இரண்டாம் வகுப்பு சுற்றுலா மிகவும் வித்தியாசமான அனுபவம். இரண்டாம் வகுப்பில்தான் எனக்கு முதன்முதலில் கணக்கு பாடத்தில் பற்று வந்தது காரணம் வகுப்பு ஆசிரியை சிஸ்டர் ஊக்கப்படுத்தும் விதம் எனக்குப் பிடிக்கும். இன்றும் நான் விரும்பிப் பார்க்க முடியாமல் போனது அவரைத்தான்.
இரண்டாம் வகுப்பில் சுற்றுலா 20 கி.மீ. தூரத்தில் உள்ள அணைப்பட்டிக்குச் சென்றது. பக்கத்து வீட்டில் குன்றன் (வகுப்பு தோழன்) குடும்பம் . அவர்கள் வீட்டில் அனுப்பச் சொல்லி அனுமதி கேட்டு இருவரும் பெயர் கொடுத்துவிட்டோம். எனக்கு ஞாபகம் அந்தச் சிறுவயதில் 30 பேருக்கு மேல் இருப்போம். அனைவரையும் சரியான நேரத்தில் பேருந்து நிறுத்தத்தில் அரசுப் பேருந்தில் ஏற்றி விட்டார்கள். எனக்கோ பேருந்து நிலையத்தில் மட்டுமே பெற்றோருடன் செல்லும் போது ஏறிப் பழக்கம். இடம் கிடைக்குமா எனச் சந்தேகம் வேறு. பேருந்தில் பின் படிகட்டில் வரிசையில் ஒவ்வொருவராக ஏற உதவினார்கள் ஆசிரியர்கள். அனைவரும் ஏறியவுடன் பேருந்து நகரத் தொடங்கியது. அதற்கிடையில் குறைவான இருக்கைகள் காலியாக இருந்ததால் மூவராக அமரலாம் என முடிவெடுத்து அமர்ந்தோம். எப்படி பையனுடன் அமர்வது எனத் தயக்கம் சிலரிடம் இருந்தது. வீட்டில் சொல்லி அனுப்பினார்களோ என்னவோ. நான் குன்றனை ஜன்னல் அமரச் சொல்லி, அடுத்து நான், அடுத்து நவமணி என அமர்ந்து கொண்டோம். சில இருக்கைகள் சரவணன் கிராண்ட் விஜியும் எதிர்த்த சீட்டில் சத்யசீலா, ரேணுகாவும் அமர்ந்து இருந்தார்கள். 2 ரூபாய் குச்சி ஜஸ் மிட்டாய் பாக்கெட்டும் மோதிர அப்பள பாக்கெட்டும் வாங்கி வந்து இருந்தேன்.
என்னை என்றும் சிரிக்க வைக்கும் நண்பனில் ரஜினி முதல்வன். அவன் தினமுமே அச்சு முறுக்கு கொடுப்பான் எங்களுக்கு. பேருந்தில் ஆசிரியர் அனுமதி கேட்டு ஐஸ்குச்சி மிட்டாய் பாக்கெட்டைப் பிரித்து அனைவரும் சுவைத்துக்கொண்டே பல வகையான மரம் செடிகளைப் பார்த்தபடி மரத்தின் பெயர்கள் தெரிகிறதா எனச் சொல்லிக்கொண்டும் பயணித்தோம். அணைப்பட்டியும் வந்தது அங்கே அணைக்கட்டு இருந்தது. பாலத்தில் நடந்து சென்று அங்கு அணைக்கட்டு எப்படி உதகிறது என்று ஆசிரியர் விளக்கினார். பாலத்தின் அடுத்த பாதை வழி ஆற்று மணலில் நடந்தோம். ஆற்றில் தண்ணீர் ஆங்காங்கே தேங்கிக் கிடந்தது. தூரத்தில் ஆலமரமும் மரத்தின் கீழ் கோயிலும் இருப்பதைப் பார்க்க முடிந்தது. அது வரை இருவராக வரிசையில் சென்ற நாங்கள் ஆசிரியர் அந்த மரம்தான் செல்ல வேண்டிய இடம் எனச் சொன்னவுடன் ஓட ஆரம்பித்தோம். ஆற்று மணலில் வேகமாக ஒடமுடியவில்லை. சிலர் செருப்பைக் கையில் எடுத்துக் கொண்டு வெறும் காலில் ஓடினார். சிலரிடம் மிதியடியே கிடையாது, போடும் பழக்கமும் இல்லை. இடையே நின்று சொட்டான்கல் (கூழாங்கற்கள்) பொறுக்கி எடுத்தோம். ஆம், அந்தக் காலத்தில் இயற்கையோடு இயற்கையாகக் கிடைப்பதை வைத்தே விளையாட்டுகள் இருந்தன நாங்களும் விளையாடுவோம். நான் அனைவரும் மரத்தடி நிழலில் ஓடிச்சென்று மகிழ்ச்சியாகக் கத்திக் கொண்டே ஓடிய களைப்புடன் தரையில் அமர்ந்தோம். சின்னத்தாய் டீச்சரிடம் எனக்குக் கொஞ்சம் பயம் இருக்கும். அவர்தான் பள்ளியின் இடை வேளைகளில் மிட்டாய் விற்பார். அங்கும் அவர் விற்றதில் சில மிட்டாய்களை வாங்கிப் பகிர்ந்து சாப்பிட்டோம். ஆசிரியர்கள் சொல்லச் சொல்ல எல்லோரும் வட்டமாக உட்கார்ந்து பாட்டு பாடினோம். சிலர் கதைகள் சொன்னார்கள். ரஜினி அவனே ( சட்டி சுட்டதடா கை விட்டதடா…) பாட்டைப் பாடி ஆடி எல்லோரையும் மகிழ்வித்தான் . அது அவனது தனித்தன்மையாக நான் வியந்து பார்ப்பேன்.
மதியம் உணவு நேரம் வந்தது. சிலர் தூக்குவாளியில் சாம்பார் சாதமும் சிலர் புளிச் சாதமும் சிலர் டிபனும் மதிய உணவு எடுத்து வந்திருந்தார்கள். எங்கள் வீட்டில் எப்பவும் இலையில் பொட்டலம் கட்டிதான் கொடுத்து அனுப்புவார்கள். அனைவரும் பகிர்ந்து மதிய உணவை முடித்தோம். உண்ட களைப்பு தூக்கமும் வர ஆரம்பித்தது. ஆலமர நிழலில் அதன் காற்றின் மகிமையும் சேர்ந்து கொண்டதால்.
3 மணிக்குத்தான் அடுத்த பேருந்து.
இன்னும் 2 மணிநேரம் நேரம் இருந்தது அனைவரும் வட்டமாக உட்கார்ந்து குலைகுலையா முந்திரிக்காய் விளையாட ஆரம்பித்தோம். இரண்டு மூன்று ரவுண்ட் முடிந்ததும் அனைவரையும் ஒன்றாக உட்காரச் சொன்னார்கள். அப்போது எல்லாரும் தங்கள் சேட்டைகளை ஆரம்பித்தார்கள். அருகில் இருந்த அனுமார் கோயில் மற்றும் அப்போதுதான் தூர்தர்ஷன் தொலைக்காட்சி சேனலில் ராமாயணத் தொடரும் ஒளிபரப்பாகும் சமயம் என்பதால் பையன்கள் அனைவரும் கொண்டு வந்த துண்டை எடுத்து அனுமார் வால் போன்று பின்னால் சொருகிக்கொண்டு ஒருவர் வாலை ஒருவர் பிடித்து விளையாட ஆரம்பித்தார்கள். ஆசிரியரும் பெண்பிள்ளைகளும் ரசிக்க ஆரம்பித்தோம்.
பேருந்து வர சரியாக இருந்தது. அனைவரும் ஏறி அமர இடம் இருந்தது. எங்கள் ஊரை நோக்கிப் பேருந்துப் பயணத்தில் சிலர் பேருந்திலேயே அடுத்தவர் மீது சாய்ந்து உறங்கவும் உடன் இருந்து தூங்காத நண்பர்கள் கவனமாகப் பார்த்துக் கொண்டார்கள். பயணம் இனிதே முடிந்தது.
படைப்பாளர்:
ஆர். சங்கீதா
அப்பாவின் உயரிய எண்ணமான மக்கள் சேவையைச் செய்ய, கிராமத்தின் முதல் மருத்துவராக ஆன இவர் ஒரு பயணக்காதலி. ரயிலும் பேருந்தும் இவரின் நெருங்கிய தோழர்கள். அந்த தோழர்கள் தந்த தோழமைகளோ ஏராளம். ஊரின் முதல் முனைவரான அம்மாவைப் பார்த்து எழுத ஆரம்பித்தார். பயணம் வாயிலாகத் தன்னையும் தேடிக் கண்டுபிடித்தார். அப்படிப் பல ஊர்கள் தரும் அனுபவங்களை her stories வழியாக வாசகர்களுக்கு சொல்வதில் பெரும் மகிழ்ச்சியடைகிறார் ஆர். சங்கீதா.