Site icon Her Stories

      5. அடர்ந்த காட்டுக்குள் ஆற்றுப்படுகை சிற்பங்கள்

அடர்ந்த காடு. உயர உயரமாக மரங்கள். விதவிதமான பறவைகளின் இனிமையான ஒலி. தூரத்தில் சலசலக்கும் நீரின்  ஓசை. மூச்சு வாங்கியது. குழுவின் ‘எளந்தாரிப் பிள்ளைகள்’ எல்லாம் முன்னால் போய்விட்டார்கள். “இன்னும் கொஞ்சதூரம்தான்…. இன்னும் கொஞ்சதூரம்தான்….” பின்தங்கியிருந்த நாங்கள் ஒருத்தருக்கொருத்தர் உற்சாகமூட்டிக் கொண்டே அந்த மலையேறிக் கொண்டிருந்தோம். சற்றே பயமூட்டும் அடர் வனத்திற்குள் ஆங்காங்கே வரவேற்கும் கரையான் புற்றுகளூடே (பாம்புப் புற்றுகள்?).  சுமார் ஒன்றரை கிலோமீட்டர் மலையேற்றம். மதியம் சாப்பிட்ட சாம்பார் சாதம் வேறு  ஒருவித கிறக்கத்தைக் கொடுத்திருந்தது. என்னது, கம்போடியாவில் சாம்பார் சாதமான்னு கண்ணைக் கட்டுதா? ஆம், சாத்தூரிலிருந்து, அண்ணாச்சி (பலசரக்குக்) கடையில் பாதியை பேக் செய்து கொண்டு வந்திருந்ததால், வியட்நாம் மற்றும் கம்போடியாவிலிருந்த அத்தனை நாட்களும் மூன்று வேளையும் சொந்த சமையலே கை கொடுத்தது. காலையில் எழுந்தவுடன் யாராவது ஒருத்தர் ரைஸ்குக்கரில் சிம்பிளாக ஒரு சாதத்தைத் தாளித்து விட்டால், பள்ளிக்குக் கிளம்புவதுபோல அவரவர் டிபன் பாக்ஸில் போட்டுக்கொண்டு தீனிப் பையை மொத்தமாக எடுத்துக்கொண்டு கிளம்பிவிடுவதால் பெரிதாக வேலை தெரிவதில்லை. சாப்பாட்டுக்காகக் கடைதேடி அலையும் நேரமும் மிச்சமாகியது. வாய்க்கும் இடத்தில் சாப்பிட்டுக்கொண்டு போய்க்கொண்டேயிருந்தோம். இரவு அறைக்குத் திரும்பியவுடன் சப்பாத்தி, புரோட்டா, உப்புமா, க்ரேவி எனப் பேச்சும் சிரிப்புமாக அனைவரும் சேர்ந்து சமைத்து உண்பதும் ஜாலியாகத்தான் இருந்தது. வயிற்றுக்கும் பர்சுக்கும் அண்ணாச்சி கடையே கேரண்டி என்பதை நமது ஜி.எஸ்.டி நாயகி (மாண்புமிகு நிதியமைச்சர்) உணர்த்தியிருந்ததால் கடல்கடந்தும் அதையே கடைப்பிடித்தோம்! (உண்மையில் தென்கிழக்காசிய நாடுகளின் உணவுமுறையின் மீதான பயமே காரணம்).

அன்று காலைப் பொழுதில் சியம்ரீப் நகருக்குள் சும்ம்ம்மா சுற்றிக்கொண்டிருந்த நாங்கள் 12 மணி வாக்கில் திடீரென அருகிலிருக்கும் வேறு ஏதாவது ஒரு இடத்துக்குச் செல்லலாம் என முடிவெடுத்தோம். டுக் டுக் தம்பியிடம் ஐடியா கேட்க, “ஒரு அதிசயம் பார்க்க விரும்புகிறீர்களா?” எனக்  கேள்வியையே பதிலாக்கினார். “ஆமாங்க ஆமா… அதுக்குத்தானே வந்திருக்கோம்?” என வேகமாகத் தலையாட்டினோம். எங்கள் ஆர்வத்தைப் பார்த்துச் சிரித்துக்கொண்டே, “அப்போ கேபால்  ஸ்பீன்  (kbal Spean) பார்த்திட்டு வந்துடுங்க” என்று அவரே ஒரு வாகனம் ஏற்பாடு செய்து தர குஜாலாகக் கிளம்பி விட்டோம். ஆனால் இப்படி மூச்சுமுட்ட மலையேறணும்னு தெரியாமல் போச்சு.

கேபால்  ஸ்பீன்  (kbal Spean) என்பது குலன் மலைகளின் தென்மேற்கு சரிவுகளில் உள்ள அங்கோரியன் கால தொல்பொருள் தளம்.  (கி.பி. 802இல்  இரண்டாம் ஜெயவர்மன் தன்னை உலகளாவிய மன்னர் என அறிவித்துக் கொண்டபோது அங்கோரியன் காலம் தொடங்கியதாகக் கருதுகிறார்கள்). புனோன் குலன் மலைகள் (PHNON KULEN)  என்றழைக்கப்படும் மலைப் பிரதேசத்தின்  தெற்குப் பகுதியில்  அடர்ந்த காடுகளுக்குள் உள்ள கேபால்  ஸ்பீன் என்கிற இந்த இடம் இந்துக்களின் புனித யாத்திரைத் தலமாக இருந்திருக்கிறது. அங்கோர்வாட் கோயில்களுக்கு வட கிழக்கில் சுமார் 30 கி.மீ. தூரத்தில் இருக்கும்  அதன் அடிவாரத்தை சியம் ரீப்பிலிருந்து ஒரு மணி நேரப் பயணத்தில் நாங்கள் அடைந்திருந்தோம். பசுமையால் மூடப்பட்டு கம்பீரமாக நிற்கும் குலன் மலையில் புதைந்து கிடக்கும் அந்தத் தொல்பொருள் அதிசயத்தைக் காண கீழிருந்து ஒன்றரை கிலோமீட்டர் மலைப்பாதையில் நடப்பதற்குள்தான் இத்தனை மூச்சுவாங்கல்கள். முதல் நாளே அட்வெஞ்சர் ட்ரிப் அட்டகாசமாகத்தான் இருந்தது.  ரகசியமாகச் சலசலக்கும் நீரின் ஓசையும், சங்கேதக்குரலில் செய்தி பரிமாறிக்கொண்டிருந்த பறவைகளின் ஒலியும் காதுகளுக்கு  ஆனந்தம். ஆஹா… பரமானந்தம். எங்கு சென்றாலும் விடாமல் பின்தொடரும் பிறந்த வீட்டு நினைவு போல, எனக்கு ஏனோ சுருளி அருவிக்கு வனத்திற்குள் நடந்து செல்லும் நினைவு வந்தது. ஒருவழியாக  அழகை ரசித்துக்கொண்டே ஏறி முடிக்க…. ஆ… மூச்சு ஒருகணம் நின்று வந்தது. ஓங்கி உயர்ந்த மலைகளுக்கிடையில் பச்சைப் பசேல் மரங்கள் சூழ ஆரவாரமில்லாமல் நிதானமாகப் பாய்ந்து கொண்டிருக்கிறது அந்த வரலாற்றுப் புகழ்பெற்ற நதி. திரும்பும் பக்கமெல்லாம் சிற்பங்கள். சியம்ரீப் பல்வேறு புதிர்களைத் தனக்குள் கொண்டிருக்கிறது. அவற்றுள் ஒன்று, காடுகளுக்குள்  தனித்துவமான சிற்பங்கள் நிறைந்திருக்கும் ஆயிரம் லிங்க நதி என்றழைக்கப்படும்  சஹஸ்ரலிங்க நதி  (சஹஸ்ரம் – ஆயிரம்). நதி. படபடப்புடன் அருகில் செல்கிறோம்.

ஆற்றின் குறுக்கே சுமார் 250 மீட்டர் நீளத்திற்கு ஆற்றுப் படுகையில்  பாறைகளின் மேற்பரப்பின் மீது எண்ணற்ற சிவலிங்கங்கள் புடைப்புச் சிற்பங்களாகச் செதுக்கப்பட்டுள்ளன. தெள்ளத் தெளிவாக ஓடும் நதியின் அடியில் நதிப்படுகையில் நுணுக்கமாகச் செதுக்கப்பட்ட நூற்றுக்கணக்கான லிங்கங்கள்.  ஒரே வடிவில் வரிசை வரிசையாக…. ஜனவரியிலிருந்து ஜுன் மாதம் வரை மிகக் குறைந்த தண்ணீர் ஒடும் அல்லது தண்ணீர் இல்லாத காலத்தில் சிற்பங்கள் மிகத் தெளிவாகத் தெரியுமாம். நாங்கள் சென்றது அக்டோபர் மாதம் என்பதால் அளவான நீரில் எந்த நேரமும் நீரபிஷேகத்தால் மூழ்கிக் கிடந்தன அந்த அற்புத லிங்கங்கள்.

ஒரே சீராக பல்வேறு கட்டங்களுக்குள் ஆயிரம் லிங்கங்கள் பொதிந்திருக்கின்றன. லிங்கங்களைத் தவிர மற்ற கடவுளர்களின் சிற்பங்களும் ஆங்காங்கே காணப்படுகின்றன. ஒவ்வொருவரும் குழந்தைகளாகி ஓடி ஓடி கடவுளர்களைக் கண்டுபிடிக்கிறோம்(!). நதியின் இரு பக்கமும் பிரம்மா, விஷ்ணு, சிவன், கணபதி லட்சுமி, ராமர், அனுமன்  என்று கடவுளர் சிற்பங்கள் அழகாகச் செதுக்கப்பட்டுள்ளன. சிவன் தனது மனைவியுடன் அம்சமாக இருக்கிறார். காளைகள், பாம்பின் மீது சாய்ந்திருக்கும் விஷ்ணுவின் உருவம், தாமரை மீது அமர்ந்திருக்கும் பிரம்மாவின் உருவம்… இந்தச் செதுக்கல்கள் அனைத்தும் ஆயிரம் ஆண்டுகள் பழமையானவை என்கிறார் எங்களுடன் வந்த வழிகாட்டி.

இந்த ஆயிரம் லிங்கங்களும் ஏன்,  எப்பொழுது, யாரால், உருவாக்கப்பட்டது… புரியாத புதிர்தான். இப்படியொரு சிந்தனை எந்த மனிதனின் மனதில் உதித்தது? எதற்காக ஓடும் ஆற்றில் சிற்பங்களை உருவாக்க வேண்டும்? ஆயிரம் கேள்விகளுடன் வழிகாட்டியைப் பார்க்கிறேன். உடைந்த ஆங்கிலத்தில் விவரிக்கிறார். கபால் சியான் என்றால் கற்களால் ஆன  பாலம் என்று பொருள். பிரிட்ஜ் ஹெட் (Bridge Head) என்கிறார்கள் ஆங்கிலத்தில். இயற்கையான பாறைப்பாலம். இந்தக் குலன்மலை இந்துக்களின் மிகவும் புனிதமான மலை என்பதோடு கெமர் பேரரசின் வரலாற்றில் முக்கியப் பங்கு வகிக்கும் மலை என்கிற சிறப்பும் உண்டு. ஏனென்றால் ஜாவாவுக்கு நாடு கடத்தப்பட்ட இளவரசர் கி.பி. 802இல் காம்போஜத்திற்குத் திரும்பி வந்து, மகேந்திர பர்வதம் என்கிற மலை மேல் ஒரு நகரத்தை நிர்மாணித்து இரண்டாம் ஜெயவர்மன் என்கிற பட்டப்பெயருடன் முடிசூடிக் கொள்கிறார். தன்னை ஒரு தேவராஜா, இறையரசன் (கடவுளுக்குச் சமமானவர்) என்றெல்லாம் அறிவித்துக்கொண்டு கம்போடிய ராஜ்ஜியத்தை உருவாக்குகிறார்.     அவரிலிருந்துதான் கெமர் ராஜ்ஜியம் உருவாகியது. அப்போது அவர் மகேந்திர பர்வதத்தை (புனோம் குலன் மலை) தனது அதிகாரத்திற்கான இடமாக மாற்றிக் கொண்டதோடு,  33 வருடங்கள் மிகச் சிறப்பான ஆட்சி செய்கிறார். அன்றைய  காலக்கட்டத்தில் கம்போடியாவை அரசாண்ட மன்னர்கள் சைவம், வைணவம் இரண்டு மதங்களையும் கடைப்பிடித்திருக்கின்றனர். முதல் அரசனான இரண்டாம் ஜெயவர்மன் மிகப்பெரிய சிவ பக்தராக விளங்கினார். நாம்குலன் மலையில் பல சிவலிங்கங்களை உருவாக்கிய பெருமைக்குரியவர் அவரே என்கின்றன கல்வெட்டுகள். அந்த 1000 லிங்கங்களும் இன்னபிற சிற்பங்களும் அந்தப் பகுதியில் வாழ்ந்த துறவிகளால் செதுக்கப்பட்டதாக நம்பப்படுகிறது. 1059இல் இரண்டாம் உதயாதித்யவர்மன் இங்கு தங்கச் சிவலிங்கத்தை பிரதிஷ்டை செய்ததாகவும் கல்வெட்டுகளில் குறிப்பிடப்பட்டுள்ளது. சிவலிங்கங்களின் மீது பாய்ந்து செல்லும் ஆற்று நீர், நெல் வயல்களை அடைந்து அவற்றை மேலும் வளமாக்குவதோடு அந்நீரைப் பயன்படுத்தும் நாட்டு மக்களையும் ஆசிர்வதிக்கும் என்று நம்பப்படுகிறது. முடித்துவிட்ட வழிகாட்டி அவசரமாக முன்னே நடக்கிறார். அந்த மாலைப்பொழுதில் ஆதூரமாகத் தழுவிச்செல்லும் மென்மையான தென்றல் எட்டாம் நூற்றாண்டு நினைவுகளை நமக்குள் கடத்துகிறது.         “இதுமட்டுமல்ல… இன்னும் இருக்கிறது அதிசயம், நேரமாகிவிட்டது வாருங்கள்” என வழிகாட்டி அழைக்க, பிரிய மனமின்றி நதிப்படுகைகளிடமிருந்து விடைபெறுகிறோம்.

சில நிமிடப் பயணத்திற்குப் பிறகு ப்ரீ ஆங் தோம் என்னுமிடத்தை அடைந்தோம்.  நீள நீளமான படிகள், படிகளின் இருபுறமும் சிங்கங்கள், டிராகன்கள், பாம்புகளின் பிரம்மாண்டமான சிற்பங்கள், நாகர் பலகைகள் என விநோதமான சூழல்.  வாசலில் நம்மைச் சூழ்ந்துகொண்டு உள்ளூர் மூலிகைகள் விற்பவர்களைத் தவிர்த்து படிகளில் ஏறினோம்.  படிகளின் முடிவில் ஒரு மிகப்பெரிய பாறையின் அடிவாரத்தில் சிறிதும் பெரிதுமாகப் பல புத்தர் சிலைகள் வைக்கப்பட்டுள்ளன. மற்றொரு புறத்தில் நாங்கள் பார்க்க வந்த 26 அடி உயரமுடைய  ஒரு பெரிய புத்தர் நிர்வாண நிலையில் (சாய்ந்த நிலையில்) (நிர்வாணம் – துன்பம் மற்றும் மறுபிறப்பில் இருந்து விடுபடும் நிலை) புன்னகைக்கிறார். இந்தப் புத்தர் சிலை 16ஆம் நூற்றாண்டில் கட்டப்பட்டது என்கிறார் வழிகாட்டி. எதையும் காதில் வாங்காமல் புத்தனையே கண்கள் விரிய பார்த்தேன். மற்றவர்கள் ஆங்காங்கே நகர, நான் மட்டும் அவன் புன்னகையில் எதையோ தேடினேன். எங்கு புத்தன் சிலை கண்டாலும் எனக்குள் எழும் கேள்வி அன்றும் எழுகிறது. ஏன்… ஏன்….ஏன்… வந்தாய், மனைவியை விட்டு… குழந்தையை விட்டு? வழக்கம்போல புத்தன் பதிலளிக்காமல் புன்னகைக்கிறான்.

குலன் மலையில் மிகவும் மதிக்கப்பட்டு வணங்கப்படும் புத்தர் சிலை.  நிர்வாணத்தை அடைந்த நிலையில் சாவகாசமாகக் கையைத் தலைக்குக் கொடுத்து படுத்திருக்கும் புத்தர் சிலை. இது  கெமர் மக்களின் புனிதமான வழிபாட்டுத் தலமாக இருப்பதால் வார இறுதி நாட்களில் சுற்றுலாப் பயணிகளின் கூட்டத்தோடு உள்ளூர்க் கூட்டமும் இருக்குமாம். நாங்கள் சென்றது வார நாள் என்பதால் புத்தன் பெருங்கூட்டமின்றி தனித்திருந்தான்.  இந்த வளாகத்திற்குள் புத்தருடன் சிவன், விநாயகர் என இந்துக் கடவுளர்களும் எந்தவிதச் சண்டையுமின்றி சங்கமித்திருக்கிறார்கள். அருகிலிருந்த மேடையில் உள்ளூர்க் கலைஞர்கள் வாத்தியக்கருவிகளால் இனிய இசையை வழங்கிக் கொண்டிருக்கிறார்கள். சிவனுக்கும் விநாயகருக்கும் வருடாந்திரத் திருவிழாவும் நடத்தப்படுமாம். “ஐந்து மணிக்குள் இந்தப் பகுதியை விட்டு இறங்க வேண்டும். இன்னும் பல அதிசயங்கள் இந்தக் குலன் மலைக்குள் ஆங்காங்கே ரத்தினங்களாக மறைந்து கிடந்தாலும், ஒரே ஓர் அதிசயம் மட்டும் காட்டுகிறேன் வாருங்கள் என வழிகாட்டி அழைக்க அவசரமாக வண்டியை நோக்கி நகர்ந்தோம்.

சில நிமிடங்களில் ஓர் அழகான நீர்வீழ்ச்சியை அடைந்தோம்.  குலன் நீர் வீழ்ச்சி. முதல் நிலை 5 மீட்டர் உயரத்தில் இருந்தும், இரண்டாம் நிலையில் 20 மீட்டர் உயரத்தில் இருந்தும் தண்ணீர் விழுகிறது. அருவிக்கு அருகில் அழகான ஊஞ்சல் மலர்களால் அலங்கரிக்கப்பட்ட நிலையில், அந்த  லவ் சீட் பார்த்தவுடன், அருவிக்கு அருகில் கார்த்திக், ரேவதியை ஊஞ்சலில் வைத்து ஆட்டியவாறே பாடிய தமிழ் சினிமா நினைவுக்கு வந்தது. அருவியில் குளிக்கலாம், ஊஞ்சலில் ஆடலாம்… பாடலாம்…. ஆனால் பார்க்கப் பார்க்கத் திகட்டாத அந்த இயற்கை வனப்பை கண்களால் விழுங்கவும் ஊஞ்சலில் அமர்ந்து ஒளிப்படம் எடுக்கவுமே எங்களுக்கு  நேரம் இருந்தது.

குலன் மலையிலிருந்து அறைக்குத் திரும்பிக் கொண்டிருந்தோம். “எப்படி இருந்த குலன் மலை…. இப்படி ஆயிடுச்சே’ என வழிகாட்டி விவரித்துக் கொண்டிருந்தார். கெமர் வரலாற்றைத் தொடக்கிவைத்த வளமிக்க குலன்மலை மெல்ல மெல்ல தன் செல்வாக்கை இழக்கத் தொடங்கியது. கம்போடியா போரின் போது கொள்ளையடித்தல், காலநிலை மாற்றம் போன்ற காரணங்களால் மகேந்திரா பர்வதத்தின் அழிவுகள் தொடங்கியது. கெமர் ஆட்சியின் சரிவைத் தொடர்ந்து புனோம் குலனில் சாய்ந்த புத்தரைத் தவிர அனைத்தும் கைவிடப்பட்டன. பலநூறு சிலைகள் புனோம் பென்னுக்குக் கொண்டு செல்லப்பட்டன. சில நூறு சிலைகள் தனியாரால் கொள்ளையடிக்கப்பட்டன. மனிதனால் பெயர்த்தெடுக்க முடியாத கலைச் செல்வங்கள்  காடுகளுக்குள் மறைந்தன.

1969இல் கம்போடியாவின் வளமான கலாச்சாரப் பாரம்பரியத்தால் ஈர்க்கப்பட்ட இனவியலாளர் ஜீன் போல்பெட் காடுகளுக்குள் சுற்றியலைந்த போது இந்த அற்புதத்தைக் கண்டுபிடித்து உலகின் கண்களுக்கு விருந்தாக்குகிறார். ஆனால் கெமர் ரூஜ் உள்நாட்டுப் போரின் காரணமாக மீண்டும் உலகின் கண்களிலிருந்து குலன் மலை துண்டிக்கப்பட்டது. அதன்பிறகு 2008ஆம் ஆண்டில் முறைப்படி அகழ்வாராய்ச்சிகள் தொடங்கப்பட்டு பார்வையாளர்கள் அனுமதிக்கப்படுகின்றனர்.

இந்தப் பூமி  இன்னமும் கண்டுபிடிக்கப்படாத மர்மங்களைத் தனக்குள் கொண்டு நம்மை  ஆச்சரியப்படுத்தத் தயங்குவதில்லை, அதைக் கண்டடையும் தாகமும்  மனிதனுக்குத் தீருவதாக இல்லை. அடர்ந்து விரிந்து கிடக்கும் அந்தக் குலன் மலைத் தொடருக்குள் இன்னும் எத்தனையெத்தனை அதிசயங்கள் புதைந்து கிடக்கின்றனவோ? அதை எந்த ஜீன்போல்பெட் வந்து கண்டறியப் போகிறாரோ… நாங்கள் கீழே இறங்க… அந்த மலைத்தொடர் உயர்ந்து கொண்டே சென்றது மர்மப் புன்னகையுடன்!

(தொடரும்)

ரமாதேவி ரத்தினசாமி

எழுத்தாளர், முன்னாள் அரசுப்பள்ளி ஆசிரியர். பணிக்கென பல விருதுகள் வென்றவர். இவர் எழுதி வெளிவந்துள்ள ‘கனவுகள் மெய்ப்படட்டும்’ கட்டுரைத் தொகுப்பு பரவலாக கவனம் பெற்றது. 2014, 2015ஆம் ஆண்டுகளில் ஐ நா சபையில் ஆசிரியர் பேச்சாளராகக் கலந்துகொண்டு உரையாற்றியுள்ளார். ‘அடுக்களை டூ ஐநா’ தொடரில் அவரது ஐ நா அனுபவங்களை நகைச்சுவையுடன் விவரித்திருக்கிறார். ‘இலங்கை – எழுதித் தீராச் சொற்கள்’ என்கிற பெயரில் இலங்கை அனுபவங்களையும் ‘என்ன செய்கிறது ஐநா – பெண் கல்வித் தடைகள் உடைபடும் தருணங்கள்’ என்கிற கட்டுரைத் தொடர்களையும் நம் வலைதளத்தில் எழுதினார். இம்மூன்று தொடர்களும் நூலாக்கம் பெற்று, ஹெர் ஸ்டோரீஸ் வெளியீடுகளாக வெளிவந்து பாராட்டுகளைப் பெற்றுள்ளன.

‘போர்களின் தேசத்தில்’ என்ற பயணக் கட்டுரை நூல் அவரது பயண அனுபவங்களைப் பேசுகிறது. இது தவிர, ‘பிள்ளையாரும் 22 நண்பர்களும்’ என்ற இளையோர் நாவலையும் ‘குட்டிப் பெண்களின் பெரிய கதைகள்’ என்ற சிறார் பற்றிய சிறுகதைத் தொகுப்பையும் எழுதியுள்ளார். பயணக் கட்டுரைகள், சிறுகதைகள், சிறார் எழுத்து, கல்வியியல் கட்டுரைகள் என பல தளங்களில் எழுதும் ஆற்றல் மிக்கவர். ‘கவின்மிகு கம்போடியா- தொல்நகரில் ஓர் உலா’ இவர் ஹெர் ஸ்டோரீஸ் வலைதளத்தில் எழுதும் ஆறாவது தொடர் ஆகும்.

Exit mobile version