Site icon Her Stories

பசுந்தட்டில் ஒரு புத்தர்

Photo by Goh Win Nie on Unsplash

வாசகர்களுக்கு இனிய பௌத்த பூர்ணிமா/விசாகத் திருநாள் நல்வாழ்த்துகள்!

நான்கு ஆண்டுகளுக்கு முன், ஒரு பகல் பொழுதை ஹாங்காங் விமான நிலையத்தில் செலவிடும் படி நேர்ந்தது. அப்போதெல்லாம், இந்தியர்களுக்கு ஹாங்காங் ஊருக்குள் செல்வதற்கு, விசா தேவைப்படவில்லை. அதனால், வெளியில் எங்காவது செல்லலாம் என தீர்மானித்தோம். அப்போது விமான நிலைய அதிகாரி ஒருவரின் ஆலோசனையின் பேரில் நாங்கள் தேர்ந்தெடுத்தது Big Buddha என்று அழைக்கப்படும் புத்தர் சிலை.

எப்படிச் செல்வது என அவரிடம் கேட்டபோது, நீங்கள் நால்வராக இருப்பதால், வாடகை வண்டி பிடித்துச் சென்றால் செலவில் பெரிய வேறுபாடு இருக்காது; விரைவில் செல்லலாம் என்று ஆலோசனை சொன்னார். அவரது ஆலோசனையின் படி நாங்கள் விமான நிலைய வாசலிலிருந்து வாடகை வண்டி பிடித்துப் புறப்பட்டோம்.

ஹாங்காங் என்றவுடன் என் மனதில் தோன்றியது, உயரம் உயரமான கான்கிரீட் கட்டடங்கள் தான். ஆனால், விமான நிலையத்தை விட்டு வெளியேறிய ஐந்து நிமிடத்தில், எனது எண்ணம் தவிடுபொடியானது. விமான நிலையம் இருக்கும் தீவில் கட்டடங்களுக்கு எல்லையாக அழகிய மலை இருந்தது. புத்தர் சிலை இருக்கும் லாண்டவு தீவு (Lantau Island) முழுவதுமே, முழுக்க முழுக்க மலையாக இருந்தது. சாலை கடற்கரையில் போடப்பட்டுள்ளதால், பயணத்தின் பெரும்பகுதி, ஒருபுறம் கடலும், மறுபுறம் அடர்ந்த மரங்களுமாய் இருக்கும் அழகிய சாலையில் கழிந்தது. மரமும், கடலும் கைக்கெட்டிய தூரம் போலத் தெரிந்தது. பல இடங்களில் ஒரு கையால் தண்ணீரையும் மறு கையால் மலையையும் தொட்டுவிடலாம் போல இருந்தது.

Photo by Big Dodzy on Unsplash

ஏறக்குறைய அரை மணிநேரப் பயணத்திற்குப் பின் புத்தர் சிலை இருக்கும் இடத்தை அடைந்தோம். பேருந்தில் பயணம் செய்வதாக இருந்தால், இன்னும் கொஞ்சம் அதிகம் நேரமாகலாம். கேபிள் காரிலும் வரலாம். தியான் டான் புத்தர் (Tian Tan Buddha) எனப்படும் இந்த புத்தர் சிலை 34 மீட்டர் உயரம் கொண்ட ஒரு வெண்கலச் சிலை. இங்கிருந்து, வானம் தெளிவாக இருக்கும் நாளில் மக்காவுத் தீவு வரை கூட பார்க்கலாம் என்கிறார்கள். சிலை 1993 இல் நிர்மாணிக்கப்பட்டது.

Photo by Buster Ferraz on Unsplash
Photo by Joshua J. Cotten on Unsplash

இது தான் உலகின் மிகப்பெரிய, அமர்ந்த நிலையில் வெளிப்புறத்தில் இருக்கும் வெண்கல புத்தர் சிலை எனப்படுகிறது. மேலே ஏறி இறங்குவதற்கு, 268 படிகள் இரு பக்கங்களில் உள்ளன. அவற்றிற்கு நடுவில், சக்கர நாற்காலியில் ஏறி இறங்குவதற்கு வசதியாக சாய்தளம் அமைக்கப்பட்டிருக்கிறது. படிக்கட்டில் ஏறி இறங்க வேண்டியிருப்பதால், முடிந்த வரைக் குறைந்த அளவில் பொருட்கள் சுமந்து செல்வது நலம்.

சிலையின் அருகில் போ லின் மடம் (Po Lin Monastery) உள்ளது. அங்கு ஒரு உணவு விடுதி உள்ளது. மிகத் தரமான சைவ சீன உணவு வகைகள் கிடைக்கின்றன. அவர்களின் பாரம்பரை முறையில் செய்யப்பட்டிருந்ததால், Spring Roll போன்றவற்றின் சுவை அபாரமாக இருந்தது. காலை உணவை முடித்து விட்டுப் படியேறத் தொடங்கினோம். ஏறக்குறைய கன்னியாகுமரி திருவள்ளுவர் சிலை போன்று, ஒரு பெரிய பீடத்தில் புத்தர் அமர்ந்து இருப்பதாகச் சிலை உள்ளது. திருவள்ளுவர் சிலை பீடம் சதுரமாக உள்ளது; புத்தர் சிலை பீடம் தாமரை வடிவில் உள்ளது. புத்தர் சிலையைச் சுற்றிலும் ஆறு புனிதர்களின் (போதிசத்துவர்) வெண்கலச் சிலைகள் உள்ளன. அவர்கள், புத்தருக்குப் பூக்கள், தூபங்கள் போன்ற பொருட்களை வழங்குவது போல அமைத்துள்ளனர்.

பக்தர்கள், புத்தர் சிலையை வலம் வந்தும், சிலையின் முன் நின்றும் வணங்குகின்றனர். இந்தப் பகுதியிலிருந்து போ லின் மடம், நொங்கோங் பிங் கிராமம் (Ngong Ping), கேபிள் கார், என லாண்டவு தீவு முழுவதையும் கழுகுப் பார்வையில் பார்ப்பது கண்கொள்ளாக் காட்சி. சிலையை விட்டு இறங்கி போ லின் மடம் சென்று பார்த்தோம். சிவப்பு நிற பின்னணியில் தங்க நிற புத்தரின் சிலைகள், விளக்கொளியில் தகதகத்தன. தொந்தியும் தொப்பையுமாகக் கூட புத்தர் இருந்தார். பலர் வணங்கிக் கொண்டிருந்தனர். அனைவரும் பத்தி வாங்கி வந்து அதைக் கொளுத்தி கையில் வைத்துக் கொண்டு வேண்டுகின்றனர். சிலர் கை நிறையப் பத்திகளைக் கொளுத்துகின்றனர். சிலர் மிகப் பெரிய பத்தி வாங்கி கொளுத்துகின்றனர்.

Photo by Michael DeMarco on Unsplash

புத்தர் சிலை இருக்கும் பகுதியின் வெளியே வந்தால் விதவிதமான நடைபாதை உணவுக்கடைகள் உள்ளன. நீந்துவன, ஊர்வன, பறப்பன என அனைத்தும் வறுத்துப் பொரித்து விற்கிறார்கள். மிகவும் சுவையாக இருந்ததாக குடும்பமே ரசித்துச் சுவைத்துச் சாப்பிட்டது. எனக்கு பொதுவாகவே உணவு குறித்த ரசனை கிடையாது. பிறநாட்டு உணவை அவ்வளவு எளிதில் வாயில் வைக்க மாட்டேன். அது பெருங்குறைதான். இதனால், அவர்கள் சாப்பிடச் சாப்பிட நான் பரிதாபமாய் வேடிக்கை பார்த்தேன். சாப்பிட்டு முடித்து, நொங்கோங் பிங் கிராமம் முழுவதும் சுற்றிப் பார்த்தோம். அது குடியிருப்பு பகுதி போல இல்லாமல், கடைவீதி போன்றே இருந்தது.

அங்கிருந்து கேபிள் கார் பிடித்து ஹாங்காங் விமான நிலையம் செல்ல தீர்மானித்தோம். அங்கு சென்றால், மிகப் பெரிய வரிசை. ஆனாலும் தொடர்ச்சியாக கேபிள் கார் வந்துகொண்டே இருப்பதால், பத்து நிமிடத்திற்குள் இடம் கிடைத்து விடுகிறது. கேபிள் கார் ஏறக்குறைய முழுவதுமே கண்ணாடியால் ஆனது. அதனால் மேலே, கீழே வலப்பக்கம், இடப்பக்கம் என 360 டிகிரியில் பார்க்கலாம்.

ஒரு பக்கம் கடல், மறுபக்கம் அருவி இன்னொரு பக்கம், மலை, வலது பக்கம் புத்தர் சிலை, இடது பக்கம் நெடிதுயர்ந்த கட்டடங்கள், என பயணம் நம்மை இன்னொரு உலகிற்கு இட்டுச் செல்கிறது. அதுவும் புத்தர் சிலையை உயரத்திலிருந்து பார்க்கும் போது அந்த சிலை, ஒரு பெரிய பச்சை தட்டில் இருப்பது போல இருந்தது.

Photo by Jeanne Rose Gomez on Unsplash

காலுக்கடியில் கடலை, மலையைப் பார்க்கும் போது பயமாகவும் இருந்தது. கேபிள் கார் கொண்டு விட்ட இடத்திலிருந்து பேருந்து பிடித்து ஹாங்காங் விமான நிலையம் வந்து சேர்ந்தோம். நமக்கு ஒரு ஆறு மணி நேரம் கிடைத்தால்கூட போதும். தாராளமாகச் சென்று வரலாம். பயணம் முழுவதும் மலை ஏறுவது, இறங்குவது, நடப்பது என இருப்பதால், அதற்கும் அதிகமாகச் சுற்றினால் களைப்படைய வாய்ப்பு உண்டு.

கட்டுரையாளரின் மற்ற படைப்பு:

பாரதி திலகர்

தீவிர வாசிப்பாளர், பயணக் காதலர்; தொன்மை மேல் பெரும் ஆர்வம் கொண்டவர். அயல்நாட்டில் வசித்து வந்தாலும் மண்ணின் வாசம் மறவாமல் கட்டுரைகள் எழுதிவருகிறார்.

Exit mobile version