலவு வெளிச்சத்தில் அவளின் முகத்தில் நிழலாடிய உணர்வுகள் மற்றவர்களுக்குத் தெளிவாகத் தெரியவில்லை.
”வாப்பா…” அவள் தந்தையை இப்படிக் கூப்பிட்டது இதுவே முதல்முறை. கர்ஜிப்பதில் தான் தந்தையின் மகள் என்று நிரூபித்துக் காட்டுவது போலிருந்தது அவள் குரல். விவரம் தெரிந்த நாளிலிருந்து தந்தையின் முன்கோபத்தைப் பார்த்து பயத்தினால் மூலையில் அடங்கிப் போய்விடும் அவள், தந்தையின் முன் நிற்பதே மிகவும் குறைவு. திருமணமாகிக் குழந்தை பிறந்த பிறகுதான் அவள் தந்தையிடம் சற்றுப் பயமில்லாமல் பேசத் தொடங்கியது. தன் வாழ்வு இப்படியானதற்குத் தந்தைதான் காரணமென்று அவள் அறிந்திருந்ததால் அவளுக்கு இப்போது அவரிடம் எந்தவகையான பயமோ மரியாதையோ இல்லாமல் போய்விட்டது. அவளது கர்ஜனையைக் கேட்டு பாத்திமா நடுங்கிப் போய்விட்டார். தந்தை வியப்போடு மகளின் முகத்தைப் பார்த்தார்.
”நீங்க எனக்கு ஒருவாட்டி கண்ணாலம் கட்டி வச்சது போதும். நீங்க ஏதாவது இன்னொருவாட்டி எனக்குக் கண்ணாலம் கருதின்னு தொடங்கினீங்க, நான் சந்திரகிரியிலே உழுந்து உயிர உட்டுடுவேன்” என்று சொல்லிக்கொண்டே புயலின் வேகத்தோடு தன் அறைக்குப் போய்த் தடாரென்று கதவைச் சாத்திக்கொண்டாள். தாயும் தந்தையும் மலைத்துப் போய் நின்றனர்.
‘பாப்பு’ வின் தொட்டில் இன்னும் அங்கேயே இருந்தது. தானும் ரஷீதும் முதன் முறையாக சந்தித்த அறை. குறும்புத்தனத்தால் மின்னும் கண்கள், அரும்பு மீசை , புன்னகை தவழும் உதடுகள் எல்லாம் நினைவென்னும் திரையின் மீது தெளிவாகப் படிந்த ஓவியங்கள். அவற்றைக் கலைத்துவிடவோ, அந்த திரையின் மேல் மற்றோர் ஓவியத்தைத் தீட்டச்செய்யவோ யார் முயன்றாலும் முடியாது.
இப்போது மஹமத்கான் தோற்றுப் போனார். தான் என்ன செய்ய வேண்டும் என்று எண்ணியிருந்தாரோ அது நடக்கவில்லை. முதல் நிக்ஹாவாக இருந்தால், பெண் 16 வயதுக்கும் சிறியவளாக இருந்தால் அவளது ஒப்புதல் இல்லாமலேயே அவளுடைய தந்தை தன் விருப்பம் போல் நிக்ஹா செய்து கொடுத்துவிடலாம். ஆனால், இரண்டாவது நிக்ஹாவை அவளது ஒப்புதல் இல்லாமல் யாரும் நடத்திவிட முடியாது. அவளது ஒப்புதலை மௌல்விகளே நேரில் வந்து கேட்க வேண்டும். அவளும் தனக்குச் சம்மதம் என்றால் தான் நிக்ஹா நடைபெறுமே தவிர, தனக்கு விருப்பமில்லை என்றால் அந்த நிக்ஹா நடைபெறாது.
மஹமத்கானும் பாத்திமாவும் எவ்வளவோ வழிகளில் மகளின் மனதை மாற்ற முயற்சித்தனர். இனிமேல் அவள் ரஷீதின் வீட்டிற்குப் போவது என்பது வெறும் கனவுதான்.
அதனால் அப்படிப்பட்ட விருப்பத்தை வைத்திருப்பதில் ஒரு பயனும் இல்லை. இன்னும் சிறுவயதுப் பெண். எத்தனை நாளைக்குத்தான் தனியாக இருக்க முடியும்? புதுவீட்டு சலீமைத் திருமணம் செய்துகொண்டால் தான் என்ன? உணவும் உடையும் கொடுக்க யாராவது ஒருவர் இருந்தால் போதும். நடந்து போனதை எண்ணிப் பார்ப்பதில் எந்தப் பலனும் இல்லை. ரஷீத் இதற்குள்ளாகவே வேறு திருமணம் செய்துகொண்டிருக்கலாம். இது பாத்திமாவின் கணிப்பு.
சலீமின் சொத்துகளை நினைத்துக்கொள்ளும்போது கானின் வாயில் நீர் சுரக்கும். தம் பெண்ணிற்கு அவ்வளவுகூட அறிவில்லாமல் போய்விட்டதே என்று அவர் புலம்புவார். ஆனால், எந்த வகையிலும் அவளை வழிக்குக் கொண்டுவர அவரால் முடியாமல் போயிற்று.
இப்போது சில வேளைகளில் அவருக்கும் தோன்றும். தான் அவசரப்பட்டுத் தப்பு ஏதும் செய்துவிட்டோமா என்று. ‘தலாக்’ வேண்டுமென்று தாம் ரஹீதை வற்புறுத்தாமலிருந்திருந்தால் அவன் கொடுத்திருக்க மாட்டான். இப்போது வேறெதுவும் செய்வதற்கில்லை. மகள் இப்படிப் பிடிவாதம் பிடிப்பாள் என்று நாம் என்ன கனவு கண்டோமா? அவளுக்கு நல்லது நடக்கட்டுமென்றுதானே தான் இவ்வாறு செய்தது?
இப்போதெல்லாம் நாதிராவுக்கு மஹமத்கான் மீது ஏதோ சந்தேகம். அவரே ரஷீதிடம் கேட்டுத் தலாக் வாங்கிக்கொண்டு வந்துவிட்டாரோ என்று. தன்னைப் போன்ற வயதான சலீமுக்கு இரண்டாம் மனைவியாக மகளைக் கொடுப்பதற்கு மஹமத்கான் தயாரானதுமே அவளின் மனத்திற்குள் இந்தச் சந்தேக விதை முளைவிடத் துவங்கியது. இதற்கிடையில் கருவாடு விற்கும் பாரூ ஒருமுறை வந்தாள். அவளைப் பார்த்தவுடனேயே ஒருநொடி நாதிராவின் இதயத் துடிப்பு சட்டென்று நின்று போயிற்று. சற்று நேரம் நாதிராவினால் எதுவுமே பேசமுடியவில்லை.
அப்புறம் மெதுவாக, ”பாப்புவைப் பாத்தியா பாரூ? அவன் எப்பிடியிருக்கிறான்?” என்று கேட்டாள்.
”ஆமா நாதிராம்மா, நேத்துக்கூட அங்க போயிருந்தேன். பாப்பு நல்லாயிருக்கிறான். இப்போ நல்லா நடக்கிறான். அம்மா, பாட்டீன்னு என்னெல்லாமோ பேசறான். என்னெகூட ‘பாலூ’ன்னு கூப்புடறான்.”
ஒரேநொடியில் நாதிராவின் இதயம் காவள்ளிக்குப் பறந்தது. அதற்குப் பிறகு பாரூ பேசிய எதுவும் அவள் காதில் விழவே இல்லை.
“நாதிராம்மா நான் பொறப்படட்டுமா?” என்று பாரூ கேட்டதும்தான் அவளுக்கு உணர்வு வந்தது.
”பாரூ…. ” மெதுவாக அழைத்தாள் நாதிரா. ”அவர் எவ்வளவு சீக்கிரம் என்னைக் கைவிட்டுட்டார் பாத்தியா?” தன் ஆற்றாமையை அந்தப் பெண்ணிடம் பகிர்ந்துகொண்டாள் நாதிரா.
பாரூ சற்று நேரம் நாதிராவின் முகத்தையே உற்றுப் பார்த்தாள். வியப்பினால் அவள் கண்கள் விரிந்தன.
”நீங்கதான் தலாக் வேணும்னு உங்கப்பாகிட்ட சொல்லி அனுப்பிச்சிருந்தீங்களாம்!”
மூடிமறைக்காமல் பாரூ கேட்டவுடன் இடியுண்டதைப்போல நாதிரா அதிர்ந்து போனாள். ”யார் சொன்னது அப்படீன்னு?”
”உங்க மாமியார்தான் சொன்னாங்க… எதுக்கும்மா அவ்வளவு நல்ல மருமகள உட்டுட்டீங்கன்னு உங்க மாமியார்கிட்ட நான் கேட்டப்போ அவங்களே அப்படிச் சொன்னாங்க. ‘ இந்தக் காலத்துப் பொண்ணுங்களுக்கு எவ்வளவு கொழுப்பு ? அவளே புருசன் வேணான்னு சொன்னதுக்கப்புறம் என் மகன் என்ன ரோசங்கெட்டவனா, இல்ல கையாலாகாதவனா அவள இங்கயே வச்சிகிட்டிருக்கிறதுக்கு? அவனுக்கு என்னா வேற பொண்ணே கெடைக்காதா?’ன்னு உங்க மாமியார் பொலம்பறாங்க…”
நாதிரா உட்கார்ந்த இடத்திலேயே கல்லாக உறைந்து போய்விட்டாள். தன் ‘வாப்பா’ இவ்வாறு செய்வார் என்று அவள் கனவிலும் கருதியிருக்கவில்லை. சற்று நேரம் கழிந்ததும், ”அவர் வேற கலியாணம் கட்டிக்கிட்டாரா?” என்று அடக்கமுடியாமல் கேட்டேவிட்டாள்.
”அவங்கம்மா என்னமோ அப்பப்போ சொல்லிகிட்டு தான் இருக்கிறாங்களாம்; வேற நிக்கா பண்ணிக்கோன்னு. ஆனா, அவரு சம்மதிக்கலயாம். இப்போ வேற கல்யாணம் வேணாம்னு தான் சொல்லிட்டிருக்கிறாராம்.”
அந்தக் கடைசி வார்த்தைகளைக் கேட்டு நாதிராவின் வெந்துகொண்டிருந்த இதயத்தின் மீது தென்றல் வந்து தடவிச் சென்றதைப் போலாயிற்று. ‘நான் தான் அவரைத் தவறாகப் புரிந்துகொண்டேன். அவர் என்றைக்கும் என்னைக் கைவிட்டிருக்க மாட்டார். என்னுடைய தந்தையே என் கணவனின் மனதில் இந்த நச்சுவிதையை ஊன்றாமலிருந்திருக்தால் அவர் எப்போதுமே என்னைக் கைவிட்டிருக்க மாட்டார்.’
” பாரூ ” மீண்டும் அழைத்தாள் நாதிரா. ” என்னா நாதிராம்மா, எனக்கு நேரமாவுது சீக்கிரம் சொல்லுங்க” என்று அவசரப்படுத்தினாள் பாரூ.
”பாரூ, ஒண்ண மட்டும் அவருக்குச் சொல்றியா? நான் எப்பவும் எங்கவாப்பாவ அவர்கிட்ட ‘தலாக்’ வாங்கிட்டு வாங்கன்னு சொல்லவும் இல்ல, அனுப்பவும் இல்லேன்னு தெரியப்படுத்துவியா?”
”ஆகட்டும் ” என்று தலையசைத்துக் கொண்டே பாரூ புறப்பட்டுப் போனாள்.
(தொடரும்)
படைப்பாளர்
சாரா அபுபக்கர்
கன்னட எழுத்தாளர். நாவல்கள், சிறுகதைகள் ஏராளமாக எழுதியிருக்கிறார். ‘சந்திரகிரி ஆற்றங்கரையில்…’ மிகவும் புகழ்பெற்ற நாவல். சமூகத்தை நோக்கிக் கேள்விகளை அள்ளிவீசிய நாவல். மொழிபெயர்ப்பாளர். 85 வயதிலும் இயங்கிக்கொண்டிருக்கிறார்.