//ஆகச் சிறந்த பெண்ணியத்திற்கு வித்திட்ட பெரியார் அவர்களே, பெண்களுக்குத்தான் அறிவுரை கூறுகிறார். பெண்களைக் கர்ப்பப்பையை வெட்டி எடுத்துவிடச் சொல்கிறார். முடியை ‘க்ராப்’ வைத்துக்கொள்ளச் சொல்கிறார். ஆண்களுக்கென்று அவர் எதையும் சொல்லவில்லை. அவர்களின் எதையும் மாற்ற நிர்ப்பந்திக்கவில்லை.
தனதுடலில் உள்ள ஓருறுப்பை சரிவர நிர்வகிக்கத் தெரியாமல், தன் வாழ்வில் சந்திக்கும் எல்லாப் பெண்களையும் கஷ்டப்படுத்தும் கேவலப்படுத்தும் மரியாதையின்றி நடத்த வைக்கும் ஆண்களைச் சரி செய்யாமல், ஏன் “அவரும்” மற்ற எல்லாரையும் போலவே, பெண்களுக்கே ‘அப்படியிரு, இப்படியிரு’ என்று போதிக்கிறார்?
பெண்கள் ஏன் இயற்கை தமக்களித்த கர்ப்பப்பையை வெட்டி எடுக்க வேண்டும்? கட்டுப்பாடும் முறைமைகளும் ஆண்களுக்குத்தானே வேண்டும்?
சொன்னது பெரியார் என்பதற்காக ஆதரவாகப் பேசுகிறவர்களிடம், முக்கியமாக ஆண்களிடம் இந்தக் கேள்விகளைக் கேட்க வேண்டும்.
- உங்களில் எத்தனை பேருக்குத் தன் உணவைத் தானே சமைக்கத் தெரியும்?
- தன் செலவுகளுக்கான பொருளைத் தானே ஈட்டத் தெரியும்?
- உங்களது வீட்டில் பெண்களைச் சமையலிலிருந்து விடுபடச் செய்தீர்களா?
- உங்களது வீட்டில் ஆண்களைச் சமையலில் ஈடுபடுத்தினீர்களா?
- பெண்களை மரியாதையோடு கண்களைப் பார்த்துப் பேசுகிறீர்களா?
- நீங்கள் பெற்ற குழந்தைகளை வளர்ப்பதில் உங்களின் பங்கு என்ன?
- குழந்தைகள் போதும் என்று முடிவெடுத்தது ஆண் இணையரா பெண் இணையரா குடும்பத்தினரா
- குழந்தைகள் போதும் என்று முடிவெடுத்து அறிவியலின் துணைகொண்டு ஆபரேஷன் செய்து கொண்டது பெண் இணையரா? ஆண் இணையரா? அதை முடிவெடுத்தது யார்?
- உங்களது குழந்தை பாலியல் தூண்டுதல் ஏற்படும்முன் முறைமையான ‘பாலியல் கல்வி’ பெறச் செய்தீர்களா?
- ‘பாலியல் கல்வி’ என்பதில் உங்களது புரிதல் என்ன?
- குழந்தைகள்மீதான பாலியல் வன்முறைகள் அறிவார்ந்த பெரியாரிசம் பேசும் வீடுகளில் நிகழ்கின்றனவா?
- வளர்ந்தவர்கள் மனத் துணிவுடன் எப்போது தங்களது ‘மீ டூ’ பற்றிப் பேசுவீர்கள்?
- சுயசிந்தனை / சுயமரியாதை என்பது ஆண் / பெண் / குழந்தைகள் மற்றும் சக உயிர்கள் அனைவருக்குமானது என்பதை எந்தெந்த வழிகளில் கடைப்பிடிக்கிறீர்கள்?
இந்த கேள்விகளுக்கான பதில்களிலேயே இவர்கள் பெரியாரிசத்தை வளர்த்தும் விதம் புரிந்துகொண்ட விதம், நடைமுறை வாழ்வில் பெரியாரிசத்தை வாழும் விதம் தெரிந்துவிடும்.
இருப்பதையே – சொல்லிப்போன பார்வையிலேயே, நமக்கு வசதியான கோணத்திலேயே பார்த்துக் கொண்டிருக்கிறோம். சொன்னது பெரியாராகவே இருந்தாலும்… எதையும் கேள்வி கேள்//
இதுதான் ‘கேளடா, மானிடவா -4’ ல் கேட்டிருந்தேன். முதல் பாராவைத் தவிர்த்து மற்றவற்றை யாரும் பேசவே இல்லை.
நான் முன் வைத்த கேள்விகள் இவை. மனதிற்கு நேராக, சத்தியமாகப் பதிலளித்து இவற்றை எதிர்கொள்வதுதான் முறை. மனத் துணிவும் நேர்மையும் உள்ளவர்கள் இந்தக் கேள்விகளை எதிர்கொள்ளுங்கள். பெரியார், உங்கள் எல்லாரையும் விட எனக்குப் பெரியவர் என்று சொல்லிக் கொண்டு…
நாம் நமக்கு வேண்டியபடியும் ஏற்றபடியும்தான் வாழ்கிறோம். அதை நியாயப்படுத்த சிலரின் கொள்கைகளை முன் வைக்கிறோம். நமக்குப் பிடிக்காத ஒன்றைச் செய்ய வற்புறுத்தப்படும்போது, ‘ஹவுஸ்மேக்கர்ஸ்’ ‘எங்க வூட்டுக்காருக்கு இதெல்லாம் புடிக்காது’ என்று சொல்வது போல, நாம் நமதான கொள்கைகளை எடுத்தாள்வோம்.
எனக்கு இன்னும் கூட சொல்ல வேண்டும். ஒரு தோழர் அளித்த விருந்தில் பெரியாரிச முக்கியஸ்தரும் அழைக்கப்பட்டிருந்தார். எதற்கோ அவரை பெயரிட்டு அழைக்க, இரண்டடி தூரத்தில் இருந்த அவர் திரும்பவே இல்லை. பெயருடன் சேர்த்து தோழர் என்று கூப்பிட, பதிலளித்தார். அப்போதிருந்து, எத்தனையோ பேரை, எத்தனை சூழல்களில், கவனிக்க ஆரம்பித்ததில் இன்னொரு விசயம் புரிந்தது. பெரும்பாலும் ‘தோழர்’ என்கிற விளி, ‘சார்/மேடம் என்கிற பதத்திற்கு நிகராகப் பயன்படுத்தப்படுகிறது. நான் சொல்வதை ஏற்க மறுப்பவர்கள், வெறும் பெயரிட்டு ‘தோழர்கள்’ அனைவரையும் அழைத்துப் பாருங்கள். புரியும்.
எனக்கு எதிர்வினை செய்த எல்லோருமே, ‘பார், பெரியார் ஆணுக்கும் சொல்லியிருக்கிறார் பார்’ என்று அவரின் ஒரேயொரு கட்டுரையை ‘பெண்கள் விடுதலையடைய வேண்டுமானால், ஆண்மை அழிய வேண்டும்’ என்ற தலைப்பிலுள்ள கட்டுரையை, முன் வைத்தார்கள். எனது கேள்வி, அதை யார் இதுவரை அதிகம் எடுத்தாண்டிருக்கிறார்கள். இந்த கருத்தை நான் வைத்ததும், எதிர் கருத்தாக தேடி எடுத்துள்ளார்களே தவிர, இத்தனை வருட பயன்பாட்டில் நடைமுறைப்படுத்தாத ஒன்றாகத்தானே அது இருந்து வந்திருக்கிறது.
கடவுள் நம்பிக்கை உள்ளவர்களை எதிர்கொள்ள நேர்ந்த அளவு, தமது குறைகளை நேர் செய்ய அவர்கள் பெரியார் வாதத்தை இதுவரை வைக்கவே இல்லையே?! எனது கேள்விகள் என்னவோ, அவற்றைக் கண்டுகொள்ளாமல், கட்டுரையின் ஒரு சிறு வரிக்கு மட்டுமே பதிலளிப்பதும், கேட்டுள்ள மற்ற கேள்விகளை ஞாபகமாக மறந்து விடுவதும், பெரியாரிச அம்பேத்கரிச வழி வந்தவர்களுக்கு நியாயமா?
ஆண், பெண் எதிரெதிர் இனமல்ல
முதலில் ஆணும் பெண்ணும் எதிரெதிர் இனமல்ல; சக இனம்! பூனை எலி, மான் புலி, கோழி பருந்து என்று பார்ப்பதே நேசமற்ற பார்வை! சக பெண் புலியை ஆண் புலி வேட்டையாடுவதில்லை ; மானைத்தான் உணவிற்காக வேட்டையாடுகிறது. இரண்டும் ஒன்றல்ல. யோசித்தால், இது புரியாததல்ல.
ஆண் என்றால் அப்படித்தான் இருப்பான். அவனை அப்படியே விட்டுப்போக வேண்டும் என்றால், திருடன் என்றால் அப்படித்தான்; கொலைகாரன் என்றால் அப்படித்தான்; பாலியல் துன்புறுத்தல் செய்பவன் என்றால் அப்படித்தான் என்று விட்டுப் போய்க்கொண்டே இருக்க வேண்டியதுதான்.
பெரியார் என்ன சொல்லியிருந்தாலும் காலத்திற்கேற்ற தகவமைப்பு கொள்ளாமல் புனிதப் படுத்துதல், பெரியாரை பூஜித்தல் என்பது கடவுள் வழிபாட்டின் அதே வகைதானே?! தான் நம்பும் ஒருவர் என்ன செய்தாலும், அவர் மேல் அன்பு குறையாது; அவர் செய்வதல்லாம் சரி என்கிற பக்தி வேறு, பகுத்தறிவுடன் கூடிய பார்வை வேறு.
கை வளையல்
சின்ன வயதில் நான் வளையல்கள் போட விரும்பமாட்டேன். எல்லாரும் கேள்வி கேட்பார்கள். ஏன் போடலை? பெண் பிள்ளை வளையல் போடாமல் இருக்கலாமா? இப்படி கேட்டு, போடச் சொல்லி வற்புறுத்துவார்கள்.
நான் சொல்வேன், ‘நான் வளையல் போடாதது ஏன் உங்களை உறுத்த வேண்டும்? நான் உங்களை வளையல் போடாதீர்கள் என்றும் சொல்லவில்லை. இது அவரவர் விருப்பம் சார்ந்தது இல்லையா?’ என்று. அப்படித்தானே ‘கடவுள் நம்பிக்கை’யைக் கேலி செய்வதும், ‘கடவுள் மறுப்பை’ வலியுறுத்துவதும். அவரவர் விருப்பத்தை மதிப்பதுதானே முறை. எனக்கு ஒவ்வாததை திணிப்பது வன்முறை. இல்லையா?
இயற்கையிலேயே பெண்ணுடல் வாதை நிறைந்ததாக இருக்கும்போது, சமத்துவம் பேசும், அறிவியல் பேசும், பகுத்தறிவு பேசும் பெரியாரிச, அம்பேத்கரிச ஆண்கள், //குழந்தைகள் போதும் என்று முடிவெடுத்து அறிவியலின் துணைகொண்டு ஆபரேஷன் செய்து கொண்டது பெண் இணையரா? ஆண் இணையரா? அதை முடிவெடுத்தது யார்?// என்கிற கேள்விக்கு ஏன் பதிலளிக்கவில்லை? அந்த அறிவியலை மட்டும் அவர்கள் நம்பவில்லையா? ஏன் அது அறிவியல் இல்லையா? ஏன் இந்த அறிவின் போதாமை?
நான் இந்த கேள்விகளை முன்வைத்த காரணம், அறிவு என்பது மனிதத்தைக் கூர்படுத்தி இருக்கிறதா இல்லை, ஆணாதிக்கத்தை இன்னும் கூர்மைப் படுத்தியிருக்கிறதா என்பது பற்றிக் குறிப்பிடத்தான்.
மனித மனதின் உள்ளுணர்வுகளைக் கூட மூட நம்பிக்கை என்பது எந்த வகையில் சரி? கடல் என்றால் அலைகள் உண்டு என்பதுபோல, உணர்ச்சிகள் இல்லாத வாழ்வேது? உணர்ச்சிகளே தவறு என்பது போல வெறும் தட்டையான அறிவை முன்வைப்பது என்ன நியாயம்?
பெரியாரிச வீடுகளில் எல்லாரும் அறிவார்ந்த பிள்ளைகள். மறுப்பதற்கில்லை. ஆனால் எத்தனை பிள்ளைகள் நடைமுறை வாழ்விற்குத் தேவையான பாலியல் கல்வி கற்றுக்கொடுக்கப்பட்டு வளர்த்தப்பட்டிருக்கிறார்கள்? புள்ளி விவரம் எடுத்தால் இந்த தலைமுறையில் கூட மிகக் குறைந்த சதவிகிதமே இருப்பார்கள்.
நிஜமாகவே மக்கள் மறுமலர்ச்சி அடைய நினைப்பவர்கள், பெரியாரிச பள்ளிகளைத்தானே தொடங்கி வைத்திருப்பார்கள். தாங்கள் ஆட்சியிலிருந்தபோது, எந்தெந்த விதத்திலெல்லாம் மூட நம்பிக்கைகளை வேரறுக்க வேண்டும் என்றுதானே தொலைநோக்கோடு சிந்தித்திருப்பார்கள். உண்மையாக மக்கள் நலத்தில் செயல்பட்டிருப்பார்கள்.
பற்றிக் கொள்ள பிடிப்பில்லாமல், ஆதாரத்தைச் சரித்தது போலல்லவா கடவுள் மறுப்பு; ஒவ்வொருவரையும் சுயமாக சிந்திக்க வைத்திருந்தால், தாமாக இந்த நிலை வந்தடைந்திருப்பார்கள்தானே?! எந்த ‘நிறுவனமாக’ இருந்தாலும் மறுபரிசீலனை செய்யப்பட வேண்டும்; தன்னைக் காலத்திற்கேற்றவாறு புதுப்பித்துக்கொண்டே இருக்க வேண்டும். அல்லாதது வீழும்! காலமே சாட்சி!
குறைகளைச் சொல்லக் கூடாது; விமர்சனமே கூடாது என்றால் அது சர்வாதிகாரம்! முன் வைக்கும் கருத்துகளில் உண்மையும் நியாமமும் இருந்தாலும் அவற்றை ஏற்று, காலத்திற்கேற்ப தம்மை தகவமைத்துக் கொள்வதுதான் வாழும்.
கடவுள் நம்பிக்கை என்பதும் கடவுள் மறுப்பு என்பதும் அவரவர் கருத்து, அவரவர் கொள்கை. பெரியாரிச பிள்ளைகளும் கடவுள் நம்பிக்கை கொண்ட பிள்ளைகள் போலவே, தத்தமது அம்மா அப்பாவின் மீது கொண்ட நம்பிக்கையால், அவர்களால் அறிமுகப்படுத்தபட்ட பெரியாரைப் புனிதப் படுத்துதல் மற்றும் பூஜித்தல் நடைபெறுகிறது. கடவுள் நம்பிக்கைக் கொண்டவர்களுக்காவது, கடவுளை மறுத்தல் என்கிற ‘மாற்று’ இருக்கிறது. ஆனால், கடவுள் மறுப்பாளர்களுக்கு மாற்றுச் சிந்தனைக்கு வழியற்று இருக்கிறது. இது ஒரு சிந்தனைத் தேக்கம். இதைத்தான் சுட்டிக்காட்ட விரும்பினேன்; எதிர்க்க அல்ல.
ஃ
பெரியாரிச வீடுகளில் வளரும் பிள்ளைகளின் பிரச்சினைகள் மற்றவர்களையும் விட இன்னும் நூதனமானது. அதைத்தான் குறிப்பிட விரும்பினேன். அறிவார்ந்து சிந்திக்கும் பின்புலம் உள்ள பெரியாரிச (ஆண்/பெண்) குழந்தைகளுக்கு மற்றெல்லாரையும் விட எல்லாப் பக்கமிருந்தும் அழுத்தங்கள் அதிகம்.
முதலாக அவர்களின் ‘குழந்தைமை’ பாதிக்கப்படுவது. முட்டாளாக இருக்கக்கூடாது என அதிக அறிவு திகட்டத் திகட்ட புகட்டப்படுவது. குழந்தையாக நடந்து கொள்ளவே, விடுவதில்லை. அது குழந்தை உலகின் கற்பனை மனதைக் கட்டுப்படுத்தும்.
‘The true sign of intellegence is not Knowledge but Imagination’
‘ If you want your children to be intelligent, read them fairy tales. If you want them to be more intelligent, read them more fairy tales.’
• Einstein
‘பாலியல் சார்ந்த கல்வி’ தரப்படாமல், குழந்தைகளிடம் ‘பாலியல் விடுதலை’ பற்றிய விவாதங்களைப் புரிவது எத்தகைய விளைவை ஏற்படுத்தும்?!
பொதுவாகவே பிள்ளைகள், தமது பெற்றோர் மற்றும் தாமறிந்த, தாம் நேசிக்கிற பெரியோர்கள் செய்வது சரியென்றே ‘நம்பி’ வளரத் தொடங்குவார்கள். கடவுளை நம்பத் தொடங்குவது அப்படித்தான். அதே வகையில்தான் பெரியாரிசமும் கட்டமைத்து வளர்க்கப்படுகிறது. அப்படி அல்லாமல், ஒவ்வொருவரும் தமக்கே சுயசிந்தனை வந்து, பிறகுதானா பின்பற்றுகிறார்கள்?
கடவுள் நம்பிக்கை உள்ள குழந்தைகளுக்காவது மாற்று இருக்கிறது; பெரியாரிசம் வழி வந்தவர்களுக்கு அந்தக் கதவும் அடைபடுகிறது. அது இன்னும் அதிக அழுத்தத்தை உண்டு பண்ணுகிறது. சங்கிலியின் பலவீன பகுதி எதுவோ, அதுவே அந்த சங்கிலியின் மொத்த பலமும் என்பார்கள்; அப்படித்தான் இது பெரியாரிசத்தின் பலவீனமாக இருக்கிற பகுதி.
சரி போன தலைமுறை, இந்தத் தலைமுறை பெரியாரிசம் பேசும் வீடுகளின் நடைமுறை வாழ்வைப் பார்ப்போம். ஆண்கள் தமக்கான கேளிக்கைகள் என வெளியே வைத்திருந்த விசயங்களை வீட்டிற்கே கொண்டு வந்ததுதான் நடந்திருக்கிறது. அதுவும் பெண்களுக்கும் குழந்தைகளுக்கும் வேறு வகையில் சுமை தருவதாகத்தான் அமைந்துள்ளது. இதில், எத்தனை ஆண்கள் சமைக்கக் கற்றவர்களாக இருக்கிறார்கள் அல்லது வளர்ந்து தனக்கு சுயசிந்தனை வந்தபிறகு, சமையல் சுமையைத் தான் வாங்கிக் கொண்டார்கள்.
இப்படி, எதிர்வினைகளுக்குப் பதில் அளித்துக் கொண்டிருந்தால், உன் நோக்கத்தை அவை நீர்த்துப் போகச் செய்துவிடாதா என்று என் தோழமை கேட்டார். ஆம்; ஆனால் பதிலளிக்க வேண்டியதும், செல்லும் பாதையின் ஒரு பகுதியே என்பதால், பதிலளித்துள்ளேன்.
யாவரும் கேள்வி கேட்கலாம்; கேளுங்கள். நமது கேள்விகள்தாம் நம்மை உலகுக்கு அறிவிக்கின்றன. எனவே…
• எதையும் கேள்வி கேள்
படைப்பாளர்
பிருந்தா சேது
சே.பிருந்தா (பிருந்தா சேது), கவிஞர். எழுத்தாளர். திரைக்கதை ஆசிரியர்.