பொருள் 7
உணரும் திறனும் சிந்திக்கும் ஆற்றலும் கொண்டிருக்கும் உயிரினங்களில் மிக மோசமாக நடத்தப்படும் உயிரினம் எது தெரியுமா? பெண் என்கிறார் மெடியா (Medea). சூரியக் கடவுளின் பேத்தியான மெடியா, தன் கணவன் ஜேசன் மற்றும் குழந்தைகளுடன் மகிழ்ச்சியாகத்தான் வாழ்ந்து வந்தாள், மற்றொரு பெண் குறுக்கிடும் வரை. ஜேசன் அந்த இன்னொரு பெண்ணின் மீது காதல் கொண்டு அவளுடனே சென்றுவிட, தன் கால்களுக்குக் கீழே தரை நழுவிச் செல்வதையும் தலைக்கு மேலே வானம் இடிந்து விழுவதையும் உணர்கிறாள் மெடியா.
இதோடு வாழ்க்கை முடிந்தது என்று நினைத்தவள் பிறகு சுதாரித்துக் கொள்கிறாள். தன் கணவன், தன் வாழ்வில் குறுக்கிட்ட பெண், தன் குழந்தைகள் என்று அனைவரையும் கொல்கிறாள் மெடியா. கிரேக்கத் தொன்மக் கதைகளில் இடம்பெறும் மெடியாவை 2 ஆயிரத்து 500 ஆண்டுகளுக்கு முன்பு யூரிபிடஸ் என்னும் கவிஞர் புகழ்பெற்ற நாடகம் ஒன்றில் பதிவு செய்து வைத்தார். இந்த மெடியா பெண்ணிய சிந்தனையோட்டத்தின் தாய் என்று இன்றும் பலரால் போற்றப்படுகிறார்.
‘என்ன இருந்தாலும் அவள் இவ்வளவு பேரைக் கொன்றிருக்கக்கூடாது’ என்னும் இன்றைய சமூக மதிப்பீடுகளைக் கொண்டு மதிப்பிடாமல், அவள் வாழ்ந்த காலத்தில் மெடியாவைப் பொருத்தி ஆராய்ந்தால், அவள் மற்றவர்களிடம் இருந்து எப்படி மாறுபட்டிருந்தாள் என்பது தெரியும். எல்லாப் பெண்களையும் போல் மெடியா ஓர் ஆணால் பாதிக்கப்படுகிறாள். ஆனால், தனக்கு விதிக்கப்பட்டது இதுதான் என்று அவள் இருந்துவிடவில்லை. ஓர் ஆண் கோபப்படுவதைப் போல அவளும் கோபப்படுகிறாள்.
‘என்னை அழித்தவனை நானும் அழிப்பேன்’ என்று ஓர் ஆணைப் போலவே சூளுரைக்கிறாள். தனக்கு அநீதி இழைக்கப்பட்டிருக்கிறது என்பதைத் தெளிவாக உணர்ந்திருந்த மெடியா அந்த அநீதியைத் தன்னந்தனியாக எதிர்கொள்கிறாள். மெடியா முதலில் எதிர்பார்த்தது நீதியை. அது கிடைக்காத பட்சத்தில் துணிந்து பழி தீர்த்துக் கொண்டாள். பிறகு ஏதென்ஸ் சென்று அங்கிருந்த மன்னரை மணந்து கொண்டாள் மெடியா.
சமூகத்தில் உள்ள மற்ற ‘நல்ல பெண்கள்’ போல இல்லாமல் மெடியா தனக்கான மதிப்பீடுகளைத் தானே உருவாக்கிக்கொண்டாள். தன் கணவனுக்கு ஒரு நல்ல மனைவியாக, தன் குழந்தைகளுக்கு ஒரு நல்ல அம்மாவாக, சமூகத்துக்கு ஒரு நல்ல பெண்ணாக மெடியாவால் இருக்க முடியவில்லை. தன்னைப் பற்றி நிதானமாகவும் தீர்மானமாகவும் சிந்தித்து சுயமாக ஒரு முடிவெடுக்கிறாள். உண்மையில் அவள் செயல்கள் அல்ல… அவள் சிந்தனைகளே அவள் வாழ்ந்த சமூகத்துக்கு ஆபத்தானவையாகத் தெரிந்தன. மெடியாவை அவர்கள் புறக்கணித்ததற்குக் காரணம் அதுதான்.
‘கணவனுக்கும் மனைவிக்கும் இடையில் பிரிவு ஏற்பட்டால், அது ஏன் மனைவியை மட்டும் பாதிக்க வேண்டும்? பாதிப்புகூட ஏன் இருவருக்கும் சமமாக இருப்பதில்லை?’ என்று ஓரிடத்தில் கேட்கிறாள் மெடியா. ‘இன்னொரு குழந்தை பெற்றுக் கொள்வாயா’ என்று கேட்கப்பட்டபோது, மெடியா அளித்த பதில் ஆண்களை மட்டுமல்ல… பெண்களையும்கூட அதிர வைத்தது. ‘சீறிப்பாயும் ஈட்டிகளுக்கு நடுவில் நின்று போரிட வேண்டும் என்று சொன்னால் ஒருமுறையல்ல, மூன்று முறைகூட நின்று போரிடுவேன். இன்னொரு குழந்தை மட்டும் வேண்டவே வேண்டாம்!’ தன் காதலியை மெடியா கொன்று விட்டாள் என்பதை அறிந்ததும் ஜேசன் சீறி விழுந்தான்.
‘இன்னொரு பெண்ணை காதலித்த பாவத்துக்காக அவளைக் கொல்லவும் துணிவாயா நீ?’ – மெடியா அமைதியாகப் பதிலளித்தாள்… ‘நீ செய்ததை நான் சாதாரணமாக எடுத்துக்கொள்ள வேண்டும் என்று எதிர்பார்த்தாயா? மன்னிக்கவும்… நான் நீ நினைக்கும் பெண் அல்ல.’ ஜேசனுக்கும் பிறகுதான் அது தெரிந்தது. வாய் விட்டு வருந்தினான். ‘ஓ, நான் ஒரு பெண்ணைத் திருமணம் செய்து கொள்ளவில்லை. ஒரு புலியை மணம் செய்து கொண்டிருக்கிறேன். அவள் பெண்ணே அல்ல… அழிவு சக்தி.’
‘ஏன் உன் குழந்தைகளைக் கொல்கிறாய்’ என்று கேட்கப்பட்டபோது, ‘என் கணவனைக் காயப்படுத்தவே’ என்று பதிலளிக்கிறாள் மெடியா. அப்போது அவள் கண்களில் கண்ணீர் தேங்கியிருந்தது. கொன்ற பிறகு அவள் தன் குழந்தைகளை ஆசீர்வதித்தாள். ‘உன் தந்தையால் அழுக்கடைந்துபோன இந்த உலகில் நீங்கள் இருக்க வேண்டாம், இன்னொரு உலகில் மகிழ்ச்சியாக இருங்கள்…’
எல்லாம் முடிந்த பிறகு தனிமையில் மெடியா சிந்தித்தாள். என் குழந்தைகளை கொன்றது தவறா? அவர்களுடைய தந்தையை தண்டிப்பதற்குப் பதில் அவர்களையே நான் தண்டித்துவிட்டேனா? அல்லது என்னையே இன்னொருமுறை நான் தண்டித்துக்கொண்டு விட்டேனா? கலகக்கார மெடியாவின் உள்ளே ஒளிந்து கொண்டிருந்த இந்தக் கருணை முகத்தை வெகு சிலரே தரிசித்தனர். அப்படி தரிசித்தவர்கள் அனைவருக்கும் மெடியாவைப் பிடித்துப்போனது.
அன்பும் அருளும் கருணையுமாக மட்டுமே கடவுள்கள் இருக்க வேண்டியதில்லை. பல வேளைகளில் மெடியாக்களும் தேவைப்படுகிறார்கள். ஜேசன்களை வீழ்த்த!
தொடரும்…
தொடரின் முந்தைய பகுதி:
படைப்பு:
மருதன்
எழுத்தாளர், வரலாற்றாளர். சே, ஹிட்லர், ஃபிடல் காஸ்ட்ரோ, திப்பு சுல்தான், மண்டேலா, மாவோ, ஸ்டாலின் ஆகிய உலகத் தலைவர்களின் வாழ்க்கை வரலாறுகளை எழுதியுள்ளார். இவரது ஹிட்லரின் வதைமுகாம்கள், முதல் உலகப் போர், இரண்டாம் உலகப்போர், ஷெர்லக் ஹோம்சால் தீர்க்க முடியாத புதிர், துப்பாக்கி மொழி, திபெத்- அசுரப் பிடியில் அழகுக்கொடி, ஒரு புத்திரனால் கொல்லப்படுவேன் ஆகிய நூல்கள் கவனம் ஈர்த்தவை. பிரபல தமிழ் இதழ்களில் தொடர்கள் எழுதிவருகிறார். இந்து தமிழ் திசை மாயா பஜார் குழந்தைகள் இணைப்பிதழுக்கும் கட்டுரைத் தொடர் எழுதி வருகிறார்.