இன்று ஜெட் விமானங்களில் உலகைச் சுற்றிவருவது என்பது மிகப் பெரிய விஷயமில்லை. ஆனால், 125 ஆண்டுகளுக்கு முன்பு குறிப்பிட்ட நாள்களுக்குள் உலகைச் சுற்றிவருவது என்பது அத்தனை எளிதான விஷயமில்லை. மிக மிக ஆச்சரியமான அதிசயமான ஆபத்தான விஷயமும் கூட!
1873-ம் ஆண்டு பிரெஞ்சு எழுத்தாளர் ஜூல்ஸ் வெர்ன் எழுதிய Around the World in 80 Days என்ற நாவல் வெளியானது. 80 நாட்களில் உலகைச் சுற்றிவர வேண்டும் என்ற போட்டியில் வெற்றி பெற கதாநாயகன் பிலியாஸ் ஃபாக் கிளம்புவார். இந்த நாவலை நிஜத்தில் நடத்திக் காட்டினால் என்ன என்று நினைத்தார் நெல்லி பிளை என்ற பத்திரிகையாளர். தான் வேலை செய்யும் நியுயார்க் வேர்ல்ட் பத்திரிகையின் ஆசிரியரிடம் தன் திட்டத்தைக் கூறினார். அந்தக் காலத்தில் பெண் பத்திரிகையாளர்கள் வெகு சிலரே இருந்தனர். உலகைச் சுற்றி வரும் சாகஸப் பயணத்தை மேற்கொள்ள பெண்களால் முடியாது என்றும் பெண்களை அனுப்பக் கூடாது என்றும் பல்வேறு தரப்பினரும் எதிர்ப்புகளைக் காட்டிவந்தனர்.
நெல்லி பிளை சிறிதும் பின்வாங்கவில்லை. இந்தப் பயணத்துக்கு நிதி அளிப்பவர்களும் ஓர் ஆணின் பயணத்தைவிட ஒரு பெண்ணின் பயணம் கூடுதல் சுவாரசியத்தையும் புகழையும் தரும் என்று நினைத்தனர். ஓராண்டுக்குப் பிறகு நெல்லி பிளை உலகப் பயணம் செல்வது என்று முடிவானது. காஸ்மோபோலிட்டன் பத்திரிகையும் தன்னுடைய நிருபர் எலிஸபெத் பிஸ்லேண்டை உலகம் சுற்றிவர ஏற்பாடு செய்தது.
நெல்லி பிளை கிளம்பும் திசைக்கு எதிர்த் திசையில் எலிஸபெத் பிஸ்லேண்ட் கிளம்ப வேண்டும் என்று முடிவானது. யார் 80 நாட்களுக்குள் உலகைச் சுற்றிவிட்டு, முதலாவதாக வந்து சேர்கிறார்கள் என்பதுதான் போட்டி.
1889. நவம்பர் 14. காலை 9.40 மணி. பொதுமக்கள், பத்திரிகையாளர்கள், செல்வந்தர்கள் எல்லோரும் கூடியிருந்தனர். சிறிய பையில் அத்தியாவசியமான பொருள்கள் மற்றும் துணிகளுடனும் கழுத்தில் கட்டப்பட்ட சிறிய பையில் பணத்துடனும் அகஸ்டா விக்டோரியா கப்பலில் ஏறினார் நெல்லி பிளை. எல்லோரும் கை அசைத்து, ஆரவாரத்துடன் வழியனுப்பி வைத்தனர். 80 நாள்களில் உலகைச் சுற்றி வரும் முதல் பயணம் கரையிலிருந்து நகர்ந்தது.
கதையின் நாயகன் பிலியாஸ் ஃபாக் சாதனையை முறியடித்து, நெல்லி பிளைக்கு முன்பாக வெற்றிகரமாக உலகைச் சுற்றிவிட்டு வரவேண்டும் என்ற லட்சியத்துடன் எதிர்த் திசையில் கிளம்பினார் எலிஸபெத் பிஸ்லேண்ட்.
இங்கிலாந்தைக் கடந்து பிரான்ஸ் சென்ற நெல்லி பிளை, அங்கு எழுத்தாளர் ஜூல்ஸ் வெர்னைச் சந்தித்தார். அவர் மனைவி, “உங்கள் பிலியாஸ் ஃபாக்கை முட்டாளாக்கப் போகிறார் நெல்லி பிளை’ என்று கூற, ஜூல்ஸ் வெர்னும் அதை மகிழ்ச்சியோடு ஆமோதித்தார்.
இத்தாலி, சூயஸ் கால்வாய், இலங்கை, பினாங்க், சிங்கப்பூர், ஹாங்காய், ஜப்பான் என்று நீராவிக் கப்பல்கள் மற்றும் ரயில்களில் பயணத்தை மேற்கொண்டார் நெல்லி பிளை. ஆங்காங்கே தந்தி மூலம் தன்னுடைய பயண விவரங்களை அமெரிக்காவுக்கு அனுப்பினார். தன்னுடைய அனுபவங்களை நீண்ட கட்டுரைகளாக எழுதி, அஞ்சல் செய்தார். சில இடங்களில் வானிலை சரியாக இருக்காது. சில இடங்களுக்குச் செல்லும்போது அவருடைய உடல்நிலை மோசமடைந்திருக்கும். சில இடங்களில் தொடர்ந்து பயணிக்க இயலாத சூழ்நிலை உருவாகியிருக்கும். எல்லாவற்றையும் தனியாளாகச் சமாளித்து, பயணத்தைத் தொடர்ந்தார் நெல்லி பிளை.
75 நாள்களில் தன்னுடைய பயணத்தை முடித்துவிட வேண்டும் என்று நினைத்திருந்தார் நெல்லி பிளை. பசிபிக் கடலில் ஏற்பட்ட மோசமான வானிலையால் அவருடைய பயணத் திட்டம் கொஞ்சம் பின்தங்கியிருந்தது.
ஓர் ஆண் இந்த முயற்சியில் ஈடுபட்டிருந்து, தோல்வி கண்டால் அது சாதாரணமாகப் பார்க்கப்படும். அதுவே ஒரு பெண் தோல்வி அடையும்போது, ’பெண்களால் முடியாது… பெண்களைத் தனியாக அனுப்பினால் இப்படித்தான்…’ என்று ஏற்கெனவே பேசிக்கொண்டிருந்தவர்களுக்குக் கொண்டாட்டமாகிவிடும். தன் தோல்வி ஒட்டுமொத்த பெண்களின் தோல்வி என்று தவறான முன்னுதாரணமாகிவிடக் கூடாது என்பதில் கவனமாக இருந்தார் நெல்லி பிளை.
1890, ஜனவரி 25 அன்று நியுஜெர்சியை வந்தடைந்தார். ஏராளமானவர்கள் திரண்டிருந்து உற்சாகமான வரவேற்பை அளித்தனர்! ஆம், அவர் நிகழ்த்தியிருந்த சாதனை ஒன்றும் சாதாரணமானது அல்ல. 24,899 மைல்களை 72 நாட்கள், 6 மணி நேரம், 11 நிமிடங்களில் கடந்து உலகைச் சுற்றி வலம்வந்திருந்தார் நெல்லி பிளை! அவருடைய புகழ் அமெரிக்காவில் மட்டுமல்ல, பிற நாடுகளிலும் பரவியது. இளைஞர்களின் ரோல் மாடலாக மாறியிருந்தார் நெல்லி பிளை.
எதிர்த் திசையில் உலகைச் சுற்றி வரக் கிளம்பிய எலிஸபெத் பிஸ்லேண்ட் அப்போதும் உலகைச் சுற்றிக்கொண்டிருந்தார்… ஆனாலும் பிலியாஸ் ஃபாக்கின் சாதனையை முறியடித்து, 76.5 நாட்களில் உலகைச் சுற்றி வந்துவிட்டார்!
தன்னுடைய அனுபவங்களை ’72 நாட்களில் உலகப் பயணம்’ என்ற புத்தகமாக எழுதி வெளியிட்டார் நெல்லி பிளை! அவருக்குப் பிறகு நிறையப் பேருக்கு உலகைச் சுற்றிவரும் ஆசை ஏற்பட்டது. சில மாதங்களுக்குப் பிறகு உலகப் பயணத்தை மேற்கொண்ட ஜார்ஜ் ஃப்ரான்சிஸ் ரெய்ன் 67 நாட்களில் உலகைச் சுற்றி வந்தார்! போக்குவரத்தில் முன்னேற்றம் ஏற்பட்ட 14 ஆண்டுகளுக்குப் பிறகு சென்றவர்கள் 36 நாட்களில் உலகப் பயணத்தை முடித்தனர்! இன்று இன்னும் விரைவாகவே உலகப் பயணம் சாத்தியம். ஆனாலும் நெல்லி பிளையின் முதல் பயணத்துக்கு ஈடுஇணை எதுவுமில்லை!
நெல்லி
* 1864. மே 5 அன்று பிறந்தார் நெல்லி பிளை. இவரது இயற்பெயர் எலிஸபெத் ஜேன் கோச்சரன்.
* சிறுவயதிலேயே தந்தையை இழந்ததால் வறுமையில் இருந்தது குடும்பம். ஆசிரியர் படிப்புக்குப் படித்துக்கொண்டிருந்தபோது, பணம் இல்லாததால் பாதியில் படிப்பை விட்டுவிட்டார்.
* பெண்களைப் பற்றிய மிகப் பழமையான கருத்துகளைத் தொடர்ந்து வெளியிட்டுக்கொண்டிருந்தது ஒரு பத்திரிகை. அந்தப் பத்திரிகைக்கு மறுப்புத் தெரிவிப்பதற்காக, நெல்லி பிளை என்ற புனைபெயரில் கட்டுரையை அனுப்பினார்.
* எடிட்டருக்குக் கட்டுரைப் பிடித்துப் போனது. நேரில் அழைத்தனர். பெண் என்றதும் பத்திரிகையாளராகச் சேர்த்துக்கொள்ள இயலாது என்று கூறிவிட்டனர். தொடர்ந்து கட்டுரைகள் எழுதி அனுப்பினார் நெல்லி பிளை. அவருடைய கட்டுரைகள் எல்லோரையும் ஈர்த்தன.
* பத்திரிகையாளராக வேலை கிடைத்தது. ஒரு கட்டத்தில் சமையல், ஃபேஷன், அழகு போன்ற விஷயங்களை எழுதித் தரும்படி நிர்வாகம் கேட்டுக்கொண்டது. அந்த வேலையிலிருந்து விலகி, நியுயார்க் சென்றார். அங்குள்ள பத்திரிகையில் சேர்ந்தார். கட்டுரைக்காக ஒரு மனநல காப்பகத்தில் மனநலம் பாதிக்கப்பட்டவராகச் சேர்ந்தார். 10 நாட்கள் தங்கி, மனநலம் பாதிக்கப்பட்டவர்கள் நடத்தப்பட்ட விதம், மருத்துவம், ஊழல் போன்றவற்றை புலனாய்வு செய்து வெளியிட்டார். பத்திரிகைத் துறைக்கு ’புலனாய்வு பாணி’ என்ற புதிய துறையை அறிமுகம் செய்தவர் நெல்லி பிளை.
* எண்ணெய் டிரம், பால் கேன்களின் உருவத்தைச் சிறிது மாற்றி, இன்னும் எளிதாகப் பயன்படுத்தும்படி செய்ததால், கண்டுபிடிப்பாளராகவும் அறியப்படுகிறார்.
* 30 வயதில் திருமணம் செய்துகொண்டு, பத்திரிகை துறையில் இருந்து விலகினார்.
* 57 வயதில் நிமோனியாவால் பாதிக்கப்பட்டு, மறைந்து போனார்.
ஆர்வமும் கடின உழைப்பும் முயற்சியும் இருந்தால் உலகில் எதை வேண்டுமானாலும் சாதிக்க முடியும் என்பதற்கு நெல்லி பிளை மிகச் சிறந்த உதாரணம்!
படைப்பாளர்:
சஹானா
எழுத்தாளர், பத்திரிகையாளர்.