Site icon Her Stories

கூகுள் மேப் பொய் சொல்லுமா?

composite of hand holding smartphone with maps graphic with store background

பூமியைச் சுற்றிப் பல செயற்கைக்கோள்கள் நிறுவப்பட்டுள்ளன. அதன் மூலம் மின்காந்த அலைகளை வானில் இருந்து செலுத்தியும் வாங்கியும் பூமியில் எந்தக் குறிப்பிட்ட இடம் என்பதைக் கண்டறியும் தொழில்நுட்பம்தான் ஜி.பி.எஸ். தமிழில் புவியிடங்காட்டி அல்லது உலக இடநிலை உணர்வி என அழைக்கிறோம். இதன் உதவியால், தடங்காட்டி (tracker) கொண்டு ஒருவர் எந்த இடத்தில் இருக்கிறார் அல்லது எங்கே நகர்ந்து சென்றுகொண்டிருக்கிறார் என அறிவது சாத்தியமாயிற்று. வழக்கம் போல பாதுகாப்புத் துறை, ராணுவ பணிகளுக்காகத்தான் இத்தொழில்நுட்பம் அறிமுகமானது. தொண்ணூறுகளின் மத்தியில் இது உலகம் முழுவதுமான பொது பயன்பாட்டுக்கு வந்தது.

க்ளாடிஸ் வெஸ்ட்

பலருடைய கூட்டு உழைப்பில் உருவான ஜிபிஎஸ் தொழில்நுட்பத்தில் க்ளாடிஸ் வெஸ்ட் என்ற ஆப்பிரிக்க அமெரிக்கப் பெண்ணுக்கு முக்கியப் பங்குண்டு. பூமி சமமானதும் தட்டையானதும் இல்லை. மலை, மடு, கடல், ஆறு எனப் பலவித வடிவங்கள், அளவுகள் கொண்ட பரப்பு. இதைக் கருத்தில் கொண்டு பூமியின் வடிவத்தைக் கணிக்கும் கணிதச் சமன்பாட்டை எழுதியவர் இவர். இதுவே பின்னாட்களில் ஜிபிஎஸ் தொழில்நுட்பம் உருவாக அடிப்படையாக இருந்தது. பணி ஓய்வு பெற்று பல ஆண்டுகளுக்குப் பிறகு, ஆல்பா கப்பா ஆல்பா என்ற இயக்கத்தின் அறிக்கையின் மூலம் வெளிச்சத்திற்கு வந்து சமீப ஆண்டுகளில் விருதுகளையும் அங்கீகாரங்களையும் பெற்றுள்ளார்.

செயற்கை நுண்ணறிவு, திறன்பேசிகள் எனத் தொழில்நுட்பம் வளர வளர, உலகம் முழுக்க உள்ள கட்டிடங்களும் சாலைகளும் சந்து பொந்துகளும் நம் கைக்குள் வந்துவிட்டது. இந்த வரைபட செயலிகள் காட்டும் வழிகளை நம்பியே இன்று பலர், பயணம் செய்கின்றனர். இந்தியாவிலும் இத்தகைய நேவிகேட்டர் எனும் வரைபட வழிகாட்டிச் செயலிகள் உருவாக்கப்பட்டுள்ளன. மேப் மை இண்டியா செயலி வழிகாட்டுதல், தடங்காட்டி(tracking) இரண்டுக்குமே ஏற்றது. இவர்களுடைய இலாக் eLoc செயலி ஆறு எழுத்துகளைக் கொண்டு எந்த ஒரு முகவரியையும் பதிவு செய்ய உதவுகிறது. புவன் என்பது இந்திய இஸ்ரோவின்(ISRO) வழிகாட்டிச் செயலி. நோக்கியாவின் ஹியர்(here) செயலி தரவிறக்கம் செய்து பயன்படுத்தும் வகையிலானது. உலகளாவிய அளவில் வரைபடங்களைக் காட்டும் வழிகாட்டி செயலி இது. கோ பைலட் ஜிபிஎஸ் (copilot gps) மூலம் எல்லா விதமான வண்டிகளையும் கஸ்டமைஸ் செய்ய முடியும். இதன் மூலம் நீங்கள் பயணிக்கும் வண்டிக்கு ஏற்ப சரியான பாதை, குறுகலான பாதை போன்ற எச்சரிக்கைகளைப் பெறலாம்.

எத்தனை செயலிகள் இருந்தாலும் அதிகம் பயன்படுத்தப்படுவது கூகுள் மேப்தான். ஓரிடத்தில் இருந்து மற்றோர் இடத்திற்குச் செல்வது தவிர, இன்னும் சில பயன்களையும் உள்ளடக்கியது கூகுள் மேப்.

கிண்டியில் இருந்து பாரீஸ் கார்னர் போகும் வழியில் பசிக்கிறது என்றால், ரெஸ்டாரண்ட் என்ற வார்த்தையைத் தொட்டால் போதும். நீங்கள் போகும் சாலையில் அல்லது சாலைக்கு மிக அருகில் இருக்கும் உணவகங்களைக் காட்டும். இவ்வளவு நிறைய உணவகங்களைக் காட்டுகிறதே எனக் குழம்பாமல் உங்களுக்கு ஏற்ற மாதிரி என்ற ஆப்ஷனை தேர்வு செய்தால் போதும். உங்கள் துணைவரைவிடத் துல்லியமாக உங்களுக்கு என்ன பிடிக்கும் என செயலிக்குத் தெரியும். ஏனெனில் நீங்கள் வழக்கமாகச் செல்லும் உணவகங்கள் பற்றிய தகவலை நினைவில் வைத்திருக்கும். உணவகம் மட்டுமில்லாமல், தங்குமிடம், எரிபொருள் நிரப்புமிடம், சுற்றிப்பார்க்கும் இடம், மருத்துவமனை, கடைகள் என வழியிலிருக்கும் எல்லாவற்றையும் காட்டும். இங்கேயிருந்து அங்கே என எளிமையாக இல்லாமல் பல நிறுத்தங்களைச் சேர்க்க முடியும். ஆட் ஸ்டாப் (add stop) ஆப்ஷனைப் பயன்படுத்தி எங்கெங்கே செல்லவேண்டும் எனச் சேர்த்துக்கொண்டே செல்லலாம். கிண்டியில் இருந்து கிளம்பி, வழியில் கார் கழுவுமிடத்தில் நிறுத்தி காரை சுத்தப்படுத்திவிட்டு, அண்ணா சமாதியைப் பார்த்துவிட்டு, மெரினாவில் அக்கா கடையில் வயிறு நிறைய சாப்பிட்டுவிட்டு, மருந்துகடையில் ஜீரண மாத்திரை வாங்கிக்கொண்டு பாரீஸ் கார்னர் சென்று சேரலாம்.

சென்னை புத்தகக்காட்சி மாதிரி இடங்களுக்குச் சென்றால் நுழைவு வாயிலில் இருந்து அரங்கத்துக்குச் செல்லவே ஆட்டோ தேவைப்படும்! பெரிய அளவிலான திறந்தவெளி பார்க்கிங்கில் வண்டியை நிறுத்திவிட்டு, திரும்பி வரும்போது வண்டியைக் கண்டுபிடிக்க படும் சிரமங்களை வைத்து ஒரு சிறுகதையே எழுதிவிடலாம். புது இடங்களிலோ அல்லது பெரிய கண்காட்சிகளிலோ வண்டியை நிறுத்தும் இடத்தை வழிகாட்டிச் செயலியிலேயே பதிந்து வைத்துக்கொள்ள முடியும். மேப்பைத் திறந்ததும் நீங்கள் நிற்கும் இடத்தை நீல நிற வட்டமாகக் காட்டும். அதைத் தொட்டதும் பார்க்கிங் எனப் பதிவுசெய்துகொள்ள ஆப்ஷனைக் காண்பிக்கும். லாெகேஷன் ஷேரிங்கைத் தட்டினால் எந்த இடத்தில் நிற்கிறோம் என்ற தகவலை அடுத்தவருக்குப் பகிர்ந்து கொள்ளவும் முடியும்.

காரில் செல்பவர்களுக்கு மட்டுமே இல்லை இந்தச் செயலிகள். இருசக்கர வாகனம், நடந்து செல்பவர்கள்கூடப் பயன்படுத்தலாம். பிரதான சாலை வழியாக இல்லாமல் சிறிய தெருக்கள் வழியாகச் செல்லும் பாதையைப் பரிந்துரைக்கும். சொந்த வாகனம் மட்டுமின்றி, ரயில், மெட்ரோ, பஸ் என எல்லாவித பொதுப் போக்குவரத்துகளையும் தேர்வு செய்யலாம். எவ்வளவு தூரம் நடந்து சென்று பேருந்து நிறுத்தத்தை அடைய வேண்டும், ஏற வேண்டிய பேருந்து எண்கள், மெட்ரோ தடங்கள், இறங்க வேண்டிய இடம், அங்கிருந்து நடந்து சென்றால் எவ்வளவு நேரம், ஆட்டோ பிடித்தால் எவ்வளவு நேரம், பயணச் செலவு எவ்வளவு ஆகும் என விளக்கமாக வழிகாட்டும். இந்தப் படத்தில் சென்ட்ரல் ரயில் நிலையத்தில் இருந்து கோதே இன்ஸ்ட்டிட்யூட் செல்ல பொதுப்போக்குவரத்தில் உள்ள எல்லா வாய்ப்புகளையும் காட்டுகிறது.

அடிக்கடி செல்லும் இடங்கள், வீடு, அலுவலகம் ஆகியவற்றைச் சேமித்து வைத்துக்கொண்டால், ஒற்றைத் தொடுதலில் வழியைக் கண்டடையலாம். சமயங்களில் தொலைத்தொடர்ப்பு இல்லாத இடத்திலோ அல்லது இணையம் இல்லாத இடத்திலோ செயலி வேலை செய்யாது. இதைத் தவிர்க்க, முன்னதாகவே ஆஃப் லைன் மேப்பை தரவிறக்கம் செய்து வைத்துக்கொள்வது நல்லது. போன வாரம் மூன்று வீடு தள்ளி இருக்கும் அடுக்ககத்துக்குள் சுவரேறிக் குதித்து பந்து பொறுக்கி வந்ததையெல்லாம் குறித்துக்கொண்டு, அந்த அடுக்ககம் பற்றிக் கருத்து தெரிவிக்கச் சொல்லி ரிவ்யூ கேட்கும் கூகுள். இப்படித் தேவையில்லாத விஷயங்கள் பதிவாவதைத் தடுக்க இன்காக்னிட்டோ மோட் (incognito mode) பயன்படுத்தலாம். இந்த மோடில் தகவலைக் குறிப்பெடுத்துக்கொள்ளாதே தவிர, முற்றிலும் அழித்துவிடாது. வரைபட வழிகாட்டுச் செயலி என்பது தொடர்ந்து செயற்கைக்கோளுக்கு சிக்னலை அனுப்பி வாங்கி வேலை செய்துகொண்டே இருப்பதால் திறன்பேசியின் பேட்டரி விரைவில் தீர்ந்துவிடும். எனவே முன்னேற்பாடுகள் செய்துகொள்ள வேண்டும்.

செயலிகள் காட்டும் வழி சமீபத்திய தரவுகளுடன் இருப்பதில்லை. மழை பெய்து பாலம் உடைந்து மாற்றுவழியில் வாகனம் செல்ல ஏற்பாடு செய்திருப்பார்கள். அந்தப் புதிய தகவலை அறியாமல் செயலிகள் உடைந்த பாலத்தின் அருகில் கொண்டு போய் நிறுத்தலாம். அவ்வப்போது நடக்கும் போராட்டங்கள், போக்குவரத்து நெரிசல் போன்ற தகவல்களை உடனுக்குடன் அறிந்துகொள்ளும் வகையில் சமூகவலைத்தளங்களுடன் தொடர்பில் இருக்கும்படியான செயலிகள் இதற்குத் தீர்வாகும். வேஸ் (waze) செயலி மிகச் சமீபத்திய களநிலவரங்களை ஆராய்ந்து வழியைக் காட்டுகிறது. இதை கூகுள் வாங்கிவிட்டது. தற்போது கூகுள் மேப்பிலேயே இந்தப் பயன்பாட்டை சேர்க்கவும் பணிகள் நடைபெறுகிறது.

சமீபத்தில் வந்த கோமாளி படத்தில் கூகுள் மேப் பொய் சொல்லாது என நம்பிப் போய்ச் சேரவேண்டிய இடம் சேராமல் சுற்றிக் கொண்டிருப்பதாக ஒரு நகைச்சுவைக் காட்சி இருந்தது. போக வேண்டிய இடத்திற்கு மிக அருகில் கொண்டு வந்தாலும் கட்டிடத்திற்கு பின்னாலோ வாசலுக்கு மிக தூரத்திலோ போய் நின்று கொண்டு விழித்த அனுபவம் நம் எல்லோருக்குமே இருக்கும். வாசல்வரை துல்லியமாக வழிகாட்ட ஒரு யோசனையைக் கண்டுபிடித்து, அதைச் செயலியாகவும் கொண்டுவந்துவிட்டார்கள்.

உலகை மூன்று மீட்டர் கட்டிடங்களாகப் பிரித்த வரைபடத்தைப் பயன்டுத்துகிறார்கள் இவர்கள். உங்கள் வீட்டின் கதவுக்கு எதிரே இருக்கும் சதுரத்தைத் தொட்டால் அதன் பெயரைக் காட்டும். மூன்று சம்பந்தம் இல்லாத வார்த்தைகள். அதுதான் முகவரி. இந்த மூன்று வார்த்தைகளை உள்ளிட்டு மேப் மூலம் வந்தால் சரியாக உங்கள் வீட்டின் கதவு எதிரில் கொண்டுவந்து விட்டுவிடும். அவ்வளவு துல்லியம். உலகத்தை மூன்று மீட்டர் சதுரங்களில் பிரித்து மூன்று வார்த்தைகளில் பெயரிடும் இந்தச் செயலியின் பெயர் வாட்3வேர்ட்ஸ் (what3words). இங்கே நான் கொடுத்திருக்கும் படத்தில், பல ஏக்கர்கள் பரப்பளவும், பல நுழைவு, வெளியேறும் வழிகளையும் கொண்ட மெட்ராஸ் கிறிஸ்டியன் காலேஜின் சேலையூர் கேட்டின் வசலில் இருக்கும் சதுரத்தின் பெயர் ///lizards.gradually.chin.

இந்தச் செயலிகளின் செயற்கை நுண்ணறிவு என்பது தாமாகவே அறியும் திறன் அல்ல. அதற்கான தரவுகளைத் தருவது நாம்தான். நம்மைக் கேட்காமலே தகவல் திரட்டினாலும் மனிதர்கள் தாமாக முன்வந்து அளிக்கும் தகவல்கள் மற்ற எல்லாருக்குமே உபயோகமாக இருக்கும். கூகுள் மேப்பில் இருக்கும் கான்ட்ரிபூட் (contribute) அதற்குத்தான். புதிய உணவகத்துக்குச் சென்றால் புகைப்படம் எடுத்து உணவு நன்றாக இருந்தால், ஐந்து நட்சத்திரங்களும் நன்றாக இல்லை என்றால் ஒரு நட்சத்திரமும் கொடுப்பது எல்லாரும் செய்வதுதான். அதைத் தவிர அந்த உணவகத்தில் குளுட்டன் ஒவ்வாமை, பால் ஒவ்வாமை இருப்பவர்களுக்கான உணவுகள் இருக்கிறதா? வண்டி நிறுத்த இடம் இருக்கிறதா? குடும்பத்துடன் செல்லக்கூடிய இடமா போன்ற கேள்விகளுக்கு பதிலளிப்பதன் மூலம் நமது பங்களிப்பைச் செய்யலாம். பொது இடங்களில் உள்ள கழிப்பறை வசதி, மாற்றுத்திறனாளிகளின் சக்கரநாற்கலியைக் கருத்தில் கொண்டு சாய்வுதள பாதை வசதி, குழந்தைகளின் பாதுகாப்பு என நீங்கள் செல்லும் இடங்களைப் பற்றிய மேலதிக தகவல்களைக் கொடுத்து, பங்களிப்பு செய்வதன் மூலம் இந்தச் செயலிகள் மேலும் திறமையாக நமக்கு உதவ முடியும்.

(தொடரும்)

படைப்பாளர்:

இரா. கோகிலா. இளநிலை கணிப்பொறி அறிவியல் படித்தவர். சிறுவயதில் இருந்தே வாசிப்பில் ஆர்வம் உண்டு. புனைவுகளில் ஆரம்பித்த ஆர்வம் தற்போது பெரும்பாலும் பெண்ணியம், சமூகம், வரலாறு சார்ந்த அபுனைவு வகை புத்தகங்களின் பக்கம் திரும்பியிருக்கிறது. பயணம் செய்வது பிடிக்கும்.  கல்விசார்ந்த அரசுசாரா இயக்கங்களில் தன்னார்வலராகச் செயல்படுகிறார்.

Exit mobile version