வயிரமுடைய நெஞ்சு வேணும் – 1
இந்த உலகம் சரிபாதி பெண்களால் நிரம்பி இருந்தாலும் அவர்களது இடம் என்னவோ அப்படி இல்லை. ஆண்களுக்கு அடுத்த இடத்தையே பெண்களுக்குத் தர விரும்புகிறது சமூகம். ஆனால் அன்றாட வாழ்க்கையில் பிரச்னைகளையும் வலிகளையும் எதிர்கொள்ளும் சூழல் பெண்களுக்கே அதிகம். இந்தச் சூழலை நமது சமூகம் பெண்கள் குழந்தைகளாக வளரும் போதிருந்தே இயல்பாகவே அறிமுகப்படுத்துவதோடு, அதை நியாயப்படுத்தவும் செய்கிறது.
அப்படியான நிலையில் பள்ளிகளில் பெண் குழந்தைகளுக்கான கவனிப்பில் அணுகுமுறையில் கூடுதல் கவனம் தேவைப்படுகிறது என்பதை வலியுறுத்தவே உங்களுடனான இந்தப் பகிர்வு.
அது ஒரு பெண்கள் பள்ளி .
அன்று காலை மிக உற்சாகமாக லட்சுமி டீச்சர் ஒன்பதாம் வகுப்பிற்குள் நுழைகிறார், எப்போதும் போல.
“குட் மார்னிங் ஸ்டூடன்ஸ்…”
“குட் மார்னிங் மிஸ்!”
“எப்படி இருக்கீங்க?”
“நல்லா இருக்கோம் மிஸ்… நீங்க?”
வழக்கமான வகுப்பறை உரையாடல்களுடன் வகுப்பு தொடங்கியது.
கணக்கு பாடத்துக்கு எப்போதும் ஒரு கூடுதல் ஊக்கம் தேவைப்படுவதால், அந்த வகுப்பின் 40 மாணவிகளையும் ஒருங்கே கவனிக்கவைக்க சில வேலைகளைச் செய்கிறார் லட்சுமி ஆசிரியர்.
லட்சுமி பல நாள்களாக அந்தப் பதின்பருவக் குழந்தைகளிடம் பேசிப் பேசிப் புரிய வைத்ததால், சிலரது கண்கள் எப்போதும் சிரித்துக் கொண்டே இருந்தன. மற்றும் பலரது முகங்களும் பலவிதத் தோற்றப் பொலிவுடன் காணப்பட்டன. பலரது முகங்களில் புன்சிரிப்பு, சிலரது முகங்களில் வருத்தம் தோய்ந்த ஏக்கம். ஒரு வழியாக சாப்பாடு, போக்குவரத்து, என ஒவ்வொன்றாகக் கேட்டுவிட்டு, அல்ஜீப்ரா தலைப்பை போர்டில் எழுதி பல்லுறுப்புக் கோவையை அறிமுகம் செய்தபோது, ஒரே ஒரு மாணவியின் முகம் மட்டும் அல்ஜீப்ராவுக்குத் தயாராகவில்லை.
இது பாடம் குறித்த பிரச்சனையில்லை அதையும் தாண்டி வேறு என்று புரிந்து கொள்ளும் லட்சுமி, மற்ற மாணவிகளை, “கிளாஸ் வொர்க்கில் இதை எழுதுங்க”, என்று கூறிவிட்டு, “வடிவு இங்க வாம்மா”, என்று தன் அருகில் அழைத்தார். வடிவு தனது ஆசிரியரை நெருங்கி வர, வடிவின் இடதுகையை லட்சுமி டீச்சர் வாஞ்சையாகப் பிடித்து, “என்ன ஆச்சு உனக்கு?” என்றார்.
“ஒன்றுமில்லை மிஸ்”, என்று சொல்லும்போதே வடிவின் கண்கள் கலங்க ஆரம்பித்தது. “நான் இருக்கேன் சொல்லுடா, பாத்துக்கலாம்”, என்று சொன்னதுதான் தாமதம், வடிவு லட்சுமியின் மடியில் முகம் புதைத்து தேம்பித் தேம்பி அழுகிறாள். நல்ல வேளை , மற்ற மாணவிகள் பார்க்கா வண்ணம் இந்தக் காட்சிகளை மேஜை மறைத்துக் கொள்கிறது என்பதை அறிந்து நிம்மதி அடைகிறாள் லட்சுமி.
இரண்டு நிமிடம் அழட்டும் என்று லட்சுமி நினைத்ததோடு, வடிவின் தலையை வருடிவிட… சிறிது நேரத்துக்கெல்லாம் வடிவு தனது தேம்பலை நிறுத்தி, மெதுவான குரலில் பேச ஆரம்பிக்கிறாள். அவள் சொல்வது ஒவ்வொன்றையும் பொறுமையாகக் காது கொடுத்து மனதுக்குள் வாங்கும் ஆசிரியர் லட்சுமி, வடிவை எப்படியாவது இந்த சிக்கலான மனநிலையிலிருந்து வெளிக்கொண்டு வரவேண்டும் என்பதை மட்டும் தனது எண்ணத்திற்குள் வைத்து, வடிவைத் தேற்றும் முயற்சியில் இறங்குகிறார்.
வடிவு சொன்னது இதுதான்.
“மிஸ் வீட்டில் அப்பா அம்மாவை அடிக்கறார். தினமும் இது நடக்குது. அம்மா பாவம் , நான் அப்பாவ போய்க் கேட்டாலும் அம்மா தடுக்குறாங்க. ராத்திரி 12 மணிக்கு மேல் ஆவுது, தூங்க முடியல… பயம்மா இருக்கு. அதனால் இங்க வந்தாலும் அதேதான் ஞாபகத்துக்கு வருது.”
வடிவை எப்படி சமாதானப்படுத்துவது, வடிவு ஒருத்தி மட்டுமா இப்படி? வகுப்பின் பாதி மாணவிகளுக்கும் மேல் இந்த சூழலில்தான் இருக்கின்றனர். ஆகவே வடிவிடம் பேச ஆரம்பித்த ஆசிரியர் நம்பிக்கையை விதைத்து, வடிவின் முகத்தில் புன்சிரிப்பை வரவழைத்ததே பெருவெற்றியாக நினைக்கிறார். தொடர்ந்து அல்ஜீப்ராவை ஓரங்கட்டிவிட்டு வகுப்பு மாணவிகள் அனைவருடனும் உரையாட ஆரம்பிக்கிறார்.
இந்த சமூகத்தின் பெண்கள் மீதான பார்வை குறித்தும் குடும்பங்களில் நடக்கும் பிரச்சனைகள் குறித்தும் சில உதாரணங்களையும் , அவற்றிலிருந்து பெண்கள் தங்களை எவ்வாறு பாதுகாத்துக் கொள்ள வினையாற்றுகிறார்கள் என்பதையும் பலரின் வாழ்க்கையை மையப்படுத்திக் கூறியதின் விளைவு , வகுப்பின் அனைத்து குழந்தைகளது முகத்திலும் தெளிவைக் காணமுடிந்தது.
அதோடு பெண்கள் குறித்த சில கட்டுரைகளை வகுப்பு முழுவதுக்கும் வாசிக்கத்தந்த ஆசிரியரால், பல குழந்தைகளையும் எண்ணங்களால் வலிமையூட்டவும் தெளிவு பெறவும் செய்யமுடிந்தது.
தொடர்ந்து வடிவின் அம்மாவுக்கு அலைபேசியில் பேசி, பெற்றோர்களை வரவழைத்து உரையாடுகிறார் லட்சுமி. குழந்தைகளது கண்முன்னே வீட்டில் சண்டை, தகராறு போன்ற சூழலை உருவாக்கிவிட்டால் வாழ்நாள் முழுதும் அவர்களை பாதிக்கும் என்ற உளவியலை அவரது அம்மாவிடமும் அப்பாவிடமும் பேசிப் புரிய வைத்து கொஞ்சம் அவர்களை சிந்திக்க வைக்க எடுத்த முயற்சி ஓரளவு பயன் தந்தது.
என்ன செய்யலாம்
பள்ளிகளில் குறிப்பாக அரசுப் பள்ளிகளில் படிக்கும் பெண் குழந்தைகளின் வீட்டுச் சூழலும், இந்த சமூகத்தில் நிலவும் பெண்களுக்கான அழுத்தம் மிகும் புறச் சூழலும் ஒன்றை ஒன்று பிரித்திட இயலாதது. வகுப்பறைகளில் ஆசிரியர் இரண்டாவது பெற்றோராக வேண்டியத் தேவை இன்றைய காலகட்டத்தில் மிகவும் அவசியமாகிறது. வடிவு போன்ற பெண் குழந்தைகள் தங்கள் மனதை பய உணர்வாலும் அழுத்தத்தாலும் நிரப்பி படிப்பு மட்டுமல்ல தங்கள் எதிர்காலத்தை , வாழ்வைத் தொலைத்துவிடும் அபாயங்கள் ஏராளமாக இருப்பதால், ஆசிரியர்களுக்கு அவர்களைக் காக்க வேண்டிய பொறுப்பும் வழிகாட்டி அழைத்துச் செல்ல வேண்டிய கடமையும் இருக்கிறது.
படைப்பு:
சு உமாமகேஸ்வரி
உமாமகேஸ்வரி , அரசுப் பள்ளியில் ஆசிரியர் , கல்வி முறை குறித்தும் வகுப்பறை செயல்பாடுகள் குறித்தும் தொடர்ந்து பேசியும் எழுதியும் வருபவர். பாடப்புத்தகம், பாடத்திட்டம் ஆகியவற்றைத் தாண்டி குழந்தைகளது மன உணர்வுகளையும் மகிழ்ச்சியையும் மதித்து, அதற்கு ஏற்புடைய சூழலை அமைத்துத் தர முயற்சி மேற்கொள்பவர்.