“ஏன் என்னை எப்பப் பார்த்தாலும் ஆண் டெவலபர்னு சொல்றீங்க? நானும் உங்களை மாதிரி ஒரு சாஃப்ட்வேர் டெவலபர் அவ்வளவு தான்!”
காலையிலேயே டெஸ்டாஸ்டிரோன் சமநிலை கோளாறு ஏற்பட்டதால் சிடுசிடுக்கத் தொடங்கினான் ஆண் டெவலபர் ஸ்ரீநிவாஸ்.
மீட்டிங்கில் அமர்ந்திருந்த ஏனைய ப்ரோக்ராமர்கள் தர்மசங்கடத்துடன் நெளிந்தனர். முக்கியமான ப்ராஜெக்டின் டெட்லைன் நெருங்கிவிட்டது. அதற்காகக் கூட்டப்பட்டிருந்த மீட்டிங் அது. அதில்தான் தன்னை முன்னிலைப் படுத்தி கவன ஈர்ப்பு செய்துகொண்டிருந்தான் ஸ்ரீனிவாஸ்.
“இந்தாளோட இதே தொந்தரவாப் போச்சு so sensitive and sentimental” என்று எரிச்சலுடன் முணுமுணுக்கத் தொடங்கினர் சிலர்.
ஸ்ரீனிவாஸின் சிவந்த உதடுகள் துடிக்கும் அழகை நமுட்டுச் சிரிப்புடன் ரசித்துக்கொண்டிருந்தனர் யாழினியும் வெண்பாவும்.
“ஹே! ச்சீனு, கூல்யா! அழகான ஆண் கோபப்பட்டா மனசுக்குக் கஷ்டமா இருக்குல்ல? After marriage, you are too stressed. You should do some yoga! Now be a good boy and get me some coffee, will you?” சீனிவாஸினின் தோளுக்கு மேல் உயர்ந்திருந்த அவனது சீனியர் மேனேஜர் ராதா செல்லமாக அவன் தலையைக் கோதியபடியே, “சீனுவுக்குத்தான் என் டேஸ்டுக்குச் சரியா சர்க்கரை கலக்கத் தெரிஞ்சிருக்கு. என் ஹஸ்பெண்ட் போடுற காபி மாதிரியே இருக்கு” என்றார் தொடர்ந்து.
உள்ளுக்குள் பெருமிதமும் மகிழ்ச்சியும் பூக்க, காபி கொண்டு வர வெளியேறினான் ஸ்ரீனிவாஸ்.
“My goodness. He’s too sensitive. அவனை வேறு டிபார்ட்மெண்டுக்கு மாத்திடலாம் ராதா” என்றார் டெஸ்டிங் மேனேஜர் ஜெஸ்ஸி.
“ஆமாம், எப்பப் பார்த்தாலும் என்னைப் பையன்னு தனிமைப் படுத்தறீங்கன்னு ஒரே புலம்பல். I’m tired of him” என்றார் சீனியை வேலை பார்க்க விடாமல் எப்போதும் அவனிடம் சென்று கடலை போடும் சித்ரா. போன மாதம்தான் சிறந்த மேலாளருக்கான விருது வாங்கியவர்.
“சீ, பாவம். டென்ஷன்லதானே அப்டிக் கத்தினான், விட்டுப் பிடிக்கலாமே. Let’s give the poor guy a chance” என்று யாழினி சொன்னவுடன் கொல்லென்று ஒரு சிரிப்பு.
“ஹலோ எங்களுக்குத் தெரியும், அவனுக்கு எந்த மாதிரி சான்ஸ் குடுக்க நினைக்கிறீங்கன்னு…”
“பின்னே he’s such an eye candy. கண்ணுக்கு அழகா சமத்தா இருக்கான்னுதானே டீம்ல வெச்சிருக்கோம். மத்தபடி ஒரு இழவும் தெரியலை.”
குபீரென்று தொடர்ந்த சிரிப்பில் அவன் வேலையில் இல்லாததும் பொல்லாததுமாக ஆளாளுக்குக் குறை சொல்லத் தொடங்க, காபியோடு கதவின் வெளியே நின்றிருந்த ஸ்ரீனிவாஸுக்குத் தொண்டை அடைத்தது.
(ஆண்கள் நலம் தொடரும்)
படைப்பாளர்
ஜெ.தீபலட்சுமி
பெண்ணிய செயற்பாட்டாளரும் எழுத்தாளருமான ஜெ.தீபலட்சுமி தொடர்ச்சியாக பெண்ணுரிமைக் குரலை எழுப்பி வருபவர். ‘இப்போதும் வசந்தி பேக்கரியில் பெண்கள் காணப்படுவதில்லை’ என்ற நூலை எழுதி இருக்கிறார். ஊடகங்களில் பெண்ணியக் கட்டுரைகள் எழுதிவருகிறார். ஆங்கிலம், தமிழ் என இரு மொழிகளிலும் சரளமாக எழுதியும், பேசியும் வருகிறார். எழுத்தாளர் ஜெயகாந்தனின் சிறுகதைகள் சிலவற்றைத் தொகுத்து ‘The Heroine and other stories’ என்ற நூலாக மொழிபெயர்த்திருக்கிறார்.