புத்தகம் வாசிப்பதில் எனக்கு அதீத ஆர்வம் உண்டு. ஆனால் சரியான புத்தகங்களைத் தேடிப் படிப்பது சற்றுக் கடினமாக இருந்தது. பெரும்பாலானவர்கள் இலக்கியம் சார்ந்த புத்தகங்களையும், புனைவு கதைகளையும் பரிந்துரைத்தனர். ஆனால் அதைத் தாண்டி நிறைய உலக விஷயங்களைப் படிக்க வேண்டும் என்கிற ஆர்வம் எனக்கு இருந்தது. சமீபத்தில் என் கல்லூரி ஆசிரியர் எனக்கு ஃப்ரீடம் ரைட்டர்ஸ் என்கிற புத்தகத்தைப் பரிந்துரைத்தார்.
அமெரிக்காவில் உள்ள இனப்பாகுபாட்டை மையமாகக் கொண்ட உண்மை கதை. இனவெறி அதிகம் கொண்ட, படிப்பில் கவனம் செலுத்தாத, பெயரளவில் பள்ளிக்கு வரும் மாணவர்கள். அவர்களுக்குக் கற்றலையும் கற்பிப்பதையுமே தன் வாழ்வாக என்னும் ஓர் ஆசிரியர். இறுதியில் யாருடைய எண்ணம் ஈடேறியது என்பதுதான் புத்தகம்.
மது அருந்துதல், போதைப் பொருள் உட்கொள்ளுதல், தன் இனக் குழுவோடு சேர்ந்து மற்ற இனத்தைச் சேர்ந்த மாணவர்கள் மீது கொலை வெறி தாக்குதல் நிகழ்த்துதல், பெண்களுடன் தகாத உறவு இப்படிப் பல்வேறு குற்றச் செயல்களில் ஈடுபட்ட 150 மாணவர்கள் கொண்ட ஒரு வகுப்பு.
இந்த வகுப்பிற்குப் பொறுப்பேற்கும் ஓர் ஆசிரியர் இரண்டாம் உலகப் போரில் இனப் பாகுபாட்டால் நிகழ்ந்த துயரங்களை அவர்களுக்கு எடுத்துக் கூறி மாணவர்கள் போக்கிலேயே சென்று அவர்களின் மனதைக் கொஞ்சம் கொஞ்சமாக மாற்றுகிறார். இதற்காகப் பல்வேறு வகையான மனப்போராட்டங்களை அவர் சந்திக்கிறார்.
ஆனால் இறுதியில் அந்த மாணவர்கள் ஒன்றைப் புரிந்து கொள்கிறார்கள். நாம் அனைவரும் மனிதர்கள், இனங்களால் பிரிந்தவர்கள் அல்லர் என்று. அதுமட்டுமல்லாமல் மாணவர்களுக்குத் தெரியாமலேயே அவர்களிடம் கற்றலைக் கொண்டு சேர்த்து விடுகிறார் அந்த ஆசிரியர்.
விளைவு ஓர் ஆண்டுக்குப் பிறகு அந்த மாணவர்கள் படிப்பை மட்டுமே குறியாகக் கொண்டுள்ளார்கள். அந்தப் பள்ளியில் நன்கு படிக்கும் மற்ற மாணவர்களைவிடச் சிறந்து விளங்குகிறார்கள். அமெரிக்கா முழுவதும் பிரபலமானார்கள். அவர்களின் நல்ல செய்கைகளால் தன் பள்ளிப் படிப்பை நிறைவு செய்யும்போது ’ஃப்ரீடம் ரைட்டர்ஸ்’ என்கிற ஓர் அறக்கட்டளையை ஆசிரியருடன் இணைந்து உருவாக்கி, இவர்களைப் போன்று இனப் பாகுபாட்டால் பாதிக்கப்பட்ட மாணவர்களுக்குத் தேவையான அனைத்து உதவிகளையும் செய்து, அதிலிருந்து அவர்கள் மீண்டு வருவதற்கான வழியையும் வகுத்துக் கொடுத்தார்கள்.
என்னைப் பொருத்தவரை ஒரு மாணவனின் வாழ்க்கையில் இப்படி ஒரு மாற்றங்களைக் கொண்டுவர ஆசிரியரால் மட்டுமே முடியும். இந்தப் புத்தகம் படித்து முடித்த பின்பு ஒரு 4, 5 நாட்களுக்கும் மேலாக அந்த ஆசிரியரின் முகம் என் மனதை விட்டு மறையவே இல்லை. அவரது பெயர் எரின் குரூவல் (Erin Gruwell).
ஆனால் இந்தக் கதையைப் படித்து முடிக்கும் வரை பல இடங்களில் என் கல்லூரி ஆசிரியர் ஒருவரின் சாயலே எனக்குத் தென்பட்டது. ஏனென்றால் மாணவர்கள் நலனுக்காக அந்த ஆசிரியர் செய்த அத்தனை விஷயங்களையும் இன்றளவும் இவர் செய்து கொண்டிருக்கிறார்.
கணினித் துறையில் பொறியியல் படிக்க வேண்டும் என்கிற எண்ணம் எனக்கு இருந்தது. ஆனால் குடும்பச் சூழல் காரணமாக அது இயலாமல் போகவே அரசுக் கலைக் கல்லூரியில் இளங்கலை கணினி துறையில் சேர்ந்தேன். அதிக அளவு வெளி உலகம் பற்றிய அறிவு இல்லை. நகர்ப்புற மாணவர்களைப் போன்று தயக்கமில்லாமல் எதையும் செயல்படுத்தவும் வெளிப்படுத்தவும் தெரியவும் இல்லை.
என்னுடைய இந்த எண்ண அலைவரிசையிலேயே என்னுடைய நண்பர்களும் இருந்தார்கள். மற்ற பள்ளி மாணவர்களைப் போல கல்லூரி என்றதும் ஒரு வித அச்சம் இருந்தது. ஆனால் அந்த வயதிற்கே உரித்தான குறும்புகளும் இருந்தன.
முதல் நாள் எங்கள் வகுப்பின் பொறுப்பாசிரியர் வகுப்பினுள் நுழைந்தார். அவரைப் பார்த்த மாத்திரத்தில் தோன்றிய விஷயம் பாவம் ஓர் அப்பாவி நம்மிடம் வந்து சிக்கிவிட்டார் என்பதுதான். ஏனெனில் அவர் பார்ப்பதற்கு அப்படித்தான் பாவமாக இருந்தார்.
அதற்குப் பிறகு ஒரு மணி நேரம் கல்லூரி வாழ்க்கை பற்றியும், எதிர்காலம் பற்றியும் ஊக்கமூட்டும் விதமாகப் பேசினார். அவ்வளவுதான் அப்போதே அந்த ஆசிரியரிடம் சரண் அடைந்து விட்டேன். 14 வருடங்கள் ஆகின்றன. இன்று வரை அவர் மீது கொண்ட அன்பும், அவரைப் பற்றிய நல்லெண்ணமும் துளியும் மாறவில்லை அப்படியே உள்ளது.
’அட்டையை வைத்து ஒரு புத்தகத்தை மதிப்பீடு செய்யாதீர்கள்; என்கிற ஒரு பழமொழி உண்டு. அதன் அர்த்தம் அன்றுதான் தெளிவாகப் புரிந்தது. அப்பாவி நம்மிடம் வந்து சிக்கிவிட்டார் என நினைத்தோம். ஆனால் உண்மையில் அவரிடம் சிக்கியது நாங்கள்தாம்.
இன்று பெருமளவில் படிப்பைத் தாண்டி எந்த ஆசிரியரும் மாணவர்களோடு பேசுவதில்லை. ஆனால் அவர் அதிக அளவு வாழ்க்கைப் பாடத்தைப் பற்றிச் சொல்லித் தந்தவர். ஓர் ஆசிரியர் என்பதைவிட எனக்கு எப்போதும் முதலில் ஓர் அம்மாவாகத்தான் அவர் தெரிந்திருக்கிறார்.
புதிய விஷயங்களைக் கற்றுக் கொள்வது, வாகனம் செலுத்துவது, பிரச்னைகளைக் கையாள்வது, படிப்பு… இப்படி அத்தனை கோணங்களிலும் எங்களுக்கு வழிகாட்டியாக விளங்கியவர் அவர்தான். அந்த ஆசிரியை ஒரு வருடத்தில் பணி மாறுதல் பெற்றுச் சென்றுவிட்டார். என் வாழ்வில் ஆற்ற முடியாத தருணம் என்பது அதுதான். ஆனால் அவருடன் தொடர்ச்சியாக இணைப்பில் இருந்தோம். எங்கள் வாழ்க்கையின் ஒவ்வொரு கட்டத்திலும் அவருடைய வழிகாட்டுதல் இருந்தது.
என் ஆழ்மன எண்ணங்களையும், துயரங்களையும் அதிகம் யாரிடமும் பகிர்ந்து கொள்ளாத சுபாவம் என்னுடையது. என் மனம் கலக்கமடையும் நேரத்தில் எல்லாம் முதலில் நான் அழைப்பது இந்த ஆசிரியரைத்தான். அவரிடமும் இதுவரை எதையும் சொன்னதில்லை உங்களிடம் பேச வேண்டும் என்பதை தவிர.
ஆனால் என் எண்ண ஓட்டத்தைக் கச்சிதமாகக் கண்டுபிடித்து விடுவார். ஒரு பெண் பிறப்பதில் இருந்து இறப்பது வரை அனுபவிக்கும் அத்தனை துயரங்களையும் பட்டியலிட்டு இதை விடவா பெண்களுக்கு ஒரு துயரம் வந்து விடப் போகிறது, இதற்கெல்லாம் துவண்டு விடலாமா என முடித்து விடுவார். அவரால் மட்டுமே அப்படி அறிவுரை கூற முடியும்.
ஒரு கட்டத்தில் அவருடன் உரையாடுவது மட்டுமல்ல அவரது பெயரை எங்கேயாவது கேட்டாலும்கூட எனக்கு ஊக்கம் வந்துவிட்டது.
சுமார் 11 வருடங்களுக்குப் பிறகு சமீபத்தில் அவரோடு நானும் எனது நண்பர்களும் ஒரு சிறிய பயணம் மேற்கொண்டோம். அந்தப் பயணத்திற்குப் பிறகு என்னுள் நிகழ்ந்த மாற்றங்கள் பல. கல்வி, பணி, திருமணம், குழந்தை என எல்லாம் முடிந்த பிறகு என் தொழில் வாழ்க்கையில் ஒரு பெரிய வெற்றிடத்தை நான் உணர்ந்தேன்.
எனக்கு அதனை உணர்த்தியதோடு மட்டுமல்லாமல், என் ஆசான் நான் அதிலிருந்து மீண்டு வருவதற்கான ஊக்கத்தையும், வழிமுறைகளையும் எனக்குச் சொல்லித் தந்தார். மீண்டும், என் காலில் நான் தடுமாறாமல் நிற்பதற்குத் தன் கைகளைத் துணையாகக் கொடுத்தார்.
சிறிய சிறிய செயல்களின் மூலம் எனக்குள் இருக்கும் திறமைகளை எனக்கே அடையாளம் காட்டினார். என்னால் இதெல்லாம் செய்ய முடியுமா, எனக்குச் செய்ய வருமா என்றுகூட எனக்குத் தெரியாது. என் மீது அதிக அளவு அவருக்கு நம்பிக்கை இருந்தது.
இன்று நான் பகுதி நேரமாகச் செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பத்தில், தமிழ் மொழிக்கான Chatbot பயிற்சியாளராகப் பணிபுரிந்து வருகிறேன். எனக்குத் தமிழின் மீது ஆர்வம் அதிகம். இதனால் என்னை எழுதுவதற்கு ஊக்கப்படுத்தி சிறிது சிறிதாக என்னை எழுத வைத்து ஹெர் ஸ்டோரிஸை எனக்கு அறிமுகம் செய்தது அவர்தான். நான் இப்போதுதான் எழுத தொடங்கி இருக்கிறேன். என்னுடைய முதல் கட்டுரை இது. அதுவும் என் ஆசானைப் பற்றி.
ஒரு மாணவரின் வளர்ச்சிக்குப் படிக்கும் போது மட்டும் இன்றி, வாழ்வில் அவர்களுடைய அடுத்தடுத்த நிலைகளுக்கும் ஊக்கம் தருவதற்கும், வழிகாட்டுவதற்கும் ஓர் அனுபவம் வாய்ந்த ஆசிரியர் உடன் இருக்கிறார் என்றால் அவரைவிட பாக்கியசாலி வேறு யார் இருக்க முடியும்?
என்னை இன்றளவும் செதுக்கிக் கொண்டிருக்கும் என் ஆசானுக்கு உலக ஆசிரியர் தின வாழ்த்துகள்!
படைப்பாளர் :
பி. பாலதிவ்யா
பெரியார் பல்கலைக்கழகத்தின் கீழ் கணினி அறிவியல் துறையில் இளங்கலைப் பட்டம் பெற்றவர். தற்போது செயற்கை நுண்ணறிவுத் தொழில்நுட்பத்தில் தமிழ் மொழிக்கான Chat bot பயிற்சியாளராக உள்ளார். வாசிப்பதில் தீவிர ஆர்வம் உடையவர்.