Site icon Her Stories

ஆணுலகம்

Photo by Matheus Ferrero on Unsplash

கேளடா மானிடவா – 7


‘ஒரு நொடி தப்பு செய்து விட்டு காலமெல்லாம் அதை நினைத்து வருத்தப்படும் ஆண்கள் உண்டு; அந்த ஒரு நொடியை சரியாக ஹேண்டில் பண்ணி விடுபவன் நல்லவன்; அதைத் தவறாக ஹேண்டில் பண்ணி விடுபவன் கெட்டவனாகிறான்’ – ஒரு நண்பர்.

திருமணமான ஒரே மாதத்தில், மனைவி புகார் கொடுக்கிறார் – ‘கணவன் ஆண்மை இல்லாதவர்; ஏமாற்றி கல்யாணம் செய்து கொண்டார்’ என்று.
‘தனக்கு ஆண்மை இல்லை என்பது அவனுக்கே திருமணமான பிறகுதான் தெரிய வருகிறது; ஓர் ஆண் திருமணத்திற்கு முன் மனக்கட்டுப்பாட்டுடன் தூயவனாக இருந்தது தவறா’ என்று தன் நண்பனுக்காகப் பேசுகிறார் ஒருவர்.

ஒரு மனைவி சொன்னது – ‘நீயெல்லாம் ஒரு ஆம்பளையா என்று கேட்டால் போதும்; அதை மனைவியிடம் நிரூபிக்கப் படாத பாடுபடுவார்கள் ஆண்கள்’

‘ஒரு பெண் தன்னை விரும்புவதாகச் சொன்னால், உறவுக்கு வா என்று அழைத்தால், ஓர் ஆண் மறுப்பேதும் சொல்லாமல் உடன்படுவான்; மறுப்பது அவனது ஆண் தன்மைக்கு இழுக்கு’ – ஒரு நண்பர் சொன்னது.

‘பெண்களை ஈஸியாக கரெக்ட் பண்ணலாம். எதாவது ஒரு விசயத்தில் மடங்கி விடுவார்கள்; குருதிப்புனல் படத்தில் சொல்வது போல, எல்லாருக்கும் ஒரு ப்ரேக்கிங் பாயிண்ட் இருக்கும்; அதில் மடங்கி விடுவார்கள். அப்படி மடங்கவில்லை எனில் அவர்கள் பெண்களே அல்ல’ – ஒருவர்.

‘என் அம்மா, அக்கா உட்பட யாரையும் நான் கண்ணைப் பார்த்தே பேசியது இல்லை. சின்ன வயதிலே இருந்து இப்படித்தான். இதைத் தவறென்று அவர்கள் இதுவரை சொன்னதில்லை; இது தவறு என்று கூட என் பெண் தோழி சொல்லித்தான் தெரியும்’ – ஒரு நண்பர்.

ஒரு கவிதைத் தொகுப்பு வெளியீட்டு விழாவில் ஒருவர் சொன்னது ‘ஓர் ஆணால் எப்படி பெண்ணின் மார்பைப் பார்க்காமல் பேச முடியும்? அப்படிப் பார்க்காமல் இருந்தான் என்றால், அவனுக்கு ஏதோ பயாலஜிக்கல் டிஃபெக்ட் என்றுதான் அர்த்தம்’

சிறுவயதில் தெருவே கலகலத்த ஒரு விசயம் – கலாக்காவுடைய ‘ப்ரா’வை, மூர்த்தி அண்ணன் தூக்கிப் போய் வைத்திருந்ததாம் என்பது.

ஒரு டெய்லர் பையன். பெண்கள் ஜாக்கெட் தைக்கக் கொடுத்தால், தைத்து, வீட்டுக்குக் கொண்டு போய் ஒரு வாரம் வைத்திருந்து விட்டுத்தான் தருவானாம்.

ஒரு மேன்ஷன். நண்பரின் தங்கை எக்ஸாம் எழுத வருகிறாள். தவிர்க்க முடியாமல் – குளித்து ரெடியாக இவர்களது பாத்ரூமை உபயோகிக்க வேண்டி வருகிறது. நண்பரும் தங்கையும் சென்ற பிறகு, யார் முதலில் பாத்ரூமை யூஸ் பண்ணுவது என்பதில் படு பயங்கர போட்டா போட்டி. எதற்கு என்று சொல்லவே தேவையில்லை!

‘பொதுவாக பெரும்பாலான ஆண்கள் எல்லாருமே சிறுவர்களைப் பயன்படுத்தி இருப்பார்கள்; ‘கே’ (gay) என்றெல்லாம் அர்த்தமல்ல ; ஆனால், பயன்படுத்துவார்கள்’.
‘சிறுவர் பருவத்தைக் கடந்து வந்த ஒவ்வொரு ஆணுக்கும் தனக்கு நடந்த பாலியல் வக்கிரத்தைப் பற்றிச் சொல்ல எத்தனையோ கதைகள் இருக்கும்; ஆண் ‘மீ டூ’ எழுதினால் ஆணுலகமே தாங்காது’ – ஒரு நண்பர்.

‘இவன் என்னவோ, யாருக்குமே நடக்காதது தனக்கு நடந்துட்டாப்ல ‘ட்ராமா’ பண்றான். இப்ப என்ன ப்ரெக்னென்ட்டா ஆகிட்ட, விடுங்கறேன். அவன் என்னை அப்படிப் பண்ணிட்டான், இப்படிப் பண்ணிட்டான்னு அழுதுட்டே இருக்கிறான்’ – ஒரு அப்பா, தன் மகனுக்கு நடந்ததைப் பற்றி, நண்பரிடம் பகிர்ந்தது.

காலேஜ் போகும் உறவினர் பையன், தோழியின் ஆறு வயது குழந்தை மீது படுவதும் தொடுவதுமாக இருந்திருக்கிறான். தோழி அழைத்து புத்திமதி சொல்ல, அவன் வெகு அப்பாவியாக முகத்தை வைத்துக் கொண்டு சொன்ன பதில் இது – ‘அவள்தான் வயசுக்கு வரலையே ஆண்ட்டி அவளுக்கு எதுவும் தெரியாதே, என்னாகப் போகுது’ என்று.

குழந்தை நான்கு மாதக் கருவாய் தாய் வயிற்றில் இருக்கும்போதே அதன் அறிதல் தொடங்கி விடுவதாக அறிவியல் சொல்கிறது. அதற்கும் முன்பே கூட இருக்கலாம். அறிவியலில் இன்னும் நிரூபிக்கப்படவில்லை என்பதால் நமக்குத் தெரியவில்லை; நமக்குத் தெரியவில்லை என்பதால் எதுவும் செய்யலாம் என்பதில்லை.

மனநல மருத்துவர்களைக் கேட்டுப் பாருங்கள்; ஆணோ அல்லது பெண்ணோ பிற்கால திருமண வாழ்வில் மகிழ்வாக ஈடுபட முடியாமல் போவதற்கு, முதல் முக்கியமான காரணம், அவர்களுக்குத் தன் சின்ன வயதில் நடந்த ‘சைல்ட் அப்யூஸ்’ தான். ஒவ்வொரு காலகட்டத்திலும், இந்தத் துன்பம் தலைமுறை தலைமுறையாகத் தொடர்ந்து கொண்டே இருக்கிறது.

பெண்ணிற்கு ஆணுடலின் வாதையைச் சொல்ல வேண்டுமானால், நிறைய நிறைய தண்ணீர் குடித்து, ஒரு நாள் முழுக்க கழிவறை செல்லாமல் இருந்தால் வரும் துன்பம் போன்றது என்று சொல்லலாம்.

‘தினத்தந்தி’யின் இணைப்புப் புத்தகத்தில், இது அந்தரங்கம் பகுதியில் தொடங்கி, இரவு பதினோரு மணி ரகசிய கேள்விகள் வரை, ஓர் ஆணுக்கு பெண்ணை, பெண்ணுடலை என்ன செய்வது என்பதுதான், அதில் தான் வெற்றி பெற்றவனாக இருக்க வேண்டும் என்பதுதான் கேள்வியாக இருக்கிறது. தான் யார், தன்னுடலின் தேவைகள் என்ன, தான் முழுதாக இருப்பது என்பது என்ன, தான் தன்னுடலை அறிவியல் ரீதியாகவும், மனதின் அகவுணர்வுகளின் வழியாகவும் அறிந்தோமா என்பது பெரும்பாலும் இல்லாமல் இருக்கிறது.

Photo by Joel Bengs on Unsplash

பெண்களை சகவுயிர் என்று மதித்து நடக்கும் ஆண்களுக்கும் கூட புரியாத இடம் என்று ஒன்று உண்டு; பாலியல் துன்பம் என்பது பெண்ணை எந்தளவு மனதாலும் உடலாலும் காயப்படுத்தும் என்பது. வலி புரியவில்லை என்பதற்காக, துன்பம் தரலாம் என்பதில்லை. ஆனால், பெண் உயிருக்கு எது துன்பம்; அந்தத் துன்பத்தின் வலி, தனதின் வலிக்கு எத்தகைய நிகரானது என்பது புரிந்தால், துன்பப்படுத்துவது குறையலாம் என்கிற நோக்கில், ஒரு சிறிய ஆய்வு போலத் தேடலைத் துவங்கினேன்.

இதைப் பற்றி, ஆணுடலின் வாதைகளை அனுபவித்த ஒருவர் சொல்வது சரியாக இருக்கும். ஓஷோ சொல்கிறார். எத்தனையோ அவரது புத்தகங்களில் சொல்லப்படாத ஓர் ஒப்புமையாக, ஒரேயொரு வரி. ஆணுக்கு பெண்ணின் வலியை, வாதையைச் சொல்லும், விளங்கச் சொல்லும் ஒரேயொரு வரி.

dnaindia.com

‘ஒரு பெண் பாலியல் ரீதியாக, குறைந்த அளவோ அதிக அளவோ துன்பப்படுத்தப்படுவது என்பது அவளுக்கு எப்படியான துன்பத்தைத் தருவதாக இருக்கும் என்றால், ஓர் ஆண் குறைந்தது ஆறு மாதங்களாவது தன்னளவில் சுய இன்பம் கூட செய்து கொள்ளாமல் இருந்தால், அவன் எந்தளவுக்கான மன ரீதியான உடல் ரீதியான சித்திரவதைகளுக்கு ஆளாவானோ அந்தளவு துன்பம் அது’ என்கிறார்.

சிறிய காயம் கொஞ்சம் இரத்தம் என்றால் எப்படிப் பதறுகிறோம்? பெண்ணிற்கு, அவளின் எந்த விருப்பமில்லாமலும் பெண்ணாகப் பிறந்ததாலேயே மாதந்தோறும் எவ்வளவு இரத்த இழப்பு ஏற்படுகிறது. டாக்டர்கள் சொல்லக்கூடும்; இது வேறு, இரத்தம் வேறென. ஆனால் உடல் களைப்பும் மனச்சோர்வும் இரண்டிலும் ஒன்றுதாம்.

நாம் யாருக்கும் துன்பம் தராத ஒரு வாழ்வை வாழ வேண்டுமானால், நம்மை எதிராளியின் இடத்தில் வைத்து யோசிக்கச் சொல்வார்கள்.
ஓர் ஆணைப் பார்க்கும்போது, அவன் கண்களைப் பார்க்காமல், அவனது ஆணுறுப்பையே எல்லாரும் உற்றுப் பார்த்தால், எவ்வளவு சங்கடமாக இருக்கும் இல்லையா?

ஆணாகப் பிறந்த ஒவ்வொருவரும், எல்லா வயதினரும், ஒரே ஒருநாள் பெண்களின் உள்ளாடை அணிந்து சட்டை போட்டு வெளியே சென்று பார்த்தால், ஒவ்வொரு பார்வையின் வலிமையும் அதனால் ஏற்படும் வலியும் புரியக்கூடும்.

பெண்ணுடலை, பெண்ணை எவ்வாறு பார்க்க வேண்டும் என்பது அந்நாளிலிருந்து மரியாதையாகவும் கனிவாகவும் மாறக்கூடும்.
ஒரு கர்ப்பிணியின் வாதையை உணர, அரைக்கிலோ கல்லைக் கொண்டு கட்டிக்கொண்டு தொடர்ந்து நான்கு நாட்கள், தூங்கும்போதும் வெளியிலும் வீட்டிற்குள்ளேயும் எப்போதும் கழட்டாமல் இருந்து பார்த்தால் தெரிய வரலாம்.

இது குறித்து ஆஃப்ரிக்கன் போலீஸ் காணொளி பாடல் ஒன்று உண்டு.

உண்மையில் இவ்வாறான பயிற்சிகள் விளையாட்டாக வீட்டிலும், பள்ளியிலும் பயிற்றுவிக்கப்பட வேண்டும்; தொடர்ந்து உரையாடல்கள் நிகழ்த்தப்பட வேண்டும். ஆண், பெண், திருநர், மாற்றுத் திறனாளிகள் என எல்லா மனிதர்களையும் சகவுயிராகப் பார்க்கும் தன்மை இயல்பாக வளரும்.

தொடரின் முந்தைய பகுதி:

படைப்பாளர்

பிருந்தா சேது

சே.பிருந்தா (பிருந்தா சேது), கவிஞர். எழுத்தாளர். திரைக்கதை ஆசிரியர்.

Exit mobile version