Site icon Her Stories

சரளைக்காட்டில் வெடித்து முளைத்த சுயம்புகள் – 4

வணிகத்தில் கவனம் செலுத்தியிருந்த நாடார் சமூகத்தினர், அரசியலின் பக்கம் திரும்பியதன் காரணமும் நியாயமானதாக இருக்கிறது. 1906ஆம் ஆண்டு தமிழ்நாடு சட்டமன்றத்தில் இஸ்லாமியர்களுக்கு பிரதிநிதித்துவம் கொடுக்கப்பட்டது. தங்கள் மீதான பாதிப்புகள், கோவில் உரிமைப் போராட்டங்கள் என தங்களைக் காத்துக்கொள்ள அதிகாரம் தேவை என உணர்ந்த நாடார் சமுதாயத்தினர் தங்களுக்கும் மேல்சபை பிரதிநிதித்துவம் வேண்டும் எனக்கோரினர்.

ஆனால் வாய்ப்பு மறுக்கப்பட்டதால் அன்றைக்கு மிகப்பெரும் செல்வந்தரான பொறையார் திரு.ரத்தினசாமி நாடாரின் முன்னெடுப்பினால், 1910 ஆம் ஆண்டு பிப்ரவரி 7 ஆம் நாள் பொறையாரில் மாநாடு நடத்தப்பட்டு நாடார் மகாஜன சங்கம் உருவானது. அதன் முதல் தலைவராக பொன்னுசாமி நாடார் நியமிக்கப்பட்டார். தன் சொந்தச் செலவில் சங்கத்தை வளர்த்த இரத்தினசாமி நாடாரின் மறைவிற்குப்பின் தொய்வடையத் தொடங்கிய சங்கத்தை பட்டிவீரன்பட்டியைச் சேர்ந்த சௌந்திரபாண்டிய நாடார் தாங்கிப்பிடித்தார்.

அவரது காலத்தில் நீதிக்கட்சி நாடார் சமூகத்தினருக்கு பெரும் பக்கபலமாக இருந்தது. 1919 ஆண்டின் மாண்டேகு செம்ஸ்போர்டு சீர்திருத்தங்களின் விளைவாக ‘இந்திய அரசுச்சட்டம் – 1919’ இயற்றப்பட்டு சென்னை மாகாணத்தில் இரட்டை ஆட்சி முறை நடைமுறைக்கு வந்தது. இம்முறையின்கீழ் 1920 ல் சென்னை சட்டமன்றத்திற்கு முதன்முதல் நடைபெற்ற தேர்தலில் நீதிக்கட்சி 63 இடங்களைக் கைப்பற்ற, சௌந்திரபாண்டிய நாடார் சென்னை சட்டமன்றத்தின் முதல் நாடார் சமுதாய உறுப்பினரானார். அவர் சட்டமன்ற உறுப்பினராக பதவி ஏற்ற நிகழ்வை,

“ஆண்டநாள் ஆண்டுமாண்ட செந்தமிழ்ப் பாண்டியன்

மீண்டதுபோல் நீதிக்கட்சியின் உறுப்பினராகச்

சட்டமன்றத்தில் பாண்டியன் தன் பணியைத் தொடங்கினார்” என்று குறிப்பிடுகிறார் பேராசிரியர் பு. இராசதுரை. தொடர்ந்து 12 ஆண்டுகள் சட்டமன்றத்தில் நீதிக்கட்சி சார்பான உறுப்பினராகவும் டாக்டர் சுப்பராயன் தலைமையிலான அமைச்சரவையின்போது ஆளும்கட்சியின் சட்டமன்றக் கொறடாவாகவும் பதவி வகித்தார். பெரியார் நீதிக்கட்சியை, ‘திராவிடர் கழகமாக’ மாற்றியபோது,  நாடார்கள் தி.க வின் ஆணிவேராக இருந்தனர். மொழிப்போராட்ட தியாகி சங்கரலிங்க நாடார், திருத்தணி மீட்ட எல்லை போராட்ட வீரர் சிலம்புச் செல்வர் மா.பொ. சிவஞானம், குமரியை தாய் தமிழ்நாட்டுடன் இணைக்கப்போராடிய குமரித் தந்தை மார்ஷல் நேசமணி, செய்தித் துறையில் புரட்சி செய்த சி.பா. ஆதித்தனார், கம்யூனிஸ்ட் கட்சியின் மாபெரும் தலைவர் கே.டி.கே. தங்கமணி, மணிமுத்தாறு கண்ட மாவீரன் கே.டி. கோசல்ராம் போன்ற சமூகப்பெரியோர்கள் அரசியல் அரங்கில் உலா வந்தனர்.

ஒரு கட்டத்தில் அரசியலைவிட தொழில் முக்கியம் என்று உணர்ந்த நாடார் சமுதாயத்தினர், மெல்ல மெல்ல அரசியலிலிருந்து விலகி தொழிலில் நாட்டம் செலுத்தத் தொடங்கினர். இன்று அரசியல் கட்சிகள் தேடி வந்தால் நன்கொடை கொடுப்பதோடு முடித்துக்கொள்கின்றனர்.

 அடிமைத்தனத்திற்கு எதிராகக் குரல்கொடுத்து, சமூகக் கட்டுப்பாடுகளை முறியடித்து ‘சமத்துவ சமுதாயம்’ என்ற கொள்கையை வலியுறுத்திய  முத்துக்குட்டி அய்யா வைகுண்டர், வணிகமேதை கருமுத்து தியாகராஜன், 1845 ல் சொந்தமாக மூன்று கப்பல்கள் வைத்திருந்த, உழைப்பால் உயர்ந்த ‘பொறையார் நாடார் எஸ்டேட்டின்’ வெள்ளையா நாடார், சிவகாசியை ஜப்பானாக்கி, அனைத்து சமுதாயத்தினருக்கும் வேலைவாய்ப்பை உருவாக்கித்தந்த இரட்டையர்கள் சண்முக நாடார் மற்றும் அய்ய நாடார், மணிமுத்தாறு அணை கண்ட சுதந்திரப் போராட்ட தியாகி கே.டி. கோசல்ராம் (வறண்டு கிடந்த பூமியை வளமாக்கும் நோக்கில் மணிமுத்தாறு அணை கட்ட, தன் சொந்த முயற்சியில் நாடார் சமூக மக்களிடமிருந்து 1950களில், ஒரே வாரத்தில் ஒன்றேகால் கோடி ரூபாய் வசூலித்துக்கொடுத்தவர்), தினத்தந்தியைத் தந்து தமிழகத்தின் பட்டிதொட்டிகளில் எல்லாம் பாமரர்களை எழுத்துக்கூட்டி தமிழ் படிக்க வைத்த ஆதித்தனார், நாடார் மகாஜன சங்கம் உருவாகக் காரணமாக இருந்த பொறையார் ரத்தினசாமி நாடார், நீதிக்கட்சி வி.வி.ராமசாமி, ஜெயராஜ் நாடார், டாக்டர் சந்தோஷம், காவல்துறைக்கு பெருமை சேர்த்த அருள் ஐ.ஜி, கணினி உலகில் புரட்சி செய்த ஷிவ் நாடார் என்று உழைப்பில் உயர்ந்த அனைவரையுமே இச்சமூகத்தினர் எப்போதும் மதித்து நினைவுகூர்கின்றனர்.

கடைசியாக என மனதை ஆட்கொண்டிருந்த கேள்வியை நடேசன் ஐயா முன் வைக்கிறேன். “இத்தனை பெரியோர்கள் இருந்தும், அது ஏன் காமராஜருக்கு அத்தனை முக்கியத்துவம்? அவர் மட்டும் ஏன் பிரமாண்டமாக கொண்டாடப்படுகிறார்? தேனியில் அவருக்கு மட்டும் ஏன் அத்தனைக் கொண்டாட்டம்?”

“உங்கள் கேள்வி புரிகிறது”, என்றுகூறி, புன்னகைத்தவர், “இச்சமுதாயத்தை தூக்கிவிட்ட அனைவரையுமே நாங்கள் மதிக்கிறோம். உங்கள் கேள்விக்குள் மறைந்திருக்கும் செய்தி போல, காமராஜரை நாங்கள் ஜாதித் தலைவராகப் பார்க்கவில்லை, கல்வித்தலைவராக, தேசியத்தலைவராக… மதிக்கிறோம். பெற்ற தாய்க்கு பிரியத்தை மட்டுமே கொடுத்த காமராஜர் ஒருபோதும் குடும்பத்தைப்பற்றி சிந்திக்காமல் நாட்டைப்பற்றி மட்டுமே சிந்தித்தவர். அவர் கொண்டு வந்த கல்விப்புரட்சியும் குலக்கல்வி திட்ட ஒழிப்பும் அனைத்து சமுதாயத்தினருக்குமானது. ஒன்பது வருடம் தமிழகத்தின் முதலமைச்சர், அகில இந்திய காங்கிரசின் தலைவர், இரண்டு பிரதம மந்திரிகளை உருவாக்கியவர், நியூயார்க் டைம்ஸ் பத்திரிக்கை முகப்பு பக்கத்தில் இடம்பெற்ற ஒரே தமிழர் என பல்வேறு பெருமைகள் கொண்டவரை நாடார் என்ற ஜாதிக்குள் மட்டும் சுருக்கிவிடக்கூடாது. அவர் அனைவருக்குமானவர். ஆனால், நாடார் சமுதாயத்தில் தோன்றி நீதி, நேர்மை, நியாயம் ஒழுக்கம் அத்தனைக்கும் எடுத்துக்காட்டாக இருந்தவர் என்ற பெருமை எங்களுக்கு உண்டு. தேனிக்கு வந்த எங்கள் முன்னோர்கள் கல்வியில் மிகுந்த அக்கறை காட்டினர்.

இன்றும் தேனியில் எங்கள் பள்ளிகளை வைத்தே நாங்கள் அறியப்படுகிறோம், மதிக்கப்படுகிறோம். ‘நாடார் ஸ்கூல்’ என்ற வார்த்தையை உச்சரிக்காத உதடுகளே தேனியில் இருக்க முடியாது. அந்த அளவுக்கு நூறாண்டுகளாக எங்கள் பள்ளியும், அது கொடுத்த கல்வியும் தேனியின் முகத்தை மாற்றியிருக்கிறது. அதனால், கல்விக்காக பல முன்னெடுப்புகள் செய்த கர்மவீரரை தலைவருக்கும் மேலாக கல்விக்கடவுளாகவே பார்க்கிறோம். அதற்காகவே கல்வி வளர்ச்சி நாளில் அவரைக் கொண்டாடுகிறோம். காமராஜர் பிறந்தநாள் விழாவினை நாங்கள் முன்னெடுக்கிறோம், அவ்விழாவில் ஜாதிமத வேறுபாடின்றி பொதுமக்கள் அனைவரும் கலந்து கொள்கின்றனர். காங்கிரஸ் கட்சியின் சார்பாகவும் வந்து மரியாதை செலுத்துவது உண்டு. பல தன்னார்வ தொண்டு நிறுவனங்கள் அன்றைய விழாவில் திறமையாளர்களுக்கு விருது வழங்கி சிறப்பிக்கின்றார்கள். கல்வி உபகரணங்கள், உதவித்தொகை அனைத்து சமுதாய மாணவர்களுக்கும் வழங்கப்படுகிறது. குருதிக்கொடை அளிப்பவர்கள் மனமுவந்து வருகிறார்கள். இது ஒரு பொதுவிழா. தேனி மாவட்ட மக்கள் அனைவரும் கலந்து கொள்ளும் பெருவிழா” என்று முடிக்கிறார்.

இதே கருத்தையே பண்டகசாலை செயலாளர் திரு. சம்பத் அவர்களும் எடுத்து வைக்கிறார். “எங்கள் பள்ளிக்கு காமராசர் முதலமைச்சராக இருக்கும்போது வருகை தந்திருக்கிறார் என்பது எங்களுக்குப் பெருமை, நாடார் சரசுவதி ஆண்கள் மேல்நிலைப்பள்ளி வளாகத்திற்குள் காமராஜருக்கென வெண்கலச்சிலை நிறுவினோம். அங்குதான் காமராஜர் பிறந்தநாள் விழா வருடந்தோறும் கொண்டாடப்படுகிறது. தமிழ்நாடு அரசு காமராஜர் பிறந்த நாளை கல்வி வளர்ச்சி நாளாக அறிவித்தபின், கொண்டாட்டம் இரட்டிப்பாகியிருக்கிறது. அதுமட்டுமல்ல, உறவின்முறை சார்பாக பல்வேறு சமூக சேவைகளும் செய்து வருகிறோம்.  கொரோனோ காலக்கட்டங்களில் மருத்துவமனைகளுக்கு உபகரணங்கள் உதவி வழங்கினோம். வெள்ளப் பேரிடரின்போது கேரளாவிற்கு ரூபாய் 25 இலட்சம் வழங்கினோம்.  தூத்துக்குடி மாவட்ட மக்களுக்கு நிவாரணப்பொருள்கள் வழங்கினோம். குரங்கணி தீ விபத்தின்போது முன்னின்று உதவிகள் செய்தோம். அனைத்து சமுதாயக் குழந்தைகளுக்கும் கல்வி நலத்திட்ட உதவிகள் வழங்குகிறோம், இன்னும் வருடம் முழுவதும் ஏதேனும் சமூகப்பணிகளில் கலந்து கொண்டு தேவைக்கேற்ப உதவிகள் செய்து கொண்டிருக்கிறோம்” என்கிறார்.

இந்த சமூகத்தினரிடையே திருமணத்திற்கு மதம் குறுக்கே நிற்பதில்லை. பல வீடுகளில் இந்துக்களும் கிறிஸ்தவர்களுமாய் கலந்திருக்கின்றனர். இரண்டு மதக் கோவில்களுக்கும் அனைவரும் செல்கிறார்கள். பெரும்பாலான நாடார் சமுதாயத்தினர் சைவ மதத்தைச் சார்ந்தவர்களே. முருகக்கடவுளை சிறப்பு தெய்வமாக வழிபடுகிறார்கள். பத்திரகாளி, மாரியம்மன், அய்யனார் என்று சிறு தெய்வ வழிபாடும் உண்டு. “மக்க(ள்) பெருத்தவ மாரியாத்தா…. காசு பெருத்தவ காளியாத்தா” என்ற சொலவடையோடு இரு தெய்வத்திற்கும் பொங்கல் விழா தனித்தனியாக மிகச்சிறப்பாக நடைபெறுகிறது. அதாவது, அறுவடைக்கு முன்னர் பங்குனி மாதத்தில் மாரியம்மனுக்கு கொண்டாடும்போது பணமில்லா விட்டாலும் திருவிழாவில் கூட்டம் அதிகமாக இருக்குமாம். அறுவடைக்குப் பிறகு வைகாசி மாதத்தில் நடைபெறும் காளியம்மன் பொங்கல் திருவிழாவின்போது, காசு நிறைய புழங்குவதால் ஆடம்பரமாக இருக்குமாம். யோசித்த போது, “அட ஆமாம்ல” எனத் தோன்றியது.

திருமணத்தின்போது தாய்மாமனுக்கு முக்கியத்துவம் அளிக்கின்றனர். ‘தாய்க்குப்பின் தாய்மாமன்தான்’ என்று வாழ்க்கை முழுவதுமே தாய்மாமனுக்கு முதல்மரியாதைதான். பவுன் இரண்டு இலட்சத்தைத் தொடப்போகும் இன்றும் பெரிய வீடுகளில், திருமணத்திற்கு பெண்வீட்டார் கிலோ கணக்கில் நகை போடும் வழக்கத்தைக் கொண்டுள்ளனர். தங்கமும் வெள்ளியும் பட்டும் அவர்கள் வாழ்வில் இரண்டறக் கலந்துள்ளது. தங்கத்தை அணிகலனாக மட்டும் பார்க்காமல் ஆபத்து நேரத்தில் வணிகத்திற்கு தேவைப்படும் முதலீடாகவும் பார்ப்பதால் அனைத்து தரப்பு மக்களிடமும் தங்கநகை சேமிப்பாய் நிறைந்திருக்கிறது. தங்களுக்கு எவ்வளவு பெரிய சொந்தம் இருக்கிறது என்பதைக்காட்ட திருமண விழாக்களை மிக ஆடம்பரமாக நடத்துகிறார்கள்.

‘அண்ணாச்சி’ என்ற ஒற்றைச்சொல்லில் எவரையும் உறவினராக ஏற்றுக்கொள்கின்றனர். திருவிதாங்கூர் காலம் முதல் கோவில் உரிமை, கல்வி உரிமை, சமூக உரிமை என தங்களது உரிமைகளுக்காக போராடி வென்ற சமூகம் இன்று ஓய்வற்ற உழைப்பு, தேவையான சேமிப்பு, அமைதியான வாழ்க்கைமுறை என தெளிந்த நீரோட்டமாகத் தங்கள் வாழ்க்கையை மாற்றியிருக்கிறார்கள். வர்த்தகத்தையும் கல்வியையும் கைக்கொண்டு ‘சாதிக்கழிவிலிருந்து’ மீண்டழெந்த நாடார் சமூகத்தின் வரலாறு, ஒரு சமூகத்தின் வீழ்ச்சியையும் அதிலிருந்து எழுந்த மீட்சியையும் ஒரே நேரத்தில் உணர்த்துகிறது.

“நாடார் சமுதாயத்தினர் தோட்டக்காட்டில் விளைந்தவர்கள் இல்லை, சரளைக்காட்டில் விதைத்து விட்ட விதைகள்….சுயம்புவாய் வெடித்து முளைத்தவர்கள்”  என்ற திரு. நடேசன் ஐயா அவர்களின் வார்த்தைகள் வீட்டுக்கு வந்தபின்பும் நெடுநேரம் காதில் ஒலித்துக்கொண்டிருந்தது.

படைப்பாளர்

ரமாதேவி ரத்தினசாமி

எழுத்தாளர், முன்னாள் அரசுப்பள்ளி ஆசிரியர். பணிக்கென பல விருதுகள் வென்றவர். இவர் எழுதி வெளிவந்துள்ள ‘கனவுகள் மெய்ப்படட்டும்’ கட்டுரைத் தொகுப்பு பரவலாக கவனம் பெற்றது. 2014, 2015ஆம் ஆண்டுகளில் ஐ நா சபையில் ஆசிரியர் பேச்சாளராகக் கலந்துகொண்டு உரையாற்றியுள்ளார். ‘அடுக்களை டூ ஐநா’ தொடரில் அவரது ஐ நா அனுபவங்களை நகைச்சுவையுடன் விவரித்திருக்கிறார். ‘இலங்கை – எழுதித் தீராச் சொற்கள்’ என்கிற பெயரில் இலங்கை அனுபவங்களையும் ‘என்ன செய்கிறது ஐநா – பெண் கல்வித் தடைகள் உடைபடும் தருணங்கள்’ என்கிற கட்டுரைத் தொடர்களையும் நம் வலைதளத்தில் எழுதினார். இம்மூன்று தொடர்களும் நூலாக்கம் பெற்று, ஹெர் ஸ்டோரிஸ் வெளியீடுகளாக வெளிவந்து பாராட்டுகளைப் பெற்றுள்ளன. இவரின் ‘போர்களின் தேசத்தில்’ நூல், 2025ஆம் ஆண்டுக்கான தமிழ்நாடு அரசு தமிழ் வளர்ச்சித்துறையின் சிறந்த நூல் பரிசை வென்றுள்ளது.

Exit mobile version