Site icon Her Stories

அமாவாசையும் அலட்டலும்

சூரியனின் ஒளியைப் பெற்று நிலவின் ஒளியாகப் பிரதிபலிக்கிறது. பூமி, சூரியன், நிலா ஆகிய மூன்றும் ஒரே நேர்க்கோட்டில் வரும்போது,  நிலா பூமிக்கும் சூரியனுக்கும் இடையில் வரும்போது, பூமியை நோக்கியுள்ள பகுதியில் வெளிச்சம் இருக்காது. அதன் மறுபக்கத்தில்தான் வெளிச்சம் இருக்கும். இது அமாவாசை. பூமி, சூரியன், நிலா ஆகிய மூன்றும் ஒரே நேர்க்கோட்டில் வரும்போது, நிலாவுக்கும் சூரியனுக்கும் இடையில் பூமி வரும்போது முழுமையான வெளிச்சம் பூமியை நோக்கி தெரியும். இது பெளர்ணமி.

அமாவாசை , பௌர்ணமி நாட்களிலும் பூமியின் மீது நிலவின் ஈர்ப்பு விசை இருப்பதாகவும் அதனால் கடலில் அலைகள் அதிகமாக உயரும், இதை கடல் ஏற்றம் என்பார்கள். இந்தச் சுற்று 15 நாட்களுக்கு ஒருமுறை பௌர்ணமி மீண்டும் 15 நாட்களுக்குப் பிறகு அமாவாசை என்று நிகழ்கிறது.

என் அப்பத்தாவின் அப்பா, ’பனசைக்கிழார்’ என்கிற புனைபெயரில் மரபுக் கவிதைகள் எழுதிய எங்கள் தாத்தா இயற்கையுடன் இணைந்து வாழ வேண்டும் என்று எங்களுக்குக் கற்றுக் கொடுத்தவர். அவர் திதி கொடுப்பது போன்ற எந்தச் சம்பிரதாயங்களையும் செய்ததில்லை. அவரிடம் ஆசி வேண்டினால் நான் வழங்கும் ஆசியினால் ஒன்றும் ஆகாது. உங்களது உழைப்பும் புத்திசாலித்தனமும்தான் உங்களை உயர்த்தும் என்று கூறுவார்.

எங்கள் ஐயா, (அப்பாவின் அப்பா)  அவர்களின் அப்பா, அம்மா, அண்ணன், மனைவியின் அம்மா, அப்பா, இறந்து போன மகள் என்று அனைவரின் திதி அன்றும் அவர்களை நினைத்து விளக்கேற்றி கும்பிட்டுவிட்டு , ஊறவைத்த பச்சரிசியில் எள், வாழைப்பழம் கலந்து பசுமாட்டுக்கு கொடுத்துவிட்டு வருவார். எங்கள் அப்பாவும் எந்தச் சம்பிரதாயங்களும் செய்ததில்லை.

இன்று மக்கள் ஐயர் வைத்து திதி கொடுத்தால்தான் குடும்பத்திற்கு நல்லது என்று திதி கொடுக்கப் படையெடுக்கிறார்கள். ஒரு சமூகத்தினரை உயர்த்தி மற்ற அனைவரும் அவர்களுக்குக் கீழே என்கிற மனநிலை வளர்கிறது. பெண்களின் நிலை மிகவும் மோசம். வீட்டில் இருக்கும் ஆண்கள் விரதம் இருப்பார்கள். விரதம் என்பது ஜீரண மண்டலத்திற்கு ஓய்வு கொடுத்து நீர் ஆகாரங்கள் எடுத்துக்கொள்வது. ஆனால், இந்த விரதம் தலைகீழ். வடை, பாயசத்துடன் தடபுடலாகத் தயாராகும். ஆண்கள் விரதம் என்பதால் உப்பு, காரம் சரியாக இருக்கிறதா என்று சுவைத்துப்

 பார்க்காமல் சமைக்க வேண்டும். ருசியும் குறையக் கூடாது. மேலும் பெண்களுக்கு மாதவிலக்காக இருந்தால் சமைக்கக் கூடாது. அதனால் விரத நாட்களில் மாதவிலக்கு ஆகாமல் இருப்பதற்காக நான்கு நாட்களுக்கு முன்பிருந்தே கவனித்து மாத்திரைகள் எடுத்துக் கொள்வார்கள். அடிக்கடி மாத்திரைகள் எடுத்துக் கொள்வதால் வரும் உடல் நலச் கோளாறுகள் வேறு படுத்தி எடுக்கும்.

நேற்று வரை தான் சாப்பிட்ட தட்டையே எச்சில் என்று சொல்லி வாழையிலையில்தான் சாப்பிடுவார்கள். 

பசுமாட்டுக்கு அகத்திக்கீரை கொடுத்தால் நல்லது என்று ஒரே நாளில் அனைவரும் அகத்திக்கீரையைக் கொடுத்து சாலையெங்கும் சிதறிக் கிடக்கும் கீரைகள். மாடுகளின் மைண்ட் வாய்ஸ். இது வயிறா, குப்பைக் கிடங்கா? ’நாளைக்குப் பசிச்சா ஒருத்தனும் தர மாட்டான்.’

நம் முன்னோர்கள் நமக்கு விட்டுச் சென்ற நல்ல நினைவுகளை, நமக்குச் சொன்ன நல்ல அறிவுரைகளை நினைத்து அதன்படி நடப்பதுதான் அவர்களுக்கு நாம் செலுத்தும் நன்றி. அதைவிட்டு  திதி கொடுக்காவிட்டால் குடும்பத்திற்கு ஆகாது என்கிற எண்ணம் பரப்பப்படுகிறது. நம் முன்னோர்கள் அவர்கள் குடும்பத்துக்கு இந்த அற்ப விஷயத்துக்காகக் கெடுதல் செய்வார்களா என்றெல்லாம் யோசிப்பதில்லை. இருக்கும்போது கவனிக்கிறோமோ இல்லையோ, இல்லாதபோது அவர்களுக்குத் திதி கொடுப்பதில் அப்படி ஓர் ஆர்வம்!

பெரியார் நான் சொன்னேன் என்பதற்காக எதையும ஏற்றுக்கொள்ளாதே . அது சரியா, தவறா என்று நீயே சிந்தித்து செயல்படுத்து என்று கூறினார். அவர் சொல்லிவிட்டுச் சென்று இவ்வளவு ஆண்டுகள் ஆகியும் சிந்திக்காமல் எல்லாரும் செய்வதையே நானும் செய்கிறேன் என்னும் மனநிலை வளர்வதைக் கண்டால் மனம் பதறுகிறது.

படைப்பாளர்:

சிவசங்கரி மீனா

தீவிர வாசிப்பாளர். ஏராளமான நூல்களை வைத்திருக்கிறார். ஹெர் ஸ்டோரிஸ் ஆடியோ நூலுக்குப் புத்தகங்களை வாசிக்கிறார். மதுரையில் வசிக்கிறார்.

Exit mobile version