இருவரும் ஆசிரியர்கள் என்பதால் இயல்பாகவே உரையாடல் கல்வி குறித்து திரும்பியது. மாணவர்கள் சமீபமாகத்தான் பள்ளிக்கு தினமும் வருவதை வழக்கமாக்கியிருக்கிறார்கள். ஆனாலும் சில சமயங்களில் மீன்பிடிக்கவும் காடுகளுக்குள் வனப்பொருள்கள் சேகரிக்கவும் சென்றுவிடுகிறார்கள்.
இரண்டாம் வகுப்பு, மூன்றாம் வகுப்பு மாணவர்கள்கூட பெரியவர்கள் துணையின்றி சென்று தேன் சேகரித்து வருகிறார்கள். கேட்டால் “எங்களையெல்லாம் தேனீ கொட்டாது சார்” என்கிறார்கள். “அது எப்படி டீச்சர், அவர்களை மட்டும் தேனீ ஒன்றும் செய்யாது?” என்னிடம் கேட்ட ராஜேஷிடம் நான் ஆச்சரியத்துடன் திருப்பிக் கேட்கிறேன். “அதெப்படி சார் ஒன்றும் செய்யாது?”
தொடக்கக்கல்வி முடித்தவுடன் கேரளாவுக்கோ, கீழே குரங்கணி அல்லது போடி நாயக்கனூருக்கோ ஆண்குழந்தைகள் படிக்கச்செல்கிறார்கள். ஆனால் பெண் குழந்தைகளுக்கு இன்னும் கல்வி எட்டாக்கனிதான். ஊர்விட்டு ஊர் படிக்க அனுப்பும் வழக்கம் இல்லை.
தினமும் வேலைக்குச் சென்றால், இன்னமும் உங்கள் வாழ்க்கை நன்றாக இருக்குமே? பத்தாம் வகுப்பு படித்த இளைஞர்கள் அரசு போட்டித்தேர்வுகள் எழுதினால் கட்டாயம் வேலை கிடைக்குமே? போன்ற அறிவுரைகளை எல்லாம் அவர்கள் மதிப்பதேயில்லை, என குறைபட்டுக்கொள்கிறார் ராஜேஷ். ‘படித்து…? வேலைக்குப்போய்…? என்ன செய்யப்போகிறோம்? இப்பவே நாங்கள் நல்லாத்தானே இருக்கோம்? சந்தோஷமாகத்தானே இருக்கோம்?’ என்ற கேள்வியே பதிலாக வருகிறதாம்.
தேவைக்கு அதிகமான பணம் தேவையில்லை என்பது அவர்களது உறுதிப்பாடாக இருக்கிறது. படிப்பில் ஆர்வமில்லை. பணத்தேவையில்லை. ஆம், சுயசார்பு வாழ்க்கை வாழும் அவர்களுக்குத் அதிகப்படியான பணம் தேவையில்லைதான். ஒவ்வொரு குடும்பத்திற்கும் அரசு கொடுத்த 2 ஏக்கர் நிலமும், கட்டிக்கொடுத்த வீடும் இருக்கிறது. அரசின் உபயத்தால் அனைத்து வீடுகளிலும் மின்சார வசதி இருக்கிறது; உடன் 100 யூனிட் இலவசமாக. ஆனால் எந்தவிதமான ஆடம்பரப்பொருள்களோ, ஃபேன் போன்ற அத்தியாவசியப் பொருள்களோகூட அவர்களிடம் இல்லை. தினமும் விறகு எடுக்கப்போகிறார்கள். வனத்திற்குள் சென்று தேன், கிழங்கு, போன்ற வனப்பொருள்களை சேகரித்து வருகிறார்கள். அரசு மாதம் ஒருமுறை ரேசன் பொருள்களைக் கொண்டு வந்து கொடுக்கிறது. இது போதும் எங்களுக்கு; வேறு என்ன வேண்டும் என்கிறார்கள்.
கல்யாணச்செலவே 2000 ரூபாயில் முடித்துவிடும் அவர்களுக்குப் பணம் தேவையில்லைதான். ஒரு வேட்டி, சட்டை, ஒரு சேலை, குடியில் இருக்கும் அனைவரும் சேர்ந்து அனைவருக்கும் செய்யும் எளிமையான சமையல், அவ்வளவுதான் செலவு. தங்கநகை போடும் பழக்கமெல்லாம் இல்லை. சில திருமணங்கள் பகலில், பெரும்பாலான திருமணங்கள் இரவில். ஊர்த்தலைவர் வீட்டுத் திருமணம் மட்டும் பகலில் சிறப்பாக நடைபெறும். கேட்டுக்கொண்டிருக்கையில், வாழ்நாள் முழுமையும் பிள்ளைகளின் திருமணத்திற்காக உழைத்து ஓய்ந்து போகும் தரைவாழ் ஜீவன்கள் கண்ணில் வந்துபோனார்கள்.
முதுவர்கள் மிகவும் மெலிந்த உடலமைப்பு கொண்டவர்கள். ஆண்களே அதிகபட்சம் 50 கிலோதான் இருக்கிறார்கள். அதுவே நல்ல வலுவான உடலமைப்புதான். காரணம் நடக்கிறார்கள்… நடக்கிறார்கள்… நடந்து கொண்டே இருக்கிறார்கள். 15 அடி நீளமுள்ள 50 கிலோ மரத்தை தூக்கிக்கொண்டுகூட சாவகாசமாக நடக்கிறார்கள். இளைஞர்கள் குரங்கணிவரை ஒரு நாளைக்கு இரண்டு முறை இறங்கி ஏறிவருகின்றனர். பெண்களும் வலுவில் ஆண்களுக்குச் சளைத்தவர்கள் இல்லை. “குழந்தை பிறந்து 12ஆம் நாள் ஆற்றில் மீன் பிடிக்க 12 நாள் கைக்குழந்தையை முதுகில் கட்டி தூக்கி வரும் பெண்களைப் பார்த்து அதிர்ந்துவிட்டேன்” என்கிறார் ராஜேஷ்.
அந்த மெலிந்த, வலிமையான உடலமைப்பிற்குக் காரணமான அவர்களின் உணவு முறை குறித்து அறிய முற்படுகிறேன். அவர்கள் ஜீன் மட்டுமே அதற்குக் காரணமாக இருக்க முடியும். ஏனெனில் மீன்கள், கிழங்குகள் போன்ற எளிமையான உணவுதான் அவர்களின் பெரும்பாலான உணவாக இருக்கிறது. அரிசி உணவும் குறைந்த அளவில் எடுத்துக்கொள்கிறார்கள். மாணவர் எண்ணிக்கை மிகக்குறைவாக இருப்பதால், மதிய உணவு பள்ளியில் அளிக்க வழியில்லை. மதிய உணவு இடைவேளைவிட்டவுடன் எப்போதும் அந்த மாணவர்கள் சேர்ந்து கூட்டாஞ்சோறுதான் சாப்பிடுகிறார்கள்.
யாராவது ஒருவருடைய வீட்டிலிருந்து சோறு கொண்டுவந்து, ஒரே வட்டில் அல்லது இலையில் கொட்டி சேர்ந்து சாப்பிடுகிறார்கள். ஏதோ ஒரு குழம்பு, அதுவும் இல்லையெனில் தண்ணீர் ஊற்றிக்கூட சாப்பிட்டு விடுகிறார்கள். வீடுகளிலுமே பெரும்பாலும் இப்படிப்பட்ட கூட்டாஞ்சோறுதானாம். மீன், நண்டு போன்றவற்றை விரும்பி உணவில் சேர்த்துக் கொள்ளும் இவர்கள், ஆற்றில் மீன் அதிகம் கிடைத்துவிட்டால் அந்த மீனை வெயிலில் காயவைத்து, கருவாடாக்கி வைத்துக்கொள்கிறார்கள். வெற்றிலையின் மீது மிகுந்த விருப்பம். வெற்றிலைபோடும் பழக்கம் ஒவ்வொரு முதுவாக்குடியிடமும் உண்டு.
அவர்கள் மொழியில் தரையூர் என்பது குரங்கணி, போடியைக் குறிக்கிறது. வெற்றிலை, சுண்ணாம்பு வாங்குவதற்காக மட்டுமே தரையூர் செல்கிறார்கள். தேறல் (கள்) குடிப்பதை வழக்கமாகக் கொண்டிருந்தவர்களிடம் டாஸ்மாக் இன்று அறிமுகமாகியிருக்கிறது. பணம் பாதாளம் வரை பாயும் என்பது போல டாஸ்மாக் மது, காடுகளையும் மலைகளையும் ஊடுருவி பழங்குடியினர் வரை பாய்ந்திருக்கிறது.
தூய தமிழ்ச் சொற்கள் கொண்ட கொடுந்தமிழை, கொஞ்சம் இழுத்துப்பேசி, அதையே ‘எங்க பாஷை’ எனக்கூறிக்கொள்கிறார்கள். தூரத்திலிருப்பவர்களைக் கூப்பிடுவதற்கு இன்னமும் ஒலிகளைப் பயன்படுத்தும் வழக்கம் மாறாமல் இருக்கிறது. காட்டுச்சமூகமாக இருந்தாலும் வேட்டையாட விரும்பாத இனம் முதுவர் இனம். விலங்குகளின் நடமாட்டத்தை வாசனை கொண்டு அறிந்து கொள்கிறார்கள். இவர்கள் இருப்பிடத்திற்குக் கொஞ்சம் மேலே புலி, சிறுத்தை, கரடி, காட்டுமாடு, புள்ளிமான், கிளாமான் போன்றவை இருக்கின்றன.
“சிறுத்தை போன்ற விலங்குகள் மனிதனின் வாசனையை ஒரு கிலோமீட்டர் தூரத்திலேயே நுகர்ந்து, தானாகவே விலகிப்போய்விடும். நாங்கள் தேன் எடுக்கப்போகும்போது மான், ஆடுபோன்ற வேட்டையாடிய உணவை ருசித்துக்கொண்டிருந்தால், மனிதர்களைப்பார்த்ததும் சிறு சப்தம் கொடுக்கும், நாம் கவனிக்காவிட்டால் கொஞ்சம் அதிகமாக உறுமல் சப்தம் வரும். உடனே நாங்கள் விலகி வந்துவிடுவோம்” என்கிறார்கள் சகஜமாக.
அவர்களுக்கென மிகச்சிறிய எளிமையான முருகன் கோவில் ஒன்று இருக்கிறது. பெரும்பாலான பெயர்கள் குமாரவேல், சக்திவேல், கந்தன் , என முருகன் பெயர் சார்ந்ததாகவே இருக்கின்றன. ஆறு நாள்கள் நடக்கும் கோவில் திருவிழாவில் ஐந்தாம் நாள் கறிவிருந்து. வெளியிலிருக்கும் இவர்கள் குடியைச் சேர்ந்தவர்களையும் மற்றவர்களையும்கூட அழைக்கிறார்கள். ஆனால் அவர்கள் விருந்துமுறையைக் கேட்டால் வித்தியாசமாக இருக்கிறது. ஊரே ஆண்கள், பெண்கள் என இரு பிரிவாகப் பிரிந்துவிடுகிறது. ஊரைவிட்டு சற்றுத் தள்ளியிருக்கும் பொட்டியம்மாள் கோவிலில் ஆண்கள் அனைவரும் சேர்ந்து சமைத்துச் சாப்பிடுகிறார்கள். ஊருக்குள் பள்ளிக்கு எதிரே இருக்கும் காலி இடத்தில் பெண்கள் தனியாக சமைத்து சாப்பிடுகிறார்கள்.
உடனே, பெண்கள் குறித்த செய்திகளுக்குத் தாவுகிறேன். ‘முன்பே சொன்னது போல பெண்களைப் படிக்கவைக்கும் பழக்கம் இல்லை. மாதவிடாய் காலத்தில் ‘தீட்டு’ எனக்கூறி, பெண்களை தனியாகத் தங்கவைக்கிறார்கள். அதற்கென உள்ள குடிசையில் பெண்கள் தங்கள் வீட்டைவிட்டு விலகி தனித்திருக்கிறார்கள் அவர்களால் நோய் பரவும் என்ற நம்பிக்கையில் இப்படி ஒரு ஏற்பாடு. திருமணம் வெளிக்குடிகளில் எடுப்பதில்லை. ஒருதார மணம் என்பது பொதுவாக இருந்தாலும் ஆண்களைப் போலவே பெண்களுக்கும் மறுமணம் என்பதை ஏற்றுக்கொள்கிறார்கள். மறுமணத்தை மிக மிக எளிமையாக அவர்களுக்குள் முடித்துக்கொண்டு, மனமொத்து சேர்ந்து வாழ்கிறார்கள்.’ பஞ்சாயத்து, நீதிமன்றம், வழக்குகள், வாய்தா, விவாகரத்து, ஜீவனாம்சம் என்ற எந்தத் தொல்லைகளுமற்ற வாழ்க்கை!
22 மற்றும் 24 வயதுடைய அழகேசன், கண்ணன் என்ற இளைஞர்கள் வனக்காப்பாளர்களுக்கு உதவியாளர்கள் போல, வனத்திற்குள் வீடியோ கேமரா பொருத்துதல், விலங்குகளின் நடமாட்டத்தை அறிந்து சொல்லுதல், விலங்குகளின் காலடித்தடங்களை புகைப்படங்கள் எடுத்து வருதல் போன்ற வேலைகளைத் தன்னார்வலர்களாகச் செய்கின்றனர். இதற்கென பணம் ஏதும் பெற்றுக்கொள்வதில்லை. கேட்டால், “எங்கள் மலை, எங்கள் பாதுகாப்பிற்காக நாங்கள் செய்கிறோம், இதற்கு ஏன் பணம்?” என்ற பதில் வருகிறது. ஆம், காட்டில் இருப்பதும், காட்டில் அலைந்துகொண்டே இருப்பதும் அந்த மரபணுவில் ஊறியிருக்கிறது.
கூச்சசுபாவமும், பழமை விரும்பிகளாகவும் இருக்கும் இவர்களிடத்தில் பிறரைப் பற்றி புறம் பேசுதல் என்கிற வழக்கமே இல்லை. ஒருவரைப் பிடிக்காவிடில் அவர்களிடம் பேசுவதில்லை. வேலைக்குச் செல்லும்போது தோட்டத்து உரிமையாளர்கள் ஏதேனும் பிரச்சினை செய்தால்கூட, அமைதியாகக் கடந்துவிடுகிறார்கள். வருடத்தில் ஒன்பது மாதங்களுக்கு குளிரில் இருப்பதாலோ என்னவோ, குளிக்கும் வழக்கம் மட்டும் அவர்களுக்குக் கசப்பாக இருக்கிறது.
குரங்கணியில் இருந்து முதுவாக்குடி வரை கல்பாதை வசதி உள்ளது. அதன்பின்னர் முட்டம், சென்ட்ரல் ஸ்டேஷன், டாப் – ஸ்டேஷன் உள்ளிட்ட மலைக் கிராமங்களுக்குச் செல்ல சாலை வசதி இல்லை. அந்தப் பகுதிகளில் 2 ஆயிரம் ஏக்கர் பரப்பளவில் தனியாருக்குச் சொந்தமான பட்டாக்காடுகளில் போடி நாயக்கனூரைச் சேர்ந்த உரிமையாளர்கள் மிளகு, காப்பி, பயிரிடுகிறார்கள். தற்பொழுது காப்பிக் காடுகளை, வருமானம் தரும் ஏலக்காய் காடாக மாற்றிக்கொண்டிருக்கின்றனர். இங்கு விளையும் இலவம், காபி, பலா, ஏலக்காய், பீன்ஸ் போன்ற விளைபொருள்களை கீழே கொண்டு வர முடியாமல் தலைச் சுமையாகவும், கழுதைகள் மூலமாகவும் கொண்டு வருகின்றனர். நோயாளிகளையும் கர்ப்பிணிகளையும் தொட்டில் கட்டி தூக்கிவருகின்றனர்.
நவீன சமூகத்திலிருந்து பிரிந்து வாழும் முதுவர்களைப் பற்றி வரலாற்றில் தேடத் தொடங்கினேன். லட்டு போல கிடைத்தது, Munro J D எழுதிய 32 பக்கங்கள் கொண்ட THE HIGH RANGES OF TRAVANCORE என்ற நூல். தமிழ்நாடு, கேரளா எல்லைப் பகுதியான அஞ்சுநாடு பள்ளத்தாக்குகள் மற்றும் கண்ணன் தேவன் மலைப்பகுதிகள் குறித்த செய்திகள் இந்நூலில் பதிவு செய்யப்பட்டுள்ளன. அவற்றில் முதுவர்கள் குறித்த செய்திகள் சுவாரஸ்யமானவை. மலைகளை வாழ்விடமாகக் கொண்டவர்கள் முதுவார்கள் எனக்குறிப்பிடுவதோடு, இந்த மலைப்பகுதிகளில் குடியிருந்த மக்களின் எண்ணிக்கையை சாதிவாரியாகவும் பதிவு செய்திருக்கிறார் முன்ரோ. அவரது மக்கள்தொகை கணக்கெடுப்பின்படி, வெள்ளாளர் 1150, செட்டியார்கள் 258, தெலுங்கு செட்டி 41, நாயக்கர் 22, சக்கிலியர் 64, குசவர் 5, பளியர் 598, முஸ்லிம் 2, மறவர் 148, முதுவர் 49 என பட்டியலிடுகிறார்.
‘முதுவர்கள் தங்களைப் பூர்வீக தமிழ்க்குடிகளாகக் குறிப்பிடுவதோடு, தங்களை வெள்ளாளர்களுக்கு சமமானவர்களாகக் கருதுகிறார்கள். அவர்கள் ஒரு அழகான வசீகரமான இனம், எப்போதும் உயரமான மலைப்பகுதிகளில் வசிப்பவர்கள், மிகுந்த வசீகரத்தோடு இருக்கிறார்கள். முஸ்லிம்களைப் போலவே இவர்களும் தங்கள் பெண்களைப் மற்றவர்கள் பார்வைக்கு எட்டாதவாறு வைத்திருக்கிறார்கள். ஆண்கள் பிறருக்காகக் கடினமான வேலைகளைச் செய்ய மறுத்தாலும் கோடாரி அல்லது கத்தியைப் பயன்படுத்துவதில் கைதேர்ந்தவர்கள். தோள்களில் தொங்கவிட்டபடி கனமான சுமைகளைச் சுமக்கிறார்கள். ஆண்கள் நன்கு ஆடை அணிவதுடன் பகட்டான தலைப்பாகைகளை விரும்புகிறார்கள். பெண்கள் மலிவான மதுரை நகைகளால் தங்களை ஏராளமாக அலங்கரித்துக்கொள்கிறார்கள். அவர்கள் உயரமான மலைப்பகுதிகளில் ராகி பயிரிடுகிறார்கள். எருமைகளையும் மாடுகளையும் வளர்க்கத் தொடங்கியுள்ளனர், குடிசைகள் அமைப்பதில் முதுவர்கள் கைதேர்ந்தவர்கள். தங்களுக்காக மிக வசதியான குடிசைகளைக் கட்டிக்கொள்கிறார்கள்.
முதுவர்கள் திருவிதாங்கூர் காடுகளுக்குள் விவசாயம் செய்யச் சென்றபோது அவர்களுக்கு நிலங்கள் இலவசமாகவே வழங்கப்பட்டிருக்கின்றன. இலவச நிலங்களைப் பெறுவதற்கு ஈடாக ஏலக்காய் துறைக்காக அழைக்கப்படும்போது அவர்கள் சில குறிப்பிட்ட பணிகளைச் செய்யவேண்டும் என்கிற நிபந்தனையுடன். மேலும் திருவிதாங்கூர் அரசாங்கத்தின் ஏகபோக உரிமையான தந்தம், மெழுகு மற்றும் டாமர் (இயற்கை பிசின்) அனைத்தும் முதுவர்களால் சேகரிக்கப்படுகிறது
முதுவர்கள் தங்கள் அண்டை இனமான மூனன்களைப் போல கலகலப்பானவர்கள் அல்ல, மரியாதையாக நடத்தப்பட்டால் மனமுவந்து வேலை செய்வார்கள். அவர்கள் காட்டெருமையைத் தவிர மற்ற பெரும்பாலான வேட்டை விலங்குகளை உண்கிறார்கள். மலை ஆடு மற்றும் சாம்பல் மான் இரண்டையும் கண்ணி வைத்து பிடிப்பதில் கை தேர்ந்தவர்கள். பிந்தையதை ஏறக்குறைய முற்றிலுமாக அழித்து விட்டனர். காட்டெருமை, புலி மற்றும் யானைகளைக் கண்டு அஞ்சுகிறார்கள். காடுகளுக்குள் துப்பாக்கி ஏந்திய காவலர்களுடன் செல்லும்போதுகூட, ‘அதோ அங்கு விலங்கு இருக்கிறது நான் போகிறேன்’ என விலகிச் சென்று விடுவார்கள்’ போன்ற செய்திகள் நூலில் கிடைக்கின்றன.
இதேபோன்று சமீபத்தில் வெளியான ‘கழுதைப்பாதை’ என்ற நாவலில் எழுத்தாளர் எஸ். செல்வக்குமார், கழுதையில் சுமைகளை மலை ஏற்றி இறக்கும் குழுக்களின் இரண்டு தலைமுறை வாழ்வை சித்தரித்துள்ளார். ஆரம்ப காலகட்டங்களில் பாதைகளற்ற இந்த மலைப்பகுதிகளில் காப்பித் தோட்டத்திலிருந்து ‘தலையாள்’ என்று சொல்லப்படும் பணியாளர்கள் காப்பித் தளிர்களை தலையில் வைத்து கீழே கொண்டுவருவார்கள். அது மிகக் கடினமானதாக இருந்ததால், பின்னர் கழுதையில் கொண்டு வர முடிவு செய்கிறார்கள். அவர்கள் வரும் பாதையில்தான் முதுவாக்குடி கிராமம் இருந்தது.
செந்நாய்கள், காட்டு நாய்கள், பாம்புகள் நிறைந்த அடர்காடுகளுக்குள் பயமின்றி வாழ்ந்த முதுவான்கள், சாமியாடிகளாகவும் மருந்து வைத்தியம் செய்பவர்களாகவும் இருந்தார்கள். அடர்ந்த காடுகளின் அத்தனை நுணுக்கங்களையும் அறிந்தவர்கள், மலைப்பகுதிகளின் பாதைகள் அத்தனையும் தங்கள் மூளையில் பதிந்திருந்தவர்கள் முதுவான்கள். அவர்களிடம் வம்பு செய்பவர்களிடம் பாதையை மாற்றிக் காட்டி காடுகளுக்குள் அலைய விட்டு விடுவார்களாம். மலைகளிலிருந்து பாரங்களை கீழே கொண்டுவர கழுதைப்பாதை உருவாக்க முயன்றவர்கள், முதுவாக்குடியை அடைந்தவுடன் முதுவான்களிடம் உதவி கேட்டபோது, குறுக்குப்பாதை காட்டி கழுதைப்பாதையை உருவாக்குவதில் பெரும் பங்கு வகித்திருக்கிறார்கள் முதுவாக்குடியினர்.
1950வாக்கில் நிறைவடையும் நாவலில், முதுவாக்குடியின் திருமணம் முதல் உணவு கலாச்சாரம் தொடர்ந்து இறப்பு சடங்குகள் வரை விவரிக்கப்பட்டுள்ளது. இறுதியாக, குரங்கணி பக்கத்தில் காட்டுத்தீயில் விழுந்து நான்கு மனிதர்களும் 100 கழுதைகளும் செத்து விழுவதோடு கதை முடியும்.
முன்ரோ எழுதிய செய்திகளையும் கழுதைப்பாதை விவரிக்கும் செய்திகளையும் ஆசிரியர் ராஜேஷ் விவரித்த இன்றைய முதுவாக்குடிகளின் வாழ்வியலையும் ஒப்பிட்டு பார்க்கும்போது அப்படியொன்றும் அவர்களது வாழ்வியல் முறைகளில் மாற்றங்கள் ஏற்பட்டு விட வில்லை என்பதை உணர முடிந்தது. உடன், அவர்களது இயல்புகள் இன்னும் முறிந்துவிடாமல் இயற்கை பாதுகாத்து வைத்திருப்பதையும் அறியலாம்.
நாகரிகத்தின் சப்தம் எட்டாத வனத்தின் ஆழத்தில், மரபும் மனிதமும் கைகோக்கும் ஒரு வாழ்வை இரசித்து ‘வாழ்கின்றனர்’ நம் மூத்த குடியினர். மண், மழை, மரம், மலை, விலங்குகள் என இயற்கையோடு உயிர் பிணைந்து வாழும் இனத்தின் வாழ்வியலில் நம் எல்லோருக்குமான பாடம் மறைந்திருக்கிறது.
அவர்களின் வாழ்க்கை முறையும் பாரம்பரியமும் மனித வரலாற்றின் ஆழமான அடிச்சுவடுகளை வெளிப்படுத்துகின்றன. ஆனால் ஒவ்வொரு ஆண்டும் ஆகஸ்ட் 9ஆம் நாள் உலகப் பழங்குடியினர் தினத்தை அனுசரித்து, நமக்கும் அவர்கள்மீது அக்கறையிருப்பதாகக் காட்டிக்கொள்கிறோம். உண்மையில் பழங்குடி மக்கள் குறித்த ஆய்வுகள் நம்மிடையே இல்லை.
காடுகள் அழிப்பு, நகர மயமாதல் போன்ற காரணங்களால் காடுகளிலிருந்து வெளியேற்றப்படும் பழங்குடி சமூகங்கள் அடையாளமிழந்து காலப்போக்கில் காணாமல் போகின்றன. ஏனெனில் ‘பாரங்கள் சுமந்தபடி’ ஓட்டமும் நடையுமாய் இடம் பெயர்ந்தபடியே இருக்கும் இன்றைய ‘தரையூர்’ மனிதர்களுக்கு, தனது ‘மலைமக்களுக்காகக்’ குரல்கொடுக்க நேரமில்லை. ஆம், கழுதைப்பாதை நாவலில் வரும் மூவண்ணா சொல்வது போல “மனுஷ வாழ்க்கையும் கழுதை வாழ்க்கையும் ஒன்றுதான். மனுஷனைப் போலத்தான் கழுதையும்.”
தொடரும்…
சான்றுகள்
‘The high ranges of Travancore by Munro’, JD
கழுதைப்பாதை – எஸ். செந்தில்குமார்
தொடரும்…
படைப்பாளர்
ரமாதேவி ரத்தினசாமி
எழுத்தாளர், முன்னாள் அரசுப்பள்ளி ஆசிரியர். பணிக்கென பல விருதுகள் வென்றவர். இவர் எழுதி வெளிவந்துள்ள ‘கனவுகள் மெய்ப்படட்டும்’ கட்டுரைத் தொகுப்பு பரவலாக கவனம் பெற்றது. 2014, 2015ஆம் ஆண்டுகளில் ஐ நா சபையில் ஆசிரியர் பேச்சாளராகக் கலந்துகொண்டு உரையாற்றியுள்ளார். ‘அடுக்களை டூ ஐநா’ தொடரில் அவரது ஐ நா அனுபவங்களை நகைச்சுவையுடன் விவரித்திருக்கிறார். ‘இலங்கை – எழுதித் தீராச் சொற்கள்’ என்கிற பெயரில் இலங்கை அனுபவங்களையும் ‘என்ன செய்கிறது ஐநா – பெண் கல்வித் தடைகள் உடைபடும் தருணங்கள்’ என்கிற கட்டுரைத் தொடர்களையும் நம் வலைதளத்தில் எழுதினார். இம்மூன்று தொடர்களும் நூலாக்கம் பெற்று, ஹெர் ஸ்டோரிஸ் வெளியீடுகளாக வெளிவந்து பாராட்டுகளைப் பெற்றுள்ளன. இவரின் ‘போர்களின் தேசத்தில்’ நூல், 2025ஆம் ஆண்டுக்கான தமிழ்நாடு அரசு தமிழ் வளர்ச்சித்துறையின் சிறந்த நூல் பரிசை வென்றுள்ளது.


