Site icon Her Stories

தாயமும், பாண்டியாட்டமும் தெரிஞ்சுக்கோங்க…

பண்டைய விளையாட்டுகள் – 3

தாயம்

தாயம் என்பது இருவர் முதல் நால்வர் குழு வரை, தரையில் அமர்ந்து விளையாடும் விளையாட்டு. ஏதாவது மர நிழலில்  தாயக்கட்டத்தை சாக்பீஸ் அல்லது கரித்துண்டு கொண்டு வரைந்து, காய்களுக்காக அருகில் கிடைக்கும் சிறு கற்கள், ஈக்கு குச்சிகள் என உடனடி உபகரணங்கள் கொண்டு விளையாடுவதுண்டு. சோழிக்கு இருக்கவே இருக்கிறது புளியங்கொட்டை. புளியங்கொட்டையை ஒரு பக்கம் மட்டும் தரையில் உரசினால் அப்பகுதியின் தோல் வெளியேறி வெள்ளை நிறமாக தெரியும். அதை சோழியாகப் பயன்படுத்தலாம்.

பொதுவாக வீடுகளில் தாயம் விளையாடுவதற்குத் தேவையான பொருள்களை, ஓட்டுக் கூரையில் சொருகி வைத்திருப்பார்கள். அட்டையில் அல்லது மரப்பலகையில் தாயக்கட்டம் வரைந்து வைத்திருப்பார்கள். மேலும் தேவையான பொருட்கள், சக்கரம் போன்ற வட்ட வடிவமான சோழிகள் ஆறு, (எங்கள் ஊரில் சோவி) மற்றும் ஒவ்வொருவருக்கும்  தேவையான பன்னிரண்டு காய்கள்.

நாங்கள் காய்களை நாய்கள் எனச் சொல்வதுண்டு. பொதுவாக உடைந்த கண்ணாடி வளையல்களை கால்/ அரை இன்ச் அளவிற்கு உடைத்து வைத்து பயன்படுத்துவோம். எத்தனை பேர் விளையாடுகிறோமோ அத்தனை வண்ணத்தில் பன்னிரண்டு வளையல் துண்டுகள் வைத்துக் கொள்வோம். அதிகபட்சம் நான்கு குழு விளையாடலாம். பகடைக் காய் எனப்படும் dice நாங்கள் பயன்படுத்துவதில்லை. ஏனென்றால் அதில் எண்கள் விழுவதற்கான நிகழ்தகவு (Probability) ஒரே மாதிரியாக இருக்கும். ஆனால் சோழியில் ஒன்று விழுவது சிரமம். எது எது சிரமமோ, அந்த எண் விழுந்தால் இன்னும் ஒரு முறை ஆடும் வாய்ப்பைக் கொடுக்கலாம். இதெல்லாம் பகடைக் காய் பயன்படுத்தும் போது சரிவராது.

தாயக்கட்டம் ஏழு சதுரத்திற்கு ஏழு சதுரம் என்பதாக வரைய வேண்டும். நாம் எடுக்கும் காய்களின் அளவைப் பொறுத்து எண்ணிக்கையைப் பொறுத்து பெரிதாக/ சிறிதாக சதுரங்களை வரைந்து கொள்ளலாம். நாங்கள் பொதுவாக 2 ½ – 3 இன்ச் அளவில் வரைந்து கொள்வோம். நடுவில் இருக்கும் சதுரம் பழம். அதை அடைவதுதான் விளையாட்டு. 

பெருக்கல் குறியிட்ட சதுரங்கள், கட்டங்கள் என்று அழைக்கப்படும். வெளிச்சுற்றளவில் மொத்தம் ஏழு சதுரங்கள் வரும். அவற்றின் நடு சதுரங்கள் நான்கும், கட்டங்கள் ஆகும். வெளிச் சுற்றளவின் கட்டங்களில் இருந்து விளையாட்டைத் தொடங்கலாம். உள்சுற்றளவின் நான்கு மூலையிலும் உள்ள சதுரங்களும் கட்டங்கள் ஆகும். இவ்வாறான கட்டங்களில் இருக்கும் காய்களை வெட்ட முடியாது. கட்டங்களில் மட்டும் எத்தனை காய் வேண்டுமானாலும் இருக்கலாம். மற்ற சதுரங்களில் நேரத்துக்கு ஒரே ஒரு காய்தான் இருக்க முடியும். இரண்டாவது வரும் காய், ஏற்கனவே இருக்கும் காயை வெட்டிவிட்டு அதில் உட்கார்ந்து கொள்ளும். 

ஆடுபவர்களுக்கு தலா பன்னிரண்டு காய்கள். சோழிகளின் அனைத்து வெள்ளைப் பக்கங்களும் மேல்நோக்கி இருந்தால் ஆறு; ஐந்து மேல்நோக்கி இருந்தால், ஐந்து; நான்கு இருந்தால் நான்கு; மூன்று இருந்தால் மூன்று; இரண்டு இருந்தால் இரண்டு; ஒன்று இருந்தால் தாயம். அனைத்து வெள்ளைப் பக்கங்களும் கீழ்நோக்கி இருந்தால் பன்னிரண்டு.

கையால் சோழிகளைக் குலுக்கிப் போட்டால், அனுபவசாலிகள், தாங்கள் விரும்பும் எண்ணைப் போட்டு விடுவார்கள். அதனால், சிறு ஓலைப் பெட்டி பயன்படுத்துவார்கள். அதற்குக் கிலுக்காம்பெட்டி (குலுக்கிப் போடுவதற்கான பெட்டி) என்று பெயர். தேவை இல்லாமல் பேசுபவர்களைச், சிரிப்பவர்களை ‘கிலுக்காம்பெட்டி’ என பெரியவர்கள் கேலியாகச் சொல்வார்கள்.

கிலுக்காம்பெட்டி

தாயம் அல்லது ஐந்து போட்டால் காயை உள்ளே இறக்கலாம். இரண்டையும் அடுத்தடுத்துப் போட்டால், அனைத்து காய்களையும் ஒரு சேர இறக்கலாம். வெட்டுப்பட்ட காயை, மீண்டும் உள்ளே கொண்டு வரவும் இதே விதிமுறைதான். 1, 5, 6, 12 விழுந்தால் இன்னொரு முறை குலுக்கிப்போட வாய்ப்பு உண்டு. மற்றவர் காயை வெட்டினாலும் இன்னொரு முறை வாய்ப்பு உண்டு.  

ஒரு முறையேனும் யாரையாவது வெட்டவில்லை என்றால், இரண்டாவது, மூன்றாவது உள்சுற்றுகளுக்குள் நுழைய முடியாது. வெளி சுற்றளவில் மட்டுமே சுற்றிக் கொண்டிருக்க வேண்டியதுதான். இதற்காக தனது பல காய்களையும் இழுத்து வைத்து, பல காய்களை வெட்டுக் கொடுத்து, ஒரு வெட்டாவது வாங்க முயற்சி செய்ய வேண்டும்.

இருவர் மட்டும் ஆடும் ஆட்டத்தில், ஒருவர், தனது அனைத்துக் காய்களையும், வெட்டு கொடுக்காமலேயே உள்ளே இரண்டாவது சுற்றுக்குள், கொண்டு போய் விட்டால், அதோடு அவர் வெற்றி பெற்றவராக கருதப் பட்டு ஆட்டம் முடிந்து விடும். இரண்டுக்கும் மேல் ஆடுபவர்கள் இருந்தால், மற்ற இருவரும் உள்ளே போனாலும், ஒருவர் மற்றவர் காயை வெட்டி வெளியே வருவார்கள். இதனால் வெளியே இருப்பவர்களுக்கு வாய்ப்பு கிடைக்கும்.

வெட்டு இருக்கும் போது, கவனிக்காமல், வேறு காயைத் தொட்டு, போட்டியாளர், தொட்ட கை நட்டம் எனச் சொல்லி விட்டால், எந்த காயை நாம் தொட்டோமோ, அதைதான் அளக்க வேண்டும். நிறைய பேர் சேர்ந்து தாய்ச்சி கூட்டி (team) விளையாடலாம். அவ்வாறு விளையாடும் போது அளக்கப் போவது யார் என முன்கூட்டியே தீர்மானித்து விடவேண்டும். வேறு யாரும் தொடக்கூடாது. தவறுதலாக அளந்து விட்டால், கூட்டணியில் இருப்பவர்கள் தாறுமாறாக சண்டைக்கு செல்வார்கள். 

எங்கள் வீட்டு அருகில் இருக்கும் கோவில் சாவடியில், தாயம் விளையாட்டிற்கான உபகரணங்கள் எப்போதும் இருக்கும். பகலில் பெண்கள் எப்போதும் விளையாடிக் கொண்டு இருப்பார்கள். மதியத்திற்கும் மேல், பெருங்கூட்டமாகக் கூடி விளையாடுவார்கள். தாயம் விளையாடுவது எப்படி என்ற காணொலிக் காட்சி இங்கே…

 தட்டுப்போட்டு (பாண்டி) ஆட்டம்

பாண்டி ஆட்டம் என வேறு இடங்களில் சொல்லப்படும் விளையாட்டு ‘தட்டு போட்டு’ விளையாட்டு என சொல்லப்படுகிறது. நாங்கள் அதை மூன்று விதமாக விளையாடுவோம். எப்படி விளையாடுவது என காணொலிக் காட்சி இங்கே காணலாம்.

  1. சம்கித்கா 

இந்த விளையாட்டில் கபடியில் மூச்சு விடாமல் ‘கபடி கபடி’ எனச் சொல்வது போல, ‘சம்கித் கித் கித்’ ….என சொல்லிக் கொண்டே இருக்கவேண்டும்.

மூன்று செவ்வகங்கள் வரைந்து, நடுவில் கோடு போட்டால் ஆறு கட்டங்கள் கிடைக்கும். அதுதான் ஆடுகளம். இடது புறத்தில் இருந்து ஒவ்வொரு கட்டமாக விளையாட வேண்டும். நாம் எந்த கட்டத்தை விளையாடுகிறோமோ, அதனுள் நமது காயை வீசி எறியவேண்டும். ஓட்டுச்சில் அதாவது பழைய பானையில் இருந்து உடைந்த துண்டை பொதுவாக நாங்கள் காயக பயன்படுத்துவோம்.

ஒரு காலை மடக்கி, இன்னொரு காலால் நொண்டி அடித்துக் கொண்டே (எங்கள் பகுதியில் கிந்தி அடித்தல்) சென்று, ஓட்டுச்சில் எந்த கட்டத்தில் இருக்கிறதோ அதற்கு முந்தைய கட்டத்தில் நின்று அந்த ஓட்டுத்துண்டை எடுத்துக் கொண்டு வந்த வழியே திரும்பி வர வேண்டும்.  ஓட்டுத்துண்டை வீசி ஏறிந்த நேரத்தில் இருந்து, திரும்பி வந்து சேரும் வரை ‘சம்கித் கித் கித் ….’ என சொல்லிக் கொண்டே வரவேண்டும். இடையில் நிறுத்திவிட்டால், ஆட்டம் அடுத்தவர் கைக்குச் சென்றுவிடும். 

இவ்வாறு அனைத்துக் (ஆறு) கட்டங்களிலும் விளையாடிய பிறகு, ஓட்டுச்சில்லை ஆடுகளத்தின் முன் பக்கம் இருந்து பின் பக்கம் வீச வேண்டும். கண்களை மூடிக்கொண்டே, முதல் செவ்வகத்தில் உள்ள இரு சதுர கட்டங்களிலும் கால்களைப் பரப்பி வைத்து ரைட்டா (சரியா) என கேட்க வேண்டும். நாம் எந்த கோட்டிலும் கால் வைக்காமல், கட்டத்திற்குள் வைத்திருந்தால், போட்டியாளர் ரைட்டு என்பார். கோட்டில் கால் வைத்திருந்தால், முள்ளை மிதித்து விட்டோம் என வெளியேறி விட வேண்டும். இல்லையென்றால் அடுத்த கட்டத்திற்குத் தொடரலாம். மூன்று கட்டத்தையும் தாண்டி ஓட்டுச்சில்லை எடுத்து விட்டால் பழம். அதற்கு அடையாளமாக ஆடுகளத்தின் சதுரத்தை ஒட்டி நாம் ஒரு சிறு சக்கை வரைந்து கொள்ளலாம். சக்கை என்பது, காலால், 360 டிகிரியும் சுற்றி வரையும் ஒரு சக்கரம். ஆடும் போது, அந்த சக்கையில் இளைப்பாறிக் கொள்ளலாம். அப்போது சம்கித் கித் கித் ….சொல்ல வேண்டிய தேவை இல்லை. இவ்வாறு யார் அதிக இளைப்பாறும் சக்கை வைத்திருக்கிறார்களோ அவர்கள் வெற்றி பெற்றவர்கள்.

2. செறுக்கி விளையாடும் முறை 

இந்த ஆட்டத்தில், மூன்று செவ்வகங்கள் வரைந்தால், அது தான் ஆடுகளம். 

முதலில், ஓட்டுச்சீல்லை ஆடுகளத்தின் முன் பக்கம் இருந்து பின் பக்கம் வீச வேண்டும். பின் நொண்டியடித்தவாறே மூன்று கட்டங்களையும் கடந்து, ஓட்டுச்சீல்லை மிதித்து அதை அங்கிருந்து ஆடுகளத்தின் முன் பக்கம் காலால் நகர்த்தி வீசி, (செறுக்குதல் என நாங்கள் சொல்லுவோம்.) மீண்டும் மூன்று கட்டங்களையும் திரும்ப கடந்து வர வேண்டும். அதாவது, போகும்போது, ஒன்று, இரண்டு, மூன்று என்ற வரிசையில் சென்றால், வரும்போது, மூன்று, இரண்டு, ஒன்று என வர வேண்டி இருக்கும். 

பின் ஓட்டுச்சீல்லை ஆடுகளத்தின் முன் பக்கம் இருந்து மூன்றாவது கட்டத்தில், வீச வேண்டும். பின் நொண்டியடித்தவாறே இரண்டு கட்டங்களையும் கடந்து, மூன்றாவது கட்டத்தில் உள்ள ஓட்டுச்சில்லை மிதித்து அதை அங்கிருந்து ஆடுகளத்தின் முன் பக்கம் காலால் நகர்த்தி வீசி, மீண்டும் இரண்டு கட்டங்களையும் திரும்ப கடந்து வர வேண்டும். இவ்வாறு இரண்டாவது, முதல் கட்டங்களுக்கும் செய்ய வேண்டும். 

பின் ஆடுகளத்தின் முன் பக்கம் இருந்து, அடுத்த கட்ட விளையாட்டைத் தொடங்க வேண்டும். முதலில், உள்ளங்கையில் ஓட்டுச்சில்லை வைத்துக் கொண்டு, நொண்டி அடித்தவாறே ஆடுகளத்தின்பின் பக்கம் வர வேண்டும். பின், அங்கிருந்து, முன் பக்கம், ஓட்டுச்சில்லை வீச வேண்டும்.   பின் நொண்டியடித்தவாறே மூன்று கட்டங்களையும் கடந்து, ஓட்டுச்சீல்லை மிதித்துத் தொட வேண்டும்.

இதே மாதிரி, ஓட்டுச்சில்லைக் கையின் பின்பகுதியில், கை விரலிடுக்கில் (பீடி மாதிரி), கையை மடக்கி முட்டியில், முழங்கையில், தலையில் (அரிசி பெட்டி தலையில் வைப்பது போல), கால் விரலிடுக்கில், கால் பாதத்தின் மேல் என உடலின் பல பாகங்களில் வைத்து விளையாடவேண்டும்.

இவ்வாறு விளையாடிய பிறகு, ஓட்டுச்சில்லை ஆடுகளத்தின் முன்பக்கம் இருந்து பின்பக்கம் வீசவேண்டும். கண்களை மூடிக்கொண்டே, முதல் செவ்வகத்தில் கால்களை வைத்து, ‘ரைட்டா’ (சரியா) எனக் கேட்கவேண்டும். நாம் எந்த கோட்டிலும் கால் வைக்காமல், கட்டத்திற்குள் வைத்திருந்தால், போட்டியாளர் ‘ரைட்டு’ என்பார். கோட்டில் கால் வைத்திருந்தால், முள்ளை மிதித்துவிட்டோம் என வெளியேறிவிட வேண்டும். இல்லையென்றால் அடுத்த கட்டத்திற்குத் தொடரலாம். மூன்று கட்டத்தையும் தாண்டி ஓட்டுச்சில்லை எடுத்து விட்டால் பழம். அதற்கு அடையாளமாக ஆடுகளத்தின் சதுரத்தை ஒட்டி நாம் ஒரு சிறு சக்கை வரைந்து கொள்ளலாம். ஆடும்போது, அந்த சக்கையில் இளைப்பாறிக் கொள்ளலாம். இவ்வாறு யார் அதிக இளைப்பாறும் சக்கை வைத்திருக்கிறார்களோ அவர்கள் வெற்றி பெற்றவர்கள்.

இடையில் எந்த இடத்தில், தவறு செய்கிறோமோ அப்போது, ஆட்டம் அடுத்தவர் கைக்கு சென்றுவிடும். 

3. ஆயிரம் கால் தட்டு 

ஒரு பெரிய சதுரம், அதன் நடுவில் இன்னொரு சதுரம் வரைய வேண்டும். பின் இரு சதுரங்களையும் இணைத்து நான்கு கோடு போடவேண்டும். இப்போது நடுவில் ஒரு சதுரமும், அதை சுற்றி நான்கு நாற்கரங்களும் கிடைக்கும். இதில் நடு கட்டம் விளையாடினால், 1,000;  புள்ளிகள். முன் கட்டம் என்றால் 100 புள்ளிகள்; பின் கட்டம் என்றால் 900 புள்ளிகள்; இரு புறமும் உள்ள கட்டங்கள் என்றால் 500/ 500 புள்ளிகள்.

ஓட்டுச்சில்லை ஆடுகளத்தின் முன்பக்கம் குறிப்பிட்ட தூரத்தில் இருந்து வீச வேண்டும். எந்த கட்டத்தில் விழுகிறதோ அதற்குத் தகுந்தாற் போல் புள்ளிகள். பின் நொண்டியடித்தவாறே ஓட்டுச்சில்லை மிதித்து அதை வெளிப்பக்கம் காலால் நகர்த்தி வீசி, மிதிக்க வேண்டும்.

1,000 புள்ளிகள் ஒரு பழம். பழம் எடுத்தால், வெளி சதுரத்தின் வெளிப்பக்க மூலையில் சக்கை போட்டுக் கொள்ளலாம். அதில் மிதித்து இளைப்பாறி ஓட்டுச்சில்லை மிதிக்கலாம்.

தொடரும்…

கட்டுரையின் முந்தைய பகுதியை வாசிக்க:

Exit mobile version