Site icon Her Stories

சூழலும் பெண்களும்

“விமான சத்தம் கேட்டு வீட்டுக்கு வெளியில் ஓடிப்போய்ப் பார்த்தேன். விமானத்திலிருந்து வெள்ளை நிறத்தில் ஏதோ ஒன்று மேகமூட்டம்போல வெளியேறுவது தெரிந்தது. அடுத்த சில நொடிகளில் என் உடல் முழுக்க அந்த வெள்ளை நிற பவுடர் கொட்டிவிட்டது. டக்கென்று இருமல் வந்தது. தண்ணீர் ஊற்றி அதைக் கழுவியிருக்க வேண்டும். ஆனால், வயலில் உலாவிக்கொண்டிருந்ததில் அதை மறந்துவிட்டேன்.”

ஏஜண்ட் ஆரஞ்சு என்ற அந்த வெள்ளை நிறப் பொடியை எதிர்கொண்டபோது ட்ரான் டோ ங்காவுக்கு வயது 23. வியட்நாம் போரின்போது அமெரிக்கா பயன்படுத்திய களைக்கொல்லியின் பெயர்தான் ஏஜண்ட் ஆரஞ்சு. வியட்நாமின் அடர்ந்த காடுகள், தோப்புகளில் யாரும் ஒளியக் கூடாது என்பதால், வயல்வெளிகள், காடுகள் எனப் பல பகுதிகளில் அமெரிக்க விமானங்கள் ஏஜண்ட் ஆரஞ்சைத் தூவின.

ஏஜெண்ட் ஆரஞ்சு

ஏஜண்ட் ஆரஞ்ச் நச்சுத்தன்மை கொண்டது என்பதை அறியாத ங்கா, ‘போரின்போது நடந்த விநோத சம்பவம்’ என்ற வகையில் அதைப் புறந்தள்ளிவிட்டார். இது நடந்து இரண்டு ஆண்டுகள் கழித்து ங்காவுக்குக் குழந்தை பிறந்தது. பல தீவிரக் குறைபாடுகளுடன் பிறந்த அந்தப் பெண் குழந்தை, பதினேழு மாதங்களில் இறந்தது. “எனக்குக் குற்ற உணர்வாக இருந்தது, ஒரு அம்மாவாக அவளை என்னால் பாதுகாக்க முடியவில்லை என்று நினைத்தேன், மிகவும் வருத்தப்பட்டேன்” என்று அந்தக் காலகட்டத்தை நினைவுகூர்கிறார் ங்கா. அடுத்த சில ஆண்டுகளில் வெவ்வேறு பிறவிக் குறைபாடுகள் மற்றும் நோய்களுடன் இரண்டு பெண் குழந்தைகளை ங்கா பெற்றெடுத்தார். அப்போதுகூட அந்த வெள்ளைப் பொடி நிகழ்வுக்கும் இந்தப் பிரச்னைகளுக்குமான தொடர்பை அவர் உணரவில்லை. சரியாக 40 ஆண்டுகள் கழித்துதான் தன்னுடைய பிரச்னைகளுக்கெல்லாம் இதுதான் காரணம் என்று அவருக்குத் தெரியவந்தது. அதற்குள் ங்காவுக்கே ரத்தம் தொடர்பான ஒரு நோய், காசநோய், ஒருவகையான நீரிழிவு குறைபாடு உள்ளிட்ட பல கொடுமையான பிரச்னைகள் வந்துவிட்டன.

2015ஆம் ஆண்டில், அதாவது ங்காவுக்கு 72 வயது ஆன பின்னர், பல்வேறு நண்பர்கள், சமூக செயற்பாட்டாளர்கள் தூண்டியதால் இந்த ஏஜண்ட் ஆரஞ்ச் களைக்கொல்லியை உற்பத்தி செய்த 14 பெருநிறுவனங்கள் மீது வழக்குத் தொடந்தார் ங்கா. ஏற்கெனவே இது தொடர்பான வேறு ஒரு வழக்கில் இவர் முக்கிய சாட்சியாக இருந்திருக்கிறார் என்றாலும், அந்த வழக்கு தள்ளுபடி செய்யப்பட்டதால் இந்த முறையாவது நீதி கிடைக்கவேண்டும் என்று உறுதியோடு செயல்பட்டார். கிட்டத்தட்ட ஆறு ஆண்டுகள் போராடிய பின்னர் 2021இல் நிறுவனங்கள் சொல்வதே சரி, ஏஜண்ட் ஆரஞ்சுக்கும் உடல்நிலைக் கோளாறுகளுக்கும் தொடர்பில்லை என்று நீதிமன்றம் தீர்ப்பளித்தது. இப்போது தனது வழக்கறிஞர்களுடன் இணைந்து மேல்முறையீட்டுக்காக உழைத்துக்கொண்டிருக்கிறார் ங்கா.

போர்க்காலங்களில் இயற்கை சூறையாடப்படும்போது பெண்களுக்கு ஏற்படும் பாதிப்புகள், சமூகக் கட்டமைப்புகள் காரணமாகப் பெண்கள் சந்திக்கும் புற மற்றும் அகச்சிக்கல்கள், சுற்றுச்சூழல் சீரழிவால் பெண்களுக்கு ஏற்படக்கூடிய நீண்டகால பாதிப்பு, சூழல் பாதுகாவலர்களாகப் பெண்கள் மாறுகிற, அல்லது மாறவேண்டிய அரசியல் என்று இந்தத் தொடரின் பல பேசுபொருட்களை உதாரணக் காட்சிகளாக இந்த வரலாறு காட்டுகிறது. ஏஜண்ட் ஆரஞ்ச் நேரடியாக உடலில் பட்டதால் ங்காவுக்குக் குழந்தைப் பேற்றின்போது ஏற்பட்ட பாதிப்பு, அவருக்கு அதனால் வந்த குற்ற உணர்ச்சி, குறைபாடு உடைய அடுத்த இரண்டு குழந்தைகளை வளர்க்க அவர் பட்ட சிரமம், பல தசாப்தங்கள் கடந்தும் அவர் நீதிமன்றத்தில் போராடும் அவலம் என்று இந்த வரலாற்றில் பேசப்படவேண்டிய பல அம்சங்கள் இருக்கின்றன.

ங்கா

இன்னொருபுறம், தங்களுக்கு முந்தைய தலைமுறையில் குறைபாடு உள்ள பல குழந்தைகள் பிறந்ததைப் பார்த்த வியட்நாமின் கர்ப்பிணிப் பெண்கள், தங்களது குழந்தைகளும் உடல் சவாலுடன் பிறக்குமா என்று அஞ்சுவதாக 2013இல் ஒரு செய்தி வந்தது. ‘எதற்கும் ஒரு ஸ்கேன் செய்துவிடலாம்’ என்று மருத்துவமனைக்கு வரும் கர்ப்பிணிகள், கருவிலிருக்கும் குழந்தையின் உடல் உறுப்புகள் சரியாக இருக்கின்றன என்று மருத்துவர்கள் உத்தரவாதமாகச் சொன்ன பிறகே நிம்மதியடைகிறார்களாம். “ஏதோ சில குழந்தைகளுக்குக் குறைபாடு இருந்திருக்கலாம், இந்தப் பெண்கள் ஊதிப் பெரிதாக்குகிறார்கள்” என்பவர்களுக்கு – ஏஜண்ட் ஆரஞ்ச் பயன்பாட்டால் மட்டுமே 1,50,000 குழந்தைகள் பிறக்கும்போதே குறைபாடுகளுடன் பிறந்ததாக வியட்நாமின் செஞ்சிலுவைச் சங்கம் தெரிவிக்கிறது. ஏஜண்ட் ஆரஞ்ச் என்ற அந்த நச்சு, தலைமுறை கடந்தும் பெண்களின் மனதில் பூடகமான அச்சமாக உட்கார்ந்துகொண்டிருக்கிறது.

இயற்கை என்பதை அன்னையாகவும் பூமியைப் பெண்ணாகவும் உலகெங்கிலும் பல மரபுகள் குறிப்பிடுகின்றன. இயற்கைக்கும் பெண்களுக்குமான நுணுக்கமான தொடர்பு பற்றியும், ஒரு தாய் குழந்தைகளை வளர்ப்பதுபோல இயற்கை தன்னுடைய பிள்ளைகளான உயிரினங்களின் தேவைகளை வாரி வாரி வழங்குவது பற்றியும் பல கட்டுரைகள் எழுதப்படுகின்றன. அதேநேரம் ஓர் இடத்தின் சுற்றுச்சூழல் கெட்டுவிட்டால் அதிகம் பாதிக்கப்படுபவர்கள் பெண்களாகத்தான் இருக்கிறார்கள். இன்னொருபுறம், சீரழிந்த சுற்றுச்சூழலை யார் பாதுகாக்கவேண்டும் என்ற கேள்வியும் எழுகிறது. சூழல் பாதுகாப்புக்காகக் குரல் கொடுக்கும் பெண்களைப் பாராட்டும் அதே நேரம், பச்சை மையில் கையெழுத்துப் போட்டு இந்த முடிவுகளை எடுக்கும் இடங்களில் அவர்களுக்கான பிரதிநிதித்துவம் இருக்கிறதா என்பதையும் கேள்வி கேட்க வேண்டும். இவற்றைத் தவிர, சாதி, வர்க்கம் போன்ற வெவ்வேறு சமூகப் படிநிலைகள் இந்தப் பிரச்னைகளுக்குள் எப்படி இயங்குகின்றன என்பதையும் கவனிக்கவேண்டும். இந்தத் தொடர் அப்படியான பல புள்ளிகளில் ஊடுருவியும் மேலெழும்பியும் பேசப்போகிறது.

பெண்கள் சார்ந்த, மிகவும் பிரபலமான ஒரு சூழல் போராட்டத்திலிருந்து தொடங்கலாம். ‘இயற்கையைப் பாதுகாக்கும் பெண்கள்’ என்றாலே இந்தக் காட்சிதான் பலருக்கு நினைவு வரும்? அது என்ன போராட்டம்?

(போராட்டம் தொடரும்)

படைப்பாளர்:

நாராயணி சுப்ரமணியன்

கடல் சார் ஆய்வாளர், சூழலியல் ஆர்வலர் மற்றும் எழுத்தாளர் என்ற பன்முக ஆளுமை இவர். தமிழ் இந்து உள்ளிட்ட முன்னணி இதழ்களில் சூழலியல், கடல் வாழ் உயிரினங்கள் குறித்து தொடர்ச்சியாக எழுதி வருபவர். ஹெர் ஸ்டோரிஸில் இவர் எழுதிய ‘விலங்குகளும் பாலினமும்’ தொடர் புத்தகமாக வெளிவந்து, சூழலியலில் மிக முக்கியமான புத்தகமாகக் கொண்டாடப்படுகிறது!

Exit mobile version