பெரும் இதிகாசங்கள் அனைத்தும் ஆண்களின் வீரம், நாடு, நகரங்கள், அவர்களின் பழக்க வழக்கங்கள் என அனைத்தையும் விவரிக்கின்றன. அதில் மையமாக இருப்பதே உயர் பதவியில் இருக்கும் ஆண்களின் உணர்வுகள். பழி உணர்வு என்றுகூடக் கூறலாம். பெண்களின் மனநிலையை இதிகாசங்கள் பெரும்பாலும் விவரித்ததில்லை. அப்படியே விவரித்தாலும் கோபுரத்தின் நுனியில் வாழும் மேல்தட்டுப் பெண்களின் மனநிலையை மட்டுமே கடைபரப்பும். அப்படியே கடைபரப்பினாலும், அதில் உண்மை இருக்குமா என்பது பெரும் ஐயமே!
இன்னும் இதிகாசங்களை ஆழ்ந்து படித்தால், மேன்மையெனக் கூறியிருக்கும் அனைத்திலும் நமக்குப் பெரும் ஐயம் எழ வாய்ப்புள்ளது. ஒரு மனிதனை மையமாகக் கொண்டு இயற்றப்பட்ட இதிகாசங்கள் அனைத்திலும், அவனை அமரனாகச் சித்தரிப்பதில் இருக்கும் முனைப்பே அதிகமாக இருக்கும். பெண்ணுணர்வுகள் பற்றி அறிந்திராத ஆண் புனைந்த பெண்களிடம், பெண்ணுக்கான பிரதிநிதித்துவம் வெளிப்படாது. அதே சமயம், சில நாகரிகங்களில் பெண் வெறும் துணை பாத்திரமாக அல்லாமல், அரசியல் தொடர்ச்சியின் மைய சக்தியாகக் கற்பனை செய்யப்பட்டிருக்கிறாள். எகிப்திய தொல்புராணங்கள் பெண்களை முன்னிலைப்படுத்தியும் எழுதப்பட்டுள்ளது.
நைல் நதிக்கரை எகிப்தை வளப்படுத்தியது உண்மை. அதேபோல் அங்கு பண்பட்ட நாகரிகம் மலர்ந்ததும் பேருண்மை.
எகிப்தின் சிறப்பே பிரமிடுகள் என்பதை அறிவோம். ஆனால் இந்தப் பிரமிடு கலாசாரத்தின் மூலத்தில் ஒரு பெண் தெய்வத்தின் சாயல் இருப்பதை அறிந்தபோது, எகிப்து வரலாற்றின் மீது ஆர்வம் இன்னும் அதிகமானது.
பண்டைய எகிப்து நாகரிகம் உலக வரலாற்றில் தனித்துவமான ஆன்மிகப் பாரம்பரியத்தை உருவாக்கிய நாகரிகமாகும். அந்த ஆன்மிக உலகின் மையமாக விளங்கிய தேவிகளில் மிக முக்கியமானவர் ஐசிஸ் (Isis). தாய், மனைவி, பாதுகாப்பு, மந்திர சக்தி, மறுபிறப்பு ஆகிய அனைத்திற்குமான அடையாளமாக ஐசிஸ் போற்றப்பட்டார். ஐசிஸின் கதையில் படிந்திருக்கும் அரசியல் மூவாயிரம் வருடங்களுக்குப் பயணித்தது. உலக வரலாற்றில் அழிக்க முடியாத இடத்தைப் பிடித்த கிளியோபாட்ரா தன்னை ஐசிஸின் மறுவடிவமாகவே அடையாளப்படுத்தினார். மூவாயிரம் வருடங்களாக ஐசிஸ் என்னும் பெண் தெய்வம் எகிப்தியர்களின் தாய் தெய்வமாக இருந்திருக்கிறார் என்று வெறுமனே கடந்து போகிற விஷயமல்ல. முந்தைய பதிவில் பார்த்த நௌனாக்டேவின் சொத்துரிமைக்கும், ஆணின் தலையீடுகள் இல்லாத, அவரின் தன்னிச்சையான முடிவுகளுக்கும் முன்னோடியாக ஐசிஸ் என்னும் புராண தெய்வமே விளங்குகிறார். ஐயாயிரம் வருடங்களுக்கு முன் குடியுரிமையோடிருந்த எகிப்து பெண்களுக்கும், முந்தைய நூற்றாண்டில் குடியுரிமை பெற்ற நமக்கும் உள்ள கால இடைவெளி சற்றே திகைக்க வைக்கிறது. மனித வாழ்வின் கூறுகளை, அனைத்து நாகரிகங்களிலும் புராணக் கதைகளே தீர்மானிக்கிறது. மனிதன் ஏதோ ஒரு விதத்தில் கதைகளை நம்பியே வாழ்ந்திருக்கிறான். ஒவ்வொரு நாகரிகத்தின் புராணத்தையும், அதன் பின்னான நாகரிக வளர்ச்சியையும் உற்றுப் பார்த்தால், மனதின் பழக்கப்பட்ட கதைகளின் சாரம் கொண்டே வாழ்ந்து முடித்திருப்பது புலனாகும். அவ்வகையில் நைல்நதி நாகரிகத்தின் மூலமாக ஐசிஸ் ஒசைரிஸ் புராணம் விளங்குகிறது. என் கற்பனையின் மூலம் புராண இடைவெளியை நிரப்ப முயற்சிக்கிறேன்.
மனிதர்கள் விவசாயம் பற்றி அறிந்திராத காலம். காடுகளில் காடோடிகளாக வாழ்ந்தனர். விலங்குகளை வேட்டையாடி வாழவும் செய்தனர். மனித தலையீடுகள் இல்லாமல், காடுகளில் கோதுமை காட்டுப் பயிராக விளைந்தது. கதிர் பழுத்து அதன் விதைகள் உடைந்து சிதறும். காற்றில் அதன் விதைகள் காடு முழுக்கப் பரவ, எங்கெல்லாம் கோதுமை விளைந்ததோ அங்கெல்லாம் சென்று தங்கி வாழ்ந்தனர். பருவகால மழைகள் தவறாமல் இருந்தவரை மக்கள் இதையே வாடிக்கையாக கொண்டு வாழ்ந்தனர். அவர்கள் இருந்த காடுகள் கொஞ்சம் கொஞ்சமாக அழிந்தன. பெரும் பஞ்சகாலம் தொடங்கியது. அப்போது பிறந்த ஒசைரிஸும் அந்தப் பஞ்சத்திற்குப் பழக்கமானான். காடுகள் அழிந்ததில் பருவம் தப்பி, பெரும் மழையாகப் பெய்தது. மண் அரிப்பு ஏற்பட்டு வளமான கரு மணற்துகள்கள் பள்ளமான நைல் நதியின் கரைகளில் இடம்பெயர்ந்தது. மணற்துகளோடு, கோதுமை விதைகளும் இடம் பெயர்ந்தன. சிறுவனாக இருந்த ஒசைரிஸுக்கு நைல் நதியின் நீரோட்டத்தோடு மனதை அலையவிடுவதே வழமை. ஒவ்வொரு நாளும் கரையில் அமர்வதும் அங்குள்ள மண்ணோடு விளையாடுவதும் மிகப் பிடிக்கும். சில நாட்களில் நீரின் விசை பெருகி, நைல் நதி கரைகளை அதிரச் செய்தபடி பாய்வதைக் கவனித்தான். அடுத்த சில மாதங்களில் அதன் வேகம் தளர்ந்து, நீர்வரத்து மெதுவாகக் குறைவதையும் பார்த்தான். சில நாட்களில் அங்கொன்றும் இங்கொன்றுமாகச் செடிகள் முளைக்கத் தொடங்கின. காட்டில் முளைப்பதுபோல் மண்டாமல், நீண்ட இடைவெளியில் சிறு சிறு முளைகள் வந்திருந்தன. ஒசைரிஸுக்கு எங்கோ பார்த்த செடிபோல் தோன்ற, சற்றுத் தீவிரமாகச் சிந்தித்தான். ஆனால் அவனால் அதை அறிந்து கொள்ள முடியவில்லை. ஒவ்வொரு நாளும் பகலில் செடிகளைக் கண்காணிக்கத் தொடங்கினான். இரவில் நட்சத்திரங்களைக் கவனிக்கத் தொடங்கினான். செடிகள் வளர்ந்து கோதுமை விதைகள் முளைக்கத் தொடங்கின. அதைப் பார்த்த கணம் அவனுள் பெரும் மகிழச்சி. அதன் விதைகளைப் பறித்தான். அது கோதுமை விதைதானா என்று சோதிக்க, அதைக் கைகளில் வைத்து தேய்த்து, பின் முகர்ந்து பார்த்தான்.
சில விதைகள் தவறுதலாகக் கீழே விழுந்தன. இன்னும் சில நாட்களில் அங்கு இன்னும் சில செடிகள் வளரத் தொடங்கின. மீண்டும் மீண்டும் அதையே செய்தான். அவன் கைகளில் இருந்து நழுவி தரைதொட்ட விதைகள் அனைத்தும் முளைந்து வந்தன.
வானில் நட்சத்திரங்கள் இடம் மாறும் காலங்களையும், அதனைத் தொடர்ந்து வரும் மழையையும் அவன் நினைவில் பதிந்து போனது. மழை பெருகும் போது நைல் தனது கரைகளை உடைத்து கருமண்ணைப் பரப்புவதைப் பார்த்தான்.
வெள்ளம் வடிய, பிறகு அந்த மண்ணில் விதைகள் உயிர்த்தெழுவது அவனை ஆச்சரியப்படுத்தியது.முளை, தழை, கதிர், விதை உயிரின் அந்த மறுபிறப்புச் சுழற்சியை அவன் பொறுமையாகக் கற்றுக்கொண்டான்.
அப்படியே, மெதுவாக விவசாயம் அவன் கைகளுக்குப் பழகியது. பசுமைப் புரட்சியின் பேரடையாளத்தை நைல் நதி அவனுக்குப் பழக்கியது.
அங்கு விவசாயம் வளர்வதற்கு முதல் விதை விழுந்தது. ஒசைரிஸின் பிறப்பே எகிப்தியர்களை விவசாயத்தில் தள்ளியது என்பது புராண நம்பிக்கை. நாடோடிகளாகத் திரிந்த எகிப்தியர்கள், நைல் நதியோரம் குடியேறி விவசாயம் செய்து ஓரிடத்தில் வாழப் பழகினார்கள்.
ஒசைரிஸ் விவசாயத்தின் நுணுக்கங்களை அறிந்து கொண்டவன் என்று புராணம் கூறுகிறது. எகிப்தியர் சில சமயச் சடங்குகளில் மண் மற்றும் தானியங்களால் ஒசைரிஸின் உருவம் செய்து அதில் விதைகள் முளைக்கச் செய்தனர்.
பெண் தெய்வங்கள் பற்றிப் பார்க்கலாம் என்று கூறிவிட்டு, ஒசைரிஸ் பற்றிய என் கற்பனைக் கதையை இங்கு சொல்கிறேன் என்று எண்ண வேண்டாம். பெண் தெய்வமான ஐசிஸ் பற்றி அறிந்து கொள்ளும் முன்னர் நிச்சயம் ஒசைரிஸ் பற்றித் தெரிந்து கொள்ள வேண்டும். ஒசைரிஸைப் புரிந்து கொள்வதன் மூலமே ஐசிஸையும், இந்தப் புராணக் கதையின் உள்ளே புதைந்திருக்கும் அரசியல் பற்றியும் விளங்கிக் கொள்ள முடியும்.
ஐசிஸ் வேறு யாருமில்லை. ஒசைரிஸின் உடன் பிறந்தவள்.
ஐசிஸ், பூமிக் கடவுள் கேப் (Geb) மற்றும் வான்தேவி நட் (Nut) ஆகியோரின் மகளாகப் பிறந்தவர் என்று புராணங்கள் கூறுகின்றன. ஐசிஸுடன் பிறந்தோர் மூன்று பேர். ஒசைரிஸ் (Osiris), செத் (Seth) மற்றும் நெப்திஸ் (Nephthys).
ஐசிஸ் தன்னுடைய சகோதரான ஒசைரிஸையே மணந்து கொண்டார். எகிப்தில் பல அரசியல் காரணங்களால், உடன்பிறந்த சகோதரியையே மணக்கும் பழக்கம் இருந்தது. எகிப்தில் அரசும் அரியாசனமும் ராணிகளின் வழியேவும் தொடர்ந்திருக்கிறது. அதிகாரம் மற்றும் செல்வம் வெளியே சென்றுவிடாமல் தடுக்கவும், அரச வம்சங்களின் தொடர்ச்சி நிலையானதாக இருக்கவும், அரசியல் குழப்பங்களைக் குறைக்கவும் இந்த வழிமுறைகளைப் பின்பற்றியிருக்கலாம்.
ஒசைரிஸை மணந்துகொண்ட ஐசிஸும் விவசாயங்களின் நுணுக்கங்கள் பற்றி அறிந்து கொள்கிறாள். நைல் நதியின் ஓரம் பெரும் கழனிகளை உருவாக்கி, கோதுமையைப் பயிர் செய்கின்றனர். இவர்களைப் பெரிதாக கண்டுகொள்ளாத மக்கள், சில காலங்களில் நைல் நதியோரம் எழுந்து நிற்கும் பசுங்கழனி காடுகளைக் கண்டு வியந்து போகின்றனர். காடுகளில் இருந்து கூட்டம் கூட்டமாக மக்கள் நைல் நதியோரம் குடியேறி, கழனிக்காடுகளை உருவாக்குகின்றனர். ஒசைரிஸின் கனவு பலித்துவிடுகிறது. பஞ்சத்திலிருந்து மக்கள் மீண்டுவிடுகின்றனர். ஒசைரிஸ் கடவுளாக உயர்ந்துவிடுகிறான். பசுமைக்கரங்களால் பஞ்சத்தை வீழ்த்திய ஒசைரிஸை மக்கள் மன்னனாக ஏற்றுக்கொள்கின்றனர். அவனின் புகழ் நைல் நதியின் கரையெங்கும் பரவுகிறது. அவனுடைய சகோதரன் சேத் பொறாமை கொள்கிறான். ஒசைரிஸைக் கொன்று முடிசூட்டிக் கொள்ளத் திட்டம் தீட்டுகிறான். ஒசைரிஸைக் கொன்று நைல் நதியில் வீசுகிறான். ஆனால் ஐசிஸ் ஒசைரிஸைக் காப்பாற்றிவிடுகிறாள். பின் சேத்துக்குத் தெரியாமல் மறைந்து வாழ்கிறார்கள். அவர்களுக்கு ஹோரஸ் என்கிற மகன் பிறக்கிறான். ஆனால், உடல் நோயால் ஒசைரிஸ் இறந்துவிடுகிறான். கணவனைப் பிரிய முடியாதவள், அவனின் உடலைப் பதப்படுத்துகிறாள். தன் கணவனின் மரணத்திற்கு நீதி எழுத, தக்க தருணத்திற்காகக் காத்திருக்கிறாள் ஐசிஸ். அவள் நினைத்ததுபோல் ஹோரஸ் செத்துடன் போர் புரிந்து எகிப்தின் அரியணையைக் கைப்பற்றுகிறான். பெரும் அரசியல் மாற்றத்தை வித்திட்டவளாக ஐசிஸ் திகழ்கிறாள்.
இதன்பொருட்டே, ஒவ்வொரு ராணியையும் ஐசிஸின் மறுவுறுவமாகவே எகிப்தியர்கள் போற்றினர் என்பது குறிப்பிடதக்கது.
கி.மு 3000 ஆண்டு (பழைய ராச்சியத்தின் தொடக்கம்) தொடங்கியே ஐசிஸ் தாய் தெய்வ வழிபாடு வழக்கத்தில் இருந்திருக்கிறது. ஐசிஸ் ஒசைரிஸ் கதை, எகிப்தின் மிகப்பழைய புராணங்களில் ஒன்று.
உலக நாகரிகங்களில் மிகவும் பழமையான நாகரிகமாக எகிப்து இருப்பதற்குக் காரணம், அதன் நீண்ட நெடிய வரலாறுதான். ஐயாயிரம் ஆண்டுகள் பழமையான கதையில் அப்படி என்னதான் இருந்துவிடப்போகிறது. புராணங்கள் முழுக்க முழுக்க கற்பனை என்றெல்லாம் கூறிவிட முடியாது. புராணங்கள் மிகைப்படுத்திய நிகழ்வுகளாக இருக்கவே அதிக வாய்ப்பிருக்கிறது. ஆயிரம் வருடங்களாக ஒரு கதை சொல்லப்பட்டு வருகிறது. அதில் ஒவ்வொரு காலக்கட்டத்திலும் நிகழும் புரட்சிகளையும் முக்கிய நிகழ்வுகளையும் கதையுள் செருகுவதால், அது பெரும்புனைவாக மாறிவிடுகிறது.
ஐசிஸ் ஒசைரிஸ் மற்றும் ஹோரஸ் புராணம் பண்டைய எகிப்தின் மதக் கோட்பாடுகளை மட்டும் பேசவில்லை. அரசாட்சியில் நிகழ்ந்த நியாய அநியாயங்களையும், சமூக ஒழுங்கையும், ஒரு பெண்ணின் உரிமை மற்றும் குரலையும் பதிவு செய்கிறது. இன்றைய பெண்ணியக்கூறுகளாக வலம்வரும் சில குணாதிசயங்களை ஐசிஸ் கடவுளிடம் காணலாம். ஆகவே உலகத்தின் முதல் தாய் தெய்வமாக ஐசிஸ் கடவுள் இருக்கக்கூடும் என்பதில் ஐயமில்லை.
பொதுவாகப் புராணக் கதைகள் அனைத்தும் கொஞ்சம் ஃபேன்டசி கலந்த மனிதக்கதைகளாகவே இருக்கின்றன. இந்தக் கதை ஓர் அரசன் எப்படி ‘நீதியின் வடிவம்’ ஆகிறான், அவன் மரணம் ஏன் முடிவாகாது, மற்றும் ஒரு பெண் எவ்வாறு அரசியல் தொடர்ச்சியின் மைய சக்தியாக மாறுகிறாள் என்பதை விளக்குகிறது.
கிரேக்க எழுத்தாளர் ப்ளூட்டார்க் தனது நூலில் (Peri Isidos kai Osiridos), ஒசைரிஸ் ஒருகாலத்தில் எகிப்தை ஆட்சி செய்த உண்மையான அரசன் எனக் கூறுகிறார். இதனால், ஐசிஸ்–ஒசைரிஸ் புராணம் முழுக்கக் கற்பனையென ஒதுக்க முடியாத ஒரு வரலாற்றுச் சாயலைப் பெறுகிறது.
விவசாயம், சட்டம், நாகரிக வாழ்வு போன்றவற்றை மக்களுக்குக் கற்றுத் தந்த ஓர் அரசன் என்பதால், மக்களிடையே அவனுக்கு அதீத செல்வாக்கு இருந்தது.
கி.மு 3100இல் மேல் எகிப்தையும் கீழ் எகிப்தையும் ஒருங்கிணைத்த அரசாட்சி உருவானது. ஐசிஸ், ஒசைரிஸ் மற்றும் ஹோரஸ் புராணம் வழக்கத்தில் வந்ததும் ஒரே காலக்கட்டமாக இருக்கிறது. முதல் வம்சத்தைச் சேர்ந்த நார்மர் மேல்–கீழ் எகிப்தை ஒன்றிணைத்ததாக வரலாறு கூறுகிறது. அதன்பின்னர் எகிப்திய அரசர்கள் தங்களை ’இரு நிலங்களின் அரசன்’ என்று அழைத்தனர். அரசரின் கிரீடம்கூட, வெள்ளை + சிவப்பு இணைந்த இரட்டை கிரீடமாக மாறியது.
இரு நிலங்களை ஒருங்கிணைந்த பின்னர் நைல் நதியின் கரையோரங்களில், விவசாயம் செய்து வாழ்ந்ததாகவும் குறிப்பிருக்கிறது. உண்மையில் ஒசைரிஸ் என்னும் அரசன், அங்கிருந்த மக்களின் வாழ்வை மேம்படுத்தியதில் பங்கிருக்கலாம். அதனால் அவன் புகழடைந்திருக்கலாம்.
இந்தப் புகழே அவனது சகோதரன் செத்தைப் பொறாமைக்கு உள்ளாக்கியிருக்கலாம். அதிகார ஆசை கொண்ட செத், விருந்தொன்றில் அழகாகச் செதுக்கப்பட்ட ஒரு பெட்டியைப் பரிசாக அறிவித்து, அதில் சரியாகப் பொருந்துபவருக்கே அது என்று கூறி, ஒசைரிஸை ஏமாற்றி உள்ளே அடைத்து நைல் ஆற்றில் வீசுகிறான். அரசியல் சதிகள் புராண வடிவம் பெறும் தருணம் இதுவே. இந்தச் சம்பவமும் உண்மையாக நிகழ்ந்திருக்கலாம்.
மெம்பைட் தெய்வக் கொள்கையின் படி, ஒசைரிஸ் நீரில் மூழ்கி மரணமடைகிறார்; ஆனால் அந்த மரணம் அழிவாக இல்லாமல் புதிய தொடக்கமாக இருக்கும் என்று நம்புகிறார்கள். பூமியின் அரசன் என்று போற்றப்பட்ட ஒசைரிஸ் அடுலோகத்தின் அரசனாக மாறுகிறான்.
ப்ளூட்டார்க் ஒசைரிஸ் மரணத்தை எகிப்தின் அரசியல் களத்தோடு ஒப்புமைப்படுத்துகிறார். எகிப்திய புராணக் கதைகளை கிரேக்க அறிவியல் தத்துவ பார்வையில் முன்வைக்கிறார். அவரின் பார்வையில் ஒசைரிஸின் உடல் நைல் வழியாக மெடிட்ரேனியக் கடலை அடைந்து, பைப்லோஸில் கரை சேர்கிறது. அங்கே ஒரு மரம் அதனைச் சூழ்ந்து வளர்கிறது. அரசனின் உடல்கூட அரசியல் நினைவாக மாற்றப்படும் என்கிற கருத்தையும் அவர் முன்வைக்கிறார்.
ஒசைரிஸின் மரணத்துக்குப் பிறகு, ஐசிஸ் துக்கத்தில் உறையவில்லை. கணவனைத் தேடி உலகம் முழுவதும் பயணிக்கும் அவள், பைப்லோஸை அடைந்து அரசனை மன்றாடி உடலை மீட்கிறாள். திரும்பும் வழியில் செத் மீண்டும் சதி செய்து, ஒசைரிஸின் உடலை பதினான்கு துண்டுகளாக வெட்டி எகிப்து முழுவதும் சிதறவிடுகிறான்.
ஐசிஸ் தனது சகோதரி நெப்திஸுடன் சேர்ந்து ஒவ்வொரு துண்டையும் தேடிச் சேகரிக்கிறாள். உடல் ஒன்றுபடுதல் என்பது இங்கு ஒரு மனித உடலின் மீட்பு மட்டுமல்ல; அது அரசியல் ஒழுங்கு மீண்டும் ஒன்றுபடும் சின்னமாகும் என்று ப்ளூடார்க் கூறுகிறார்.
இழந்த உறுப்பிற்குப் பதிலாக, ஐசிஸ் மண்ணால் செய்யப்பட்ட ஒரு மாதிரியை உருவாக்குகிறாள். அனுபிஸ் மற்றும் தோத் ஆகிய தெய்வங்கள் உதவியுடன், உடல் பதப்படுத்தப்படுகிறது; உயிர் மீண்டும் அழைக்கப்படுகிறது. ஐசிஸ் வலிமையால் அல்ல, அறிவால் வெல்லும் தருணம் இது. இந்த மறுபிறப்பின் வழியே, ஹோரஸ் பிறக்கிறான். ஒசைரிஸின் வாழ்க்கை முழுமையாக மீண்டுவிடவில்லை; ஆனால் அரசியல் தொடர்ச்சி உறுதியாகிறது. ஹோரஸ் சட்டபூர்வ வாரிசாக உயர்கிறான்.
ஐசிஸ் அரியணையில் அமரவில்லை; ஆனாலும் அரசை இயக்கினாள். அவள் இல்லாமல் ஒசைரிஸின் மறுபிறப்பும் இல்லை; ஹோரஸின் அரசாட்சியும் இல்லை. ஒரு புராணக்கதையின் மையக்கருவாக ஐசிஸ் விளங்குகிறாள். இங்கு ஐசிஸ் வெளிப்படையான அதிகாரம் அல்ல; கட்டமைப்பு சக்தி. மனைவி, விதவை, தாய், அறிவாளி, பாதுகாவலர் என பல அடையாளங்களில் இயங்கும் அவள், ஒரே பாத்திரத்தில் சிக்காதவளாக இருக்கிறாள். பெண் அதிகாரத்தின் பண்டைய வடிவமாகத் திகழ்கிறாள்.
இந்தப் புராணக்கதை மூலமாகவே எகிப்தியர்கள் உடலைப் பதப்படுத்துதலுக்குப் பழகியிருக்க வேண்டும். ஒவ்வோர் அரசனும் அரியனை ஏறியவுடனே, தனக்கான பிரமிடைக் கட்டத் தொடங்கிவிடுவார்களாம். ஒசைரிஸின் தொடர்ச்சியாக ஹோரஸ் வந்ததுபோல், மீண்டும் தன்னை உயிர்பித்துக்கொள்ளும் ஆவல் அவர்களிடம் இருந்திருக்கிறது.
இதனால்தான் ஹட்செப்சுட், கிளியோபாட்ரா போன்ற பெண் ஆட்சியாளர்கள் தங்களை ‘ஐசிஸின் பூமி வடிவம்’ என்று அறிவித்தனர். ஐசிஸ்–ஒசைரிஸ் புராணம் ஒரு குடும்ப நாடகமோ, மதக் கதையோ அல்ல. அது அதிகாரம் என்றால் என்ன, அரசு எப்படித் தொடர்கிறது, அந்தத் தொடர்ச்சியில் பெண் எங்கு நிற்கிறாள் என்கிற கேள்விகளுக்குப் பண்டைய உலகம் அளித்த மிக ஆழமான அரசியல் பதில். அரியணையில் அமராமல் அரசை உருவாக்கிய முதல் பெண் – ஐசிஸ்.
அடுத்து ஐசிஸுக்கு இணையாக இன்னொரு பெண் கடவுளையும் எகிப்தியர்கள் வணங்கியிருக்கிறார்கள். காதல், இசை, தாய்மை ஆகியவற்றின் கடவுள் அவள். அவளின் பெயர் ஹதோர். ஹோரஸின் இல்லம் என்பதே பொருள்.
அவள் மேற்கு எகிப்தின் அதிபதியாகவும் விளங்கினார். மேற்கு பள்ளத்தாக்கில் வேளி ஆஃப் கிங்ஸ் என்று ஓரிடம் உள்ளது. பிரமிடுகள் கட்டும் பழக்கம் உருவாகும் முன்னர் மன்னர்களை அந்தப் பள்ளதாக்கில் அடக்கம் செய்துள்ளனர். அங்கு ஹோரெம்ஹெப் (கி.மு. 1323 – கி.மு. 1295) என்னும் அரசனும் அடக்கம் செய்யப்பட்டிருக்கிறான். அவன் ஹதோர் தெய்வத்திற்கு மது காணிக்கை செலுத்தியதாக ஒரு காட்சி சித்தரிக்கப்பட்டுள்ளது.
அந்த காட்சியில் ஹதோர் வித்தியாசமான தலையலங்காரத்துடன் காட்சி தருகிறாள். அந்த அலங்காரம் ‘மேற்கு’ என்பதற்கான எகிப்திய ஹைரோக்ளிஃப் சின்னமாகும்.
கிழக்கில் சூரியன் உதிக்கிறான். மேற்கில் அஸ்தமிக்கிறான். அதனால் இறந்தவர்களின் உடலை மேற்கில் புதைக்கும் வழக்கம் எகிப்தில் இருந்திருக்கிறது. சூரியன் மறையும் திசையே இறந்தவர்கள் அடுத்த லோகத்திற்குள் நுழையும் திசை என்று எகிப்தியர்கள் நம்பினார்கள். இந்த வடிவத்தில், ஹதோர் இறந்தவர்களின் ஆபத்தான மறுவுலகப் பயணத்தின் போது அவர்களுக்குப் பாதுகாப்பு அளிக்கும் தெய்வமாக விளங்குகிறாள்.
அந்தச் சிற்பத்துடன் இணைந்துள்ள கல்வெட்டு உரையில்
ஹதோர், ஹோரெம்ஹெப்பிடம் ஒசைரிஸின் அரியணை உனக்கு என்றென்றும் உறுதி. நான் உனக்குப் பாதுகாப்பளிப்பேன் என்று வாக்களிக்கிறாள். ஐசிஸிக்கு முன்பே ஹதோர் என்னும் பெண் தெய்வ வழிபாடு இருந்திருக்கிறது. அதனால் ஹதோரின் தொடர்ச்சியாக ஐசிஸ் இருக்கவும் வாய்ப்பிருக்கிறது என்று ஆராய்ச்சியாளர்கள் கூறுகிறார்கள்.
ஐசிஸின் தொடர்ச்சியாக எகிப்திய பெண்கள் வாழ்ந்ததுபோல் மகாபாரதத்தின் நீட்சியாக இங்கும் பெண்கள் வாழ்ந்திருக்கிறார்கள்.
இந்துக்களின் நம்பிக்கையின்படி, இந்த உலகத்தின் எந்த மூலைமுடுக்குகளில் தேடினாலும் கிடைக்காத தர்மவான் குந்தியின் மூத்த மகன் தருமன். மகாபாரதம் முழுக்க, அவன் தர்மத்தை மட்டுமே கடைப்பிடிப்பவனாக போற்றப்படுவான். ஆதாவது, ஆசிரியர் ஒவ்வோர் இடத்திலும் தருமனின் தர்மம் வழுவாத காரியங்களை, இதிகாசம் முழுக்க, நமக்கு எடுத்தியம்புவார்.
ஒரு சில இடங்களில் வாசிப்பின் வழித்துணையுடன், இதிகாசத்தினுள் நுழையும் வாசகர்களாகிய நாமும் தருமனைத் தர்மவான் என்று ஒப்புக் கொள்வோம்.
துரியோதனனுடனான சூதாட்டத்தில் திரௌபதியைப் பணயம் வைத்து விளையாடுகையில், அவன் தர்மத்தைப் பின்பற்றினானா என்ன? தருமனைப் பொறுத்தவரையில் சபையில் அளித்த வாக்கைக் காப்பாற்றுவதுதான் தர்மமா? இப்படிக் கேள்வி கேட்டால், பல கேள்விகளை நாம் கேட்டுக்கொண்டே இருக்கலாம். தர்மத்தின் உருவகமாகப் போற்றப்படும் தருமனின் தர்மமே ஒரு பெண்ணின் உடலை பணயமாக்கும் இடத்தில் எப்படி மௌனமாக மாறுகிறது என்பதைக் உணர திரௌபதியின் கேள்வி நம்மைத் திகைக்க வைக்கிறது.”
‘தன்னை இழந்தபின் என்னை இழந்தாரா, இல்லை என்னை இழந்தபின் தன்னை இழந்தாரா?’ என்று கேட்டனுப்புவாள். அவள் கேட்ட கேள்வி மிகவும் நியாயமான ஒன்றாக இருந்தாலும், அதை ஆலோசனைக்கு உள்ளாக்கும் அனுமதிகூட அச்சபையில் இல்லை. ஏனெனில் அது ஆண்களுக்கான சபை இருந்தது. ஆண்கள் அதிகாரத்தில் இருக்கும் சபையாகவும் இருந்தது. பெண்களுக்கான நியாயங்கள் எல்லாம் அந்தச் சபையில் இரண்டாம் பட்சம்தான்.
கண்முன்னே பெரும் அநியாயம் நிகழப்போகிறது என்று அறிந்தபின்னும் பீஷ்மரும், துரோணரும் சபையைத் துறந்து வெளிநடப்புச் செய்யவில்லை. ‘துரியோதனா.. குரு வம்சத்திற்குத் தீராத பழியைக் கொண்டுவந்துவிட்டாய்’ என்று கூற முடிந்தவரால், திரௌபதியின் துகிலுரியப்படும்போது, தலை தாழ்த்தி மட்டுமே இருக்கமுடிந்தது.
சத்யவதியின் ஆணைக்கிணங்கி, காசி நாட்டு இளவரசிகளைக் கவர்ந்து வந்து விசித்திரவீரியனுக்கு மணமுடித்து வைக்கும்போது, தர்மம் காக்கப்பட்டதாகவே இதிகாசம் சப்பைக்கட்டு கட்டுகிறது. ஏனெனில், நீதி நூல்களில் கந்தர்வ மணம்புரியும் வழிமுறைகளில் இதுவும் ஒன்று என்று சத்யவதி கூறும்போது, கவசம்போல் மனசாட்சியைக் கழற்றி வைத்துவிட்டு, அவளின் ஏவலை முடிப்பார்.
மகாபாரதம் என்னும் மாபெரும் இதிகாசத்தில் உள்ள அனைத்து கதாபாத்திரத்திற்கும் ஒரு கறுப்பு பக்கம் இருப்பதுபோல் தோன்றும். ஆண் பாத்திரங்கள் அனைத்தும் அதிகாரமும் ஆளுமையுமாகப் படைக்கப்பட்டிருக்கும்.
பெண் பாத்திரங்கள் பெரும்பாலும் இப்படித்தான் வாழவேண்டும் என்று பெண்களுக்குப் போதிக்கவே எழுதப்பட்டதுபோல் தோன்றும். நீ இப்படி இரு என்று கூறினால், நான் ஏன் இப்படி இருக்க வேண்டும் என்று கேள்வி எழுப்ப வாய்ப்பிருக்கிறது. கதை வழியாக வாழ்வியல் முறைகளை மனதிற்குள் இயல்பாக்கும் முயற்சியாகவே அவை செயல்பட்டிருக்கலாம் என்று தோன்றுகிறது.
ஒரு காவியப் பெண்ணிற்கான வரையறைகளைத் துல்லியமாக வடித்துவிட்டால், காவியத் தலைவியாகத் துடிக்கும் பெண்கள் முழுமனதாகவே அதை ஏற்று நடப்பார்கள் என்றும் நினைத்திருக்கலாம்.
மகாபாரதத்தில் அப்படியான பெண் பாத்திரங்களுக்குப் பல உதாரணங்கள் இருக்கின்றன. அவற்றுள் நாமறிந்த பாத்திரங்கள் காந்தாரி, திரௌபதி, அம்பிகா, அம்பாலிகா. கணவனுக்கு விழிகள் இல்லை என்றறிந்தபின், தன் விழிகளையும் மூடிக் கொண்டு, தன் வாழ்வை இருட்டிப்புச் செய்தவள் காந்தாரி. நூறு பிள்ளைகளைப் பெற்றெடுத்தாள். ஆனால் பிள்ளைகளின் முகம் காணவும், விழி மூடியிருந்த கருந்திரையை அகற்றவில்லை. இந்த உலகத்திலே உன்னதமான ஒரு சொல் உண்டென்றால் அது அன்னைதான் என்று வகைதொகையில்லாமல் மகிமைப்படுத்தி வைத்திருக்கிறோம். ஆனால், அப்படி ஓர் உன்னதப் பதவி அடைந்தவள், தன் குழந்தையின் பால்முகம் காணும் ஆசையைத் துறந்தாள். அவள் அப்படி துறந்ததாலே போற்றவும்பட்டாள். காந்தாரியை நினைவுகூர்ந்தாலே, அவளின் விழித்திரை நம் விழிமுன் வந்துபோவதைத் தவிர்க்க முடியாது. சகுனியின் சகோதரி, திருதராஷ்டிரனின் மனைவி, கௌரவர்களின் அன்னை என்பதெல்லாம் இரண்டாம்பட்சம்தான். கணவனால் காண முடியாத உலகை, அவளும் காண முடியாது. அவளது விழிகளும் துறவுக் கோலம் பூண வேண்டும். அதில் முக்கியம்சம் என்னவென்றால், அதை மனச்சுணக்கமின்றி ஏற்றுக் கொள்ளும் பெண்ணாகவே அவள் சித்தரிக்கப்பட்டாள். புறவிழிகளை மூடிக்கொண்டவளின் அகவிழிகளும் கதையில் தென்படவேயில்லை.
சூத்திரனான கர்ணனைச் சபையில் தைரியமாக நிராகரித்த திரௌபதி, கொண்டுவந்த மாங்கனியை ஐவரும் பகிர்ந்துண்ணுங்கள் என்று சொற்பிழையாற்றிய குந்தியின் சொல்லுக்கு இணங்கியதில் பெரும் முரணிருக்கிறது. சூத்திரனை மணந்தால் இழிந்து பேசும் உலகம், சத்ரியர் ஐவரை கணவர்களாக ஏற்கும்போது பழித்துரைக்கும் என்று அவள் நிச்சயம் அறிந்திருக்க வேண்டும். அதை அவள் சிந்தனைக்கு உள்ளாக்கவில்லையா, இல்லை அது அவளின் சிந்தனைக்குட்பட்ட விஷயமில்லையா என்று நாம் சிந்திக்க வேண்டிய அவசியமில்லை. ஏனெனில் மகாபாரதம் எழுதப்பட்டது ஓர் ஆணால் என்றிருக்கையில், அந்தப் பெண்ணைப் படைத்ததே ஓர் ஆண் என்றாகிவிடுகிறது.
அன்னையின் சொல்லை மீறாத பிள்ளைகள் என்று அவர்கள் பெயரெடுக்க, திரௌபதியின் வாழ்க்கையைப் பணயமாக வைத்ததில், ஆண் சுயநல உலகில் பெண்ணின் உணர்வுகளுக்கு இடமேயில்லையோ என்ற ஐயம் எழுகிறது.
ஐவருக்கு மனைவியாக இருப்பவள் வேசி என்று அவளைப் பழித்துக்கூற, குந்தியின் சொற்பிழை மூலக்காரணமாகிறது.
இந்தச் செயல்கள் அனைத்தும் தனிநபர் முடிவுகள் அல்ல. அவற்றை ‘தர்மம்’ எனச் சட்டபூர்வமாக்கியவை தர்ம நூல்கள்.
காசி நாட்டு இளவரசிகளைக் கவர்ந்து வந்து, இறக்கப்போகும் விசித்திரவீரியனுக்கு மணமுடிக்கக் கோரி பீஷ்மரை அனுப்புகிறாள் சத்தியவதி. அம்பை, அம்பிகை, அம்பாலிகா ஆகிய மூன்று இளவரசிகளையும் கவர்ந்து வந்து விசித்திரவீரியனுக்கு மணமுடித்து வைக்கிறார் பீஷ்மர்.
கதை முழுக்க பீஷ்மர், குணத்தில் மாபெரும் மனிதராகச் சித்தரிக்கப்படுவார். பீஷ்மரின் பிரம்மச்சரிய விரதம் பெரிதாகப் போற்றப்பட்டாலும், பெண்களின் விருப்பம் தொடர்பான தருணங்களில் அவர் எடுத்த மௌனம் கேள்விக்குரியது.
(தொடரும்)
படைப்பாளர்:
மீனாட்சி அடைக்கப்பன். மென்பொருள் துறையில் பணியாற்றி வருகிறார். அறிவியலிலும் வரலாற்றிலும் மிகுந்த ஆர்வம் உண்டு. ஒவ்வொருவரின் மனதிலும் விடைதெரியாத பல கேள்விகள் சுழன்று கொண்டிருக்கின்றன. இவர் மனதின் சுவர்களை அரிக்கும் இதுபோன்ற கேள்விகளுக்கான பதில்களைத் தேடும் ஒரு பயணமே இவர் எழுத்து. சமூகத்தில் நடக்கும் தவறுகளைக் கண்டும் காணாமல் கடந்து செல்லும் ஒரு சாதாரணப் பெண்ணாக இருந்தாலும், அவற்றால் ஏற்படும் மனப் போராட்டத்தை எழுத்தின் மூலம் வெளிப்படுத்த முயல்கிறார்.


