Site icon Her Stories

பஹூ… ஒரு மசாலா சாய் போடு…

தலைமாட்டில் இருந்த அலாரம் கிணுகிணுத்ததில் தூக்கம் கலைந்து புரண்டாள் நீலம். கை அனிச்சையாய் கடிகாரத்தின் தலையில் தட்டியதில் சத்தம் அடங்கியது. கண்களை மூடிக்கொண்டு மெல்ல எழுந்து அமர்ந்த நீலம் இரண்டு கைகளையும் தேய்த்து உள்ளங்கையில் கண்களை விழித்தாள்.

மாமியார் படித்துக் கொடுத்த பாடம். “ஏ பெண்ணே! தூங்கி எழுந்ததும் உள்ளங்கையில் விழி. அங்கேதான் மகாலக்ஷ்மி வாசம் செய்கிறாள்” திருமணமான முதல்நாளே போதித்திருந்தார். நீலம் விடிவிளக்கைப் போட்டாள். மங்கலான வெளிச்சம் பரவியது.

பக்கத்தில் படுத்திருந்த அமித் “ப்ச்” என்ற முனகலுடன் புரண்டு, போர்வையை இழுத்துப் போர்த்திக்கொண்டு மீண்டும் உறக்கத்தில் ஆழ்ந்தான். விடிகாலை நான்கு மணிக்கு அந்தப் பெரிய வீட்டில் நீலம்தான் முதலில் எழுவாள். “எழுந்ததும் குளிச்சிட்டு வேலையைத் தொடங்கு. அதுதான் இந்த வீட்டுப் பெண்களோட வழக்கம்” மாமியாரின் இரண்டாவது பாடம். கல்யாணமாகி அடுத்த நாளில் இருந்து தினமும் உலகமே புரண்டாலும் நீலம் நான்கு மணிக்கு எழுவது புரளவில்லை.

குளியலறைக்குள் நுழைந்தாள். தலையில் குளிர்ந்த தண்ணீரை விட்டுக் கொள்ளும்போது பற்கள் கிடுகிடுத்தன. அவசர அவசரமாக குளியலை முடித்துக் கொண்டு, தலை துவட்டிக் கொண்டு, தளர்வாக முடியில் ஒரு கிளிப்பை மாட்டிக் கொண்டு, சிவப்பு நிற பனாரஸ் புடவையைச் சுற்றிக் கொண்டு மறக்காமல் முந்தானையைத் தலையில் முக்காடு போட்டுக் கொண்டாள். “இதோ பாரு பொண்ணே! தலையில் முக்காடு இல்லாமல் பெரியவர்கள் முன்னால் வலம் வராதே! மருமகள் முகம் காட்டுவது அசுபம்.” மாமியாரின் மூன்றாவது பாடம். கூங்கட் என்னும் இந்த முக்காடு நழுவிக் கொண்டே இருக்கும். ஒரு கையால் அதை எப்போதும் பற்றிக்கொண்டு, எந்நேரமும் அதன்மீது கவனம் இருக்கவேண்டும். 

வேகமாக வெளியே வந்த நீலம் பூஜையறைக்குள் புகுந்தாள். ஏகப்பட்ட சாமி படங்கள். சிறிய சிலைகள். அவற்றின் மீது கிடந்த காய்ந்த பூக்களை அகற்றி குப்பைக் கூடையில் போட்டாள். சிதறிக் கிடந்த குங்குமம், விபூதித் தீற்றல்களை ஈரத் துணியால் துடைத்தாள். விளக்கையும் துடைத்துவிட்டு விளக்கேற்றினாள். “தினமும் தூங்கி எழுந்து குளிச்சிட்டு அப்புறமா பூஜை ரூமை சுத்தம் பண்ணி விளக்கேத்திடு பொண்ணே! பெரியவங்க எழுறதுக்கு முன்னாடி இந்த வேலை முடியணும்.” மறுபேச்சின்றி கேட்டுக் கொண்டாள்.

தீபத்தில் ஒளிர்ந்த கிருஷ்ண விக்ரகத்தைத் தொட்டு கண்ணில் ஒற்றிக்கொண்டு நழுவிய முக்காட்டை சரிசெய்துகொண்டே வெளியில் வந்தாள்.

“பஹூ… ஒரு மசாலா சாய் போடு” மாமியாரின் முதல் கட்டளை வந்து விழுந்தது. இனி இந்த வாக்கியத்தை நாள் முழுவதும் கிட்டத்தட்ட இருபது முறை கேட்கவேண்டும்.

அவளது மாமியார் தன் மருமகளைப் பெயர் சொல்லி அழைக்காமல் உறவுமுறையைக் குறிக்கும் ‘பஹூ’ என்ற வார்த்தையால்தான் கூப்பிடுவார். மாமனார், மாமியார், கணவன் அமித், மாமனாரின் தம்பி, அவரது மனைவி, அவர்களைப் பார்க்க வரும் நண்பர்கள், பக்கத்தில் இருந்துகொண்டு அடிக்கடி வரும் உறவுகள், வீட்டில் வேலை செய்யும் உதவியாளர் என்று யார் வந்தாலும் மசாலா சாய் போடவேண்டும். அதற்காகவே காலையிலும், மாலையிலும் சேர்த்து ஐந்து லிட்டர் பால் வாங்குவார்கள்.

நீலம் வேகமாக அடுக்களைக்குள் நுழைந்தாள். முதல்நாள் இரவே கழுவி வைத்த பாத்திரங்களும், துடைத்து சுத்தமாக இருந்த அடுப்பும் அவளைப் பார்த்துப் புன்னகைத்தன. “எத்தனை நேரமானாலும் ராத்திரி அடுப்படியை சுத்தம் பண்ணிட்டுத் தூங்கப் போ” மாமியாரின் அடுத்த பாடம். ஒருநாளும் சுத்தம் செய்யாமல் தூங்கப் போனதில்லை. சிலசமயங்களில் அமித் காத்திருந்து எரிச்சலாய்க் கத்துவான். “என்னடி இவ்வளவு நேரம்? நல்ல மூட்ல வந்திருக்கேன். வா…” வந்தாலும், மனது அன்றைய வேலைகளைச் சரியாக முடித்தோமா என்றும், மறுநாளைய வேலைகளை வரிசைப்படுத்திக் கொண்டுமே இருக்கும்.

ஒருமுறை கலவியின்போது,”லவ் யூ டியர்…” என்று அமித் முனகியபோது அவள் சுவரின் மூலையில் இருந்த ஒட்டடையை மாமியார் பார்த்தால் கிடைக்கும் வசவுகளைப் பற்றியும், மறுநாள் மறக்காமல் அதைச் சுத்தம் செய்யவேண்டும் என்பதையும் மனதில் நினைத்துக் கொண்டிருந்தாள்.

காஸ் அடுப்பை பற்ற வைத்து ஒரு கோப்பை தேநீருக்கு அளவாக தண்ணீரை ஊற்றி வைத்தாள். சிறுதுண்டு இஞ்சியைத் தட்டி உள்ளே போட்டாள். இரண்டு ஏலக்காய், இரண்டு கிராம்பு, சிறு துண்டு பட்டை, நான்கைந்து மிளகு, இரண்டு ஸ்பூன் தேயிலைத் தூள் சேர்த்து மூன்று நிமிடங்கள் கொதிக்க விட்டாள். அதில் ஒரு கோப்பை பால், அளவான சர்க்கரை சேர்த்தாள். மணம் கமகமவென்று நாசியில் ஏறியது. மிதமான தீயில் நான்கைந்து நிமிடங்கள் கொதிக்க வைத்து வடிகட்டி ஒரு கோப்பையில் சூடாக எடுத்துப் போய் மாமியாரின் கையில் கொடுத்தாள்.

வாங்கிக் கொண்டவர் அவளை மேலும் கீழுமாக உற்றுப் பார்த்து கலாச்சாரம் தவறாமல் இருப்பதை உறுதி செய்துகொண்டு ஒரு திருப்தியான புன்னகையோடு தேநீரை அருந்தத் தொடங்கினார்.

“டீ நல்லா இருக்கு பஹூ… நாஷ்தாவுக்கு என்ன செய்யப் போற?”

“நீங்களே சொல்லுங்க மாஜி”

“தேப்லா பண்ணிரு… அப்புறம் தோக்ளாவும், காமனும் பண்ணிரு. மதியம் பார்த்துக்கலாம்.” காலியான தேநீர்க் கோப்பையை நீட்டினார்.

நீலம் மீண்டும் அடுக்களைக்குள் புகுந்தாள். 

ஒரு பெரிய பாத்திரத்தில் கோதுமை மாவு, கடலை மாவு, இஞ்சி பூண்டு பச்சைமிளகாய் சேர்த்து அரைத்த விழுது, மஞ்சள் தூள், மிளகாய் தூள், ஓமம் எல்லாவற்றையும் அளவாக சேர்த்து இரண்டு ஸ்பூன் எண்ணெயும் ஊற்றி பிசைந்தாள். 

அதில் பொடியாக நறுக்கிய வெந்தயக்கீரை, தயிர் சேர்த்து லேசாக தண்ணீர் தெளித்து மிதமாகப் பிசைந்தாள். எண்ணெய் தடவி ஊறவைத்து விட்டு அடுத்து தோக்ளாவைத் தயாரிக்கத் தொடங்கினாள். 

ஒரு பாத்திரத்தில் கடலை மாவு, ரவை, தயிர், இஞ்சி-மிளகாய் விழுது, மஞ்சள் தூள், உப்பு மற்றும் ஒரு ஸ்பூன் எண்ணெய் சேர்த்து நன்றாகக் கலக்கினாள். இதில் சிறிது சிறிதாகத் தண்ணீர் ஊற்றி, கட்டிகள் இல்லாமல் தோசை மாவுப் பதத்திற்கு கரைத்து பதினைந்து நிமிடங்கள் ஊறவைத்தாள்.

இட்லி பாத்திரத்தில் தண்ணீர் ஊற்றி சூடுபடுத்தினாள். தோக்ளா செய்யப்போகும் தட்டில் எண்ணெய் தடவித் தயாராக வைத்தாள். மாவில் சிறிது ஈஸ்ட் கலக்கினாள். மாவு நுரைத்துக் கொண்டது. தட்டில் ஊற்றி வேக வைத்தாள். அதற்கு தொட்டுக் கொள்ள தாளித்த தண்ணீரை தயாரிக்க வேண்டும். 

ஒரு சிறிய வாணலியில் எண்ணெய் ஊற்றி கடுகு, சீரகம், பச்சை மிளகாய், கறிவேப்பிலை சேர்த்து தாளித்தாள். பின்னர் அதில் சர்க்கரை மற்றும் கால் கப் தண்ணீர் சேர்த்து ஒரு கொதி வந்ததும் இறக்கினாள். வெந்த தோக்ளாவை சிறு துண்டுகளாக வெட்டி, அதன் மேல் இந்தத் தாளித்த தண்ணீரை ஊற்றினால் அது தோக்ளாவை இன்னும் மென்மையாக்கும். தோக்ளா வெந்து விட்டதா என்று ஒரு சிறிய குச்சியால் குத்திப் பார்த்து இறக்கிவைத்தாள்.

கசகசவென்று வியர்த்துக் கொட்டியது. சமையலறையில் ஒரு ஜன்னல் இருந்தது. ஆனால் அதைத் திறக்க மாமியார் அனுமதிக்கமாட்டார். “காத்து உள்ளே வந்தால் அடுப்பு எப்படி எரியும்? சாத்தியே வை” அந்த ஜன்னலைத் திறந்ததே இல்லை அவள். அதன் பின்னே என்ன இருக்கிறது என்று அறிந்து கொள்ள மனசு ஆவலாக இருந்தது. ஆனால் வீட்டுக்கு வெளியே போய்ப் பார்க்கக்கூட அனுமதியில்லை.

“குடும்பப் பொம்பளை வெளியே வாசல்லே நின்னுட்டிருந்தா நல்லாவா இருக்கு. இந்த பட்டேல் குடும்பத்துக்குன்னு ஒரு நல்ல பேரு இருக்கு” மாமனார் முதலிலேயே தடை போட்டிருந்தார். 

கைப்பிடித் துணியால் விசிறி விட்டுக்கொண்டாள். அதன் மக்கிய நாற்றம் அருவருப்பூட்டியது. தலை ஈரமாக இருந்ததால் வலிக்கத்தொடங்கியது. அதற்குள் நான்கு முறை மசாலா சாய் போட்டுக் கொடுத்திருந்தாள்.

தோக்ளாவோடு சேர்த்து சாப்பிட காமன் வேறு செய்யவேண்டும். இன்னும் சிறிது நேரத்தில் அங்கே சாப்பாட்டுக் டை ஆரம்பமாகிவிடும். ஒரு பாத்திரத்தில் கடலை மாவு, சர்க்கரை, எலுமிச்சை சாறு, இஞ்சி-மிளகாய் விழுது, மஞ்சள் தூள் மற்றும் உப்பு சேர்த்து பிசைந்தாள். சிறிது சிறிதாக தண்ணீர் சேர்த்து வழிந்தோடும் பதத்தில் கரைத்தாள். சில நிமிடங்கள் கழித்து ஈஸ்ட் சேர்த்து கலக்கி ஆவியில் வேகவைத்தாள். இதற்கும் தொட்டுக் கொள்ள தாளிப்பு தண்ணீர் வேண்டும். 

தேப்லா செய்யத் தொடங்கினாள். மாவை சிறு உருண்டைகளாக்கி சப்பாத்தியாகத் தேய்த்து கல்லில் போட்டு எடுத்து ஹாட் பாகில் மூடி வைத்தாள். தலைவலி மண்டையைப் பிளந்தது. ஒரு தேநீர்கூட குடிக்க நேரமில்லை. 

நீலம் அவள் வீட்டில் செல்லமாக வளர்ந்தவள். அவள் தந்தை ‘சௌத்ரி’ குடும்பத்தில் பிறந்தவராக இருந்தாலும் அவளை நன்கு படிக்கவைத்தார். ஆடை வடிவமைப்பு படிப்பை நன்றாகக் கற்றுத் தேர்ந்தாள். ஒரு சிறிய ஆடை வடிவமைப்பு கடையை நிர்வகிக்கவேண்டும் என்பது அவளது கனவு. அதற்குள் பட்டேல் குடும்ப சம்பந்தம் வந்தது. ஆட்டா- சாட்டா முறையில் அதாவது பெண் கொடுத்து பெண் எடுக்கும் வழக்கத்தின்படி நீலத்தின் அண்ணன் விக்ரமுக்கு அமித்தின் தங்கை பூஜாவை திருமணம் செய்ய நிச்சயிக்கப்பட்டது. இரு குடும்பங்களும் பரஸ்பரம் பெண்களைப் பரிமாறிக் கொள்வதால், வரதட்சணை கொடுப்பதையோ வாங்குவதையோ தவிர்க்க இது ஒரு வழியாகக் கருதப்பட்டது. அதேசமயம் ஒரு குடும்பத்தில் பெண்ணுக்கு பிரச்சனை இருந்து அவளைப் பிறந்த வீட்டுக்கு அனுப்பினால், பதிலுக்கு பழிவாங்கும் நடவடிக்கையாக இன்னொரு பெண்ணும் அவளது வீட்டுக்கு அனுப்பி வைக்கப்படும் அபாயமும் உண்டு. அவர்களது கணவர்கள் இதே முறையில் இன்னொரு திருமணம் செய்துகொண்டு வாழ்க்கையைத் தொடர்வார்கள். ஆனால் அந்தப் பெண்களின் வாழ்வு அதோகதிதான்.

மணப்பெண்ணின் ஆடையை நாத்தனார்தான் தயாரிக்க வேண்டும் என்ற முறையின்படி நீலம் அழகான சிவப்பு நிறப் பாவாடையில் வெண்ணிற சம்க்கிகளை வைத்து பூஜாவுக்கென்று பிரத்தியேகமாக லெஹங்கா வடிவமைத்தாள். அதில் பூஜாவுக்கு மிகுந்த மகிழ்ச்சி. பூஜா தனக்கு தயாரிக்க வேண்டிய பாவாடையை அழகாக டிசைன் செய்யக் கற்றுக் கொடுத்தாள். இருவருக்குமிடையில் நல்ல நட்பு உருவானது. திருமணம் முடிந்து ஆறு மாதங்கள் கழிந்தன. பூஜா இன்னும் இங்கு வரவில்லை. இவளும் அங்கு போகவில்லை. பேசுவதற்கு நீலத்திற்கு நேரமும் இல்லை.

பசி வயிற்றைக் கிள்ளியது. எல்லோரும் சாப்பிட்டு முடித்தபின் உதவிக்கு வரும் பெண் வந்ததும் அவளோடு சேர்ந்து சாப்பிட அமர்ந்தாள். தேப்லா ஒரு விள்ளல்கூட வாயில் போடவில்லை. 

“பஹூ… ஒரு மசாலா சாய் போடு” மாமியாரின் குரல் காதில் விழுந்ததும் அவசரமாக எழுந்தது தேநீர் தயாரித்து எடுத்துப்போனாள். புதிதாக யாரோ வந்திருந்தார். முக்காட்டை நன்கு இழுத்து முகத்தை மூடிக்கொண்டாள். தேநீரை நீட்டும்போது மாமியார், “பஹூ… இவர் அமித்துக்கு மாமா உறவு. சின்ன வயசுல இவர் வீட்டில் தான் அவன் கொஞ்ச காலம் வளர்ந்தான். ஆசீர்வாதம் வாங்கிக் கொள்” என்றாள்.

நீலத்தின் முக்காடு முகத்தை மூடித் தொங்கிக்கொண்டிருந்தது. அமர்ந்திருப்பவரின் கால்கள் தெரியவில்லை. தட்டுத் தடுமாறி பாதங்களைத் தொட்டு நமஸ்கரித்துவிட்டு உள்ளே வந்து விட்டாள். “மதியம் சிறப்பான விருந்தை தயார் செய்” மாமியாரின் கட்டளை காதில் வந்து விழுந்தது.

மதிய விருந்து செய்யும் வேலை கண்முன் ஆட, பசி மரத்துப்போனது. தட்டிலிருந்தவைகளை குப்பைக்கூடையில் கவிழ்த்துவிட்டு தண்ணீரைக் குடித்தாள். வெளியே வெயில் நாற்பது டிகிரி கொளுத்திக்கொண்டிருந்தது. வியர்த்து முதுகெல்லாம் வழிந்தது. தலைக்கு மேல் முக்காடு இருந்ததால் வியர்த்த முகத்தைத் துடைக்கக்கூட அவளுக்குச் சுதந்திரம் இல்லை. காலில் கிடந்த கனமான வெள்ளிக் கொலுசுகள் உறுத்தியதோடு அவள் ஒவ்வொரு அடி எடுத்து வைக்கும்போதும் அவள் இந்த வீட்டின் மருமகள் என்று அவளுக்கே உரக்கச் சொல்வதாகத் தோன்றியது. 

மாமியார் உள்ளே நுழைந்தவர், அவள் நின்று கொண்டிருப்பதைக் கண்டு முகத்தைச் சுளித்தார்.

“ஏ பஹூ… எவ்வளவு வேலை கிடக்கு. நீ பராக்கு பாத்துட்டு நிக்குற? மதியம் என்ன சமைக்கிறே?” என்றார்.

“நீங்களே சொல்லுங்க மாஜி”

மாமியார் ஒரு திருப்தியான புன்னகையோடு, “பாக்ரி, உருளைக்கிழங்கு மசாலா, வெண்டைக்காய் வறுவல், சாதம், தால், கடி, பத்ரா அப்புறம்… இனிப்பு தயிர், மாம்பழக் கூழ், மோர்… சீக்கிரம் செஞ்சிடு. ஒரு மணிக்கெல்லாம் அவர் சாப்பிட்டாகணும். உன் புருஷனும் மதியம் சாப்பிட வரான்.” நீலம் நிமிர்ந்து பார்த்தாள். அமித் அவளிடம் சொல்லாமலே வேலைக்குச் சென்றுவிட்டான். எப்போதும் அப்படித்தான். ஆனாலும் மனதுக்குள் வலித்தது.

மணி பதினொன்றை நெருங்கிக் கொண்டிருந்தது. ஒரு மணிக்குள் அத்தனையையும் செய்து அடுக்கவேண்டும். உதவியாளரை வைத்துக்கொண்டு பம்பரமாகச் சுழல ஆரம்பித்தாள். 

மதிய உணவு முடித்து விருந்தாளியோடு மற்றவர்களும் தூங்கச் சென்றனர். அமித் அம்மா வருகிறாரா என்று பார்த்துக் கொண்டு அடுக்களைக்குள் வந்து, “விருந்து சூப்பர் டியர்… ராத்திரி சீக்கிரம் ரூமுக்கு வந்துரு” என்று கிசுகிசுத்துவிட்டு வெளியேறினான். அவளுக்குள் ஏனோ எரிச்சல் மண்டியது.

காலையில் இருந்து சாப்பிடாததால் தலை கிறுகிறுத்தது. தலைவலியைக் கவனிக்க நேரமில்லாமல் அதுவே விடைபெற்றுப் போயிருந்தது. அவசரமாக எதையோ தட்டில் கொட்டிக்கொண்டு தின்றாள். சுவைத்துச் சாப்பிட நேரம் இல்லை. குவிந்து கிடந்த அழுக்குத் துணிகள் வேறு பயமுறுத்தின.

உதவியாளரின் துணையோடு துணிகளைத் துவைத்து உலர்த்திவிட்டு உள்ளே வந்து வீட்டைப் பெருக்கித் துடைக்கச் சொல்லி விட்டு மாலைச் சிற்றுண்டி செய்ய ஆரம்பித்தாள். 

மாமியார் உறக்கம் கலைந்து எழுந்து வந்து, “பஹூ.. ஒரு மசாலா சாய் போடு” சொல்லி முடிப்பதற்குள் தேநீரை நீட்டினாள். வாங்கிக் கொண்டார். 

மெல்லிய அடுக்குகளாகச் சுருட்டப்பட்ட, தயிர் மற்றும் கடலை மாவு கலந்த கந்துவியை ஒரு தட்டில் வைத்துக் கொடுத்தாள். கூடவே கடலை மாவில் செய்யப்பட்ட மொறுமொறுப்பான நீளவடிவ காட்டியாவும் இருந்தது. 

“பரவாயில்லையே பஹூ. நான் சொல்லாமலே டிஃபன் பண்ணியிருக்கே” பாராட்டினார். முக்காட்டிற்குள் அவள் புன்னகைத்தாளா என்று அவருக்குத் தெரியவில்லை. பண்பாடு தவறாத மருமகள் என்று நினைத்துக் கொண்டார்.

மாலை நேர பூஜைக்காக வீட்டு உறுப்பினர்கள் ஒன்றாகக் கூடினார்கள். சாம்பிராணி, ஊதுபத்தி ஏற்றி மாமனார் பூஜை செய்யத் தொடங்கினார். தீபம் ஏற்றப்பட்டு துளசி மாடத்துக்கு ஆரத்தி எடுக்கப்பட்டது. வீட்டுப் பெரியவர்கள் கால்களில் நீலம் விழுந்து வணங்கினாள். அப்போது அவளது முக்காடு நழுவி விழுந்தது. மாமியாரின் முகம் கோபத்தில் சிவந்தது.

“ஒழுங்கா கூங்கட் போடு. மாமனார் முன்னாடி இதென்ன மரியாதை இல்லாத பழக்கம். சீச்சீ… இதுதான் உங்க வீட்ல சொல்லிக் குடுத்தாங்களா?” மாமியார் வெறுப்பை உமிழ்ந்தார். நீலம் பெரிய தவறு செய்தவளைப்போல வெலவெலத்துப் போயிருந்தாள்.

“போ… போயி ராத்திரி சமையலை தயார் பண்ணு” மாமியார் உத்தரவு போட்டுவிட்டு தொலைக்காட்சியின் முன்பு அமர்ந்துவிட்டாள். 

நீலம் கண்ணில் ஊறத் தொடங்கிய நீரை வழிந்து விடாமல் அடக்கிக்கொண்டு நகர்ந்தாள்.

அரிசியும் பாசிப்பருப்பும் சேர்த்து குழைய வேகவைக்கப்பட்ட கிச்சடி செய்து அதற்கு ஊற்றிக் கொள்ள தயிர் மற்றும் கடலை மாவு கொண்டு செய்யப்படும் புளிப்பும் இனிப்பும் கலந்த கதி என்ற குழம்பையும் கைகள் இயந்திரகதியில் தயார் செய்தன. கூடவே அப்பளங்களைப் பொரித்து வைத்தாள். ஊறுகாய்களையும் எடுத்து வைத்தாள்.

இரவு எல்லோரும் சாப்பிட்டு முடித்த பின்னரே மருமகள் சாப்பிட வேண்டும் என்பது அந்த வீட்டின் எழுதப்படாத விதி. எல்லோரும் சாப்பிட்டு முடிக்கும்வரை அவள் சமையலறையில் மறுநாள் சமையலுக்கு வேண்டிய காய்கறிகளை நறுக்கிக் கொண்டிருப்பாள்.

சாப்பிட்டுவிட்டு எல்லோரும் நகர, மாமியார் உள்ளே வந்தார்.

“பஹூ… நாளைக்கு பூஜா வர்றா. வழக்கமான சமையலோட ஜலேபியும் சேர்த்து செஞ்சிடு,” உத்தரவிட்டு விட்டு நகர்ந்தார்.

மறுநாள் வேலைப்பளுவை விட பூஜா வருவது உள்ளபடியே அவளுக்கு மகிழ்ச்சியைத் தந்தது.

மடமடவென பாத்திரங்களைத் துலக்கி, அடுப்படியைத் துடைத்துவிட்டு படுக்கையறைக்குள் நுழைந்தாள். அமித் தூங்கிப் போயிருந்தான். லேசான நிம்மதியுடன் படுத்து உறங்கப் போனவள் மீது அவன் கை வந்து விழுந்தது.

காலையில் இருந்து சரியான உணவு இல்லாமல் வேலை செய்த களைப்பில் அவளது கண்கள் இரண்டும் ‘தூங்கேன்’ என்று கெஞ்சின. அடித்துப் போட்டாற்போல உடம்பு வலித்தது. முடியாது என்று சொன்னால் அப்புறம் இரண்டு மூன்று நாளைக்கு குத்தலாகப் பேசுவான். அல்லது எது கேட்டாலும் பேசாமலே வதைப்பான். பேசாமல் மரக்கட்டை மாதிரி கிடந்தாள். அவன் வெறுமனே சாப்பிட்டுவிட்டு தள்ளிப் படுத்தான். அவள் தூங்காமல் நெடுநேரம் விழித்திருந்தாள்.

மறுநாள். பூஜா காலை உணவு நேரத்தில் வந்து சேர்ந்தாள். வந்ததும் ஓடிவந்து நீலத்தின் கைகளைப் பற்றிக்கொண்டாள்.

“எனக்கு என்ன டிரஸ் டிசைன் பண்ணி வெச்சிருக்கே?” உற்சாகமாகக் கேட்டாள்.

“அதுக்கெல்லாம் அவளுக்கு எங்கே நேரம் இருக்கு பூஜா? அப்புறம் இந்த வீட்டு வேலையெல்லாம் யாரு பாக்குறது?” மாமியார் இடைமறித்தார்.

பூஜா அவளது வறண்டிருந்த கைகளைத் தடவினாள்.

மாலை நேரம் பூஜை முடிந்து இருவரும் மாடிக்குப் போனார்கள்.

“நீலம்… நான் உன்னைப் பத்தி என்னென்னமோ நினைச்சிட்டிருந்தேன். நீ என்ன இப்படி வீட்டு வேலை மட்டும் செஞ்சிட்டிருக்கே?” உண்மையான அக்கறையுடன் கேட்டாள் பூஜா.

நீலம் வறட்சியான புன்னகை ஒன்றை மட்டுமே உதிர்த்தாள்.

“நம்ம வீட்டு வேலையை நாம் தானே செய்யணும் பூஜா” என்றவளை பூஜா இடைமறித்தாள்.

“அதுக்காக வீட்டுவேலை மாத்திரமே பார்த்துட்டிருக்கக்கூடாது நீலம். உனக்காக கொஞ்சம் நேரம் ஒதுக்கு”

“அதுக்கு நேரம் எங்க இருக்கு?” 

“சப்பைக்கட்டு கட்டாதே. நீதான் உனக்கான நேரத்தை ஒதுக்கணும்”

நீலம் மௌனமாக இருந்தாள்.

“நான் என்ன பண்றேன்னு கேட்க மாட்டியா?” பூஜாவை நிமிர்ந்து பார்த்தாள் நீலம்.

“நானும் விக்ரமோட ஆபீசுக்கு போறேன். அவர் ஆபீஸ் அட்மினிஸ்ட்ரேஷனை நான்தான் பார்த்துக்கறேன்.” நீலத்தின் முகத்தில் நிஜமான புன்னகை தெரிந்தது.

“வாவ்… சூப்பர் பூஜா… ஆமா வீட்டு வேலையெல்லாம்..?” புருவத்தைச் சுருக்கினாள்.

“எல்லாரும் சேர்ந்து ஆளுக்கொரு வேலையை பகிர்ந்துக்கிறோம். நாங்க கிளம்பியதும் மீதி வேலைக்கு உதவிக்கு ஆள் போட்டிருக்கேன். இரவும் நாங்களே வேலையை ஷேர் பண்ணிக்கிறதால கஷ்டம் எதுவும் தெரியலை” நீலம் பெருமூச்சுவிட்டாள்.

“ஆனா இங்க நான்தான்… நான் மட்டும் தான் எல்லா வேலையும் பார்க்கணும். ம்ப்ச்…” சூள் கொட்டினாள்.

“ஹேய்… காலம் மாறிப் போச்சு நீலம். நீ படிச்சவளா இருந்தும் இதையெல்லாம் நான் உனக்கு சொல்ல வேண்டியிருக்கு” பூஜா அங்கலாய்த்தாள்.

“ஹே பகவான்… சொல்ல மறந்துட்டேன்… உனக்கு ஒரு சந்தோஷமான விஷயம் கொண்டு வந்திருக்கேன்.” நீலம் புரியாமல் பார்த்தாள்.

“என் கல்யாண லெஹங்காவைப் பார்த்த என் ப்ரெண்ட்ஸ்ங்க அசந்து போயிட்டாங்க. நாலஞ்சு பேர் அவங்க கல்யாணத்துக்கும் நீதான் டிசைன் பண்ணித் தரணும்னு சொல்றாங்க. பல்க் ஆர்டர் கொண்டு வந்திருக்கேன். சொல்லு…சொல்லு… எப்ப ஷாப் ஆரம்பிக்கப் போறே?” பூஜா ஆர்வமாகக் கேட்டாள்.

“ஹேய்… விளையாடறியா பூஜா? இங்க வீட்டுல சமையல் எல்லாம் யார் பண்றது?” நீலத்தின் வாய் சொன்னாலும் மனது அடித்துக்கொண்டது.

“அதெல்லாம் எனக்குத் தெரியாது. நீ ஷாப் ஆரம்பிக்கணும். உன்னோட திறமையை அடுப்புக்குள்ள போட்டு வேக வைக்காத. சீக்கிரம் முடிவெடு. அண்ணா கிட்ட நான் பேசவா?” 

“ம்ம்… பேசு… பேசு…” நீலம் சிரித்தாள். வரப்போகும் பதில்கள்தான் அவளுக்கே தெரியுமே.

“நீ என்ன முட்டாளா பூஜா? வீட்ல இவ்வளவு வேலை இருக்கு. யார் செய்வா? பெரியவங்களை யார் பார்த்துக்குவா?” அமித் இரைந்தான்.

“பெண்கள் வெளில போய் கடை வைக்கிறதாவது? நம்ம பட்டேல் குடும்ப கௌரவம், கலாச்சாரம், பண்பாடு இதெல்லாம் என்னாகிறது?” மாமியார் கூப்பாடு போட்டார்.

“இந்தக் காலத்துக்கு வாங்க. இன்னும் ஒரு நூற்றாண்டுக்கு முன்னாடியே இருக்கீங்க. அவ எவ்வளவு அழகா டிரஸ் டிசைன் பண்ணுவா தெரியுமா?” பூஜாவின் குரல் எடுபடவில்லை.

“நீ முதல்ல ஆஃபீஸ் போறதே தப்பு. அதென்ன வழக்கம்? அடுத்த ஆம்பிளைங்க முன்னாடி ஆபீஸ்ல போய் உக்கார்றது? பொம்பளை சம்பாதிச்சு திங்குதா சௌத்ரி குடும்பம்? அசிங்கம். நீ ஒழுங்கா வீட்ல இரு. விக்ரம்கிட்ட நான் பேசறேன்” அமித் கோபமாகச் சொன்னான். 

“உங்களை மாதிரி இல்லை அவங்க குடும்பம். முற்போக்கான ஆளுங்க. அந்த வீட்டுலேர்ந்து வந்த பொண்ணை இப்படி அடுக்களையில் பூட்டி வெச்சிருக்கீங்க. எனக்கு அவமானமாக இருக்கு. வயசானவங்களை நீங்க பார்த்துக்குங்க. அப்படி ஒண்ணும் யாரும் இங்க முடியாம இல்லை” பூஜா கத்தினாள்.

“இதோ பார். நாங்க அப்படித் தான் இருப்போம். அவளே பேசாம இருக்கா. நீதான் அவளைத் தூண்டி விடுற. நீ முதல்ல உங்க வீட்டுக்கு கிளம்பு. உன் புருஷன் இல்லாம தனியா வந்திருக்கறதே தப்பு” அம்மா சொன்னார்.

பூஜா பெட்டியை எடுத்துக் கொண்டு புறப்படுவதற்கு முன்னர் நீலத்திடம் வந்தாள்.

“இதோ பாரு நீலம். வாழ்க்கை ஒருமுறை தான். அதையும் அடுப்பிலேயே வெந்து கழிச்சிடாதே. உன்னோட திறமை இவங்களுக்கு புரியலை. வெறும் சமையல்காரியா மட்டும் நின்னுடாதே” தழுதழுத்தாள்.

“ஆனா நான் எதாவது பண்ணி அது உனக்கும் எதிரா திரும்பிடுச்சுன்னா என்ன பண்றது பூஜா?” என்றாள் நீலம்.

“இதோ பார். எங்க வீடு மாதிரி இல்லை உங்க வீடு. விக்ரம் என்னைத் தனியாத்தானே அனுப்பியிருக்காரு. என்னை ஒருநாளும் அம்மா வீட்டுக்கு அனுப்பிட மாட்டாரு. யாருமே சுயமா நிற்கணும்ங்குறதுதான் அவரோட எண்ணம். அதுதான் நிலைக்கும். நீ படிச்சவளா இருக்கலாம். ஆனா இந்த வீட்ல நீ சுடுற ரொட்டி வட்டமா இருக்குதான்னுதான் பாக்குறாங்க.”

“நாம் வாழும் காலம் முழுக்கப் பசிக்கத்தான் செய்யும். அதுக்காக எந்நேரமும் அடுப்புல வெந்துட்டே இருக்கமுடியுமா?” நீலத்தின் கைகளைப் பற்றிக் கொண்டாள். “தேவை ஏற்பட்டா இருக்கிற இடத்தைவிட்டு வெளில வந்துதான் ஆகணும். ஆனா நீ முதல்ல இந்த வீட்டுக்கு உன்னைப் புரிய வை. நாம் வசிக்கிற இடத்தை நமக்கானதா மாத்த முயற்சி செய்யணும். உனக்கான நேரத்தை எப்படிக் கழிக்கணும்னு நீதான் முடிவு பண்ணனும். உனக்குத் தோள் கொடுக்க, துணை நிற்க நாங்க இருக்கோம்” வாடகைக் காரில் ஏறிப் போய்விட்டாள்.

நீலம் அப்படியே நின்றிருந்தாள்.

“பஹூ… ஒரு மசாலா சாய் போடு. அவ பேச்செல்லாம் கேட்காதே” மாமியார் சோஃபாவில் அமர்ந்து கொண்டார். 

நீலம் அடுக்களைக்குள் வந்தாள். புழுங்கியது. ஜன்னலைத் திறந்துவிட்டாள். பச்சைப் பசேலென்ற புல்வெளி கண்ணில் விரிந்தது. காற்று இதமாக உடலை வருடியது. முக்காட்டை எடுத்துவிட்டாள். கழுத்தெல்லாம் குளிர்ந்தது. இத்தனை நாள் இதைப் பார்க்காமல் விட்டு விட்டோமே என்று மனதுக்குள் குமைந்தாள்.

“எதுக்கு ஜன்னலைத் திறந்தே? மூடு உடனே” மாமியார் பாய்ந்து வந்தார். “கூங்கட் போடுடி பொண்ணே… மாமனார் வருகிறார்” தவித்தார்.

“காற்று வரட்டும் மாஜி. புழுக்கம் குறையும்” முதன்முதலாக மாமியாருக்கு எதிராகப் பேசினாள். “இத்தனை புழுக்கத்தில் முக்காடு போடமுடியாது மாஜி” மாமனார் நின்று கவனித்தபோதும், அவள் முக்காட்டை அணியவில்லை.

அவர்கள் ஒருவரையொருவர் பார்த்துக்கொண்டனர்.

மாமனார் தொண்டையைச் செருமிக் கொண்டே நகர்ந்தார்.

“பஹூ… ஒரு மசாலா சாய் போடு” 

போட்டுக் கொண்டு போய்‌ மாமியாரின் கையில் கோப்பையைக் கொடுத்தவாறே சொன்னாள்.

“மாஜி…என் பேரு நீலம்” மாமியார் அவள் முகத்தையே உற்றுப் பார்த்தவாறு அமர்ந்திருந்தார்.

***

படைப்பாளர்

கனலி என்கிற சுப்பு

‘தேஜஸ்’ என்ற பெயரில் பிரதிலிபி தளத்தில் கதைகள் எழுதி வருகிறார். சர்ச்சைக்குரிய கருத்துகளை எழுதவே கனலி என்ற புனைபெயரைப் பயன்படுத்துகிறார். ஹெர் ஸ்டோரிஸில் இவர் எழுதிய கட்டுரைகள், ‘பெருங்காமப் பெண்களுக்கு இங்கே இடமிருக்கிறதா?’ , ‘அவள் அவன் மேக்கப்’ , ’இளமை திரும்புதே’ ஆகிய நூல்களாக வெளிவந்திருக்கின்றன.

Exit mobile version