ஆப்கானியர்கள் ஜிஹாத் நிலையில் இருப்பது தெளிவாகத் தெரிந்தது. முஸ்லிம் ஆப்கானியர்கள் மட்டுமல்ல, இந்து, சீக்கிய சிறுபான்மையினர்கூட இதற்குப் பங்களித்தனர். ஆப்கானிஸ்தானில் ஜிஹாதின் பாரம்பரியம் எப்போதும் வலுவாகவே உள்ளது. நாட்டின் பாதுகாப்பு, கௌரவம், கலாச்சார மதிப்புகளுடன் போட்டி மனப்பான்மையில் வீரத்தை வெளிப்படுத்த ஜிஹாதை ஒரு வலிமையான சக்தியாக மாற்றியதில் ஆப்கானியர்களின் மதிப்பெண் கூடுதலானது.
இஸ்லாமிய குழுக்கள் எதிர்ப்பு இயக்கத்தின் முதுகெலும்பாக இருந்தன. அவற்றில் சில பாரம்பரியமானவை. மற்றவை அமைப்பு, சித்தாந்தம் அல்லது மேடையில் புதுமையாக இருந்தன. பொதுவாக இரண்டு வகையான குழுக்களைப் பார்க்க முடியும். ஒன்று அடிப்படைவாதக் குழுக்கள், மற்றையது புரட்சிகரக் குழுக்கள். இவ்விரண்டுமே படையெடுப்பை எதிர்த்தன. அரசையும் சமூகத்தையும் மறுசீரமைப்பதை நோக்கமாகக் கொண்டிருந்தனர். நவீன இஸ்லாமிய உலகின் தீவிர சிந்தனையாளர்களிடமிருந்து அவர்கள் பெற்ற இஸ்லாமிய சித்தாந்தத்தின் அடிப்படையில் அவர்கள் அவ்வாறு செய்ய விரும்பினர். அதனால்தான் அவர்களின் கதை படையெடுப்பை விரட்டுவதோடு முடிவடையவில்லை.
நவீனத்துவம் என்பது, சமூகத்தைப் பாரம்பரியத்திலிருந்து மதச்சார்பின்மையான ஒரு பாதையில் அமைக்கிறது என்பதே இஸ்லாமிய தீவிர விசுவாசிகளின் மிகப் பெரிய குற்றச்சாட்டு. ஆப்கானிஸ்தானில் அவர்கள் இந்த மாற்றத்தைக் கண்டார்கள். 1950களின் பிற்பகுதியில் நவீனமயமாக்கும் திட்டங்களுக்காக நாடு சோவியத் யூனியனைச் சார்ந்திருந்த பிறகு, படித்த மக்களிடையே ஊடுருவிய நாத்திகத்தின் அத்துமீறலில் இருந்து இஸ்லாத்தைப் பாதுகாப்பதை மதவிசுவாசிகள் மேலான அக்கறை என்று கண்டார்கள்.
இந்தச் சார்பின் துணைப் பொருளாக, ஈரானின் துதே கட்சி, சோவியத் யூனியனின் கம்யூனிஸ்ட் கட்சி, சீனாவின் கம்யூனிஸ்ட் கட்சி ஆகியவற்றின் இலக்கியங்களால் பாதிக்கப்படும் ஓர் இடதுசாரி குழு ஆப்கானிஸ்தானில் தோன்றியது. சோவியத் உதவியுடன் உதயமான நவீனமயமாக்கும் திட்டங்கள் நிலப்பிரபுத்துவம், முதலாளித்துவம், ஏகாதிபத்தியம் இவற்றுடன் ஓரளவு இஸ்லாமிய அறிவை மாற்றுவதற்கான சூழலைத் தங்கள் இலக்குகளாகக் கொண்டிருந்தன.
இஸ்லாத்தை குறைமதிப்பிற்கு உட்படுத்த, இடதுசாரிகள் கடவுளின் இருப்பை கேள்விக்குள்ளாக்கினார்கள். நாத்திகத்தைப் பரப்புவதற்கான இந்த முயற்சிகளின் காரணமாக, சில ஆப்கானியர்கள் அதிகாரப்பூர்வ நாத்திகத்தை இடதுசாரிகளின் குறிக்கோளாகக் கண்டனர். காபூல் கல்வி மையங்களில் இடதுசாரி மாணவர்கள் இந்த முயற்சியில் தீவிரமாக ஈடுபட்டனர். இது மாகாண உயர்நிலைப் பள்ளிகளையும் தொட்டது. மாணவராக இருந்த குல்புடின் ஹேக்மத்யார், நாத்திகர்களை எதிர்த்து ஓர் இஸ்லாமிய அமைப்பை நிறுவ வேண்டிய அவசியத்தை உணர்ந்தார்.
காபூல் பல்கலைக்கழக மாணவர்களும் பேராசிரியர்களும் 1960களில் இஸ்லாமிய இயக்கத்தைத் தொடங்கி இஸ்லாமிய சிந்தனையாளர்களின் கருத்துகளை அவர்களின் படைப்புகளின் மொழிபெயர்ப்புகள் மூலம் பரப்பினர்.
ஆப்கானிஸ்தானில் இஸ்லாமிய இயக்கம் தோன்றிய கதையானது இஸ்லாமிய உலகில் மற்ற இடங்களில் போலவே நவீனமயமாக்கல் திட்டங்களுக்கு எதிர்வினையின் கதை. இது பாரம்பரிய சமூகத்தில் நவீன சமுதாயத்திற்கு மாறுவதில் அதிகபட்சமாக அரச செயல்பாடுகளை அதிகரிக்க வழிவகுத்தது. அந்த வகையில் இந்த இயக்கம் சமீபத்தியது. 1950களின் பிற்பகுதியில் தொடங்கிய நவீனமயமாக்கல் திட்டங்களின் துணை தயாரிப்பு. இது சோவியத் யூனியனால் நிதியளிக்கப்பட்ட நவீனமயமாக்கல் திட்டங்களுடன் தொடர்புடைய கம்யூனிசத்தின் எழுச்சிக்குப் பதிலளிப்பதால் மிகவும் ஆற்றல் வாய்ந்தது. நவீனமயமாக்கலின் செயல்பாட்டில் பள்ளிகள், நீதிமன்றங்கள், பொருளாதார நடவடிக்கைகள், தொடர்புகள், ராணுவம் அத்துடன் நகர்ப்புற குடியேற்றங்களின் மூலம் நவீனத் துறைகளில் மக்கள் அதிக பங்கேற்புக்கு ஈர்க்கப்பட்டனர். முஸ்லிம் சமூகங்களின் சூழலை மாற்றிய இந்தச் செயல்முறை ஆப்கானிஸ்தானில் மதத்தை அரசியலாக்குவதற்கு வழிவகுத்தது.
நவீனமயமாக்கலின் செயல்பாடு சில நூறுகளில் இருந்த ஆப்கான் நடுத்தர வர்க்கத்தைப் சில நூறாயிரமாக அதிகரிக்கச் செய்தது. இந்தப் படித்தவர்கள் முக்கியமாக கிராமப்புறங்களைச் சேர்ந்தவர்கள். அரசு நடத்தும் இலவச கல்வி முறை, கிராமப்புறங்களில் உழைக்கும் மாணவர்கள் காபூலில் உயர்கல்வி நிறுவனங்களை அணுகுவதைச் சாத்தியமாக்கியது. இஸ்லாமிய இயக்கத்தின் நிறுவன உறுப்பினர்கள் நவீனக் கல்வி நிறுவனங்களுடன் தொடர்புடைய கிராமப்புறங்களைச் சேர்ந்தவர்கள். பாரம்பரிய மதரஸாக்களில் கற்றவர்கள் அல்ல. மேலும் இஸ்லாமிய இயக்கங்களைச் சேர்ந்தவர்கள் அரசியல் ஆளும் வட்டாரங்களின் பகுதியாகவோ அல்லது அரசைச் சார்ந்து இருக்கவோ இல்லை.
பேராசிரியர் குலாம் முகமது நியாசியுடன் மற்றும் பலர் இணைந்து ஆப்கானிஸ்தானில் இஸ்லாமிய இயக்கத்தை நிறுவினார்கள். இருப்பினும், ஹெக்மத்யார், தான் உட்பட பன்னிரண்டு பல்கலைக்கழக மாணவர்கள் என்று கூறுகிறார். நிறுவன மாணவர்கள் பேராசிரியர்களை இயக்கத்தில் சேர அழைத்ததாகவும் ஆனால், பெரும்பாலானோர் அழைப்பை நிராகரித்ததாகவும் அவர் கூறுகிறார். அரசாங்க ஊழியர்களாக இருந்த பேராசிரியர்கள் அரசை எதிர்க்கும் செயற்பாட்டில் நேரடியாகத் தங்களை இணைத்துக்கொள்ள முதலில் தயங்கினர் என்று ஹெக்மத்யார் கூறுகிறார்.
ஆப்கானிஸ்தான் இஸ்லாமிய இயக்கம், 1957இல் காபூல் மாகாணத்திலுள்ள பக்மான் என்ற மலையடிவார நகரில் பேராசிரியர் குலாம் முகமது நியாசியினால் நிறுவப்பட்டது. இவர் எகிப்திலுள்ள அல்-அஸ்ஹர் பல்கலைக்கழகத்தில் இஸ்லாமிய ஆய்வுகளில் முதுகலைப் பட்டம் பெற்றார். எகிப்திலிருந்து பாக்மானுக்கு வந்ததும் அவர் தனது அறையில் பக்தியுள்ள ஆசிரியர்களின் குழுவுடன் சிறியதாகத் தொடங்கிய இஸ்லாமிய இயக்கம் நாளடைவில் எண்ணிக்கை அதிகரித்து பலமானதாக மாறியது.
1963இல் முகம்மது தாவூத் கானின் அரசாங்கம் வீழ்த்தப்பட்டதன் பிறகு, 1969 வாக்கில் இஸ்லாமியர்கள் பேராசிரியர் நியாசியை ஆப்கானிஸ்தான் இஸ்லாமிய இயக்கத்தின் பெயரளவிலான தலைவராக (அமீர்) நியமிக்கும் ஓர் அரசியல் செயல் குழுவை அமைத்தனர். மதச்சார்பற்ற கம்யூனிச ஆட்சியில் இஸ்லாமிய ஆட்சியை ஊக்குவித்ததற்காக 1974இல் பேராசிரியர் நியாசி சிறையில் அடைக்கப்பட்டார். 1978இல் சிறையிலேயே கொல்லப்பட்டார்.
ஆப்கானிஸ்தான் வரலாற்றில் இஸ்லாமிய இயக்கங்கள் பல கிளைகளாகவும் இயங்கின. 1973ஆம் ஆண்டின் தொடக்கத்தில், பேராசிரியர்களின் ரகசிய சங்கத்தை உள்ளடக்கிய இயக்கம், அதன் உறுப்பினர்களைப் பதிவு செய்யத் தொடங்கி ஒரு தலைமை ஷூரா கவுன்சிலை உருவாக்கியது. சபையின் தவிசாளராக காபூல் பல்கலைக்கழகத்தின் ஷரிஆ பீடத்தின் விரிவுரையாளர் புர்ஹானுதீன் ரப்பானி தேர்வு செய்யப்பட்டார். பேராசிரியர் குலாம் முகமது நியாசி எப்போதைக்குமான தலைவராக அங்கீகரிக்கப்பட்டார். இந்தச் சபை பின்னர் ஜம்இய்யத்-இ-இஸ்லாமி [இஸ்லாமிய சங்கம்] என்ற பெயரை இயக்கத்திற்காகத் தேர்ந்தெடுத்தது.
ஜம்இய்யத் வெளியிட்ட ஒரு துண்டுப்பிரசுரத்தில், நாம் யார், நமக்கு என்ன வேண்டும் என்பதைப் பிரஸ்தாபித்தது. இந்த இயக்கம் ஆப்கானிஸ்தான் மக்களைக் கொடுங்கோன்மையின் பிடியிலிருந்து விடுவித்து மதத்தில் மறுமலர்ச்சியை ஏற்படுத்தும் முயற்சியே தவிர வேறில்லை என்று கூறப்பட்டது. இயக்கத்தின் குறிக்கோள் பற்றி ஹேக்மத்யார் இவ்வாறு கூறுகிறார். “ஆளும் ஒழுங்கைத் தூக்கி எறிந்து இஸ்லாமிய ஒழுங்கை மாற்றுவதும் அரசியல், பொருளாதார, சமூகத் துறைகளில் இஸ்லாத்தைப் பயன்படுத்துதலும்.”
இஸ்லாமிய இயக்கங்களில் பங்கேற்றிருந்த அறிஞர்கள் பலரும் இதே கருத்தையே கொண்டிருந்தனர். சையத் குத்புவின் கருத்துகளுக்கு ஏற்ப தாராளவாத ஜனநாயகத்தையும் சோசலிச ஜனநாயகத்தையும் சாடினர். “இஸ்லாம் ஒரு முழுமையான மதம். மற்ற எந்தவிதமான சட்டம், வழக்கம், பாரம்பரியம், நடைமுறை பற்றிய கருத்துகளுக்கு இஸ்லாத்தில் இடமில்லை. இஸ்லாமிய சமுதாயத்தில், மேற்கூறிய ஜனநாயகங்களும் பிற ஒத்த கருத்துகள் கொண்ட தத்துவார்த்தங்களும் இஸ்லாமிய அடிப்படைகளுக்கு எதிராகவும், முரண்பாடு கொண்டதாகவும் உள்ளன.
சையது குத்பின் கருத்துகளை விடவும் அழுத்தமான கருத்துகளைக் கொண்டவர்களும் இருந்தார்கள். இவர்கள், ’ஒரு குடியரசுக் கட்சி அரசாங்கத்தை’ மட்டுமல்ல, ’பொதுத் தேர்தல்களையும்’ நிராகரித்தார்கள். இவர்களது பார்வையில் தீர்மானம் மற்றும் தீர்வுக்கான கவுன்சில் (ஷுரா-இ-அஹ்ல்-இ-ஹல் வ ‘அக்த்), பக்தியுள்ள, நியாயமான திறமையுமுள்ள முஸ்லிம் ஒருவரை இஸ்லாமிய அடிப்படையில் சமூகத்தின் தலைவராகத் தேர்ந்தெடுக்க வேண்டும். இஸ்லாமியர்கள் இஸ்லாமிய ஒழுங்கை அல்லது, ’இஸ்லாமிய புரட்சியை’ ஒவ்வொரு தனி நாட்டிலும் மட்டுமல்லாமல் ’முஸ்லிம் உலகிலும்’ அமைப்பதை நோக்கமாகக் கொண்டிருந்தனர். முஹம்மது யூனூஸ் காலிஸின் கருத்துகள் இவற்றையே குறிப்பிடுகின்றன.
சையது குத்பினதும் முஸ்லிம் உலகின் பிற புரட்சிகர சிந்தனையாளர்களின் கருத்துகளும் குறிப்பாக முஸ்லிம் சகோதரர்களின் தலைவர்கள், காபூல் பல்கலைக்கழகத்தின் சட்ட, இறையியல் கல்லூரிகள், அபு ஹனீபாவின் மதரஸாவின் வெளிநாட்டுப் பேராசிரியர்கள் மூலம் மாணவர்களைப் பாதித்தனர். மேலும், கெய்ரோவில் உள்ள அல்-அஸ்ஹர் பல்கலைக்கழகத்தில் பயின்ற இறையியல் கல்லூரியின் ஆப்கானிய பேராசிரியர்கள் இந்தக் கருத்துகளை உள்ளூர் பத்திரிக்கைகள், குறிப்பாக 1968இல் நிறுவப்பட்ட வாராந்திர இதழ் கஹீஸில் வெளியிட்டார்கள். இந்த வாராந்த இதழின் ஆசிரியர் மின்ஹாஜுதீன் கஹீஸ் 1972இல் தீவிர இடதுசாரியால் படுகொலை செய்யப்பட்டார். இஸ்லாமியர்கள் சையது குத்பின் சில படைப்புகளையும் வடமொழியில் மொழிபெயர்த்தனர். பல்கலைக்கழகத்தின் பெரும்பாலான கல்லூரிகள் மேற்கத்திய பல்கலைக்கழகங்களுடன் இணைந்திருந்தாலும், இறையியல் கல்லூரி கெய்ரோவில் உள்ள அல்-அசார் பல்கலைக்கழகத்துடன் இணைக்கப்பட்டது.
இஸ்லாமிய அறிஞர்கள் வட்டங்களுக்கு வெளியே சில பாரம்பரிய உலமாக்களும் மதத் தலைவர்களும் ஏற்கெனவே நாத்திகத்தையும் சோவியத்தையும் எதிர்த்து பல அமைப்புகளை ஏற்படுத்தியிருந்தனர். குத்தம் அல்-ஃபுர்கான் (குர்ஆனின் சேவகர்கள்), ஜம்இய்யத்-இ-உலமா-இ-முகமதி (முகமதுவின் உலமா சங்கம்), கியாம்-இ-இஸ்லாமி (இஸ்லாமிய எழுச்சி) ஆகியன அவற்றில் சில. சிப்கத்துல்லா மொஜடிடி, தாகாவின் பிர், காலா-இ-பிலாந்தின் பிர், ஹபிஸ்ஜி சாஹிப், மவ்லவி ஃபைசானி போன்றோர் நிறுவனர்கள்.
இத்தகைய முக்கியஸ்தர்களின் ஆதரவின் பலத்தில் காபூலில் ஏற்கனவே குறிப்பிட்டபடி, அரசாங்கம் அவர்களைக் கலைக்கும் வரை, உலமாக்கள் ஒரு மாதத்திற்கும் மேலாக ஆர்ப்பாட்டங்களை நடத்தினர். தாவூத் கான் பிரதமராக (1953- 1963) ஆட்சி செய்தபோது அவர் இந்த எதிர்ப்பு நடவடிக்கைகளைப் பொறுத்துக்கொள்ளவில்லை. பலர் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார்கள். ஆயினும்கூட இந்தச் சங்கங்கள் அமைதி அடையவில்லை.
பல்கலைக்கழக வளாகங்களில் பேரணிகளை நடத்திய பிறகு கம்யூனிஸ்டுகளை நேரடி விவாதங்களுக்கு அழைத்து, துண்டுபிரசுரங்களை வெளியிட்டனர். ஆனால், அவர்களுடைய பேரணிகள் எதிரிகளால் நடத்தப்பட்ட பேரணிகளை விடச் சிறியதாக இருந்தன.
1973இல் தாவூத் ஆட்சி கவிழ்ப்பு வரை கலாச்சார நடவடிக்கைகளில் ஈடுபட்ட இளைஞர்கள் பின்னர் ஒழுங்கமைக்கப்பட்ட குழுவாகச் செயற்பட்டனர்.
ஜிஹாதின் இருப்பு நம்பப்பட்டபோது முஸ்லிம் ஆப்கானியர்கள், குறிப்பாக தேச விசுவாசிகள், நேரில் பங்கேற்பது அல்லது முடிந்த வழிகளில் பங்களிப்பது கடமை என்று உணர்ந்தனர். ஜிஹாதின் போது போராளிகள் என்று அறிவித்துக் கொண்ட முஜாஹிதிகளின் எண்ணிக்கையை விடவும் விகிதாசார அடிப்படையில் மக்கள் தொகை கூடுதலாக இருந்தது. சண்டை இடம்பெறும் நேரங்களில் போர் செய்யாத ஆப்கானியர்கள், விதவைப் பெண்கள் உட்பட சண்டையிடுவோருக்கு ஆதரவளித்தனர். நாட்டின் பாதுகாப்பு மற்றும் விசுவாசம் ஆயுதப்படைகளுக்கு மட்டும் பொறுப்பாகாது. ஆனால், ஆயுதங்களை எடுத்துச் செல்லும் திறன் கொண்ட ஒவ்வொரு வயதுவந்த ஆப்கானிஸ்தானியரின் பொறுப்பாகும். ஒவ்வொரு முறையும் நாடு படையெடுக்கப்படுப்புக்குள்ளாகும் போது, வழக்கமான ராணுவம் சிதைந்து ஒழுங்கற்றவர்களின் வரிசை ஜிஹாதின் உணர்வை இன்னும் உறுதியாகப் பலப்படுத்தியது.
ஆப்கானிஸ்தான் வரலாற்றில் ரஷ்யர்களுக்கு எதிராக நடந்த ஜிஹாத் மற்றெல்லாவற்றையும்விட விரிவானது. பாரம்பரியவாதிகளுக்கும் முற்போக்காளர்களுக்குமிடைய கால்கிகளின் (கம்யூனிஸ்ட்) ஆட்சியைப் பற்றியிருந்த நிச்சயமற்ற தன்மையும் கோட்பாடும் விரைவில் ஏமாற்ற உணர்வாக மாறி, உண்மையற்ற அடக்குமுறைக் கோட்பாடுகள் என்ற புரிதலைக் கட்டமைத்தது. சோவியத் படைகள் படையெடுத்தபோது இந்த உணர்வுகள் பரந்த சீற்றமாகியது.
போராட்டத்தில் ஆப்கானியர்கள் தங்கள் மதிப்புகளைப் பாதுகாப்பதில் உறுதியாக இருந்தனர். அதே நேரம் சண்டையிடாத ஆப்கானியர்கள் அவர்களை ஆதரிப்பது கடமை என்று உணர்ந்தனர். இதன் பொருள் முன்னர் குறிப்பிட்டதுபோல போராடாத ஆப்கானியர்கள் முஜாஹிதீன்களுக்கு தங்குமிடம், ஆடைகள், உணவளிப்பது, ஆயுதங்களுக்கான செலவுகளைத் தருவது, காயப்பட்டோருக்குச் சிகிச்சையளிப்பது, உதவி ஆகியவற்றை அவர்களின் மத, தேசபக்தி கடமையாக உணர்ந்தனர்.
தேசபக்தியுடனும் இஸ்லாமிய கடமைகளுக்கு உண்மையாகவும் ஆப்கானியர்கள் ஒரு வல்லரசின் ராணுவத்தை எதிர்த்துப் போராடுவதில் முரண்பாடுகள் இருந்தபோதிலும் முஜாஹிதீன்களை ஆதரித்தனர். நிலத்தின் விளைபொருட்களையும் பல வரிகளையும் இஸ்லாமிய தசமபாகம் (‘ushr) முறையில் முஜாஹித் தளபதிகளுக்குச் செலுத்தினர். ஆனால், அனுபவமின்மையும் புதிதாக வென்ற அதிகாரத்தை நிலைநிறுத்துதல், ஜிஹாதின் கடுமையான தேவைகளைப் பூர்த்தி செய்தல் ஆகியவற்றின் காரணமாக, தளபதிகள் பெரும்பாலும் உள்ளூர் மக்களைச் சர்வாதிகாரமாக நடத்தினார்கள். அனைவரும் கடுமையாக இல்லை; சிலர் மற்றவர்களுடன் கலந்தாலோசித்து ஆட்சி செய்தனர். ஆயினும்கூட சர்வாதிகாரமே அவர்களது ஆட்சியின் பொதுவான தன்மையாக இருந்தது. பின்னர் தளபதிகளுக்கும் மக்களுக்கும் இடையே ஆட்சியாளருக்கும் ஆளுகைக்குட்பட்ட மக்களுக்குமிடையே போலவே புளிப்பான உறவு வளரத் தொடங்கியது.
மக்கள் அனைவரும் முஜாஹிதின்களுக்கு வரி செலுத்த வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது. ஆயுதம் ஏந்திய முஜாஹிதீன்கள் மக்களின் வாசலில் தோன்றி பணம் கோருவார்கள். நில உரிமையாளர்கள் முன்பு அரசாங்கத்திற்கு செலுத்தியதைவிட அதிகமாக கலாஷ்னிகோவின் அச்சுறுத்தலின் கீழ் பணம் செலுத்தினர்.
(தொடரும்)
கட்டுரையாளர்
ஸர்மிளா ஸெய்யித்
விதிவிலக்கான துணிச்சலான சமூக செயற்பாட்டாளர். சமூக அநீதிகள் குறித்து அச்சமற்று விமர்சிக்கக்கூடியவர், எழுத்தாளர், கவிஞர். சிறகு முளைத்த பெண் (கவிதை 2012), உம்மத் (2014 நாவல்), ஓவ்வா ( கவிதை 2015), பணிக்கர் பேத்தி (நாவல் 2019), உயிர்த்த ஞாயிறு (2021 அனுபவம்) ஆகியன இவரது நூல்கள்.