Site icon Her Stories

உருவத்தில் என்ன இருக்கிறது?

காந்தி என்றவுடனே நம் மனதுக்கு வரும் உருவம் மெலிந்த தேகமும் உருண்டையான கண்ணாடியும். பெரியார் என்றவுடன் நீளமான தாடியும் கைத்தடியும். எம் ஜி ஆர் என்றவுடன் தொப்பியும் கண்ணாடியும். கலைஞர் என்றவுடன் கருப்புக் கண்ணாடியும் மஞ்சள் துண்டும். இப்படி பல தலைவர்களையும் முக்கியமான மனிதர்களையும் ஏதோ ஒரு குறிப்பிட்ட விஷயத்தைக் கொண்டு நாம் அவர்களின் உருவங்களை ஞாபகம் வைத்திருக்கிறோம். உருவங்கள் தன்னியல்பாக நம் மனதில் பதியக் கூடிய ஒன்று. ஒருவரின் உருவத்தை கொண்டு அவரின் திறமைகளையோ அவரின் குணநலன்களோ பார்க்க வேண்டிய அவசியமில்லை.

எனக்கு என் அம்மாவைப் பற்றிய உருவம் என்பது சுருட்டை முடியும் புடவை அணிந்த அழகிய சின்ன பெண் உருவம் மனதில் நினைவாக வரும். ஒவ்வொருவருக்கும் அம்மா என்றவுடன் மனதில் தோன்றும் உருவம் வெவ்வேறானது. ஆனால் பெரும்பாலும் அம்மா என்ற உணர்வு ஒன்றுபோலுள்ளது. என் உயரம் ஐந்தடி. சிறுவயதில் என்னை விட வளர்ந்த பலரின் முன்னிலையில் நிற்கும் போது இன்னும் கொஞ்சம் வளர்ந்திருக்கலாமோ என்று தோன்றும். பிற்பாடு அத்தகைய எண்ணத்திலிருந்து முழுமையாக விடுபட்டுவிட்டேன்.

சமீபத்தில் அண்ணா என்னும் பெருந்தலைவரின் உரைகள் குறித்தும் அவரின் அறிவாற்றல் ஞாபகத்திறன் குறித்தும் தொடர்ந்து படித்துக் கொண்டிருக்கிறேன். ஐந்தடி உயரத்தில் வாழ்ந்து மறைந்த பெரும் தலைவரின் புகழ் இன்னும் பல தலைமுறைகள் கடந்தும் வாழும்.

நாம் தீர்மானிக்க இயலாத நிறம், உயரம், அங்க அமைப்புகள் போன்றவற்றை கொண்டு நாம் வருந்தவும் வெட்கமும் தேவையில்லை. ஒரு மனிதனின் திறமை, சிந்தனை, சித்தாந்தம் போன்றவற்றைக் கொண்டே அவனது மதிப்பீடு உள்ளது என்பதை நாம் நினைவில் கொள்ள வேண்டும்.

சமீபத்தில் நடிகை ஒருவரின் உருவ அமைப்பு மற்றும் முகத்தின் பாகங்கள் குறித்த மிக மோசமான பதிவு குறித்த பல கருத்துக்களும் முகநூலிலும் இணையத்திலும் பல இடங்களில் பகிரக் கண்டோம். ஒரு நடிகை அல்லது பொதுத்தளத்தில் இயங்குபவர் என்பதாலேயே நாம் எதை வேண்டுமானாலும் பேசலாம் என்கிற எண்ணமும் அதிலும் பெண் என்றால் அவர்கள் உருவம் குறித்து நடத்தை குறித்து பேசும் தகுதி நமக்கு இருப்பதாக சமூகத்தில் பலரும் நினைத்துக் கொண்டிருப்பது பெரும் அவலம்.

இந்த பிரச்சினை குறித்து தோழர் நிவேதிதா லூயிஸ் ஊடகத்திற்கு அளித்த பேட்டியில் சொன்ன வார்த்தைகள் எனக்கு மிகவும் பிடித்திருந்தன. நடிகைகளை விமர்சிக்கும் பலரும் நடிகைகளின் மூலதனம் உடல் தானே என்ற கருத்தை முன்வைக்கிறார்கள். தோழர் நிவேதிதா சொன்ன பதில் ‘நடிகைகளின் மூலதனம் உடலல்ல, நடிப்பு மட்டுமே. நன்றாக நடிக்கத் தெரிந்தவர்கள் மட்டுமே திரையுலகில் நீடித்து இருக்க முடிகிறது’, என்கின்ற கருத்தையும் கூறினார்.

கருப்பினத்தவர்களை பிளாக்கி என்று கூறும் போது எப்படி அவர்களின் மனம் புண்படுகிறதோ, ஒரு குறிப்பிட்ட ஜாதியைக்கூறி ஒரு மனிதரை அழைக்கும் போது அவரின் மனம் எப்படி காயப்படுகிறதோ, அதைப் போலவே உருவக் கேலியும் பலரின் மனதில் ஆறாத வடுவாக உள்ளது என்பதை நாம் புரிந்து கொள்ள வேண்டும்.

சில நேரங்களில் இந்த வாழ்வு எவ்வளவு பாரபட்சமானது என்று எனக்குத் தோன்றும். அந்த பாரபட்சங்களை முழுமையாக இயற்கை என்ற பெயரில் ஏற்றுக்கொள்ள இயலாது. அப்படியே ஏற்றுக் கொண்டாலும் மனிதர்கள் செயற்கையாக இந்த வாழ்க்கையில் எளியவர்களின் மீது செய்யும் அதிகாரத்தின் ஒரு முகம்தான் இவ்வகையான உருவக் கேலிகள்.

குள்ளமான,குண்டான, கருப்பான மனிதர்களெல்லாம் நகைச்சுவைக்கு உரியவர்களல்ல என்பதை நாமும் நம் திரையுலகமும் நம் சமூகமும் புரிந்து கொள்ளவேண்டியது மிக அவசியமானது. உயரம், நிறம், பருமன் என்பது எல்லாமே வெறும் ஒப்பீடுதானே.

ஆப்பிரிக்காவில் வசிக்கும் ஒருவரை விட நான் வெளுப்பானவள். அமெரிக்காவில் வசிக்கும் ஒருவரை விட நான் கருப்பனானவள். இப்படி ஒப்பீட்டளவில் உலகம் கற்பித்த கற்பிதங்களை வைத்துக்கொண்டு இன்னும் எத்தனை மனங்களை காயப்படுத்தப் போகிறோம்?

Photo by Womanizer Toys on Unsplash

இந்த உருவக்கேலி என்பது பிரதானமாக பெண் பிள்ளைகளையே குறி வைப்பதாக உள்ளது. உருவக்கேலி என்பது உருவத்தையே சிதைத்து கேலி செய்வது வரை அல்லது உருவத்தை சிதைத்து வன்முறை செய்வதுவரை நீள்கிறது. பல இடங்களிலும் பெண்களின் முகத்தில் வீசப்படும் ஆசிட் வீச்சுகள் இதை மெய்ப்பிக்கின்றன. ஒரு பெண்ணின் முகத்தை அல்லது உருவத்தை சிதைப்பதன் மூலமாக அப்பெண்ணை வென்றுவிட்டதாக நினைக்கும் ஆணாதிக்க மனோநிலை மிகவும் ஆபத்தானது. பதிவு செய்யப்பட்ட ஆசிட் வீச்சு வழக்குகள் உலக அளவில் ஒவ்வொரு வருடமும் ஆயிரத்து ஐநூறைத் தாண்டுகிறது என்கிற புள்ளிவிபரம் நம்மை அதிர வைக்கிறது.

திரையுலகில் செந்தில் என்று நடிகரை பெரும்பாலும் அவர் உருவத்தை வைத்தே கேலி செய்வார் கவுண்டமணி என்னும் சக நடிகர். அதை ஊக்குவிக்கும் விதமாக அதற்குப்பின் வந்த நடிகர் வடிவேலு உட்பட பல நடிகர்களும் உருவக் கேலியை கையிலெடுத்தார்கள்.

பரியேறும் பெருமாள், ஜெய் பீம், கர்ணன் போன்ற திரைப்படங்களின்
மூலமாக தமிழ் சினிமா வேறொரு தளத்திற்கு நகர்த்தப்பட்டுருக்கிறது.
ஆணையோ பெண்ணையோ யாரை இங்ஙனம் உருவக் கேலி செய்தாலும் அது செய்தவருக்கு அவமரியாதை என்னும் விதத்தில் பல செய்திகள் திரைப்படங்களிலும் தொடர் விவாதங்களிலும் முன்னெடுக்கப்பட வேண்டும்.

நம் புராண கதைகளில் லட்சுமணன் சூர்ப்பணகையின் மூக்கை அறுத்ததாக தகவல் இருக்கிறது. சூர்ப்பணகை ஸ்ரீராமனின் மீது ஆசை கொள்கிறாள். ராமன் தான் ஏக பத்தினி விரதன் என்று கூறுகிறார். அந்நேரம் சீதாதேவி சூர்ப்பணகையின் கண்களுக்கு தென்படுகிறார். இவ்வளவு பெரிய அழகி உன் மனைவியாக இருப்பதால்தானே நீ என்னை ஏறெடுத்தும் பார்க்க மறுக்கிறாய் என்றெண்ணிய சூர்ப்பணகை சீதாதேவியை கொல்ல முயல்கிறாள். அதனால் வெகுண்டெழுந்த லட்சுமணன் சூர்ப்பனகையின் மூக்கை அறுக்கிறான்.

Wikipedia

இதுதான் புராணம் கூறும் கதை. இதில் என் கேள்வி என்னவென்றால் கோபம் கொண்டு வெகுண்டெழுந்த லட்சுமணன் சூர்ப்பனகையின் கைகால்களை வெட்டாமல் அல்லது வேறு விதத்தில் தாக்காமல் ஏன் முகத்திலுள்ள மூக்கை வெட்டினான் என்பதுதான். ஒரு வேளை வாசனை என்பது கலவியலில் முக்கியமான அங்கம் வகிக்கும் என்பதால், தன் அண்ணனின் உடலின் மீது ஆசை கொண்ட சூர்ப்பணகையின் மூக்கை அறுத்து இருக்கலாம் என்கிறார்கள் சிலர்.

எனக்கு தோன்றுவதெல்லாம் அங்கு நடந்ததும் ஒரு உருவச் சிதைவு. ஒரு பெண்ணின் முகத்தை முகத்திலுள்ள முக்கியமான உறுப்பான மூக்கை சிதைப்பதன் மூலம் ஒரு பெண்ணை மோசமான முறையில் நான் தண்டிக்கின்றேன் என்கிற ஆணாதிக்க எண்ணமே காரணமாக இருந்திருக்கலாம் என்றே எனக்குத் தோன்றியது. சூர்ப்பணகை செய்தது தவறல்ல என்றோ லட்சுமணன் செய்தது தவறு என்றோ நான் குறிப்பிடவில்லை. ஆனால் ஒரு பெண்ணின் மூக்கை வெட்டுவதன் மூலமாக அல்லது ஒரு பெண்ணின் முகத்தைப் சிதைப்பதன் மூலமாக அவளுக்கு உச்ச பட்ச தண்டனையை அளிக்க இயலும் என்பது ஒரு ஆணாதிக்க மனோபாவம்தானே. பெண்களின் மீது நடத்தப்படும் ஆசிட் வீச்சுகள் இது போன்ற எண்ணங்களின் அடிப்படையில் தொடங்கியதாகக்கூட இருக்கலாமே.

உருவக் கேலியை எளிமையாக கடந்துவிடும் மேல்தட்டு வர்க்க பெண்களைப் பற்றி கவலை கொள்ளத் தேவையில்லை. ஆனால் இன்னும் முன்னேறாத கிராமப்புறங்களில் உள்ள பெண்கள், கிராமப் புறங்களில் பெண்கள் படிக்கும் பள்ளிகளில் மட்டுமே படித்துவிட்டு நகர்ப்புறங்களில் இருபாலர்களும் படிக்கும் கல்லூரிகளுக்கு வந்துசேரும் பெண்கள், வீட்டிலேயே முடங்கிக் கிடக்கும் பொருளாதார சுதந்திரமற்ற பெண்கள், மிகவும் பயந்த சுபாவம் உள்ள ஆண்கள், சமூகத்தின் பல கேலிகளைத் தொடர்ந்து சந்தித்துக் கொண்டிருக்கும் மூன்றாம் பாலினத்தவர், ஆட்டிசம் போன்ற பிரச்சனைகளில் உள்ள குழந்தைகள், மனநலம் பாதிக்கப்பட்டவர்கள், ஊனமுற்றோர், வயதானவர்கள், தலையில் முடி கொட்டிய ஆண்கள் இப்படி இந்தப் பட்டியலில் உள்ளவர்கள் இன்னும் அதிகமாக சமூகத்தில் கேலிகளால் பாதிக்கப்படுகிறார்கள் என்பதை நாம் புரிந்து கொள்ள வேண்டும்.

சென்ற வாரம் பதிமூன்று வயது சிறுமி ‘குண்டு’ என்கிற உருவக்கேலியை எதிர்கொள்ள இயலாமல் மனமுடைந்து தற்கொலை செய்து கொண்டார் என்ற செய்தியை நாம் சாதாரணமாக கடந்து போய்விட முடியாதல்லவா?

எளியவர்களின் மீது எய்யப்படும் எந்த அம்பும் தவறானதே. எளிய மனிதர்களின் மீது தொடுக்கப்படும் இக்கேலி கிண்டல்களினால் ஏற்படும் பிரச்சனைகளின் வீரியத்தை நாம் புரிந்து கொள்ளும்போது சற்றே அப்பாதையை மாற்றுவோம். குறிப்பாக நம் அடுத்த தலைமுறைகளுக்கு அப்புரிதல் அவசியமானது.

உயிர் பலி வாங்கும் உருவக்கேலிகள், பலரின் மனங்களிலும் நீங்காத காயமாக உள்ள உருவக்கேலிகள் சாதாரணமாக கடந்து போகக் கூடியவைகளல்ல. நம் சிந்தனைகளில் நல்லதோர் மாற்றம் ஏற்படும்வரை தொடர்ந்து பேசுவோம். விவாதிப்போம்.
கதைப்போமா?

தொடரின் முந்தைய பகுதியை வாசிக்க:

படைப்பு:

ஹேமலதா

சென்னையில் பிறந்தவர்; தற்போது கொச்சியில் வசித்துவருகிறார். கார்ப்பரேட் செக்ரட்டரிஷிப் பட்டதாரியானவர், யோகக் கலையில் எம்.ஃபில் பட்டம் பெற்றுள்ளார். சில நிறுவனங்களிலும், பள்ளிகளில் யோக ஆசிரியராகவும் பணியாற்றியிருக்கிறார். ‘முழுவல்’ என்ற கவிதை நூல் வெளியிட்டிருக்கிறார். பெண்ணியம் தொடர்பான நிகழ்வுகளில் தொடர்ந்து பங்கெடுத்துக் கொண்டிருக்கிறார்.

Exit mobile version