Site icon Her Stories

பெரியம்மா

neermai.com

கணவரின் அப்பாவை மருத்துவமனையில் அனுமதித்திருந்தார்கள், அவரை கவனித்துக்கொள்ள அத்தை மருத்துவமனை அருகேயே அறை எடுத்து தங்கி இருந்தார். மாமாவை பார்க்க வரும் உறவினர்களை அவர் தங்கி இருந்த அறைக்கு அழைத்துச் சென்று, உணவு சமைத்து அவர்களை சாப்பிட வைத்து தான் வழியனுப்புவார். சாப்பாடு என்றால் ஏதோ உணவு என்ற பேரில் தட்டில் பரிமாறப்படுபவை இல்லை. சரவணபவனில் கொடுக்கும் அதே உணவுவகைகள் அத்தனையும் இருக்கும்.

ஆனால் இப்போதைய மனிதர்கள் அப்படியில்லை. ‘வாங்க’, என்று உபசரிப்பதற்கும் வசதி இருக்க வேண்டும் என்று நினைக்கிறார்கள். ‘நாம் இருவர், நமக்கிருவர்’ என்றார்கள், ‘நாம் இருவர், நமக்கொருவர்’ என்று சுருங்கிய குடும்ப உறவு, ‘நாம் இருவர்’ என்ற நிலையை அடைந்துள்ளது. கணவன், மனைவி என்ற இருவர் சேர்ந்து வாழ்வது தான் குடும்பம் என்றாகிவிட்டது; அதற்கு விவாகரத்து வழக்குகள் தான் சாட்சி.

நம் பண்பாடு அப்படியானதா? தாத்தா, பாட்டி, பெரியப்பா, பெரியம்மா, சித்தப்பா, சித்தி, அவரவர் பிள்ளைகள் என்று சண்டை, சச்சரவுகளோடும் இணைந்து வாழந்தவர்கள் தானே நாம்? படுத்துறங்கும் பாய்க்கு அடித்துக்கொண்டாலும், அந்தக் குடும்ப உறவில் தூக்கத்திற்கு பஞ்சம் இருந்ததில்லையே… சாப்பாடு அளவாக சமைத்தால் தீர்ந்து போகும். அதிகமாக சமைத்தால் மிஞ்சிப் போகும், அரைவயிறோடு ஏதோ ஒரு வயிறு அங்கு காய்ந்துக்கொண்டு இருந்ததை மறுப்பதற்கில்லை தான்.

வெறும் சோறு தான் இருக்கிறது. தொட்டுக்கொள்ள ஏதாவது குழம்பு வைக்க வேண்டுமா அல்லது தண்ணீர் ஊற்றி நீராகாரமாக குடித்துக்கொள்ளலாமா என்று யோசனையில் இருக்கும்போதே, கத்திரிக்காய் சாம்பார் கிண்ணத்தோடு வந்து நிற்பாள் பங்காளி மனைவி. ‘’ என்னக்கா குழம்பு தீர்ந்துடுச்சின்னு சொன்னாங்க அதான் கொண்டாந்தேன்”. எத்தனை அன்யோன்யம்? ஸ்விக்கியும், ஜொமொடோவும் நமக்கு சொந்தக்காரர்களாக மாறிவிட்ட பிறகு, பங்காளி வீட்டு சாம்பார் அவர்கள் வீட்டு அடுப்படியிலேயே முடங்கிவிட்டது.

ஓட்டலை நோக்கி நம் கால்கள் நடைபழக ஆரம்பித்த பிறகு, சொந்தக்காரர்கள் வீடு என்பதெலாம் அர்த்தமற்றதாகிவிட்டது. ‘ஊர்ல விஷேசங்க, நாங்க குடும்பத்தோடு கிளம்பறோம் ஆனா பாருங்க சின்னவனுக்கு பரீட்சை அதான் அவனை எப்படி தனியாக விட்டுட்டு போறதுன்னு யோசிக்கறோம்’, என்று சொன்னதும், ‘நீங்க வர்ற வரைக்கும் தம்பி நம்ம வீட்ல இருக்கட்டும்’, என்று வாஞ்சையோடு அழைத்துக்கொண்டு சென்று பாதுகாத்து பராமரிக்கும் பக்கத்துக்கு வீட்டுக்காரர்களை இப்போது யாரவது பார்ப்பதுண்டா? இப்படி குணமிருக்கும் பக்கத்துக்கு வீட்டுக்காரரை விடுங்கள்; குறைந்தபட்சம் பக்கத்து வீட்டில் யார் குடியிருக்கிறார்கள் என்பதாவது தெரியுமா?

வர்தா புயல் வந்து நகரத்தை நரகமாக்கி, வாரிச்சுருட்டி சென்ற சமயம் நாம் உணவு பொட்டலம் வாங்க மாடியில் நின்றபோது தானே பக்கத்துக்கு வீட்டில் தங்கி இருப்பவர் யாரென்று கண்டுபிடிக்கிறோம்? அன்பு ஒன்று தான் எல்லாவற்றுக்கும் பிரதானம். எவ்வளவு வைத்திருக்கிறோம் என்பதில் இல்லை அன்பின் பலம்; எவ்வளவு திரும்ப பெறுகிறோம் என்பதில் தான் இருக்கிறது. கொடுத்தால் தானே திரும்ப கிடைக்கும் … கொடுத்துப் பழகுவோம் விலை இல்லாத அன்பை.

இனி வரும் காலங்களில் பெரியப்பா, பெரியம்மா, சித்தி, சித்தப்பா, மாமா அத்தை, அண்ணன், தம்பி, அக்கா என உறவு முறைகள் எல்லாம் வழக்கொழிந்த சொற்களாக/ உறவாக மாறி இருக்கும். பாதி பேருக்கு கல்யாணம் நடப்பது என்பதே குதிரைக் கொம்பாகிவிட்டது; ஒரு பிள்ளை பிறப்பதே இங்கு அபூர்வமாகிவிட்டது, அப்படியே போராடி குழந்தை பெற்றுக்கொண்டாலும், ஒன்றே ஒன்று தான்; அந்த ஒன்று மேலே சொன்ன உறவுகளை எப்படி உருவாக்கும்?

‘பெரியம்மா என்பவர் யார்’ என்று விளக்கம் சொல்ல இந்த நிகழ்வைப் படித்து வைத்துக்கொள்ளுங்கள். அம்மாவுக்கு அக்கா மட்டும் பெரியம்மா இல்லை, அப்பாவின் அண்ணியும் பெரியம்மாதான். எங்கள் அப்பாவுக்கு மீனாட்சி என்ற அண்ணி ஒருவருண்டு. யாராவது சொன்னால் தான் அவர்கள் என் பெரியம்மா என்பதே எனக்கு நினைவுக்கு வரும், அவரை பெரியம்மா என்று கூப்பிட்டதும் இல்லை. அம்மாவின் அக்காவான பெரியம்மாவை நாங்கள் அழைப்பது அம்மா என்று தான். அவருக்குப் பிள்ளைகள் இருந்தாலும், அவர்களைவிட ஒரு படி உயர்வாகத்தான் எங்களைப் பராமரிப்பார். எங்கள் வீட்டில் இருந்து நான்கைந்து வீடுகள் தள்ளி அவரது வீடு. வீட்டில் நிகழும் எந்த நிகழ்வானாலும் முதன்மையான நபராக அவர் தான் கருதப்படுவார்.

தினமலர்.காம்

பத்து பேருக்கு சமைப்பதாகட்டும், ஐம்பது பேர் வந்தாலும் சமாளிப்பதாகட்டும் என் பெரியம்மாவை யாரும் விஞ்சவே முடியாது. கையில் என்ன மாயம் வைத்துள்ளார் என்று நாங்கள் எல்லோருமே கேட்போம். அவரது பிள்ளைகள் எப்படியோ, அதே அளவு அக்கறையோடு தான் எங்கள் அனைவரையும் கவனிப்பார். பக்கத்துக்கு ஊர்களுக்கு பட்டிமன்றத்தில் பேசப்போகும்போது, துணைக்கு வரும் அவர், தோழியாக மாறிவிடுவார், தலைக்குக் குளிப்பாட்டி, ஜிமிக்கி கம்மல் அணிவித்து அழகு பார்த்து, தலையை எண்ணெய் வைத்து தேய்த்து சீவிப் பின்னலிட்டு, முன்தலையில் கைவைத்து கொஞ்சம் கலைத்து அந்த முடியை நெற்றியில் தள்ளிவிடுவது தான் பெரியம்மா ஸ்டைல்.

எல்லா கல்யாண வீடுகளிலும் நமக்கு கம்பெனி பெரியம்மா தான். வெயில்படும் இடங்களில் உட்காரவேண்டிய கட்டாயம் இருந்தால், பொது இடம் என்றெல்லாம் பாராமல் அவரது முந்தானையை தலைக்கு மேல் உயர்த்தி பிடித்து வெயில்படாமல் கவனித்துக்கொள்வார். அம்மாவிடம் பேச தயங்கும் விசயங்களை கூட பெரியம்மாவிடம் தயக்கம் இல்லாமல் பேசிவிடலாம்.

வீட்டுக்கு எப்போது வந்தாலும் வீட்டைக்கூட்டி சுத்தப்படுத்தி, பாத்திரங்களை தேய்த்து சுத்தப்படுத்தி விட்டுச்செல்வார். அம்மா வீட்டில் இல்லாத நாட்களில் மூன்று வேளையும் பெரியம்மா வீட்டில் தான் சாப்பாடு. இரண்டு இட்லியை தட்டில் வைத்து சாம்பார் ஊற்றுவார், அடுத்த இட்லியை தட்டில் வைப்பதற்குள் சட்டினியை அரைத்து கொண்டுவந்து விடுவார். சட்னி இருந்தால் தான் இன்னொரு இட்லி அதிகமாக சாப்பிடுவேன் என்று அவருக்குத் தெரியும். ஜிமிக்கி கம்மல் அணிந்தால் தான் என் பொண்ணு அழகு என்ற அவரது கட்டளை தான் எத்தனை நாகரிக வளர்ச்சியானாலும் ஜிமிக்கி போடுவதைத் தவிர்க்க முடிவதில்லை. இதெல்லாம் வெறும் ட்ரெய்லர் தான்; மெயின் பிக்சர் இனி வரும் வாரங்களில் ….

தொடரும்…

தொடரின் முந்தைய பகுதி:

படைப்பு:

வைதேகி பாலாஜி

சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கறிஞராக வைதேகி பாலாஜி பணியாற்றி வருகிறார். ஹெச்.டி.எஃப்.சி.குழுமத்தில் பேனல் அட்வகேட் பொறுப்பு வகிப்பவர். குடும்பநல சட்ட ஆலோசகரும் கூட. கடந்த 12 ஆண்டுகளாக திருப்பத்தூர், அகமதாபாத், சென்னை ஆகிய நீதிமன்றங்களில் வழக்கறிஞர் மற்றும் சட்ட ஆலோசகராகச் செயல்பட்டு வருகிறார். கடந்த ஐந்து ஆண்டுகளில் பிரபல தமிழ் இதழ்களில் சட்ட விழிப்புணர்வுத் தொடர்கள் எழுதிவருகிறார். பெண்கள் அறிந்துகொள்ள வேண்டிய சட்டப்பிரிவுகள் பற்றிய பல கருத்தரங்குகளில் பங்கேற்றுவருகிறார். கவியரங்கம், பட்டிமன்றங்களிலும் தன் சொல்வன்மையால் சொக்கவைப்பவர்.

Exit mobile version