Site icon Her Stories

திலகம்

கனிஷ்கா கன்ஸ்ட்ரக்ஷன் உரிமையாளர் திருமிகு திலகம்

சமீபத்தில் ஒரு காணொளி பார்த்தேன். ஒரு புதுமனைப் புகுவிழா. வீட்டின் உரிமையாளர் குடும்பமும், வீட்டைக் கட்டிக் கொடுத்தவரும் பேசுகிறார்கள். “நண்பர்கள் மூலம் கேள்விப்பட்டு வீடு கட்டும் பொறுப்பைக் கொடுத்தோம். நாங்கள் எதிர்பார்த்ததற்கும் மேலாகச் செய்து கொடுத்து இருக்கிறார்கள். சொன்ன நாளுக்குள் வேலையை முடித்துக் கொடுத்து விட்டார்கள்” என உரிமையாளரின் ஒட்டுமொத்த குடும்பமும் சொல்ல, வேலையை எடுத்து நடத்தியவரோ, “அவர்கள் என்னிடம் மிகவும் அன்பாக நடந்து கொண்டார்கள். ஒப்பந்தத்தில் இல்லாத சிறு சிறு வேலைகள் சிலவற்றை, அவற்றிற்கெனத் தனியாகப் பணம் வாங்காமலேயே செய்து கொடுத்தேன்”, என்கிறார்.

வீடு கட்டுவது என்றால், பெரும்பாலும் அது சரியில்லை, இது சரியில்லை என
இருபக்கமும் குறை சொல்லுவார்கள். சிலர் சொல்லாவிட்டாலும், ஒருவர்
குறித்து மற்றவருக்கு ஒப்பந்தம் போட்ட நாளில் இருந்து வந்த உயர்வான
எண்ணம், குறைந்து கொண்டே வரும்.

சில வீடுகளில் சாவி கொடுக்கமாட்டேன்; பணம் கொடுக்க மாட்டேன் எனச் சண்டை கூட நடப்பது உண்டு. வீடு கட்டிக் கொடுத்தவர் குறித்துக் கதை கதையாய் குறை சொல்லுவார்கள். பாராட்டு வாங்குவதே பெரிய செயல்தான். அவ்வாறு பாராட்டு பெற்றவர், கனிஷ்கா கான்ஸ்டக்க்ஷன் உரிமையாளர் திருமிகு திலகம் அவர்கள். இந்த வீட்டு உரிமையாளர் சொன்னதன் பேரில், இப்போது ஆறு வீடுகளுக்கான வேலை கிடைத்திருப்பதாகத் திலகம் சொல்கிறார். இவ்வாறு ஒரு நிறுவனத்தைத் தொடங்கி நடத்தும் திலகம் அவர்கள் என்ன பொறியியல் படித்தவரா? அல்லது குடும்பத்தினர் செய்துவந்த தொழில் இவரது கைக்கு வந்ததா என்றால், அதுதான் இல்லை.

ஏறக்குறைய இருபத்தைந்து ஆண்டுகளுக்கு முன், திலகம் அவர்களின் குடும்பம் தங்களுக்கென ஒரு வீடு கட்டத் தொடங்கி இருக்கிறது. அவ்வாறு வீடு கட்டும்போது, இவர், தானே பொருள்கள் வாங்கி, ஆள்கள் வைத்து வேலை செய்து இருக்கிறார். கட்டி முடித்தபின், வீடு கட்ட எவ்வளவு ஆனது என நண்பர்கள் கேட்டபோது, இவர் சொன்ன குறைந்த தொகை குறித்து அனைவரும் வியப்பாகப் பேசியிருக்கிறார்கள். அப்போதுதான், வீடு கட்டி விற்றால், பொருளீட்டலாம் என்ற எண்ணம் திலகத்துக்கு வந்து இருக்கிறது. அந்த தொழிலில் இறங்கி விட்டார். ஓரிரு வீடுகள் வரத்தொடங்கி இருக்கின்றன.

மதுரைக்கு வழி வாயில் என்பார்கள். அது போல அவராகவே பலரை அணுகி வாய்ப்பை உருவாக்கி இருக்கிறார். சொல்லப்போனால் அவருக்கு அப்போது அந்த தொழில் குறித்து எதுவுமே தெரியாது. அவராகவே கற்று, திறம்பட நடத்தியிருக்கிறார்.

வேலை செய்யும்போது ஏமாற்றுபவர்களைக் கடிந்து இருக்கிறார். “கிணற்றிலிருந்து வெறும் வாளியை மேலே எடுத்துத் தண்ணீர் எடுப்பதாகக்கூட பாவனை செய்வார்கள்” என்கிறார். நன்றாக வேலை செய்தவருக்கு, ஒருவருக்கும் தெரியாமல் கூடுதல் பணம் கொடுப்பதாகச் சொல்கிறார். “பிற்காலத்தில் பொறியாளர்கள் 500 ரூபாய்க்கு இரண்டு மூன்று பிளான் போட்டுக் கொடுப்பார்கள். அதை வைத்து வேலைகளைச் செய்வேன்”, என்கிறார். வாஸ்து, மனையடி சாஸ்திரம் என வருபவர்களுக்கு ஈடு கொடுக்குமாறு அதையும் கற்றுக் கொண்டேன் என்கிறார்.

அடுக்குமாடிக் குடியிருப்புகள் கட்டி விற்பது எனப் பெரிய பெரிய வேலைகளை எல்லாம் எடுத்து நடத்தி இருக்கிறார். ஆனாலும் அது அவ்வளவு எளிதாக நடந்துவிடவில்லை. ஒரு பெண் எப்படிக் கட்டுமானத் தொழில் நடத்த முடியும் என உறவுகளே கேள்விக் கணைகள் தொடுத்து இருக்கின்றன. உறவினர் ஒருவர், பலர் முன்னிலையில், “ஏன் இதைச் செய்கிறாய்?” எனத் திட்டியிருக்கிறார். இவரும், அமைதியாகவே பதில் சொல்லி வந்து இருக்கிறார். “அவன் அனுமதித்ததால் தான் இதை நீ செய்கிறாய். இதற்கு நீ அவனுக்கு என்றும் நன்றிக்கடன் பட்டவள்” என அவர் இணையரைக் குறித்துப் பேசியுள்ளார். பிற்காலத்தில் அதே நபர் கொடுக்கும் பாராட்டு மழைக்கு அளவே இல்லை. “‘இப்புடி ஒரு கைவேலை தெரிஞ்ச பிள்ளை கிடைப்பதற்கு அவன் ஊசி முனை தவம் செஞ்சு இருக்கணும்’ எனச் சொல்கிறார்” என்று அவர் சொல்லும்போது சிரிப்புதான் வருகிறது.

திடீரென வேலை இல்லாத நிலையும் உருவாகிறது. அப்போது ஒரு நாள் உள்ளூர் தொலைக்காட்சி விளம்பரத்தில் ‘வீட்டுமனைகள் விற்பனைக்கு’ என வருகிறது. இவர் அவர்களை அணுகுகிறார். தொழிலுக்கு எனப் போடுவதற்குப் பணம் எதுவுமே இல்லை. ஆனாலும் இடத்தைப் பார்க்கச் செல்கிறார். அங்கே நான்கு வீடுகளுக்கு அந்த விற்பனையாளர் ஏற்கனவே அடித்தளம் போட்டு வைத்து இருக்கிறார். வீடுகள் கட்டுமானம் தொடங்கிவிட்டது என்றால், வாங்குபவர்கள் உள்ளத்தில் அது ஒரு உயர்வான எண்ணத்தை உருவாக்கும் என்பது அவரின் எண்ணம். ஆனால் அது திலகம் அவர்களின் கவனத்தைப் பெறுகிறது.

இவரிடம் படிப்பிற்கான எந்த சான்றிதழும் கிடையாது. மேலும் வங்கியில் கடன் பெறுவதாக இருந்தாலும், அவர்கள் அடித்தளம் போட்ட பின்தான்
கொடுப்பார்களாம். அதனால் அந்த இடத்தில் ஒன்றைத் தந்தால், வங்கியிலிருந்து கடன் வாங்கி உடனே அடைத்து விடுவதாக வாக்கு கொடுக்கிறார். அவரும் வெறும் ஆயிரம் ரூபாய் மட்டும் முன்பணம் கொடுத்த இவருக்கு, 1,20,000 ரூபாய் இட மதிப்பும், கூடவே அடித்தளமும் போட்ட இடத்தை எழுதிக் கொடுத்து இருக்கிறார். தட்டுங்கள் திறக்கப்படும்; முயலுங்கள் வாய்ப்பு அமையும் எனத் தான் சொல்லத் தோன்றுகிறது.

மீண்டும் தொழிலில் ஏறுமுகம். ஆனாலும் எப்போதும் தொழில் ஒரே போல
இருப்பதில்லையே? வேலை எதுவும் கிடைக்காத நிலையும் உருவாகி இருக்கிறது. சில வீடுகளில் வேலை செய்த கொத்தனார், தானே கட்டிக் கொடுப்பதாகச் சொல்லியதால், இவர் கட்டிக் கொண்டிருந்த வீடுகள் இடையில் பறிபோக, மீண்டும் வேலை இல்லாத நிலை.

எப்போதெல்லாம் வேலை இல்லையோ அப்போதெல்லாம், காணொளிகள் பார்த்துப் பார்த்துத் தையல், ஆரி வேலைப்பாடு என கற்றுத் தேர்ந்துவிட்டார். சமையல், கை வேலைப்பாடுகள், தையல், ஆரி வேலைகள் போன்றவற்றைச் செய்து கொடுப்பதுடன், கற்றும் கொடுத்துக் கொண்டிருக்கிறார். காலம் இப்படியே ஓடுகிறது.

ஒரு கண்காட்சியில் கைவினைப் பொருட்கள் அரங்கம் வைத்து இருக்கிறார். விற்பனையே அன்று ஐநூறு ரூபாய்க்குத்தான் நடந்து இருக்கிறது. ஆனால் அருகில் அரங்கம் வைத்த பெண் ஒருவர் அறிமுகமாகி, நட்பாகிறார். அவர் மூலம் கேள்விப்பட்டு இந்த வீடு கட்டும் வேலை கிடைத்திருக்கிறது. இந்த வீட்டு உரிமையாளர் மூலம் மேலும் ஆறு வீடுகள் கிடைத்து இருக்கின்றன. சிறு வேலை தானே என அன்று அரங்கம் வைக்க மறுத்து இருந்தால், இன்று இந்த வேலை கிடைத்து இருக்காது. மீண்டும் ஒரு come back கிடைத்து இருக்காது.

இப்போதும், நன்கு கற்றவர்கள் தொழில் தொடங்க வேண்டுமென்றால் எவ்வளவோ யோசிக்கிறார்கள். தன்னால் ரிஸ்க் எடுக்க முடியாது என்கிறார்கள். ஆனால் பள்ளிப்படிப்பு மட்டுமே படித்த ஒரு பெண், இவ்வாறு தொழில் தொடங்கி வெற்றிகரமாக நடத்தியதற்குத் திலகமணி அவர்களை எவ்வளவு பாராட்டினாலும் தகும். பெண்கள் இவரை முன்மாதிரியாக எடுத்துக் கொள்ளலாம். அவரது தொழில் சிறக்க நாமும் வாழ்த்துவோம்.

படைப்பாளர்

பாரதி திலகர்

தீவிர வாசிப்பாளர், பயணக் காதலர்; தொன்மை மேல் பெரும் ஆர்வம் கொண்டவர். அயல்நாட்டில் வசித்து வந்தாலும் மண்ணின் வாசம் மறவாமல் கட்டுரைகள் எழுதிவருகிறார். ஹெர் ஸ்டோரிஸில் இவர் எழுதிய கட்டுரைகள், ‘பூப்பறிக்க வருகிறோம்’ என்கிற புத்தகமாக, ஹெர் ஸ்டோரிஸில் வெளிவந்திருக்கிறது. ஹெர் ஸ்டோரிஸில் இவர் தொடராக எழுதிய விளையாட்டு பற்றிய கட்டுரைகள் ‘தமிழர் பாரம்பரிய விளையாட்டுகள்’ என்ற பெயரில் நூலாகவும், சினிமா கட்டுரைகள் ‘சினிமாவுக்கு வாரீகளா?’ என்ற பெயரில் நூலாகவும் ஹெர் ஸ்டோரிஸ் வெளியிட்டுள்ளது.

Exit mobile version