Site icon Her Stories

சூரியனாக மாற முடியாத நிலவு

பொருள் 34 : நீதி

ஒரு பெண் பாலியல் வன்முறைக்கு ஆளானால் அதை நிரூபிக்கவேண்டியது அவளுடைய முழுப் பொறுப்பு என்கிறது கிங் வம்சத்து சீனாவில் 1646ம் ஆண்டு கொண்டுவரப்பட்ட ஒரு சட்டம். அதன்படி, பாலியல் பலாத்காரத்துக்கு ஆளான ஒரு பெண் இரண்டு காரியங்களை உடனடியாகச் செய்தாகவேண்டும். நான் பாலியல் வன்முறைக்கு ஆளாக்கப்பட்டேன்; அதற்கு எந்த வகையிலும் நான் காரணமல்ல என்பதை அவள் தெளிவுபடுத்தவேண்டும். இரண்டாவதாக, நான் என்னால் முடிந்த அளவு உயிரைக் கொடுத்து போராடினேன்; அதை மீறிதான் இந்தக் கொடுமை நடந்திருக்கிறது என்று அவள் நீதிபதிகளிடம் நிரூபித்தாகவேண்டும்.

பெரும்பாலான சந்தர்ப்பங்களில், பாலியல் புகாரைச் சுமந்துசெல்லும் ஒரு பெண்ணே முதன்மைக் குற்றவாளியாகக் கருதப்பட்டாள். அவள் மீது யாருக்கும் பரிதாபமோ கருணையோ அக்கறையோ பிறக்காது. மாறாக, சமூகம் அவளைத்தான் குற்றவாளிக்கூண்டில் கொண்டுவந்து நிறுத்தும். அவளைத்தான் குறுக்கு விசாரணை செய்யும். யார், எங்கிருக்கிறாள், என்ன செய்கிறாள், குடும்பப் பின்னணி என்ன என்பதையெல்லாம் எடைபோடுவார்கள். புகார் அளிக்கும் அளவுக்கு அந்தப் பெண்ணுக்குத் தகுதி இருக்கிறது என்பதை உறுதிசெய்துகொண்ட பிறகுதான் அவள் தரப்பைக் கேட்கவே தொடங்குவார்கள். சம்பந்தப்பட்ட பெண் ‘நடத்தை சரியில்லாதவள்’ என்றோ ‘மதிப்பில்லாதவள்’ என்றோ கருதப்பட்டால் அவள் போதுமான நிரூபணங்களை வழங்கினாலும் வழக்கு தள்ளுபடி செய்யப்பட்டுவிடும். அடக்கமான, நன்னடத்தைகள் கடைபிடிக்கும் பெண்ணாக இருந்தால் மட்டுமே ஒருவர்மீது குற்றச்சாட்டைக்கூடச் சுமத்தமுடியும். அதற்குப் பிறகு மேலே சொன்னபடி அவள் தனக்கு இழைக்கப்பட்ட கொடுமையைத் தக்கமுறையில் நிரூபிக்கவேண்டும்.

பாதிக்கப்பட்ட ஒரு பெண்ணை அவமானப்படுத்துகிறோம் என்ற உணர்வே இல்லாமல் கேள்விகளை வீசியெறிவார்கள். உதாரணத்துக்குச் சில. அதுவரை நீ என்ன செய்துகொண்டிருந்தாய்? ஏன் உன் உடலில் போதுமான காயங்களோ ஊனங்களோ காணப்படவில்லை? நீ முழு மனதுடன் அந்த ஆணுடன் சண்டையிடவில்லையா என்ன? ஏன் தற்கொலை எண்ணம் உனக்கு ஒருமுறைகூட ஏற்படவேயில்லை? இது உனக்கே அசாதாரணமானதாகத் தோன்றவில்லையா?

பிறகு சம்பந்தப்பட்ட பெண்ணின் ஆடைகள் கிழிந்திருக்கின்றவனா என்று பரிசோதிக்கப்படும். அவள் தன் மானத்தைக் காக்க கூக்குரல் இட்டாளா என்பது ஊர்ஜிதப்படுத்தப்படும். அப்படிக் குரலெழுப்பியிருந்தால் அதைக் காதால் கேட்ட அக்கம்பக்கத்தினர் இருக்கவேண்டும் என்றும் அவர்களில் ஒருவராவது ஆஜராகி சாட்சி சொல்லவேண்டும் என்றும் எதிர்பார்க்கப்படும். ஆடை கிழிந்திருக்கவில்லை, சாட்சியும் இல்லை என்றால் நல்ல குடும்பத்தைச் சேர்ந்த பெண்ணாகவே இருந்தாலும் அவள் மனு நிராகரிக்கப்படுவதோடு அவள் மீதே சந்தேகம் திரும்பிவிடும். பாலியல் பலாத்காரத்துக்கு ஆளான அந்தப் பெண்ணே இப்போது பாலியல் குற்றம் இழைத்த குற்றவாளியாக மாற்றப்பட்டுவிடுவாள். நடைபெற்ற குற்றத்தில் அவளுக்கும் பங்கு உண்டு என்று முடிவு செய்யப்படும். ‘முறையற்ற உறவில்’ ஈடுபட்ட காரணத்துக்காக அவளுக்குத் தண்டனையும் விதிக்கப்படும்.

சாட்சியும் கிடைத்து, எல்லா எதிர்பார்ப்புகளையும் பூர்த்தி செய்து, எல்லா நிரூபணங்களும் உண்மையே என்று ஏற்றுக்கொள்ளப்படுவதாக வைத்துக்கொள்வோம். அப்போது அந்தப் பெண்ணுக்கு நீதி வழங்கப்படுமா? உறுதியாகச் சொல்ல முடியாது. காரணம் குற்றம் சாட்டப்பட்ட ஆணும் அதே நீதிமன்றத்துக்கு வரவழைக்கப்படுவான். அவனுடைய தரப்பு விளக்கமும் கேட்டுப் பெறப்படும். நான் குற்றமிழைக்கவில்லை, நான் ஓர் அப்பாவி என்றுதான் அந்த ஆண் எப்படியும் சாதிக்கப்போகிறான். சரி, இப்போது நீதிபதிகள் என்ன செய்வார்கள்? ஆணின் வாதத்தையே ஏற்றுக்கொள்வார்கள். ஏனென்றால் ஒரு பெண்ணின் வார்த்தைகளைவிட ஒர் ஆணின் வார்த்தைகள் பலமிக்கவை. ஒரு பெண் சொல்வதை வைத்துப் போகிறபோக்கில் ஓர் ஆணைத் தண்டித்துவிடமுடியுமா என்ன? இது தவறு என்றோ அநீதி என்றோ அன்றைய சமூகம் கருதவில்லை. இதுவே நடைமுறை என்றும் இதுவே நீதி என்றும் அவர்கள் நம்பினார்கள். நீதிபதிகள் மட்டுமல்ல மக்களும்தான்.

எனில், பாதிக்கப்பட்ட பெண் மேற்கொண்டு என்ன செய்யவேண்டும்? ஒரு வழி இருக்கிறது. தற்கொலை. ‘அசுத்தமான உடலை’ வைத்துக்கொண்டு தன் எஞ்சிய வாழ்வை அவள் கடப்பதென்பது மரணத்தைக் காட்டிலும் கொடுமையானது என்பதால் சட்டத்தால் கைவிடப்பட்ட பெண்கள் தற்கொலையை நாடுவது வழக்கமாக இருந்தது என்கின்றன இந்தக் காலகட்டத்து சமூகச் சூழலை ஆராயும் நூல்கள். பலர் சட்டத்தின் உதவியை நாடுவதற்குமுன்பே தற்கொலையைத் தேர்ந்தெடுத்திருக்கிறார்கள். எப்படியும் நீதி கிடைக்கப்போவதில்லை. பிறகு எதற்காகப் பாலியல் குற்றச்சாட்டுடன் நீதிமன்றத்தின் படிகளை ஏறவேண்டும்? எதற்காக ஆயிரத்தெட்டு கேள்விகளுக்குப் பதிலளிக்கவேண்டும்? எங்கிருந்து போய் சாட்சிகைளைக் கண்டுபிடித்து கூட்டிப்போகமுடியும்? இவ்வளவும் செய்தாலும் என் மானமும் குடும்பத்தின் மானமும் போகப்போவது உறுதி என்னும் நிலையில் நான் ஏன் வாழவேண்டும?

பலாத்காரத்துக்கு ஆளாகும் பெண்கள் தற்கொலை செய்துகொள்வதைச் சமூகம் பெரிய மனம் கொண்டு ஏற்றுக்கொண்டது. தற்கொலை செய்துகொண்ட பெண்களை மரியாதையுடன் போற்றும் வழக்கமும் இருந்திருக்கிறது. அதே போல், பாலியல் பலாத்காரத்தை எதிர்த்துப் போராடி உயிரைவிடும் பெண்களையும் கிங் காலகட்டத்துச் சமூகம் மரியாதையுடன் வணங்கியிருக்கிறது. தன்னுடைய மகத்தான மரணத்தின்மூலம் தன்னுடைய மானத்தையும் தன் குடும்பத்தின் மானத்தையும் அவள் மீட்டெடுத்துவிட்டதாக அவர்கள் கருதினார்கள். மானத்தை இழப்பதைவிட உயிரைவிடுவது மேலானது என்று பெண்களுக்குப் போதிக்கப்பட்டது. ஒரு பெண்ணின் விரும்பத்தக்க பண்புகளில் இப்படி மானத்துக்காக உயிரை விடுவது முக்கியமான இடத்தை வகிக்கிறது.

கிங் வம்சத்துப் பெண்கள்

‘அசுத்தமடைவதற்கு முன்பே’ தற்கொலை செய்துகொள்ளும் பெண்களுக்கு இன்னமும் மேலான இடம் அளிக்கப்படுகிறது. அதாவது, ஓர் ஆண் தன்னை அடைய விரும்புகிறான் என்பதை அவனுடைய செய்கைகளைக் கொண்டு முன்கூட்டிய உணர்ந்து அவனிடமிருந்து தப்பிக்க ஒரு பெண் தற்கொலையை நாடும்போது அவளுடைய வீரமும் தீரமும் சமயோசித அறிவும் பாராட்டப்படும். எவ்வளவு விழிப்புடன் செயல்பட்டுத் தன் மானத்தை அவள் காத்துக்கொண்டாள் பார்த்தாயா என்று பேசிப் பேசி மாய்ந்துபோவார்கள். மொத்தத்தில், எல்லாப் பெண்களுக்கும் தற்கொலையே சிறப்பான தீர்வாக இருந்திருக்கிறது. 1646ம் ஆண்டு சீனச் சட்டமும் ஒரு வகையில் பெண்களைத் தற்கொலைக்கே தூண்டிவிடுகிறது என்று சொல்லலாம்.

பொருள் 35: யூ

சிமா குவாங்

சாங் வம்சத்து சீனாவைச் சேர்ந்த புகழ்பெற்ற வரலாற்றாசிரியர், சிமா குவாங் (1019 1086). ஆண்களும் பெண்களும் கடைபிடிக்கவேண்டிய நீதிநெறிகளை இவர் வகுத்து அளித்திருக்கிறார். அதற்கான முழுத் தகுதியும் அவருக்கு இருக்கிறது என்று சீனர்கள் கருதினார்கள். அதற்கோர் உதாரணத்தையும் அவர்கள் சொல்வார்கள். சிமா குவாங்குக்கு ஆண் வாரிசு இல்லை. அதனால் கலக்கமடைந்த அவர் மனைவியும் அவர் தங்கையும் சேர்ந்து மற்றொரு பெண்ணை வீட்டுக்கு அழைத்து வந்தார்கள். ஆனால், சிமா குவாங் அந்தப் பெண்ணைத் திரும்பிக்கூடப் பார்க்கவில்லை. அவரை வழிக்குக் கொண்டுவர அவர் மனைவியை ஊருக்கு அனுப்பிவைத்தார்கள். இப்போது வீட்டில் அந்தப் புதிய பெண் மட்டுமே இருந்தார். ஒரு நாள் அந்தப் பெண் தன்னை நன்றாக அழகுபடுத்திக்கொண்டு தேநீருடன் அவர் அறைக்குச் சென்றார். சிமா குவாங் கோபத்துடன் சீறிவிட்டார். ‘ எஜமானி வீட்டில் இல்லாதபோது நீ இங்கே என்ன செய்துகொண்டிருக்கிறாய்?’

குடும்ப வாழ்க்கைக்கான கட்டளைகள் என்னும் தலைப்பில் அவர் நூலொன்றை எழுதினார். ஆண்களும் பெண்களும் எப்படி வாழவேண்டும், அவர்கள் வளர்த்துக்கொள்ளவேண்டிய பண்புகள் என்னென்ன, அவர்களுடைய கடமைகள் என்னென்ன போன்றவற்றை அவர் தன்னுடைய நூலில் தொகுத்துள்ளார். உலகம் குடும்பங்ளால் ஆனது. ஒவ்வொரு குடும்பமும் ஜியா என்று அழைக்கப்படும். ஒரு குடும்பத்தின் அடிப்படை ஒற்றுமை. அப்பா, தாத்தா, சித்தப்பா என்று தொடங்கி குடும்பத்தின் அனைத்து உறுப்பினர்களும் ஒற்றுமையாக ஓரிடத்தில் சேர்ந்து வாழவேண்டும். வீடு, தோட்டம், நிலம் ஆகியவற்றை உள்ளடக்கிய சொத்து அனைவருக்கும் பொதுவானதாக இருக்கவேண்டும். வீண் ஆடம்பரம், செலவுகள் இன்றி சிக்கனமாக குடும்பத்து உறுப்பினர்கள் இருக்கவேண்டும் என்கிறார் சிமா குவாங்.

ஆண்களின் உலகமும் பெண்களின் உலகமும் தனித்தனி என்றாலும் ஒரு ஜியாவில் இந்த இரு உலகும் இணைந்திருக்கின்றன. ஆண்களை மையமாகக் கொண்டு இயங்கும் குடும்பத்தில் பெண்கள் தங்களை இணைத்துக்கொள்கிறார்கள். மனைவிகளாக, சகோதரிகளாக, மகள்களாக. இந்தப் பெண்கள் அந்தக் குடும்பத்தின் போக்கைத் தீர்மானிப்பவர்களாக மாறுகிறார்கள். ஆண்களை அவர்களால் பெருமளவில் கட்டுப்படுத்தமுடியும். அவர்களுடைய சிந்தனைகளை வசப்படுத்தமுடியும். ஆண்களைப் போலவே பெண்களால் ஒரு குடும்பத்தை வளர்க்கவோ சிதைக்கவோ முடியும். ஒரு ஜியா மகிழ்ச்சியாக இருக்க ஆண்களைப் போலவே பெண்களின் பங்களிப்பும் அவசியம். ஆண்களைப் போல் பெண்களும் சில குறிப்பிட்ட குணநலன்களைப் பெற்றிருக்கவேண்டும் என்கிறார் சிமா குவாங். இவை இருந்தால்தான் ஒரு ஜியா சீராகச் செயல்படும்.

ஒரு சம்பவத்தை அல்லது கதையை விவரிக்கிறார் சிமா குவாங். யூ என்றொரு பெண் இருந்தாள். அவள் தன் 14வது வயதில் ஹான் ஜி என்பவனைத் திருமணம் செய்துகொண்டாள். அவளுக்கு 18 வயது ஆனபோது ஹான் ஜி இறந்துவிடுகிறான். யூ துக்கத்தில் மூழ்கிப்போனாலும் தன் கணவனுக்கான சடங்குகள் அனைத்தையும் முன்னின்று நடத்துகிறாள். துக்கத்தில் இருக்கும் ஒரு பெண் என்னென்ன நடைமுறைகளைப் பின்பற்றவேண்டுமோ அவை அனைத்தையும் பின்பற்றுகிறாள். சடங்குகள் முடிவடைகின்றன. யூவின் பெற்றோர் அவளை இன்னொரு திருமணம் செய்துகொள்ளுமாறு கேட்டுக்கொள்கிறார்கள். உன் இளமையை எதற்காக வீணடிக்கவேண்டும்? நீயும் மற்ற பெண்களைப் போல் திருமணம் செய்துகொள், குழந்தை பெற்றுக்கொள், மகிழ்ச்சியாக இரு என்று அறிவுறுத்துகிறார்கள்.

ஆனால், யூ மறுத்துவிடுகிறாள். கணவனை இழந்த பெண் கடைபிடிக்கவேண்டிய ஒழுக்கத்தை என் வாழ்நாள் முழுக்க நான் கடைபிடிப்பேன் என்று கண்டிப்புடன் சொல்லிவிடுகிறாள். அன்றுமுதல் அவள் தன்னை அழகுபடுத்திக்கொள்ளவில்லை. வீட்டுக்கு யாராவது விருந்தினர்கள் வந்தால்கூட அவள் கதவைத் திறந்து அவர்களை வரவேற்கவில்லை. வீட்டுக்குள்ளேயே அடைந்துகிடந்தாள். தன் வாழ்நாளின் இறுதிவரை யூ மாமிச உணவை விலக்கிவைத்து மரக்கறி மட்டுமே எடுத்துக்கொண்டாள். பூ வேலைப்பாடுகள் இல்லாத எளிய ஆடைகளையே உடுத்திக்கொண்டாள். இசையைக் கேட்பது ஒரு வகையான கொண்டாட்டம் என்பதால் தன் கணவன் இறந்த தினம் தொடங்கி இசையைக் கேட்பதையே அவள் நிறுத்திக்கொண்டாள்.

இத்தனைக்கும் யூ பெரிய இடத்து குடும்பத்தைச் சேர்ந்தவள். பணக்காரி. இருந்தாலும் தன் பெற்றோரின் அறிவுரைகளை மட்டுமின்றி பெற்றோரையும் சேர்த்தே புறக்கணித்துவிட்டுத் தன் கணவனின் குடும்பத்துடன் ஒட்டிக்கொண்டுவிடுகிறாள். திருமணத்துக்குப் பிறகு ஒரு பெண் தன் தாய்வீட்டுத் தொடர்புகளை முறித்துக்கொள்ளவேண்டும் என்றும் கணவன் இறந்துபோனாலும் புகுந்த வீட்டைவிட்டு வெளியேறக் கூடாது என்றும் பெரியோர்கள் சொல்லியிருப்பதால் யூ அந்த விதிகளைக் கடைபிடிக்கிறாள். அதனாலேயே யூ அவளுடைய சமூகத்தின் மதிப்பையும் மரியாதையையும் சம்பாதித்துக்கொண்டாள்.

இந்தக் கதை அல்லது நிஜ சம்பவம் மூலம் சிமா குவாங் ஒரு பெண்ணின் மதிக்கத்தக்க சில பண்புகளைத் தெளிவாக முன்னிறுத்துகிறார். ஓர் ஆணின் பண்புகளும் பெண்ணின் பண்புகளும் வெவ்வேறானவை என்கிறார் அவர். ஆண் என்பவன் சொர்க்கம் என்றால் பெண் என்பவள் பூமி. ஆண் சூரியன் என்றால் பெண் நிலவு. ஆண் யாங் என்றால் பெண் யின். சொர்க்கம் மேலே இருக்கிறது, பூமி தரையில். ஓர் ஆண் கற்பனையில் திளைத்திருக்கலாம் ஆனால், ஒரு பெண் எப்போதும் தன் கால்களை நிலத்தில் ஆழமாகப் புதைத்து வைத்திருக்கவேண்டும். நடைமுறை சாத்தியங்களை மட்டுமே அவள் பின்பற்றவேண்டும். சொர்க்கம் கனவுகளால் ஆனது. அங்கே எல்லா இன்பங்களும் கிடைக்கும். அங்கே சரி, தவறுகள் கிடையாது. ஆனால், பூமி என்பது விதிகளைக் கொண்டு உருவாக்கப்பட்ட ஓர் உருண்டை. இந்த விதிகள் பெண்களைப் பற்றிக்கொண்டிருக்கின்றன. பெண்களைச் சுற்றி இயங்கி வருகின்றன. பெண்கள் பூமியின் விதிகளுக்குக் கட்டுப்பட்டு வாழவேண்டும். இறப்பதாக இருந்தாலும் அந்த விதிகளுக்குக் கட்டுப்பட்டே இறக்கவேண்டும்.

ஓர் ஆண் பண்புள்ளவனாகவும் இருந்தால் அவனுடைய இயல்பு வியக்கப்படுகிறது. தன் மனைவி இல்லாதபோதும் இன்னொரு பெண்ணை ஏறெடுத்துப் பார்க்காத சிமா குவாங் புகழப்படுவது அதனால்தான். அதே நேரம் ஒரு பெண் புகழப்படவேண்டுமானால் அவள் தன் ‘கற்பைப் போற்றுபவளாக’, அதற்காக உயிரைக் கொடுப்பவளாக இருக்கவேண்டும். வசதியும் வாய்ப்பும் இருந்தாலும் யூ போல வாழ்நாள் முழுக்கத் தன்னை வருத்திக்கொள்பவளாக இருக்கவேண்டும். ஜியாவின் விதிகளையும் உலகின் விதிகளையும் காப்பாற்றுபவளாக இருக்கவேண்டும்.

ஆணும் பெண்ணும் சேர்ந்தால்தான் ஜியா உருவாகிறது. யாங், யின் இரண்டும் சேர்ந்தால்தான் முழுமை கிடைக்கிறது என்கிறார் சிமா குவாங். அதே நேரம் யாங், யின் இரண்டும் சமமானவையல்ல என்றும் அவர் மறக்காமல் நினைவுபடுத்துகிறார். எவ்வளவு முயன்றாலும் ஒரு நிலவு சூரியனாக மாறவே முடியாது. எவ்வளவு முயன்றாலும் பூமி சொர்க்கமாகாது. இந்த அடிப்படை விதிகளை ஆண்களைப் போலவே பெண்களும் ஏற்றுக்கொண்டுவிட்டால் எல்லா ஜியாக்களும் அமைதியாகவும் மகிழ்ச்சியாகவும் இருக்கும் என்று எளிமையாகத் தன் உபதேசங்களை முடித்துக்கொள்கிறார் சிமா குவாங்.

0

படைப்பாளர்:

மருதன்

எழுத்தாளர், வரலாற்றாளர். சே, ஹிட்லர், ஃபிடல் காஸ்ட்ரோ, திப்பு சுல்தான், மண்டேலா, மாவோ, ஸ்டாலின் ஆகிய உலகத் தலைவர்களின் வாழ்க்கை வரலாறுகளை எழுதியுள்ளார். இவரது ஹிட்லரின் வதைமுகாம்கள், முதல் உலகப் போர், இரண்டாம் உலகப்போர், ஷெர்லக் ஹோம்சால் தீர்க்க முடியாத புதிர், துப்பாக்கி மொழி, திபெத்- அசுரப் பிடியில் அழகுக்கொடி, ஒரு புத்திரனால் கொல்லப்படுவேன் ஆகிய நூல்கள் கவனம் ஈர்த்தவை. பிரபல தமிழ் இதழ்களில் தொடர்கள் எழுதிவருகிறார். இந்து தமிழ் திசை மாயா பஜார் குழந்தைகள் இணைப்பிதழுக்கும் கட்டுரைத் தொடர் எழுதி வருகிறார்.

Exit mobile version