Site icon Her Stories

நம்பிக்கை கொடுத்த இரண்டாவது வாழ்க்கை!

வழக்கம் போலவே 6வது கீமோதெரபிக்குத் தயாராகிவிட்டேன். அப்பாடா இத்துடன் இனி கீமோதெரபி கிடையாது என்று மனம் சந்தோஷத்தில் துள்ளிக் குதித்தது. அனைத்து ரத்தப் பரிசோதனைகளும் முடிந்த பின்னர்தான் இந்த முறை கீமோதெரபி கொடுக்க முடிவு செய்தனர். ரத்த செல்களின் எண்ணிக்கை குறையவில்லை.

என்னுடன் ராஜேஸ்வரி, தர்மாம்பாள் வந்தனர். எல்லன் மருத்துவமனையில் மீண்டும் ரத்தப் பரிசோதனைகள் செய்யப்பட்டன. எனவே இந்த முறை 3 தடவை ரத்தப் பரிசோதனைகள். இதில் எங்காவது தவறு நடந்துவிட்டால், ஒரு முறை ரத்தம் குறைவாக, அதாவது Hb குறைவாகவோ, ரத்த செல்களின் எண்ணிக்கை குறைவாகவோ இருக்கக்கூடாது என்பதற்காகத்தான். குறிப்பிட்ட 21வது நாளில் கீமோதெரபி கொடுத்தே ஆக வேண்டும். ரத்தம் குறைந்தால் ரத்தம் ஏற்றி, மறுநாள்தான் கீமோதெரபி கொடுக்கப்படும். ஆனால் இப்படிப்பட்ட பிரச்னைகளிலிருந்து கீமோதெரபி காலத்தில் தப்பித்துவிட்டேன். ஆனால், இந்தக் காலகட்டத்தில் என்னைப் பார்க்க வந்த கமருதீன் அதிர்ந்தே போய்விட்டார். நான் கட்டிலில் படுத்திருப்பதுகூடத் தெரியாமல், கட்டிலோடு கட்டிலாகக் கிடந்தேன்.

கீமோதெரபி முடிந்தது, இனி எல்லாம் சுகமே என்ற நினைப்பே அவ்வளவு மகிழ்ச்சியாக இருந்தது. ஆனால், என் உடல் தொடர்ந்து எடுத்துக்கொண்ட கீமோதெரபியால் மிகவும் பலவீனமாக இருந்தது. கீமோ முடிந்த பின்னர், நாங்கள் ராமகிருஷ்ணா மருத்துவமனைக்குச் சென்று மருத்துவர் கார்த்திகேஷைப் பார்த்து, கீமோதெரபி ரிசல்ட் காட்டிவிட்டு, இன்னும் இந்தப் புற்றுநோய் சிகிச்சையில் என்ன பாக்கி இருக்கிறது, நான் எப்படி நடந்து கொள்ள வேண்டும், என்ன செய்ய வேண்டும், என்ன மருந்து தரப்போகிறார் என்கிற எதிர்பார்ப்புகளுடன் சென்றேன். எனது ரிசல்ட் எல்லாம் பார்த்த கார்த்திகேஷ் சந்தோஷப்பட்டார். உடல் பலவீனத்துக்காக சப்போர்டிவ் மெடிசின் எனப்படும் வைட்டமின் மாத்திரைகள், கீமோதெரபியில் எலும்புகளில் ஏற்படும் கால்சியம் தேய்மானத்தைச் சரிக்கட்ட கால்சியம் மாத்திரைகளை எழுதித் தந்தார். வைட்டமின் E எடுத்துக்கொள்ளச்  சொன்னார். காலையில் Tamoxifen 20 mg மாத்திரை சாப்பிடுங்கள், இனி ஏதாவது புற்றுநோய் செல்கள் வளர்ந்தால், அதனைக் கட்டுப்படுத்தும் என்றார். Tamoxifen மாத்திரை 35 வயதுக்கு மேல் உள்ள பெண்களுக்குத்தான் கொடுப்பார்கள். அதாவது மாதவிடாய் நின்ற பெண்களுக்கு மட்டுமே கொடுப்பார்கள்.

வெயிலில் 20 நிமிடம் நடக்கச் சொன்னார். அப்போதுதான் உடலுக்குத் தேவையான வைட்டமின் D கிடைக்கும். இதனைப் பொதுவாக உணவின் மூலம் எடுத்துகொள்வது சிரமம். இந்த வைட்டமின்தான் உடலுக்குத் தற்காப்பு சக்தியைத் தரும். மேலும் புற்றுநோயை எதிர்த்துப் போராடும் குணம் உள்ளது வைட்டமின் D. (இப்போது வைட்டமின் D குறைவினாலும்கூட மார்பக புற்றுநோய் வருகிறது என்று ஆய்வுகள் தெரிவிக்கின்றன.) நான் உடல்ரீதியாக நன்றாக இருக்கிறேன் என்றார். கொட்டிய முடி, இன்னும் ஒரு மாதத்தில் வளர ஆரம்பிக்கும் என்றார். மேலும் சுயமாகவே அடிக்கடி மார்பகப் பரிசோதனை செய்து கொள்ள வேண்டும். அதில் ஏதாவது கட்டி மாதிரி தென்பட்டால் உடனே மருத்துவமனைக்கு வரவேண்டும் என்றார்.

“அந்த டெஸ்ட் எடுத்த ஸ்லைடுகள் எல்லாம் பத்திரமாக வைத்திருங்கள், எதிர்காலத்தில் ஏதாவது தேவைப்படலாம். ஆனாலும் உணவிலும் உடற்பயிற்சியிலும் கவனம் தேவை. மேலும் மூன்று மாதத்துக்கு ஒருமுறை வந்து காண்பித்துவிட்டுச் செல்லுங்கள். கீமோதெரபியினால் மூளையில் மெமரி செல்கள் பாதிப்படைந்து இருக்கும். அதனால் மறதி ஏற்படும் வாய்ப்பு உள்ளது. எனவே, இதனைச் சரிக்கட்ட மூளையைத் தொடர் நடவடிக்கைகளில் வைத்துக் கொண்டு அதனைச் சரி செய்ய முடியும்” என்று சொல்லி, என்னை அனுப்பி வைத்தார் டாக்டர்.

டாக்டர் கார்த்திகேஷைத்தான் என் இரண்டாம் தந்தை என்பேன். எனக்கு அறுவை சிகிச்சை செய்து, என் உயிரை மீட்டுக்கொடுத்தார் என்பதால். அறுவை சிகிச்சை துல்லியமாகச் செய்யாவிட்டால், புற்றுநோய் செல்கள் மற்ற இடங்களுக்குப் பரவி, வேறு வகை புற்றுநோயை உருவாக்கி விடும். இந்த மாதிரி வரும் புற்றுநோயைத்தான் secondaries என மருத்துவர்கள் அழைக்கின்றனர். ஒருக்கால் அந்த புற்றுநோய் செல்கள், ஏதாவது அந்த இடத்தில் இருந்தால், அதனை அழிப்பதற்குத்தான் கதிர்வீச்சு சிகிச்சை ( Radiation) கொடுக்கப்படுகிறது. எனக்குக் கதிர்வீச்சு சிகிச்சை கொடுக்கப்படவில்லை.

எனக்கு வந்த மார்பகப் புற்றுநோயின் பெயர் Invasive Ductal Carcinoma. இதில் 11 வகைப் புற்றுநோய்கள் உள்ளன.

மார்பகப் புற்றுநோய் வகைகள்:

  1. Ductal Carcinoma (Ductal carcinoma in situ) DCIS:
    டக்டல் கார்சினோமா இன் சிட் (டிசிஐஎஸ்) என்பது ஆக்கிரமிப்பு அல்லாத புற்றுநோய். தாய்ப்பால் குழாயின் புறணியில் உள்ள அசாதாரண செல்களின் அமைப்பு.
  2. Invasive Ductal Carcinoma (IDC): ஊடுருவும் டக்டல் கார்சினோமா (IDC) என்பது ஓர் ஊடுருவும் புற்றுநோய். பால் குழாய்களில் உருவாகத் தொடங்கிய அசாதாரண புற்றுநோய் செல்கள் குழாய்களுக்கு அப்பால் மார்பகத் திசுக்களின் மற்ற பகுதிகளுக்குப் பரவுகின்றன. ஊடுருவக்கூடிய புற்றுநோய் செல்கள் உடலின் மற்ற பகுதிகளுக்கும் பரவக்கூடும். இது சில நேரத்தில் ஊடுருவக்கூடிய குழாய் புற்றுநோய் என்றும் அழைக்கப்படுகிறது. (Infiltrative Ductal Carcinoma.) இதுதான் மார்பகப் புற்றுநோயில் 80% ஆக இருக்கிறது. இதுதான் பொதுவாகப் பெண்கள் மற்றும் ஆண்களுக்கும் வரக்கூடிய புற்றுநோய் வகை.
  3. Lobular Carcinoma InSitu ( LCIS)
  4. Invasive Lobular Cancer (ILC)
  5. Triple Negative Breast Cancer : 15% புற்றுநோய்கள் இந்த வகை
  6. Inflammatory Breast Cancer : இது மிகவும் வேகமாக பரவக்கூடிய மார்பக புற்றுநோய்
  7. Metastatic Breast Cancer: இது 4 வது நிலையில் உள்ள புற்றுநோய்
  8. Breast Cancer During Pregnancy
  9. Medullary Carcinoma : 3-5 % இந்த வகை புற்றுநோய்
  10. Tubular Carcinoma: 2% இந்த வகை புற்றுநோய்
  11. Paget Disease Of The Breast Or Nipple: மார்பக முலையில் வரக்கூடியது. மிகவும் அரிதானது.

ஒவ்வொரு புற்றுநோயும் ஒவ்வொரு மாதிரி இருக்கும், அது வளரும் தன்மை, வளரும் இடம், பாதிப்பின் இடங்கள், பாதிப்பின் தன்மை என்பது வேறுபடும். ஆனால், பொதுவாக எல்லாப் புற்றுநோய்க்கும் கீமோதெரபியும் அதன் மருந்துகளும் ஒன்றுதான். ஆனால், மனிதர்களின் உடல், வாகு, தன்மை, புற்றுநோய் இவற்றுக்குத் தகுந்தாற்போல கீமோதெரபியின் அளவும் காலமும் எண்ணிக்கையும் மாறுபடும்.

எனக்குப் புற்றுநோய்க் கட்டியை அறுவை சிகிச்சை செய்து எடுத்த பின்னரே, கீமோதெரபி கொடுக்கப்பட்டது. (எனக்கு இருந்த கட்டியின் சைஸ் 3 x 2செ.மீ). இந்தச் சிகிச்சையின் அறிவியல் பெயர் Adjuvant Therapy. ஆனால், சிலருக்குப் புற்றுநோய்க் கட்டி பெரியதாக இருந்தால், கட்டியின் அளவை குறைக்க முதலில் கீமோதெரபி கொடுக்கப்படும். எனவே இதில் முதலில் 5 கீமோதெரபி கொடுத்து, அதன் பின்னர் அறுவை சிகிச்சை செய்து, பிறகும் கீமோதெரபியும் கொடுக்கப்படும். இது Neo-Adjuvant Therapy.

இப்போது பொதுவாக எல்லா வகை மார்பகப் புற்றுநோய்க்கும் கதிர்வீச்சு சிகிச்சை (Radiation Therapy) கொடுக்கப்படுகிறது. இப்படி இன்று புற்றுநோய் சிகிச்சையில் நவீன மருந்துகள் / கருவிகள் வந்துவிட்டன. சிகிச்சை அவரவர் புற்றுநோய் தன்மை, மருத்துவர் போன்றவை பொறுத்து மாறுபடும். இப்போது புற்றுநோய் எவ்வளவு பரவியுள்ளது என்பதை அறிய PET (A positron emission tomography (PET) scan) ஸ்கேன் எடுக்கப்படுகிறது.

மார்பகப் புற்றுநோயும் வாழ்நாள் நீட்டிப்பும்

கீமோதெரபி முடிந்ததும் புற்றுநோய் சரியாகிவிடும் என்றெல்லாம் இல்லை. டாக்டரும் அப்படிப் புற்றுநோய் முழுமையாக குணமாகும் எனச் சொல்லவில்லை. இன்னும் கட்டாயமாக 5 ஆண்டுகள் வரை இருப்பேன் என்றார். அதுதான் உண்மை. மார்பகப் புற்றுநோய் வந்தவர்கள் சரியான மருத்துவ சிகிச்சையில் அறுவை சிகிச்சை, கீமோதெரபி, கதிர்வீச்சு சிகிச்சை எல்லாம் கொடுத்திருந்தால், அவர்களில் 85% பேர் வாழ்நாள் நிச்சயம் 5 ஆண்டுகாலம் நீட்டிக்கப்படும். இந்த உண்மை தெரிந்தே நான் இன்று வரை சந்தோஷமாகவே வாழ்ந்துகொண்டு இருக்கிறேன். எனது மகிழ்ச்சியும் எனது வாழ்நாளை நீட்டிக்கும் என்பதும் அறிவியல் உண்மை.

பொதுவாக இரண்டு ஆண்டுகள் கழித்து, மார்பகப் புற்றுநோய் வந்தவர்களுக்கு நுரையீரல், கல்லீரல், எலும்பு என வேறு இடங்களில் secondaries வர வாய்ப்பு உண்டு. மார்பகப் புற்றுநோய் வந்து அறுவை சிகிச்சை, கீமோதெரபி, ரேடியேஷன் தெரபி முடிந்தவர்களுக்கும்கூட , மீண்டும் 20 ஆண்டுகளில் எப்போது வேண்டுமானாலும் புற்றுநோய் செல்கள் கிளர்ந்து எழுந்து வேறு இடங்களில் வரலாம். மேலும் எந்தப் புற்றுநோயிலும் முழுவதும் குணம் என்றே கிடையாது. எப்போது வேண்டுமானாலும் அது எட்டிப் பார்க்கலாம். நமது உடல்நிலை தற்காப்பு சக்தி குறைந்துவிட்டால், மார்பகப் புற்றுநோய் சிகிச்சை முடிந்து , 10 ஆண்டுகள் வாழ்நாள் நீட்டிப்பு என்பது 60% பேருக்கு உள்ளது. மார்பகப் புற்றுநோய் சிகிச்சை முடிந்து 20 ஆண்டுகள் வரை வாழ்பவர்கள் 10-15% பேர் மட்டுமே. இதன் முக்கிய காரணம் புற்றுநோய் வந்தவர்களும், புற்றுநோய் சிகிச்சை முடித்தவர்களும், மனதளவில் எதிர்மறை உணர்வு கொண்டு வாழ்வதுதான். நான் நிச்சயம் வாழ்வேன், வாழ்வதற்காகத்தான் பிறந்து இருக்கிறேன் என்கிற மன உறுதியும் நேர்மறை உணர்வும் இருந்தால், அவர்களின் வாழ்நாள், புற்றுநோய்க்குப் பின்னரும் நீண்ட ஆண்டுகள் நீட்டிக்கப்படும்.

இதனால்தான் புற்றுநோய் சிகிச்சை, வேதி சிகிச்சை, கதிர்வீச்சு சிகிச்சை, ஹார்மோன் சிகிச்சை முடிந்தாலும், புற்றுநோய் வந்தவர்கள், புற்றுநோய் survivors தொடர் சிகிச்சையை மருத்துவர் சொல்லும்படி மேற்கொள்ள வேண்டும். முதல் ஓர் ஆண்டு 3 மாதங்களுக்கு ஒரு முறையும், அடுத்த 4 ஆண்டுகள் 6 மாதங்களுக்கு ஒரு முறையும் பரிசோதனைக்கு மருத்துவமனைக்குச் செல்ல வேண்டும்.

இப்படி எனது புற்றுநோயும் சிகிச்சையும் 2010 ஆம் ஆண்டில் என்னை மிகவும் படுத்தி வைத்துவிட்டது. ஆனாலும் வென்றது நான்தான். 2011 ஆம் ஆண்டு எனக்கு புது நம்பிக்கையை உருவாக்கும் என்றுதான் நம்பிக்கொண்டு இருந்தேன். அப்படியே நடந்தும் விட்டது.

2011ஆம் ஆண்டு தைப் பொங்கலுக்கு நானே சமைத்தேன். அதற்கு முன்னர் நான் பணியாற்றும் பழனி ஆண்டவர் திருக்கோயில் சிகை திருத்தும் சங்கத்தின் செயலர் நாட்ராயன் வீட்டுக்கே வந்து எனக்கு மொட்டை போட்டார். அதுவரை நான் தலையில் அணிந்து இருந்தது விக்தான். ஆனால், அதனை யாரும் விக் என்று கண்டுபிடிக்க முடியாது. கீமோதெரபி முடிந்ததும் முடி மளமளவென்று வளரத் தொடங்கியது. பிப்ரவரி மாதம் புதுச்சேரி தோழர் போப்பு என்னைப் பார்க்க வந்தார். அவரோடு கொஞ்ச தூரம் நடந்தேன். வாழ்க்கையை நேர்மறைச் சிந்தனையால் 2011 இல் ஒளிமயமாக்கினேன்.

(இன்னும் பகிர்வேன்)

படைப்பாளர்:

மோகனா சோமசுந்தரம்

ஓய்வுபெற்ற பேராசிரியர். தமிழ்நாடு அறிவியல் இயக்கத்தின் முன்னாள் தலைவர். 35 ஆண்டுகளாக அறிவியலை மக்களிடம் பரப்பி வருகிறார். துப்புரவுத் தொழிலாளர்களுக்காகப் போராடி வருகிறார். ‘மோகனா – ஓர் இரும்புப் பெண்மணி’ என்ற இவரின் சுயசரிதை சமீபத்தில் வெளிவந்து, வரவேற்பைப் பெற்றுள்ளது. அறிவியல் நூல்கள், கட்டுரைகள் எழுதியிருக்கிறார்.

Exit mobile version