“ஆண்களுக்கும் பெண்களுக்கும் பொதுவான ஆய்வுக்கூட உடை என்று சொல்லி ஒரு கோட் காண்பித்தார்கள். அந்த கோட் எனக்குப் பொருந்தவில்லை. ஓரளவு பொருந்தக்கூடிய அளவில் ஒரு கோட்டைத் தேர்ந்தெடுத்தால் அது ஒரு கோணிப்பையைப் போர்த்திக்கொண்டதுபோல் இருந்தது. பிரச்னை அதன் தோற்றம் மட்டுமல்ல. அந்த கோட் என் உடலுக்கு மட்டுமே பொருந்தியது, கைப்பக்கம் பலூன்போல இருந்தது. ஆய்வுக்கூடத்தில் கவனமாக இல்லாவிட்டால் கோட்டின் கைப்பகுதி எதன் மீதாவது பட்டுவிடும். அது மட்டுமல்ல, கழுத்துப்பகுதி மிகவும் கீழிறக்கி தைக்கப்பட்டிருக்கும் என்பதால் வேதிப்பொருட்கள் என் மீது கொட்டினால் எந்தப் பாதுகாப்பும் இருக்காது. இதைப் பற்றி பிற பணியாளர்களிடம் சொன்னால் ‘உடையை மாற்ற முடியாது, வேலை செய்யும்போது கவனமாக இருந்துகொள்’ என்கிறார்கள். பிறகுதான் ஓர் உண்மை தெரிந்தது. எல்லாப் பாலினத்தவருக்குமான உடை என்கிற பெயரில் ஆண்களுக்கான பொது அளவுகளை வைத்து கோட் தைத்திருக்கிறார்கள். சலிப்பாக இருக்கிறது அறிவியலில் இருக்கும் பெண்களுக்கும் பாதுகாப்பு அவசியம்தானே?”
பெயரைக் குறிப்பிட விரும்பாத ஒரு மேலைநாட்டுப் பெண்மணி ரெடிட் தளத்தில் 2023ஆம் ஆண்டு இதைப் பகிர்ந்திருந்தார். இதைப் படிக்கும்போது வியப்பாக இருக்கிறதா? இவரது பதிவுக்குச் சில பெண்கள் இட்ட பின்னூட்டங்களையும் படித்துவிடுங்கள்.
“Personal Protective Equipment எனப்படும் பாதுகாப்பு உடைகளை வாங்கும் பொறுப்பில் இருக்கிறேன்.பெண்களுக்குப் பொருந்தக்கூடிய பிபிஈ உடைகளைத் தேடிக் கண்டுபிடிப்பது கடினமான வேலையாக இருக்கிறது. பல விதமான உடைகளைப் பரிசோதித்துவிட்டு இறுதியில் பெண்களுக்குப் பொருந்தும் உடையைச் செய்யக்கூடிய ஒரு நிறுவனத்தைக் கண்டுபிடித்தோம். வழக்கமான உடைகளைவிட அதன் விலை இரண்டு மடங்கு அதிகமாக இருக்கிறது.”
“நான் கழிவுநீரை அகற்றும் பணியில் இருக்கிறேன். நான் கொஞ்சம் குள்ளமான, ஒல்லியான பெண் என்பதால் எனக்கான அளவில் காலணிகள், தற்காப்பு உடைகள் என எதுவும் எங்கள் அலுவலகத்தில் இருக்காது. ஒரே ஒரு பெண்ணுக்காக இதைத் தனியாக உருவாக்கவேண்டுமா என்று கேட்கிறார்கள்.”
“என் பணியின்போது பல அமிலங்களைக் கையாளவேண்டியிருக்கும். எனக்குத் தரப்பட்ட ஏப்ரன் வகை அங்கி தரை வரைக்கும் புரளும். அதுவே பெரிய ஆபத்தாக இருந்தது. ஆகவே அதை நானே எனக்குப் பொருந்துமாறு கத்தரித்து தைத்துக்கொண்டேன். இருப்பதிலேயே மிகச்சிறிய முகக்கவசம்கூட என் முகத்துக்குப் பொருந்தாமல் நிற்கிறது. எனக்குத் தரப்பட்ட கையுறைகளும் அளவில் பெரியவை. இதை வைத்துக்கொண்டுதான் அமிலங்களையும் வேதிப்பொருட்களையும் பயன்படுத்தவேண்டியிருக்கிறது.”
“நான் ஒரு விஞ்ஞானி. என்னுடைய ஆய்வகத்தில் இருக்கும் பல கருவிகள், சராசரியைவிட அதிகமான உயரம் இருப்பவர்களுக்கே பொருந்தும்படியாக வைக்கப்பட்டிருக்கின்றன. ஆண் விஞ்ஞானிகள் இவற்றை லகுவாகக் கையாள்கிறார்கள்.”
“களப்பணிக்காகச் சில சிறப்புக் காலணிகளையும் உடைகளையும் வாங்கவேண்டியிருந்தது. எந்த அளவும் எனக்குப் பொருந்தவில்லை, ஆனால், வேறு வழியும் இல்லை. களப்பணியின்போது நடக்கவே மிகவும் சிரமப்பட்டேன்.”
“என் தோழியின் பேறுகாலத்தின்போது அவருக்கான ஆய்வுக்கூட கோட் வாங்க உதவி செய்தேன். கடைகளில் இருந்த அளவுகள் எதுவும் அவருக்குப் பொருந்தவில்லை.”
படிக்கும்போது, “இதெல்லாம் ஒரு பிரச்னையா?” என்று நீங்கள் நினைக்கலாம். இவர்கள் அதிகமாகப் புலம்புகிறார்கள் என்றுகூட உங்களுக்குத் தோன்றலாம். ஆனால், ஒவ்வொரு நாளும் தங்களது பணியிடத்தில் இவர்கள் இந்தப் பிரச்னையை எதிர்கொள்கிறார்கள் – இது அவர்களது பாதுகாப்பை, வேலையை, சுதந்திரமாகக் களப்பணியின்போது தரவுகள் சேகரிப்பதை, சுருக்கமாகச் சொல்லப்போனால் ஆராய்ச்சியின் எல்லா அம்சங்களையும் பாதிக்கிறது. அந்தப் பின்னணியில் யோசித்துப் பாருங்கள் – இவை சிறிய பிரச்னைகள் இல்லை என்பது தெரியும். இவற்றை ‘Meningineered products’ என்று கேலி செய்தார் ஒரு தோழி. ஆண்களுக்காக வடிவமைக்கப்பட்ட பொருட்களையும், பாதுகாப்பு உடைகளையும் வைத்துக்கொண்டுதான் பெண்கள் ஸ்டெம் துறையில் வேலை செய்யவேண்டியிருக்கிறது. இதில் உடல் சவால் உள்ள பெண்களுக்கு எப்படிப்பட்ட சிக்கல்கள் இருக்கும் என்பதை நினைத்துக்கூடப் பார்க்க முடியவில்லை.
ஸ்டெம் கல்வியில் உள்ள எல்லாத் தடைகளையும் மீறி ஒரு பெண் பணியில் சேர்ந்துவிட்டால் அவளை இதுபோன்ற பணியிடச் சூழல்கள் இருகரம் கூப்பி வரவேற்கத் தயாராக இருக்கின்றன. 2023ஆம் ஆண்டில் இந்திய அளவில் ஒரு மிகப்பெரிய ஆய்வு நடத்தப்பட்டது. ஸ்டெம் துறைகளில் இருக்கும் பெண்களிடம், “உங்களது பணியிடத்தில் நீங்கள் சந்திக்கும் மிகப்பெரிய பிரச்னைகள் என்னென்ன?” என்று கேட்டிருக்கிறார்கள். ஊதிய இடைவெளி, நெகிழ்வுத்தன்மை இல்லாத வேலை நேரம், குழந்தைகளைப் பார்த்துக்கொள்ள போதுமான சேவைகள்/வசதிகள் இல்லாமை, தலைமைப் பொறுப்புகளில் பெண்களின் எண்ணிக்கை குறைவாக இருப்பது, ஓர் இடைவெளிக்குப் பிறகு வேலைக்குத் திரும்பும்போது வரும் சிக்கல்கள் ஆகியவை பதில்களாகக் கிடைத்தன. ஸ்டெம் துறையில் மட்டுமல்ல, பெரும்பாலான துறைகளில் பெண்கள் சந்திக்கும் பிரச்னைகள் இவை. ஆனால், மனித குலத்தை அடுத்த கட்டத்துக்கு எடுத்துச் செல்லக்கூடிய அறிவியல் துறையிலும் அதே பிரச்னைகள் இருப்பதுதான் வேதனை. ஏற்றத்தாழ்வு மிக்க சமூகத்தின் படிநிலைகளிலிருந்து ஸ்டெம் துறைகள் தங்களை விடுவித்துக்கொள்ளவில்லை என்பதையே இது காட்டுகிறது.
குறிப்பாக ஸ்டெம் துறைகளில் இருக்கும் ஊதிய இடைவெளி பற்றிய தகவல்கள் அதிர்ச்சியூட்டுகின்றன. 2021இல் வெளியான ஸ்டான்ஃபோர்ட் பிசினஸ் அறிக்கையில், தொடக்கநிலையிலேயே ஆண்களுக்கும் பெண்களுக்கும் வேறுபாடு இருப்பதைச் சுட்டிக்காட்டுகிறார்கள். பொதுவாக ஸ்டெம் துறைகளில் பெண்களைவிட ஆண்களுக்கான ஊதியம் 40% அதிகமாக இருக்கிறது. அதுமட்டுமல்லாமல், பதவி உயர்விலும் பாரபட்சம் காட்டப்படுகிறது. ‘Prove it again Bias’ என்று இதைக் குறிப்பிடுகிறார் ஆய்வாளர் கோ. அதாவது, தன்னை மீண்டும் மீண்டும் நிரூபித்துக்கொள்ள வேண்டிய கட்டாயத்தில் பெண்கள் இருக்கிறார்கள் என்கிறார்.
2016இல் வெளியான தனது ஆய்வுக்கட்டுரையில் கோ இதை விரிவாகப் பேசுகிறார். ஓர் ஆணுக்கான பதவி உயர்வு அவனது சாத்தியங்கள் அல்லது இயல்திறத்தின் அடிப்படையில் வழங்கப்படுகிறது. அதாவது, ‘இவனுக்கு நல்ல திறமை இருக்கிறது, முன்னேறக்கூடிய தகுதி இருக்கிறது, நாளை இவன் வளரக்கூடும்’ என்கிற சாத்தியம் இருந்தால் போதும், ஆணுக்குப் பதவி உயர்வு கிடைத்துவிடும். ஆனால், பெண்ணின் நிலை அப்படியல்ல. அவள் இதுவரை செய்த வேலையை முன்வைத்து மட்டுமே அவளுக்குப் பதவி உயர்வு தரப்படுகிறது. இதனால் ஸ்டெம் துறைகளில் பெண்களின் முன்னேற்றம் பாதிக்கப்படுகிறது. ஒரே காலகட்டத்தில் வேலைக்குச் சேரும் ஆண், பெண் என இருவரை எடுத்துக்கொண்டால், ஆணுக்கு விரைவிலேயே பதவி உயர்வு கிடைத்துவிடுகிறது. பெண்ணுக்கு அதே பதவி கிடைக்கத் தாமதமாகிறது. இந்தியாவில் நடத்தப்பட்ட ஓர் ஆய்விலும் இதேபோன்ற முடிவுகள் கிடைத்திருக்கின்றன.
ஸ்டெம் துறையில் இருக்கும் பாலியல் சீண்டல்களைப் பற்றி நிச்சயம் பேசவேண்டும். மற்ற துறைகளைவிட ஸ்டெம் துறைகளில் பாலியல் சீண்டல் அதிகம் என்றோ குறைவு என்றோ ஒரு வரியில் சொல்லிவிட முடியாது. இதற்கு முக்கியமான காரணம் என்ன தெரியுமா? எதையும் உறுதியாக சொல்வதற்கான தரவுகள்கூட நம்மிடம் கிடையாது. ஆனாலும் மற்ற துறைகளோடு ஒப்பிடும்போது அறிவியல் துறைக்கென்று ஒரு தனித்துவம் உண்டு. இதோ இதைப் படியுங்கள்:
“அறிவியல் துறையில் மட்டுமே பாலியல் சீண்டல் நடக்கிறது என்பதில்லை. ஆனால், அறிவியல் துறைகளில் அதிகாரம் கட்டமைக்கப்பட்டிருக்கும் விதம் பெண்களுக்கு ஆபத்தானதாக இருக்கிறது. இந்தியாவில் இருக்கும் அறிவியல் ஆராய்ச்சித்துறை, குறிப்பாக அதன் மேல் மட்டப் பொறுப்புகள் ஆண்களின் கையில்தான் இருக்கிறது. முடிவு எடுக்கும் பதவிகளில் பெண்கள் இல்லாமல் இருப்பது, குறைவான பிரதிநிதித்துவம் ஆகியவற்றால் பெண்களும் அவர்களுடைய பிரச்னைகளும் பொருட்படுத்தப்படுவதில்லை.”
2018ஆம் ஆண்டில் 165 இந்திய விஞ்ஞானிகள் சேர்ந்து வெளியிட்ட ஒரு கூட்டறிக்கையின் வரிகள் இவை. இந்தியாவின் அறிவியல் ஆராய்ச்சித்துறையில் பாரபட்சம் தொடங்கி சீண்டல் வரை இருக்கும் பிரச்னைகள் களையப்பட வேண்டும் என்பதோடு, பாலியல் சீண்டலில் ஈடுபடுவர்களுக்குத் தண்டனை தரவேண்டும் என்றும் அவர்களை அறிவியல் கழகங்களின் உயர் பொறுப்புகளில் பணியமர்த்தக் கூடாது என்றும் இந்த அறிக்கை பரிந்துரைக்கிறது. இந்தியாவைப் பொறுத்தவரை ஸ்டெம் துறைகளில் நிகழக்கூடிய பாலியல் சீண்டல்கள் பற்றிய முழுமையான அறிக்கைகள் நம்மிடம் இல்லை என்பதே உண்மை. அங்கொன்றும் இங்கொன்றுமாகச் சில தனிப்பட்ட நிகழ்வுகளின் பதிவுகளைத் தவிர அழுத்தமான தரவுகளாக எதுவும் ஆவணப்படுத்தப்படவில்லை. அதற்கான காரணங்கள் என்ன என்பதையும் நம்மால் எளிதில் யூகித்துவிட முடியும்.
பெண் விஞ்ஞானிகளைப் பற்றிய புத்தகம் ஒன்றை எழுதியிருக்கும் ஆஷிமா டோக்ரா மற்றும் நந்திதா ஜெயராஜ் ஆகிய இருவரும் இன்னொரு முக்கியமான விஷயத்தைக் சுட்டிக்காட்டுகிறார்கள்.. “நாங்கள் 2018இல் ஒரு வேலைக்காக கான்பூரில் உள்ள இந்தியத் தொழில்நுட்பக் கழகத்துக்குச் சென்றிருந்தோம். வளாகத்தில் பெண்களுக்கான கழிவறைகளில் அடிப்படை வசதிகளே இருக்கவில்லை” என்று எழுதுகிறார்கள். பெண்கள் குறைவாக இருக்கும் ஆய்வுக்கூடங்களில் கழிப்பறைகளின் போதாமையைப் பற்றி இருவரும் விரிவாகப் பேசுகிறார்கள். அடிப்படையான கழிப்பறையே ஒழுங்காக இல்லை எனும்போது, பெண்களுக்கான மாதவிடாய்ப் பொருட்கள், பாலூட்டும் அறை, பெண்களுக்கான கழிவறைகளில் கூடுதல் வசதிகள் போன்றவற்றைப் பற்றிப் பேச இன்னும் பல ஆண்டுகள் ஆகும். ஸ்டெம் கட்டிடங்களில் பெண்களையும் உள்ளடக்கிய அடிப்படை உள்கட்டமைப்பு வசதிகள்கூட இன்னும் முழுமையாக வரவில்லை என்பதைத்தான் இது காட்டுகிறது.
மறைமுகமான பாரபட்சம், பதவி உயர்வுக்கான செயல்முறையில் வெளிப்படைத்தன்மை இல்லாமல் உயரதிகாரிகள் செயல்படுவது, அமைப்புரீதியான பால்சார் வேற்றுமை ஆகியவையும் பெண்களுக்குப் பெரிய பிரச்னைகளாக இருக்கின்றன. பெண்களின் சமூகப் படிநிலையைப் பொறுத்து இந்தப் பாரபட்சங்களும் மாறுபடுகின்றன. “நான் விஞ்ஞானிதான். ஆனால், ஆய்வுக்கூடத்துக்கு வந்த வெளியாள் ஒருவர் என்னை அலுவலக செயலர் என்று நினைத்துவிட்டார்” என்று 32% வெள்ளை இனப் பெண்கள் ஓர் ஆய்வில் தெரிவித்திருக்கிறார்கள். ஆப்பிரிக்க, லத்தீன் அமெரிக்கப் பெண்களின் நிலை இன்னமும் மோசம். அவர்களில் 50% பேர் இந்தக் கருத்தைத் தெரிவித்திருக்கிறார்கள். இதுபோன்ற பாரபட்சங்கள் மன உளைச்சலை அதிகரித்துச் செயல்திறனைக் குறைக்கின்றன.
முனைவர் பட்ட ஆய்வு, முது முனைவர் ஆய்வு போன்றவற்றில், ஆய்வு மேற்பார்வையாளரின் பங்களிப்பு மிகவும் முக்கியமானது. நேரடியான ஆய்வைத் தவிர, ஆய்வை வடிவமைப்பது, களப்பணியின்போதும் பரிசோதனைகளின்போதும் வரும் தொய்வுகளைச் சமாளிப்பது, நிதி உதவிக்கான சரியான அமைப்புகளைத் தேர்ந்தெடுப்பது, அதற்கான திட்ட அறிக்கைகள் எழுதுவது, அடுத்தகட்ட வளர்ச்சி செயல்பாடுகள், பொதுவான தர்க்கப்பார்வை எனப் பல அம்சங்களை ஆய்வு மாணவர் கற்றுக்கொள்ளவேண்டியிருக்கும். ஒரு முழுமையான விஞ்ஞானியாக அவர் மாறுவது இந்தக் காலகட்டத்தில்தான். அவரை விஞ்ஞானியாக உருவாக்குவதில் ஆய்வு மேற்பார்வையாளர் பெரும் பங்கு வகிக்கிறார். சாதாரண தேநீர் இடைவேளை உரையாடல்களிலிருந்து மிகச்சிறந்த ஆய்வுக்கட்டுரைகள் பிறந்த கதை உண்டு. மேற்பார்வையாளர் தந்த மன உளைச்சலால் ஸ்டெம் துறையே வேண்டாம் என்று வங்கிகளில் வேலைக்குச் சேரப் போனவர்களும் உண்டு. ஆகவே ஆய்வு மாணவருக்கும் மேற்பார்வையாளருக்குமான உறவு எப்படி இருக்கும் என்பதைப் பொறுத்துதான் ஸ்டெம் துறையில் அவரது பயணம் இருக்கும். மிகச் சில விதிவிலக்குகள் உண்டு என்றாலும் பொதுவான சூழல் இதுதான்.
இந்தப் பின்னணியில் யோசித்துப் பாருங்கள். ஓர் ஆய்வு மாணவர் தனது எல்லாக் கற்றல் செயல்பாடுகளையும் ஒரே உரையாடலில் முடித்துக்கொள்ள முடியாது. அலுவலக நேரத்தில் பிற மாணவர்கள் வரிசையில் காத்திருக்கும் சூழலில் நான்கைந்து கேள்விகளோடு தனது தேடலை நிறுத்திக்கொள்ள முடியாது. “ஆனால், அது அப்படித்தான் பெரும்பாலும் நடக்கும்” என்கிறார்கள் பல இந்திய மாணவியர். 2007இல் நம்ரதா குப்தா வெளியிட்டுள்ள ஓர் ஆய்வுக்கட்டுரையில் இதைப் பற்றி விரிவாகப் பேசப்பட்டிருக்கிறது. 60% பெண் ஆராய்ச்சியாளர்கள், ஆண் மேற்பார்வையாளருடனான தங்களது உரையாடல்களை ஆய்வுக்கூடத்தோடு நிறுத்திக்கொள்கிறார்களாம். ஆனால், ஆண் மாணவர்களில் பெரும்பாலானோர் ஆய்வுக்கூடத்துக்கு வெளியில்தான் உரையாடலையே தொடங்குகிறார்கள். “ஆண் மாணவர்கள் அதிகமாக உரையாடுகிறார்கள் என்பது மட்டுமல்ல, மேற்பார்வையாளரும் ஆண் மாணவர்களுடன்தான் அதிகமாக உரையாட விரும்புகிறார்” என்று ஓர் ஆண் மாணவர் தன்னிடம் சொன்னதாகப் பதிவு செய்யும் நம்ரதா குப்தா, இதனால் வரும் பிரச்னைகளை விவரிக்கிறார். “ஆய்வுக்கூடத்துக்கு அப்பாற்பட்டு மேற்பார்வையாளர்களிடம் உரையாடும்போது ஒரு கற்றல் நிகழும், அது பெண்களுக்கு அதிகம் கிடைப்பதில்லை” என்கிறார். இப்படிப்பட்ட ஒரு சூழலில் பயின்று வெளியில் வரும் பெண்கள் தங்களை நிலைநிறுத்திக்கொள்வதற்குக் கூடுதலாகச் சிரமப்பட வேண்டியிருக்கிறது.
ஸ்டெம் துறைகளில் பெண்களின் வளர்ச்சி பற்றிய உரையாடலின்போதெல்லாம் மேரி க்யூரி போன்ற சாதனையாளர்களின் பெயர்கள் அதிகம் உச்சரிக்கப்படும். இதைக் கேட்டுக் கேட்டுச் சலித்துப் போன ஒரு பெண் விஞ்ஞானி, “மேரி கியூரி பெரிய விஞ்ஞானிதான். ஒப்புக்கொள்கிறேன். ஆனால், ஒரு மேரி கியூரி வந்து சாதனை படைத்துவிட்டால் போதுமா? சராசரியான எல்லாப் பெண் விஞ்ஞானிகளுக்கும் இணக்கமான பணிச்சூழல் வேண்டும் என்பதுதானே வாதம்?” என்று காரசாரமாகக் கேட்டிருக்கிறார். உண்மைதான். எல்லாப் பெண் விஞ்ஞானிகளுக்குமான வளர்ச்சியைத்தான் பேசவேண்டும். ஆனால், பெண் சாதனையாளர்களுக்கே நிலைமை அத்தனை எளிதாக இருக்கவில்லை. குறிப்பாக, அவர்களுக்கான அடிப்படை அங்கீகாரம்கூடத் தரப்படவில்லை. அது என்ன வரலாறு?
(தொடரும்)
படைப்பாளர்:
நாராயணி சுப்ரமணியன்
கடல் சார் ஆய்வாளர், சூழலியல் ஆர்வலர் மற்றும் எழுத்தாளர் என்ற பன்முக ஆளுமை இவர். தமிழ் இந்து உள்ளிட்ட முன்னணி இதழ்களில் சூழலியல், கடல் வாழ் உயிரினங்கள் குறித்து தொடர்ச்சியாக எழுதி வருபவர். ஹெர் ஸ்டோரிஸில் இவர் எழுதிய ‘விலங்குகளும் பாலினமும்’, ‘சூழலியலும் பெண்களும்’ ஆகிய தொடர்கள் புத்தகமாக வெளிவந்து, சூழலியலில் மிக முக்கியமான புத்தகங்களாகக் கொண்டாடப்படுகின்றன!