Site icon Her Stories

மூன்றாம் உலகப் போர்

                                                   

மனிதனுக்கு உணவு, உடை, உறைவிடம் இவை மூன்றும் மிக இன்றியமையாதது. அத்துடன் இன்னொன்றையும் சேர்த்துக்கொள்ள வேண்டும். அதுதான் தண்ணீர். ‘நீரின்றி அமையாது உலகு’ என்பது பொய்யாமொழிப் புலவரின் மெய்யான மொழி. மூன்றாம் உலகப்போர் ஒன்று நடந்தால் அது நிச்சயம் நீருக்காகத்தான் நடக்கும் என்று வல்லுநர்கள் கூறுகின்றனர். உயரும் வெப்பநிலை, பருவநிலை மாற்றம், காடுகளின் பரப்பளவு குறைதல், மணல் கொள்ளை போன்ற பல்வேறு காரணங்களால் நிலத்தடி நீர் வெகுவாகக் குறைந்துவிட்டது. வரும் 2040இல் மின்சாரத் தேவை 25 சதவீதம் அதிகரிக்கும். இதனால் தண்ணீரின் தேவையும் 50 சதவீதம் அதிகரிக்கும்.

 மனித உடலில் 70 சதவீதம் தண்ணீர் உள்ளது.  தண்ணீர் இல்லையெனில் நம் உடலில் உள்ள செல்கள் அழிந்து மனிதன் இறக்க நேரிடும். பூமியின் நிலப்பகுதியில் 30 சதவீதம் நீர். மீதமுள்ள 70 சதவீதம் நீர்ப்பரப்பு தான். ஆனால், இந்த 70 சதவீத நீர்ப் பரப்பளவில் 97.5 சதவீதம் கடலில் இருக்கும் உப்பு நீர். மீதியுள்ள 2.5 சதவீத அளவே நிலத்தடிநீர் உள்ளது. இதிலும் குறி்ப்பிட்ட சதவீதம் பனிக்கட்டிகளாகத்தான் இருக்கின்றன.

நீர் என்பது வெறும் நீர் மட்டுமல்ல. நாகரிகங்கள் நதிக்கரைகளிலும் ஆற்றங்கரைகளிலும் தாம் தோன்றியிருக்கின்றன. மனிதன் உணவின்றிப் பத்து நாள்கள்கூடத் தாக்குப்பிடிப்பான். ஆனால், நீரின்றி மூன்று, நான்கு நாள்களுக்கு மேல் உயிர் வாழ முடியாது. உலகம் இயங்க நீர்தான் அச்சாணி. 

விசும்பின் துளிவீழின் அல்லால் மற்று ஆங்கே

பசும்புல் தலை காண்ப அரிது

என்கிறார் திருவள்ளுவர். மழைத்துளி வந்தால் தான் சிறு பசும்புல்லாவது துளிர்க்கும் என்று நீரின் அருமையை ஈராயிரம் ஆண்டுகளுக்கு முன்னரே பதிவு செய்திருக்கிறார்.       

நீரின் அருமையை நம் முன்னோர் அறிந்திருந்த காரணத்தால் தான் சூரியனுக்கும் கால்நடைகளுக்கும் பொங்கல் விழா எடுப்பது போல நீருக்கு ‘ஆடிப்பெருக்கு’ விழா எடுத்தார்கள். நீரின் தேவையையும் அதைச் சேமித்து வைப்பதன் அருமையையும் உணர்ந்து நீர் மேலாண்மை என்னும் சிறப்பான அமைப்பைப் பின்பற்றி வந்தார்கள். பஞ்ச பூதங்களில் நீருக்கும் சிறப்பிடம் உண்டு.          

அந்தக் காலத்தில் அரசாங்கம் நீர்நிலையைப் பாதுகாக்கவில்லை. மக்களே அவரவர் வாழ்ந்த பகுதிகளில் அதற்கென ஆள்களை நியமித்து இருந்தார்கள்.

சங்ககால மக்கள் நீர் மேலாண்மைக் குழு அமைத்து மழைநீர் சேகரிப்பு, நீரைச் சிக்கனமாகப் பயன்படுத்துதல் என்று வாழ்ந்து வந்ததை சங்கப்பாடல்கள் குறிப்பிடுகின்றன. சங்ககால மக்கள் நீரைத் தடுக்க கரும்பின் கழிகளையும் மணல் மூட்டைகளையும் பயன்படுத்தியுள்ளனர். அதற்கும் கட்டுப்படாமல் நீர் மிகுந்தால் கல்லாலான தடுப்பைப் பயன்படுத்தியுள்ளனர். இது கற்சிறை, கல்லணை என்று அழைக்கப்பட்டது.

சுருங்கை என்னும் ஓர் அமைப்பைக் கொண்டு நீரைப் பங்கிட்டனர். அதாவது சுருங்கை என்பது பூமிக்கடியில் செல்லும் சிறிய நீண்ட குழாய். இதனைத் தூம்பு என்றும் அழைப்பர். யானையின் துதிக்கை போன்ற இந்தக் குழாய்கள் மூங்கில், பனைமரம் முதலியவற்றால் அமைக்கப்பட்டு அதன்மூலம் குளத்தில் நிரம்பும் உபரி நீர் வெளியேற்றப்பட்டது. குளக்கரை உடையாமல் பாதுகாக்கும் பொருட்டும், நீரைப் பங்கிட்டு அனைவருக்கும் அளிக்கவும் இன்றைய நிலத்தடிநீர் குழாய்கள்‌ போன்று அப்போது சுருங்கை அமைத்துச் செயல்பட்டனர்.          

தண்ணீர் வெளியேறும் சிறிய வழி புதவு எனப்பட்டது. மடை என்பது ஆறு, குளம், ஏரி, கால்வாய்களில் தண்ணீர் வெளியேறுவதற்காக அமைக்கப்படும் கதவு போன்ற அமைப்பாகும். மதகு என்பது மடை போன்றே அமைக்கப்படுவது. ஆனால், இதன் கதவைச் சிறுகச் சிறுகத் திறக்கலாம். வெளியேறும் தண்ணீரின் அளவைக் கூட்டவோ குறைக்கவோ முடியும். குமிழி என்பது குளங்களிலிருந்து தண்ணீர் வெளியேற கல்லால் ஆன பெட்டியொன்றை அமைத்து, அதில் துளையிட்டு, அதன் வழியாகத் தண்ணீர் புகுந்து வரும் அமைப்பு. குமிழியின் துளை வழியாகத் தண்ணீர் போகும் போது சுழல் உண்டாகும். நீர்நிலைகள் இலஞ்சி, கயம், கேணி, கோட்டகம், ஏரி, மலங்கல், மடு, ஓடை, வாவி, சலந்தரம், வட்டம், நளினி, மடு, பொய்கை, குட்டம், கிடங்கு, குளம் என்று பல பெயர்களால் உரிச்சொல் நிகண்டு வகைப்படுத்துகிறது.            

பழந்தமிழர் பெரிய கோயில்களைக் கட்டும்போது, அதில் விழும் மழை நீரை, தெப்பக் குளங்களில் சேரும் விதமாக அமைத்தனர். இது போக, குடிநீருக்கென்று தனிக் குளங்கள், மற்ற நீர் தேவைகளுக்குத் தனிக் குளங்கள் என்று, ஊருக்குள்ளும் நிறைய நீர் சேமிப்பு மையங்களை அமைத்தனர். இதன் மூலம் நிலத்தடி நீர் குறையாமல் பார்த்துக்கொண்டனர். ஆனால், இப்போது ஆழ்குழாய் கிணறுகள் அமைத்து பூமியின் கருப்பை வரை உறிஞ்சுகிறோம். மறைந்த விவசாய விஞ்ஞானி நம்மாழ்வார், நீரை வானிலிருந்து வர வையுங்கள். பூமிக்குள் தேடாதீர்கள் என்ற கருத்தை முன்மொழிந்தார். நாம் வீணாக்கும் ஒரு குவளை நீரை மீண்டும் உற்பத்தி செய்ய மேகங்கள் பெரும் பிரயத்தனம் செய்ய வேண்டும். காந்தி தனது சபர்மதி ஆசிரமத்தில் யாரும் தேவையின்றி நீரை வீணடிப்பதை விரும்பியதேயில்லை. அவரும் தனது இறுதிக் காலம் வரை அதைக் கடைப்பிடித்தார்.                  

ராஜஸ்தானில் இன்றும் குடிநீருக்கென்று திருமணங்கள் நடக்கின்றன. இந்த அவலநிலை இன்னும் எத்தனை நூற்றாண்டுகளுக்குத் தொடருமோ? இந்த அடிப்படைத் தேவைகளை எல்லாம் நிறைவேற்றாமல் டிஜிட்டல் இந்தியா என்ற கூக்குரலுக்கு எந்தவிதமான அர்த்தமும் இல்லை. இப்போதெல்லாம் நீர் இல்லை என்ற குரல்கள் எந்தளவுக்கு அதிகரித்துள்ளனவோ அதைவிடப் பன்மடங்காக நீரை வீணடிப்போரும் இருக்கின்றனர்.

இங்கு 10இல் 9 பேர் ஷவரில் குளிக்க விரும்புகிறார்கள். நம் அன்றாட தண்ணீர் செலவில் ஷவரில் குளிக்க மட்டுமே 27 சதவீதத்தை வீணாக்குகிறோம். ஒருவர் ஷவர் மூலம் ஒருமுறை குளிக்கும் தண்ணீரில், குடிசைப் பகுதியினர் ஒரு நாளுக்குப் பயன்படுத்தலாம். வெஸ்டர்ன் டாய்லெட்டில் நாம் செய்யும் ஒரு சிங்கிள் ஃப்ளஷில் 12 லிட்டர் தண்ணீர் போகிறது. நீச்சல் குளங்களில் பயன்படுத்தும் தண்ணீரை இந்தக் கணக்கில் எடுக்கவில்லை.          

உலகில் நான்கில் ஒருவருக்கு சுத்தமான நீர் கிடைப்பதில்லை. ஒவ்வொரு 20 விநாடிக்கும் சுத்தமில்லாத தண்ணீரால் ஒரு குழந்தை இறக்கிறது. ஒரு நாளைக்கு 20 லட்சம் டன் குப்பையைத் தண்ணீரில் கொட்டுகிறோம். உலக அளவில் ஆண்டுக்கு 35 லட்சம் பேர் தண்ணீர் தொடர்பான நோய்களால் இறக்கிறார்கள். இவையெல்லாம் அதிரவைக்கும் ஆராய்ச்சிக் குறிப்புகள். மணலைச் சுரண்டி ஆறுகளை எல்லாம் அழித்துவிட்டோம். நீர்நிலைகளில் கழிவுகளைக் கலந்து கெடுத்துவிட்டோம். 

அதே போல் மறைநீரும் இத்தகைய பஞ்சத்துக்குக் காரணமாக இருக்கிறது. நாம் தயாரிக்கும் ஒவ்வொரு பொருளுக்குள்ளும் மறைநீர் இருக்கிறது. புரியும்படி சொல்ல வேண்டுமெனில், ஒரு கிலோ அரிசிக்குரிய நெல்லை உற்பத்தி செய்ய 2500 முதல் 3000 லிட்டர் தண்ணீர் தேவைப்படும். ஆனால், அரிசியின் விலையில் நீரின் மதிப்பைக் கணக்கிடுவதில்லை. 1.1 டன் எடை கொண்ட ஒரு கார் உற்பத்திக்கான நீர் தேவை நான்கு லட்சம் லிட்டர்கள். ஒரு உள்ளாடை தயாரிக்கத் தேவையான மறைநீர் 2,700 லிட்டர். ஒரு ஜீன்ஸ் பேண்ட் தயாரிக்க 10,000 லிட்டர் மறைநீர் தேவை. ஆனால், இந்த மறைநீர் குறித்த விழிப்புணர்வு மக்களிடையே சுத்தமாக இல்லை. விளைநிலங்களும் நீர் ஆதாரங்களும் கண்முன்னே கொள்ளை போவது குறித்துக் கொஞ்சமும் புரிந்துகொள்ளாமல் கார் உற்பத்தி தொழிற்சாலை, அலைபேசி உற்பத்தி தொழிற்சாலை, ஆயத்த ஆடைகள் தொழிற்சாலை என்று நிறுவிக்கொண்டே போவது உண்மையான வளர்ச்சியா என்பதில் அரசாங்கம் உட்பட யாருக்கும் அக்கறையில்லை.

கொங்கு மண்டலத்தில் சாயக்கழிவுகளால் அழிந்த நொய்யல், கௌசிகா நதி போன்றவை குறித்த எந்தத் தேடலும் யாருக்கும் இல்லை. இப்படியே தொடர்ந்தால் நமக்குப் பின்னால் வரும் சந்ததிகள் தண்ணீரை அருங்காட்சியகத்தில் தான் காண நேரிடும். இளைய தலைமுறையினருக்கு நீரைச் சேமிக்கும் வழிமுறைகளையும் நீரைச் சிக்கனமாகப் பயன்படுத்துவதையும் கற்றுத் தருவோம். இனியாவது மீதமிருக்கும் நீர் ஆதாரங்களைக் காக்க முயற்சி செய்வோம்.

(தொடரும்)

படைப்பாளர்:

கனலி என்ற சுப்பு

‘தேஜஸ்’ என்ற பெயரில் பிரதிலிபி தளத்தில் கதைகள் எழுதி வருகிறார். சர்ச்சைக்குரிய கருத்துகளை எழுதவே கனலி என்ற புனைபெயரில் எழுதத் தொடங்கியிருக்கிறார்.

Exit mobile version