Site icon Her Stories

சமத்துவத்துக்காகப் போராடும் பிரியா

மதுரை மாவட்டம்  உச்சப்பட்டியில்   அகதிகள் முகாமொன்று   உள்ளது. முகாமில்  மாதந்தோறும்  கணக்கெடுப்பு  நடப்பது  வழக்கம்.   அந்த வகையில் 2016-ஆம்  ஆண்டும்  கணக்கெடுப்பு  எடுக்கப்பட்டது. ஆனால்  இந்த  முறை  தாசில்தாருக்கும்  முதியவர் ஒருவருக்கும் வாக்குவாதம்  ஏற்பட்டு  தாசில்தார்  மோசமான  வார்த்தைகள்  பேசியுள்ளார்.  அதனைத்   தாங்கிக் கொள்ள முடியாத  முதியவர்  மின்கம்பத்தில்  ஏறி கீழே குதித்து  உயிரிழந்தார்.

இதனால்  முகாமில் பதற்ற நிலை நிலவியது.   முதியவரின் இறப்பிற்கு  நியாயம் கேட்பதற்காகவும், களநிலவரம்  கண்டறிந்து  நடவடிக்கை  எடுக்கக்  கோரி அரசுக்கு  அழுத்தம்   கொடுப்பதற்காகவும்  பெண்   ஒருவர் முகாமிற்குச்  சென்றிருந்தார்.   ஒன்பது மாத  கர்ப்பிணியான  அவரிடம்   மக்கள்  தங்கள்  வலிகளையும்  ஆதங்கத்தையும்                                        வெளிப்படுத்தினார்கள்.   இதனை   விரும்பாத   காவல்துறை  அதிகாரிகள் கூட்டத்தைக்  கலைக்க  லத்தியால்  மக்களை  அடித்து   விரட்டினர்.  லத்திக்கு    அஞ்சிய  மக்கள்  தங்களுக்குள்  தள்ளிக்கொண்டும்   முட்டி  மோதிக்கொண்டும்  ஓடியுள்ளனர். அந்தக் கர்ப்பிணி இக்கூட்டத்தின்  தள்ளுமுள்ளுக்குள்  சிக்கிக்கொண்டார். அகதிகள்  முகாம்   தாய்மார்கள் அப்பெண்ணைக் காப்பாற்றிவிட்டனர்.  அந்தப்  பெண்   ஒற்றை ஆளாக  எல்லாத்  தகவலையும் சேகரித்து விட்டு   சக  தோழர்கள்  முகாமிற்கு வந்ததும்  இரவு  ஒரு  மணிக்கு  வீடு  திரும்பினார். 

அந்த துணிச்சல் மிக்கப்  பெண் தற்போது என்  முன்  அமர்ந்திருந்தார். அன்று  கருவில்  இருக்கும் போது   பேராபத்திலிருந்து  தப்பித்த   உயிர்  தற்போது  விளையாடிக்  கொண்டும், சுட்டியாக அலப்பறை செய்துகொண்டும்  உள்ளது.  ஈருயிரும்  தற்போது  எங்காவது  நடக்கும்  அநீதிக்கு எதிரான உரிமை குரல்களாகச்  செயல்படுகிறது.

நம்  முன் அமர்ந்துள்ள பெண்  ஆளுமையின்  பெயர்  பிரியா.  இவர்   Peoples  watch  என்னும் மக்கள்  கண்காணிப்பகத்தில்   இணைந்து   களப்பணியாற்றி    வருகிறார். 

பிரியா சிவகாசியில் பிறந்தவர். அங்கிருந்து  படிப்பதற்காக  மதுரை  வந்துள்ளார். இது  குறித்துப்  பிரியா, “நான்  சிவகாசியில்  இருந்த  போது  எல்லாக்  குடும்பங்களும் வேறொரு  தொழிலை வாழ்வாதாரத்துக்காக  நம்பியிருந்தாலும்  தீப்பெட்டி  தயாரிப்பது, வெடி தயாரிப்பதும்  கட்டாயமாக்கப்பட்டிருந்தது. எங்க வீடு  மட்டும் விதிவிலக்கா என்ன?

அதனால் எங்களுக்கெல்லாம்  தீப்பெட்டி தயாரிப்பில்   ஈடுபட்டால்   மட்டுமே  மேரி  கோல்ட் ரொட்டி கிடைக்கும்   என்பது   குடும்பத்தினரின்                    ஆணை.  அதற்காக  நாங்களும்  எங்கள்  கடமையைச்  சரிவர   செய்து வந்தோம். 

அப்போது எனக்குத் தெரியவில்லை – சிவகாசியைச் சுற்றியுள்ள  உயிரிழப்புகளும் சுரண்டலும்.  இப்போது  புரிகிறது  ஆனாலும்  என்னால் உயிரிழப்புகளைத்  தடுக்க   முடியவில்லை என்று  வருத்தமாக  உள்ளது.             மதுரைக்குப்  படிப்பதற்காக   வந்தேன்.  கல்லூரியில்  சேர்ந்தோம்,  படித்தோம்  என்று   இல்லாமல்   என்னுள்  தேடல்   எப்போதும்  இருக்கும்.   நான்   படித்தது இளங்கலை  ஆங்கிலம். இளங்கலை  படிக்கையில்  என்.சி.சியில்  தீவிரமாக   ஈடுபட்டிருந்தேன்.  எனக்கு  யூனிஃபார்ம் சர்வீசில் பணி புரிவதில்தான் விருப்பம்.  அதற்கான   தேர்வில்  தேர்ச்சியும்  பெற்றுள்ளேன். 

எங்கள்  கல்லூரிக்கு மக்கள் கண்காணிப்பகத்திலிருந்து  வகுப்பு  எடுக்க  வருவார்கள்.   காவல் துறையின்  காட்டுமிராண்டித்தனத்தால் ஊமச்சிக்குளம்  காவல்   நிலையத்திலேயே  விவசாயி  குருவையா இறந்ததும்  அவரின்  மனைவி  அங்கம்மாள்   ஐந்து  நாள்  காவல்  நிலையத்தில்  கொடூரமான தாக்குதலுக்கு உள்ளானதும் என்னைப்  பாதித்தது. இதன் பின்னர் மனித  உரிமைக்கான  தேடல்  என்னைச் சீருடைப் பணிக்குப்   பதிலாக  மக்கள்  பணியில்  தொடர்ச்சியாகப்  பயணிக்க  வைத்தது.

மனித  உரிமைகள்  எங்காவது  மீறப்பட்டால்  அங்கு  சென்று  பாதிக்கப்பட்டவர்கள்  நியாயங்களையும்,  கள நிலவரங்களையும்   தொகுத்து தேசிய மற்றும் மாநில  மனித  உரிமை  ஆணையங்கள்,  அரசின்      கவனத்திற்குக் கொண்டு  செல்வதே எங்களின் வேலை.”

சாதிய  வன்கொடுமை,  பெண்களுக்கு  எதிரான  குடும்ப  வன்முறை  மற்றும்   பாலியல்  வன்கொடுமை  போன்ற சமூகப் பிரச்னைக்கான  தீர்வுக்காக  மக்கள்  கண்க்காணிப்பகமும்   பிரியாவும்    செயல்படுகின்றனர்.      

தூத்துக்குடியில்   நடைபெற்ற   ஸ்டெர்லைட்   எதிர்ப்பு  போராட்டத்தில் மக்கள் கண்காணிப்பகம்  முக்கியப்  பங்காற்றியது.  தூத்துக்க்குடி ஸ்டெர்லைட்டிற்கு  எதிராக   அமைதியான  முறையில்  அணி  திரண்ட  மக்கள்  இயக்கத்தை  அரசு  எவ்வாறு  வன்முறைக்காடாக  மாற்றியது   என்பதை மையமாகக் கொண்ட ஆய்வறிக்கையை  வெளியிட்டது. நிகழ்விற்கு மக்களை அழைக்கும்  விதத்தில் கிராமங்கள் தோறும் துண்டு பிரச்சாரத்தில்  பிரியாவும்  அவரது  குழுவும்  ஈடுபட்டுள்ளனர்.  காவல்  துறை    தடுத்ததால் நேரடியாக எஸ்பியிடமே  பேச்சுவார்த்தையின்  மூலம்  பிரச்னை   முடிக்கப்பட்டதாக  பிரியா  நம்மிடம்  கூறினார்.  

 “சமீபத்தில் பெண் ஆசிரியர்களிடமிருந்து  ஒரு  புகார்  எங்களிடம் வந்தது.   தலைமை  ஆசிரியர்   ஒருவரால்   அவர்கள்  பாலியல் சீண்டலுக்கு  ஆளாக்கப்பட்டுள்ளனர்.  தலைமை  ஆசிரியர்  அனுமதி   இல்லாமல்  அவர்களது  அலைபேசியைப்  பயன்படுத்துவதாகக்  கூறினார்கள்.          எனக்கு  இதைக்  கேட்டவுடன் எழுந்த  கேள்வி,  மாணவர்களுக்குப்  பாடம்   சொல்லிக்  கொடுக்கும் ஆசிரியர்களே,  தனக்கு  அநீதி இழைக்கும்  நபருக்கு  எதிராகச்  சின்னதாக  ஓர்  எதிர்ப்பைக்கூடப்  பதிவு  செய்ய வில்லை என்றால்,  மாணவர்களுக்கு  என்ன  சொல்லிக்  கொடுப்பார்கள்? 

இச்சம்பவம்  பெண்கள் இந்தியச்  சமூகத்தால் படித்திருந்தாலும்  தைரியமற்றவர்களாகவே  உள்ளனர்  என்பதை  உணர்த்தியது.   2023-ஆம்  ஆண்டு ஐநாவின்  மனித  உரிமை  ஆணையத்தின்  53ஆவது          அமர்வில்  கலந்துகொண்டேன். அமர்வில்  பெண்களின்  எண்ணிக்கை  என்னை மகிழ்ச்சியடையச்  செய்தது.  என்  மகிழ்வை  உடனிருப்பவர்களிடம்               பகிர்ந்த  போது  அவர்களின்  பதில்   சிந்திக்க வைத்தது.   ஐநாவில்  தங்கள்  நாடுகளை  முன்னிறுத்துபவர்களில் பெண்களை  அதிகமாகப்  பார்க்கலாம். ஆனால்  ஐநாவில்  முடிவெடுக்கும்  பொறுப்புகள்  ஆண்மயமாக்கப்பட்டுள்ளது என்றனர்.  இந்தப்  பதில்  உலகம்  முழுவதும்      பெண்களின்  நிலை  சற்று  மோசமாக உள்ளது  என்பதை  உணர்த்தியது.”

சாதியா?  இப்போ எல்லாம் யார்  சாதி  பார்க்கிறார்கள்?  என்கிற  கேள்வியைக்   கண்டால்  எனக்குக்  கோபமும்  அதிருப்தியும்  தான்  ஏற்படுகிறது  என்கிறார்.  கடந்த    ஆகஸ்ட்  மாதம்  ( 2023ஆம்  ஆண்டு)  நான்  விருதுநகர்  மாவட்டத்திலுள்ள  ஆவியூர் கிராமத்திற்குச்  சென்றேன்.  அந்தக்  கிராமத்தில்    சாதியக்  கொடுமைகள்  தாண்டவமாடுகின்றன.                  அங்குள்ள தாழ்த்தப்பட்டதாகக் கருதப்படும் மக்கள்   ஹோட்டல்களில்  பார்சல் மட்டுமே  வாங்க  முடியும்,   சாப்பிடுவதற்கு  அனுமதி இல்லை.  டீக்கடைகளில்  இரட்டைக்  குவளை  முறை  உள்ளது. ஊருக்குள்ளேயே  சலூன் இருந்தாலும் முடி வெட்டுவதற்கு மக்கள்  9  கிலோமீட்டர்  தொலைவு  செல்ல வேண்டும்.  உள்ளூரில்  உள்ள சலூன்  கடைக்காரர்  முடிவெட்ட  மறுக்கிறார்.  இந்தக்  கிராமம்  தொடர்பான  அத்தனை  தகவல்களையும் நாங்கள்  சேகரித்துள்ளோம்.  தற்போது ஆலைய நுழைவு தொடர்பான  வழக்கு மதுரை  உயர்நீதிமன்றத்தில் நிலுவையில்  உள்ளது.   நான்  பார்த்ததிலேயே   மோசமான  சாதிய   வன்மம்  நிறைந்த  ஊர்  ஆவியூர்   தான்.”

மக்கள்   கண்காணிப்பகத்தில் சிபிஐ  சோதனை நடத்தப்பட்டது.  அதற்கு முன்னரே  வெளிநாட்டு  நிதி நிறுத்தப்பட்டது.  அதனால்  ஊழியர்கள்   குறைந்தபட்ச  மதிப்பூதியம்கூடக்  கிடைக்கப் பெறாமல்  பணியாற்ற வேண்டியதாயிற்று.  பிரியாவும் இன்று  வரை  எந்த விதப்  பொருளாதார  உதவியும்  இல்லாமல்  மக்கள்   கண்காணிப்பகத்தில் சமூகப் பணியாற்றி  வருகிறார். 

களச்   செயற்பாட்டாளர்களுக்குப்  பொருளாதாரத்தின்   மீது  பிடிப்பு   இல்லையென்றாலும்  குடும்பத்திற்கான   தேவை   இருக்கத் தானே  செய்கிறது.  அதனால்  பிரியா  ‘வான்முகில் ’ எனும்  தன்னார்வ தொண்டு      நிறுவனத்தில்  அரசமைப்பு  உரிமை கல்வி என்னும்  திட்டத்தில்  இணைந்து  பணியாற்றுகிறார்.  இதுவும்   மக்களுடன்   தொடர்புடைய   வேலை தான்,  அதே  நேரத்தில்    குறைந்தளவான   வருமானமும்  பெறமுடியும்.

அரசமைப்பு  உரிமை  கல்வி  திட்டத்தின்   கீழ் ஜனநாயக  உரையாடலைப்    பள்ளிகளில்  நிகழ்த்தி  வருகிறார்.

’சாதியம் குறித்த  உரையாடலைக்  குழந்தைகளிடம்  நிகழ்த்துகையில்  சில சவால்களைச்  சந்திக்க  நேர்கிறது. ஆசிரியர்கள் ஏன் இதுபோன்ற  உரையாடலை  நிகழ்த்துகிறீர்கள் என்கிற  கேள்வியை எழுப்புகிறார்கள். மாணவர்களை  ஒன்றாக   அமர வைப்பதே   சிரமமாக  உள்ளது.  சாதிய   விஷங்களைப்  பெற்றோர்  குழந்தைகள்   மனதில்  திணித்துள்ளார்கள்.   இதனால்   ஒடுக்கப்பட்ட   சாதியைச் சேர்ந்த குழந்தைகளுடன் பிற  சாதியைச்  சேர்ந்த  குழந்தைகள்  அமர்வதில்லை. ஒரு நீண்ட நெடிய  உரையாடலுக்குப் பிறகு  அவர்கள்  தன்  தவற்றை  உணர்ந்து  சமமாகப் பழகத்  தொடங்கினர். ஆனாலும்  அவர்கள்  பெற்றோர்களுக்குத்  தெரிந்தால் என்னாகும்  என்கிற  பயம்  இருக்கத் தான் செய்கிறது.”

குழந்தைகள்,  பெண்கள்,   ஒடுக்கப்பட்ட மக்கள் போன்ற நலிவடைந்த  மக்களுக்காகச்  செயல்பட்டு வரும்  பிரியாவை  எது  தொடர்ச்சியாக  இயங்க வைக்கிறது?

கல்வியும்  ஓரளவு   அரசியல் புரிதலும்  இருக்கும்  நானும் மக்களுக்காக  இயங்கவில்லை  என்றால்  கல்வியையும் அரசியலையும்  நுகரமுடியாத  விளிம்புநிலை  மக்களை  எப்படி  எழுச்சிப் பெறச்  செய்வது?  ஆதலால்  இயங்குகிறேன்  என்கிறார்  பிரியா.  அவருடன்  நாமும்   கைகோத்து   சமத்துவத்தை  மலரச் செய்வதற்காக செயல்படுவோம்.

படைப்பாளர்:

கு.சௌமியா, பத்திரிகையாளர்

Exit mobile version