Site icon Her Stories

அகிலத்திரட்டு அம்மானை ரகசியமாகப் படிக்கப்பட்டது ஏன்?

இன்று அய்யாவழியினரால் புனித நூலாகக் கருதப்படுகின்ற அகிலத்திரட்டு  அம்மானை, அது எழுதத் தொடங்கப்பட்ட 1841ஆம் ஆண்டிலிருந்து, கிட்டத்தட்ட ஒரு நூற்றாண்டு காலம் வரை,  புத்தகங்களாக  அச்சிடப்படவில்லை. ஓலைச்சுவடியில் எழுதப்பட்ட அகிலத்திரட்டு அம்மானை, மீண்டும் மீண்டும் ஓலைச்சுவடிகளிலேயே பலரால் பிரதிகள் எடுக்கப்பட்டது. அவ்வாறாகப் பிரதிகள்  எடுக்கப்பட்ட அகிலத்திரட்டு அம்மானை, பத்தொன்பதாம் நூற்றாண்டில், தென் தமிழகத்தின் பல ஊர்களில் தொடங்கப்பட்டிருந்த  நிழல்தாங்கல்களிலும் பதிகளிலும், இரவு வேளைகளில், மறைத்து வைத்து ரகசியமாகப் படிக்கப்பட்டது.1*

1820ஆம் ஆண்டிலேயே சார்லஸ் மீட்  திருவிதாங்கூரில் அச்சகம் ஒன்றினை நிறுவியிருந்தார். 2* அதாவது அகிலத்திரட்டு அம்மானை எழுத ஆரம்பிக்கப்படுவதற்கு முன்னரே திருவிதாங்கூரில் அச்சகம் அறிமுகமாகி விட்டது.

ஆயினும் அகிலத்திரட்டு அம்மானைப் புத்தகங்களாக அச்சிடப்படாமல் மீண்டும் மீண்டும் ஓலைச்சுவடிகளிலேயே பிரதிகள் எடுக்கப்பட்டதற்குக் காரணம், ‘அப்போது அய்யாவழி இயக்கத்திடம் போதிய நிதி இல்லை’ என்பதாக இருந்திருக்கலாம். ஆனால், அகிலத்திரட்டு அம்மானை எழுத ஆரம்பிக்கப்பட்ட 1841ஆம் ஆண்டு முதல் 1938ஆம் ஆண்டு வரை, அது நிழல்தாங்கல்களிலும் பதிகளிலும் இரவு வேளைகளில்  மறைத்து வைத்து, ரகசியமாகப் படிக்கப்பட்டது ஏன்?. வெறும் ஆன்மீக நூல்தானே?!  பகிரங்கமாகவே வாசித்திருக்கலாமே?!

நீசன் என்பவர் யார் என்கிற ஆய்வில் நீசனாக அகிலத்திரட்டு குறிப்பிடுவது, திருவிதாங்கூரின் அரசக் குடும்பத்தவரைத்தான் என்பதை அறிந்தோம். அந்த நீசனுக்கு(அரசனுக்கு) நாராயணர் கீழ்க்காணும்வாறு புத்தி சொல்கிறார்:

“நாராயணராய் நான் உதித்து உந்தனுக்கு

சீரான புத்தி செப்புகிறேன் கேளடா

உன் கிளையும் நீயும் உற்றார் பெற்றார்களுடன்

தன் கிளையோடே நீயும் தரணி ஆளவென்றால்

சாதிதனில் உயர்ந்த சான்றோர் அவர்களுக்கு

நீதியுடன் இறைகள் இல்லாமல் நீக்கி வைத்து

ஊழியமும் தவிரு நீ.

திருவிதாங்கூர் அரசரிடம், “நீ, உன் குடும்பத்தோடு அரசாள வேண்டுமென்றால், சாணார் சாதியினருக்கு வரிக்கொடுமை மற்றும் ஊழியம் என்னும் கூலியில்லா வேலை ஆகியவற்றிலிருந்து விடுதலை கொடு” என்று எச்சரிக்கிறார் நாராயணர்.

“அல்லாமல் சான்றோரை அன்னீதமாய் அடித்தால்

பொல்லாத நீசா புழுக்குழிக்கு ஆளாவாய்

கற்புள்ள சாணாத்தி கதறி உன்னைச் சாபமிட்டால்

அப்படியும் உன் கோட்டை அழிந்து பொடியாகுமடா

சாணாத்தி உன்னைச் சாங்கமுடன் சபித்தால்

வாழ்நாள் அழியும் உந்தன் வம்சங்கள்தான் முடியும்

தீத்தனலில் விந்து சிக்கி மிகப் பிறந்த

பார்த்தன் வழிக் குலங்கள் பகைத்து உனை நிந்தித்தது உண்டால்

கோட்டை இடியுமடா கோத்திரங்கள்தான் முடியும்

நாட்டை முடிக்குமடா நல்ல சாணாத்தி கற்பு

சேனை அழியுமடா உன் செல்வமது குன்றுமடா

வானம் இடிந்து உன் வம்சத்தைக் கொல்லுமடா

திடம் பெரிய சாணாத்தி தினம் உன்னை நிந்தித்தது உண்டால்

கடல் வந்து உன் சீமைதனைக் கட்டாயம் அழிக்குமடா

ஊக்கம் உள்ள சான்றோர்க்கு ஊழியங்கள் இல்லையென்று

ஆக்கமுடன் பறைதான் அடித்து அவனிதான் அறிய

சொல்லாதே போனால் அரசாள மாட்டாய் நீ

நல்லான சான்றோர்க்கு நாட்டும் இறை தவிர்த்து

இறை கூலி தானம் இட்டுக் கொடுத்து அவர்க்கு

தரை மீது நன்றாய் தழைத்திருக்க வைக்காட்டால்

குஞ்சரமும் உன்னுடைய கொத்தளமும் தான் இடிந்து

கர்ம வியாதிகளாய் கண்ட மாலையுடனே

வறுமை வந்து சேருமடா மாநீசா நீ கேளு

தெய்வச் சாணாத்தி தினம் உனை நிந்தித்தது உண்டால்

பொய் வகையால் கர்ம போகத்தால் நீ மடிவாய்” 3*

ஆகிய அகிலத்திரட்டின் வரிகள் சாணார் சாதியைச் சான்றோர் என்றும், உயர்ந்த சாதி என்றும் குறிப்பிடுவதோடு, திருவிதாங்கூர் அரசரையும் அவரது வம்சத்தையும் காட்டமாகச் சாபமிடுகிறது.

“விருச்சமுள்ள நீசன் வேசை நசுறாணி அவன்” என்று ஆங்கிலேயக் கிழக்கிந்திய கம்பெனியினரை இகழ்ந்துரைக்கிறது. இவ்வாறாக அகிலத்திரட்டு அம்மானைப் பல வரிகளில், அன்று திருவிதாங்கூரின் ஆட்சியாளர்களாக இருந்த திருவிதாங்கூரின் ராசாக்கமார்களையும், ஆங்கிலேயக் கிழக்கிந்திய கம்பெனியரையும் காத்திரத்தோடு எதிர்ப்பதோடு இழிந்து பேசுகிறது.

அய்யா வைகுண்டர் கைது செய்யப்படும் காட்சி, அகிலத்திரட்டு அம்மானையில் கீழ்க்கண்டவாறு சொல்லப்பட்டுள்ளது.

“இப்போது நீசன் இங்கு ஓடி வாறான் காண்

மெய்ப்பான மக்கள் எல்லாம் விலகி நின்று வந்திடுங்கோ

செய்கிறதைப் பார்த்து திரும்பி இங்கே வந்தவுடன்

கையருகில் உங்களையும் கட்டாய் வரவழைப்போம்

என்று மக்களுக்கு இயம்ப, அவர் விலக”

பொருள் சுருக்கம்: நீசன் வருவதைக் கண்ட வைகுண்டர் மக்களைப் பார்த்து, “விலகி நில்லுங்கள், நீசன் செய்கின்றவற்றை பாத்துவிட்டுத் திரும்பி வந்தவுடன், உங்களை எல்லாம் என் கையருகில் கட்டாயமாக வரவழைத்துக் கொள்வேன்” என்று சொன்னார். மக்கள் விலகினர்.

“முன்று செய்யாப்பாவி முடுகுங் கெவுடனுமே

கூட்டப்படையோடே கொக்கரித்தே துடியாய்

சாட்டை வெறி போலே சாடி வந்தான் கெவுடன்

சூழப் படையை சூதானமாக நிறுத்தி

வேழம் பலர் ஏவி வெடி ஆயுதத்துடனே

வந்து வளைந்தான் வைகுண்டர் வாழ் பதியில்

சிந்துக்கு உயிரான ஸ்ரீபல்பநாபருமே

கவிழ்ந்து பதி வாசலிலே கட்டிலின் மேல் இருக்க

அவிழ்ந்த துணியோடு அவர் இருக்கும் உபாயம் அதை

அறியாமல் நீசன் அணிவகுத்து தன் படையை

குறியாய் பிடிக்கக் கூட்டமதில் நுழைந்து

சாணார் இனங்கள் சதா கோடி கண்டு உளைந்து

வாழ் நாள் வதைப்பானோ என்று மனது உளைந்து

குதிரை மேல் ஏறி கொடுஞ்சாட்டையால் வீசி

சதிரு சதிராய் சாணாரைத் தான் அடித்து

அடிபட்ட போது அவர்கள் மிகக் கொக்கரித்து

முடிபடவே இந்த முழு நீச வம்சத்தை

மெய்ப்பாகக் கொன்று விடுவோம் என சினத்தார்

ஆளுக்கொருவன் ஆவானோ நீசனெல்லாம்

தூளு போலாக்க என்று துடியாய் எழுந்தார்

சான்றோர் சினத்துத் தாறு மிகப் பாய்த்து

ஆன்றோரை நெஞ்சில் வைத்து ஆடை மிக இறுக்கிக்

உடை இறுக்கிக் கட்டி உல்லாசத்தை தொடங்க விட்டு

படைத் திரளாச் சான்றோர் பண்பாய் ஒரு முகமாய்

எதுத்து நிற்கும் போது எம்பெருமாள் தானறிந்து

பொதுக்கென்ற கோபமதைப் புத்திதனில் அடக்கி

பொறுத்து இருந்தவரே பெரியோர் ஆகும் மக்கா

அறுத்திட என்றால் அபூர்வமோ எந்தனுக்கு

வம்பு செய்வதைப் பார்த்து வதைக்க வந்தேன் அக்குலத்தை

அன்பு குடி கொண்ட அதிக மக்கா நீங்களெல்லாம்

பொறுத்து இருங்கோ பூலோகம் ஆள வைப்பேன்

மறுத்து உரையாடாமல் மக்கள் என்ற சான்றோர்கள்

என்ன செய்ய என்று இவர் கையைத்தான் கடித்து

பின்னே விலகி பெரியவனே என்று நின்றார்

நீசன் மகிழ்ந்து எதிர்ப்பாரைக் காணோம் என்று

பாசக்கயிறு கொண்டு பரமன் வைகுண்டரையும்

கட்டி இறுக்கி கைவெடியால் இடித்து

கெட்டி இறுக்கி கீழே போட்டே மிதித்து

தலைமுடியைத்தான் பிடித்து தாறுமாறாய் இழுத்து

குலையை குலைத்தது போல் (வை)குண்டரைத்தான் அலைத்து

குண்டியிலே குத்தி குனிய விடுவான் ஒருத்தன்

நொண்டியோ என்று நெழியிலே குத்திடுவான்

வெடிப்புடங்கால் சுவாமி மேலெல்லாம் தான் இடித்து

அடிப்புடங்கு கொண்டு அடித்து அடித்துதான் இழுப்பான்”4*

நீசன் எனப்படும் திருவிதாங்கூர் அரசரால் ஏவப்பட்ட கெவுடன் என்பவன் வைகுண்டரைக் கைது செய்யும் காட்சி மேற்சொன்ன வரிகளில் விளக்கப்பட்டுள்ளது. வைகுண்டரைத் திருவிதாங்கூர் அரசு அதிகாரி கைது செய்ய முற்படும் போது, வைகுண்டரோடு நின்ற மக்கள் திருவிதாங்கூர் அரசு அதிகாரிகளை எதிர்த்து அவர்களைத் தாக்க முற்பட்ட செய்தியும், வைகுண்டர் மக்களைக் கட்டுப்படுத்தி கலவரத்தைத் தடுத்த செய்தியும் மேற்சொன்ன வரிகளில் காணப்படுகிறது. இதில் ஆன்மிகம் என் அறிவுக்குத் தென்படவில்லை. போரும் புரட்சியும்தான் தென்படுகிறது.

மேலும் திருவிதாங்கூர் அரசு அதிகாரி, வைகுண்டரைக் கைது செய்யும் போது, வைகுண்டர் மீது நிகழ்த்தப்பட்ட வன்முறையும் மேற்சொன்ன அகிலத்திரட்டு அம்மானை வரிகளில் காணப்படுகிறது. இதுபோல் பல வரலாற்று நிகழ்வுகளும், நீசன் பற்றிய குறிப்புகளில் திருவிதாங்கூர் அரசர்களின் குறியீடும், திருவிதாங்கூர் அரசின் கொடுங்கோன்மையும் அகிலத்திரட்டில் சொல்லப்பட்டிருக்கின்றன. மன்னராட்சி நிலவி வந்த காலக்கட்டங்களில், இவ்வரிகள் திருவிதாங்கூர் அரசாங்க அதிகாரிகளின் கண்களில் பட்டிருந்தால், அய்யாவழி இயக்கத்துக்கே பெரும் ஆபத்தாக முடிந்திருக்கும். அதனால்தான் அகிலத்திரட்டு அம்மானைப் புத்தகம், மறைத்து வைத்து படிக்கப்பட்டு, ஒடுக்கப்பட்ட மக்களிடம் அதன் கருத்துகள் பரப்பப்பட்டன. 

பதிகளும் நிழல்தாங்கல்களும் பகலில் பள்ளிக்கூடங்களாகவும் இரவில் வழிபாட்டு மன்றங்களாகவும் செயல்பட்டது என்றுரைக்கிறது ‘அய்யா வைகுண்டரின் தென்பாண்டி நாட்டு வருகை’ புத்தகம்.5* இத்தகவல்களை ஆராயும் போது, மக்களைப் பதிகளிலும் நிழல்தாங்கல்களிலும் ஒன்றுதிரட்டவே, ஆன்மிக வழிபாட்டை,  வைகுண்டர் பயன்படுத்தியிருப்பார் என்று எண்ணத் தோன்றுகிறது. சாமி கும்பிடும் போர்வையில் அகிலத்திரட்டு அம்மானையில் இருந்த கருத்துகள் ரகசியமாக மக்களிடம் பரப்பப்பட்டிருக்கின்றன.

 1938ஆம் ஆண்டு வரை மறைத்துப் படிக்கப்பட்ட அகிலத்திரட்டு, அச்சிலேற ஒரு காரணத்தை வரலாறு தந்தது. கன்னியாகுமரி மாவட்டத்தில், சுவாமிதோப்புக்கு அருகே அமைந்துள்ள, கீழச்சந்தையடி என்னும் சிற்றூரில் சீர்திருத்தக் கிறிஸ்தவர்கள் ஒரு பள்ளிக்கூடத்தை நடத்தி வந்தனர். அந்தப் பள்ளிக்கூடத்தில் 1938ஆம் ஆண்டு நினைவு ஒளிப்படங்கள் (‘GROUP PHOTOS’) எடுக்க ஏற்பாடானது. ஒவ்வொரு வகுப்பிலுள்ள மாணவ மாணவியரும் அவர்களின் ஆசிரியர்கள், தலைமையாசிரியர், மற்றும் பள்ளிக்கூடத்தின் கிறிஸ்தவ உயர்மட்ட மதபோதகர் ஆகியோருடன் இணைந்து ஒளிப்படம் எடுத்துக் கொண்டனர். ஒளிப்படங்கள் மாணவ மாணவியரின் பெற்றோர்களுக்கு அனுப்பப்பட்டன. ஒளிப்படங்களில் மாணவ மாணவியரின் நெற்றியிலிருந்த நாமங்கள் அழிக்கப்பட்டு, நெற்றிகள் வெற்று நெற்றிகளாகக் காட்சியளித்ததைக் கண்ட பெற்றோர் அதிர்ந்தனர். அதாவது பள்ளிக்கூடத்துச் செல்லும் போது பெற்றோர்களால் மாணவ மாணவியருக்கு இடப்பட்ட நாமத்தை, ஆசிரியர்கள் அழித்துவிட்டு, ஒளிப்படங்களை எடுத்திருக்கிறார்கள். இதை மாணவ மாணவியரின் வாயிலாகத் தெரிந்து கொண்ட பெற்றோர்கள், ஆசிரியர்களிடம் விசாரித்தனர். ஆசிரியர்களோ தலைமை மதபோதகரின் கட்டளைப்படி நாமத்தை அழித்ததாகச் சொன்னார்கள். 

இந்நிகழ்ச்சி அந்தப் பகுதியில் பரபரப்பை ஏற்படுத்த, அய்யாவழி மக்களிடம் அய்யாவழி உணர்வு பீறிட்டு வெடித்தது. உடனே அய்யாவழி இளைஞர்கள் ஒன்றுகூடி, சுவாமிதோப்புக்கு அருகேயுள்ள கரும்பாட்டூர் என்னும் ஊரில், ஓலைப்பந்தல் அமைத்துத் தற்காலிகப் பள்ளிக்கூடம் ஒன்றைத் தொடங்கினார்கள். நாமம் போட்ட மாணவ, மாணவியர் ஓலைப்பந்தல் பள்ளிக்கூடத்துக்கு வந்துவிட்டார்கள். பள்ளிக்கூடத்துக்கு அரசு அங்கீகாரம் பெற நினைத்த இளைஞர்கள், திருவனந்தபுரம் சென்று, அன்றைய திருவிதாங்கூர் திவானாக இருந்த சர்.சி.பி.ராமசாமியைச் சந்தித்து உதவி கேட்டார்கள். சர்.சி.பி.ராமசாமி பிறப்பால் ஒரு பிராமணர் என்று வரையறுக்கப்பட்டவர்.

பள்ளிக்கூடத்துக்கு அரசு அங்கீகாரம் வழங்குவது பற்றிச் சிந்திக்க வேண்டிய திவான் சர்.சி.பி.ராமசாமி, “வைகுண்டர், ஒற்றை நாமம், அய்யாவழி” ஆகியவற்றைப் பற்றி சிந்தித்தார். ஆர்வத்துடன் அய்யா வைகுண்டர் பற்றி இளைஞர்களிடம் விசாரித்தார். இளைஞர்கள் அகிலத்திரட்டு அம்மானைப் பற்றியும், அது பேசும் வைகுண்டர் வரலாறு  பற்றியும் சொன்னார்கள். சர்.சி.பி.ராமசாமி அகிலத்திரட்டின் ஒரு பிரதியைப் படிக்கத் தருமாறு இளைஞர்களிடம் கேட்டார். “திருவிதாங்கூரின் அரச பரம்பரையை அழிந்து போகச் சொல்லி சபித்துக் கொண்டிருக்கும் அகிலத்திரட்டு அம்மானையைத் திருவிதாங்கூர் திவானிடம் எப்படிப் படிக்கக் கொடுப்பது?” என்று பயந்து போன இளைஞர்கள், ஓலைப்பந்தல் பள்ளிக்கூடத்துக்கு அரசு அங்கீகாரம் வாங்க வந்த நோக்கத்தை மறந்தனர். சர்.சி.பி.ராமசாமியை எப்படியோ சாமாளித்த இளைஞர்கள், பால்வர்ணசாமியாரின் உதவியை நாடினர். பால்வர்ண சாமியாரின் வழிகாட்டுதலில் அகிலத்திரட்டு அம்மானை 1938ஆம் ஆண்டு அச்சிலேற்றப்பட்டு புத்தகங்களாக அய்யாவழி மக்களின் கைகளைச் சென்றடைந்தது.6*

இக்காலத்தில், ஒவ்வொரு ஞாயிற்றுக்கிழமையிலும், கார்த்திகை மாதத்தில் நிழல்தாங்கல்கள் மற்றும் பதிகளில் நிகழ்த்தப்படும் ஏடுவாசிப்புத் திருவிழாவின் போதும் அகிலத்திரட்டு அம்மானை, ஒலிப்பெருக்கிகளின் வழியாகப் பகிரங்கமாக வாசிக்கப்படுகிறது. இவ்வாறாக அகிலத்திரட்டு அம்மானைப் பகிரங்கமாகப் படிக்கப்படுவதுகூட ஜனநாயகத்தின் வெற்றியே.

ஆனால், அகிலத்திரட்டு அம்மானைப் புத்தகத்தின் கருத்துகளும், வரலாற்று அறிவும், அரசியல் தெளிவும் இன்றுவரை மக்களின் புத்தியை முழுமையாகச் சென்றடைந்ததாகத் தெரியவில்லை.

பெரும்பாலும் கம்யூனிசம் மற்றும் நக்சலைட் புத்தகங்களைத்தான் மறைத்து வைத்துப் படிப்பதாகக் கேள்விப்பட்டிருக்கிறோம். இங்கே நூறு ஆண்டுகளாக அகிலத்திரட்டு அம்மானை மறைத்து வைத்துப் படிக்கப்பட்டிருக்கிறது.

ஏகாதிபத்திய ஆட்சிக்கும், கொடுங்கோன்மைக்கும் எதிராக எழுதப்பட்ட நூல் புனித நூலா? புரட்சி நூலா? அரசாங்கத்துக்கு எதிரான ஒரு புத்தகம் படிக்கப்பட்ட இடங்களான நிழல்தாங்கல்களும் பதிகளும் ஆன்மிகப் பள்ளிகளா? அறப்போர் பாசறைகளா? அய்யாவழி அமைப்பு மதமா? பொதுவுடைமை இயக்கமா? வாசகர்களின் சிந்தனைக்கு விட்டு விடுகிறேன்.

தொடரும்.

  1. ‘இறைவனின் வைகுண்ட அவதாரம்’, ஆ.கிருஷ்ணமணி, முதற்பதிப்பு[4.3.2014], 4 பக்கம் எண்: 73.
  2. A HUNDRED YEARS IN TRAVANCORE 1806 – 1906, Rev.I.H.HACKER(LONDON MISSIONARY SOCIETY), EDITION: 1908, PAGE NO:35.
  3. பொ. முத்துக்குட்டி சுவாமி அவர்களால் இயற்றப்பட்டு, பா. தங்கையா அவர்களால் அச்சிலேற்றப்பட்ட, அகிலத்திரட்டு அம்மானை, நான்காம் பதிப்பு, பக்கம் எண்: 115.
  4. பொ. முத்துக்குட்டி சுவாமி அவர்களால் இயற்றப்பட்டு, பா. தங்கையா அவர்களால் அச்சிலேற்றப்பட்ட, அகிலத்திரட்டு அம்மானை, நான்காம் பதிப்பு, பக்கம் எண்: 263, 264.
  5. அய்யா வைகுண்டரின் தென்பாண்டிநாட்டு வருகை, கலந்தபனை வெ.செந்திவேலு, சூரங்குடி ஆ. இன்பக்கூத்தன், முதற்பதிப்பு ஆகஸ்ட் 2011, பக்கம் எண்: xi.
  6.  ‘இறைவனின் வைகுண்ட அவதாரம்’, ஆ.கிருஷ்ணமணி, முதற்பதிப்பு[4.3.2014], 4 பக்கம் எண்:72,73,75.

சக்தி மீனா

பட்டதாரி, தொழில் முனைவர். பெரியாரின் சித்தாந்தத்தால் ஈர்க்கப்பட்டவர். பொழுதுபோக்காக ஆரம்பித்த எழுத்து, பெரியாரின் வழிகாட்டுதலில், பொதுவுடைமை சித்தாந்தம் நோக்கி நகர்ந்தது. எதுவுமே செய்யவில்லையே என்ற தன் மனக்கவலையைக் களைய, படித்துக்கொண்டும் எழுதிக்கொண்டும் இருக்கிறார்.

Exit mobile version