இவ்வாறு வெளியூர்களிலிருந்து முக்கூட்டு சாலைக்கு வந்தவர்கள் ஒன்றிணைந்து தேனியிலும் பேட்டையை உருவாக்கினர். நாடார்களின் தேனி வருகைக்குப் பிறகான நினைவுகளை செய்திகளாக பகிர்ந்து கொள்கிறார் நடேசன் ஐயா.
“முற்றுமுதல் கரடாக இருந்த தேனியில் கொட்டக்குடி ஆற்றின் கரையோரம் மேலத்தெருவில் (மேற்குத்தெரு) குடியேறினர். வியாபாரம் பெருகியவுடன், தேனி சந்தை உருவாகி, சந்தையில் கடைபோடும் பழக்கம் நடைமுறைக்கு வந்தது. இன்றும் தேனி சந்தையில் கடை போடுபவர்களில் பெரும்பான்மையினர் நாடார் சமுதாயத்தினரே. நாலா புறங்களிலிருந்தும் விவசாயப்பொருள்கள் தேனிக்கு வந்து சேர, நாடார்கள் ‘கமிஷன் கடை’ எனச் சொல்லப்படும் கடைகளின் முதலாளிகளாயினர்.
பயிர் விளையும் போதே விவசாயிகளுக்கு முன்பணம் கொடுத்து, விளைந்த பின் விலைக்கு வாங்கிக்கொள்ளும் பழக்கத்தை ஏற்படுத்தினர். புதன் மற்றும் சனிக்கிழமைகளில் கிராமங்களுக்குச் சென்று வியாபாரம் செய்து பொருள்களை வாங்கி வருவார்கள். தேனியை ஒட்டியுள்ள கிராமங்களில் பெரும்பாலான விவசாய நிலங்கள் நாயக்கர் இன மக்களிடம் இருந்தது. நகரப்பகுதியில் நாடார்களும், ராஜூக்கள் என்று சொல்லக்கூடிய இன மக்களும் இருந்தனர். கம்பம் பள்ளத்தாக்குப் பகுதிகளில் தேவர் இன மக்கள் இருந்தனர்.
கம்பம் பகுதியில் விளையும் விவசாயப்பொருள்களை விற்க அவர்கள் தேனிக்கு வர, நாடார் – தேவர் இன மக்களுக்கிடையே நல்லிணக்கம் உருவானது. சிவகாசியில் கலகம் செய்து பிரிந்த மக்களை, காலம் தேனியில் ஒன்றுசேர்த்தது.
மேலத்தெருவை சுற்றிலும் கடைத்தெருக்களும் ஊருமாக வளரத் தொடங்கியது. மேலத்தெருவில் ஒரு சிறிய பீடத்தில் ஸ்ரீ பத்திரகாளியம்மன் சிலை வைத்து வணங்கினர். அங்கு வரும் வியாபாரிகள் ‘எண்ணெய்க்காசு’ கொடுத்து கோவிலை பராமரித்தனர். சிவகாசி பகுதியிலிருந்து வந்தவர்கள் தேனியில் 1898ஆம் ஆண்டு ‘தேனி மேலப்பேட்டை இந்து நாடார் உறவின்முறை’யைத் தொடங்கினர். 1800 களின் இறுதிகளில் கோ.ஆ.சி. சிவகாமி நாத நாடார் வாங்கியிருந்த இடத்தில் (இன்றைய இடமால் தெருவில்) 1919ஆம் ஆண்டு, பெ. பண்டுதப்ப நாடார், K.T.K கூளையா நாடார், முத்துச்சாமி நாடார், SM பொன்னையா நாடார், சாமிக்காளை நாடார், ராஜையா நாடார் ஆகியோரின் முயற்சியினால் AIT ராஜாமணி நாடார் அவர்களைத் தாளாளராகக் கொண்டு, உறவின்முறையின் சார்பாக ‘நாடார் சரஸ்வதி தொடக்கப்பள்ளி’ தொடங்கப்பட்டது. 38 மாணவ மாணவிகள் மற்றும் 2 ஆசிரியர்களுடன் தொடங்கப்பட்ட பள்ளியில் தற்போது 4000 மாணவர்கள், 94 ஆசிரியர்கள் என தமிழகத்தின் மிகப்பெரிய தொடக்கப்பள்ளிகளில் ஒன்றாகத் திகழ்கிறது. இதுவரை சுமார் 1 இலட்சம் பேர் இந்த கல்வி சாலையில் கல்வி பயின்றுள்ளனர். பள்ளி உருவானபின்பே, தேனி என்ற நகரம் விரிவடையத்தொடங்கியது.
லண்டன் சென்று ‘பாரத் லா’ படித்திருந்த, திருமங்கலத்தைச் சேர்ந்த கே.டி.கே. கூளைய நாடார், 1920 ஆம் ஆண்டில் தேனியில் முதல் பஞ்சாலையை நிறுவினார். தனது ஜின்னிங் ஃபேக்டரியிலிருந்து, லண்டனுக்கு பஞ்சு ஏற்றுமதி செய்ததன் மூலம் தேனி ஒரு தொழில் நகரமாக மாற அடித்தளம் அமைத்தார். அவரைத்தொடர்ந்து அவரது மகன்களான சின்னமணி நாடார் மற்றும் தங்கமணி நாடார் அரிசி, பருத்தி வியாபாரம் செய்தனர். 1920 – 1930க்கு இடைப்பட்ட காலத்தில் குமாரசாமி நாடார் மகனாகிய சண்முகவேல் நாடார் கோவில்பட்டி அருகேயுள்ள ஏழாயிரம் பண்ணையிலிருந்து வந்து பருத்தி வியாபாரத்தைத் தொடங்கினார். அவர்களது வழித்தோன்றலான K.S. கந்தசாமி நாடார் மற்றும் அவரது மகன் K.S.K. நடேசன் ஆகியோர் தேனியில் வியாபாரத்தில் புதுப்பாய்ச்சலைக் கண்டனர். அரிசி, ‘பயறு பச்சை’ என்று சொல்லக்கூடிய பயறு வகைகள், சிறுதானியங்கள், பருத்தி, வத்தல் போன்றவை முக்கிய வியாபாரப் பொருள்களாக இருந்தன. இன்று சிறுதானிய உற்பத்தியில் தமிழ்நாடு முதலிடத்திலும், தமிழ்நாட்டில் தேனி முதலிடத்திலும் உள்ளது.
உறவின்முறையின் சார்பாக, ஒவ்வொரு வணிகரிடமும் மகமை பண்டு வசூலிக்கப்பட்டது. அத்துடன் ஆரம்ப காலத்தில் விருதுநகரில் ஏற்கனவே நடைமுறையில் இருந்த பிடி அரிசி திட்டத்தையும் செயல்படுத்தினர். சாமி பருத்தி, சாமி வத்தல் என ஒரு பங்கு பெறப்பட்டது. அதாவது ஒவ்வொரு வியாபாரியும் பருத்தி, வத்தல் போன்ற பொருள்களை விற்றபின், அந்தக் குவியலிலிருந்து இருகை நிறைய அள்ளி ‘முதல் பங்குபிடி வத்தல்’, ‘முதல் பங்குபிடி பருத்தி’ என தனியே சேர்த்து வைக்க, அவ்வப்போது கடைத் தெருக்களில் கோணிச்சாக்குடன் சுற்றிக்கொண்டிருக்கும் உறவின்முறை பணியாட்கள் அவற்றை சேகரித்துச் சென்று உறவின்முறை கிட்டங்கிகளில் சேர்த்து வைப்பார்கள். வாரமொருமுறை அந்தப் பொருள்கள் ஏலம் விடப்பட்டு அந்த நிதி, உறவின்முறைக்கணக்கில் சேர்க்கப்படும். சங்கத்தின் வளர்ச்சிக்கு உதவுவதற்காக, உறவின்முறையில் 16 உறுப்பினர்கள் நியமிக்கப்பட்டனர். உறவின்முறைக்குச் சொந்தமான சாமி (மகமை) உண்டியல் ஒன்றும் உண்டு. கமிட்டி உறுப்பினர்களிடையே அந்த உண்டியல் மாறிக்கொண்டே வரும். யார் கையில் உண்டியல் இருக்கிறதோ அவர்கள் உறவின்முறைச் செலவுகளைச் செய்து கொண்டிருப்பார்கள். உண்டியலிலுள்ள பணத்தை எண்ணும் நாளன்று அவர்கள் செலவழித்த பணத்தை எடுத்துக்கொள்வார்கள். என்னவொரு நேர்மை? எப்படியொரு நம்பிக்கை? புதிய செய்திகள் கேட்க வியப்பாக இருந்தது.
உறவின்முறைக்குச் சொந்தமான கல்விநிறுவனங்கள் குறித்து பண்டகசாலை செயலாளராக இருக்கும் திரு. மா.சம்பத் அவர்கள் விவரிக்கிறார். “எங்கள் முன்னோர்கள் விதைத்த ‘நாடார் சரசுவதி தொடக்கப்பள்ளி’ என்ற ஒற்றைப்பள்ளி இன்று 12 கல்வி நிறுவனங்களாகவும் 16 துணைநிறுவனங்களாகவும் மாபெரும் ஆலமரமாய் வளர்ச்சியடைந்திருக்கிறது. இருபத்தி ஐந்தாயிரத்திற்கும் மேற்பட்ட மாணவ மாணவிகள் படிக்கின்றனர். தேனி மாவட்டமெங்கும் அனைத்து சமூகத்தினருக்கும் மிகப்பெரிய வேலைவாய்ப்பை வழங்கும் நிறுவனங்களாக மாறியிருக்கிறது” எனக்கூறி பட்டியலிடுகிறார்.
1919 – நாடார் சரசுவதி தொடக்கப்பள்ளி
1943 – நாடார் சரசுவதி ஆண்கள் மேல்நிலைப்பள்ளி
1957 – நாடார் சரசுவதி பெண்கள் மேல்நிலைப்பள்ளி
1977 – தேனி மேலப்பேட்டை இந்து நாடார் உறவின்முறை மெட்ரிக்குலேசன் பள்ளி
1977 – தேனி மேலப்பேட்டை இந்து நாடார் உறவின்முறை வித்தியாலயா
1989 – நாடார் நர்சரி மற்றும் பிரைமரி பள்ளி
1996 – நாடார் சரசுவதி கலை மற்றும் அறிவியல் கல்லூரி
1996 – பெண்கள் தொழில் பள்ளி
2005 – நாடார் சரசுவதி கல்வியியல் கல்லூரி
2010 – பொறியியல் மற்றும் தொழில்நுட்பக்கல்லூரி
2010 – நாடார் சரசுவதி பெண்கள் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி, வடபுதுபட்டி
2012 – நாடார் சரசுவதி பப்ளிக் பள்ளி, வடபுதுபட்டி
ஸ்ரீ பத்திரகாளியம்மன் திருக்கோவில் தேவஸ்தானம்
ஸ்ரீ மீனாட்சிசுந்தரேசுவரர் திருக்கோவில் தேவஸ்தானம்
1949 – நாடார் சரசுவதி மாணவர் விடுதி
1964 – நாடார் சரசுவதி மாணவியர் இல்லம்
1982 – மெட்ரிக் மாணவர் விடுதி , முத்து தேவன் பட்டி
2001 – கல்லூரி மாணவியர் விடுதி, வடபுதுப்பட்டி
2012 நாடார் சரசுவதி பொறியியல் கல்லூரி மாணவர் விடுதி வடபுதுபட்டி
சொத்து பாதுகாப்பு மற்றும் பராமரிப்புக்குழு
கல்வி உதவி வழங்கும் குழு
ஸ்ரீ பத்திரகாளியம்மன் திருமண மண்டபம்
ஸ்ரீ பத்திரகாளியம்மன் பண்டகசாலை
ஸ்ரீ பத்திரகாளியம்மன் பால் பண்ணை
ஸ்ரீ பத்திரகாளியம்மன் அச்சகம்
வாகனப்பராமரிப்பு
காமராஜர் மருத்துவமனை
நாடார் சரசுவதி அகாடமி
அவர் கொடுத்த பட்டியலை வாசிக்கும்போதே மூச்சு முட்டுகிறது. மொத்தமுள்ள இருபத்தெட்டு நிறுவனத்திற்கும் தனித்தனி செயலாளர்களும், நிர்வாகக்குழு உறுப்பினர்களும் தேர்தல் முறையில் தேர்ந்தெடுக்கப்பட்டு மிகச்சிறப்பாக நிர்வகித்து வருகின்றனர். தற்போது தேனி இந்து நாடார் உறவின்முறையின் தலைவராக ஏ எஸ் ஜி தர்மராஜன் அவர்களும் பொதுச் செயலாளராக எம். எம். ஆனந்தவேல், பொருளாளராக பி. ராமச்சந்திரன் அவர்களும் பொறுப்பில் உள்ளனர்.
உறவின்முறைக்குச் சொந்தமாக 130 வாகனங்கள் உள்ளன. 365 நாட்களும் ஏதோ ஒரு பள்ளியில் கட்டிடங்கள் கட்டப்பட்டுக்கொண்டிருக்கின்றன. பெண்களுக்கு தற்காப்பு பயிற்சிகள் அளிக்கப்படுகிறது. உறவின்முறையின் சார்பில் தொடங்கப்பட்டுள்ள காமராசர் மருத்துவமனை அனைத்து சமுதாய மக்களுக்கும் மிகக்குறைந்த கட்டணத்தில்( 50 ரூபாய்) சேவையாற்றி வருகிறது. விரைவில் அனைத்து நோய்களுக்குமான மிகப்பெரிய மல்ட்டி ஸ்பெஷாலிட்டி மருத்துவமனை தொடங்குவதற்கான வேலைகள் நடைபெற்றுக்கொண்டிருக்கின்றன. மருத்துவக் கல்லூரி தொடங்குவதை இலட்சியமாகக் கொண்டு செயல்பட்டுக்கொண்டிருக்கிறார்கள்.
அதே சமயங்களில் நெல்லை மாவட்டத்தில் சாயர்புரத்திற்கருகிலுள்ள நட்டாத்தி என்ற கிராமத்தில் இருந்து வந்தவர்கள் வந்தவர்கள், 1942இ ல் ‘நட்டாத்தி நாடார்கள் உறவின்முறை’ என தனி அமைப்பை உருவாக்கினர். அந்த உறவின்முறையின் சார்பாக 7.7.1976 ல் நட்டாத்தி நாடார்கள் மருத்துவமனையைத் தொடங்கினர். இன்று தேனியில் அது ஒரு மிகப்பெரிய மல்ட்டி ஸ்பெஷாலிட்டி மருத்துவமனையாக மாறி சேவையாற்றி வருகிறது. ஐயா வைகுண்டசாமி வழியில் வந்தவர்கள் எந்த உறவின்முறையிலும் சேராமல் வியாபாரத்தில் ஈடுபட்டு தனி வழிபாட்டுமுறையை ஏற்படுத்திக் கொண்டுள்ளனர். தேனி நகரத்தில் கிறிஸ்தவ நாடார்களும் குறிப்பிடத்தக்க எண்ணிக்கையில் உள்ளனர்.
நாடார்களின் வாழ்வியல் முறைகள் பற்றி கேட்டவுடன் 1988இல் உறவின்முறையின் துணைத்தலைவராகவும், 1990 முதல் 1998 வரை தலைவராகவும் பொறுப்பு வகித்த நடேசன் ஐயா விவரிக்கத் தொடங்குகிறார். “19 ஆம் நூற்றாண்டின் ஆரம்பம் தொட்டே நாடார் சமூகத்தினர் தங்கள் முன்னேற்றத்திற்கான வழிகள் அனைத்தையும் இறுகப்பற்றி முன்னேறத் தொடங்கினர். தங்களுக்கான மிகச்சிறிய வணிக வாய்ப்புகளைகளையும் விட்டுவிடாது மிக வலுவான வணிகப்பிணைப்பை தங்களுக்குள் ஏற்படுத்திக்கொண்டனர். தங்கள் முன்னேற்றத்திற்காக அவர்கள் உருவாக்கிய வாழ்வியல் முறைகள் ஆச்சரியம் தருவதாக இருக்கின்றன.
உறவின்முறை, மகமை, சரவை, நந்தவனம், பேட்டை, ஒருபிடி அரிசித் திட்டம், எண்ணெய்க்காசு என புதுப்புது வழிமுறைகளை கண்டறிந்து நடைமுறைப்படுத்தினர். தங்கள் சமுதாய ஒற்றுமையை வலுப்படுத்துவதற்காக உறவின்முறையைத் தொடங்கினர். உறவின்முறையின் பொருளாதாரத்தை வலுப்படுத்த உறுப்பினர்களிடம் மகமை வசூலித்தனர். நாடார்களின் மகமை சேமிப்பைப்பார்த்தே ராஜாஜி விற்பனை வரியை தமிழ் நாட்டில் அறிமுகப்படுத்தியதாகச் சொல்கிறார்கள். தங்களது வியாபாரத் தேவைகளுக்காக பேட்டைகளை உருவாக்கினர். தங்கள் சமுதாய மக்களை படிக்க வைப்பதற்காகவே கல்வி நிலையங்களைத் தொடங்கினர். ஆன்மீக நம்பிக்கைகளுக்காக கோவில்களைக் கட்டினர். அதாவது, “கோவிலுக்குள் நுழையக்கூடாதா…? பரவாயில்லை, நாங்கள் கோவில் கட்டுகிறோம், அனைவரும் வந்து இறைவனை வழிபடுங்கள், எங்களுக்கு படிக்க அனுமதியில்லையா….? பரவாயில்லை, நாங்கள் பள்ளிகளைக் கட்டுகிறோம், அனைவரும் வந்து படியுங்கள் என்று தங்களைத் தாங்களே செதுக்கிக்கொண்டார்கள். நாடார் சமுதாய இல்லங்களில் நடைபெறும் சுப, அசுப நிகழ்வுகளை பொது நிகழ்வாக அனுசரித்து சரவை வாசித்து அதில் பங்கெடுத்துக்கொண்டனர்.
பொதுக் கிணற்றிலிருந்து தண்ணீர் எடுக்க மறுக்கப்பட்டதால் நந்தவனங்களை உருவாக்கினர். நாடார் சமுதாயத்திற்குள் வறுமையில் இருந்தவர்களை தங்களுக்கு மட்டுமே முடிதிருத்துபவர்களாக, சவரத்தொழிலாளர்களாக வைத்துக்கொண்டனர். அவர்கள் காவலாளிகளாகவும், கம்பு விளையாட்டில் தேர்ந்தவர்களாகவும், மருத்துவம் தெரிந்தவர்களாகவும் இருப்பார்கள். வருடத்திற்கொருமுறை அவர்களுக்கு உணவு தானியங்கள் வழங்கப்படும். ‘நம்ம பிள்ளைகள்’ என்று அவர்களை உரிமையுடன் அழைத்து பாதுகாத்துக் கொள்வார்கள். செல்லும் ஊர்களில் எல்லாம் பத்துக்குபத்து(10’ 10’) இடம் கிடைத்தால் போதும் ஒரு பலசரக்குக்கடை ஆரம்பித்து விடுவார்கள். வியாபாரம் என்பது அவர்களது இரத்தத்தில் ஊறிப்போனது. இன்றும்கூட பொறியாளர்களாகவும், வழக்குரைஞர்களாகவும் படித்தவர்கள் மீண்டும் வணிகம் செய்வதில் விருப்பம் கொண்டு திரும்புகிறார்கள்.
உழைப்பின் அருமையும் சேமிப்பின் பெருமையும் தெரிந்ததினால், 1921 ஆம் ஆண்டு நவம்பர் 11 அன்று நாடார் வங்கி லிமிடெட் (Nadar Bank Ltd) என்ற பெயரில் தூத்துக்குடியில் நாடார்களின் கூட்டு முயற்சியால் ஒரு வங்கியினைத் தொடங்கினர் (பின்னர் 1962 ஆம் ஆண்டு அதுவே தமிழ்நாடு மெர்க்கண்டைல் வங்கி என பெயர் மாற்றப்பட்டது). அறுபதுகளிலும் எழுபதுகளிலும் நாடார்கள் பொருளீட்டிய வேகம் அசாத்தியமானது. தெற்கிலிருந்து பிழைப்புத் தேடி வரும் நாடார்களை தொழில் கற்றுக் கொடுத்து தூக்கி விடும் பண்பு இருந்தது. ‘பனை மரம் ஏறுபவனை கை எட்டு மட்டும் தூக்கி விடனும் அதன்பின் அவன்தான் ஏற வேண்டும்’, என என் தந்தை உவமையாகச் சொல்லும் சொல்லை நான் இப்போதும் கடைப்பிடிக்கிறேன்” என்கிறார்.
நாடார்களின் முன்னேற்றத்தில் பெண்களுக்கு முக்கிய பங்கு உண்டு என நடேசன் ஐயா தொடர, அட…! நிமிர்ந்து உட்கார்ந்தேன். “ஆம், அனைத்து வீடுகளிலும் மாட்டுப்பண்ணை வைக்கும் அளவுக்கு மாடுகள் இருக்கும். மாடுகளை பராமரிக்கும் அத்தனை வேலைகளையும் பெண்கள் சுறுசுறுப்புடன் செய்து, பொருளாதாரத்தில் ஆண்களுக்கு பக்கபலமாக இருந்தனர். ஒவ்வொரு வீட்டிலும் உறவின்முறை கலசம் ஒன்று இருக்கும். பெண்கள் வீடுகளில் உணவு சமைக்கும்போது ஒரு பிடி அரிசியை அந்த கலசத்தில் சேகரித்து உறவின்முறைக்கு வழங்க, அது கல்விச் சேவைக்கு பயன்படுத்தப்பட்டது. அதாவது, ஆண்கள் மகமையை பணமாக வழங்க பெண்கள் அரிசியாக வழங்கினர்.
பெண்களுக்கு முழு பொருளாதாரச் சுதந்திரம் உண்டு. ‘சிறுவாடு’ எனும் வீட்டுச்சேமிப்பில் பெண்கள் சிறந்து விளங்கி ஆண்களுக்கு தொழிலில் தோள்கொடுத்தனர். அரிசி வியாபாரம், மாடு வளர்த்தல், பலசரக்குக்கடை போன்ற தொழில்கள் பெண்கள் வசம் இருந்தன. உழைப்பு அவர்களின் இயல்பாய் இருந்தது. வீட்டுக்கு வரும் அனைவரிடமும் பெண்கள் வித்தியாசமின்றி பழகினர். அவர்கள் மனதின் ஆழத்தில் இருந்த வலி அனைவரையும் சமமாகப் பார்க்க வைத்தது. பிள்ளைகளுக்கு கல்வி அளிப்பதில் பெண்கள் தீவிரமாக இருந்தனர், இன்றும் அப்படியே இருக்கின்றனர்” புன்னகையுடன் முடிக்கிறார்.
இன்னும் ஆராய்வோம்…
படைப்பாளர்
ரமாதேவி ரத்தினசாமி
எழுத்தாளர், முன்னாள் அரசுப்பள்ளி ஆசிரியர். பணிக்கென பல விருதுகள் வென்றவர். இவர் எழுதி வெளிவந்துள்ள ‘கனவுகள் மெய்ப்படட்டும்’ கட்டுரைத் தொகுப்பு பரவலாக கவனம் பெற்றது. 2014, 2015ஆம் ஆண்டுகளில் ஐ நா சபையில் ஆசிரியர் பேச்சாளராகக் கலந்துகொண்டு உரையாற்றியுள்ளார். ‘அடுக்களை டூ ஐநா’ தொடரில் அவரது ஐ நா அனுபவங்களை நகைச்சுவையுடன் விவரித்திருக்கிறார். ‘இலங்கை – எழுதித் தீராச் சொற்கள்’ என்கிற பெயரில் இலங்கை அனுபவங்களையும் ‘என்ன செய்கிறது ஐநா – பெண் கல்வித் தடைகள் உடைபடும் தருணங்கள்’ என்கிற கட்டுரைத் தொடர்களையும் நம் வலைதளத்தில் எழுதினார். இம்மூன்று தொடர்களும் நூலாக்கம் பெற்று, ஹெர் ஸ்டோரிஸ் வெளியீடுகளாக வெளிவந்து பாராட்டுகளைப் பெற்றுள்ளன. இவரின் ‘போர்களின் தேசத்தில்’ நூல், 2025ஆம் ஆண்டுக்கான தமிழ்நாடு அரசு தமிழ் வளர்ச்சித்துறையின் சிறந்த நூல் பரிசை வென்றுள்ளது.


