வெளியூரில் தனிக் குடும்பமாக வசித்துவரும் மகன், தகவல் எதுவும் தெரிவிக்காமல் வீட்டுக்குள் நுழைவதைக் கண்டு, பதற்றத்தை வெளிக்காட்டிக் கொள்ளாமல், ‘வா’ என்றார் அவருடைய அம்மா. மகனிடம் கேள்விகள் எதுவும் கேட்காமல் அமைதி காத்தார்.
மதியம் சமைத்துக்கொண்டிருந்த அம்மாவிடம், “அம்மா, சிறு வயதில் வீட்டில் அவ்வளவாக வசதி இல்லை. சிரமத்துடனே வளர்ந்தேன். நான் படித்து முடிப்பதற்குத் தேவையான பணத்திற்கு மிகவும் கஷ்டப்பட்டோம். பின்பு வேலையில் சேர்ந்து, ஓரளவுக்கு மேலே வரும் வேளையில் அப்பாவிற்கு மருத்துவச் செலவு வந்தது. எனக்கு திருமணம் ஆன பின், எல்லாம் சரியாகிவிட்டது என நினைக்கையில், அப்பா தவறி விட்டார். இப்போது ஒரு வாரத்திற்கு முன்னால், இருந்த வேலையும் போய்விட்டது. என்னை வேலையில் இருந்து நீக்கிவிட்டார்கள். இப்படிப் பிரச்னைகள் வந்துகொண்டே இருந்தால் எப்படி வாழ்வது?.”
அம்மா மெதுவாகப் புன்னகை செய்துவிட்டு, மதியத்திற்கு உருளைக்கிழங்கு பொரியல் செய்கிறேன், கொஞ்சம் நறுக்கிக் கொடுக்கிறாயா என்று கேட்டார்.
மகன் உருளைக்கிழங்கு நறுக்கிக்கொண்டு இருக்கும் போது,
”இதோ, இந்த உருளைக்கிழங்குகளை நீ பொரியலுக்காக நறுக்குகிறாய். இவை தட்டில், உணவில் ஒரு பகுதியாக பரிமாறப்படுகிறது இல்லையா? சில உருளைக்கிழங்குகள் நீளமாக நறுக்கப்பட்டு ஃப்ரென்ச் ஃப்ரை ஆக நொறுக்குத்தீனி ஆகிறது.
சில உருளைக்கிழங்குகள் சீவப்பட்டு எண்ணெயில் வறுத்து, சிப்ஸ் ஆகின்றன. இது முறையாகப் பராமரிக்கப்பட்டால் பல நாட்களுக்கு அப்படியே இருக்கும்.
சில உருளைக்கிழங்குகள், அப்படியே இருந்து அழுகியும் போகலாம். எல்லாம் ஒரே கிழங்குகள் என்றாலும், அவற்றின் பயன்பாடுகள் வெவ்வேறானவை. முடிவில் அவற்றின் வடிவமும் அவற்றின் பக்குவமும் ருசியும் அவற்றுக்கான விலையும் வேறு. ‘நம் வாழ்க்கையிலும் நாம் சந்திக்கும் ஒவ்வொரு சவாலும் இப்படித்தான், நம்மை வடிவமைத்துக்கொண்டே, நம்மை பக்குவப்படுத்திக்கொண்டே இருக்கின்றன” என்றார் அம்மா.
ஆனாலும் என் கஷ்டம் மிகக் கொடுமையானது. என்னால் இந்த விஷயத்தை மனைவியிடம்கூட சொல்ல முடியாமல் தவிக்கிறேன். நான் நன்றாக தூங்கி பல நாட்கள் ஆகின்றன என்றார் மகன்.
உண்மைதான் கையாள்வதற்கும், கடந்து போவதற்கும் கஷ்டமாகத்தான் இருக்கும். ஆனாலும், “நீங்கள் எவ்வளவு ஆழமாக கீழே விழுகிறீர்களோ, அவ்வளவு உயரமாக மேலெழுவீர்கள்” என்கிறது ஒரு சீனப் பழமொழி. எனவே மேலெழுவதற்கான வாய்ப்புகளை தேடு” என்றார் அம்மா.
“இதிலிருந்து நான் மேலெழுந்து நன்றாக இருப்பேன் என எந்த அடிப்படையில் சொல்லுகிறீர்கள், அம்மா?” என்றார் மகன்.
“நாம் வாழ்கின்ற இந்த பிரபஞ்சம், விரிந்துகொண்டே செல்கிறதா? அல்லது சுருங்கிக்கொண்டே செல்கிறதா?” எனக் கேட்டார்.
“விரிந்துகொண்டுதான் செல்கிறது. நாம் விரிந்துகொண்டே இருக்கிற பிரபஞ்சத்தில்தான் (living in an ever-expanding Universe) வாழ்ந்துகொண்டிருக்கிறோம்” என்றார் மகன்.
“அப்படியானால் அதே விதிதான் நமக்கும், ஏனென்றால் நாம் இந்த பிரபஞ்சத்தின் ஒரு பகுதிதான். அதாவது நாமும் விரிந்துகொண்டே அல்லது வளர்ந்துகொண்டேதான் செல்வோம்.”
“அப்படியானால் எல்லா சவால்களுக்கு பின்னாலும் வெற்றி இருக்கிறதா?”
“இல்லையடா கண்ணா, எல்லா சவால்களுக்கு முடிவிலும் வளர்ச்சிதான் இருக்கிறது. அந்த வளர்ச்சி என்பது குறைந்தபட்சம் சவால்கள் மூலம் கற்றுக்கொள்ளுதல். அதிகபட்சமாக சாதனை மனிதர்கள்.”
“இருந்தாலும் எனக்கு வந்திருப்பது பெரிய துன்பம். இந்தக் கஷ்டம் எனக்குத் தேவையில்லை. எனக்கு மட்டும் ஏன் இப்படி?”
“1709இல் ஒரு குழந்தை நலமுடனே பிறந்தான். மூன்று வயது குழந்தையாக இருக்கும்போது, தந்தையின் ஒர்க்ஷாப்பில் விளையாடிக்கொண்டிருந்தான். அங்கு ஏற்பட்ட விபத்தில் ஒரு கண்ணில் காயம் ஏற்பட்டு, பார்க்கும் திறனை இழந்தான். சில மாதங்களில் அந்தப் பார்வை இழந்த கண்ணினால் ஏற்பட்ட தொற்றினால், அடுத்த கண்ணின் பார்வையும் பறிபோகிறது. அந்தக் குழந்தை வளர்ந்து பார்வையற்றோருக்கான பிரெய்ல் எழுத்துகளை வடிவமைக்கும்போது பதினைந்தே வயதுதான். இன்றளவும் லூயி பிரெய்ல் என்ற அந்தப் பதினைத்து வயது சிறுவன் செய்தது சாதனைதான். பார்வை இழந்தவர்கள் கல்வி கற்க உதவிக்கொண்டே இருக்கிறது.
1780இல் ஒரு பெற்றோருக்குப் பெண் குழந்தை பிறந்தது. பிறக்கும் போது, குழந்தை நல்ல உடல்நலத்துடனே இருந்தது. சுமார் ஒன்றரை வயது ஆகும்போது ஏற்பட்ட உடல்நலக்குறைவால், கேட்கும் திறனும் பார்க்கும் திறனும் அடியோடு போய்விடுகிறது. கேட்கும் திறனில் அல்லது பார்க்கும் திறனில் ஏதோ ஒன்று இல்லை என்றாலே எவ்வளவு கஷ்டம். இரண்டும் இல்லாமல், அந்தப் பிஞ்சுக் குழந்தை எவ்வளவு கடினமாக வளர்ந்திருக்க வேண்டும். நம்மைப் போல் எளிதாக அவரால் எதையும் கற்றுக்கொள்ள முடியவில்லை. ஒவ்வொரு வார்த்தையையும் ஆசிரியரின் தொண்டையின் அதிர்வுகளை, தன் கையை வைத்து உணர்ந்துதான் கற்றுக்கொண்டார். அவர்தான் புகழ்பெற்ற பேச்சாளர் மற்றும் எழுத்தாளர் ஹெலன் கெல்லர். தன்னுடைய நூலில் அவர் இவ்வாறு குறிப்பிடுவார், ‘நான் வார்த்தைகள் இருக்கின்றன என்பதை அறிந்திருக்கவில்லை; மொழி இருக்கிறது என்பதையும் அறியவில்லை; ஒவ்வொரு பொருளுக்கும் ஒரு பெயர் இருக்கிறது; ஒவ்வொரு பொருளையும் இங்கு பெயரிட்டுதான் அழைக்கிறார்கள் என்பதையும் அறிந்திருக்கவில்லை’ எனக் குறிப்பிடுவார். எவ்வளவு கடினமான சவாலை அவர் கடந்திருக்க வேண்டும்.
லூயி பிரெய்ல், ஹெலன் கெல்லர் இருவரும் தங்கள் வாழ்வின் சவால்களை ஏற்றுக்கொண்டார்கள். தழுவிக்கொண்டார்கள் அவ்வளவே. அதுதான் அவர்கள் சாதனை படைப்பதற்குக் காரணமாக இருந்தது; தனக்கான தீர்வு மட்டுமன்றி, சமுதாயத்திற்கான தீர்வையும் தர முடிந்தது. இன்றளவும் அவர்களைப் பற்றி பேசி வருகிறோம்.
அவர்கள், எனக்கு மட்டும் ஏன் இப்படி எனக் கேட்டிருந்தால், ஒட்டுமொத்த சமுதாயத்திற்கு நம்பிக்கை அளித்துக் கொண்டிருப்பவர்களாக, இவ்வளவு புகழ்பெற்ற பிரபலங்களாக, மற்றவர்களுக்கு முன்னுதாரணமாகத் தங்கள் வாழ்வை வாழ்ந்திருக்க முடியாதுதானே?
மேலும், நமக்கு நல்லது நடக்கும்போது, எனக்கு மட்டும் ஏன் என்று கேட்டு நம்மை குழப்பிக்கொள்ளவில்லை” என்று சொல்லி முடித்தார் அம்மா.
மகன் மீண்டும், “அப்படியானால் எல்லா சவால்களையும் நான் ஏற்றுக்கொள்ள வேண்டுமா?”
“தேவையில்லை. நீ வாடகைக்குக் குடியிருக்கும் வீட்டில், வீட்டு உரிமையாளர் அதிகம் தொந்தரவு தந்தால், அதை ஏற்றுக்கொள்வதற்கு அவசியம் இல்லைதானே?. எளிதாக வீட்டை மாற்றிவிட்டுச் செல்லலாம். அதே போல்தான், சில சவால்களை விட்டுவிடலாம்; சிலவற்றைத் தேர்ந்தெடுத்தும் கொள்ளலாம். சிலவற்றை எதிர்கொண்டே ஆக வேண்டும்.”
“இதிலிருந்து எப்படி மீள்வது? மனைவிக்கு வேறு இப்போது மூன்று மாதமாகிறது. குழந்தை பிறப்பு, அதற்கான செலவு, நினைத்தாலே பயமாக இருக்கிறது. புதிதாக வேலை கிடைக்கும் வரை எல்லாவற்றையும் சமாளிப்பதும் மிகவும் கஷ்டமாக இருக்கிறது, என்னால் முடியவில்லை” என்றார் மகன்.
“சிறு வயதில், முதன் முறையாக வாய்ப்பாட்டு புத்தகத்தைப் பார்த்ததும், ‘ஐயோ, என்னால் முடியாது என்றுதான் சொன்னாய். பிறகு சரளமாக எல்லா வாய்ப்பாட்டையும் சொல்ல ஆரம்பித்தாய்.’
அதே போல்தான், நீ ஒவ்வொன்றையும் கையாளப் படிக்கிறாய், எல்லாம் சில காலத்திற்குப் பிறகு சிறிதாகத் தோன்றும்.”
“நம்மால் கையாள முடியாத துன்பத்தை வாழ்க்கை ஒருபோதும் தருவதே இல்லை. ஏனென்றால் வாழ்க்கை நம்மை மிகவும் நேசிக்கிறது.”
“சரி, உயிர் வாழ என்ன வேண்டும்?” அம்மா கேட்டார்.
“உயிர் வாழ உணவு, உடை, உறைவிடம், இவற்றை ஏற்படுத்திக் கொள்ள பணம்.”
“இல்லை கண்ணா, உயிர் வாழ மிக முக்கிய தேவயான ஒன்று காற்று. ஆனால், ஒவ்வொரு முறை மூச்சை வெளிவிடும் போதும், நம் அடுத்த மூச்சிற்கான காற்று நமக்குக் கிடைக்குமா, இல்லை அது இருக்கிறதா என்றும் கவலைப்பட்டுக் கொண்டிருப்பதில்லை. ஏனென்றால் காற்று கிடைக்கும் என்று நமக்குத் தெரியும். இதுவரையும் உனக்குத் தேவையானவற்றை எல்லாம் தந்து இவ்வளவு செளகரியங்களையும் தந்திருக்கின்ற வாழ்க்கை இன்னும் உனக்குத் துணை நிற்கும் என்று நம்பு என முடித்தார் அம்மா.
வாழ்க்கையில் நம் ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு மாதிரியான, தனித்துவமான சவால்கள். எல்லாமே தனிச்சிறப்புடன் கூடியவை. நாம் எப்போதும் நினைவில்கொள்ள வேண்டியது இதுதான், அடுத்த மூச்சிற்கான காற்று எப்படிச் சுலபமாக கிடைக்கிறதோ, அவ்வாறே வாழ்க்கை வழிகாட்டுதலையும் தந்துகொண்டேதான் இருக்கிறது. எனவே, சவால்கள் நம்மை வடிவமைத்துக்கொண்டே இருக்கையில், நாம் வாழ்வைக் கொண்டாடலாம், வாங்க!”
(தொடரும்)
படைப்பாளர்:
ஜான்சி ஷஹி
மனநல ஆலோசகர். மன நலத்திற்கான தெரப்பிகளையும் ஆற்றுப்படுத்துதலையும் வழங்கி வருகிறார். வாழ்க்கையை மகிழ்ச்சியாக வாழவும், பிடித்த எதிர்காலத்தை அமைத்துக்கொள்ளவும், பொது மக்களுக்கு பயிற்சிப் பட்டறைகளை நடத்திவருகிறார். இவர் பெங்களூர் கிரைஸ்ட் பல்கலைக்கழகத்தில் மாணவர் மன நல ஆலோசகராக (student counsellor) பணியாற்றியது குறிப்பிடத்தக்கது.