நம் எண்ணங்கள், நேர்மறை எண்ணங்கள் எதிர்மறை எண்ணங்கள் என இரண்டு வகையாக உள்ளன. வாழ்வில் எது நடந்தாலும் ‘எல்லாம் நன்மைக்கே’ என நினைப்பது நேர்மறை எண்ணம்; எந்த நல்லதிலும் ஒரு கெட்டதைக் கண்டடைவது எதிர்மறை எண்ணம்.
இதற்கு எளிய உதாரணம். ஒரு டம்ளரில் பாதியளவு நீரிருக்கிறது என்று வைத்துக்கொள்வோம். பாதி டம்ளர் நிரம்பி இருக்கிறது என நினைப்பது நேர்மறை எண்ணம்; பாதி டம்ளர் காலியாக இருக்கிறது என யோசிப்பது எதிர்மறை எண்ணம்.
வாழ்க்கை என்றால் நல்லது, கெட்டது, வலி, துன்பம், இன்பம் எல்லாம் கலந்துதான் இருக்கும். எல்லாமே நம் வாழ்வில் வரும். நாம் அதை எப்படி எதிர்கொள்கிறோம்? எதிர்பாராமல் நடப்பது விபத்து. அப்படி ஒரு முறை எதிர்பாராமல் நடந்து விட்டதை, தினம் தினம் நினைத்துக்கொள்வது, அதை எதிர்பார்த்து, நாமே அதைக் கவர்ந்திழுப்பதாக ஆகும்தானே?
பொதுவாக, நாம் அக்கறை என்றும் பாதுகாப்பு என்றும் முன்னெச்சரிக்கை என்றும் நினைத்துக்கொண்டு மனதில் நினைக்கும் எண்ணங்களைக் கவனியுங்கள். எல்லாமே எதிர்மறை எண்ணங்கள்.
டம்ளரை மேஜை ஓரத்தில் வைக்கும்போது கொட்டுமோ என்ற எண்ணம், கண்ணாடிப் பாத்திரத்தை எடுக்கும்போது தோன்றும் சிறிய பதற்றம், குழந்தைகள் விளையாடும்போது கத்தினாலே அடிபட்டுக்கொண்டார்களோ என்கிற பதைபதைப்பு, காரை ரிவர்ஸ் எடுக்கும்போது எதன் மேலும் மோதிவிடக்கூடாது எனும் ஜாக்கிரதை உணர்வு, ஆபிஸ் மேலாளரின் அறைக்குப் போகும்போதே திட்டுவாரோ என்கிற எண்ணம்… இப்படி…
எண்ணம் போல் வாழ்க்கை என்போம். அப்படியானால், கெட்டவர்கள் என நம்மால் அறியப்படுகிறவர்கள் எல்லாரும் நன்றாகத்தானே இருக்கிறார்கள்? நிஜத்தில் அவர்கள் கொண்டுள்ள கெட்ட எண்ணத்திற்கு எத்தனையோ முறை அழிய வேண்டும் அல்லவா? ஆனால், ஏன் அப்படி எதுவும் நிகழ்வதில்லை?
உண்மையில் கெட்டவர்கள் என நம்மால் பிம்பப்படுத்தப் படுபவர்கள், உலகின் எல்லா நல்லதும் தனக்கே உரியது என்று நேர்மறையாக நினைக்கிறார்கள். அதை அடையத் தகுதி இருக்கிறதா என்பது பற்றி எல்லாம் கவலைப்படுவதில்லை. இந்த உலகில் பிறந்ததே, இந்த உலகின் எதை அடையவுமானத் தகுதியாக இருக்கிறது. உண்மையும் அதுதான்.
இதுவே நல்லவர்கள் என நம்மால் பிம்பப்படுத்தப் பட்டவர்களின் எண்ணங்களைக் கவனியுங்கள்.
என் அத்தை ஒருவர் நல்லவர். பரம சாது. அவர் மார்க்கெட்டுக்குப் போய் காய் வாங்கி வந்தால், பாதிக்கு முக்கால் சொத்தைக் காய்கறிகளாக இருக்கும்.
“என்ன அத்தை இப்படிச் சொத்தைக் காய்களை வாங்கி வந்திருக்கிறீர்கள் என்று கேட்டால்?”, “சரி விடு, காய்க்காரம்மாவும் பிழைக்கணும் இல்ல” என்பார்.
நாம் நல்ல காசு, செல்லும் காசு கொடுத்திருக்கும்போது, நமக்கு ஏன் சொத்தைக் கத்தரிக்காய் தர வேண்டும்? நாம் சொத்தைக் காய்கறிகளுக்கா பாத்யதைப் பட்டிருக்கிறோம் என்று கோபம் வரவேண்டும் இல்லையா?
மேடையில் நான்கைந்து நாற்காலிகள் இருக்கின்றன. ஒன்று மட்டும் படாடோபமாக இருந்தால், அதில் அமரத் தயங்குவோம். நம்மை நாமே குறைத்து மதிப்பிட்டுக்கொள்வோம். முதல் வரிசை காலியாக இருந்தாலும்கூட, இரண்டாவது வரிசையில் அமர்வோம். முதல் வரிசையில்தான் அமர ஆசைப்படுவோம். ஆனால், செய்ய மாட்டோம்.
நம் எண்ணங்களை ஆழ்ந்து கவனித்துப் பாருங்கள். ‘எனக்கு மட்டும் ஏன் இப்படி நடக்கிறது’ என்போம். ஆனால், ‘எனக்கு இது போதும்’ என்போம். இரண்டிற்கும் இடையில்தான் எவ்வளவு முரண்பாடு. நாம் விரும்புவதற்கும் ஆசைப்படுவதற்கும் நேர்மாறாக நாமே நடந்து கொள்கிறோம்.
மீன் கதை
இரண்டு குட்டிப் பையன்கள் வீட்டிற்குள் நுழையும்போதே மீன் வாசனை மூக்கைத் துளைக்கிறது. அம்மா தட்டில் இரண்டு மீன் துண்டுகள் வைத்துள்ளதைப் பார்க்கிறார்கள். ஒரு பையன் வெகு வேகமாக ஓடிச் சென்று இருப்பதிலேயே பெரிய மீனை எடுத்துக்கொள்கிறான். அடுத்தவன் சொல்கிறான் ‘ம்… நானாக இருந்தால், சின்ன மீனைத்தான் எடுத்திருப்பேன்.’ அதற்கு முதலாமவன் சொல்கிறான், ‘இப்பவும் என்ன உனக்குச் சின்ன மீன்தான் இருக்குதே. அப்புறம் என்ன?’ என்று.
இப்படித்தான் நமக்கானதை நாம்தான் (உழைத்து) ஓடிச் சென்று எடுத்துக்கொள்ள வேண்டும்; மற்றவர் நமக்கானதைத் தர வேண்டும் என எதிர்பார்த்தல் கூடாது.
நாம் என்ன நினைக்கிறோம், ‘நமக்காக மற்றவர்கள் எல்லாரும் நல்லதை நினைக்க வேண்டும்; நல்லதைச் செய்ய வேண்டும்’ என்று. முதலில் நமக்கான நல்லதை நாம் நினைக்கிறோமா என்பதுதான் கேள்வி.
இப்போதிலிருந்து, நமக்கான நல்லதை நாம் நினைக்கப் பழகுவோமே. நமக்கு என்ன வேண்டும்; எப்படி வேண்டும் எல்லாவற்றையும் நாமே சிந்திக்கப் பழகுவோமே.
(தொடரும்)
படைப்பாளர்
பிருந்தா சேது
சே.பிருந்தா (பிருந்தா சேது), கவிஞர். எழுத்தாளர். திரைக்கதை ஆசிரியர். ஹெர்ஸ்டோரீஸில் இவர் எழுதிய ’கேளடா மானிடவா’ என்ற தொடர் நல்ல வரவேற்பைப் பெற்றது. புத்தகமாகவும் வெளிவந்திருக்கிறது.