ஒரு வழியாக ஐநா வின் அத்தனை சாஸ்திர சம்பிரதாயங்களையும் நூல் பிசகாமல் கடந்து உள்ளே நுழைஞ்சாச்சு. ஒரு நிமிடம் முன்ன, பின்ன இல்லாமல், மிகச் சரியாக மூன்று மணிக்கு “வர்லாம் , வர்லாம் வா”ன்னு உள்ளே அனுமதிக்க அந்த சரித்திரப் புகழ்(!) வாய்ந்த சம்பவம் நடந்தே விட்டது.
சென்னை சட்டசபைக்குள் என்ட்ரி போட்டு, நம்ம உபிக்களும் , ரத்தங்களும் காரசாரமா பேசியதை ரசித்திருக்கிறேன். பெங்களூர் சட்டசபையும், டில்லி பாராளுமன்றமும் என்ட்ரன்ஸ் வரைக்கும் போய் சுத்தி சுத்தி வந்திருக்கிறேன், மலேசியா நாடாளுமன்றத்துக்குள்ள நுழைஞ்சி ஆச்சர்யப் பட்டிருக்கிறேன். இன்னிக்கு ஐநாவுக்குள்ளும் நுழைஞ்சது ஜென்ம சாபல்யம் அடைஞ்சாப் போல இருந்திச்சு.
ஐநாவின் முக்கிய உறுப்புகளில் ஒன்று தான் பொதுச்சபை. 193 நாடுகளின் பிரதிநிதிகளும் கலந்து கொள்ளும் ஒரே இடம் இது. பொது அவையில் சரிசமமாக ஒரு நாட்டிற்கு ஒரு ஓட்டு மட்டுமே. முக்கிய முடிவுகள் எடுத்தல், புதிய நாடுகளை உறுப்பினராக சேர்த்தல், வரவு செலவு திட்டத்தை உருவாக்குதல், என எல்லா விவாதங்களும் இங்கு கலகலப்பாகவும், கைகலப்பாகவும் நடைபெறும். ஒவ்வொரு முடிவு எடுப்பதற்கும் மூன்றில் இரண்டு பங்கு மெஜாரிட்டி கிடைச்சால் தான் தீர்மானம் பாஸ் பண்ண முடியும் என்பதால் ஒரே கசமுசா கசகசா தான். எங்களுக்கென ஒதுக்கப் பட்டிருந்த இடத்தில் அமர்ந்தோம்.
சேம்பரின் கட்டிடக் கலை அவ்வளவு அருமையாக இருந்திச்சி. கட்டி எழுபது வருசம் ஆனது மாதிரியே தெர்ல. ஏன்ப்பா டெண்டர், வட்டம், மாவட்டம், கமிஷன், பர்சன்டேஜ் இந்த வார்த்தையெல்லாம் இங்க புழக்கத்தில் இல்லியா!! சுத்தி சுத்தி அதிசயமா பார்த்திட்டே இருந்தேன். ஒரு போட்டோ கூட, ஒரு செல்பி கூட எடுக்க முடியாத வாழ்க்கை ஒரு வாழ்க்கையா? வாழ்வின் முக் கிய தருணங்களை உறைய வைக்க முடியாமல் சோகம் சோகமா வந்திச்சு. பொங்கி வந்த சோகத்தை புகைவிட்டு ஆத்த முடியாததால(?) புன்னகையால் விழுங்கிட்டு, பக்கத்திலிருந்த அமெரிக்காவைச் சேர்ந்த மேரி கேதரினிடம் செய்தி சேகரிக்கத் தொடங்கினேன்.
ஐநா கட்டி முடிக்கப்பட்டபின் பல்வேறு நாடுகளும் நான், நீன்னு போட்டி போட்டு அதன் உள் அலங்காரத்திற்கு பங்கெடுத்து உதவி செய்தன. அந்த வகையில் இந்த Trusteeship Council Chamber முழுவதையும் டேனிஷ் ( டென்மார்க்) அரசு பொறுப்பேற்று, டேனிஷ் ஆர்க்கிடெக்ட் ஃபின் ஜூஹல் ( Finn Juhl), டிசைனர் காஸ்பர் சால்ட்டோ மற்றும் தாமஸ் சிக்ஸ்கார்ட் மூலம் இந்த சேம்பரை வடிவமைத்தது.
அங்க இருந்த ஒரு விநோதமான சிலை என் கவனத்தை ஈர்த்தது. அது ஒரு பெண் சிலை. ஒரு பெண் இரு கைகளையும் விரித்தபடி அந்தரத்தில் நிற்க, அவள் கைகளுக்கு மேலாக சிறகுகள் விரித்த பறவை வானில் நிலைநிறுத்தப் பட்டுள்ளது போல இருந்தது. அந்த ஒன்பரை அடி உயர சிலை, தேக்கு மரத்தால் டேனிஷ் சிற்பி ஹென்றி ஸ்டார்க்கால் செதுக்கப்பட்டதாம். அந்தப் பெண் வாசிப்பது போன்ற தோற்றத்தில் உள்ளது ( எனக்கு அப்படி தெர்லயே?). அந்தச் சிலை மனித குலத்தையும், நம்பிக்கையையும் ( mankind and hope) குறிக்கிறதாம். என்னமோ போடா கொமாரு எனக்கு ஒண்ணும் புரியல, ஆனா அம்மாம் பெரிய மனுஷங்க யோசிச்சா… சரியாத்தான் இருக்கும். ஆக மொத்தத்தில சிலை அழகா இருந்துச்சி அம்புட்டுதேங்…
பொது அவை விவாதம் நடைபெறும் பல கவுன்சில்கள் இருந்தாலும், அதில் முக்கியத்துவம் வாய்ந்தது இந்த ட்ரஸ்டிஷிப் கவுன்சில். குறிப்பாக கல்வி தொடர்பான பல்வேறு நாடுகளின் செயல்பாடுகளை ஆய்வு செய்வதும், அது தொடர்பான மனுக்களைப் பெறுவதும் இந்த கவுன்சிலின் பணிகள். இதற்கென தனி பிரசிடென்ட் ஐந்து ஆண்டுகளுக்கு ஒரு முறை தெரிவு செய்யப்படுகிறார். இப்போதய செசனில் நடக்க விருப்பது Global Education First Initiative என்பதன் இரண்டாம் ஆண்டு நிறைவு நிகழ்ச்சி. GEFI என்று அழைக்கப்படும், ஐந்தாண்டுகளுக்கான இந்தக் கல்வி நிகழ்வை 2012 செப்டம்பர் 26 ம் தேதி ஐநா பொதுச் செயலாளர் பான் கி மூன் தொடங்கி வைத்தார். இதன் முக்கிய நோக்கங்கள், உலகம் முழுவதிலுமுள்ள அத்தனை குழந்தைகளையும் பள்ளியில் சேர்த்தலும், கற்றல் தரத்தை மேம்படுத்துதலும்.
இந்த முன்னெடுத்தலுக்காக முந்தைய இரண்டு ஆண்டுகளாக ஐநாவின் பார்ட்னர்ஷிப் மூலமாக அனைத்து நாடுகளிலும் பல்வேறு பேரணிகள், கருத்தரங்குகள், பயிற்சிகள், கல்விச் செயல்பாடுகள் நடைபெற்றன. இன்றைய நிகழ்ச்சியில் கலந்து கொண்டு, தங்கள் நாட்டு கல்விநிலை குறித்து பேசுவதற்காக பல்வேறு நாடுகளைச் சேர்ந்த பிரதமர்கள் அல்லது குடியரசுத்தலைவர்கள் அல்லது அரசின் மிக உயர் பொறுப்பில் ( Head of Govt) உள்ளவர்கள் வந்திருந்தார்கள்.
அத்தனை பெரிய மனுஷாளையும் ஒரு சேர பார்க்க கண் இரண்டு போதலை. அவ்வளவு பெரிய அவையில் நான் மட்டுமே சேலை என நினைத்துக் கொண்டிருந்தால், அய்ய்ய்ய் இன்னொரு சேலை தெரிந்தது – பங்களாதேஷ் பிரதமர் ஷேய்க் ஹசினா. அழகான ஒரு காட்டன் சேலையில், தோளைச்சுற்றிப் போர்த்தி ஜம்முன்னு இருந்தார். என்னைப் பார்த்து நேசமாக அவர் சிரிக்கவும், எனக்குப் பெரும தாங்கல. நம்ம ‘தல‘ வந்திருக்காரான்னு தேடிப் பார்த்து, பஞ்சு மிட்டாய் கிடைக்காத பச்சப்புள்ள போல ஏமாந்தேன். எந்த பந்தா , பகட்டும், எந்த எடுபிடிகளும் இல்லாமல் ஜாம்பவான்கள் எல்லாம் சாதாரணர்களாகவே வந்தனர். ஆனா, சொந்த ஊருல நம்ம லோக்கல் கவுன்சிலருங்க காட்ற அழும்பு இருக்கே…. அடா டடா டடடா… 20 கைத்தடிகளும், 30 கால்தடிகளும், வலது கைகளும், இடது கைகளும் இல்லாட்டினா கையும் ஓடாது, காலும் ஓடாதுல்ல…..
அங்கிருந்த மிகப் பெரிய ஸ்கிரீனில் GEFI குறித்த வீடியோ திரையிடப் பட்டது. முதல் நாள் முதல் ஷோவில் 500 ரூவா டிக்கட் பிளாக்கில் வாங்கி, அடிச்சு பிடிச்சி பார்க்கிற சூப்பார்ஸ்டார் புது ரிலீஸ் மாதிரி அந்தப் படத்த விழுந்து பொரண்டு பார்த்தோம். நம்புங்க! ஐநாவின் முன்னெடுப்பால் பல்வேறு நாடுகளிலுமுள்ள பள்ளிகளில் படிக்கும் குழந்தைகள் மற்றும் ஆசிரியர்களின் நிலை, கல்விமுறை குறித்த குறும்படம் அது.
இது போன்ற பல்வேறு வீடியோக்களிலும் நான் பார்ப்பது ஆப்ரிக்கா மற்றும் ஐரோப்பிய நாடுகளுக்கிடையேயான மலைக்கும், மடுவுக்குமுள்ள வித்தியாசம். ஆப்ரிக்க குழந்தைகள் தகர ஷெட்டுக்கடியில் நெருக்கியடித்து எழுபது, எண்பது பேர் அமர்ந்திருக்க, ஐரோப்பியக் குழந்தைகள் குளிர்சாதன வகுப்பறையில் பத்து பனிரெண்டு பேர் அமர்ந்திருக்கும் காட்சியை இது போன்ற எல்லா வீடியோக்களிலும் பார்க்க முடிகிறது. யுனெஸ்கோ-வின் டைரக்டர் ஜெனரல், இரினா பொக்கோவா அனைவரையும் வரவேற்று, அடுத்த ஆண்டுக்குள் ஐநாவின் மில்லினியம் டெவலப்மென்ட் கோல்களை நிறைவேற்றுவதற்கான வாய்ப்புகள் சிறிதளவும் இல்லை எனக் கூறி குண்டைத்தூக்கிப் போட்டார். ஏனென்றால் 2000 த்தில் வரையறுக்கப்பட்ட ஐநாவின் MDG (Millennium Development Goal) க்கான டெட்லைன் 2015 ல் முடிவடைகிறது.
ஐநாவின் டெபுடி செகரட்டரி ஜெனரல் ஜேன் எலிசன் பேசத் துவங்கினார். இவ்வளவு முயற்சிகளுக்குப் பின்னரும், 58 மில்லியன் குழந்தைகள் இன்னும் பள்ளிப்பக்கமே சென்றதில்லை என்றும் 250 குழந்தைகளுக்கு நான்கு வருடப் பள்ளிப் படிப்பை முடித்த பின்னரும், வாசிக்க, எழுத, எண்ணத் தெரியவில்லை என்று கூறியதைக் கேட்டதும், டிஇஓ (DEO) ரெவ்யூ மீட்டிங்ல முழிச்சிக்கிட்டே உட்கார்ந்திருப்பது போலவே பீலிங் வந்திடுச்சு.
திடீரென பரபரப்பு. சலசலவென சத்தங்கள். எல்லாரும் அங்க பாரு, அங்க பாரு என கசகசக்க புயலென நுழைந்தார் மிஷேல் ஒபாமா, அமெரிக்காவின் முதல் பெண்மணி. அவரும் தனியாகவே வந்திருந்தார். உள்ளே நுழைந்ததும் நாங்கள் அமர்ந்திருந்த பகுதிப் பக்கம் ஒரு பார்வை, ஒரு கையாட்டல், ஒரு தம்ஸ் அப் அவ்வளவு தான்…பதிலுக்கு கையாட்டி மகிழ்ந்தோம். ஐநா சபைன்னா ரொம்ப டிசிப்ளின்டா, சைலண்ட்டா இருக்கும் னு நெனைச்சிட்டு இருந்த கைப்புள்ளயா நானு! அய்யோ…அய்யோஓஓஒ… சலசலவென்ற பேச்சு சப்தத்திற்கிடையே உரையைத் துவக்கினார் மிஷேல். ‘சைலன்ஸ்’ ஓங்கி சத்தம் போடனும்னு நினைச்ச டீச்சர் புத்திய கஷ்டப்பட்டு அடக்கினேன்.
ஒவ்வொரு பெண் குழந்தையும் பள்ளிவாயிலை தொட்டுவிட படும் கஷ்டங்கள், செய்யும் தியாகங்கள், 2015 க்குள் ஐநா திட்டமிட்டிருந்த மில்லினியம் டெவலப்மென்ட கோல்ஸ் நினைத்ததைப் போல அடைய முடியாத துயரம், யுனெஸ்கோவின் புள்ளிவிபரங்கள், தாலிபான்களால் சுடப்பட்டு பின் உலக செலிபிரிட்டியாய் மாறிய பாகிஸ்தானின் மலாலா யூசப்சாய் , போக்கோ ஹராம் இஸ்லாமியக் குரூப்பால் கடத்தப்பட்ட 200 நைஜீரியப் பெண் குழந்தைகள் என பெண்குழந்தைகளைச் சுற்றிச் சுற்றியே அவரது பேச்சு இருந்தது. ம்ம்ம்ம்… பொண்ணுங்களோட கஷ்டம் அந்தப் பொண்ணுக்குத்தான் நல்லா புரிஞ்சிருக்கு. பள்ளிகளுக்கு மணிக்கணக்காக நடந்து செல்லும் பெண் குழந்தைகளையும், பசியாலும் பட்டினியாலும் வாடி, தங்கள் வயிற்றுக்கு போராடிக் கொண்டே கல்வியையும் இறுகப் பற்றியிருக்கும் குழந்தைகளின் மனத்துணிச்சலையும் நினைவு கூர்ந்தார்.
உலகின் மூலை முடுக்குகளிலிருக்கும் ஒவ்வொரு குழந்தையும் கல்வி பெறத் தகுதியுடையதே என்பதை உணர்ந்து நாம் முயற்சி செய்தால், ஒவ்வொரு பெண் குழந்தையையும் நமது பிள்ளையாக, பேத்தியாக நினைக்கத் தொடங்கினால் கட்டாயம் அவர்களுக்குக் கல்வி கிடைக்கும் என உருகினார். அவரது உரை எனக்கு ரொம்ப திருப்தியா இருந்தது. ஆனால் அவர் பேசும் போது விசில்களும், உய்ய்ய் உய்ய்ய் என்ற சப்தங்களும் எழுந்து, சிறுவயதில் டூரிங் டாக்கீசில் சினிமா போட்டதும் ஹீரோ என்ட்ரி சீனுக்கு பறக்கும் விசில் சத்தங்களையும், பேப்பர் பறக்கும் காட்சிகளையும் நினைவூட்டின.
இதெல்லாம் விடலைப் பசங்க விளையாட்டுன்னு தான நாம நினைச்சிருக்கோம், என்னையா பெரிய ஆளுகளாம் என்ன இப்படிப் பண்றாங்க எனக்குழம்பி கேட்ட போது, இது அவரை, அவரது பேச்சை கிண்டல் செய்வதாம். ஏறக்குறைய உலகின் நம்பர் ஒன் பெண்மணிக்கே இந்த நிலைமை…(ம்ம்ம்ம் ஒரு ஹராஸ்மென்ட் கேசை தட்டி விட வேண்டியது தான்..) உள்ள இருக்கறது பூரா வி.வி.வி.வி. ஐ.பி.ஸ் தான். அப்ப இந்த ஊஊ….ஊஊ சத்தமும், விசிலும்…? தலைவர்களும் சாமான்ய மனிதர்களாக மாறிய தருணமது…
அடுத்து, கொரியா மற்றும் டொமினிக்கன் பிரசிடென்டுகளும், உலக வங்கி பிரசிடென்ட் ஜிம் கிம்மும் பேசி முடிக்க, முன்னாள் பிரிட்டிஷ் பிரதமரும் , தற்போது ஐநாவின் உலகக் கல்விக்கான சிறப்புத் தூதருமான கார்டன் ப்ரௌன் தனது உரையில், சந்தடிசாக்கில் ஆறு பில்லியன் டாலர் தொடக்கக் கல்விக்கான செயல்பாடுகளுக்குத் தருமாறு கோரிக்கை வைத்தபோது , மைனாரிட்டி எதிர்க்கட்சி போல கைத்தட்ட ஆளில்லாமல் கோரிக்கை பிசுபிசுத்தது.
இந்த ஓபனிங் செக்மெண்ட் அனைத்தும் 30 நிமிடத்தில் 3.15 முதல் 3.45 க்குள் மிகச் சரியாக முடிந்தது. என்னா ஒரு பங்க்சுவாலிட்டி? சட்டசபையில் மைக் கையில் கிடைத்தால், கட்சித் தலைவருக்கு அரை மணி நேரம் அம்மன் துதி பாடி விட்டு, சம்பந்தமில்லாமல் சம்சாரிக்கும் சங்காத்தமெல்லாம் அங்கு இல்லை. ஓபனிங் செக்மென்ட் முடிந்து மெயின் பிக்சர் தொடங்கியது…….
தொடரும்…
தொடரின் முந்தைய பகுதி:
படைப்பு:
ரமாதேவி ரத்தினசாமி
எழுத்தாளர், அரசுப்பள்ளி ஆசிரியர். பணிக்கென பல விருதுகள் வென்றவர். இவர் எழுதி வெளிவந்துள்ள ‘கனவுகள் மெய்ப்படட்டும்’ கட்டுரைத் தொகுப்பு பரவலாக கவனம் பெற்றுள்ளது. 2014, 2015ம் ஆண்டுகளில் ஐ நா சபையில் ஆசிரியர் பேச்சாளராகக் கலந்துகொண்டு உரையாற்றியுள்ளார். இந்தத் தொடரில் அவரது ஐ நா அனுபவங்களை நகைச்சுவையுடன் விவரிக்கிறார்!