இதுவரை:
மதி தன் பணிக்காகச் சென்னை வந்திருந்தாள். தன் உயரதிகாரி கொடுத்த குறிப்பில் உள்ள சந்தேகத்தை அஃதரிடம் கேட்க, அவனோ எதையோ எழுதி ஒன்றும் சொல்லாது மதியை செல் என்று ஒற்றை வார்த்தையில் அனுப்பிவிட்டான். இதனால் கோபமுற்ற மதி அவமானப்படுத்தப்பட்டது போல் உணர்ந்தாள். அஃதர் ஏன் அப்படி செய்தான்? அஃதரிடமே கேட்போம்!
பிழை செய்த பிழை
அஃதராகிய என் வாழ்வில் இன்றும் அந்தநாள் பசுமை படிந்திருக்கிறது. காரணம் கண்டதும் காதலல்ல. இது ஒருவித ஒத்திசைவு.
இவள் பைத்தியம்தான் போலும். எத்தனை அறிவாளியாக இருக்கிறாள் என்று நினைத்தேன்! இரு வாரங்களில் ஒருவர்கூட இவ்வாறு வந்து சந்தேகம் கேட்டதில்லை. தினசரி கூட்டத்தின் போதும் ஓரிருவர் தவிர வாய் திறந்ததில்லை. ஆனால், இவள் இயல்பாக பயமின்றி எனைக் காண வந்தாள். ஆனால், இப்போது இப்படி பயந்துகொண்டிருக்கிறாள். அன்று அவள் அறையை விட்டுச் சென்றதும் இதுதான் என் மனதில் ஓடியது.
உண்மையில் பலரை நான் கவனித்திருக்கிறேன், பணிக்காக. அவர்களது திறமையை, மனவலிமையை, பணிச்சுமையைத் தாங்கும் வல்லமையை, இன்ன பிற விஷயங்களுக்காக. பல திறமை மிக்க பெண்களை, வசீகரமான பெண்களை, குழந்தைத்தனமான ஆனால் வேலையில் கறாராக இருக்கும் பெண்களை, அளந்து பேசும் பெண்களை, அறைந்து பேசும் பெண்களை, சில அசட்டுத்தனமான பெண்களையும்கூட. ஆனால், இன்று ஏன் இவளால் இதைப்பற்றி எல்லாம் யோசிக்கிறேன் என்னை நானே கேட்டுக்கொண்டேன்.
அவள் அறைக்குள் நுழைந்தபோதுகூட எனக்கு ஒன்றும் தோன்றவில்லை. அவள் சுட்டிக்காட்டிய வரி எனக்கு என்னையே கண்முன் கொண்டுவந்து நிறுத்திய கணத்தினில் ஏதோ பிழை. அதுமுதல் இப்போது வரை கண்கள் அவளைச் சுற்றியே வட்டமிடுகின்றன.
இப்படித்தான் நானும் திவ்யாவிடம் கூறினேன், இதில் ஏதோ தவறு உள்ளதென்று. நான் வேலைக்குச் சேர்ந்த புதிதில் என் மேலாளர் திவ்யாவும் என் குழுவும் நானும் முடித்த பணி இது. இந்தப் பகுதியைச் செய்தது வேறொரு குழு உறுப்பினர். அப்பகுதியில் பிழை இருக்கவே அதை நான் சுட்டிக்காட்ட, பெரிய வாக்குவாதத்திற்குப் பிறகு அதைச் சரிசெய்து இரண்டாம் வரைவு வெளியிட்டோம். இன்று இவள் அதையே அச்சுப் பிறழாமல் என்னிடம் சொல்கிறாள்.
அட, இந்த அழுமூஞ்சி இன்னுமா கோப்பைத் திறக்கவில்லை? திலீபன் வேறு எதையோ சொல்லி இருக்கிறார். அவளின் அழுது தோய்ந்த முகம் எனை ஏன் தொந்தரவு செய்கிறது? இவ்வாறு பலவாறாக எண்ணி, பின் பேசியே விடுவோம் என வெங்கட்டின் எண்களைத் தேடி அழுத்தினேன்.
மதி எடுத்தாள். அஃதர் பேசுகிறேன். என் அறைக்கு அந்த கோப்புடன் உடனே வா என்றேன். திலீபனிடம் அனுமதி பெற்று வருவதாகக் கூறினாள். வேண்டாம் நானே பேசுகிறேன் என்றேன். அடுத்த ஐம்பதாவது நொடி அவள் என் கதவைத் தட்டினாள்.
“உள்ளே வாங்க மதி” என் என்ற குரலுக்கு கண்கள் தாழ்த்தியபடி வந்தவளைக் கண்டதும் இவள் மனதுக்குள் திட்டுகிறாளா இல்லை அழுகிறாளா என்ற கேள்விக்கு என்னுள் பதிலில்லை. மதி எதற்காக அழுதாய் என்றேன். சட்டென்று என்னை நோக்கியவள் ஒன்றுமில்லை என்றாள். மேலும் கிளறாமல் நான் கோப்பில் எழுதியதைக் கண்டாயா என்றேன். அவள் விழித்தாள். நான்தான் அறிவேனே அவள் படிக்கவில்லையென. இப்பொழுது எடுத்து வாசி என்றேன். கைகள் நடுங்க விரித்தாள். முதல் பக்கத்தையும் 167வது பக்கத்தையும் பார்க்கவும் என்று நான் எழுதி இருந்ததைப் படித்தாள். பின் பக்கங்களைத் திருப்பினாள். படித்தாள். அதுதான் 167வது பக்கத்தில் இப்பிழை சரிசெய்யப்பட்டு விட்டதே. ஐயோ எனத் தலையில் கை வைத்து என்னைப் பார்த்து அசட்டுச் சிரிப்பு சிரித்தாள். நிதானமாக அவள் கண்களை நோக்கினேன். என் கண்களை நோக்கிய அவள், சாரி அஃதர் நன்றி என்றாள். எதற்கு என்றேன். அதற்கு மேல் பதிலில்லை. வேறு ஏதேனும் சந்தேகம் உள்ளதா என்றேன். இல்லை எனத் தலையசைத்தாள். பிறகு என்றேன், நான் செல்லட்டுமா என்றாள். இசைவாகத் தலையசைத்தேன். நன்றி அஃதர் என்று கூறிவிட்டு ஓடிவிட்டாள். நிச்சயம் அவள் இதுபற்றி பலமுறை யோசித்திருக்கக்கூடும். ஏன் வெங்கட் வராததால்தான் என்னிடம் வரவேண்டி நேர்ந்தது என்று வெங்கட்டையும் கரித்துக் கொட்டியிருக்கக்கூடும்.
ஐந்து நிமிடங்கள் இந்த நிகழ்வுகள் எத்தனை முறை என் மனக்கண்ணில் நிழலாடியது என்றறிகிலேன். கதவு தட்டப்படும் ஓசையால் மீண்ட நான் பின்னர் அலுவலகப் பணியில் ஆழ்ந்துபோனேன்.
(நேசம் துளிர்க்கும் காலம் தொலைவில் இல்லை – அன்பு கொள்ளும் நெஞ்சங்கள் அருகிலிருக்கையில்!)
படைப்பாளர்:
மோகனப் பிரியா கெளரி
நான் மோகனப் பிரியா கௌரி (மோகனப் பிரியா G). பிறப்பிடம் கோவை. வசிப்பிடம் சென்னை – வேலைநிமித்தம். சிறுவயது முதலே அம்மா, மாமா என நாவல் படிக்கும் குடும்பம் சூழவே கதைகள் மீது ஆர்வம் அதிகம். மகிழ்ச்சியோ கவலையோ கோபமோ காதலோ எழுத்தும் மொழியும் இதயத்தின் வடிகால்கள் என்ற ஆழ்ந்த பிடிப்பு. அவ்வப்போது கவிதைகளும் எழுதும் என் முதல் தொடர்கதை ’அவள் அவன் அவர்கள்.’