Site icon Her Stories

வளர்மதி என்னும் நிறைமதி

எங்கள் வீட்டின் ஸ்வரங்கள் ஏழில் ஐந்தாவதாக பிறந்த அழகு நிறை
பஞ்சவர்ணக்கிளி வளர்மதி என்னும் முழுமதி.

அனைத்து சிறுவர்களைப் போல் ஓடி ஆடி விளையாடி, பள்ளி செல்லத் தொடங்கும் பருவத்தில் போலியோ வால் பாதிக்கப்பட்டு நடக்கும் திறனை இழந்தவர். சொட்டு மருந்து அறிமுகப்படுத்தப்படாத காலம். இவர் பாதிக்கப்பட்ட சமயத்தில் மேலும் சில சிறுவர்கள் போலியோவால் பாதிக்கப் பட்டனர். ஒரே காலகட்டத்தில் பலர் பாதிக்கப்பட்டதால் காரணம் என்ன என இதுவரை யாரும் கண்டுபிடிக்கவில்லை. எல்லோருமே தங்கள் குழந்தைகளுக்குப் பல சிகிச்சைகள் செய்து பார்த்தார்கள். பிறகுதான் போலியோ சொட்டு மருந்து வந்தது.

தன் பெற்றோர் மற்றும் சகோதரிகளின் துணையுடன் நடுநிலைப்பள்ளி படிப்பை முடித்தவர் தொடர்ந்து மூன்று சக்கர வாகனம் உதவியுடன் மேல்நிலைக் கல்வி மற்றும் கல்லூரி படிப்பையும் முடித்தார்.
உள்ளூரில் உள்ள கல்லூரியில் எம். காம் படிப்பைத் தொடர்ந்து நூலகருக்கான பயிற்சியும் பெற்றார். வீணை கூட கொஞ்சம் கற்றார்.

உறவினர் ஒருவர் வெளிநாட்டிலிருந்து வரும்போது கொடுத்த ஒப்பனை செய்யப் பயன்படுத்தப்படும் சாதனங்களைக் கொண்டு, தனது சகோதரிகளுக்கும் தோழிகளுக்கும் அலங்காரம் செய்தார். அது அனைவருக்கும் பிடித்துப் போன நிலையில் அரசு வேலைக்காகக் காத்திருக்காமல், தன் கையே தனக்குத்தவி என அழகு நிலையம் ஒன்று ஆரம்பித்தார். செய்யும் தொழிலைச் சிறப்பாகச் செய்யப் பக்கத்தில் இருக்கும் நகரத்திற்குச் சென்று ஒப்பனைக் கலையை கற்றுத் தேர்ந்தார். இன்ஃபேன்ட் ஜீசஸ் என்ற பெயரில் ஆரம்பிக்கப்பட்ட அழகு நிலையம் வெள்ளிவிழாவை நோக்கி வெற்றிநடை போட்டுக் கொண்டிருக்கிறது.

அவரைப் பார்த்து அனுதாபம் கொள்வது அவருக்குப் பிடிக்காத ஒன்று. தான் வைத்திருக்கும் ஸ்கூட்டி மற்றும் மின்சார நாற்காலி மூலம் தனது வேலைகளைத் தானே கவனித்துக் கொள்வார். பொருளாதாரத்திற்கு எவர் கையையும் நம்பியிருக்காமல் தானே உழைத்துப் பொருளீட்டி, உழைக்கும் மகளிர்க்கு நல்லதொரு முன்மாதிரியாகத் திகழ்கிறார். ‘மதி அக்கா’ என அனைவராலும் மரியாதை கலந்த அன்புடன் அழைக்கப்பட்டு அனைவர் உள்ளத்தையும் தன் தன்னம்பிக்கையால் கொள்ளை கொண்டவர்.

குடும்பத்தில் அனைவரையும் அணைத்துச் செல்வதில் வல்லவர். அனைவரிடமும் கலகலப்பாக உரையாடி எப்போதும் சிரித்த முகத்துடன் புன்னகை ததும்ப வலம் வருபவர். தான் செய்யும் பணியை மிக மிக ரசித்துச் செய்வதால் தனக்கென அதிக அளவு வாடிக்கையாளர்களைக் கொண்டவர்.

எம் அன்னைக்கு அடுத்து
எமக்குத் தகுந்த ஆலோசனைகள் சொல்வதில்
எம் அன்னைக்கு நிகர் அவர் தான்…
தங்கையாகப் பிறந்தாலும்
நிகரில்லா பாசத்தால்
சகோதரிகள் அனைவருக்கும்
அன்னையாய் மாறி இருக்கும்
குணவதி.

பிரம்மன் படைத்த அழகிகளை
பேரழகிகளாய் மாற்றும்
நவீன சிற்பி.

அன்புடன் அரவணைத்து,
வளர்ச்சியில் தட்டிக் கொடுத்து,
தடுமாறும் நேரம்
கரம்பிடித்து வழி நடத்துவதில்
எம் பிள்ளைகளுக்கும்
இன்னொரு தாயானவர்.

நாங்கள் எங்கு சுற்றி வந்தாலும்
எங்களைத் தாங்கும் வேராக,
தேன்கனிச்சாறாக
புத்துணர்வூட்டும்
பொன் நிலவு

எங்கள் வளர்மதி
அழகில் முழுமதி,
அறிவில் நிறைமதி,
குணத்தில் தண்மதி

மொத்தத்தில் அவர் எங்களுக்கு சித்திரை மாத பௌர்ணமி.

நீல வானில் நீந்தி ஒளிச்சுடராய் ஜொலிக்கும் நிறை மதியும், மகளிர்க்கான பொருளாதார வளர்ச்சியில் தன்னிறைவு பெற்று தனக்கென தனி அடையாளத்தைக் கொண்டிருக்கும் எம் வளர்மதியும் எமக்கு ஒன்றே.

அறிவு, அழகு, ஆளுமை, நாகரீகம்,பொறுப்பு எனும் ஐங்குணங்களும் ஒருங்கே அமையப்பெற்ற இவரது திறமையை போலியோவால் ஒன்றும் செய்ய இயலவில்லை.

படைப்பாளர்

வி. வாசுகி

21 வயதில் திருமணம். 5 ஆண்டுகள் கழித்து, தான் பயின்ற பள்ளியிலேயே பணிக்குச் சேர்ந்து 7 ஆண்டுகள் பணிபுரிந்து இருக்கிறார். அதன்பின்  22 ஆண்டுகளாக அருகாமையில் இருக்கும் ஊரில் பணிபுரிகிறார். சிறுவயது முதல், வாசிக்கும் வழக்கம் கொண்டவர். கவிதை, கட்டுரை எழுதுவதில் ஆர்வம் உண்டு. தொன்மை மீது ஆர்வம் உடையவர்.

Exit mobile version