இதன் குரல் அவ்வப்போது கழுதையை நினைவுபடுத்தும். ஆனால், இது கழுதையல்ல. முகத்தை மட்டும் பார்த்தால் காட்டு நாய் போலத் தெரியும். ஆனால், இது உண்மையில் பூனை இனத்துக்கு நெருக்கமானது. இது மிகவும் கோழையான, தத்தியான மிருகம் என்று கதைகளில் சொல்லப்படுகிறது. ஆனால், இந்த இனம் அறிவுத்திறன் பரிசோதனைகளில் ஜெயித்திருக்கிறது. “சிங்கம் போன்ற பெரு விலங்குகளிடமிருந்து திருடிப் பிழைக்கும் ஈனப் பிறவி இது” என்று பண்டைய அறிவியலாளர்கள் இதைப் பற்றிக் குறிப்பு எழுதியிருக்கிறார்கள். உண்மையில், இந்த இனத்திடமிருந்து சிங்கம்தான் இறைச்சியைக் களவாடுகிறது எனக் கள உயிரியலாளர்கள் உறுதிப்படுத்தியிருக்கிறார்கள். சில இனங்களின் உடலில் புள்ளிகள் இருக்கும். ஆனால், இது சிவிங்கியோ சிறுத்தையோ அல்ல. எல்லாவற்றுக்கும் மேலாக, இந்த இனத்தின் எல்லா விலங்குகளுமே இருபால் உயிரிகள் என்றே பண்டைய விஞ்ஞானிகள் எழுதிக்கொண்டிருந்தார்கள். ஆனால், இவற்றில் ஆண்/பெண் எனத் தனித்தனி பாலினங்கள் உண்டு என்பதைத் தீவிர ஆய்வுகள் உறுதிப்படுத்தியிருக்கின்றன. “நாங்கள் என்ன செய்வது? இந்த இனத்தின் ஆண்/பெண் உறுப்புகள் அப்படித்தான் நினைக்க வைத்தன” என்று அந்தக் கால விஞ்ஞானிகள் புலம்பக்கூடும்.
நம் எதிர்பார்ப்புகள், புரிதல்கள், முன் முடிவுகள் எல்லாவற்றையும் அடித்துத் துவைக்கும் இந்த விலங்கு – கழுதைப் புலி (Hyena). இது எலும்புகளைத் தின்னும் பண்புள்ளது என்பதால் ’என்புதின்றி’ என்று அழைக்கப்படுவதாகவும் ஒரு குறிப்பு உண்டு.
’லயன் கிங்’ சம்பிரதாயப்படி பார்த்தால், இந்த விலங்கை அறிமுகப்படுத்தும்போது ஒரு திகில் பட பின்னணி இசையை ஓடவிட்டு, இருட்டுக்குள்ளிருந்து கூன் முதுகும் எச்சில் ஒழுகும் வாயுமாக இந்த விலங்கு அசட்டுச் சிரிப்புடன் வெளியில் வருவதைக் காட்ட வேண்டும். சுற்றிலும் இறந்த விலங்குகளின் உடல்களும் அழுகிய இறைச்சியின் மணமும் இருப்பது கூடுதல் சிறப்பு.
இந்த இனம் வசிக்கும் பல நாடுகளின் நாட்டார் கதைகளில் கழுதைப் புலிகள் அதிபயங்கரமாகச் சித்தரிக்கப்படுகின்றன. கல்லறைகளில் இருக்கும் பிணங்களைத் தின்னும் விலங்கு இது என்றுகூட ஒரு நம்பிக்கை உண்டு! இந்த விலங்கு குழந்தைகளைக் கடத்திச் சென்று கொன்று தின்னும் என்று பல இனக்குழுக்கள் நம்பின. பல நாட்டார் கதையாடல்களில் துரோகத்துக்கும் முட்டாள்தனத்துக்கும் இது அடையாளமாக சொல்லப்படுகிறது. இந்த விலங்கை சூனியக்காரிகளோடு பிணைத்துப் பேசும் பல இந்திய நாட்டார் கதைகள் உண்டு. இவற்றின் தோற்றம், சில பண்புகள் ஆகியவை இந்தப் பயங்களுக்கும் அருவருப்புக்கும் வித்திட்டிருக்கலாம். ஒருவகையில் லயன் கிங் திரைப்படத்தின் சித்தரிப்பும் இந்த உணர்ச்சிகளிலிருந்தே வந்திருக்கிறது.
கற்பனை சித்தரிப்புகளை ஒதுக்கிவிட்டுப் பார்த்தால், உயிரியலாளர்களுக்கு இதை விட சுவாரசியமான விலங்கினம் இருக்க முடியாது. கழுதைப்புலிகளில் நான்கு வகைகள் உண்டு. ஒவ்வொன்றுமே தனித்துவமான பண்புகளோடு விஞ்ஞானிகளுக்குப் புதிய ஆச்சரியங்களைத் தந்தபடியே இருக்கின்றன.
பூனைக்கு நெருக்கமான இனம் என்றாலும் இதன் முகம் நாய்போல இருப்பதற்கு ஒரு காரணம் உண்டு. கழுதைப்புலிகளின் வேட்டை முறைக்கு Endurance hunt என்று பெயர். அதாவது, வேகமாக ஓடி இரையைப் பாய்ந்து பிடிப்பதோ, மறைந்திருந்து தாக்குவதோ இல்லாமல், துரத்தித் துரத்தி இரையைச் சோர்வுறச் செய்வது. இரை விலங்கு ஓரளவுக்கு மேல் சோர்ந்துவிடும். ஆனால், கழுதைப்புலிகள் விடாமல் சோர்வடையாமல் துரத்தும். ஓடி ஓடிக் களைப்படையும் இரைவிலங்கு, உயிர்போனாலும் பரவாயில்லை என்று களைப்படைய வேண்டுமென்றால் எத்தனை நேரம் இந்த வேட்டை நடக்க வேண்டும்! அவ்வளவு நேரம் தாக்குப் பிடிக்கும் கழுதைப்புலிகள், இரை சோர்ந்த உடனேயே அவற்றைக் கொன்று அடுத்த நொடியிலிருந்து உண்ணத் தொடங்க வேண்டும், இல்லாவிட்டால் இரையின் ரத்த வாசனைக்கு விலங்குகள் வந்துவிடும். ஆகவே ஓடி முடித்ததும் உடலைக் குளிர்விக்க இந்த நீண்ட மூக்கு உதவுவதாகவும், அதனால்தான் கழுதைப்புலிகளால் உடனே உணவு உண்ண முடிகிறது என்றும் ஓர் ஆய்வு தெரிவிக்கிறது. இவற்றின் விநோதமான முதுகு அமைப்பு, இதுபோன்ற நீண்ட வேட்டைகளின்போது ஆற்றலைப் பாதுகாக்க உதவுகிறது.
இதைப் படித்துக்கொண்டிருக்கும்போதே நமக்கு ஒரு கேள்வி வரலாம். கழுதைப்புலிகள் இறந்த விலங்குகளின் உடலைத் தின்னும் அழுக்குண்ணிகள் என்றல்லவா நினைத்துக் கொண்டிருக்கிறோம். இதையெல்லாம் படித்தால் அது வேட்டையாடும் விலங்கு போலத் தெரிகிறதே?
இரண்டுமே உண்மைதான். சில வகை கழுதைப்புலிகள் பெரும்பாலும் இறந்த விலங்குகளை உண்கின்றன. சில வகை கழுதைப்புலிகள் வேட்டையாடி உண்பதை வழக்கமாகக் கொண்டிருக்கின்றன. சில இனங்களில் இரண்டும் பாதிப்பாதி இருக்கும். வரிக்கழுதைப் புலியின் (Striped hyena) உணவில் 85% வேட்டையாடப்பட்டதுதான்! அழுகிக்கொண்டிருக்கிற நிலையில் இருக்கும் விலங்குகளின் தசையைக்கூட உண்டு செரிக்கும் ஆற்றல் படைத்தவை இவை. மற்ற விலங்குகளோடு ஒப்பிடும்போது, நோயுற்ற விலங்குகளை உண்டாலும் தொற்று உடலைப் பாதிக்காத அளவுக்கு இவற்றின் நோய் எதிர்ப்பு மண்டலம் வலுவானது. ஆந்த்ராக்ஸ் முதலிய கிருமிகள் உள்ள இறைச்சியைக்கூட இவை உண்டு செரித்திருக்கின்றன! இவற்றின் வலுவான தாடைகளும் அதீத அமிலத்தன்மை உள்ள வயிறும் ஒட்டகச்சிவிங்கி, யானையின் எலும்பைக் கூட செரிக்க வல்லவை!
கழுதைப்புலிகளின் பகாசுரப் பசியும் உணவு உண்ணும் வேகமும், களத்தில் இருக்கும் உயிரியலாளர்களைப் பலமுறை வியப்பில் ஆழ்த்தியிருக்கிறது. ஒரு கழுதைப்புலி சாப்பிடத் தொடங்கினால் ஒரே முறையில் 15 கிலோ இறைச்சி/எலும்பைத் தின்றுவிடும். 35 கழுதைப் புலிகள் ஒன்றாகச் சேர்ந்தால் 650 கிலோ எடையுள்ள ஒரு ஆப்பிரிக்கக் காட்டெருமையின் உடலைச் சில மணிநேரத்தில் முழுவதுமாகத் தின்று தீர்த்துவிடும்.
35 கழுதைப்புலிகளா என்று நாம் ஆச்சரியப்படலாம். வரிக்கழுதைப்புலிக் கூட்டம் ஒன்றில் சராசரியாக 130 விலங்குகள் இருக்கும். 50 பெண்கள், 40 ஆண்கள், 40 குட்டிகள் என்று மிகப்பெரிய கூட்டம் அது.
இந்தக் கூட்டத்துக்குத் தலைமை வகிப்பது ஒரு பெண் கழுதைப்புலி. தாய்வழிச் சமூகம் இது.
“ஆஹா…. தாய் உள்ளத்துடன் அனைவரையும் அரவணைத்து எல்லாரையும் இந்தப் பெண் அன்போடு வழிநடத்தி….” என்றெல்லாம் உருகுவதற்கு முன்னால் இந்தத் தகவலையும் கேட்டுவிடுங்கள். பெண் விலங்குகள் ஆண் விலங்குகளைவிடச் சற்றே பெரியவை, ஆண் விலங்குகளைக் காட்டிலும் பெண் விலங்குகளுக்கே மூர்க்கம் அதிகம். அதுமட்டுமல்ல, இரையைப் பங்கிடும்போது தலைமைப் பெண்ணும் அதன் குட்டிகளும் முதலில் உணவுண்ணும். அடுத்தடுத்தது எல்லா பெண் விலங்குகளும் குட்டிகளும் உண்டு முடித்த பின்னரே ஆண் விலங்குகளுக்குப் பங்கு கிடைக்கும்!
இவையெல்லாம் போதாதென்று பெண் விலங்குகளின் பிறப்புறுப்பு ஆணுறுப்பைப் போலவே இருக்கும். இது போலி ஆணுறுப்பு (Pseudopenis) என்று அழைக்கப்படுகிறது! ஆணுறுப்பு போன்ற தோற்றம் மட்டுமல்லாமல், பெண்ணுறுப்புக்கு அருகில் போலி விதைப்பை (False scrotum) போன்ற ஓர் அமைப்பும் உண்டு!
தன் கல்லறையில் ஃப்ராய்டு புரண்டு படுக்கும் சத்தம் கேட்கிறது. போகட்டும். நாம் கழுதைப்புலிகளுக்குத் திரும்புவோம். இந்த போலி ஆணுறுப்பின் இயக்கவியலும் உடற்கூறியலும் (Physiology and anatomy) மிகவும் சுவாரசியமானது. பெண் உறுப்புதான் என்றாலும் சில தசைப்பகுதிகள் நீண்டிருப்பதால் இது இவ்வாறு காட்சியளிக்கிறது. தவிர, பெண் கழுதைப்புலிகள் சிறுநீர் கழிக்க, இணைசேர, குட்டி போட எல்லாவற்றுக்குமே இந்த ஓர் உறுப்புதான் பயன்படுத்தப்படுகிறது. இதனால் என்ன நன்மை என்று தேடிப்போன விஞ்ஞானிகள் மிகவும் ஆச்சரியமான ஓர் அம்சத்தைக் கண்டுபிடித்தார்கள். இந்த உறுப்பின் அமைப்பு வித்தியாசமானதாக இருப்பதால், பெண் கழுதைப்புலியின் முழு சம்மதம் இல்லாமல் ஆண் விலங்கால் இணைசேரவே முடியாது! இந்த உறுப்பின் அமைப்பே Anti Rape defense போல செயல்படுகிறது! இணை சேர்ந்த பின்னும்கூட இந்த உறுப்பின் சிக்கலான அமைப்பால், ஆண் உயிரணுக்கள் சினைமுட்டையைச் சென்றடைய நீண்ட நேரம் ஆகும். இந்தக் கால இடைவெளிக்குள் பெண்விலங்கு மனதை மாற்றிக்கொண்டுவிட்டது என்றால், சிறுநீர் கழித்துவிட்டால் போதும். எல்லாம் ஒரே பாதையில்தான் பயணிக்கின்றன என்பதால் சிறுநீரோடு உயிரணுக்களும் வெளியேறிவிடும்!
இணையைத் தேர்ந்தெடுப்பதில் இத்தனை கடுமையாகப் பெண் விலங்குகள் நடந்துகொள்வதிலும் ஒரு காரணம் இருக்கிறது. இவற்றின் உறுப்பு அமைப்பு காரணமாக, குட்டிகள் பிறக்கும் பிறப்புப் பாதை மிகவும் குறுகலானதாகவும் வளைவு கொண்டதாகவும் இருக்கிறது. ஆகவே இந்தப் பிரசவம் மிகவும் ஆபத்தானது. முதல் முறை குட்டிபோடும்போது 10% பெண் விலங்குகள் இறந்துவிடுகின்றன. குறுகலான பிறப்புப் பாதைக்குள் பயணிக்கும்போதே 60% குட்டிகள் மூச்சுத் திணறவும் வாய்ப்பு உண்டு. ஆகவே, இணை சேர்ந்த பிறகு குட்டி ஈனுவதற்குத் தன் உயிரையே பெண் விலங்கு பணயம் வைக்க வேண்டியிருக்கிறது. தவிர, குட்டிகள் பிறந்த பின்பு ஆண் விலங்குகள் குழந்தை வளர்ப்பிலும் பங்கெடுப்பதில்லை என்பதால் குட்டிகளைக் கவனித்துக்கொள்ள வேண்டிய பொறுப்பும் பெண் விலங்குகளையே சேரும். பெண் விலங்குகள் கூட்டத்துக்குத் தலைமை வகித்து அதிக உணவு உண்பதற்கும் இதுவே காரணம் என்கிறார்கள் விஞ்ஞானிகள்.
குட்டி வெளியில் வருவதற்குக் கொஞ்ச காலம் முன்பு, கூட்டத்தின் படிநிலை அடுக்கில் மேலே இருக்கும் தாய்விலங்கு மிக அதிக அளவில் டெஸ்டாஸ்டிரான் எனப்படும் ஆண் ஹார்மோனைச் சுரக்கிறது. குட்டி ஆணாக இருந்தாலும் பெண்ணாக இருந்தாலும் அவற்றின் உடலுக்கு இந்த ஹார்மோன் சென்று சேர்ந்து, அவை சண்டை போட்டு எதிர்த்து நிற்கத் தயாராகவே உலகைச் சந்திக்கின்றன. கண்களைத் திறந்தபடியே வலுவான தசைகளோடு பிறக்கும் குட்டிகள், பிறந்த நொடியிலிருந்தே மூர்க்கமானவையாகவும் சண்டை போட்டு உணவு உண்ணவும் இருக்கின்றன. உண்மையில் இவை வனத்தின் சூழலுக்கு அளிக்கும் பங்கு முக்கியமானது. விநோதமான தோற்றத்தாலேயே இவற்றுக்குத் தகுந்த மதிப்பு தரப்படுவதில்லை.
பெண் கழுதைப்புலிகளைப் பற்றி எழுதும்போது, தோற்றத்தில் ஆண் உறுப்பைப் போல இருந்தாலும் அது பெண் உறுப்பின் தசைகளின் நீட்சியால்தான் வருகிறது என்பதைக் குறிப்பிட்டு, “பெண் கழுதைப்புலிகள் வேடமிட்டு ஏமாற்றுவதில்லை. தங்கள் பெண் தன்மையை அவை அழுத்தமாக வெளிப்படுத்துகின்றன. அதுவே சக்திவாய்ந்தாக மாறிவிடுகிறது” என்று ஒரு கட்டுரையில் எழுதுகிறார் உயிரியலாளர் கேத்தரின் வூ. பல்வேறு விலங்கினங்களில் பெண் விலங்குகளே தலைமை ஏற்பதைச் சுட்டிக் காட்டி, தந்தை வழி சமூகம் என்பது இயற்கையின் பொது விதியல்ல, இயற்கை எல்லாவிதமான தலைமைகளையும் அனுமதிக்கிறது என்பதைச் சுட்டிக்காட்டுகிறார்.
சரி… இந்தக் கேள்வியையும் கேட்டுவிடலாம். ஆண் கழுதைப்புலிகள் உண்மையிலேயே பாவம்தான், இல்லையா?
ஒரேயடியாக அப்படி சொல்லிவிட முடியாது. தான் பிறந்து வளர்ந்த குழுவுக்குள்ளேயே இருந்தால் உணவில் நல்ல பங்குகள் கிடைக்கும். ஆனால், அந்தக் குழுவிற்குள் இணை சேர முடியாது என்பதால் அவை குழுவை விட்டு வெளியேறுகின்றன. புதிய குழுவில் நல்ல உணவு பங்குகள் கிடைக்குமா என்பது சந்தேகம்தான். கழுதைப்புலிகளின் சமூக அமைப்பு அப்படிப்பட்டது. பெண் விலங்குகள் அளவில் பெரிதாக இல்லாவிட்டாலும் இது இப்படித்தான் இயங்கும். குழுவுக்குள் மற்ற ஆண் விலங்குகள் வரலாமா என்பதை ஆண் விலங்குகளே முடிவு செய்கின்றன. பல சூழ்நிலைகளில் முக்கிய முடிவுகளை ஆண் விலங்குகளும் எடுப்பதைச் சில சூழலியலாளர்கள் உறுதிப்படுத்தியிருக்கிறார்கள். ஆண் விலங்குகளைப் பெண் விலங்குகள் அடக்கிவைக்கின்றன என்று யோசிப்பதெல்லாம் மனிதப்பண்பு. ஆண் கழுதைப்புலிகள் “நானே பாவம்…” என்றெல்லாம் விட்டத்தைப் பார்த்துக்கொண்டு கண்ணீர் வடிப்பதில்லை.
குட்டிகளை ஈன்றபிறகு, அவற்றுக்குப் பாலூட்டுவது என்பது எல்லாப் பாலூட்டிகளுக்கும் உரியது. பாலூட்டிகள் மட்டுமே குட்டிகளுக்குப் பால் தருகின்றனவா? விலங்கினங்களின் பால் ஏன் வேறுபடுகிறது?
படைப்பாளர்:
நாராயணி சுப்ரமணியன்
கடல் சார் ஆய்வாளர், சூழலியல் ஆர்வலர் மற்றும் எழுத்தாளர் என்ற பன்முக ஆளுமை இவர். தமிழ் இந்து உள்ளிட்ட முன்னணி இதழ்களில் சூழலியல், கடல் வாழ் உயிரினங்கள் குறித்து தொடர்ச்சியாக எழுதி வருபவர்.