பொதுவாக ஓர் ஊரிலிருந்து மற்றோர் ஊருக்குச் செல்வது பயணமாகக் கருதப்படுகிறது. ரமாதேவி நமக்குச் சொல்லும் பயணக் கதையோ அடுக்களையிலிருந்து உலகத்தின் சக்திவாய்ந்த அமைப்புகளில் ஒன்றான ஐ.நா. சபை சென்றதை! சாயங்கால வேளையில் எழுத்தாளரின் அருகே திண்ணையில் அமர்ந்து, மென்மையான தென்றலின் அரவணைப்போடு, அவர் சொல்லச் சொல்ல ‘உம்’ கொட்டிச் சிரித்து, அவித்த வேர்க்கடலை சாப்பிட்டுக்கொண்டே கேட்பதுபோல் அமைந்துள்ளது எழுத்து நடையும் மொழிநடையும். சொல்லப்பட்ட விதம் மட்டும்தான் எளிமை, அதில் அடங்கியிருப்பதோ மிகப் பெரிய சாதனை!
2014 ஆம் ஆண்டு ஐ.நா. பொது அவை கூடுகையிலும் அதைத் தொடர்ந்து ஏழு பேர் உரையாடும் பேனலிலும் ஆசிரியர் சங்கப் பிரதிநிதியாக ரமாதேவி பங்கேற்றுள்ளார். 15 ஆண்டு காலம் தொடக்கப் பள்ளி ஆசிரியர் கூட்டணியில் அங்கம் வகித்து, இயக்கத்திற்காகப் பல போராட்டங்களில் பங்கேற்றுள்ளார். அதன் விளைவாக ஆறு, ஏழு முறை ‘மாமியார் வீட்டுக்கு விசிட்’ அடித்திருக்கிறார். விரைவிலேயே ஆசிரியர் சங்கத்தின் முழு நேர ஊழியராகத் தன்னை நிலைநிறுத்திக் கொண்டுவிட்டார். இவற்றை எல்லாம் சென்னை போன்ற பெரு நகரத்தில் உட்கார்ந்துகொண்டு இவர் செய்யவில்லை. தமிழகத்தின் எங்கோ ஒரு மூலையில் ‘ஏ ஃபார் ஆப்பிள்’ சொல்லிக்கொண்டே சாதித்துள்ளார். வாழ்க்கையில் நேரிடும் ‘சில பல’ சவால்களையும் அநாயசமாகக் கடந்து சென்று, ஆச்சரியமளிக்கிறார் ரமாதேவி.
அடுக்களை டூ ஐ.நா. புத்தகத்தில் என்னை மிகவும் ஈர்த்த விஷயம் ஆங்காங்கே அடைப்புக்குறிக்குள் ரமாதேவி புகுத்தியிருக்கும் கருத்துகள். பயணக் கதை போகும் வேகத்தில் தடை ஏற்படாமல் அதே நேரத்தில், தான் நினைப்பதை நாசூக்காகச் சொல்லும் விதமாக இந்த யுக்தி எழுத்தாளரால் திறம்பட கையாளப்பட்டிருக்கிறது. நேரடியாகச் சொல்லவிரும்பவில்லை எனினும் சொல்லாமலும் கடந்து செல்வது நியாயம் இல்லை என்கிற தொனியில் அரசியல், பெண்ணியம், கலாச்சாரம், அரசு இயந்திரம், நகைச்சுவை… எல்லாம் இதில் அடக்கம். அடைப்புக்குறியைப் புத்தகத்தின் பக்கங்களில் கண்டவுடனே ஓர் எதிர்ப்பார்ப்பு தொற்றிக்கொள்கிறது.
“இந்தத் தக்கார் இலக்குகளின் வெளிப்பாடாகத்தான் இந்தியாவில் சர்வ சிக்ஷா அபியான் (SSA) என்கிற மகா திட்டம் தொடங்கப்பட்டது. உலக வங்கியிடம் இருந்து பணம் கொட்ட, மத்திய அரசும் மாநில அரசும் தன் பங்குக்கு நிதி ஒதுக்க ‘சாக பொழைக்கக்’ கிடந்த பல அரசுப் பள்ளிக் கட்டிடங்களுக்கு அதற்குப் பிறகுதான் உயிர் வந்தது. (கட்டிடங்கள் வந்தது சரி, கல்வித்தரம் வந்ததா என்ற கேள்வி எல்லாம் உங்க மனசுல வரப்படாது, சரியா?)
இப்படி நம்மைச் சிரிக்கவும் சிந்திக்கவும் இந்தப் பயணக்கதை. கல்வித்துறை சார் உலகளாவிய தகவல்களை இந்த எளிய புத்தகம் தூக்கிச் சுமக்கிறது. இத்தகைய தகவல்களை நாம் பெரும்பாலும் ஆராய்ச்சிக் கட்டுரைகளிலும் செய்தித்தாள் தலையங்கங்களிலும் பார்த்துப் பழகியிருப்போம்.
இந்தியப் பள்ளிகளில் அதிக பெண் ஆசிரியர்கள் இருக்கும் மாநிலங்களின் பட்டியலில் தமிழகம் இரண்டாம் இடத்தில் இருக்கிறது; தமிழ்நாட்டு ஆசிரியர்களின் எண்ணிக்கை 2000ஆம்ஆண்டில் வரையறுக்கப்பட்ட ஐநாவின் MDG கான (Millennium Development Goals) முடிவுகள்; டென்மார்க்கில் 200ஆண்டுகளுக்கு முன்னரே வந்துவிட்ட கட்டாயக் கல்வித் திட்டம்; லெனாபி என்கிற மன்ஹாட்டன் ஊரின் பூர்வகுடிகள்… என்று நமக்குப் புது தகவல்கள் பயணத்தினூடே குவிந்த வண்ணம் இருக்கின்றன.
ரமாதேவி தன்னை யார் என்று காண்பிப்பதில் சிறிதளவும் தயக்கமில்லாமல் புத்தகம் முழுவதும் தன்னுடைய கருத்து, கதை, கண்ணோட்டம் வழியாக வெளிச்சம் போட்டு, தெளிவாகக் காட்டியிருக்கிறார். விமானப் பயணத்திலும் அமெரிக்க தேசத்திலும் அவர் பார்த்த புதுமைகள், சந்தித்த மக்கள், பெற்ற அனுபவங்கள் என எல்லாவற்றையும் வர்ணித்துச் சொல்லும் ஒப்புமைகள், மேற்கோள்கள் அனைத்திலும் தாய்மண் வாசனை வீரியம் குறையாமல் திகழ்கிறது. இதன் வழியாக நம் புரிதலில் ஒரு நெருக்கம் ஏற்படுகிறது. 193 நாட்டுத் தலைவர்கள் பங்கேற்கும் ஐ.நா. பொது அவை நடக்கவிருக்கும் கட்டிடம் அருகே நின்று, “இதோட மதிப்பு தெரியாமல் ஏதோ வீரபாண்டி திருவிழாவில் குச்சிமிட்டாயும் குருவிரொட்டியும் வாங்கிட்டு, ராட்டினம் சுத்திட்டு வர்றதுக்குப் போற மாதிரி நெனச்சுட்டேனே… கஷ்டப்பட்டு வாங்கிய விசாவுக்கும் போராடி வாங்கிய அரசு அனுமதிக்கும் ஒரு ‘வேல்யூ’ இருக்கதான் செய்யுது என மனசு இப்போதுதான் சமாதானம் ஆகுது. சந்தோஷத்தில் விசில் அடித்து குதிக்கணும் போல இருந்தது ஆனால், ‘ஆதிவாசி அடக்கி வாசி’ என்று உள்ளே ஒரு குரல் கேட்கவும் அடங்கி வெளியே நடக்கும் களேபரங்களை வேடிக்கை பார்க்க ஆரம்பித்தேன்” என்று தான் நினைத்ததைச் சொல்கிறார்.
அதேபோல் ஜான் எஃப் கென்னடி விமான நிலையத்தில் ரமாதேவியின் பெட்டி தீவிர சோதனைக்கு உள்ளாக்கப்பட்டதை, “ஒரு வாரமாகப் பார்த்துப் பார்த்து அடுக்கி வைத்த சூட்கேஸ் மாடு புகுந்த கம்பங்கொல்லை ஆனது” என்று குறிப்பிடுகிறார். இந்த மொழி நடை, கையாண்ட ஒப்புமைகள் எல்லாம் வாசகர்களுக்கு ரமாதேவி என்கிற பெண்ணின் அபார தன்னம்பிக்கையின் வெளிப்பாடாக இருக்கிறது. எல்லா அனுபவங்களையும்தான் தனக்கு நியமித்து கொண்ட விதிகளின் வழியே (in her own terms) தைரியமாகப் பார்க்கும் ஒரு சாதனைப் பெண்ணாக மலர்கிறார் எழுத்தாளர்.
இப்படி ஒளிவு மறைவில்லாமல் இருக்கும் எழுத்தாளருக்கு ஐ.நா.வில் கேள்வி நேரத்தில் இந்தியாவில் பெண் கல்வி குறித்த கேள்வி எழுப்பப்படுகிறது.
“அதுவரை யோசிச்சி யோசிச்சு பேசி அவளுக்கு இந்தக் கேள்வியைக் கேட்டதும் கொடுக்கப்பட்ட வழிகாட்டல்கள் எல்லாம் மறந்து போச்சு – குடும்பப் பொறுப்பு, வீட்டு வேலை, தம்பி தங்கை பராமரிப்பு, கழிவறை உள்ளிட்ட உள்கட்டமைப்பு வசதிகள் இன்மை, வறுமை குழந்தைத் திருமணம், சாதியப் பாகுபாடு, பெண்கள் மீதான இறுக்கமான சமுதாய கட்டமைப்பு, பெண் கல்வியில் அக்கறை இல்லாத பெற்றோர், பெண்களை இரண்டாம் இடத்தில் வைத்துப் பார்க்கும் மனோபாவம், பெண் கல்விக்குச் செலவழிக்கும் பணம் என நினைக்கும் பொதுபுத்தி, மண்ணில் இந்தக் காதல் இன்றி எஸ்பிபி போல மூச்சு விடாமல் நான் காரணங்களை அடுக்க… ஒரு நிமிஷம் அமைதியோ அமைதி.”
புத்தகத்தின் வலிமை இதுதான். தடைகளைத் தாண்டிய பயணம் இது.
பள்ளி, கல்லூரி மாணவர்கள்கூட இந்தப் புத்தகத்தை வாசிக்கலாம், சிரிக்கலாம், சிந்திக்கலாம், செயல்படலாம்.
படைப்பாளர்:
ரோடா அலெக்ஸ். புத்தக வடிவமைப்பு கலைஞர். தமிழ் நிலப்பரப்பு மற்றும் அதற்கு அப்பால் உள்ள கிறிஸ்தவத்தின் வெளிப்பாடுகளை அறிவதில் ஆர்வம் உள்ளவர். மக்கள் குழுக்களுக்கு இடையேயான தொடர்பு, இணையான கலாச்சாரங்கள் மற்றும் கலை வெளிப்பாடுகள் பற்றிய வாசிப்பிலும் ஆராய்ச்சிகளிலும் ஆர்வம். கவனிப்பு, மொழிகள், வடிவமைப்பு மற்றும் ஒளிப்படம் எடுத்தல் ஆகியவற்றில் விருப்பம் அதிகம். ஏறக்குறைய 25 ஆண்டுகளாக ஞாயிற்றுக்கிழமை பள்ளி ஆசிரியராகக் குழந்தைகளுடன் பணிபுரிந்தும் வருகிறார்.