Site icon Her Stories

பொங்குமாக்கடல்

சிறு தூறலாக மழை தொடங்கியது.

ரெயின்கோட்டின் தொப்பியை தலையில் இறுக்கமாகக் கட்டிக் கொண்டவாறு சில இடங்களில் டார்ச் அடித்துப் பார்த்துக் கொண்டு, நடந்து கொண்டிருந்தார் டிராலிமேன் சுகுமார்.

“இன்னைக்காவது நேரத்தோட வரக் கூடாதா? ஊருக்குப் போகணும்னு நினப்பு இருக்கா, இல்லையா? வேல வேலன்னு ஏன் எப்பவும் வேலையயே கட்டிகிட்டு அழுறீங்களோ?” என்று அவர் மனைவி சுமதியின் குரல் சமையல் கட்டிலிருந்து ஒலித்தது நினைவுக்கு வந்தது.

“ஏன்மா எப்பப் பாத்தாலும் அப்பாவ ஏதாவது சொல்லிட்டே இருக்கீங்க?” என்று ஹரிணியின் குரல் வந்தது.

“வாடியம்மா. உங்கப்பாவ ஒண்ணும் சொல்லல. நான் என்ன எனக்காகவா இதெல்லாம் பண்ணுறேன்? ஒரு பரிகாரத்த பண்ணிட்டு வந்தா நல்லதுன்னு ஜோசியர் சொல்றாரு. அதுக்காகத்தானே! உன் வயசு புள்ளைங்க எல்லாம் லாக்டவுன்லயே கல்யாணம் கட்டிட்டு இப்ப ரெண்டு புள்ளகுட்டின்னு ஆயிருச்சுங்க.”

“உனக்கு வேற வேலை இல்ல. அவங்க சொல்றதெல்லாம் நடக்கும்னா, அண்ணன் ஜாதகத்தப் பாத்து அவர் ஏன் முதல்லயே எதுவும் சொல்ல?”

சாப்பிட்டுக் கொண்டிருந்தவருக்கு அதற்கு மேல் உணவு தொண்டைக் குழிக்குள் இறங்கவில்லை.  எதுவும் பேசாமல் மதியச் சாப்பாட்டை அவர் அருகில் வைத்துச் சென்ற மனைவியின் கண்கள் கலங்கியிருந்தன.

வழக்கம் போல் எதுவும் சொல்லாமல்  ரயில் நிலையத்துக்குக் கிளம்பி வந்துவிட்டார். காலையிலிருந்து வேலையில் தன்னை மூழ்கடித்துக் கொண்டிருந்தார்.

அவர் கிளம்பிய பின் கண்டிப்பாக அவர்கள் இருவரும் பேசி சமாதானம் ஆகியிருப்பார்கள் என்பது அவருக்குத் தெரியும். ஆனால் மகள் சொன்ன விஷயம் மீண்டும் மீண்டும் மனதுக்குள் ஒலித்தது.

அவள் சொன்னது போல எந்தச் சாமிதான் என்ன செய்தது? அருமையாக இருபத்தி இரண்டு வருடங்கள் பாராட்டிச் சீராட்டி வளர்த்த மகன். படிப்பில் கெட்டிக்காரன். கடவுளுக்கு அடுத்தபடியான மருத்துவத் துறையில் மக்களுக்குச் சேவை செய்யவென்று தானாகப் படித்து மெரிட் சீட் எடுத்து சொந்தம் பந்தம் எல்லாம் வாய்பிளக்க வைத்தவன்.

“பேசாம ஊருக்க வந்துறேன்ப்பா. இந்தக் கொரோனா வேற ரொம்ப தீவிரமாக பரவுதுன்னு நியூஸ்லலாம் சொல்றாங்களே?”

“இங்க எப்படி இருக்கு தெரியுமாப்பா? சின்ன குழந்தைங்க, வயசானவங்க, கொஞ்ச வயசுக்காரங்ன்னு பாரபட்சம் இல்லாம ஆஸ்பத்திரில பெட்டு கிடைக்காம, இன்குபேட்டர் கிடைக்காமா, ஆக்சிஜன் கிடைக்காம… ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு வார்டுக்கு வெளியிலயும் அத்தனை பொட்டலம் கட்டி வச்சிருக்காங்க. இது என் கடமை இல்லயாப்பா? ஒரு டாக்டரா இந்த நிலைமையில என் பாதுகாப்புதான் முக்கியம்ன்னு விட்டுட்டு வர முடியாதுல்லப்பா. நீங்கல்லாம் பத்திரமா இருங்க . கோவிட் வேக்சின்லாம் சீக்கிரம் வந்துரும்னு  பேசிக்கிறாங்க. நிலம கொஞ்சம் சரியாகட்டும், அப்புறம் ஊருக்கு வரேன்” என்று வீடியோ காலில் பேசிய போது அவர்கள் யாருக்கும் தெரியாது அவனைக் கடைசியாக எல்லோரும் பார்க்கும் நாள் அன்று தான் என்று.

கொரோனா வார்டில் பணிபுரிந்தவனுக்குச் சரியான பாதுகாப்பு கவசங்கள் இல்லாததால், தீவிர நோய்த் தொற்று ஏற்பட்டு  இரண்டு வாரங்களில் சொல்லிக் கொள்ளாமலே இந்த உலகை விட்டுச் சென்றுவிட்டான்.

அந்த சமயம் கொரோனாவில் இறந்தவர்கள் உடல்களை பாதுகாப்பு கருதி  வீடுகளுக்கு அனுப்பாமல் அரசு சார்பில் தகனம் செய்து விட்டபடியால் இறுதியாக ஒருமுறைகூட அவனைக் காண முடியாத நிலையில் மூவரும் துடித்துப் போனார்கள்.

எல்லோருக்கும் ஆறுதலாக ஆதரவாக இருந்தவன் ,  இல்லை என்பதையே ஏற்றுக் கொள்ள அவர்களுக்கு இன்று வரை முடியவில்லை .

இது நிகழ்ந்து முழுதாக மூன்று வருடங்கள் ஆகிவிட்டன. காலம் யாருக்காகவும் காத்திராமல் ஓடிக் கொண்டுதான் இருந்தது.

துக்கத்தில் மூழ்கிய குடும்பம் முழுதாக மீண்டு விட்டதா என்று இன்று வரை அவரால் உறுதியாகச் சொல்ல முடியாது.‌

அவர் எண்ணங்களை கேட் கீப்பர் சந்திரனின் குரல் அணை போட்டது.

“வாங்க சார், ஒரு டீ குடிச்சிட்டுப் போலாம்! “

“இல்லப்பா. டைம் ஆயிருச்சு. ஒரு எட்டு பாத்துட்டுக் கிளம்பணும். செந்தூரப் புடிக்கணும்.”

“அக்கா சொல்றது சரிதான் போல, விட்டா டிராக்லயே படுத்துத் தூங்கிருவீங்க போலயே. அதான் காலைல டிராலி இன்ஸ்பெக்ஷன் போனீங்களே சார். இந்தாங்க புடிங்க” என்று வலுக்கட்டாயமாக அவர் கையில்  இஞ்சி டீயைத் திணித்தான். பேப்பரில் பொதிந்து வைத்திருந்த சூடான உழுந்து வடையையும் கொடுத்தான். மறுத்தாலும் விடமாட்டான் என்பதை உணர்ந்து வாங்கிக் கொண்டார்.

“மழை வேற பெஞ்சிட்டே இருக்கே. அதான் ஒரு எட்டுப் பாத்துட்டுக் கிளம்பிடலாம்னுதான்.”

விரைவில் திரும்பி விட வேண்டும். அவர் குடும்பத்தினர் வருவதற்குள் ரயில் நிலையத்தை அடைந்து விட வேண்டும் என்கிற நினைப்பு அவர் மனதில் முதன்மையாக இருந்தது.

மழை பெய்ததால் ஏற்கெனவே நாள் முழுக்க வானிலை மப்பும் மந்தாரமுமாகத்தான் இருந்தது. நேரத்துடன் இருட்டவும் செய்துவிட்டது. தன் கையில் வைத்திருந்த சிறு டார்ச் உதவியுடன் தண்டவாளத்தைப் பார்த்துக் கொண்டே வந்தார்.

சந்திரனுடன் பேசி நேரம் போக்கியிருக்கக் கூடாதோ என்று யோசித்தவாறே நடையை வேகப்படுத்தினார். ஆனால் மழைக்கும் குளிருக்கும் அவன் தந்த டீ  இதமாக இருந்ததை மறுப்பதற்கில்லை. மேலும் அப்போது மழை அடித்துப் பெய்து கொண்டிருந்ததால் சற்று நேரம் கழித்தே கிளம்ப வேண்டியதாகிவிட்டது.

சற்று தூரம் வரை குறைந்திருந்த மழை மீண்டும் வேகமெடுத்தது. தான் உத்தேசித்த முழு தூரத்தையும் பார்த்து வருவதற்குள் கண்டிப்பாக ரயில் ஏறுவதற்குத் தாமதமாகிவிடும்.‌

பேசாமல் திரும்பிப் போய்விடலாமா? இல்லை, சிவாவை வண்டியில் வந்து கூட்டிச் செல்ல சொல்லலாமா என்று யோசித்தவருக்கு, அவன் நேரத்துடன் கிளம்பியிருக்க வாய்ப்பு இருக்கிறது. தான் அழைத்தால் வீட்டுக்கு பாதி வழி சென்றிருந்தால்கூடத் திரும்ப வந்துவிடுவான். ஏன் தேவையில்லாமல் அவனைத் தொல்லை செய்ய வேண்டும் என்றெல்லாம்  பலவிதமான எண்ணங்கள் தோன்றியது.

அடுத்த கம்பம் வரை பார்த்துவிட்டுத் திரும்பிவிடலாம் என்று யோசித்தவர் செவிகளுக்குத்  தண்ணீர் ஓடும் சத்தம் கேட்டது.

சற்றுத் தூரம் சென்றபின், திரும்ப எத்தனித்தவருக்கு வெகு சமீபத்தில் தண்ணி வேகமாக ஓடும் சத்தம் ஒருவிதச் சிலிர்ப்பைத் தந்தது. அதுவும் அதுவரை கேட்டது போல் கரையில் இல்லாமல் முன்னால் கேட்டது. ஏதோ சரியாக இல்லை என்கிற உள்ளுணர்வு மேலோங்கியது.

தடுமாறி நகர்ந்த வேகத்தில் அவருக்குப் பதில் அவர் கையில் இருந்த சாட்டிலைட் போன்  தண்ணீரில் விழுந்தது. கண்முன்னே குற்றாலத்தின் பொங்குமாங்கடலில் பொங்குவதாக ‘ஹோ’ என்கிற இரைச்சலுடன் தண்ணீர் பெருக்கெடுத்து ஓடியது. டார்ச்சை முன்னால் அடித்தவர் கண்களையே அவரால் நம்ப முடியவில்லை .

தண்ணீரின் வேகத்தில் தண்டவாளம் ஏதோ தொங்கு பாலம் போல் தொங்கிக் கொண்டு அங்குமிங்கும் ஆடிக் கொண்டிருந்தது. அடியிலிருந்த ஜல்லி, மணல்  எல்லாமே காட்டாற்று வெள்ளம் போல் வேகமாக ஓடிய நீரில் அடித்துச் செல்லப்பட்டிருந்தது. எவ்வளவு தூரத்துக்கு அடித்துச் செல்லப்பட்டிருந்தது என்று இருளில் கணிக்க முடியவில்லை.

ஒரு நொடியில் தான் தப்பித்ததை நினைத்து கடவுளுக்கு நன்றி சொன்னவருக்கு, அடுத்த நொடியே கண்முன் எவ்வளவு பெரிய ஆபத்து காத்துக் கொண்டிருக்கிறது என்பது நினைவுக்கு வந்தது .

இந்நேரம் தான் மட்டும் இங்கு வராமல் இருந்திருந்தால்? செந்தூர் எக்ஸ்பிரஸ் வழக்கம் போல் கடந்து சென்றிருந்தால்? அதில் தன் குடும்பத்தோடு சேர்ந்து பல நூறு பயணிகள் பயணித்திருந்தால் என்றெல்லாம் நினைத்தபோது அவர் உடலும் மனதும் சேர்ந்து நடுநடுங்கியது.

ஆபத்து கண்முன்னே ஊஞ்சலாடிக் கொண்டிருந்தது . சில நொடியா பல யுகங்களா என்று புரியாமல் அதிர்ச்சியால் உறைந்தவர் , மீண்டார். அடுத்து பின்பற்ற வேண்டிய நெறிமுறைகளை மனதுக்குள் வரிசைப் படுத்தினார்.

பி.டபிள்யூ.ஐ க்கு தான் முதலில்  தகவல் தெரிவிக்க வேண்டும். அவர் மூலம்தான் ஸ்டேசன் மாஸ்ட்டருக்குத் தகவல் செல்லும். ஆனால் யாருக்கும் தகவல் சொல்ல வழியில்லை. சாட்டிலைட் போன் அடித்துக் கொண்டு போய்விட்டது. கைபேசியிலும் மழை காரணமாகச் சிக்னல் இல்லை.

டிரெயின் வரும் போது கையிலிருக்கும் எச்சரிக்கை விளக்கைப் பொருத்திக் காட்டி  நிறுத்திவிடலாமா என்கிற யோசனையை உடனே கைவிட்டார். அதுவரை காத்துக் கொண்டிருப்பது முட்டாள்தனம் . அது சரியாக நிறைவேறாவிட்டால்?

கைக்கடிகாரம் 8.30 என்று காட்டியது.  இந்நேரம் செந்தூர் எக்ஸ்பிரஸ் திருச்செந்தூரில் இருந்து கிளம்பி இருக்கும். இனியும் யோசித்துக் கொண்டிருப்பதில் பயனில்லை, விரைந்து சென்று தகவல் தெரிவிக்க வேண்டும் என்று திரும்பியவர் கால்களில் இருந்த ஷுவின் கணமும் உணர்ச்சியின் வேகமும் சேர்ந்து பின்னால் இழுத்தது.

கையிலிருந்த டார்ச் கீழே விழுந்தது.

(தொடரும்)

படைப்பாளர்:

பொ. அனிதா பாலகிருஷ்ணன் 

பல் மருத்துவரான இவருக்குச் சிறுவயது முதல் தன் எண்ணங்களைக் கவிதைகளாக, கட்டுரைகளாக எழுதப் பிடிக்கும். நாளிதழ்கள், வலைதளங்களில் வரும் கவிதைப் போட்டிகள், புத்தக விமர்சனப் போட்டிகள் போன்றவற்றில் தொடர்ந்து பங்கேற்று பரிசுகள் பெற்று வருகிறார்.  இயற்கையை ரசிக்கும், பயண விரும்பியான இவர் ஒரு தீவிர புத்தக வாசிப்பாளர். தன் அனுபவங்களைக் கவிதைகளாக, கட்டுரைகளாக, ஒளிப்படங்களாக வலைத்தளங்களில் பதிந்து வருவதோடு சிறுகதைகளும் கதைகளும் எழுதி வருகிறார்.

Exit mobile version