Site icon Her Stories

பலி

தவு மெள்ளத் திறந்தது. மாலை வெயிலின் குறைந்த வெளிச்சத்தில் அந்தச் சிறிய உருவம் அறைக்குள்ளே வருவது தெரிந்தது.

“ம்மா …”

லலிதாவின் ஒன்றரை வயது மகன் கோபி, தூங்கிக்கொண்டிருந்தவன் விழித்துவிட்டான் போல. ராஜு பதறி எழப் போனான். லலிதா அவனைத் தன்னோடு இறுக்கி அணைத்துக்கொண்டு, அமைதியாக இருக்கும்படி கிசுகிசுத்தாள்.

குழந்தையின் கண்களுக்கு அறையின் இருட்டு பழகுவதற்குள் வெகு வேகமாக உடை அணிந்தாள்.

”கோபுக் குட்டி முழிச்சிருச்சா… சாப்பிட என்ன வேணுமாம்” என்று கொஞ்சிக்கொண்டே அவனைத் தூக்கிக்கொண்டு அறையை விட்டு வெளியேற முயல்கையில், கோபி, ”ராஜு மாமாட்ட போதேன்” என்றான்.

”ராஜு மாமாவா… ராஜு மாமா எங்க… ராஜு மாமா இல்லையே… ராஜு மாமா காணம்… சூ…” என்று அவனைத் தூக்கிக்கொண்டு சுழற்றினாள். அறையின் வாசல் இட வலமாய் மாறுவதற்குள் ராஜு மாயமானான்.

ஆமாம். ராஜு மாமாவைக் காணோம்.

குழந்தை அவளிடமிருந்து இறங்கி, கட்டிலில் ஏறி தலைகாணியைத் தூக்கிக் கீழே பார்த்து ”ராஜு மாமா காணம்” என்றது. 

லலிதா பாலை ஆற்றி எடுத்துக்கொண்டு ஹாலுக்குக் கோபியோடு வர, அங்கே ராஜு சோபாவில் அமர்ந்திருந்தான். கோபி அவன் மடியில் ஏறி அமர்ந்துகொள்ள, லலிதாவிடமிருந்து பாலை வாங்கி, அவனுக்கு அருந்தத் தந்தான்.

லலிதா அவன் தோளோடு சாய்ந்து அமர்ந்து அவனது கையைத் தனதோடு கோர்த்துக்கொண்டாள்.

வாசலருகில் யாரோ வருவதுபோல நிழலுருவம் தெரிந்தது. சட்டென விலகினார்கள்.

சுனந்தா!

லலிதாவின் கணவன் சபரிகிரிவாசனது அலுவலகத்தில், ராஜுவோடு கூட வேலை செய்பவள். அலுவலகம் வீட்டிலிருந்து இன்னும் இரண்டு கட்டிடங்கள் தள்ளி அதே தெருவில்தான். வீட்டு மாடியிலிருந்து கூப்பிட்டால்கூட கேட்கும் தூரம்தான்.

இவள் எதற்கு இந்த நேரத்தில் இங்கே வந்திருக்கிறாள்.

”நான்சென்ஸ்… பெல்’லடிச்சிட்டு உள்ள வரணும்னுகூடவா தெரியாது. கதவு திறந்திருந்தா எதோ வர்றாப்ல வந்துற வேண்டியது.”

சுனந்தாவின் முகம் இருண்டது.

“ஸாரி மேடம். எல்லாரும் கிளம்பிட்டாங்க. எம்டி சார் மில்லுல இருந்து வர லேட் ஆகும்னு சொன்னாங்க. ராஜு சார் வேற ரொம்ப நேரமா வரலை. அதான் நான் ஆபிஸைப் பூட்டிட்டு, கீ கொடுக்க வந்தேன். ஸாரி மேடம்” என்று உடைந்த குரலில் சொன்னாள். அழுதுவிடுவாள் போல இருந்தது.

டீபாயில் சாவிக் கொத்தை வைத்துவிட்டுச் சென்றாள்.

வெளியே கார் கதவை மூடும் சத்தம் கேட்டது.

சபரிகிரிவாசன் ஏதோ கேட்பதும் அதற்கு சுனந்தா ஏதோ பதில் சொல்வதும் தெளிவில்லாமல் கேட்டது.

களைத்த முகத்துடன் சபரிகிரிவாசன் உள்ளே வந்தான்.

அவனைப் பார்த்ததும் ராஜு எழப் பார்க்க, ”‘நீயேன் எந்திரிக்கிற? ஒம் பாஸ் வந்துட்டார்னா… ஒக்காரு” என்று சொல்லிவிட்டு, கணவனைப் பார்த்து, உச்சஸ்தாயியில் கத்த ஆரம்பித்தாள். ”காலைல இருந்து நான் ஒண்டியா கைக்குழந்தையோட ஓரியாடிக்கிட்டு இருக்கேன். நீ சீக்கிரம் வந்தா என்ன? உன்னைய நம்பித்தானே எங்க அப்பா, அம்மா, வீடு எல்லாத்தையும் விட்டுட்டு வந்தேன். வந்ததுக்கு நல்லா பாத்துக்கற.”

சபரிகிரிவாசன் மென்சிரிப்போடு, அவள் பக்கத்தில் வந்து அணைத்துக்கொண்டான். ”மில்லுல ஒர்க்கர்ஸ் ப்ராப்ளம் பத்தி உன்கிட்ட சொன்னேன்தானே. போதாக் குறைக்கு ஹெவி ட்ராஃபிக் வேற. க்ளட்ச் மிதிச்சு மிதிச்சு காலெல்லாம் வலிக்குது. பசிக்குதுடா. சாப்பிட எதாச்சும் இருக்கா?”

”ம்ஹும். தினத்துக்கும் இப்படி ஏதாவது காரணம் சொல்லு. ஏதோ ராஜு அப்பப்ப வந்து பாத்துக்கறனால எம்பொழப்பு ஓடுது. இல்லன்னா என்ன ஆகுறது… ம்? சாப்பிட எதும் இல்ல. இனிமேதான் செய்யணும்.”

‘நல்லதா போச்சு. அப்ப சாப்பிட வெளில போலாமா? அப்பாடா, இப்பதான் மகாராணி முகத்துல சிரிப்பே வருது.”

இருவரும் உடை மாற்ற படுக்கை அறைக்குச் செல்ல, ராஜு குழந்தைக்கு முகம் கழுவி உடை மாற்றி, தானும் தயாரானான்.

சபரிகிரிவாசன் பாத்ரூமில் இருந்து முகத்தை டவலால் துடைத்தபடி அறைக்குள் வந்தவன், மூக்கை உறிஞ்சினான்.

”என்னடா நம்ம ரூம்ல ராஜுவுடைய பெர்ப்யூம் வாசம் அடிக்குது?”

”ஆமா, நீ வர்றதுக்கு கொஞ்சம் முன்னாடிதான் ரெண்டுபேரும் கட்டில்ல கட்டிப் பொரண்டுட்டு இருந்தோம். அதான்.”

”டேய் செல்லம், பாத்துடா அவன் காதுல விழப் போவுது.”

”விழட்டும், உன் லச்சணம் தெரியட்டும்.”

இவள் எப்போதும் இப்படித்தான். எதையும் நயமாகச் சொல்லத் தெரியாது. எதையும் மனதில் வைத்துக்கொள்ளத் தெரியாது. கத்துவாளே தவிர, குழந்தை மாதிரி.

இரு வீட்டார்களின் எத்தனையோ எதிர்ப்பை மீறித்தான் இருவரும் திருமணம் செய்துகொண்டார்கள். அப்போதிருந்து இவளுக்கு எல்லாமே இவன்தான். அவளைக் குழந்தை மாதிரிதான் பார்த்துக்கொண்டான். அவளும் குழந்தைதான். கொஞ்சம் கோபக்காரக் குழந்தை.

முதலிரவில் எவ்வளவோ எதிர்பார்ப்புகளோடு அவன் கிட்டே நெருங்க, பளிச்’சென்று ஓர் அறை விட்டாள். அவன் அதிர்ச்சியில் உறைந்து போனான். கொலை செய்ய வந்தவனிடம் தற்காத்துக்கொள்வது மாதிரி அடித்துத் தாக்கினாள்.

மறுநாள் காலையில் எதுவுமே நடக்காதது போல, சகஜமாகப் பேசினாள். ஆனால், இரவில் வேறாக இருந்தாள். மிகுந்த யோசனைக்குப் பிறகு அவளை மனநல மருத்துவரிடம் அழைத்துப் போனான். மனநல மருத்துவரின் அறிவுறுத்தலில், அவளோடு நிறையப் பேசினான். பேசிப் பேசி புரியவைத்தான். எப்போதும் அவளுக்குத் தான் இருப்பதை உணர வைத்தான். அவளும் மெள்ள மெள்ள சமாதானம் கொண்டாள். பின்னும்கூட அவர்களுள் நிகழ்ந்த கலவி என்பது கிட்டத்தட்ட வன்புணர்வு போலத்தான். அதற்காக அவன் மன்னிப்பு கேட்க, தான் மனதளவில் குணமாக நீண்ட காலம் எடுப்பதால், இது வேறெப்படியும் நடந்திருக்க முடியாது என்றாள். ஆனால் அதற்கான குற்றவுணர்வு அவனுக்கு இன்னமும் உண்டு.

எல்லா விதத்திலும் ரொம்பக் கஷ்டப்பட்ட குழந்தைப் பருவம் அவளுடையது. ஒன்று, சின்ன வயதில் அவளுக்கு நடந்த கொடுமைகள். கேட்கும்போதே கலங்கினான்.

இன்னொன்று அவளுடைய வறுமை. அது பற்றியும் அவள் நிறைய சொல்லி இருக்கிறாள். இருக்கும் நான்கே சேலைகளுக்கு எட்டு ப்ளவுஸ் தைத்து மாற்றி மாற்றி அணிந்து கல்லூரிக்குச் சென்றதை, மதியம் எப்போதும் தயிர்சாதம் என்பதால் மரத்தடியில் தனியாக அமர்ந்து சாப்பிட்டதை, தன் ஏழ்மை வெளி ஆட்களுக்குத் தெரியாமல் பார்த்துக்கொண்டதை.

இவனைத் திருமணம் செய்த பிறகுதான், வயிறார நல்ல உணவு உண்பதாகச் சொல்லியிருக்கிறாள். இப்போது அவளுக்கு நான்கு ஆளுயர பீரோக்கள் நிறைய உடைகள் இருக்கின்றன. கடற்கரையோர ஒய்வு பங்களா அவள் பெயரில்தான் இருக்கிறது.

இவன் நகரத்தை விட்டுத் தூரத்தில் இருந்த தனது மில்லுக்கு நகரின் பிரதான தெருவில் அலுவலகம் அமைக்க முடிவு செய்தபோது, முதன் முதலில் இவள்தான் காரியதரிசியாக வந்தாள். வேலைகளைக் கனகச்சிதமாகச் செய்வாள்.

இவனோடு திருமணம், திருமணத்திற்குப் பிறகு அவள் வேலைக்கு வரப்போவதில்லை என்று முடிவெடுத்ததும், காரியதரிசி வேலைக்கு வேறொருவரை அமர்த்த முடிவு செய்தனர்.

காரியதரிசி வேலைக்கு முதலில் இவன் தேர்ந்தெடுத்த ஶ்ரீகலாவைப் பார்த்ததும் ‘இவள் சரிவர மாட்டாள்’ என்று லலிதா ஒரே பார்வையில் சொல்லிவிட்டாள். ஆனால், வேறு யாருக்கும் ஶ்ரீகலா அளவிற்குப் படிப்பும் திறமையும் இல்லாததால், பிடிவாதமாக அவளையே வேலைக்கு அமர்த்தினான். ஒரு மாதம்கூட ஆகியிருக்கவில்லை. அவளது நடவடிக்கைகள் இவனுக்குக் கடும் எரிச்சலைத் தந்தன. சினிமாக்களில் வருவதுபோல, முதலாளியை மயக்கும் காரியதரிசியாக நடந்துகொள்ள ஆரம்பித்தாள். உடனடியாகக் கண்டித்து, வேலையை விட்டு அனுப்பினான்.

பிறகு லலிதா தானே நேர்காணல் செய்து ராஜு’வைத் தேர்ந்தெடுத்தாள். அருமையான பையன். விசுவாசி. இப்படியொருவன் கிடைக்கக் கொடுத்து வைத்திருக்க வேண்டும். அலுவலகத்திற்குத் திறமையான காரியதரிசி மட்டுமல்ல; வீட்டிலும் எல்லா வேலைகளிலும் சகலாமாயிருந்தான். இவனும் அவனை ஒரு கூடப்பிறக்காத சகோதரனாகத் தோழமையுடன் நடத்தினான்.

ராஜுவுடையது, வாழ்ந்து கெட்ட குடும்பம் என்பார்களே அப்படி. ராஜுவின் தாத்தா ஒரு காலத்தில் ஜமீன்தாராக இருந்தவர். நிறைய சொத்து, நிலபுலன்கள். எல்லாவற்றையும் வேலைக்குப் போகாமல், ராஜுவின் அப்பா குடித்தே அழிக்க, இப்போது இவன் வேலைக்குச் சென்றுதான் குடும்பம் மொத்தத்தையும் காப்பாற்ற வேண்டிய கட்டாயம். ராஜுவுக்கு இரண்டு தங்கைகள், ஒரு தம்பி. அவர்கள் படிப்புச் செலவு மொத்தமும் சபரிகிரிவாசனே ஏற்றுக்கொண்டான்.

அது நகரத்தின் மிகப் பெரிய ரெஸ்டாரென்ட். ஒருநாளின் மொத்தக் களைப்பையும் போக்கிவிடும் வண்ணம் மெலிதான இசை, கண்களுக்கு இதமான வெளிச்சம், கையசைப்பில் வரக் காத்திருக்கும் பேரர்கள் என அது ஒரு சொர்க்கம். லலிதாவுக்கு இந்த இடம் அவ்வளவு பிடிக்கும். அவளுக்கு ஏதாவது மூட்அவுட் என்றால், சபரிகிரிவாசன் அவளை முதலில் இங்கேதான் அழைத்து வருவான். கொஞ்ச நேரத்திலேயே கலகலப்பாகி விடுவாள்.

கோபி ஹைசேரில் அமர்ந்திருக்க, ராஜு அவனுக்கு ஊட்டிவிட்டான். உண்மையில் கோபி அப்பாவிடம் ஒருவாய், அம்மாவிடம் ஒருவாய், ராஜு மாமாவிடம் ஒருவாய் என எல்லாரையும் ஊட்ட வைத்துக் கொண்டிருந்தான். அப்படித்தான் எல்லார் தட்டிலிருந்த ஒவ்வொரு பதார்த்தத்தையும் சுவை பார்த்துக்கொண்டிருந்தான்.

திடீரென்று கோபி ‘சுச்சு’ போக வேண்டுமென்றான். அவனை ராஜு அழைத்துச் சென்றான். அதற்கும்கூட கோபி முறை வைத்திருப்பான். அப்பாதான் கூட்டிச் செல்ல வேண்டுமென்றால் அப்பாதான் போக வேண்டும். அம்மாதான் உடை மாற்றிவிட வேண்டும் என்றால் அம்மாதான் செய்ய வேண்டும். ஓர் இளவரசன் போல வளர்கிறான். அவர்கள் போவதையே சபரிகிரிவாசன் பெருமிதத்துடன் பார்த்துக்கொண்டிருந்தான்.

”என்னவாம் அவளுக்கு?”

”யாருக்கு?”

சாப்பிட்டுக்கொண்டிருந்தவன் லலிதாவைப் புரியாமல் பார்த்தான்.

”அதான் சுனந்தா. நீ வீட்டுக்கு வரும்போது, ஏதோ உன்னிடம் கேட்டில் வைத்துப் பேசிக் கொண்டிருந்தாளே?”

”ஓ, அதுவா. இன்னைக்கு ஆபீஸ் ஒர்க் பத்தி எல்லாம் சொன்னா. நான் ஒரு ரிபோர்ட் ரெடி பண்ணச் சொல்லியிருந்தேன். அதெல்லாம் அப்டேட் பண்ணினாள். ஏண்டா?”

”இல்ல, அவள பத்தி என்ன நினைக்கிற?”

சுனந்தா அலுவலகத்திற்கு சைக்கிளில் வரும்போதும் போகும்போது சபரிகிரிவாசன் பார்த்திருக்கிறான். இடது பக்க சேலை விலகல் கூட யாரும் பார்த்துவிடக் கூடாது என்று தன் கைகளை இறுக்கி இடுக்கி கொண்டு சைக்கிளை ஓட்டி செல்வாள். அலுவலகத்தில் யாரிடமும் அதிகம் பேசமாட்டாள். தானுண்டு, தன் வேலையுண்டு என்றிருப்பாள்.

”ம்… நல்ல ஒர்க்கர். சின்சியரா வேலை செய்வாள். கொஞ்சம் சூட்சமம் பத்தாது; அது கொஞ்சம் எக்ஸ்பீரியன்ஸ் வர வர சரியாயிடும்.”

”இல்ல. அந்தப் பொண்ணு நடவடிக்கை ஒண்ணும் சரியாயில்லை. ராஜுவோட அவளை சினிமா தியேட்டர்ல, மால்ல அப்படி இப்படினு ரெண்டு மூணு தரம் பார்த்ததா என் ப்ரெண்டு லதா சொன்னாள். ராஜுவும் அவளும் இங்க நம்ம வீட்டுக்கு வேலை செய்றதா ஆபிஸ்ல சொல்லிட்டு, வெளில சுத்துறாங்கன்னு நினைக்கிறேன். லீவு நாள்ல அவுங்க எங்க போனா என்ன நாம சொல்லப் போறோம்? அது அவங்க பர்செனல். ஆனா, ஆபிஸ் நேரத்துல வெளிய சுத்துனா, ஏதாவது ஆக்சிடெண்ட் அப்படி இப்படின்னு ஆச்சுன்னா, நாமதான் பதில் சொல்லணும். இருக்குற பிரச்னைகள்ல இதெல்லாம் நமக்குத் தேவையில்லாத தலைவலி. இது என்னவோ எனக்குச் சரியாப் படல.”

சபரிகிரிவாசன் தீவிர யோசனையில் ஆழ்ந்தான்.

லலிதாவின் கணிப்பு ஒருபோதும் தவறியதில்லை. அவள் பார்த்துப் பார்த்துத் தேர்ந்தெடுத்த சுனந்தாவையும் ராஜுவையும் பற்றி அவளே சொல்கிறாள் எனில், நிச்சயம் அதைப் பொருட்படுத்தித்தான் ஆக வேண்டும்.

மறுநாள் காலை சுனந்தா வேலை நீக்கம் செய்யப்பட்டிருந்தாள். அவளது வேலையையும் சேர்த்து ராஜு செய்துகொண்டிருந்தான்.

படைப்பாளர்

பிருந்தா சேது

சே.பிருந்தா (பிருந்தா சேது), கவிஞர். எழுத்தாளர். திரைக்கதை ஆசிரியர். ஹெர்ஸ்டோரீஸில் இவர் எழுதிய ’கேளடா மானிடவா’ என்ற தொடர் நல்ல வரவேற்பைப் பெற்றது. கேளடா மானிடவா, கடல், அருவி முதல் அயலி வரை, கதவு திறந்ததும் கடல், அப்புறம் என்பது எப்போதும் இல்லை, வாழ்க்கை வாழ்வதற்கே ஆகிய நூல்கள் ஹெர் ஸ்டோரிஸ் வெளியீடுகளாக வந்துள்ளன.

Exit mobile version