Site icon Her Stories

பார்ப்பனக் கடைநிலையிலிருந்து ஒரு குரல்

பார்ப்பனக் கடைநிலை ஊழியர்கள்…

இப்படிப் பெயர் சொன்னாலும், இவர்களுடைய பணிகள் மிகவும் இன்றியமையாதவையாகவே இருக்கும். பொதுவாக எல்லா துறைகளிலும் இருப்பது போல பார்ப்பன வைதீகர்களிலும் இப்படிப்பட்ட கடைநிலை ஊழியர்கள் உண்டு.

‘விவாகம்’ (மணம்), ‘உபநயனம்’ (பூணூல் தரித்தல்) போன்ற சுப நிகழ்ச்சிகளாகட்டும், ‘அபர கர்மாக்கள்’ (இறுதிச்சடங்கு) போன்ற அசுப நிகழ்வுகளாகட்டும், இவற்றை செய்து வைக்க நன்கு வேதம் படித்து, வைதீக வாத்தியார்களாக இருப்பவர்களுக்கு உதவியாளர்களாக சிலர் இருப்பர். அவர்களெல்லாம் முழுமையாக வேதம் பயின்றவர்களாக இருக்கமாட்டார்கள். ஏதோ அங்கே கொஞ்சம் இங்கே கொஞ்சம் கற்று வைத்திருப்பார்கள். இவர்களெல்லாம் குடும்ப உறவுகள் மத்தியில் /சமூகத்தில் நல்ல அந்தஸ்தில், மதிப்புடன் இருப்பவர்கள்.

அடுத்ததாக மந்திரம் எதுவுமே தெரியாமல் இருந்தாலும்கூட, ‘பிராம்மணார்த்தம்’ (ஸ்ரார்த்த/திவசங்களில் பித்ருவாக, விஷ்ணுவாக வரித்து) சாப்பிடுவதை அவர்களுடைய முக்கிய தொழிலாக கொண்டிருப்பார்கள். ஸ்மார்த்தர்களில் ‘சபிண்டி பார்ப்பனர்'(சவுண்டி பார்ப்பனர்) என ஒதுக்கப்பட்ட ஒரு சிலர் இதற்கென்று பிரத்தியேகமாக உண்டு. சுமாராக மந்திரங்கள் கற்றவர்கள், பார்ப்பனர் அல்லாதவர்களுக்கு புரோகிதம் செய்துவைப்பார்கள். (வைதீகர்களுக்கு இருக்கும் மரியாதையும் வருமானமும் இவர்களுக்கு கிடைக்காது)

quora.com

அடுத்ததாக, இறந்தவர்களுக்கு செய்யப்படும் இறுதி சடங்கில் (சபிண்டிகரணத்தன்று) பனிரெண்டாம் நாளில் தானங்கள் கொடுப்பது வழக்கம். அதில்கூட தங்கம், வெள்ளி போன்ற முக்கிய தானங்கள் உறவினர்களுக்குள்ளேயே கொடுக்கப்பட்டுவிடும். அவற்றைத் தவிர குடை, மட்டை தேங்காய், செருப்பு போல சில தானங்களையும், அரிசி வாழைக்காய் அடங்கிய ‘ஷோடசம்’ எனப்படும் பதினாறு தானங்களையும் வாங்கிக்கொள்ள சிலரை அழைத்து வருவார்கள் (கூடவே சிறு தொகையும் இருக்கும்). அவர்கள் பெரும்பாலும் நவீன கல்வியோ, வேதமோ பயின்றவர்களாக இருக்கமாட்டார்கள் (இவர்களைப் பொருளாதார நிலையில் மிகவும் பின் தங்கிய பார்ப்பனர்கள் என்று சொல்லலாம்).

அன்றைய தினத்தில் தானம் வாங்க கும்பலாக அவர்கள் காத்துக்கொண்டிருப்பதைப் பார்க்கவே பரிதாபமாக இருக்கும். இப்பொழுதெல்லாம் பிரேதங்களை எடுத்துச்செல்ல அமரர் ஊர்திகள் புழக்கத்தில் வந்துவிட்டன. சில வருடங்களுக்கு முன்பு வரை, வீட்டிலிருந்து சுடுகாடு எவ்வளவு தூரத்திலிருந்தாலும் பிரேதத்தை தோளில்தான் தூக்கிச்செல்வார்கள்.

பிழைக்க வழியே இல்லாமல், பார்ப்பனப் பிணம் தூக்குவதையே முழுநேர தொழிலாகச் செய்த பார்ப்பனர்கள் ஏராளம் உண்டு. ஒரு வேளை உணவுக்கும் பிள்ளைகளைப் படிக்கவைக்கவுமே இதையெல்லாம் செய்தார்கள்.

இவர்களைப் போன்றவர்களின் சேவை கட்டாயம் எல்லா பார்ப்பனர்களுக்கும் தேவையாகவே இருந்தது, இருக்கிறது. ஆனாலும் இதுபோன்ற தொழில்களில் ஈடுபடுபவர்களுக்கும் அவர்களுடைய மனைவி மக்களுக்கும், சமூகத்திலும் சரி உறவினர் மத்தியிலும் சரி, மரியாதை என்பது சிறிதளவும் கிடைக்காது. இன்னும் சொல்லப்போனால் சாதாரண நாள்களில் இவர்களை வீட்டுக்குள் நுழையக்கூட விடமாட்டார்கள். அதுவும் திருமணம் என்று வரும்பொழுது, அவர்கள் பெற்ற பிள்ளைகள் – குறிப்பாக பெண்கள், தீண்டத்தகாதவர்களாகவே பார்க்கப்பட்டார்கள். இப்பொழுது பார்ப்பன சாதியில் பெண்களுக்கு ஏற்பட்டிருக்கும் தேவை காரணமாக, இந்த நிலை கொஞ்சம் மாறியிருக்கிறது.

இது மொத்தமும் ஆண்கள் சார்ந்த தளம். இங்கே (பார்ப்பன) பெண்களுக்கு வேலையே இல்லை. அடுத்ததாக சமையல் தொழிலிலும்கூட பெண்கள் ஈடுபடுவதில்லை (வீட்டு சமையலைக் குறிப்பிடவில்லை). ஐயர்களில் மட்டும் திவச சமையல் செய்ய பெண்களை நியமிக்கிறார்கள். மற்றபடி ஐயங்காரில் (paid cook) பெண் சமையல்காரர்களை அனுமதிப்பதில்லை. ஆனால் பெண்கள் கடை நிலை ஊழியர்களாக மட்டும் வேலை செய்ய பயன்படுத்தப்படுவார்கள்.

அதாவது கல்யாண வீடுகளில் கோலம் போட, சாப்பிட்ட எச்சில் இலை எடுத்து சுத்தம் செய்ய, பாத்திரம் தேய்க்க… இதுபோன்ற வேலைகளுக்கெல்லாம் ‘மாமிகள் வேண்டும்’, என்று கேட்பார்கள்.

பார்ப்பனர் அல்லாத குலத்தவர்களில் ஒரு பெண் சுமங்கலியாக இறந்து போனால், அவர்களுடைய காரியம் செய்யும் தினத்தில் ஒரு புது முறத்தில் வெற்றிலை பாக்கு தட்சணையுடன் ஒரு புடவை வைத்து சுமங்கலியாக இருக்கும் ஒரு மாமியை அழைத்துக் கொடுப்பார்கள். இதை வாங்கவென்றே ஏராளமான பெண்கள் இங்கே உண்டு. இவர்களை ‘குளத்தங்கரை வேலைக்கு போகும் மாமிகள்’ எனக் குறிப்பிடுவதுண்டு. பெரும்பாலும் கணவன் இருந்தும் இல்லாத நிலையில் இருப்பவர்கள், கணவரைப் பிரிந்தவர்கள், (குளத்தங்கரை வேலை தவிர) விதவைகள் போன்றோர்தான் பிழைப்புக்காக, பிள்ளை குட்டிகளைக் காப்பாற்றவென இந்த வழிகளைத் தேர்ந்தெடுப்பது… பாலியல் தொந்தரவுகள் உள்பட பல இன்னல்களை சகித்துக்கொண்டுதான் இவர்களெல்லாம் இதில் ஈடுபடுகிறார்கள் என்று சொன்னால் அது மிகையில்லை.

wikipedia

இவர்களைப் போன்றவர்களை மனிதப் பிறவிகளாகக்கூட யாரும் இங்கே மதிப்பதில்லை என்பதே உண்மை. இன்னும் ஆழமாக சொல்லப்போனால், பெண்களே இந்தப் பெண்கள் பக்கம் நிற்பதில்லை. கணவரை இழந்த பார்ப்பன விதவைகள் தங்கள் உடல் உழைப்பைக் கொட்டி குடும்பங்களை வளப்படுத்தவில்லையா? அவர்களது உழைப்பை இலவசமாக உறிஞ்சிக்கொண்டே பாலியல் கொடுமைகளைச் செய்த குடும்ப ஆண்களையே எதிர்த்துக் கேள்வி கேட்கத் துணியாதவர்கள்தானே இவர்கள்? ஒரு வேளை அப்படியான கைம்பெண்கள் கருத்தரித்தால், ‘பாம்பு கடித்து’ செத்துப் போனதை இயல்பாக வேடிக்கை பார்த்து நகர்ந்த பெண்கள்தானே இவர்கள்? தம் குலப் பெண்களைப் பற்றியே எண்ணிப்பார்க்காதவர்களா பொதுவாக பெண்களின் பிரச்னைகளை உணரப்போகிறார்கள்? இதெல்லாம் இங்கே யார் கண்களிலும் படுவதில்லையா?

இன்று இசைத்துறையில் கோலோச்சிக் கொண்டிற்கும் பெண்கள் பலரும் (சொல்லப்போனால் அனைவருமே) எலைட் பார்ப்பன சமூகத்தைச் சேர்ந்தவர்களே. மேலே குறிப்பிட்ட அடிமட்ட நிலையில் உள்ள பெண்கள் யாருக்கும் இதுபோன்ற கலைகள் வசப்படுவதில்லை. அடிப்படை கல்விக்கே ததிங்கிணத்தோம் போடும்போது, மாதாமாதம் செலவு செய்து கலைகளைக் கற்பது எங்கிருந்து? “டீ, என்ன இருந்தாலும் நீ நம்ம கொழந்த, வா உனக்கு இலவசமா சங்கீதம்/பரதம் கத்துக் கொடுக்கறேன்”, என இந்த எலைட் பார்ப்பனர்கள் யாரும் சொல்வதில்லை.

ஊர் முழுக்க அங்காங்கே இசை/பரதப் பள்ளிகள் முளைத்துவிட்டன. இதற்குப் பின் ஒரு பெரிய வியாபாரமே இருக்கிறது. இதெல்லாம் யார் பேசுகிறார்கள்? பரதம் கற்பவர்கள் பெரும்பாலும் பெண்களே. ஐந்து வயது தொடங்கினால் போதும், எதாவது ஒரு குருவிடம் போய் அவர்களை இசை/பரத வகுப்பில் சேர்த்துவிடுகின்றனர். மாதாமாதம் பணம் கட்டி பரதம் பயின்றால் மட்டும் போதாது. ஒரு பெரிய தொகையை செலவிட்டு சலங்கை பூஜை செய்யவேண்டும்! ஐந்து ஆறு வருடங்களுக்கு மேல் முழுவதும் கற்றுத் தேர்ந்த பிறகு, அரங்கேற்றம் செய்யவேண்டும். தற்கால பெற்றோர்களுக்கு, குறிப்பாக அம்மாக்களுக்கு இதில் அப்படி ஒரு போதை.

ஒரு கல்யாணத்துக்கு ஆகும் செலவுக்கு ஈடாக இதற்கெல்லாம் செலவாகும் என்பது இங்கே குறிப்பிடத் தக்கது. இவற்றுக்கெல்லாம் காசு, பணம், துட்டு, மணி வேண்டும். இப்படி பணத்தைக் கொட்டிக் கொட்டிக் கொடுத்து, ஒவ்வொரு குருவிடமும் நூற்றுக்கணக்கில் பரதம் / இசை பயிலுகிறார்கள். இவர்களில் எவ்வளவு பேர் பரிமளிக்கின்றனர்? விரல் விட்டு எண்ணும் அளவுக்குக்கூட இல்லை.

வெளியில் இருந்து பார்க்கும்போதே இவ்வளவு ஓட்டைகள் தெரிகிறதென்றால், இதற்குள்ளேயே ஊறிப்போய் கிடக்கும் ஒளிபொருந்திய ரஞ்சனி, காயத்ரி, சுதா ரகுநாதன் போன்றோருக்கு இதெல்லாம் தெரியாதா என்ன?

இப்பொழுது திரு T.M.கிருஷ்ணா அவர்களுக்கு மியூசிக் அகடமியின் பெருமைமிகு விருதான சங்கீத கலாநிதி விருது அறிவிக்கப்பட்டதிலிருந்து, அதை மூர்க்கமாக எதிர்க்கும் இவர்களெல்லாம், 2018ஆம் ஆண்டு மீ டூ சர்ச்சையில் சில ‘சங்கீத கலாநிதி, சங்கீத சூடாமணி, சங்கீத சிரோமணி’கள் சிக்கிய பொழுது, ‘ஈயம் பூசுனா மாதிரியும் இருக்கனும்; பூசாத மாதிரியும் இருக்கனும்’ என்பது போல பட்டும் படாமலும் ஒதுங்கிக் கொண்டார்களே! அது ஏன்?

பாதிக்கப்பட்ட பெண்களுக்காக இப்படிப்பட்ட மேதகு பெண்கள் யாரும் உணர்ச்சிவசப்படாதபோது, அங்கே பெண்களுக்காக குரல் கொடுத்தவர் T.M.கிருஷ்ணா. பெண்களுக்காகவும், சாமானியர்களுக்காகவும் குரல் கொடுக்கும் T.M.கிருஷ்ணாவுக்கு அதரவாக நிற்கவில்லை என்றால் கூட விட்டுவிடலாம், ஆனால் சமயம் பார்த்து இவர்கள் இப்படி கொந்தளிப்பது, ஆணாதிக்கத்தின் குரலாக அல்லவா ஒலிக்கிறது? காத்திருந்து பழி தீர்ப்பது போன்றல்லவா தோன்றுகிறது? ஒரு குறிப்பிட்ட சமூகத்தைச் சார்ந்த, குரல் கொடுத்தால் ஓங்கி ஒலிக்கும் இடத்தில் நின்றுகொண்டு ஒரு சிலர் செய்யும் இதுபோன்ற அபச்சாரங்கள், அதே சமூகத்தில் வாழும் அனைவரின் அடையாளமாகத் திகழ்கிறது என்பதே, சபிக்கப்பட்ட நிலை அல்லவா?

‘பார்ப்பனப் பெண்களே இப்படித்தான்!’ என திரும்பத் திரும்ப முத்திரைக் குத்தப்படுவதே, இவர்களைப்போன்ற ஆணாதிக்க புத்தியில் ஊறிப்போன பெண்களால்தானே?

மேலே குறிப்பிடப் பட்டிருக்கும் பெண்களும் அடிமட்டத்தில் உள்ள பார்ப்பனப் பெண்கள்தான். இவர்களுக்கு பிழைப்பைத் தேடி ஓடிக் கொண்டிருக்க மட்டுமே தெரியும். சுயமாக சிந்திக்கக்கூட நேரம் இருக்காது. எல்லோராலும் கொண்டாடப்படும் நிலையில் உள்ள புகழின் உச்சாணிக் கொம்பில் உட்கார்ந்திருக்கும் இவர்கள் இப்படிப் பேசப் பேச, இவர்களைப் போன்றோர் பேசுவதே வேத வாக்கு என்றுதான் சாமானியர் எல்லோருக்கும் தோன்றும். உண்மையில் இதில் சங்கடத்துக்கு உள்ளாவோர் யார் என்றால் T.M.கிருஷ்ணா போல உள்ளே இருந்துகொண்டே, இங்கே உள்ள குற்றம் குறைகளைச் சாடும், மாற்றத்துக்காகக் காத்திருக்கும், இப்பொழுது இதை எழுதி கொண்டிருக்கும் என்னைப் போன்ற சாமானியர்களே!

முகாந்தரமே இல்லாமல் இவர்கள் அளந்துவிடுவதை ஒரு சிலராவது சாடாமல் போனால், ‘இதெல்லாம் உண்மையில் புனிதமானது; தெய்வீகமானது; கர்பத்திலிருந்து வரவேண்டியதுதான்’ என இவர்களைப் போன்றவர்கள் மீண்டும் மீண்டும் சொல்லிக்கொண்டே இருப்பார்கள், பொது சமூகமும் இதையெல்லாம் நம்பிக் கொண்டே இருக்கும்

Exit mobile version