Site icon Her Stories

கருத்துப்புலப்பாட்டின் நவீன வடிவங்கள்

முந்தைய பதிவில் மொழி வரலாற்றை மிகச் சுருக்கமாகப் பார்த்தோம். அதைப் படித்துவிட்டுத் தமிழ் ஆய்வாளர் ஒருவர், “மொழியைக் ‘கருவி’ எனச் சுட்டுவதை விடச் ‘சிந்தனை’, ‘உள்ளீடு’ எனச் சொல்வது சாலப் பொருந்தும்” என்றார். உண்மைதான். யாரிடமும் கதைக்காத நேரங்களில் நமக்குள்ளே மொழியால் சிந்திக்கிறோம்; பேசிக் கொள்கிறோம். மூளைக்குள் தகவல்களை உள்ளீடு செய்வதிலும் மொழிக்கு முக்கிய பங்குண்டு. தகவல்களைப் பரிமாறிக் கொள்ளப் பயன்படும் சமூக ஊடகங்களில் மொழி எவ்வாறு இருக்கிறது? எந்தெந்த வடிவங்களில் கருத்துகள் கொண்டு செல்லப்படுகின்றன? என்பன பற்றி இப்பதிவில் பேசுவோம். சமூக ஊடக மொழி என்பது முறைசாரா கருத்துப் பரிமாற்றமாகும் (Informal Communication). FOMO, OG, Aura, Pov இப்படியான நவீன ஊடகச் சொற்களின் பொருளை (Meaning) எல்லா நெட்டிசன்களும் அறிந்திருப்பார்கள் என்று உறுதியாகக் கூற முடியாது. ஆனால், தன்னைச் சமூக ஊடகங்களில் சுறுசுறுப்புடன் இயங்குபவராகக் காட்டிக் கொள்வதற்காக ஈர்ப்பான குறுக்கங்களை (Abbreviations) அதிகளவில் Genzகாரர்கள் பயன்படுத்துகிறார்கள். வியப்பதற்கில்லை. புதுமை எப்போதும் இளந்தலைமுறையை ஈர்ப்பது இயல்பே. 

இந்தியாவில் அதிகமாகப் பயன்படுத்தப்படும் சமூக ஊடகத்தளங்களாகப் படவரி (Instagram), வலையொலி (YouTube), புலனம் (Whatsapp), முகநூல் (Facebook) முதலியன கோலோச்சி வருகின்றன (அரிதிலும் அரிது சமூக ஊடகங்களில் நாம், தமிழ் எழுத்துகளால் தமிழைப் பயன்படுத்துவது. ஆனால், தமிழ் ஆர்வலர்கள் எல்லாத் துறைகளுக்கும் தமிழில் கலைச்சொற்களைக் கண்டறிந்து வைத்துள்ளனர். நகைமுரணாகத் தோன்றுகிறதா?). சமூக ஊடகத்தளங்களில் கொடுக்கப்பட்டுள்ள வசதிகள் மக்களைக் கவர்கின்றன. ஆகையால், பயன்படுத்துவோர் எண்ணிக்கையும் அதிகரித்துக் கொண்டே செல்கிறது. நிறுவனங்களும் போட்டிப் போட்டுக் கொண்டு புதுப்புது அம்சங்களை (New features) அறிமுகப்படுத்துகிறார்கள். உணர்க்குறிகள் (Emojis), ஒட்டிகள் (Stickers) போன்றவற்றைப் பயன்படுத்தவும் போன்மீ (Memes), சுருள்கள் (Reels & shorts) ஆகியவற்றைப் பதிவிடவும் அனுமதிக்கின்றன. முகநூல் வந்து 22 ஆண்டுகள் ஆகிவிட்டது. ஆனாலும் பயனர்களைத் தக்கவைத்துக் கொண்டுள்ளது. வலையொலியும் இளமைக் குன்றாமல் பொலிவுடன் டிரெண்டிங்கில் களம் காண்கிறது.

நிமிடத்திற்கு இருமுறை புலனத்தை எட்டிப் பார்ப்பதும் இன்பமோ துன்பமோ எதுவாக இருந்தாலும் உடனடியாக நிலைப்பாட்டில் (Status) கொட்டிவிடத் துடிக்கும் மனமும் எப்போதாவது உயிர்த்தெழும் நண்பர்கள் குழுவும் புலன வளர்ச்சிக்குக் காரணம். படவரியில் நகர்த்துவதையே (Scroll) பணியாகக் கொள்ளும் அளவிற்கு வாழ்நாளின் அதிக நாளை அங்கேயே செலவிடும் இணையப் பிரியர்களும் இருக்கவே செய்கிறார்கள். சமீப காலங்களில் அரசியல் பேசுபொருளாகச் சமூக ஊடகங்கள்தான் பெரும் காரணம். இன்றைய தலைமுறையினர், செய்தித்தாள்களைப் படிக்காவிட்டாலும் புலனக்குழுவிலோ படவரியிலோ முகநூலிலோ பகிரப்படும் துணுக்குச் செய்திகளைப் பார்ப்பதுண்டு. இதை ஏன் சொல்கிறேன் என்றால்…IYKYK. 

சமூக ஊடகப் பயன்பாடு அதிகரிப்பதற்கு முன்பு, வாசிக்கக் கடினமாக உணரும் ஆங்கிலச் சொற்களுக்குமேல், தமிழில் ஒலிபெயர்த்து எழுதிப் படிக்கும் வழக்கம் மாணவர்களுக்கு இருந்தது. எடுத்துக்காட்டாக, Which என்பதை ‘விச்’ என எழுதிப் படிப்பர். அப்படி எழுதியதை ஆங்கில ஆசிரியர் கண்களில் தென்படாமல் மறைத்துக் கொள்ள வேண்டும். இல்லன்னா திட்டு நிச்சயம் கிட்டும். ஆனால், இன்றைக்கோ நிலை தலைக்கீழ். சமூக ஊடகங்களில் தமிங்கலமயம். இன்னொரு நிகழ்வையும் நினைவூட்டக் கடமைப்பட்டிருக்கிறேன். பள்ளிப் படிப்பின்போது குறுக்கங்கள் (Abbreviations) படித்திருப்போம். அவற்றை நினைவில் நிறுத்தித் தேர்வு எழுதுவதற்குள் தகிட தகிடதான். தேர்வுக்காக SMS, CV, WWW, ATM போன்ற குறுக்கங்களை மனனம் செய்தோம். மின்னஞ்சல் (e-mail) அனுப்பப் பழகிய சமயத்தில் ASAP, FYI, BTW, FWD, RE முதலியன கற்றோம். பிறகு சமூக ஊடகங்களில் உலாவ தொடங்கியதும் DM, Pov, FOVO, Aura, IYKYK, IDK, LOL என நீள்கிறது பட்டியல். இப்போது, உரையாடல்களில் சுருக்கமொழிகள் நிரம்ப உள்ளன. சுருங்கச் சொல்லணும்னா ஆங்கில மொழியின் வடிவம் சுருங்கிவிட்டது. 

செய்யுள் வழக்கிலிருந்த காலத்தில் ‘காப்பியம்’ மூலம் ஒரு நபரின் முழுக்கதையும் வழங்கப்பட்டது. உரைநடை அறிமுகமானதும் ‘நாவல்’ அப்பணியைத் தொடர்ந்து. ஆனால், இவ்விரண்டையும் வாசித்து முடிக்க அதிக நேரம் தேவைப்பட்டது. எனவே, ‘சிறுகதை’ தோன்றிக் குறுகிய நேரத்தில் கதை சொல்லிச் சென்றது. டீ குடித்து முடிப்பதற்குள் படித்து முடித்திடலாம் என்றளவில் ‘ஒரு பக்கக் கதை’ புழக்கத்திற்கு வந்துவிட்டது. இவ்வாறு, இலக்கிய வடிவங்கள் மாறியும் சுருங்கியும் வருவதைப் போன்று கருத்துப் புலப்பாட்டிலும் (Communication) மாற்றங்கள் நிகழ்கின்றன. 

பெருந்தேவியின் ‘நல விசாரணை’ குறுங்கதை, ஒருபக்க அளவில் இன்றைய புலன உரையாடலின் தன்மையை உள்ளபடியே காட்சிப்படுத்துகிறது. “எப்படி இருக்கிறாய்?” என நண்பன் விசாரிக்க, வழக்கமாகப் பேச்சுக்குச் சொல்லப்படும் “நல்லாருக்கேன்”க்கு மாற்றாக, “ஆறவே ஆறாத கண் கலக்க துக்க சஞ்சல விசன வேதனை மிகு வருத்தம்” என நீண்ட வாக்கியமாகத் தன் உள்ளக் கிடக்கை வெளிப்படுத்துகிறாள், ஒருத்தி. ஆனால், அவனிடமிருந்து “TC” என்ற சுருக்கெழுத்து மட்டுமே கிடைக்கப் பெற்றது. உங்களைப் பார்த்துக் கேட்கிறேன். இப்படிப் பதில் வந்தால் காண்டாகிடுவீங்க இல்லையா?. ஆனால், எங்க Genz “K” எனப் பதில் சொல்லிட்டு, kathaishorts பார்க்கப் போயிடுவாங்க. இரண்டொரு நாளுக்கு எதையும் தெரிவிக்காமல் இருப்போம்; பேசுவதைக் குறைத்துக் கொள்வோம்; விலக ஆரம்பிப்போம்; உறவு முறிந்துவிடும். சிக்கல்கள் ஏற்படுவதைப் பொருட்படுத்தாமல் ‘வசதியாக இருக்கிறது’ என்பதற்காகக் குறுக்கங்களைப் பயன்படுத்துகிறோம். மனிதர்களைப் புரிந்துகொள்ளாமல் மேலோட்டமான உரையாடலைக் குறுக்கங்கள் ஊக்குவிக்கின்றன. இது, உணர்வுபூர்வமான உரையாடலைச் சிதைத்து, இயந்திரத்தனமான கருத்துப் புலப்பாட்டினை ஆதரிக்கிறது. என்ன தொனியில் (Tone) சொல்கிறார்கள் என அறிய முடியாததால் உறவுகளுக்கிடையில் பிரச்சனைகள் எழுகின்றன. குறிப்பாக, நம்மைச் சோம்பேறிகளாக்கி, மொழித்திறனைக் குறைத்துள்ளது என்பதே மறுக்க முடியாத உண்மை.

‘TC🫂’ எனப் பதிலளித்துப் பிரச்சனை ஏற்படாமல் தடுப்பவர்களும் இருக்கிறார்கள். சுருக்கமொழிகளுக்கு உணர்வுகளைத் தருவனவாக உணர்க்குறிகள் (Emojis) இருக்கின்றன. 1999இல் i-mode அறிமுகமானது. அதாவது மொபைலில் இணைய வசதி கிடைத்தது. 

ஜப்பான் மொபைல் நிறுவனமான டோகோமோ-இல் (DoCoMo) பணியாற்றிய ஷிகேடகா குரிடா என்பவரால் உணர்க்குறிகள் முதன்முதலில் வடிவமைக்கப்பட்டன. ஜப்பானின் பண்பாட்டினையும் வானிலை, போக்குவரத்து முதலியவற்றைக் குறிக்கும் பொதுவான குறியீடுகளையும் உள்ளடக்கிய 176 உணர்க்குறிகளை உருவாக்கி அறிமுகப்படுத்தினார். 2010இல் இவற்றிற்கு ஒருங்குறி (Unicode) உருவானது. பிறகு அனைவரும் பயன்படுத்தும்படியாகப் புழக்கத்திற்கு வந்தது. இன்று எல்லாருக்குமான பொது மொழியாகச் சமூக ஊடகங்களில் உணர்க்குறிகளின் பயன்பாடு அமையப் பெற்றுள்ளது. 

2013 வரை மஞ்சள் நிறத்தில் மட்டுமே உணர்க்குறிகள் பயன்பாட்டில் இருந்தன. கத்ரீனா பரோட் என்பவரின் மகள் பள்ளியிலிருந்து வீடு திரும்பியதும் “தான் பயன்படுத்தும் உணர்க்குறிகளில் தன்னை உணர முடிவதில்லை” என வருத்தம் தெரிவித்துள்ளார். அப்போது கத்ரீனா உணர்க்குறிகளிலுள்ள சமத்துவமின்மையை உணர்ந்து, அதைச் சரிசெய்யும் பணியில் இறங்கினார். அதன் விளைவாக iDiversicons என்ற நிறுவனம் உருவானது; ஐந்து வெவ்வேறு நிறங்களில் உணர்க்குறிகளும் வடிவமைக்கப்பட்டன.

இப்புதிய முயற்சியை Apple நிறுவனம் 2015இல் மக்கள் பயன்பாட்டிற்குக் கொண்டு வந்தது. ஆனால், உரிய மதிப்பைக் கத்ரீனாவுக்கு வழங்கவில்லை. சிறுதொழில் செய்பவர்கள், கருப்பின மக்கள், பெண்கள் ஆகியோருக்கு உரிய அங்கீகாரம் கிடைப்பதில்லை எனக் கத்ரீனா தொடர்ந்து குரல் எழுப்பி வருகிறார். இன்று நாம் பன்முகத்தன்மையை வெளிப்படுத்தும் உணர்க்குறிகளைப் பயன்படுத்துகிறோம் என்றால் அதற்கு பின்னால் கத்ரீனா போன்றோரின் அளப்பரிய உழைப்பு உள்ளது. 

“தனித்தமிழில் பேசுங்கள்” என்ற அறிவுரை எல்லாம் கிடையாது. ‘நிறைய ஆங்கிலம் கொஞ்சம் தமிழ்’ என்ற நடையை மாற்றிக் கொள்ளலாம். தமிழைத் தமிழ் வரிவடிவங்களால் எழுதப் பழகலாம். சமூக ஊடகம் என்பது அழகும் ஆபத்தும் நிறைந்த கடல் போன்றது. மொழி என்பது ‘புத்தியைத் தீட்டக்கூடியக் கத்தி’. இரண்டையும் சரியாகக் கையாளத் தெரிந்தால், நாம்தான் Boss😎

தொடரும்…

படைப்பாளர்

கோதாமணி தமிழ் மாணவர். எழுத்திலும் பேச்சிலும் வாசிப்பிலும் ஈடுபாட்டுடன் இயங்கி வருகிறார்.

Exit mobile version