காடார்ந்த கிழக்கு – 4
ஆஸ்டின் (Austin)
ஆஸ்டின் டெக்சாஸ் மாநிலத்தின் தலைநகரம். 1839- 1842 வரை ஆஸ்டின், டெக்சாஸ் குடியரசின் தலைநகராக இருந்தது. 1845 – டெக்சாஸ் அமெரிக்காவின் மாநிலமான பின் மீண்டும் ஆஸ்டின், அதன் தலைநகரம் ஆனது.
கேபிடல் (Capitol)
இப்போது இருக்கும் டெக்சாஸ் மாநில கேபிடல் கட்டடம், 1888 கட்டப்பட்டது. இத்தாலிய மறுமலர்ச்சி பாணி கட்டடம். இது 302.64 அடி (92.24 மீ) உயரம் கொண்டது. இது, அமெரிக்காவின் ஆறாவது உயரமான கேபிடல். வாஷிங்டனில் உள்ள யுனைடெட் ஸ்டேட்ஸ் கேபிட்டலை விட இது உயரமானது.
இந்த கட்டிடத்திற்கான அடித்தளம் டெக்சாஸ் விடுதலை நாளான மார்ச் 2, 1885 போடப்பட்டது. ஏப்ரல் 21, 1888, சான் அசிண்டோ நாளன்று (San Jacinto Day) பொதுமக்களுக்கு திறக்கப்பட்டு, மே 18, 1888 அன்று அதிகாரப்பூர்வமாக அர்ப்பணிக்கப் பட்டது.
ஏப்ரல் 21, 1836 இல், நடந்த சான் ஜசிண்டோ போரில், சாம் ஹூஸ்டன் (Sam Houston) தலைமையிலான 800 டெக்ஸான்கள் “அலமோவை நினைவில் கொள்க; கோலியாத்தை நினைவில் கொள்க!” (Remember the Alamo!” and “Remember Goliad!) என்ற முழக்கத்துடன் சென்று மெக்ஸிகன் படையை வென்றனர். அந்த நாள் இன்றும் டெக்சாஸில் விடுமுறை நாளாக, பண்பாட்டு கொண்டாட்ட நாளாக உள்ளது.
கேபிடல் நாள்தோறும், காலை 7 மணி முதல் இரவு 8 மணி வரை திறந்திருக்கும். அனுமதி இலவசம். வழிகாட்டியுடன் கூடிய சுற்றுலாவும் இலவசம். உள்ளே வாகன நிறுத்தம் கிடையாது. பல தனியார் வாகன நிறுத்தங்களும், சாலையோர அரசு கட்டண வாகன நிறுத்தங்களும் உள்ளன. சாலையோர அரசு வாகன நிறுத்தங்களில் வார விடுமுறை நாட்களில் இலவசமாக நிறுத்திக் கொள்ளலாம்.
கேபிடல் ஒரு சமச்சீர் (symmetrica) கட்டடம். இங்கு டெக்சாஸ் சட்டமன்றத்தின் செனட் மற்றும் பிரதிநிதிகள் சபை, அலுவலகம், காப்பகங்கம் போன்றவை உள்ளன. உள்ளே அனைத்து கவர்னர்கள் படங்களும் வைக்கப் பட்டுள்ளன. அவர்களில் 29 ஆவது ஆளுநரான மிரியம் ஏ. “மா” பெர்குசன் (Miriam A. “Ma” Ferguson 1925–1927), 45 ஆவது ஆளுநரான ஆன் டபிள்யூ. ரிச்சர்ட்ஸ் (Ann W. Richards 1991–1995), இருவர் மட்டுமே பெண்கள். அறிந்த முகமாக ஜார்ஜ் புஷ் (George W. Bush July 6, 1946) அவர்களின் முகம் இருந்தது.
கேபிடல் கட்டடத்தின் வெளிப்புற வளாகத்தில் பல சிற்பங்களும் சிலைகளும் உள்ளன. அழகிய மரங்கள் பல உள்ளன. அவற்றுள் என்னை ஈர்த்தது Osage Orange என்ற ஒரு மரம். இந்த ஊரில் உள்ள அதிக பட்ச மரங்கள் பெரும்பாலும் வேப்ப மர இலைகளின் அளவில் தான் இலைகள் கொண்டுள்ளன. ஆனால் இதன் இலைகள் கொஞ்சம் பெரிதாக உள்ளன. பழத்தின் உள்ளே சிறு விதைகள் இருக்கின்றன. அதை அணில்கள் சாப்பிடுகின்றன.
ஆஸ்டின் டெக்சாஸ் மாநிலத்தின் தலைநகரம் என்பதால், மாநில ஆளுகை தொடர்பான பல கட்டடங்கள் உள்ளன.
எல்.பி.ஜே குடியரசு தலைவர் நூலகம்
லிண்டன் பெய்ன்ஸ் ஜான்சன் நூலகம் மற்றும் அருங்காட்சியகம் (The Lyndon Baines Johnson Library and Museum), அமெரிக்காவின் 36 வது குடியரசு தலைவரான (1963-1969) லிண்டன் பெயின்ஸ் ஜான்சனின் குடியரசு தலைவர் நூலகமாகும். இது ஆஸ்டினில் உள்ள டெக்சாஸ் பல்கலைக்கழகத்தில் அமைந்துள்ளது. இது 13 குடியரசு தலைவர், நூலகங்களில் ஒன்றாகும். எல்.பி.ஜே நூலகத்தில் குடியரசு தலைவர் ஜான்சன் மற்றும் பிறரின் 45 மில்லியன் பக்க வரலாற்று ஆவணங்கள் உள்ளன.
1991 ஆம் ஆண்டில் இரண்டாம் எலிசபெத் அரசி, இந்த அருங்காட்சியகத்திற்குச் சென்று குடியரசு தலைவர் ஜான்சனின் குடும்பத்தினரை சந்தித்தார்.
ஜூலை 2007 இல் அவரது மரணத்திற்குப் பிறகு, லேடி பேர்ட் ஜான்சனின் உடல் நூலகத்தில் வைக்கப் பட்டது.
நாங்கள் சென்றிருக்கும் போது அது திறந்திருந்தாலும், கொரோனா பாதுகாப்பு விதியாக, மிகக்குறைவான எண்ணிக்கையில் தான் மக்களை உள்ளே விடுகிறார்கள். அதனால் எங்களால் உள்ளே போக முடியவில்லை.
டெக்சாஸ் பல்கலைக்கழகத்தில் ஜாக் எஸ். பிளாண்டன் கலை அருங்காட்சியகம் (Blanton Museum of Art) உள்ளது.
டெக்சாஸ் பல்கலைக்கழகத்தில், ஹாரி ரான்சம் (Harry Ransom) நிறுவிய நூலகம் உள்ளது. இங்கு 36 மில்லியன் இலக்கிய கையெழுத்துப் பிரதிகள், ஒரு மில்லியன் அரிய புத்தகங்கள், ஐந்து மில்லியன் புகைப்படங்கள் மற்றும் 100,000 க்கும் மேற்பட்ட கலைப் படைப்புகள் உள்ளன. இங்கு உள்ள குறிப்பிடத்தக்க கலைப்பொருட்கள்:
டெக்சாஸின் 38 வது லெப்டினன்ட் கவர்னரான பாப் புல்லக் அவர்களின் பெயரால், உள்ள புல்லக் டெக்சாஸ் மாநில வரலாற்று அருங்காட்சியகம் (The Bullock Texas State History Museum) கேபிட்டலுக்கு அருகில் உள்ளது. ஆஸ்டினுக்கு வடக்கே 40 மைல் தொலைவில் உள்ள கால்ட் தொல்பொருள் தளத்தில் (Gault archaeological site) கண்டுபிடிக்கப்பட்ட 16,000 ஆண்டுகளுக்கும் முன்பான வரலாற்று சான்றுகள் இங்கு உள்ளன.
லாகுனா குளோரியா அருங்காட்சியகம் (Laguna Gloria) உள்ளது. இது தோட்டக்கலையில் ஈடுபாடு கொண்ட கிளாரா, பல ஆண்டுகளாக நட்டு வடிவமைத்த, தோட்டத்தை நன்கொடையாக அளித்த ஒரு பூங்கா. மேலும், உம்லாஃப் அருங்காட்சியகமும் (The Umlauf Sculpture Garden & Museum) உள்ளது. இது, அமெரிக்க சிற்பி சார்லஸ் உம்லாஃப்பின் கலைப் படைப்புகளை மையமாகக் கொண்ட ஒரு அருங்காட்சியகம். பிற்காலத்தில் அவரின் வாரிசுகள், ஆஸ்டின் நகரத்திற்கு, இதை நன்கொடையாக வழங்கினர். ஆஸ்டினில் உள்ள ஒரு வளர்ந்து வரும் கலைஞருக்கு, உம்லாஃப் ஆண்டு தோறும் பரிசு வழங்குகிறது.
லேடி பேர்ட் ஏரி, அமெரிக்காவின் முன்னாள் குடியரசு தலைவர் லிண்டன் பி. ஜான்சனின் அவர்களின் மனைவியான லேடி பேர்ட் (Lady Bird) அவர்களின் நினைவாக அழைக்கப் படுகிறது. லேடி பேர்ட், நாட்டின் நகரங்களையும் நெடுஞ்சாலைகளையும் அழகுபடுத்துவதற்கான முன்முயற்சி செய்தவர். அதனால், நெடுஞ்சாலை அழகுபடுத்தும் சட்டம், “லேடி பேர்ட்ஸ் பில்” என்று அழைக்கப் படுகிறது. டவுன் ஏரி அழகுபடுத்தும் குழுவின் கௌரவ தலைவராக லேடி பேர்ட் ஜான்சன் இருந்தார்.
நிலஉரிமையாளரால் நன்கொடையாக வழங்கப் பட்ட, மெக்கின்னி அருவி (McKinney Falls State Park), பார்டன் ஸ்பிரிங்ஸ் Barton Springs (குளத்தின் வெப்பநிலை ஆண்டு முழுவதும் சுமார் 68 ° F (20 ° C) மற்றும் 74 ° F (23 ° C) க்கு இடையில் உள்ளது.) ஷில்கர் பார்க் Zilker Park (நிலத்தை நன்கொடையாக வழங்கிய ஆண்ட்ரூ ஜாக்சன் ஷில்கரின் அவர்களின் பெயரால், வழங்கப் படுகிறது.), மேஃபீல்ட் பூங்கா (Mayfield Park) (மயில்களுக்கு பெயர் பெற்ற இந்த பூங்கா டெக்சாஸ் வெளியுறவுத்துறை செயலர் அலிசன் அவர்களின் வீடு மற்றும் மைதானம், பிற்காலத்தில் பூங்காவாக மாற்றப் பட்டது) என பல ஏரிகள் உள்ளன.
அதே போல கொலராடோ ஆற்றின் குறுக்கே காங்கிரஸ் அவென்யூ பாலம் (The Ann W. Richards Congress Avenue Bridge), 360 பாலம் என்ற பென்னிபேக்கர் பாலம் (360 Bridge /Pennybacker Bridge) என பல பாலங்கள் உள்ளன. பொதுவாக அனைத்து ஏரிகளிலும் படகு சவாரி உள்ளது. ஏரிகள் மற்றும் பாலங்கள் ஓரங்களில் நடந்து செல்வதற்கான வசதி உள்ளது. மொத்தத்தில் கொலராடோ ஆறு செல்லும் பாதைகள் அனைத்தும் சுற்றுலா தளமாக வடிவமைக்கப் பட்டு உள்ளன.
காங்கிரஸ் அவென்யூ பாலத்திற்கு (Ann W. Richards Congress Avenue Bridge), டெக்சாஸின் 45 வது ஆளுநரான ஆன் டபிள்யூ. ரிச்சர்ட்ஸின் நினைவாக ஆஸ்டின் நகர சபை இந்த பெயரை சூட்டியது. இந்த பாலத்தின் கீழ்ப்பகுதி, உலகின் மிகப்பெரிய வௌவால் புகலிடமாக உள்ளது. புகைப்படங்களைப் பார்த்து ஏமாந்து நாங்கள் போய் காத்திருந்தோம். நல்ல இருட்டில் தான் அவை வெளிவருகின்றன. அதனால் கண்ணுக்கு மிகவும் மங்கலாக தெரிகிறது. மிகவும் நல்ல காமெரா என்றால் படம் பிடிக்க முடியும் என நினைக்கிறேன்.
நமது ஊரின் வேப்ப மரங்கள் போல, இங்கு பல இடங்களிலும் பீக்கன் (Pecan) மரங்கள் உள்ளன. பீக்கன் என்பது முந்திரி பருப்பு போன்ற ஒரு கொட்டை வகை உணவு. இங்கு உள்ள ஆறாவது தெருவுக்கு முன்னர் பீக்கன் தெரு என்று தான் பெயராம். பீக்கன் (pecan street festival) விழாக்களும் இங்கு நடைபெறுவது உண்டு.
இன்று “உலக இசையின் தலைநகரம்” (“Live Music Capital of the World,”) என்று அழைக்கப்படும் இந்த நகரத்தில், 250 க்கும் மேற்பட்ட இசை அரங்குகள் உள்ளன. உணவு என எடுத்துக் கொண்டால், food trucks எனப்படும் ஆங்காங்கே நிறுத்தி வைக்கப் பட்டுள்ள வண்டிகளில் அனைத்து வகை உணவு விற்பனையாளர்களும் தங்கள் தனித்துவமான உணவை விற்பனை செய்கின்றனர்.
டெக்சாஸின் சன்செட் கேபிடல் (The Sunset Capital of Texas) என்று அழைக்கப்படும் டிராவிஸ் ஏரியின் ஒயாசிஸ் உணவகம் (The Oasis on Lake Travis) சென்று மதிய உணவு சாப்பிடலாம் என புறப்பட்டோம். இந்த இடம் ஆஸ்டினிலிருந்து ஏறக்குறைய 17 மைல் தூரத்தில் உள்ளது. மலைப்பாங்கான இடம் என்பதால் போக ஏறக்குறைய அரை மணி நேரம் எடுக்கும். போகும் வழி எல்லாம் சாப்பிடுவதற்கு இவ்வளவு தூரம் போகவேண்டுமா என்ற எண்ணம் வந்து கொண்டே இருந்தது. ஆனால் போனபின் அது எவ்வளவு இனிமையான அனுபவம் என தெரிந்தது.
ஒயாசிஸ் உணவகத்தில், முன் பதிவு என்பதே கிடையாது. எவ்வளவு கூட்டம் என்றாலும் விரைவில் இடம் கிடைக்கும் அளவிற்கு அவ்வளவு பெரிய உணவகம். உணவகத்தில், திறந்த வெளியிலேயே அதிக இடங்கள் உள்ளன. திறந்த வெளி அமைப்பு ஏரியின் மேலே பெரிய பெரிய பரண்கள் போல் நீட்டிக் கொண்டிருக்கின்றன.
முழு உணவகமும் மிக நேர்த்தியாக வடிவமைக்கப்பட்டுள்ளது. பொதுவாகவே லவ் லாக் என்னும் வழக்கம் நீர்நிலைகளின் அருகில் உண்டு. இங்கும் அது உள்ளது.
சூரியன் மறைவதற்கு ஒரு மணி நேரம் முன் சென்றால் சூரியன் ஏரியில், அடைவதைப் பார்க்கலாம். சில நாட்கள் இசை நிகழ்ச்சியும் உண்டு. அதிக மக்கள் வரக்கூடிய மார்ச் முதல் அக்டோபர் வரை, பெரும்பாலான நாட்கள் இங்கு இசை நிகழ்ச்சிகள் நடைபெறுகின்றன.
நாங்கள் இருந்த இடம் வெளிப்புறமாக இருந்தாலும் மேலே கூரை இருந்தது. எங்களுக்கு முன்னால், பெரிய தற்காலிக குடைகளின் கீழ் பல மேசைகள் இருந்தன. அவற்றுள் ஒருசிலர் மட்டும் சாப்பிட்டு முடிக்கும் தருவாயில் இருந்தனர். திடீரென உணவாக ஊழியர்கள் அந்த குடைகளை, மேசை நாற்காலிகளைக் கழற்றி உள்ளே கொண்டு வந்தனர். அவர்கள் கழற்றி முடிப்பதற்கும் மழை வருவதற்கும் சரியாக இருந்தது. மழை என்றால் அப்படி ஒரு மழை. ‘பொத்துக்கிட்டு ஊத்துதடி வானம்’ என்பதான மழை.
“திக்குகள் எட்டும் சிதறி தக்கத்
தீம்தரிகிட தீம்தரிகிட தீம்தரிகிட தீம்தரிகிட
பக்க மலைகள் உடைந்து வெள்ளம்
பாயுது பாயுது பாயுது
தக்கை யடிக்குது காற்று தக்கத்
தாம்தரிகிட தாம்தரிகிட தாம்தரிகிட தாம்தரிகிட
என்ற பாரதியின் மழைப்பாடல் வர்ணனை போலவே மழைக்காட்சி இருந்தது.
உணவகத்தைச் சுற்றி உள்ள இடங்களும் அழகாக வடிவமிக்கப் பட்டுள்ளன. மழை இல்லை என்றால் சுற்றிப் பார்த்திருக்கலாம். மழை மணிக்கணக்கில் நிற்பதாக தெரியவில்லை. அதனால் ஆஸ்டின் திரும்பினோம். காரில் ஏறிய பின், மழையின் உக்கிரம் இன்னும் அதிகமாகத் தெரிந்தது. முன்னால் செல்லும் கார் விளக்கின் வெளிச்சத்தில் ஒருவாறாக காரை ஓட்டி வந்து சேர்ந்தோம்.
ஆஸ்டினைப் பொறுத்தவரை ஒயாசிஸ் உணவகம் தவிர, பார்க்க வேண்டிய பெரும்பாலான இடங்கள் அருகருகிலேயே இருக்கின்றன. அதனால், கேபிடல் கட்டடம், இருக்கும் இடத்திற்கு அருகில் அறை எடுத்து தங்கினால் நாம் விரும்பும் நேரம், வெய்யில், குளிர் குறைவாக இருக்கும் போது நடந்து சென்று பார்க்கலாம். கார் கூட தேவை இருக்காது. மிகவும் தேவை என்றால் வாடகை கார் எடுத்துக் கொள்ளலாம்.
அடுத்த வாரம்..சான் ஃபிரான்சிஸ்கோ.
தொடரின் முந்தைய பகுதி:
படைப்பு:
பாரதி திலகர்
தீவிர வாசிப்பாளர், பயணக் காதலர்; தொன்மை மேல் பெரும் ஆர்வம் கொண்டவர். அயல்நாட்டில் வசித்து வந்தாலும் மண்ணின் வாசம் மறவாமல் கட்டுரைகள் எழுதிவருகிறார்.