அன்றைய காலைப்பொழுது கவின்மிகு கம்போடியாவில் விடிந்தது எங்களுக்கு. குழுவில் அனைவருமே மிகுந்த உணர்ச்சி வசப்பட்டிருந்தார்கள். அனைவர் முகத்திலும் எப்போ எப்போ… என்ற எதிர்பார்ப்பு தொக்கி நின்றதைப் பார்க்க முடிந்தது.
ஆனாலும் முதல்நாள் சியம்ரீப் நகரில் ச்ச்சும்மா… சுற்றிவிட்டு ஊரைப்பற்றியும் மக்களைப் பற்றியும் கொஞ்சம் தெரிந்து கொள்வது, மாலை நுழைவுச்சீட்டு பெற்றுக்கொண்டு மறுநாள் சூரிய உதயம் பார்க்க அங்கோர்வாட் பெரிய கோவிலுக்குச் செல்வது என்றும், தொடர்ந்து பிற கோவில்களை சுற்றுவது என்றும் ‘ஐந்துநாள் திட்டங்களைத்’ தீட்டி ஒருமனதாக நிறைவேற்றிக் கொண்டோம். எந்தக் கோவிலுக்கும் கால நிர்ணயம் செய்யாமல், ஆசைதீர ஒரு இடத்தை பார்த்துவிட்டு அடுத்த இடத்துக்குச் செல்லலாம் என்பதே அனைவரது எண்ணமாகவும் இருந்தது.
இலையில் பரிமாறிய திண்டுக்கல் தலப்பாக்கட்டு பிரியாணியை உடனே ருசிக்கவிடாத ஏக்கம் இருந்தாலும், யதார்த்தத்தைப் புரிந்து கொண்டு அனைவரும் திட்டத்தை ஏற்றுக்கொண்டனர். எங்கள் டுக்டுக் தம்பி காலை ஏழு மணிக்கெல்லாம் ஹோட்டல் வாசலில் ஆஜராகி விட்டார். ஏனெனில் முதல்நாள் ஆர்வ மிகுதியால் அவரிடம், “காலை ஏழுமணிக்கே வந்திடுங்க, கம்போடியாவில் இருக்கும் ஒரு நிமிடத்தைக்கூட வீணாக்க மாட்டோம். நாங்கள் கிளம்பி தயாராக இருப்போம்”, என வாய்ச்சவடால் விட்டிருந்தோம்.
அவரிடம் மன்னிப்பு கேட்டுவிட்டு, வேகவேகமாகக் கிளம்பி, இரண்டு டுக் டுக் வண்டிகளில் சாவகாசமாகச் சுற்றிக் கொண்டு, நினைத்த இடத்தில் இறங்கி புகைப்படம் எடுத்துக்கொண்டு, நாட்டு நடப்பை விசாரித்துக்கொண்டு வெளிநாட்டு சுற்றுலாவாசிகளைப் பராக்குப் பார்த்தவாறே பொழுதைக் கடத்தினோம். தெருக்கள் சுத்தமாக இருந்தன. அங்கோர்வாட் கோவிலின் மாதிரிகளை ஆங்காங்கே குடிசைத்தொழில் போல தயாரித்துக் கொண்டிருந்தார்கள், பார்வைக்கும் வைத்திருக்கிறார்கள். அதுபோன்ற தொழிற்சாலைகளை தெருவுக்கு நான்கு பார்க்க முடிகிறது. அதற்கான தேவை என்ன என்று விசாரித்தால், நாம் துளசிமாடம் வைப்பதைப்போல் வீடுகளின் முகப்பில் இந்த கோவிலின் மாதிரியை வைத்துக் கொள்வார்களாம். ஒவ்வொரு வீட்டிலும் அங்கோர்வாட் கோவில்! அட சூப்பர்ல…
University of South East Asia, Future Bright International School, Hun Sen Roluos Sec School போன்ற பள்ளி, கல்லூரிகளைப் பார்த்ததும் ‘நான் ஆடாவிட்டாலும் என் மனசு ஆட…’ டுக்டுக்கிலிருந்து தொபுக்கடீர் என்று அவ்வப்போது குதித்த வண்ணமிருந்தேன். அன்று வேலை நாள் என்றாலும்கூட, பள்ளிக்கான எந்த அடையாளமுமின்றி, பரபரப்பின்றி, மாணவர் கூட்டமின்றி ஏதோ ஒரு அலுவலகம் போல கல்வி நிலையங்கள் காத்தாடிக் கொண்டிருந்தன. கம்போடியர்களின் கல்வி குறித்து தனி அத்தியாயமே எழுத வேண்டும் என நினைத்துக்கொண்டேன்.
வியட்நாமியர்களின் வாழ்வியல் முறைக்கு நேர் எதிர்மறையாக இருக்கிறது இன்றைய கம்போடியா – நேற்றைய கம்பூச்சியா – அன்றைய காம்போஜம் என ஒன்றுக்கு மூன்று பெயரைக் கொண்டிருக்கும் கம்போடியா. வியட்நாமின் பளபளப்பும் பரபரப்பும் இங்கு மொத்தமாகக் காணவில்லை. அங்கு ஆட்டம் பாட்டம் கொண்டாட்டம் என ‘வாழ்க்கை வாழத்தானே’ என்று மொத்த வியட்நாம் மக்களும் வாழ்க்கையைக் கொண்டாடினால், இங்கு, ‘புத்தம் சரணம் கச்சாமி’ என எந்தவித பரபரப்புமின்றி, அமைதிக் குன்றுகளாக இருக்கிறார்கள். ஊரே ஒருவித அழுத்தமான மௌனத்துடன் இருப்பதைப் போலிருந்தது. அப்படியே அந்த நாட்டின் வரலாறு குறித்து கூகுளின் உதவியோடும், ஆங்காங்கே வைக்கப்பட்டிருந்த செய்திப் பலகைகளின் குறிப்புகளிலிருந்தும் அறிந்து அசைபோட்டுக் கொண்டோம்.
தென்கிழக்கு ஆசியாவின் முக்கியமான நிலப்பரப்பான கம்போடியாவின் வரலாற்றை அறிந்து கொள்ள, டைம் மெஷினை வேகமாக அழுத்தி கொஞ்சமல்ல… நிறையவே பின்னோக்கிச் செல்லவேண்டியுள்ளது. எழுத்துகள் கண்டுபிடிக்கப்படாத, வரலாற்றில் மிகப்பெரிய நாகரிகங்கள் உருவாகாத, மக்கள் ஒன்றுபட்ட சமூகமாகச் சேர்ந்து வாழ்ந்த வரலாற்றுக்கு முந்தைய காலம் வரை (Proto Historic Period) பயணிக்க வேண்டும்.
பலநூறு நூற்றாண்டுகளாக கம்போடியக் கடற்கரையோர நகரங்கள் மெல்ல மெல்ல உருவாகியிருக்க வேண்டும். இந்திய, சீன யாத்ரீகர்கள் மற்றும் வர்த்தகர்கள் இந்த நகரங்களைக் கடந்து சென்றிருக்கிறார்கள். அப்படிச் செல்லும்போது, கம்போடிய, வியட்நாம் கடற்கரையோரங்களில் தங்கள் கப்பல்களை நிறுத்தி நறுமணப்பொருள்கள், மரம், தந்தம், பட்டு மற்றும் உலோகங்களைப் பரிமாறிக்கொண்டனர். அதனால்தானோ என்னவோ, அந்தக்காலங்களில் எழுதப்பட்ட கம்போடிய வரலாற்றின் ஆதாரங்கள் முழுக்க சீன மொழியில்தான் காணக்கிடக்கின்றன. படிப்படியாக இந்திய கலாச்சாரத்தின் கூறுகள் கம்போடியாவின் உயர் அடுக்கினரிடையே வேரூன்றின. ஐந்தாம் ஆறாம் நூற்றாண்டுகளில் பல இந்துத்துவ ராஜ்ஜியங்கள் தெற்கு கம்போடியாவில் ஆட்சி செலுத்தியதை, நினைவுச்சின்னங்களின் எச்சங்கள், கல் சிற்பங்கள், சம்ஸ்கிருதம், மற்றும் கெமர் மொழியிலிருக்கும் கல்வெட்டுகளிலிருந்து அறிய முடிகிறது.
கம்போடியர்கள் முதன்முதலில் எங்கிருந்து இந்நிலப்பரப்பிற்கு வந்தவர்கள் என்பது குறித்து பல்வேறு வரலாறு (கதைகள்!) கூறப்பட்டாலும் இன்னும் இந்தத் தலைப்பு விவாதத்துக்குரியதாகவே இருக்கிறது என்பதே உண்மை. சீன ஆதாரங்களின் அடிப்படையில் பார்த்தால், கம்போடியர்களின் முன்னோர்கள் மலாய் பரம்பரையைச் சேர்ந்தவர்கள் என்றும், வடக்கிலிருந்து இன்றைய கம்போடியாவுக்குள் நுழைந்திருக்கிறார்கள் என்றும், அவர்கள் நுழையும் போது கம்போடியாவில் சம்பா, ஃபுனான் (Founan/Funan) என இரண்டு சக்திவாய்ந்த அரசுகள் நிறுவப் பட்டிருந்தன எனவும் கூறப்படுகிறது. இதில் ஃபுனான் ஐந்தாம் நூற்றாண்டின் கடைசிவரை செல்வாக்கின் உச்சத்தில் இருந்திருக்கிறது. ஆனால் டேவிட் ஜி. சாண்ட்லர் (Chandler) போன்ற வரலாற்றாளர்கள் சீன ஆதாரங்களின் நம்பகத்தன்மையை சந்தேகிக்கின்றனர்.
சீனாவின் மிகப்பழமையான வரலாற்றுக் குறிப்பு ஒன்றில், ஒன்று முதல் ஆறாம் நூற்றாண்டுகள் வரையிலான கால கட்டங்களில் இந்தோனேசிய தீபகற்பத்தின் தெற்குப் பகுதியை உள்ளடக்கிய, இப்போதைய கம்போடியாவாக இருக்கும் நிலப்பரப்பில் மீகாங்கை மையமாகக் கொண்ட ஃபுனான் எனப்படும் ஒரு அரசியல் கட்டமைப்பு இருந்ததாகவும், அங்கு இந்து கலாச்சாரம் பின்பற்றப்பட்டதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது. அதுமட்டுமல்ல, ஃபுனான் பகுதியானது மேற்கில், இந்திய மண்டலத்தில் கடல் வர்த்தகக் கூட்டாளிகளுடன் நீண்ட கால பொருளாதாரத் தொடர்புகளைக் கொண்டிருந்ததாகவும் குறிப்பிடுகிறது.
ஒரு உள்ளூர் கதையின்படி, கௌண்டின்யர் என்ற பெயர் கொண்ட இந்திய பிராமணர் ஒருவர் ஒருநாள் தூக்கத்திலிருந்து எழுந்தவர், ‘தன்னை ஃபுனானுக்குச் சென்று அந்த நாட்டை ஆட்சி புரியுமாறு தெய்வீகக் குரல் ஒன்று பணித்ததாக’ பிரகடனப்படுத்தினார். அந்த தெய்வீக ஆணையினால் மிகவும் மகிழ்ந்த கௌண்டின்யர், ஃபுனானை நோக்கிப் புறப்பட்டுச் சென்றார். அவரது வருகையை அறிந்த மக்கள் மகிழ்ந்து அவரை மன்னராகத் தேர்ந்தெடுத்தனர். இந்நிகழ்வு கி.பி. நான்காம் நூற்றாண்டின் முடிவில் அல்லது கி.பி. ஐந்தாம் நூற்றாண்டின் தொடக்கத்தில் நிகழ்ந்ததாகவும், கௌண்டின்யர் ஃபுனானின் பழக்க வழக்கங்கள், நடத்தைகள் போன்றவற்றை இந்தியப் பாணியில் மாற்றியமைத்தார் என்றும் சொல்கிறது அந்தக்கதை. இந்த கௌண்டியர் தான் முதல் ஜெயவர்மன் என்று கூறும் வரலாற்றாசிரியர்களும் இருக்கின்றனர்.
8ஆம் நூற்றாண்டின் பிற்பகுதியில் கி.பி. 790 ல் ஜாவாவிலிருந்து வந்த கெமர் இளவரசர் இரண்டாம் ஜெயவர்மன் (ஜாவாவுக்கு நாடு கடத்தப்பட்டிருந்தவர்) முடிசூட்டிக்கொண்டதோடு, கெமர் ராஜ்ஜியத்தை ஒருங்கிணைத்தார். அரசன் இறைவனாகப் போற்றப்பட்ட கெமர் கலாச்சாரம், அவரிலிருந்து தொடங்குவதாக வரலாற்றாசிரியர்கள் கருதுகின்றனர். அடுத்த 10 ஆண்டுகளில் ஜெயவர்மன் தனது அதிகாரத்தை வடக்கு நோக்கி மீகாங் நதிப் பள்ளத்தாக்கு வரை நீட்டித்து, 802ஆம் ஆண்டில் கம்போடியாவின் பெரிய ஏரிக்கு வடக்கே பிற்காலத்தில் அங்கோர் என்று அழைக்கப்பட்ட தளத்துக்கு அருகில் நடந்த ஒரு விழாவில், தன்னை ஒரு உலகளாவிய மன்னராக அறிவித்துக்கொண்டார். எட்டாம் நூற்றாண்டு முதல் பதினாறாம் நூற்றாண்டு வரை கெமர் ஆட்சி நீடித்தது. தென்கிழக்கு ஆசியாவின் பெரும்பகுதியை ஆதிக்கம் செலுத்தி, சக்திவாய்ந்த இராச்சியமாக வலுப்பெற்றிருந்தது.
கெமர் பேரரசு செல்வச் செழிப்பின் உச்சத்தில் இருக்கும்போதுதான் அங்கோர் நகரம் உருவானது. 9ஆம் நூற்றாண்டின் இறுதிப் பகுதியில் முதலாம் யசோவர்மன் (890 – 910) என்ற மன்னன் யசோதரபுரம் என்ற புதிய ஊரை உருவாக்கி, அதனை அங்கோர் என்று அறிவித்து அதையே தலைநகரமாக அறிவித்தார். அங்கோர் என்ற சமஸ்கிருதச் சொல்லின் பொருள் ‘மாநகரம்’ என்பதாகும். அந்த மாநகரம் உலகின் அதிக மக்கள்தொகை கொண்ட நகரங்களில் ஒன்றாக இருந்திருக்கிறது. 9 மற்றும் 10 ஆம் நூற்றாண்டுகளில் லண்டன் நகர மக்கள் தொகை 30,000 மட்டுமே. ஆனால் அதே சமயம், கம்போடியாவின் அங்கோர் நகரில் 10 இலட்சம் மக்கள் வசித்திருக்கிறார்கள் என்ற வரலாற்று ஆய்வாளர்களின் புள்ளி விபரம் வியக்கவைக்கிறது.
யசோவர்மனுக்குப் பின் வந்த அரசர்கள் சிதறிக்கிடந்த நாட்டின் பல பகுதிகளை ஒருங்கிணைத்தும், பிற நாடுகளைப் போரில் கைப்பற்றியும் பெரும் நிலப்பரப்பை ஆண்டுள்ளார்கள். தற்போதைய பர்மா, தாய்லாந்து, வியட்நாம், மலாய் ஆகிய நாடுகளின் சில பகுதிகளும் கெமர் பேரரசு என்ற ராஜ்ஜியத்தின்கீழ் இருந்தன. ஆசிய வரலாற்றில் செல்வச் செழிப்புடன் சிறப்பான ஆட்சியை நல்கியது கெமர் பேரரசு என்ற பெருமையும் உண்டு. கம்போடியாவை ஆண்ட கெமர் அரசர்கள் இந்துக்களாக இருந்தனர்.
சம்ஸ்கிருதம் ஒரு மொழியாக வழக்கத்தில் இருந்தது என்பதை அங்கிருக்கும் சமஸ்கிருத கல்வெட்டுகள் சான்று பகர்கின்றன. அரசர்களைப் போலவே மக்களும் மதக் கோட்பாடுகளின் மீது பெரும் நம்பிக்கை கொண்டிருந்ததால், கெமர் ஆட்சிக் காலத்தில் பல கோயில்கள் நிர்மாணிக்கப்படன. அவ்வாறே பன்னிரெண்டாம் நூற்றாண்டில் இரண்டாம் சூர்யவர்மனால் (கி.பி.1113 – 1150) அங்கோர்வாட் கோவில் கட்டப்பட்டது.
ஆனால், அடுத்த 200 ஆண்டுகளில் பேரரசு சுருங்கியது. கெமர் பேரரசு படிப்படியாக வீழ்ச்சியடைய, பல நெடிய போர்களின் முடிவில் அங்கோர் நகரம் தாய் இன மக்களால் கைப்பற்றப்பட்டு, 1450களில் தலைநகரம் தெற்கே ஃபுனோம் பென் பகுதிக்கு மாற, மக்களும் தலைநகர் நோக்கி நகர, அங்கோர் நகரம் படிப்படியாகக் கைவிடப்பட்டது.
கெமர் மன்னர்களின் கனவுகளில் உதித்த கலைச் செல்வங்கள் அனைத்தையும் மண் விழுங்கியது. 400 ஆண்டுகால சரிவைத் தொடர்ந்து கம்போடியா ஒரு பிரெஞ்சு காலனி நாடாக மாறியது. கம்போடிய அரச குடும்பத்தில் பிறந்த மன்னர் நோரோடோம், 1863ஆம் ஆண்டு பிரான்சு உதவியுடன் கம்போடியாவின் அரசராகப் பொறுப்பேற்றார். அவர் பிரான்சின் கைப்பாவையாகவே செயல்பட்டாலும், கம்போடியாவை வியட்நாமியர்களின் ஆதிக்கத்திலிருந்தும் சயாமியரின் ஆதிக்கத்திலிருந்தும் மீட்டதால், கம்போடியாவின் முதல் நவீன அரசராக மதிக்கப்படுகிறார்.
இரண்டாம் உலகப்போரின் போது 1941 முதல் 1945 வரை ஜப்பானிய பேரரசினால் கம்போடியா கையகப்படுத்தப்பட்டு, பின் விடுவிக்கப்பட்டது. 1954ஆம் ஆண்டு பிரான்சிடமிருந்து முழுமையாக விடுதலை பெற்றது. ஆனால் விடுதலை பெற்ற பிறகும் 1960களில் வியட்நாம் போரில் வலுக்கட்டாயமாக கம்போடியா உள்ளிழுக்கப்பட்டதும், 1975 முதல் 1979 வரையிலான கொடூரமான கெமர் ரூச் அரசும், சர்வாதிகாரி போல்பாட் சகாப்தமும் கம்போடிய வரலாற்றில் வடுக்களாகப் பதிவாகியுள்ளன.
ரமாதேவி ரத்தினசாமி
எழுத்தாளர், முன்னாள் அரசுப்பள்ளி ஆசிரியர். பணிக்கென பல விருதுகள் வென்றவர். இவர் எழுதி வெளிவந்துள்ள ‘கனவுகள் மெய்ப்படட்டும்’ கட்டுரைத் தொகுப்பு பரவலாக கவனம் பெற்றது. 2014, 2015ஆம் ஆண்டுகளில் ஐ நா சபையில் ஆசிரியர் பேச்சாளராகக் கலந்துகொண்டு உரையாற்றியுள்ளார். ‘அடுக்களை டூ ஐநா’ தொடரில் அவரது ஐ நா அனுபவங்களை நகைச்சுவையுடன் விவரித்திருக்கிறார். ‘இலங்கை – எழுதித் தீராச் சொற்கள்’ என்கிற பெயரில் இலங்கை அனுபவங்களையும் ‘என்ன செய்கிறது ஐநா – பெண் கல்வித் தடைகள் உடைபடும் தருணங்கள்’ என்கிற கட்டுரைத் தொடர்களையும் நம் வலைதளத்தில் எழுதினார். இம்மூன்று தொடர்களும் நூலாக்கம் பெற்று, ஹெர் ஸ்டோரீஸ் வெளியீடுகளாக வெளிவந்து பாராட்டுகளைப் பெற்றுள்ளன.
‘போர்களின் தேசத்தில்’ என்ற பயணக் கட்டுரை நூல் அவரது பயண அனுபவங்களைப் பேசுகிறது. இது தவிர, ‘பிள்ளையாரும் 22 நண்பர்களும்’ என்ற இளையோர் நாவலையும் ‘குட்டிப் பெண்களின் பெரிய கதைகள்’ என்ற சிறார் பற்றிய சிறுகதைத் தொகுப்பையும் எழுதியுள்ளார். பயணக் கட்டுரைகள், சிறுகதைகள், சிறார் எழுத்து, கல்வியியல் கட்டுரைகள் என பல தளங்களில் எழுதும் ஆற்றல் மிக்கவர். ‘கவின்மிகு கம்போடியா- தொல்நகரில் ஓர் உலா’ இவர் ஹெர் ஸ்டோரீஸ் வலைதளத்தில் எழுதும் ஆறாவது தொடர் ஆகும்.