Site icon Her Stories

பெண்களும் நகைச்சுவையும்

பெண்களுக்கு நகைச்சுவை உணர்வு இல்லை என்று ஃபேஸ்புக்கில் கருத்து சொல்லிக்கொண்டிருக்கிறார்கள். சமீப காலமாகப் பெண்களை Subjectஆகவும் Objectஆகவும் வைத்துப் பதிவுகள் எழுதுவதே சில அரைவேக்காடு எழுத்தாளர்களுக்கு வேலையாகப் போய்விட்டது. இவர்களுக்குப் பதில் பதிவை எழுதியே அலுத்துவிட்டது.

பதில் எழுதவில்லை என்றால் நகைச்சுவை உணர்வோடு சேர்த்து சுரணையும் இல்லை, ரோஷமும் இல்லை என்றாகிவிடும். இது வெறும் கண், காது, மூக்கு இருக்கும் சப்ஜெக்ட் என்று சொன்னாலும் சொல்லிவிடுவார்கள். அவர்களுக்காக இந்தப் பதிவு.

பொல்லாதவன் படத்தில் சந்தானம், ‘அவ உன்னைப் பார்த்து மட்டும் சிரிக்கல மச்சான்… அவ ஊர்ல இருக்க எல்லோரையும் பார்த்து சிரிக்குறா… அவ ஆளு இல்ல மச்சான்… ஐட்டம்’ என்பார்.

இது போன்ற கீழ்த்தரமான கமெண்ட்டுகள்தாம் இவர்கள் பேசும் நகைச்சுவை. இது படங்களில் மட்டும் இல்லை. அலுவலகங்கள், கல்லூரிகள். பஸ் நிறுத்தங்களிலும் தினம் தினம் கேட்கிறோம்.

எல்லாவற்றிற்கும் மேல் பெண் சிரிக்கச் சிரிக்கப் பேசிவிட்டால் என்ன நடக்கும் தெரியுமா?

‘அவ சிரிக்க சிரிக்க பேசுறா… நூல் விட்டுப் பாரு மடங்கிடுவா.’

‘இவ்வளவு சிரிச்சுப் பேசுறாளே அவ எல்லாம் ஒழுக்கமான பொண்ணா இருப்பா…’

‘அவ என்கிட்ட சிரிச்சு பேசுறா… அவளுக்கு என் மேல ஒரு இது இருக்கு.’

இப்படி எல்லாம் இவர்கள் இஷ்டத்திற்குக் கற்பனைகளையும் கணிப்புகளையும் வாரி இறைப்பதைக் கேட்டு நாங்களும் பரிதாபமாக உங்களை எண்ணிச் சிரிப்பதைத் தவிர வேறொன்றும் செய்ய முடிவதில்லை.

இங்கே சினிமா துறையில் மனோரமா, கோவை சரளா என்று குறிப்பிட்டுச் சொல்ல இரண்டே இரண்டு பெண்கள்தாம் நகைச்சுவை நடிகர்களாக இருக்கிறார்கள் என்பது இவர்கள் தியரிக்குக் காரணமாக இருக்கலாம்.

அப்படிப் பார்த்தாலும் அது பெண்களின் தவறில்லை. ஆணாதிக்கம் நிறைந்த நம் சினிமா நாயகர்களைச் சார்ந்தே இயங்குகின்றன. அவர்களைச் சார்ந்தே நகைச்சுவைக் காட்சிகளும் எழுதப்படுகின்றன.

எழுத்து என்றதும் தற்சமயம் கடந்துவந்த இதே போன்று மற்றோர் எழுத்தாளரின் பதிவைப் பற்றிச் சொல்லணும்.

அவரை ஆண் எழுத்தாளர் என்று குறிப்பிடணுமோ?

பெண் எழுத்தை அவர்கள் பிரித்துப் பார்க்கும்போது நாமும் அப்படித்தானே குறிப்பிடணும்?

அந்த ஆண் எழுத்தாளர் தன் பதிவில்… பெண்களுக்கு நகைச்சுவை உணர்வு இல்லை. வெளிநாட்டுப் பெண் எழுத்தாளர்கள் எல்லாம் எப்படியெல்லாம் சிரிக்கச் சிரிக்க எழுதுகிறார்கள். நம்மூர் பெண் எழுத்தாளர்கள் ஏன் இப்படி ஒழுக்கக் கோட்பாடுடன் இறுக்கமாக எழுதுகிறார்கள் என்று விமர்சிக்கிறார்.

இதென்ன வம்பா போச்சு.

நாங்க சிரிக்க … பேச … எழுத அதெல்லாம் உங்கள் விருப்பப்படியும் ரசனைப்படியும் இருக்கணும்னா எப்படி?

இந்த எதிர்பார்ப்பே படுமுட்டாள்தனமாக இல்லை.

அது சரி. நகைச்சுவை உணர்வு பெண்களுக்கு இருந்தால்தான் என்ன, இல்லாவிட்டால்தான் என்ன?

ஆணும் பெண்ணும் உடலளவிலும் மனதளவிலும் வெவ்வேறானவர்கள். பெண்கள் எப்போதும் அழுகிறார்கள் என்று கிண்டல் செய்பவர்களுக்கு அறிவியல் அறிவு கொஞ்சம்கூட இல்லை என்று நினைத்து தலையிலடித்து சிரித்துக் கொள்ளத்தான் முடிகிறது.

To your kind information…

பெண்களின் ஹார்மோன்கள்தாம் அவர்கள் கொஞ்சம் அதிகப்படியாக அழுவதற்கும் உணர்வுபூர்வமாக முடிவுகளை எடுப்பதற்கும்கூட காரணம்.

இதெல்லாம் ஒரு புறமென்றால் பெரும்பாலான ஆண்கள் குடும்ப வாழ்க்கைக்குள் இறுக்கமான மனிதர்களாகவே இயங்குகிறார்கள்.

இறுகிய பார்வையுடன் இருக்கும் அப்பாவிடம் மகனின் விருப்பங்களைச் சொல்லவும் நிறைவேற்றவும் செய்தவர் இவர்கள் பொதுவில் விமர்சிக்கும் நகைச்சுவை உணர்வற்ற ‘அம்மா’ என்ற பெண்தான்.

அவள் சிரிக்கச் சிரிக்கப் பேச மாட்டார். ஆனால், நம் சிரிப்பிற்குப் பல நேரம் அவர் காரணமாக இருப்பார்.

இதெல்லாம் ஒரு புறமென்றால் பெண்களை ரசனையற்றவர்களாகப் பார்க்கும் ஆண்கள் கூட்டத்தின் அதாவது இளைஞர்கள் கூட்டத்தின் ரசனை எப்படி இருக்கிறதென்றால் மருந்துக்குக்கூட லாஜிக் இல்லாத வாரிசு, பீஸ்ட், வலிமை, துணிவு போன்ற படங்களைக் கொண்டாடும் மட்டரகமான ரசனை கொண்டதாகவே இருக்கிறது.

எனக்குப் புரியாத விஷயம் என்னவென்றால், இந்தளவு நகைச்சுவை உணர்வு கொண்ட ஆண்கள் ஏன் இத்தனை மோசமான வன்முறையாளர்களாகச் சமூகத்தில் இருக்கிறார்கள் என்பதுதான்.

இந்தப் பதிவின் மூலமாக ஆண்களே தவறு என்று நான் சொல்லவில்லை. பெண்களின் விருப்பு, வெறுப்பு ரசனைகளைக் குறிவைத்து தாக்கும் ஆண்கள் தங்கள் இனத்தின் நிறைகுறைகளைப் பற்றி ஏன் பேசுவதில்லை என்றுதான் கேட்கிறேன்.

அக்கா, தங்கச்சி, கொழுந்தியா, மாமியார், பொண்டாட்டி என்று பெண்களின் உறவுமுறை வைத்து கிண்டலும் கேலியும் செய்வதுதான் உங்களின் நகைச்சுவை உணர்வு என்றால் அதுக்குப் பெயர் நகைச்சுவை இல்லை. You are mistaken. அது வக்கிரம்

படைப்பாளர்:

மோனிஷா. தமிழில் முதுகலை பட்டம் பெற்றவர். நாவலாசிரியர். புனைவு, அபுனைவு என்று எல்லா வகையான நூல்களைப் படிப்பதிலும் எழுதுவதிலும் விருப்பம் உள்ளவர். 2019ஆம் ஆண்டு இணையத்தில் முதல் நாவலை எழுதி முடித்தார். பின்னர் எழுதுவது தொடர் பணியாக மாறியது. இன்று வரை இணையத்தில் இருபது நாவல்களை எழுதி முடித்துள்ளார்.

Exit mobile version