“ செப்டம்பர் 16 முதல் அக்டோபர் 7 வரை நடைபெறக்கூடிய ஐநா பொதுச்சபையின் 69 வது அமர்வில் ( UNGA 69) கலந்து கொள்ள, அதன் 193 உறுப்பு நாடுகளைச் சேர்ந்த பிரதமர்கள், அதிபர்கள் வந்து கொண்டே இருக்கிறார்கள், அந்த தலைவர்கள் எல்லோரும் மன்ஹட்டன் பகுதியில் தான் தங்க வைக்கப் பட்டுள்ளனர். அதனால் தீவிரமான பாதுகாப்பு ஏற்பாடுகள் கொடுக்கப் பட்டுள்ளன”, டிரைவர் சொல்லச் சொல்ல, மூளையில் பளிச்சுனு ப்ளாஷ் அடிக்குது. நேற்று டில்லி விமான நிலையத்தில் பிரதமர் நியூயார்க் செல்வதாக ஏற்பட்ட பரபரப்பு, கடந்த ரெண்டு மாசமா என் போன் கால்ஸ் ரிக்கார்ட் ஆனது, தம்பிக்கு வந்த தொடர் போன்கால்கள், அமெரிக்கன் கான்சுலேட் போன், எல்லாம் சடசடவென த்ரில்லர் பட கிளிப்பிங்ஸாய் மனசுக்குள் சடார் சடார் என ஓடியது.
அம்மாடியோவ்… பொதுவாக, இதுவரை நான் கலந்து கொண்ட சர்வதேச கருத்தரங்குகளில் எல்லாம் முழுமையான நிகழ்ச்சி நிரல்கள் வந்து விடும். ஆனால் இந்தமுறை மிஷேல் ஒபாமா நிகழ்ச்சி குறித்தும், நான் பேனலில் பேசும் நிகழ்ச்சி குறித்தும் மட்டுமே குறிப்பிடப்பட்டிருந்தது. பாதுகாப்பு காரணங்களுக்காக விரிவான செய்திகள் எதுவும் வெளியிடப்படவில்லை என இப்போதுதான் உறைக்கிறது.
பின்ன என்ன, நம்ம ஊர்ல, எட்டாவது வார்டு கவுன்சிலரோட ஒண்ணுவிட்ட மாமாவுக்கு ரெண்டுவிட்ட அத்திம்பேரோட சித்தப்பா மருமகனுக்கு பக்கத்துவீட்டுக்காரன் வந்தாலே பின்னாடி பத்து காரும் பூனைப்படை , எலிப்படை, புலிப்படையெல்லாம் பாதுகாப்புக்கு வரும், இங்க 193 நாட்டு தலைவர்கள் வாராங்கன்னா எவ்ளோ பாதுகாப்பு கொடுக்க வேண்டியிருக்கும்? ஹய்யோ..அபிராமி…அபிராமி.. எவ்ளோ பெரிய நிகழ்ச்சியில கலந்துக்கற வாய்ப்பு கிடைச்சிருக்கு. இதோட மதிப்பு தெரியாம ஏதோ வீரபாண்டி திருவிழாவில குச்சி மிட்டாயும், குருவி ரொட்டியும் வாங்கிட்டு, ராட்டினம் சுத்திட்டு வர்றதுக்கு போற மாதிரி நினைச்சிட்டேன்.
ஆனா, கஷ்டப்பட்டு வாங்கின விசாவுக்கும், போராடி வாங்குன அரசு அனுமதிக்கும் ஒரு வேல்யூ இருக்கத் தான் செய்யுதுன்னு மனசு இப்பத்தான் சமாதானமாகுது . சந்தோசத்தில விசிலடிச்சி குதிக்கனும் போலக்கூட இருந்திச்சி. ஆனா, “ஏய், ஆதிவாசி , அடக்கி வாசி” னு உள்ள ஒரு குரல் கேட்கவும் கப்பு சிப்புனு அடங்கி, வெளியே நடக்கும் களேபரங்களை வேடிக்கை பார்க்க ஆரம்பித்தேன். ‘ஓங்கி அடிச்சா ஒண்ணரை டன் வெயிட்டுடா’ – சூர்யா இடத்தில் அந்த உயர உயரமான ஆஜானுபாகுவான போலீஸை கற்பனை பண்ணி பார்த்தேன். பயமாக இருந்தது. திடீர்னு ஒரு டவுட் வர…….ஆர் யு வொர்க்கிங்னு ட்ரைவரைப் பார்த்து இழுக்க, அவர் சிரிச்சிகிட்டே, “ ஐயாம் அ செக்யூரிட்டி டீம் ஆபிஸர், அன்டர் த கன்ட்ரோல் ஆப் யூ. என்” என்றார்.
அடியாத்தீ….இப்ப வரைக்கும் டிரைவர்னே நெனச்சிட்டு இருந்தமே, ஏதும் ஏடாகூடமா பேசிட்டமான்னு யோசிச்சிக்கிட்டே அவரைப் பார்க்கறேன். இந்த மனுசனும் துப்பாக்கி வைச்சிருப்பாரே? எல்லாம் சிவமயம், இல்லயில்ல எல்லாம் பயமயமாகிவிட்டது எனக்கு. இப்போ…வெளியே பார்க்கவும் பயம், உள்ளே அமரவும் பயம். அவரிடம் கேள்வி கேட்கவும் பயம், அவர் கேட்கும் கேள்விக்கு பதில் சொல்லவும் பயம். அதுக்குப் பிறகு வாயைத் திறப்பேன்? ம்ஹூம், கண்ணை இறுக மூடி, ஐநாவின் தலைமையகம் கட்ட நியூயார்க் எப்படி தேர்ந்தெடுக்கப் பட்டதுன்னு படிச்ச சுவையான செய்தி நினைவுக்கு வர அதில் மூழ்கிப் போனேன்.
1945 ல், ‘நீ பெரிசா நான் பெரிசா’ன்னு உலக நாடுகள் பூரா இரண்டா பிரிஞ்சி குஸ்தி போட்டு, மண்டைய உடைச்சி இலட்சக்கணக்கான மக்களை பலி கொடுத்த பிறகு, உலக நாட்டாமைகளாம் சேர்ந்து, “ இதப் பாருங்கப்பூ, இனியாவது சண்டை சச்சரவில்லாம எல்லாரும் அண்ணந்தம்பியா அமைதியா , ஒத்துமையா இருக்கோணும், அத மீறுற நாட்டோட அன்னந்தண்ணி பொழங்க மாட்டோம்னு” ஒரு உலகளாவிய தீர்ப்பைச் சொல்கிறார்கள். உலக அமைதிக்காகவும், நாடுகளோட பாதுகாப்புக்காகவும் ‘ஐக்கிய நாடுகள்” என்ற அமைப்பும் தொடங்கப் படுகிறது.
அதன் முதல் அமர்வு 1946 ல் லண்டனில் நடைபெறும் போது , “எலி வளையானாலும் தனி வளை வேணும், நமக்குன்னு தனி ஆபீஸ் கட்டிக்கிடுவோம்னு” கல்யாணமான மூணாம் நாளே தனிக்குடித்தனம் போக ஆசப்பட்டு கண்ணக் கசக்கற புது மருமகள் மாதிரி, எல்லா நாடுகளும் கொடி பிடிச்சு கோரிக்கை வைக்கின்றன.
அப்போது அமெரிக்கா, “எங்க நாட்ல தான் ஐ நா சபைக்கான கட்டிடம் கட்டணும்னு” பொதுச் சபையில குரல் எழுப்ப, ஒரு ஆறேழு நாடுகள் தவிர எல்லா நாடுகளும் சரின்னு கை தூக்கி ( காசு வாங்காம !! ) ஓட்டும் போட்டு விட, கட்டிடம் கட்ட பெரிசா இடம் வேணும்னு சுத்து வட்டாரம் பூரா வலைவீசி தேடுகிறார்கள். நாட்டைச் சுற்றிலும் கிட்டத்தட்ட இருநூறு இடங்கள் ஐநா சபை கட்டிடத்திற்காக கொக்கி போட்டு இழுக்கப் பட்டன என Capital of the world : The Race to host the United Nations என்ற நூலில் ஆசிரியர் Ms.Charlene Mises சொல்கிறார். ஆனால் அந்த 200 இடங்களில் மன்ஹட்டன் பற்றி யாரும் யோசிக்கவேயில்லை, காரணம் கசகசவென்று சந்தைக்கடை போல மக்கள் நெருக்கம் மிகுந்த ஊர், திருவிழாக் கூட்டம் போல் எந்நேரமும் ஜே ஜே என்று இருக்கக் கூடிய பஜார், நொய் நொய் என்று நாள்முழுக்க ட்ராபிக் தொல்லை போன்ற காரணங்களால் மன்ஹட்டன் ஒதுக்கி வைக்கப்படுகிறது.
இப்படியாக இடவேட்டை தொடர்ந்து கொண்டேயிருக்க கதையில ஒரு ட்விஸ்ட், இன்றும் ‘ஸ்டாண்டர்டு ஆயில்ஸ்’ என்ற எண்ணெய் கம்பெனி மூலமாக வணிக உலகையே ஆட்சி செய்யும், அமெரிக்காவின் சக்தி வாய்ந்த குடும்பமாக இருப்பது ஜான்.டி.ராக்பெல்லர் குடும்பம். நிறைய்ய்ய்ய சம்பாதிப்பாங்க, அதே நேரத்தில ஊருக்கெல்லாம் பொதுப் பணிகளுக்காக ரஜினி போல ( சினிமால சொன்னேங்க!) வாரி இறைக்கக்கூடிய வள்ளல் குடும்பம். நியூயார்க்கின் முக்கியமான பகுதியில் இருக்கக்கூடிய மன்ஹட்டனில் உள்ள 18 ஏக்கர் நிலத்தை ரியல் எஸ்டேட் வியாபாரியான வில்லியம் ஜெகன்ட்ரப் என்பவரிடமிருந்து அன்றைய மதிப்பில் 8.5 மில்லியன் டாலர் கொடுத்து வாங்கி, ஐநா தலைமையகம் அமைக்க நன்கொடையாக தருவதாகக் கூறுகிறார்கள் அக்குடும்பத்தினர்.
மன்ஹட்டனின் மையப்பகுதியில் அம்மாம் பெரிய இடம் இனாமா கிடைக்கவும் ஐநா அமைப்பும், ஜொள்ளு வடியறத மறைச்சிக்கிட்டு, சரி சரினு ஒப்புக்கொண்டது. 1948 ல் கட்டிட வேலைகள் தொடங்கப்பட்டு 1952ல், 65 மில்லியன் டாலர் செலவில் பிரமாண்டமாக கட்டி முடிக்கப்பட்டு, 760 , யுனைட்டடு நேஷன்ஸ் பிளாசா, மன்ஹட்டன், நியூயார்க் – 10017 – 6818 என்ற முகவரியுடன் , உலகின் முகமாய் கம்பீரமாக இயங்கி வருகிறது. இந்த இடம் அமெரிக்காவின் எல்லைக்குள் அமைந்திருந்தாலும் , அமெரிக்க சட்டதிட்டங்களுக்கு உட்படாத ஓர் சர்வதேச பிராந்தியமாக ( International territory) அறிவிக்கப்பட்டுள்ளது.
“மிஸ். ரெமா” ட்ரைவரின்…இல்லயில்ல ஆபிசரின் குரல் கேட்டு கண்ணைத் திறக்க, கார் எந்த குலுங்கலுமில்லாமல் , 303, லெக்ஸிங்டன் அவென்யூவிலுள்ள அஃபினா ஷெல்பர்ன் ஹோட்டலில் நின்றிருந்தது. அவர் எனக்கு நன்றி சொல்ல நான் அவருக்கு நன்றி சொல்ல, டைமைப் பார்த்துக்கொண்டே அவசர அவசரமாக உள்ளே நுழைந்தேன். ஏற்கனவே ட்ராபிக் காரணமாக செம்ம லேட். இது போன்ற கருத்தரங்குகளில் ஒவ்வொரு நிமிடமும் மிகத் துல்லியமாக கணக்கிடப்பட்டு நேர மேலாண்மை நிர்வகிக்கப்படும். ஒன்பது மணி நிகழ்வுக்கு பனிரெண்டு மணிக்குக் கூட சாவகாசமாக செல்லலாம் என்கிற ‘இந்தியன் பங்க்சுவாலிட்டி’ இங்க செல்லாது. எனவே ரிஷப்ஷன் நோக்கி ஓடினேன்.
காலையில் EI சார்பில் அன்அபிசியல் மீட்டிங் ஹோட்டல் லவுஞ்சிலேயே. உலகம் முழுவதிலுமிருந்து ஏழு ஆசிரியர்கள் கலந்து கொள்கிறோம். உண்மையில் ஆசிரியர்களுக்கான நிகழ்வுகள் 23 ம் தேதி மாலையே தொடங்கிவிட்டிருந்தது. ஒரு வெல்கம் பார்ட்டியிலும், கல்வி தொடர்பான ( Education at the heart of sustainable development) கண்காட்சியிலும் கலந்து கொள்வதற்கான வாய்ப்பிருந்தும் எனக்கான ப்ளைட் குளறுபடியால் இன்றுதான் வர நேர்ந்தது.
செக் இன் செய்யும் முன்னரே, லவுஞ்சில் இருந்த பிறநாட்டு ஆசிரியர்களைப் பார்க்கு முடிந்தது. மேற்கு ஆப்ரிக்காவிலுள்ள டோகோ என்ற நாட்டிலிருந்து பசாகோ புல்ச்செரி , நைஜீரியாவிலிருந்து ஒசினுகா அபிஓலாஒலாயம், பாகிஸ்தானிலிருந்நு ஜாகூர், பெல்ஜியத்திலிருந்து டேவிட் டி கோஸ்டர் , அமெரிக்காவிலிருந்து மேரி கேதரின் ரிக்கர், லெபனானிலிருந்து ரியாட் எல் ஹாலி இவர்களோடு இந்தியாவிலிருந்து ரமாதேவி. இது தான் எங்க டீம். எங்களுடன் உலகக் கல்வி அமைப்பின் ஒருங்கிணைப்பாளர் சசி பாலாசிங்.
இரண்டு நாட்களுக்கு இவர்கள் தான் எனக்கு பேச்சு, மூச்சு, ஒறவு, நட்பு எல்லாம். அவர்கள் பெயரையெல்லாம் நீங்க இப்ப கஷ்டப் பட்டு வாசித்தீர்களே அப்படித்தான் நானும் கடித்து குதறினேன். ( என் பெயரை அவங்க கழுவி ஊத்தினதெல்லாம் ரகசியம்) அவர்களெல்லாம் முதல் நாளே வந்து விட்டதால் பிரிட்ஜ்ல வெச்ச தக்காளி போல ப்ரெஷாக இருக்க , நான் மட்டும் இரண்டு நாள் பயண அலுப்புடன் வாடி வதங்கிப் போன கத்தரிக்காய் போல நின்று கொண்டிருந்தேன். சசி மேடம் என்னை அவர்களுக்கும், அவர்களை எனக்கும் அறிமுகப்படுத்த, அழுக்கு உடையில் சங்கோஜமாய் சிரித்து வைத்தேன். இரண்டு நாட்களுக்கான பணிகளை விளக்கிவிட்டு, அவர்கள் காலை உணவிற்குச் சென்று விட, நான் எனக்கான அறைக்குள் நுழைய ஆச்சர்யம் காத்திருந்தது.
தொடரும்…
தொடரின் முந்தைய பகுதி:
படைப்பு:
ரமாதேவி ரத்தினசாமி
எழுத்தாளர், அரசுப்பள்ளி ஆசிரியர். பணிக்கென பல விருதுகள் வென்றவர். இவர் எழுதி வெளிவந்துள்ள ‘கனவுகள் மெய்ப்படட்டும்’ கட்டுரைத் தொகுப்பு பரவலாக கவனம் பெற்றுள்ளது. 2014, 2015ம் ஆண்டுகளில் ஐ நா சபையில் ஆசிரியர் பேச்சாளராகக் கலந்துகொண்டு உரையாற்றியுள்ளார். இந்தத் தொடரில் அவரது ஐ நா அனுபவங்களை நகைச்சுவையுடன் விவரிக்கிறார்!